🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



திருக்குறளிலே ஒரு சொல்...

நல் அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ அல்லல் நீக்க மாட்டாயா...? தமிழ் இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல் இயம்பிக் காட்ட மாட்டாயா...? அனைவருக்கும் வணக்கம்... எண்ணற்ற சிறப்பான தமிழ்ச் சொற்களில் தமிழுக்கே உரித்தான சொல் என்ன...? அன்புடைமை அதிகாரத்தின் குறளின் குரல் பதிவுகளில் குறளுக்கேற்ப பாடல்கள் தேடலின் போது, 77-வது குறளுக்கு ஒரு அருமையான காணொளி கேட்க நேரிட்டதில் உருவானதே இந்தப்பதிவு...


சூரிய ஒளி நம் உடம்பின் எலும்புகள் உறுதியாவதற்கும் வேண்டும்... எலும்புகள் சூரியனிடமிருந்து வாங்கி வைத்திருக்கும் சக்தி, அதாவது ஊட்டச்சத்து (Vitamin D), மீண்டும் வெயிலின் தாக்கத்தை நம் உடம்பு தாங்கும் அளவிற்கு வலிமையைத் தருவதோடு தோலிற்கும் பாதுகாப்பு தருகிறது... 8. அன்புடைமை : 77. என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம் ⋙ எலும்பில்லாத உடல்களைக் கொண்ட உயிர்களான புழுக்கள் போன்றவற்றைச் சூரியனின் வெப்பம் தாங்காமல் துன்புறும்... அது போல அன்பில்லாதவர்களை அறம் சுட்டெரிக்கும்... "என்னவொரு ஒப்புமை...! என்னவொரு நுட்பம்...!" என வியந்த வழக்கறிஞர் திருமிகு. →அ.அருள்மொழி← அவர்களுக்கு நன்றி... இனி இக்குறளைப் பற்றி எனது எண்ணங்கள் :- பலரும் பக்தி பழமாக அன்புடன் இருந்தும் புழுக்கள் போல் துன்பப்படுவது ஏன்...? செலுத்தப்படும் அன்பு புரிந்து கொள்ளவில்லையே எனும் தவிப்பும், அதனால் அன்பையும் எதிர்பார்க்கும் நிலை வந்து விடுவதால் இருக்கலாம்... இன்னொரு புறம் அன்பு பெறப்பட்டவர் காலம் கடந்து அன்பைப் புரிந்து கொள்ளும் போது, அவர்களும் துன்புற்றுத் திருந்துவதும் உண்டு...! ஒரு தாய் தான் பெற்ற குழந்தைகள் அனைவரிடத்தும் ஒன்றே போல் அன்பு செலுத்துவதைப் போல், 'எவரிடத்தும் எந்நேரமும் அன்பு செலுத்துவது மட்டுமே என் குணம்' என மனம் பக்குவப்பட்டு வாழ்வோரும் உண்டு... இதேபோல் பக்தியையும் சிந்திக்கலாம்... கடவுள் உட்பட யாருமே தண்டிக்காததைத் தண்டிக்கும் அறத்தையே தரும் அன்பானது, அறத்திற்கு மட்டுமல்ல வீரத்திற்கும் அன்பே துணை என்றும், அன்பே இல்லாத இல்வாழ்வானது, யாருமே விரும்பிச் செல்லாத பாலைவனத்தில் வற்றல் மரம் தளிர்த்தல் போல், யாருக்கும் பயனில்லாமல் வாழ்வு அமைவது பற்றி, இதன் அடுத்த குறளில் ஐயன் தொடர்வதைக் குறளின் குரல் பதிவுகளில் அறிந்தோம்...

திருக்குறள் ஓர் அற நூல் என்பதும், இதைத் தவிர வேறு நூல் உலகில் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும்... அறம் எனும் சொல் திருக்குறளின் முதன்மை வேர்... அறம் தமிழுக்கே உரித்தான சொல்... இதற்கு இணையான சொல் வேறு எந்த மொழியிலும் இல்லை... சிலர் இதை தருமம் என்பார்கள்... தருமம் மனிதர்களுக்குள் பாகுபாடு ஏற்படுத்தும்... அதற்கேற்ப தண்டனையும் வேறுபடும்... காலத்திற்கேற்ப மாறவும் செய்யவும்... சுருக்கமாக ஒரு பாடலில் : தர்மம் என்பார் - நீதி என்பார் - தரம் என்பார் - சரித்திரத்தைச் சான்று சொல்வார் - தாயன்புப் பெட்டகத்தைச் சந்தியிலே எறிந்துவிட்டுச் தன்மான வீரன் என்பார் - மர்மமாய்ச் சதிபுரிவார் - வாய்பேசா அபலைகளின் வாழ்வுக்கு நஞ்சு வைப்பார் - கர்ம வினை என்பார் - பிரமனெழுத்து என்பார் - கடவுள்மேல் குற்றம் என்பார் - இந்தத் திண்ணைப் பேச்சு வீரர்களிடம் ஒரு இரு கண்ணாவே இருக்கிறேன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அண்ணாச்சி அவர்களே... பொதுநலம் பேசும் புண்ணியவான்களின் போக்கினில் அநேக வித்தியாசத்தையும், புதுப்புது வகையில் புலம்பி புவியை மயக்கும் வெளி வேசத்தையும், அறம் வெளியே கொண்டு வருகிறது சமூக சீர்திருத்தப் பாடலாசிரியரே... நண்பர்களே, "என்பார்" என்று பாடலில் வருவதெல்லாம் திருக்குறளில் கிடையாது...

அறம் என்பது எல்லாம் வல்ல ஒரு பேராற்றல்... அது மிகத் தூய்மையாய் உண்மையாய் நடுநிலை பிறழாது நிற்பது... அறக்கடவுளை அறம் என்ற சொல்லால் ஐயன் இங்குச் சொல்கிறார்... அறம் காயும் என்பது அறம் ஒறுக்கும் அல்லது அறக்கடவுள் தண்டிக்கும்... அறக்கடவுள் திருக்குறளில் மேலும் இரு இடங்களில் எவ்வாறு காத்துக் கொண்டிருப்பதைக் காண்போம்... 13. அடக்கமுடைமை : 130. கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து ⋙ சினம் தோன்றாமல் காத்து, கல்வி கற்று, அடக்கமுடையவனாக இருக்க முற்படும் வல்லவனைக் காண அறமே காத்துக் கொண்டிருக்கும்... 21. தீவினையச்சம் : 204. மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு ⋙ பிறர்க்குத் தீமை தரும் செயலை மறந்தும் நினைக்காதே; நினைத்தால் உனக்கே அவை திரும்பும் செயலை செய்வதற்கு அறம் காத்துக் கொண்டிருக்கும்...! திருக்குறளில் வேறு எங்கேனும் அறக்கடவுளைக் கண்டால் அறியத்தாருங்கள் நண்பர்களே... // அறம், அன்பிலதனைக் காயும் என்பதே தலைமை வாக்கியம். ஐயன், 'என்பிலதனை வெயில் காயும்' என்று சொல்லிவிட்டு, அன்பிலதனை அறம் (காயும்) என்று வாக்கியத்தை முடிக்காமல் விட்டது அந்தக் கடுமையான தண்டனையைக் கூற அவரது அன்புள்ளம் தடுக்கிறது என்பதைக் காட்டுகிறது // என நயமாகக் கூறுவார் திருக்குறளார் வீ முனுசாமி அவர்கள்...

அறம் எது...? மறம் எது...? என்று அறியாதவர்களுக்கு அறத்தையும் மறத்தையும் தெளிவாகப் பிரித்துக் காட்டுவது திருக்குறள் என்ற கருத்தையும், அகம், புறம் என்று வாழ்க்கையையும் இலக்கியத்தையும் பிரித்து அறிந்தவர்கள் தமிழர்கள்... அதைச் சங்ககால நூலின் வழியில் புரிய வைக்குமாறு பெற்றோர் கேட்பது போல் பாவேந்தரின் ஒரு பாடல்... பெண் கல்வியால் மட்டுமே இந்த உலகம் முன்னேற முடியும்; முத்தமிழிலும் பெண்கள் வல்லவர்களாக விளங்க வேண்டும் என்பது அவரின் எண்ணங்களில் ஒன்று... "தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்" என்றுரைத்த அவரின் பெற்றோரின் ஆவலாக ஓர் இசையமுது கேட்போம்... தமிழ் - கவிதை - இனம் - உணர்வு - என மனதைப் பல வகையில் ஆட்கொள்ளும் ரசனையான பாடல் :-

துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ, இன்பம் சேர்க்க மாட்டாயா...? - எமக் கின்பம் சேர்க்க மாட்டாயா...? - நல் அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ, அல்லல் நீக்க மாட்டாயா...? - கண்ணே - அல்லல் நீக்க மாட்டாயா...? வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே, வாழ்வின் உணர்வு சேர்க்க - எம் வாழ்வின் உணர்வு சேர்க்க - நீ அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால், ஆடிக் காட்ட மாட்டாயா...? கண்ணே - ஆடிக் காட்ட மாட்டாயா...? அறமிதென்றும் யாம் மறமிதென்றுமே அறிகிலாத போது - யாம் அறிகிலாத போது - தமிழ் இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல் - இயம்பிக் காட்ட மாட்டாயா...? - நீ இயம்பிக் காட்ட மாட்டாயா...? புறம் இதென்றும் நல் அகம் இதென்றுமே, புலவர் கண்ட நூலின் - தமிழ்ப் புலவர் கண்ட நூலின் - நல் திறமை காட்டி உனை ஈன்ற எம்உயிர்ச் செல்வம் ஆகமாட்டாயா...? தமிழ்ச் செல்வம் ஆக மாட்டாயா...?

© ஓர் இரவு பாவேந்தர் பாரதிதாசன் R.சுதர்சனம் M.S.ராஜேஸ்வரி, V.J.வர்மா @ 1951 ⟫

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் பாடல் மிகவும் பிடித்த பாடல்.
    பாடல் பகிர்வும், "தமிழ் எங்கள் உயிர்ப்பின் இருப்பு " படமும் அருமை.

    அன்புடைமை அதிகாரத்திற்கு ஏற்ற பாடல்.
    அருள்மொழி அவர்களின் குறள் விளக்கம் அருமை. முழுதும் கேட்டேன்.
    திருக்குறள் சொல்லும் அறம் தெரிந்து கொள்ள வேண்டிய அருமையான பேச்சு.


    பஞ்ச பூத நவக்கிரக தவத்தில் சூரியன் ஆரஞ்சு நிறமான காந்த அலைக்கதிர்களை வீசிக்கொண்டுள்ளது. இக் கதிர்கள் நம் உடலிலுள்ள எலும்போடு தொடர்பு உடையது. சூரியனுடைய காந்த அலைக்கதிர்கள் நமக்கு வாழ்வில் வெற்றி, அறிவு மேன்மை, கல்வி மேன்மை, வாழ்க்கை வளங்கள் இவையனைத்தையும் அளிக்க வல்லவை . சூரியனுடைய காந்த அலைக்கதிர்களை ஏற்று நம் உடலோடும் உயிரோடும் ஒன்று படுத்திக் கொள்வோம். என்று சொல்லி வணங்குவோம்.

    அறம் என்பது எல்லாம் வல்ல பேராற்றல். பேராற்றலை உணர்ந்து

    வாழ்ந்தால் அறக்கடவுள் வருத்த மாட்டார் நம்மை. மிக சிறப்பான பதிவு.

    ஆய்வு தொடர வாழ்த்துக்கள்.







    பதிலளிநீக்கு
  2. மிக மிக சிறப்பான பதிவு அருள்மொழியின் காணொளி இணைப்பும் அருமை அதுமட்டுமல்ல எனக்கு புரிந்த பதிவும் இது

    பதிலளிநீக்கு
  3. இன்றைய பதிவு சுவாரஸ்யம்.  சொல்லப்பட்டிருக்கும் கருத்துகளும் அருமை.  பகிரப்பட்டிருக்கும் பாடலும் இனிமை.  இன்னொன்று தெரியுமோ..   அந்தப் பாடல் அமையப்பெற்ற ராகம் தேஷ்.

    பதிலளிநீக்கு
  4. அறம் என்ற சொல் மட்டுமல்ல. இதுபோல பல சொற்கள் தமிழில் உள்ளன. அவற்றை பிற நிலையில், அல்லது ஒத்த மொழியாக்கத்துடன் தர முடியாது. அதனை கட்டுரைகளை மொழியாக்கம் செய்தபோது கண்டுள்ளேன்.

    பதிலளிநீக்கு
  5. அறம் பற்றிய மிகவும் அற்புதமான விளக்கம் கொடுத்து ஒரு தமிழனாக என்னையும் பெருமிதம் கொள்ள செய்துவிட்டீர்கள் நண்பரே

    பதிலளிநீக்கு
  6. "துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா?"
    ரொம்ப நாட்களுக்குப்பிறகு இந்த பாட்டை எழுத்தில் படிக்க நேர்ந்த போது புல்லரித்தது. தமிழும் நற்பண்புகளும் இபப்டிப்பட்ட பாட‌ல்களால் தான் மனதினுள் அழுத்தமாய் சென்று பதிந்தது. பாட்டையும் மறுபடியும் ஒரு முறை கேட்டு அதன் இனிமையில் ஆழ்ந்தேன்.
    பதிவும் மிகவும் சிறப்பு.
    அன்பு நன்றி!

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    வழக்கம் போல் அருமையான பதிவு. மனித எலும்புகளுக்கு ஊட்ட சக்தியை தரும் சூரியனின் கதிர்களை, போல அனைவரிடமும் பாரபட்சமின்றி அன்பு செலுத்துபவர்களுக்கு அறக்கடவுள் நன்மைகளை தருவது குறித்ததுமான குறளின் விளக்கம் தந்தது அருமை. எல்லோரிடத்தும் அன்பு செலுத்துவதென்பது மிகவும் சிறப்பான விஷயம். அச்செயலை கற்க கற்கத்தான் ஒருவருக்கு அது மேம்படும். பாடலின் இனிமை மனதை கவர்ந்தது. நிறைய தடவை கேட்டு ரசித்துள்ளேன். இன்று பாடல் வரிகளுடன் கேட்டு ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. அதிகார வர்க்கத்தின் முன்னால் மறம் மண்டியிடும் போதெல்லாம், அறம் மட்டும் ஆக்ரோஷமாய் நின்று தீது செய்வோரை தீக்கிரையாக்கிச்செல்லும் என்பதனை குறள்வழி நின்று அழகாக சொல்லியுள்ளீர்கள்!!. வாழ்த்துக்கள் பல ...

    பதிலளிநீக்கு
  9. துன்பம் நேர்கையில் யாழெடுத்து... என்னவொரு அருமையான பாடல். அறம் குறித்த தங்கள் பதிவு சிறப்பு. தொடரட்டும் தங்கள் தேடல். பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  10. துன்பம் நேர்கையில் அருமையான பாடல் அறம் பற்றிய அருமையா பகிர்வு!

    பதிலளிநீக்கு
  11. தங்களது குறள் ஆராய்ச்சி தொடரட்டும் ஜி வழக்கறிஞர் திருமதி. அ. அருள்மொழி அவர்களின் முழுக் காணொளியும் கேட்டேன்.

    பதிலளிநீக்கு
  12. மிகச் சிறப்பு.
    இனிய சுதந்திர நாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.