🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



நகைவகையர்...



முந்தைய பதிவுகள் : சிரிக்க சிரிக்க... மானிட லீலை...! துன்பம் நேர்கையில்... கிசுகிசு...! அகநக...

முந்தைய + இன்றைய பதிவும் அடியேன் அனுபவத்தில் உண்டு...!
யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு... பூவென்று முள்ளைக் கண்டு புரியாமல் நின்றேன் இன்று... பால் போலக் கள்ளும் உண்டு - நிறத்தாலே ரெண்டும் ஒன்று :-


82. தீநட்பு : 817. நகைவகைய ராகிய நட்பிற் பகைவராற் பத்தடுத்த கோடி யுறும்

பொய்யான புள்ளிவிவரங்களை வைத்தும், எதையும் ஒப்பிட்டும், அரசியலைப் புரிந்து கொண்டு அரசியல் ஞானி ஆனவர்களின் ஏளனப் பேச்சுக்களால் சிரித்து மகிழ்தல், காமம் சார்ந்த இடக்கரான சிரிப்புச் செய்திகள் கூறி மகிழ்தல், சூதாட்டம், கள்ளுண்ணல், விலைமகளிர் தொடர்பு, பாலியல் போன்ற கேளிக்கை கொண்டாட்டங்களில் மிக விருப்பமுடையவருடன் நட்புக் கொள்பவர் பலர்... அவர்கள் வெகு விரைவில் தீய வழியில், சூழ்ச்சியாலோ அல்லது தன் போக்கிலோ வீழ்ந்து தம் வாழ்க்கையையே அழித்துக் கொள்வார்கள்... பொழுதுபோக்கிற்கும் களிப்பிற்கும் நகைத்துக் குடிகெடுக்கும் இத்தகைய நட்பைவிடப் பகைவரால் பத்து அடுத்த கோடி மடங்கு நன்மை உண்டாகும்... அது எப்படி...? வெளியிலிருந்து பகைவர் வருவர் - அது பகையென வெளிப்படத் தெரியும் - அவரால் உண்டாக்கப் போகிற தீமைகளை அறிய முடியும் - அவரிடமிருந்து விலகி நம்மைக் காத்துக் கொள்ளவும் முடியும்... ஆனால் நமக்குச் சிரிப்பை விளைவித்து, மகிழ்ச்சி மூட்டுகிற நண்பர் மேல் ஐயம் உண்டாவதில்லை... எப்போதும் நெருங்கிப் பழகிக் கூட இருந்தே நம் வாழ்வில் பெருங்கேடு உண்டாக்கி விடுவார்... அதனால் நம்மை வகை வகையாக நகைக்க வைக்கும் நகைவகையர் வேண்டாம்...

பொது நீதிக்கும் நேர்மைக்கும் பயந்துவிடு - நல்ல அன்புக்கும் பண்புக்கும் வளைந்து கொடு...
இன்றோடு போகட்டும் திருந்திவிடு... உந்தன் இதயத்தை நேர் வழி திருப்பிவிடு...


© அடிமைப் பெண் வாலி K.V.மகாதேவன் 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1969 ⟫


83. கூடாநட்பு : 824. முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா வஞ்சரை அஞ்சப் படும்

மேற்சொன்ன நகைவகையர்களின் திறமை என்னவென்றால் இனிமையான புன்முறுவலுடன் நகைத்துப் பேசி அவர்கள் மீது சற்றும் ஐயம் ஏதும் எழாமல் பார்த்துக்கொள்வார்கள்... நம் மனம் மாறிநிற்கும் நிலையில் அந்த வஞ்சகர்கள் நம்மை ஏமாற்றிவிடுவார்கள்... அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதை நன்கு அறிந்த வஞ்சகர்கள், உள்ளத்தில் உள்ள பகையை மறைத்து விடக்கூடிய அளவுக்கு ஆற்றல் பெற்றவர்கள்... உறவாடிக் கெடுப்பதில் வல்லவரான இவர்கள் என்றும் அஞ்சத்தக்கவர்கள்... இவர்களின் நட்பைத் தொடர்ந்தால் நமக்குத் தொடரும் துன்பம்...! இதற்கு அஞ்சுவது தவறல்ல... 824 குறள் எண்ணை திருப்பினால் :- 428. அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில் : 43. அறிவுடைமை

நண்பர்கள் பகைவர்கள் யாரென்றும் - நல்லவர் கெட்டவர் யாரென்றும் - பழகும் போதும் தெரிவதில்லை பாழாய்ப் போன இந்த பூமியிலே... முகத்துக்கு நேரே சிரிப்பவர் கண்கள் முதுகுக்கு பின்னால் சீரும் - முகஸ்துதி பேசும், வளையும், குழையும் - காரியமானதும் மாறும்...2

© நாடோடி கண்ணதாசன் M.S.விஸ்வநாதன் 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1966 ⟫


83. கூடாநட்பு : 829. மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து நட்பினுட் சாப்புல்லற் பாற்று

ஐயனின் அறத்தைத் தொடர்ந்து கடைப்பிடித்தால் ஐயம் வந்து அஞ்சி தப்பிக்கலாம்... இனி முழுவதுமாக நட்பை விலகிக் கொள்ள சில உத்திகளைக் கையாளத் தெரிந்திருக்க வேண்டும் என்கிறார்...! நம்மைப் பற்றி உள்ளத்தில் நல்ல கருத்து இல்லை என்பது அறிந்து கொள்ள முடிகிறது... வெளியுலகுக்கு மிகுதியான நட்புடையார் போல் காட்டிக் கொள்வதோடு, நம்மைத் தாழ்வாகவே இகழ்ச்சியாகவே எண்ணுகின்றார் என்பது தெரிந்து கொள்ள முடிகிறது... நம் மூலமாக ஏதோ ஒரு நன்மை பெறுவதற்காக நம்முடன் சிரித்து உறவாடுகிறார் என்பதும் புரிந்து விடுகிறது... அறிந்து தெரிந்து புரிந்து விட்டபின் இந்நட்புத் தொடர வேண்டுவதில்லை... என்ன செய்யலாம்...? அவர் வழியிலேயே சென்று நாமும் புறத்தே மகிழும்படியாக நட்பினைச் செய்து, நம் உள்ளத்தினை அவர் அறியாதபடி செயல்பட்டு, பக்குவமாய் அந்நட்பு அழியும்படிச் செய்து விட்டு விலகிவிட வேண்டும்...

உலகத்தை நினைச்சாலே உடம்பு நடுங்குது - ஊரு கெட்ட கேட்டைப் பார்த்து நீதி பதுங்குது...! உருவங்கள் மனிதர் போல ஓடி அலையுது - உள்ளத்திலே எண்ணமெல்லாம் நஞ்சா விளையுது... நாடு முன்னேற பலர் நல்லதொண்டு செய்வதுண்டு - நல்லதைக் கெடுக்கச் சிலர் நாச வேலையும் செய்வதுண்டு... ஓடெடுத்தாலும் சிலர் ஒற்றுமையாய் இருப்பதில்லை - இந்த உண்மையை தெரிந்தும் நீ ஒருவரையும் வெறுப்பதில்லை... வா வா ஐயனே மனிதர் நிலையை தெரிஞ்சுக்க...! வஞ்சகர் அதிகம் உண்டு நோக்கம் பாத்து நடந்துக்க...!

© பாண்டித் தேவன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் C.N.பாண்டுரங்கன், மீனாட்சி சுப்பிரமணியம் 🎤 K.ஜமுனா ராணி @ 1959 ⟫

நகை தொடரும்...

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. சில நட்புகள் நல்ல நட்பு இல்லை என்று தெரிந்தாலும் விலக்க முடிவதில்லை.  சிரித்து பேசி அக்கறை காட்டினாலும் அவர்கள் உள்மனக்கிடக்கை புரிந்த நட்புகள் உண்டு.  முடிந்தவரை எச்சரிக்கையாகவே இருப்போம்!

    பதிலளிநீக்கு
  2. இன்றைய உங்களின் நட்பு அனுபவ பதிவு சொல்லியபடி அனுபவம் எனக்கும் உண்டு

    பதிலளிநீக்கு

  3. பொருத்தமான அற்புத பாடல் வரிகள் ஜி.

    வழக்கம் போலவே சிறப்பான பதிவு.

    பதிலளிநீக்கு
  4. உண்மை.
    ஒருவன் கடவுளை நோக்கி கடுந்தவம் புரிந்தான்.
    கடவுள் மகிழ்ந்தார்.
    என்ன வரம் வேண்டும் கேள் என்றார்.
    எதிரிகளை நான் பார்த்துக் கொள்கிறேன்.
    நண்பர்களிடம் இருந்து என்னைக் காப்பாற்று என்றானாம்

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    பதிவு வழக்கம் போல் அருமையாக உள்ளது. உடனிருந்தே உறவாடி கெடுக்கும் நட்புகளை குறித்த பதிவையும்,, ஐயனின் குறள் எடுத்துக்காட்டும், குறளுக்கேற்ற தங்களது விளக்கவுரைகளையும் மிகவும் ரசித்தேன். பொருத்தமான பாடல்கள் மூன்றும்+பொருத்தமான முதல் பாடலும் நன்றாக இருக்கிறது. இரண்டாவதில் எத்தனை வார்த்தை நயங்கள்... ! இறுதிபாடல் இன்றுதான் புதிதாக கேட்டேன். என்னவொரு ஆழமான வரிகள்..! எல்லாமே உணரதக்கதான வரிகளுடன் நன்றாக உள்ளது.

    "பகைவனையும் நானும் வெல்வேன் அறிவினாலே .. ஆனால், நண்பனிடம் தோற்று விட்டேன் பாத்தாலே..." என்ற பாடலும், பதிவை படிக்கும் போது எனக்கு நினைவுக்கு வந்தது.

    உண்மைதான்.. நல்ல நட்பு நமக்கு கிடைக்கவும், அது தொடர்ந்து நல்லதாகவே நீடிக்கவும், நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நல்ல ஆழமான பகிர்வு. படித்து ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.
    .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "நண்பனிடம் தோற்று விட்டேன் பாசத்தாலே" என திருத்திக் கொள்ளவும். நீங்கள் அறியாத பாடல் வரிகளா? இருந்தாலும் தட்டச்சு பிழை விழுந்து விட்டதால், திருத்தியமைக்கிறேன். நன்றி.

      நீக்கு
  6. மிகவும் அருமையான பதிவு.
    திருக்குறள் ஓவியம் அருமை.
    பாடல்கள் தேர்வு நன்றாக இருக்கிறது.
    மூன்றாவது பாடல் கேட்ட நினைவு இல்லை. மிகவும் அருமையான கருத்தை சொல்கிறது. நோக்கம் பார்த்து நடந்து கொள்ள வேண்டிய காலமாகத்தான் அன்றும், இன்றும் இருக்கிறது போலும்.,மனிதன் மாறவில்லை.

    சூரியன் போல கடமையை மட்டும் செய்து கொண்டு போக வேண்டும் போல் உள்ளது.

    பதிலளிநீக்கு
  7. குறள் ஓவியத்துடன் பதிவும் அருமை டிடி.

    நட்பைத் தெரிந்தெடுக்கும் போதே கவனமாக இருக்க வேண்டும் என்ற பாடங்கள் அனுபவத்தில் கிடைத்தது.

    சிலது தாமதமாகத் தெரிந்தாலும் விலக்க முடியாமல் கொஞ்சம் தள்ளி நின்றேனும் இருக்க வேண்டியதாய்தான் உள்ளது ஒரே அடியாக ஒதுக்க முடிவதில்லை.

    நல்ல கருத்துகள் பாடல்களும்

    கீதா

    பதிலளிநீக்கு
  8. பொருத்தமான பாடல்களும், கூடா நட்பைப் பற்றிய நல்ல கருத்துகளும் அடங்கிய பதிவு வழக்கம் போல் அருமை

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  9. திரைப்பாடலும் திருக்குறளும் மிகப் பொருத்தம்.

    பதிலளிநீக்கு
  10. சிந்திக்க வைக்கும் சிறப்பான நற்பதிவு
    எந்நாளும் எல்லோரும் காண்

    என்று குறள் வெண்பாவில் கூறுமளவிற்கு தங்கள் வாசகரே சான்று. தொடரும் தம்பணிக்கு வாழ்த்துகள்.

    தங்களிடம் தமிழுலகம் அதிகம் எதிர்பார்க்கிறது

    பதிலளிநீக்கு
  11. .... நண்பனுக்காக உதவப்போயி அடிபட்ட வேதனை ரெம்பவும் உண்டு. அனுபவங்கள் பல உண்டு.. ஒவ்வொன்றையும் என் பதிவில் படிக்கலாம். நன்றிகெட்ட நண்பர்களைவிட நேர்மையான நண்பர்களை தேடி அலைந்து சோர்ந்து பேனதுதான் மிச்சம் .பட்ட பிறகுதான் புத்தி வரும் என்பது என்னளவில் உண்மை..

    பதிலளிநீக்கு
  12. அன்பின் தனபாலன்,
    நட்பின் வழி செல்வது நேர்மை யான வழியில் இருந்தால்
    நன்மை.

    பலன் எதிர்பாராத நட்பைப் பாராட்டலாம்.
    ஏமாற்றும் நட்பை என்ன செய்வது.

    சிறிது நாட்களில் பழகிவிடும். அதன் பின் யாரை நம்பி நான் பிறந்தேன்
    தானே மனதில் தோன்றும்.
    வள்ளுவர் ஐயா சொல்லாத துறையே இல்லை.

    அதை நீங்கள் எடுத்துச் சொல்வது மேலும்
    பெருமை. நன்றி தனபாலன். மூன்று திரைப் பாடல்களும் அருமை.

    பதிலளிநீக்கு
  13. கூடா நட்பு கேடாய் முடியும் - பசுதோல் போர்த்திய நட்பு பற்றிய குறள் விளக்கம் அருமை ...

    பதிலளிநீக்கு
  14. அருமையான பதிவு
    https://vannasiraku.blogspot.com/2019/11/blog-post_18.html

    பதிலளிநீக்கு
  15. நட்பின் பிறிதொரு பரிமாணத்தை திருக்குறள் வழியாக அலசிய விதம் அருமை. ரசித்தேன்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.