🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎புதிய பதிவுகளை பெற ✉திருக்குறள் கணக்கியல் பயிற்சி நான்கு (4) - 37 ❌

அனைவருக்கும் வணக்கம்...
திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-ல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை என்பது :


இதுவரை எழுதிய திருக்குறள் கணக்கியல் பயிற்சிகளின் விளக்கங்கள்

பயிற்சி 1: குறள் எண்களோடு 1330 குறள்கள், அதிகார எண்களோடு 133 அதிகாரங்கள் கொண்ட ஒரு திருக்குறள் முதன்மை கோப்பையை (Master Excel file) நம் கணினியில் உருவாக்குகிறோம்...

பயிற்சி 2: எழுத்துக்களை எளிதாகக் கணக்கிட, சுளகு எனும் சொல்லாய்வுக் கருவியை அறிகிறோம்... அதன் மூலம் திருக்குறளில் அதிக முறை பயன்படுத்திய ஓரெழுத்து 'னி' என்பது தவறு, 'ன்' தான் என்பதைக் கண்டுபிடித்து அதை உறுதிப்படுத்தினோம்...

பயிற்சி 3 முதன்மை கோப்பில், குறள் மூலத்தையும் தட்டச்சு செய்து சேமித்துக் கொள்கிறோம்... அவற்றை 'சுளகு'வில் துணைகொண்டு, திருக்குறளில் ஒரே ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரண்டு எழுத்துக்கள் ங, ளீ என்பதையும், குறள் மூலத்தில் தான் இந்த ஆய்வு செய்யவேண்டும் என்பதையும் புரிந்து கொண்டோம்...
இன்று பயிற்சி 4: ஐயன் இந்த இரண்டு எழுத்துக்களையும் மேலும் சில இடங்களில் பயன்படுத்தாததற்கு என்ன காரணமாக இருக்க முடியும்...? ஐயன் முப்பாலை எவ்வாறு கட்டமைத்திருப்பார் - மன்னிக்கவும் - "எவ்வாறு கட்டமைத்திருக்கிறார்...?" என்று பயிற்சி செய்பவர்களும் சொல்ல வேண்டும் என்பதே அடியேனின் விருப்பம்... அத்துடன் கூடுதல் விளக்கமாகச் சொல்ல வேண்டியது என்னவென்றால் :-

பெரும்பாலான கணக்கு முடிவுகள் பகா எண்களாக வரும்படியும், (7) ஏழு வருமாறும் கட்டமைத்திருக்கிறார்...! அதிகாரங்கள், குறள்கள் - மொத்த எழுத்துகளும் கணக்கு...! அவையனைத்தும் மூன்று பால்களிலும் வரவில்லை என்பதும் கணக்கு....! எந்த எழுத்தில் தொடங்கி, எந்த எழுத்தில் முடிக்க வேண்டும் என்பதும் கணக்கு...! தொடங்க முடியும் சில எழுத்துக்களில் குறள்கள் தொடங்கவில்லை என்பதும், அதிகாரம் - குறள்கள் - இவற்றில் தொடங்கிய எழுத்து, மற்றொன்றில் தொடங்கவில்லை என்பதும் கணக்கு...! அனைத்து குறள்களும் வெண்பா விதிகளுக்கு உட்பட்டது...! இவ்வாறு நிறைய உண்டு...! மேலும் உண்டு→ கொம்பு எழுத்தில்லாத குறள்களும் உண்டு; அதிகாரங்களும் உண்டு...! உதடுகள் ஒட்டும் (இதழுறல்) குறள்களும் உண்டு; உதடுகள் ஒட்டாத (இதழகல்) குறள்களும் உண்டு; அதிகாரங்களும் அவ்வாறே உண்டு...! அனைத்திற்கும் கணக்கு உண்டு...!

அந்த இரண்டு எழுத்துக்களையும் (ங, ளீ) ஒரே ஒருமுறை பயன்படுத்தியதற்குக் காரணம், தமிழ் எழுத்துக்கள் 247-ல், பயன்படுத்திய எழுத்துக்களின் எண்ணிக்கையே காரணமாக இருக்கமுடியும்...! // திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை // என்று இணையம் முழுக்க பரவிக் கிடக்கும்...! "எங்காவது எழுத்துக்களை எழுதி உள்ளார்களா...?" என்று தேடினால், குறள் திறன் தளத்தில் உள்ளது... இணைப்பு கவனம் :- அங்குக் கடைசியாக இருக்கும் ஒன்பது (9) எழுத்துக்களும் இருமுறை உள்ளன...!

// ஔ, ஙி, ஙீ, ஙூ, ஙெ, ஙே, ஙை, ஙொ, ஙோ, ஙௌ, சௌ, ஞி, ஞீ, ஞை, ஞொ, ஞோ, ஞௌ, டௌ, ணௌ, தௌ, நை, நௌ, பௌ, மௌ, யௌ, ரௌ, லௌ, வௌ, ழூ, ழெ, ழே, ழோ, ழௌ, ளோ, ளௌ, றௌ, னௌ // ஆகியவை இடம்பெறாத 37 எழுத்துக்கள் என்று சொல்லப்படுகிறது... அப்படியென்றால், திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-ல், (247-37✔=) 210✔ எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்றாகிறது... இது சரியா...?

"நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே" என்று கடவுளே நேரில் வந்தாலும் கேள்வி கேட்பதும் தமிழர்களின் பெருமை...! நாம் மதிக்கும் அல்லது விரும்பும் ஒருவர் யாராக இருந்தாலும், அவர் மீது குற்றம் என்றால் நக்கீரராக மாறுவதே முறை...! அப்படியில்லாத தொண்டர்களும் உள்ளனர்... நமக்கெதற்கு கேவலமான இன்றைய அரசியல்...? திருக்குறளின் சீர்களைச் சிதைத்த அரசியலை விடவா...? அதனால், "எதையும் ஐயப்படு...! அவற்றைக் கணக்கிடு...!! முடிவை உறுதிசெய்...!!!"

நாம் இப்போது சுளகு பெட்டியில் பதம் பிரிக்காத 1330 குறள்களையும் இட்டு, அங்குள்ள "ஓரெழுத்து" சொடுக்கிய நிலையில் இருக்கின்றோம்... சுளகு, எத்தனை எழுத்துக்கள் என்பதையும், அவை ஒவ்வொன்றும் எத்தனை முறை பயன்படுத்தியிருக்கின்றன என்பதையும் காட்டிக் கொண்டிருக்கிறது... பயிற்சி 3 பதிவில் சொன்னபடி, அதாவது Ctrl-F சொடுக்கி, இதோ ஙா, ஙு, ஞு, ஞூ, ஞெ, ஞே ← இவற்றை ஒவ்வொன்றாக இட்டுத் தேடினால், தேடுதல் பெட்டி 0/0 காண்பிக்கும்...! இந்த 6 ஆறு எழுத்துக்களும் கணக்கில் ஏன் வரவில்லை...? ஆகவே 247-?=? (37210❌) நாம் எந்தளவு 'சுளகு'வை பயன்படுத்தத் தெரிந்திருக்கிறோமோ, அந்தளவு இந்த கணக்கியல் பயிற்சி எளிதாக இருப்பதோடு, "மேலும் என்னென்ன செய்யலாம்...?" என்கிற ஆவலும் கூடுவது உறுதி...

பொய் பேசும் மனிதர்கள், தான் சொன்ன பொய்களை ஞாபகம் வைத்துக் கொள்ளச் சிரமப்படுவார்கள்...! அதற்குப் பல சான்றுகளை உருவாக்குவார்கள்...! "வாயைத் திறந்தாலே பொய் தவிர ஏதுமில்லை" இப்படிப்பட்ட தலைமைகளும் உண்டு... அதை நம்பும் கீழ்களும் உண்டு... ஆனால் உண்மையே பேசுபவர்களுக்கு, எவருடைய விருப்புகளுக்கும் சினத்திற்கும் அச்சப்படாமலும், எதிர்வாதத்தின் உருட்டல் மருட்டல்களுக்கும், அஞ்சாத ஆற்றலுடன் இருப்பார்கள்... அவ்வாறு மறதியின்றித் தெளிவாகவும் அழுத்தமாகவும் பேசுபவரை, கருத்து வேறுபாடு காரணமாக யாரும் வெல்ல முடியாது... நாம் இங்குச் செய்ய இருப்பது கணக்கு...! யார் செய்தாலும் முடிவு ஒன்றே...! ஆனால் நம்மை வெல்ல முடியும் → சோர்வு அல்லது பயம் கொண்ட நம் மனம் மட்டுமே... !

65. சொல்வன்மை
647. சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

 1. //பொய் பேசும் மனிதர்கள் தான் சொன்ன பொய்களை ஞாபகம் வைத்துக் கொள்ள சிரமப்படுவார்கள்///

  ஆனால் இந்த காலத்தில் பொய்பேசுபவர்கள் அதைஎல்லாம் கவலைப்படாமல் பேசிக் கொண்டே செல்லுகிறார்கள் அதுமட்டுமல்லாமல் தாங்கள் பேசும் பொய்தான் உண்மை என்று அடித்து பேசுகிறார்கள்.. உண்மைப் பேசுபவர்கள் உண்மையை நிருபிக்க பல ஆதாரங்களை தேடி சொல்ல வேண்டியிருக்கிறது

  இப்போது பல கண்ணியமற்ற மனிதர்கள் கண்ணியமானவர்கள் போல வேஷம் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்

  பதிலளிநீக்கு
 2. ​// வேறு எழுத்தில் தொடங்க முடியும் என்றாலும்...

  எந்த எழுத்தில் தொடங்கி எந்த எழுத்தில் முடித்தார் என்பதும் கணக்கு..//

  இதற்கெல்லாம் உதாரணம் இருந்தால் என் மாதிரி ஆட்களுக்கு கொஞ்சம் புரியும்.

  தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. "கி, கீ, சே, சோ, தை, நே, நொ, பூ, மீ, மூ ஆகிய பத்து (10) எழுத்துக்களில் இருந்து குறள் தொடங்கவேயில்லை" என்று ஒரு பழைய கோப்பில் (old pdf file) உள்ளது... ஆனால் மேலும் சில எழுத்துக்கள் உண்டு...!

   நீக்கு
 3. கூகுளை மீண்டும் தரவிறக்கம் செய்து விட்டேன் ஐயா. பயிற்சிக்கு முயற்சிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 4. பிரமிக்க வைக்கிறது தங்களது பதிவு.

  தொடர்ந்து வருகிறேன் ஜி

  பதிலளிநீக்கு
 5. ங, ளீ இந்த இரண்டும் ஒரே ஒரு முறை பயன்படுத்தியதற்குக் காரணம், 247ல் பயன்படுத்திய எழுத்துக்களின் எண்ணிக்கையே காரணமாக இருக்க முடியும்//

  டிடி இது யோசிக்க வைக்கிறது.

  கூடவே அந்த 6 எழுத்துகளும் ஏன் கணக்கில் வரவில்லை? கணக்கு ஏற்கனவே மீக்கு ரொம்ப தூரம்....குழப்புது டிடி...அந்த 6ம் 37ல் வராதா?

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வராது... அப்படியென்றால் 37 என்பது 43 ஆகும்... 43 சரியா...? அடுத்த பதிவில்...! நன்றி...

   நீக்கு
 6. உங்களைத் தொடரவே முடிகிறது. ஆய்வுப்பணி காரணமாக முயற்சிக்க நேரமில்லை. உங்கள் முயற்சி எங்களை வியக்க வைக்கிறது.

  பதிலளிநீக்கு
 7. எவ்வளவு வேலை ! ஆய்வுக்கு நிறைய நேரத்தை செலவிட்டு இருப்பீர்கள்.
  உங்கள் முயற்சிகளுக்கு டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும்.
  வியப்பும் , மதிப்பும் உயர்ந்து கொண்டே போகிறது உங்கள் மேல்.
  இதையெல்லாம் பதிவு செய்து வையுங்கள்.
  சொடுக்கி படிக்க எத்தனைவிதமான கணினிபயன்பாடு எல்லாம் அருமை.
  வாழ்த்துகள், வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 8. திருக்குறளை ஆய்வு செய்பவர்களுக்கு உங்கள் பதிவுகள் வழிகாட்டியாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
 9. சிறப்பான ஆய்வு..
  வியப்பு மேலிடுகின்றது..

  வாழ்க தங்களது அரும்பணி..

  பதிலளிநீக்கு
 10. 'ஐயப்படு ; உறுதி செய்.' வாழ்விற்கும் தேவையான கருத்து . நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
 11. இது திருக்குறளைப்பற்றிய சிறப்பான ஆய்வு மட்டுமல்ல பிரமிப்பான பகுப்பாய்வும் கூட... வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.