🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



மனிதப்பிறவி...

அண்ணனுக்கு எட்டாது; தம்பிக்கு எட்டும்... எப்படி...?

ஏன்? தம்பி உயரமா இருக்கிறானா...?

க்கும்... வருகின்ற வாலி ஐயாவின் பாட்டையாவது வாய்விட்டுப் படித்துவிட்டு, அதன் சிறப்பை சொல்...!



© வில்லுப்பாட்டுக்காரன் வாலி இளையராஜா 🎤 மலேசியா வாசுதேவன் @ 1992 ⟫

தந்தேன் தந்தேன் இசை - செந்தேன் தந்தேனடி - கால காலங்கள் தேடிய ஞானத்தில் - தந்தேன் தந்தேன் இசை, செந்தேன் தந்தேன் அடியே - ஆனந்த ராகங்களைக் கிளியே, இங்கேதான் கேட்டுக்கடி - ஆடாத ஆட்டங்கள்தான் கிளியே, எங்கிட்ட ஏத்துக்கடி - ஏழைகள் காதுகளில், செந்தேன் அள்ளி சேர்க்கிற கலைஞனடி - தென்னாட்டுல இருக்கிற இதயங்களை, சங்கீதத்தில் ஈர்க்கிற இளைஞனடி - நாட்டுல கேட்டுக்கடி - இசையில் இங்கு நான் செஞ்ச சாதனைதான் - நாக்குல இருக்குதடி எடுத்து தர ஆயிரங்கீர்த்தனை தான் - அலை அடிக்க, அதைத் தடுக்க, அணை எடுக்க, நினைத்ததென்ன, தள்ளு, எட்டி நில்லு - எல்லை தாண்டுற, சீண்டுற, ஏண்டி நீ அளக்குற - நீ இங்கு கேட்டதில்லே, அந்நாளிலே கிந்தன் சரித்திரத்தை, திண்டாடிய நாட்டுக்கு இசையினிலே, தந்தானடி என்எஸ்கே தன் கருத்தை - தேசத்தைத் திருத்திடத்தான், கலைகள் என்று தெரிந்தது சேதியடி, நான் அந்த கலைஞனையே நினைத்து இங்கு நடக்குற ஜாதியடி - எனை அடக்க, சிறை எடுக்க, சிறகடித்த இளையக்கிளி, இன்று, எதிர் நின்று, இந்த காளையைக் காண்கையில் கால் கைகள் நடுங்குது...
இந்தப் பாட்டு என்னான்னு எல்லோருக்கும் தெரியும்...! ஆனால் பாட்டு கேக்குறப்போ ஆரம்பத்தில் // தென்றல் வந்து... ஆ இல்லையே... 'வந்து' ஒட்டுதே // -ன்னு சந்தேக பேச்சு வருதே, அதே சந்தேகம் எனக்கும்...! 'வந்து' என்று சொல்லும் போது உதடுகள் குவியத்தானே செய்கிறது, ஒட்டலையே...?! இதற்கு ஏதேனும் விதிகள் உள்ளதா...?

ஆம், இதோ விதிகள் :- பல்லிதழ் இயைய வகாரம் பிறக்கும் (தொல்.பிறப். 98) அதாவது கீழ் இதழுடன் மேற் பல் பொருந்தும்...! இதே போல் உ ஊ ஒ ஓ ஔ என இசைக்கும் - அப்பால் ஐந்தும் இதழ்குவிந் தியலும் (தொல்.பிறப். 87) மற்றும் உ ஊ ஒ ஓ ஔ இதழ்க் குவிவே (நன்னூல், நூற்பா 78) அதாவது இவையெல்லாம் இதழ் குவியும் முயற்சியில் பிறக்கும்...! உதடுகள் குவிதல் வேறு, ஒட்டுதல் வேறு... சரி, எட்டு (8) வயது சிறுவனை தொண்ணூறு (90) வயது தாத்தாவோடு சேர்த்துக் கூறுவதேன்...?

அதானே ? எதற்கு ? 'ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது' என்பது போல, 'எட்டில் ஒட்டாதது தொண்ணூறில் தான் ஒட்டாது...!' என்பதும் நல்லாத்தான் இருக்கு...! சுற்றி வளைத்து எங்கே வருகிறாய் என்பது புரிந்து விட்டது...! ஏனென்றால் ஐயனுடன் ஐயமும் வந்து விட்டது...! முதலாவதாக உதடுகள் ஒட்டும் எண் மூன்று (3) என்பதால், 1330 குறள்களையும் சொல்லிப் பார்த்து, உதடுகள் ஒட்டும், ஒட்டாத குறள்களைக் கண்டுபிடிக்க வேண்டுமோ...?

ஆமாம் தம்பி, "ப்ச்சக்"-ன்னு உதடுகள் ஒட்டவேண்டும் என்பதை அறிவதற்குத் தான் இந்த 8, 90 விளையாட்டு...! இதழுறல், இதழகல் குறள்களைக் கண்டுபிடிக்க ஒரு எளிதான வேலை இருக்கிறது... காலம் காலமாக இணையத்தில் தேடிச் சொல்லும் மூடத்தனத்தை நாமும் திருக்குறளில் தொடரும் தவறான தகவல்கள் பதிவில் செய்து விட்டோம்... அதாவது இதழுறல் நான்கைத் தவறாகச் சொல்லி விட்டோம்...

முனைவர் பட்டம் பெற்றவர்கள் உட்படப் பல தமிழறிஞர்களும் இணையத்தில் பதிவு செய்யும் தகவல்கள் வெவ்வேறு எண்ணிக்கையில் இருப்பதேன்...? சமீபத்திய "உள்ளத்தை நிறைத்தது, உதடு ஒட்டாதது" கிண்டில் மின்னூலில், இதழகல் குறள்களின் எண்ணிக்கை 29 என்று உள்ளது...!

இந்த ஆய்வை, பதம் பிரித்த குறள்களில் பார்க்க வேண்டுமா...? இல்லை பதம் பிரிக்காத குறள்களில் பார்க்க வேண்டுமா...? என்று தானே நீ கேட்க வேண்டும்...? அவரவர் புரிந்து கொள்ளும் வகையில் பதம் பிரித்த குறள்களுக்கேற்ப வெவ்வேறு எண்ணிக்கை தான் வரும்...! ஒன்று செய், மேலுள்ள வாலி அவர்களின் பாட்டின் ஓரிடத்தில், பாடகரின் உதடுகள் ஒட்ட வாய்ப்புண்டு; கண்டுபிடி; என்னது குறிப்பு வேண்டுமா...? ஆயிரம் முறை 1330 குறள்களைக் கீர்த்தனையாகப் பாடு...!

சரிப்பா புரிகிறது... தாத்தாவின் மூல குறள்களை எடுத்துக் கொள்கிறேன், விதிகளையும் மறக்க மாட்டேன்... ஏதோ ஒரு வேலை, அதைச் செய்தால் எளிது என்றாய், என்ன அது...? இதற்கும் ஒரு குறிப்பு கொடுக்கலாமே...!

மெல்லினம், இடையினம் - ஒவ்வொன்றிலும் ஒரு வரிசை...! உதடுகள் ஒட்ட வைக்கும் இரண்டு எழுத்துக்களின் வரிசைகளை மறக்க முடியாதபடி, கர வரிசையில் ஒரு சொல்லையும், கர வரிசையில் ஒரு சொல்லையும் இணைத்து ஒரு கேள்வி கேட்கிறேன்... அந்த இரண்டு வரிசைக்கும் இடையே உள்ள இரு வரிசை எழுத்துக்களே உதடுகள் ஒட்டுவதற்குக் காரணம்...! சரி கேள்வி இதோ :- நான் யார்...?

இந்தக் கேள்வி ஆணவமாகக் கேட்காமல், ஆவணமாக்கத் தானே கேட்கிறாய்...?நெடில் கேள்விக்குக் குறிலில் பதில் + உதடுகள் ஒட்டாத கேள்விக்கு, உதடுகள் ஒட்டும் பதில் : மனிதப்பிறவி...! இந்த எண்ணம் இருந்தாலே வீண் கேள்விகள் மனதில் எழாது... ஆனால் உலகம் முழுவதும் மனிதப் பிறப்பிலும் பாகுபாடு எண்ணும் சில மனிதர்கள் - இல்லை - சில கீழ்கள் சிந்திக்கட்டும்... தருக்க முறை செயல்பாடுகளை (Logic Function) யாரும் யாருக்கும், தான் செய்வது போல் கற்றுக் கொடுப்பது எளிதானது அல்ல... ஏனெனில் அவரவர் அறிவுத்திறனுக்கேற்ற தருக்க முறை மாறுபடும்... வீட்டில் மகளதிகாரம் இருந்தால் வேலை எளிது...! // வா கணினியே வா; திருக்குறள் கோப்பே வா...! செல்ல மகளே வா வா...! 1330 மூல குறள்கள் 1330 x 7 = 9310 சீர்களில் உள்ள அந்த இரு வரிசை எழுத்துக்களை ஒவ்வொன்றாகத் தேடி, அவை உள்ளவற்றையும், இல்லாதவற்றையும் தொகுத்துக் காண்பி...! // என்னப்பா மொத்தம் 52 குறள்களா...? திருக்குறளின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த எண்ணான 7 இப்படித்தான் 52-ன் மூல எண்ணாக ஒளிந்து கொண்டிருக்கிறதோ...?

தனித்தனியாகச் சொல்ல வேண்டும்; இதை உறுதிப்படுத்தக் கணக்கு செய்ய வேண்டும்...!

இருப்பா; உலகில் யாவருக்கும் தன்னை அறியாமலே ஒரு மதம் பிடித்துக்கொள்ளும்; அந்த தா'மதமானாலும் கொஞ்சம் பொறு...! நூறு (100) எண்களில் 16 எண்கள் சொல்லும்போது மட்டும் உதடுகள் ஒட்டாது... (16=1+6=7) ஏழு வந்து விட்டதா...? இந்த 8, 90 விளையாட்டு, மூலையிலிருந்த மூளை இப்போது தான் வேலை செய்கிறது...! சரி, உதடுகள் ஒட்டும் குறள்கள் வருவது : 5 குறள்கள்; உதடுகள் ஒட்டாதது : 47 குறள்கள் : 5, 47 மற்றும் 47-ன் மூல எண் இரண்டு (2) உட்பட அனைத்தும் பகா எண்கள்...! என்ன கணக்கு செய்ய வேண்டும்...? 52 குறள்கள் : 5+2=7 என்று ஏழு வந்து விட்டதே...?

இது வெறும் குறள்களின் எண்ணிக்கை தான்...! எழுத்துக்களின் கணக்கியல் செய்தால் தான் திருக்குறளின் இந்த ஒரு கட்டமைப்பை அறிய முடியும்...! அது மட்டுமல்ல, இதழுறல் : 5 குறள்கள், இதழகல் 47 குறள்கள், என்பதையும் உறுதியாகச் சொல்ல முடியும்...! முந்தைய ஒரு பதிவில், ஒரு சொல்லால் இதழுறல் கணக்கே தவறாகும் என்பதை அறிந்தோம்... இதற்குத் தீர்வு கணக்கு மட்டுமே... மீண்டும் சொல்கிறேன் : - முப்பால் உலகின் ஒரே அறநூல் மட்டுமல்ல, நினைத்தே பார்க்க முடியாத வகையில் கட்டமைக்கப்பட்ட ஒரே கணக்கு நூல்...!

அலக கசட தடர ளகட
கலக சயச கதட - சலச
தரள சரத தரத ததல
கரள சரள கள

↑ சும்மா... உதடுகள் ஒட்டாத கவிச்சிங்க நாவலர் பாட்டை பாடிப் பார்த்தேன்...!


சரி பகா எண்களெல்லாம் சொல்கிறாய்; பகா எண்ணிற்கான அலைபேசி எண் என்ன...? சும்மா சொல்லேன்...!

தமிழ் எழுத்துக்கள் 247-ல், வாயைத் திறக்காமலே ஒரே ஒரு எழுத்தைச் சொல்ல முடியும்...! நானெல்லாம் பாட்டே பாடுவேன்...! அடுத்த பதிவில் சந்திக்கும் வரை அது தான் பதில்...!
முக்கால்வாசி குடும்பத்திலே திறமையா இருக்கிற, எட்டுகிற தம்பியைப் பற்றி சொல்லலே; நூறு எண்களில் உதடுகள் ஒட்டாத 16 எண்களையும் சொல்லலே; வாலி அவர்களின் பாட்டிலே உதடுகள் ஒட்டும் சொல்லையும் சொல்லலே; கடைசியிலே வாயைத் திறக்காமலே பாட்டுப் பாடும் ஒரே ஒரு எழுத்து என்னான்னு சொல்லலே...! எப்படியோ இதழுறல்-இதழகல் குறள்களைக் கண்டுபிடித்ததே போதும்...!

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. வாலியின் பாடலை தேடியெடுத்து பொருத்தி விட்டீர்கள் அருமை.

    வாய் திறக்காத எழுத்து "ம்" என்று நினைக்கிறேன்

    தங்களது ஆராய்ச்சி மேலும் தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  2. இனிமையான பாடல். அதிகம் கேட்காத பாடல். ரசிக்க வைக்கும் பாடல். வாழ்க இளையராஜா, மலேஷியா...

    பதிலளிநீக்கு
  3. இந்தத் தேடுகிற வேலையை எல்லாம் உங்க கிட்ட விட்டுட்டு ரசிக்கிற வேலையை மட்டும் நான் பார்க்கிறேன்!

    பதிலளிநீக்கு
  4. உதடுகள் ஒட்டாத கவிச்சிங்க நாவலர் பாட்டைப் படித்தபோது காதல் ஓவியம் படத்தில் 'சங்கீத ஜாதிமுல்லை' பாடலின் இறுதியில் வரும் இதுபோன்ற வார்த்தைகள் நினைவுக்கு வந்து விட்டன! 

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. திருக்குறளை வைத்து சிறந்த ஆராய்ச்சிகளை உன்னதமான முறையில் செய்து வருகிறீர்கள். இந்த அளவு திறமைகள் எங்களுக்கு (குறிப்பாக எனக்கு.) இல்லை எனலாம். கவிஞர் வாலியின் திறமையும் வியப்பைத் தருகிறது இன்றுதான் இந்தப் பாடலைப் பற்றியும் அறிகிறேன்.

    ஒவ்வொரு குறட்பாவையும் தாங்கள் ஒவ்வொரு விதமாக பகுத்தறியும் ஆற்றலும் வியக்க வைக்கிறது. வலையுலக சித்தர் பட்டத்துடன் திருக்குறள் சித்தர் என்ற பட்டத்தையும் தங்களுக்கு தந்து விடலாம். அந்த அளவிற்கு ஒவ்வொரு தடவையும் குறளுடன் கணக்கியலையும் கலந்து அருமையாக யோசிக்கிறீர்கள். உங்களின் அறிவார்ந்த செயலுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. தந்தேன் தந்தேன் பாட்டு இப்பதான் கேட்கிறேன் டிடி! சூப்பர் பாடல். இளையாராஜா!! ஆஹா...

    உதடுகள் ஒட்டாத கவிச்சிங்க நாவலர் பாடலைப் பாடிப்பார்த்தேன்....அது உதடுகள் ஒட்டாத என்பதை விட உதடுகள் அதைப் பாடிட பட்ட பாடு!!!! ஹாஹாஹாஹா உச்சரிப்பதுதான்!

    உழைப்பு அபாரம், தேடலும் ஆராய்ச்சியும் தொடரட்டும்!!

    கீதா

    பதிலளிநீக்கு
  7. கரந்தை ஜெயகுமார் அவர்கள் சொன்னது உண்மையே. தங்களின் ஒவ்வொரு பதிவும் அறிய பொக்கிஷம் நண்பரே.

    பதிலளிநீக்கு
  8. மிகச் சிறப்பான பதிவு..
    வலையுலகின் புதுமை தங்களது தளம்.

    வாழ்க பல்லாண்டு..

    பதிலளிநீக்கு
  9. தந்தேன்.. தந்தேன்..

    பாடலை இப்போது தான் கேட்கிறேன்..

    பதிலளிநீக்கு
  10. தந்தேன், தந்ததேன் பாட்டி கேட்டு இருக்கீறேன்.
    படம் 1959 என்று போட்டு இருக்கிறீர்கள் தவறாக பதிவாகி விட்டதா ?
    1992 என்று சொல்கிறது கூகுள்.

    உங்கள் பாடல் தேர்வு, திருக்குறள் விளக்கம் எல்லாம் அருமை.
    "ம்" வாய் திறக்காத எழுத்து சொல்லும் அருமை.
    ம் என்று இரு என்பதுதான் கம்னு இரு என்று வந்ததோ!

    பதிலளிநீக்கு
  11. உங்கள் ஆராய்ச்சிக்கு மகள் உதவி வருவது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  12. கணக்கியல் குறள் ஆராய்ச்சி வியக்க வைக்கிறது ஐயா

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.