🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



திருக்குறள் போற்றி...

அண்மையில் மறைந்த புலவர் இரா. இளங்குமரனார் அவர்கள் எழுதிய நூல்கள், பெற்ற விருதுகள், தமிழ் அமைப்புகளின் பொறுப்புகள் என சில சிறப்புகளை →இங்கே← சொடுக்கி அறியலாம்... பாவலர், சொற்பொழிவாளர், தமிழ்ச் சொற்பிறப்பு மொழியறிஞர், எழுத்தாளர், தமிழாய்வாளர், தமிழிய வரலாற்று வரைவாளர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், தமிழியக்கச் செயற்பாட்டாளர், தமிழ்நெறி பரப்புநர் எனப் பன்முகங்கொண்டவர்... அதிர்ந்து பேசா பண்பாளர், ஆய்ந்துபேசும் அறிஞர், எழுத்தாளராக வாழ்வதற்காக அரசுப்பணியைத் துறந்தவர், கண்பார்வை இழந்தாலும் தனது எழுத்துப்பணி தடைப்படக்கூடாது என்பதற்காகக் கண்களை மூடியெழுதிப் பழகியவர்... திருக்குறளுக்கு உரையைத் திருக்குறளிலேயே தேடவேண்டுமென வலியுறுத்திய குறளாசான்... குறள் வழித் திருமணம், புதுமனை புகுவிழா என குறளியத்தை வாழ்வியல் நெறியாக வகுத்து வாழ்ந்து காட்டியவர்... அவர் எழுதிய "திருக்குறள் போற்றி" பற்றிய விளக்கம் தொடர்கிறது :-


அறத்தால் பொருள் ஈட்டி இன்பமுடன் வாழ்க...
(சனவரி 30, 1930 – சூலை 25, 2021)

திருவள்ளுவர் கண்ட முழுமுதல் இறைமை வழிபாடு, உள்ளொளி மிக்க உயர்ந்த குருவர் வழிபாடு, உலக நலங்காக்கும் பண்பு நல வழிபாடு, என்பவற்றை அவர்தாம் வாக்கும் நோக்கும் கொண்டு ஆக்கப்பட்டது இப் போற்றித் தொகுப்பாகும்.... தனிப்பேரிறைமை, தவப்பெருங்குருவர், தண்ணளிப் பண்பாடு என்பவற்றைத் தாய்மொழி வழியாக நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து உருகி உருகிப் போற்றுவதே உலகொத்த ஒரு நெறியாகும்... அந்நெறியை நெஞ்சார உணர்ந்து நேயத்தால் போற்றி உயிர் தளிர்க்கச் செய்யுமாறே இப்போற்றி ஆக்கப் பெற்றதாகும்... திருக்குறளை ஓதினால் :- உயர்வு கிட்டும் | பண்பாடு தானே வரும் | மனமாசு ஒழியும் | நோய் நொடி நீங்கும் | உயிர் தளிர்த்து நீடு வாழலாம் | தெய்வநிலை எய்தலாம்... ஆதலால் திருக்குறளை ஓதிச் சீரும் சிறப்பும் பேரும் பெருமையும் வாழ்வும் வளமும் பெற்றுச் சிறப்பெனும் செம்பொருள் கண்டு பேராப் பெருநிலை எய்தலாம்... இதனை எண்ணிப் பயன்பெற்று வரும் பட்டறிவால் படைக்கப் பெற்றதே இப்போற்றி... ஆதலால், இதனை ஓதியும் உணர்ந்தும் வழிபட்டும் ஒளிமிக்க வாழ்வை ஒவ்வொருவரும் அடைவாராக...

திருக்குறள் போற்றி

அகர முதலாம் ஆதியே போற்றி
1. கடவுள்வாழ்த்து
1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

அகரம் எழுத்துக்களுக்கெல்லாம் முதன்மை... கடவுள் உலகுக்கு முதன்மை...

மலர்மிசை ஏகும் மானடி போற்றி
1. கடவுள்வாழ்த்து
3. மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

நெஞ்ச மலரில் நிலைத்தவரின் திருவடியை மறவாமல் நினைப்பவர் நெடுங்காலம் வாழ்வர்...

தனக்குவமை இல்லாத் தகையடி போற்றி
1. கடவுள்வாழ்த்து
7. தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

தனக்கு ஒப்பற்றவரின் திருவடியை இடைவிடாது நினைப்பவர்க்கு அல்லாமல் மற்றவர்களுக்கு மனக்கவலைகளை மாற்றுதல் கடினம்...

எண்குணத் திலங்கும் இறையே போற்றி
1. கடவுள்வாழ்த்து
9. கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

மாந்தர் எண்ணிய குணம்கொண்ட இறைவனது திருவடியை வணங்காத தலைகள், பொறிகள் இருந்தும் புலன்கள் அற்றவை போல உணர்வில்லாதவை...

அமிழ்த மழையாம் அருளே போற்றி
2. வான்சிறப்பு
11. வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.

விண்ணிலிருந்து வரும் மழையால் உலகம் இயங்கி வருவதலால், அது அமிழ்தம் என்று உணரப் பெறும் தன்மையது...

ஐம்பொறி அடக்கும் ஆற்றலே போற்றி
3. நீத்தார்பெருமை
24. உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.

மனவுறுதி என்னும் அங்குசத்தால் ஐம்பொறிகளையும் அடக்கியவன், மேலான உலகம் என்ற விளை பயன் எய்த ஒரு விதை ஆகிறான்...

நிறைமொழி அருளும் நிறைவே போற்றி
3. நீத்தார்பெருமை
28. நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.

பயன் நிறைந்த சொற்களைக் கூறும் நீத்தாரது பெருமையை, உலகுக்கு அவர்கள் அருளிய வாய்மொழிகளே காட்டும்...

குணமெனும் குன்றே குறியே போற்றி
3. நீத்தார்பெருமை
29. குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.

குணம் என்னும் மலையின் மீது ஏறி நின்றவர், சினத்தைக் கணப்பொழுதேனும் தாங்கி நிற்க மாட்டார்...

மனத்தில் மாசிலா மணியே போற்றி
4. அறன்வலியுறுத்தல்
34. மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.

உள்ளத்தில் குற்றம் இல்லாமலிருத்தலே எல்லா அறமுமாகும்... மற்றவை ஆர்ப்பாட்டத் தன்மையுடையவை...

வாழ்வாங்கு வாழும் வாழ்வே போற்றி
5. இல்வாழ்க்கை
50. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

உலகத்திலே வாழும் முறைப்படி இல்வாழ்க்கை வாழ்பவன் வானுலகத்திலுள்ள தெய்வங்களுள் ஒருவனாக மதிக்கப் பெறுவான்...

மங்கல மனையற மாட்சியே போற்றி
6. வாழ்க்கைத்துணைநலம்
60. மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.

இல்லறத்தின் பெருமையே குடும்பத்துக்குப் பொலிவு தருவது... மேலும் அதற்கு அழகு சேர்ப்பது நல்ல மக்களை உருவாக்கித் தருவது...

அறிவறி பண்புப் பேறே போற்றி
7. மக்கட்பேறு
61. பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.

பெறும் பேறுகளுள் அறிய வேண்டியவற்றை அறிந்த மக்கட் செல்வம் அல்லாத பிற பேறுகளை யாம் அறியவில்லை...

அன்போ டியைந்த வழக்கே போற்றி
8. அன்புடைமை
73. அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.

அரிய உயிர்க்கு உடம்போடு உண்டாகிய தொடர்பு அன்பின் கூட்டுறவால் உண்டான வாழ்வு நெறி...

வருவிருந் தோம்பும் வளமே போற்றி
9. விருந்தோம்பல்
83. வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.

வருகின்ற விருந்தினை நாள்தோறும் பேணுவானது வாழ்க்கை துயருற்றுக் கெட்டுப் போவதில்லை...

இன்சொல் வழங்கும் இயல்பே போற்றி
10. இனியவைகூறல்
99. இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.

இனிய சொற்கள் இன்பம் தருதலை உணர்பவன் கடுஞ் சொற்களை வழங்குவது ஏன்...?

செய்யாமற் செய்யும் செழுநலம் போற்றி
11. செய்ந்நன்றியறிதல்
101. செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.

நாம் கேளாமல் தாமே முன்வந்து நமக்கு ஒருவர் செய்த உதவிக்கு மண்ணுலகும் விண்ணுலகும் கொடுத்தாலும் ஈடாகாது...

காலத் துதவும் கனிவே போற்றி
11. செய்ந்நன்றியறிதல்
102. காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

தக்க சமயத்தில் செய்த உதவி சிறியதாக இருந்தாலும் அது உலகத்தைவிட மிகப் பெரியது...

நெஞ்சங் கோடா நெறிநிலை போற்றி
12. நடுவுநிலைமை
115. கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.

வறுமையும் வளமையும் உலகில் காணாத புதுமைகள் அல்ல... ஆயினும் அவற்றைக் கருதி மனத்தின் கண் நடுவுநிலைமை தவறாது இருத்தலே சான்றோர்க்கு அழகு...

118. சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.

முதற்கண் சமமாக நின்று பின் தன்னிடத்து வைக்கப்பட்ட பொருளின் எடையைச் செம்மையாகக் காட்டும் நிறைகோல்... அதுபோல் ஒரு பக்கம் சாயாமல் நடுவுநிலையோடிருத்தல் சான்றோர்க்கு அழகாகும்...

நிலையில் திரியா மலையே போற்றி
13. அடக்கமுடைமை
124. நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.

தன் பெருமித நிலையிலிருந்து மாறுபடாது அடங்கி இருப்பவனுடைய தோற்றம், நெடியாய் நிற்கும் மலையைவிட உயர்வாகத் தோன்றுவான்...

ஒழுக்கம் குறையா உரமே போற்றி
14. ஒழுக்கமுடைமை
139. ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.

ஒழுக்கம் உடையார் வாயிலிருந்து தவறியும் தீய சொற்கள் தோன்ற முடியாது...

பொறுக்கும் அழியாப் புகழே போற்றி
16. பொறையுடைமை
156. ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.

தண்டித்தவர்க்கு அந்தப் பொழுதின் மகிழ்ச்சியே... பொறுத்தவர்க்கோ சாகும் வரை புகழ் நிற்கும்...

அழுக்கா றில்லா அறனே போற்றி
17. அழுக்காறாமை
163. அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான்.

தனக்கு அறவாழ்வு வேண்டாம் என்பவனே மற்றவனது வளர்ச்சியை விரும்பாமல் பொறாமைப்படுவான்...

அறனறிந்து வெஃகா அறவே போற்றி
18. வெஃகாமை
179. அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந் தாங்கே திரு.

பிறர் பொருளைக் கவர விரும்பாமை அறம் என்பதை உணர்ந்தவரைச் செல்வம் உரியக் காலத்தில் சென்றடையும்...

புறஞ்சொலல் அறியாப் பொலிவே போற்றி
19. புறங்கூறாமை
181. அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது.

ஒருவன் அறநெறியில் ஒன்றைச் சொல்லாதவனாய் அறமல்லாச் செயலைச் செய்பவனாய் இருந்தாலும் கூட அவன் புறஞ்சொல்ல மாட்டான் என்று சொல்லுமாறு வாழ்தல் நல்லது...

183. புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூறும் ஆக்கம் தரும்.

பிறனைக் காணாதபோது இகழந்துரைத்துக் கண்டபோது நல்லவனாய் நடித்து உயிர் வாழ்வதைக் காட்டிலும் சாவது அறநூல்கள் கூறும் ஆக்கத்தைக் கொடுக்கும்...

பயனில பகராப் பண்பே போற்றி
20. பயனிலசொல்லாமை
197. நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று.

சான்றோர் பிறர் விரும்பாத சொற்களைச் சொன்னாலும் சொல்லட்டும்... வெற்றுரை பேசாதிருத்தல் நல்லது...

பிறன்கே டெண்ணாப் பெருமையே போற்றி
21. தீவினையச்சம்
204. மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு.

பிறனுக்குத் தீமை தரும் செயலை மறந்தும் நினைக்காதே... நினைத்தால் உனக்கு அதே தீமை தரும் செயலை செய்ய அறம் எண்ணும்...

ஒத்த தறியும் உயர்வே போற்றி
22. ஒப்புரவறிதல்
214. ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.

தம்மைப் போன்று பிற உயிர்களையும் கருதி உதவுபவனே உண்மையாக உயிர் வாழ்வானாவான்... அங்ஙனம் உதவாதவன் உயிருடையவனாயினும் செத்தவருள் ஒருவனாகக் கருதப்படுவான்...

ஊருணி நீராம் உடைமையே போற்றி
22. ஒப்புரவறிதல்
215. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.

உலக நலம் விரும்பும் ஒப்புரவு நன்கு அறிவானது செல்வம் ஊருணியில் நிறைந்த நீர் போலாகும்...

பயன்மரம் ஆகும் பரிவே போற்றி
22. ஒப்புரவறிதல்
216. பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்.

பிறர்க்கு உதவும் குணம் உடையவர் இடத்தில் செல்வம் உண்டாகுமானால், பயன் தரும் மரம் ஊர் நடுவில் பழுத்துள்ளது போன்றது ஆகும்...

மருந்து நலமாம் மாண்பே போற்றி
22. ஒப்புரவறிதல்
217. மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.

பெருந்தன்மை உடையவரின் இடத்தில் செல்வம் உண்டாகுமானால், அது எல்லோர்க்கும் கிடைக்கக்கூடிய மருந்து மரத்துக்கு ஒப்பாகும்...

வறியார்க் குதவும் வாழ்வே போற்றி
23. ஈகை
221. வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.

ஈகை என்பது இல்லாதோர்க்கு ஒன்றினைக் கொடுப்பதே ஆகும்... ; பிறர்க்குக் கொடுப்பன எல்லாம் பயன் கருதிக் கொடுத்தலுக்கு ஒப்பாகும்...

பசித்துயர் மாற்றும் பரமே போற்றி
23. ஈகை
225. ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.

ஆற்றலுடையவர் வலிமையில் பெரிது பசி பொறுத்தல்... அவர் ஆற்றலும் பிறர் பசியைப் போக்குவாரது வலிமைக்கு அடுத்தபடிதான்...

வசையிலாப் புகழே வானே போற்றி
24. புகழ்
240. வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்.

தம்மைப் பிறர் இகழாமல் வாழக்கூடியவரே உயிரோடு வாழ்பவர்... இரக்கம் எனும் புகழைப் பெறாமல் உயிர் வாழ்கின்றவர்கள் வாழாதவர் ஆவர்...

தன்னுயிர் அஞ்சாத் தகவே போற்றி
25. அருளுடைமை
244. மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை.

எல்லா உயிர்களையும் காத்து அருள் செய்பவனுக்குத் தன்னுயிர் அஞ்சுதற்குக் காரணமாகிய தீவினைகள் இல்லை என்று சொல்வர்...

அல்லல் அறியா அருளே போற்றி
25. அருளுடைமை
245. அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லன்மா ஞாலங் கரி.

அருளாளர்க்குத் துன்பம் இல்லை... காற்று உலாவும் வளமான இப்பெரிய உலகமே சான்று...

உயிரழித் துண்ணா ஒளியே போற்றி
26. புலான்மறுத்தல்
259. அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று.

தெய்வத்தின் பெயரால் உயிர்க்கொலை செய்து ஆயிரக்கணக்காகச் சடங்குகள் செய்வதைவிடக் கொன்ற உடம்பின் புலால் உண்ணாமல் இருப்பது நல்லது...

தன்னுயிர் தானறு தவமே போற்றி
27. தவம்
268. தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்.

தன்னுயிர் என்றும் தான் என்றும் கருதும் பற்றினை முற்றும் நீங்கப் பெற்றவனை உலக உயிர்களெல்லாம் தொழும்...

கூற்றையும் வெல்லும் நோற்றலே போற்றி
27. தவம்
269. கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு.

தவத்தால் வரும் ஆற்றலைப் பெற்றவர்க்குக் கூற்றுவனைத் தாண்டுதலும் இயலும்...

அளவறி நெஞ்சத் தறமே போற்றி
29. கள்ளாமை
288. அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு.

அளவறிந்து வாழ்வார் நெஞ்சில் அறம் நிலைநிற்றல் போலக் களவு செய்பவர் மனத்தில் வஞ்சனை தங்கும்...

உள்ளத்தாற் பொய்யா ஒழுக்கமே போற்றி
30. வாய்மை
294. உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்.

தன் மனம் அறியாப் பொய் சொல்லாமல் வாழ்வானாயின் அவன் உலகோர் உள்ளத்திலெல்லாம் இருப்பான்...

வெகுளியை மறக்கும் விரிவே போற்றி
31. வெகுளாமை
303. மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்.

யார்மேல் சினம் கொண்டாலும் மறந்துவிடுக... மறவாவிடின் தீமைகள் எல்லாம் தோன்றும்...

இன்னாமை எண்ணா இனிமையே போற்றி
32. இன்னாசெய்யாமை
314.இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.

தமக்குத் தீமை செய்தாரைத் தண்டித்தல் என்பது, தீங்கு செய்தவர்கள் தாமாகவே வெட்கப்படும்படி அவர்களுக்கு நல்ல நன்மை செய்வதே அவரைத் தண்டிக்கும் முறை ஆகும்...

318. தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல்.

பிறர் செய்யும் தீங்குகள் தனக்குத் துன்பம் தருகின்றமையை அறிகின்றவன், பிற உயிர்கட்குத் தான் அவற்றைச் செய்தல் என்ன காரணத்தால்...?

பகுத்துண் டோம்பும் பரிவே போற்றி
33. கொல்லாமை
322. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.

தம்மிடம் உள்ளவற்றைப் பகுத்துக் கொடுத்துத் தாமும் உண்டு பல உயிர்களையும் பாதுகாத்தல், நூலோர் திரட்டிக் கூறியவற்றுள் மேலானதாகும்...

நிலைபே றுணரும் நிலையே போற்றி
34. நிலையாமை
331. நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.

நிலைத்திருக்கும் தன்மையில்லாதவற்றை நிலைக்கும் என்று மயங்கி அறியும் சிற்றறிவு கீழானது...

பற்றது பற்றாப் பற்றே போற்றி
35. துறவு
348.தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்.

முழுதும் பற்றினை விட்டவர் பேரின்பத்தை அடைந்தவராவார்... பற்றினை விடாதவர் மயங்கித் துன்ப வலையுள் பட்டவராவார்...

350. பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.

யாதொரு பற்றும் இல்லாத இறைவனைப் பற்றிக் கொள்க... பற்றினை விட்டு விலகுதற்கு அப்பற்றினையே பற்றிக் கொள்க...

மெய்ப்பொருள் உணரும் மேன்மையே போற்றி
36. மெய்யுணர்தல்
351. பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு.

பொருள்கள் அல்லாதனவற்றை பொருள்கள் என்று அறியும் மயக்கத்தினால் உளதாம் மாட்சிமையற்ற வாழ்க்கை...

352.இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு.

அறியாமையால் வரும் மயக்கத்திலிருந்து நீங்கி, குற்றமற்ற அறிவினையுடயவர்க்குத் துன்பம் நீங்கி இன்பம் உண்டாகும்...

ஐயம் அணுகாத் தெளிவே போற்றி
36. மெய்யுணர்தல்
353. ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து.

ஐயத்தினின்றும் நீங்கித் தெளிவடைந்தவர்களுக்கு மண்ணுலகத்தைவிட விண்ணுலகம் அண்மையில் உள்ளது...

354.ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு.

ஐம்புல உணர்ச்சிகளை முற்றப்பெற்ற போதிலும், மெய்யுணர்வு இல்லாதவர்களுக்கு அதனால் பயன் இல்லை...

சிறப்பெனும் செம்பொருட் செறிவே போற்றி
36. மெய்யுணர்தல்
358. பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு.

பிறப்பு பற்றிய பேதைமை நீங்க எல்லாவற்றிலும் சிறப்பாகிய செம்பொருளாம் இறைமையைக் காண்பது அறிவு...

பேரா இயற்கைப் பெற்றியே போற்றி
37. அவாவறுத்தல்
370. ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்.

எந்த வகையிலும் நிரம்பாத் தன்மையுடைய ஆசையை நீக்கிவிடின் அப்பொழுதே நீங்காத இன்பம் கிடைக்கும்...

அசையா உறுதி ஆக்கமே போற்றி
38. ஊழ்
371. ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி.

பொருள் வரவேண்டும் என்றிருந்தால் ஊக்கம் தோன்றும்... அது நீங்கிப்போக வேண்டுமென்றிருந்தால் சோம்பல் உண்டாகும்...

முறைசெய் தருளும் இறையே போற்றி
39. இறைமாட்சி
388. முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்.

முறை தவறாமல் ஆட்சி நடத்தி குடிகளைக் காப்பாற்றும் ஆட்சித் தலைவன் மக்களுக்குக் கடவுளாகக் காணப்படுவான்...

உலகின் புறத்தா னின்புறவே போற்றி
40. கல்வி
399. தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.

கற்றறிந்தவர் தாம் இனிதாக உணர்ந்ததை உலகத்தாரும் நுகர்ந்து இன்புறுவதைக் கண்டால் அதன்மேல் மேலும் காதல் கொள்வர்...

நுண்மாண் நுழைபுல நோன்பே போற்றி
41. கல்லாமை
407. நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று.

நுட்பமானதாய் மாட்சியுடையதாய் உள்ள நூல்களைக் கூர்ந்து நோக்கும் அறிவு இல்லாதவனுடைய எழுச்சியும் அழகும், மண்ணால் அழகாகச் செய்யப்பட்ட பொம்மையை ஒக்கும்...

ஆவ தறியும் அறிவே போற்றி
43. அறிவுடைமை
427. அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.

அறிவுடையவர்கள் பின் வரப்போவதனை அறிய வல்லவர்கள்... அறிவில்லாதவர்கள் அதனை அறியும் ஆற்றல் இல்லாதவர்கள்...

எதிரதாக் காக்கும் இயல்பே போற்றி
43. அறிவுடைமை
429. எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்.

வரக்கூடியதை அறிந்து காக்கும் அறிவையுடையோர்க்கு, உள்ளம் அதிர்ச்சி தரும் துன்பம் ஒன்றும் இல்லை..

வரும்முன் காக்கும் வாழ்வே போற்றி
44. குற்றங்கடிதல்
435. வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.

குற்றம் நேர்வதற்கு முன்பே அதையறிந்து தடுக்காதவனது வாழ்க்கை, தீயின் முன் நின்ற வைக்கோல் போல் அழிந்துவிடும்...

அறனறி மூத்த அறிவே போற்றி
45. பெரியாரைத்துணைக்கோடல்
441. அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்.

அறக்கூறுகளை அறிந்த முதிர்ந்த அறிவும் உடையவரது உறவை, அவரது ஆற்றல் அறிந்து தகுதி சிறப்பு ஆராய்ந்து பெற வேண்டும்...

பெரியரிற் பெரிய பேறே போற்றி
45. பெரியாரைத்துணைக்கோடல்
444. தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை.

தம்மைக் காட்டிலும் திறம் மிக்கப் பெரியவர்கள் தமக்குச் சுற்றமாக நடந்துகொள்வது, தமக்குள்ள எல்லா வலிமைகளிலும் தலையாய வலிமையாம்...

மன்னுயிர்க் காக்க மனநலம் போற்றி
46. சிற்றினஞ்சேராமை
457. மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்.

நல்ல மனம் நிலைபெற்ற உயிர்க்கு உயர்வாம்... நல்லவர் கூட்டு எல்லாப் புகழையும் கொடுக்கும்...

தக்கதே செய்யும் தகைமையே போற்றி
47. தெரிந்துசெயல்வகை
466. செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்.

செய்யத்தகாதவற்றைச் செய்தால் கெடுவர்... செய்யத்தகுவனவற்றைச் செய்யாமையானும் கேடு உண்டாகும்...

அமைந்தாங் கொழுகும் அளவே போற்றி
48. வலியறிதல்
474. அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.

அடக்கத்தோடு நடக்காதவனாய்த் தன் ஆற்றல் அளவையும் அறியாதவனாய்த் தன்னைத்தானே மிகையாக மதிப்பீடு செய்து வியத்து கொள்பவன் விரைவில் கெடுவான்...

செய்தற் கரிய செய்கையே போற்றி
49. காலமறிதல்
489. எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்.

கிடைத்தற்கு அரிதான காலம் வந்து சேருமானால், அப்பொழுதே செய்வதற்கு அரிய செயல்களைச் செய்து கொள்க...

அஞ்சாத் துணிவே துணையே போற்றி
50. இடனறிதல்
497. அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தால் செயின்.

செயல் ஆற்றுதலுக்கேற்ற திறங்களை ஒன்று விடாமல் எண்ணி, இடமறிந்து செய்தால் அச்செயலுக்கு அஞ்சாமை தவிரப் பிறதுணை வேண்டாம்...

திறந்தெரிந் தறியும் தெளிவே போற்றி
51. தெரிந்துதெளிதல்
501. அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்.

அறம், பொருள், இன்பம், உயிர் அச்சம் நான்கிலும் ஒருவனது மனநிலையை ஆராய்ந்து அறிந்து தெரிந்து புரிந்து, அதன்பின் அவனைத் தெளிய வேண்டும்...

வாரி பெருக்கும் வகையே போற்றி
52. தெரிந்துவினையாடல்
512. வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை.

பொருள் வருகின்ற வழிகளை விரிவுபடுத்தி, அப்பொருளால் பயன்படும் செல்வங்களைப் பெருக்கி, அவைகளுக்கு நேர்ந்த இடையூறுகளை ஆராய்ந்து, நீக்க வல்லவன் வினை ஆட்சி செய்வானாக...

அளவ ளாவும் அமிழ்தே போற்றி
53. சுற்றந்தழால்
523. அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று.

சுற்றத்தோடு மனம் கலந்து பழகாதவன் வாழ்க்கை குளப்பரப்பு கரையின்றி நீர் நிறைந்தது போலும்...

சுற்றம் சுற்றும் சுடரே போற்றி
53. சுற்றந்தழால்
524. சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்
பெற்றத்தால் பெற்ற பயன்.

செல்வம் பெற்றதனால் ஒருவன் பெறும் பயன், தான் சுற்றத்தார் சூழப்படுமாறு செய்து ஒழுகுதல்...

புகழ்ந்தவே புரியும் புகழே போற்றி
54. பொச்சாவாமை
538. புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.

புகழப்படும் செயல்களைக் குறிக்கொண்டு செய்தல் வேண்டும்... அங்ஙனம் செய்யாமல் இகழ்ந்தாருக்கு எப்போதும் நன்மை இல்லை...

கோலது கோடாக் கொற்றமே போற்றி
55. செங்கோன்மை
546. வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்.

ஆட்சியாளனுக்கு வெற்றியைக் கொடுப்பது அவன் கொண்டுள்ள படையன்று, நல்லாட்சியேயாகும். அதுவும் கோணாது செம்மையாக இருப்பதே...

குடிபுறங் காக்கும் குணமே போற்றி
55. செங்கோன்மை
549. குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்.

குடிமக்களைப் பிறர் வருத்தாமல் காத்து, வளர்த்து, குற்றத்திற்காக அவர்களைத் தண்டித்தல் அரசுக்குப் பழியன்று; அதன் கடமையாம் ..

ஒத்தாங் கொறுக்கும் உரனே போற்றி
57. வெருவந்தசெய்யாமை
561. தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.

ஒருவனை ஒறுக்கும்பொழுது குற்றத்தை முறைப்படி ஆராய்ந்து, மேலும் அவன் குற்றம் செய்யா வண்ணமும், உலகத்தார் ஒத்துக்கொள்ளுமாறும் தண்டனை வழங்குதல் வேண்டும்...

கண்ணோட்டம் என்னும் கவினே போற்றி
58. கண்ணோட்டம்
571. கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு.

இரக்கம் என்று சொல்லப்படுகின்ற மிகச் சிறந்த அழகு இருப்பதனால் இவ்வுலகம் இருக்கின்றது...

உள்ளம் உடைமையாம் உடைமையே போற்றி
60. ஊக்கமுடைமை
592. உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.

ஊக்கம் உடைமையே ஒருவனது சொத்து... பொருட்செல்வம் நிலைபெறாமல் சென்றுவிடும்...

நீரள வுயரும் மலருளம் போற்றி
60. ஊக்கமுடைமை
595. வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.

தண்ணீர் எந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறதோ அந்த அளவுக்கு அதிலுள்ள தாவரத்தின் பூவும் உயர்ந்து நிற்கும்... அதுபோல் மாந்தர் தம் ஊக்கத்தின் அளவு ஆக்கம் உண்டாகும்...

குடியெனும் குன்றா விளக்கே போற்றி
61. மடியின்மை
601. குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும்.

குடும்பம் என்னும் குறைவில்லாத விளக்கு சோம்பல் என்னும் கறை படியப்படிய ஒளி மங்கிவிடும்...

அறிவறிந் தாற்றும் ஆள்வினை போற்றி
62. ஆள்வினையுடைமை
618. பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி.

உடல் உறுப்புகளின் ஊனம் எவர்க்கும் குற்றமாகாது,,, அறிவினால் அறியப்படுவன அறிந்து முயற்சி செய்யாமையே குற்றமாகும்...

அடுக்கும் இடுக்கணை அழிப்பாய் போற்றி
63. இடுக்கணழியாமை
625. அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும்.

அடுக்கடுக்காக விடாமல் துன்பம் வந்தபோதிலும் கலங்காமலிருக்கும் ஆற்றலுடையவன் அடைந்த துன்பமே துன்பப்பட்டுப் போகும்.,,

இன்பத் தின்பம் விரும்பாய் போற்றி
63. இடுக்கணழியாமை
629. இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்.

இன்பம் வருகின்றபோது மகிழ்ச்சியில் மயங்கி விடாமல் இருக்கக்கூடியவன், துன்பம் வரும்போது வேதனையினால் மனம் நொந்துபோகமாட்டான்...

மதிநுட்பம் நூலோ டுடையாய் போற்றி
64. அமைச்சு
636. மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாவுள முன்நிற் பவை.

இயற்கை அறிவுடன் நூலறிவும் ஒருங்கே பெற்றுள்ளவர்க்கு மிக்க நுட்பமான சூழ்ச்சிகளாய் முன் நிற்பவை எவை உள்ளன...?

உலகத் தியற்கை உணர்வோய் போற்றி
64. அமைச்சு
637. செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்.

எப்படியான செயல் திறன்கள் பெற்றிருந்தாலும், வினை ஆற்றும்போது அன்றைய நடைமுறை உணர்வோடு பொருந்தச் செய்யவேண்டும்...

நிரந்தினிது சொல்லும் நீர்மையே போற்றி
65. சொல்வன்மை
648. விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்.

சொல்ல வேண்டியவற்றை ஒழுங்குபடுத்தி இனிதாகச் சொல்லும் ஆற்றல் உடையாரைப் பெற்றால், உலகம் விரைந்து தாம் செய்ய வேண்டிய பணி யாதென்று கேட்கும்...

வேண்டிய எலாம்தரும் வினைநலம் போற்றி
66. வினைத்தூய்மை
651. துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாந் தரும்.

நல்ல துணை உயர்வைக் கொடுக்கும்... செயல் தூய்மை வேண்டிய எல்லாவற்றையும் கொடுக்கும்...

நடுக்கறு காட்சி நயனே போற்றி
66. வினைத்தூய்மை
654. இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்.

அதிராத தெளிவினை உடையார் துன்பத்திலே சிக்கிக் கொண்டாலும் இழிவானவற்றைச் செய்ய மாட்டார்கள்...

சொல்லிய செய்யும் சுடரே போற்றி
67. வினைத்திட்பம்
664. சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.

ஒரு செயலை இவ்வாறு செய்யலாம் என்று சொல்லுதல் எல்லோர்க்கும் எளிது... ஆனால் சொல்லிய வண்ணமே செய்து முடித்தல் கடினமாகும்...

வீறெய்து மாண்பாம் வினைத்திறம் போற்றி
67. வினைத்திட்பம்
665. வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும்.

பெருமை பெற்றவரின் வினைத் திட்பம் அரசின் இடையூற்றைத் தகுந்த வழியில் எண்ணி அழிக்கும்...

நூலாருள் நூல்வல்ல நுண்மையே போற்றி
69. தூது
683. நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு.

பல நூல்களைக் கற்றார் முன் தான் மிக்க வல்லோனாய் இருத்தலாகுதல், பகைவர் முன் தம் நாட்டுக்கு வெற்றி தரும் செயலைச் சொல்வான் இயல்பு...

தூய்மை துணைமை துணிவே போற்றி
69. தூது
688. தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு.

தூய்மை, தன் நாட்டுக்குத் துணையாந் தன்மை, துணிவுடைமை, இம்மூன்றும் நன்கு வாய்த்தல் கூறியது கூறும் தூதுவன் தகுதியாம்...

போற்றிற் கரியவை போற்றியே போற்றி
70. மன்னரைச்சேர்ந்தொழுகல்
693. போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது.

காத்துக்கொள்ளக் கருதினால் பெருங்குற்றம் தம்மிடம் நிகழாதவாறு காத்துக் கொள்க... ஆட்சித்தலைவர் ஐயுற்றால் அவரைத் தெளிவுபடுத்தல் யாராலும் முடியாது...

குறிப்பிற் குறிப்புணர் குறிப்பே போற்றி
71. குறிப்பறிதல்
703. குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல்.

பிறரது முகக்குறிப்பினால் அவரது உள்ளத்தை உணர்பவரை எது கொடுத்தும் தம் அவையில் ஏற்றுக் கொள்க...

ஒளியார் முன்னுறும் ஒளியே போற்றி
72. அவையறிதல்
714. ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணம் கொளல்.

அறிவுடையார் கூட்டத்தில் நல்லறிஞனாய் விளங்குக... பேசுபொருளுக்குத் தொடர்பற்ற அவையினரானால் வெண் சுண்ணத்தின் நிறம் கொண்டு வெளியேறுக...

கற்றவை செலச்சொல் கலையே போற்றி
73. அவையஞ்சாமை
722.கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார்.

கற்றவர் அவையில் தாம் கற்றவற்றை அவர் உள்ளம் கொள்ளுமாறு சொல்லும் வன்மை உடையார் கற்றார் எல்லாரினும் இவர் நன்கு கற்றார் என்று சொல்லப்படுவார்...

நாடா வளத்ததாம் நாடே போற்றி
74. நாடு
739. நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு.

தேடி வருந்தாமல் தேவைக்குரிய பொருள்களைத் தானே விளைவிக்கும் வளம் கொண்டதே நாடாம்... மற்ற நாடுகளை நாடி அதனால் வளம் தரும் நாடு நாடல்ல...

அன்பீன் குழவியாம் அருளே போற்றி
76. பொருள்செயல்வகை
757. அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு.

அன்பு பெற்றெடுத்த அருள் என்னும் குழந்தை, பொருள் என்னும் செல்வமாகிய செவிலித்தாயால் வளரும்...

அருள்வளர் செவிலிப் பொருளே போற்றி
76. பொருள்செயல்வகை
757. அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு.

அன்பு பெற்றெடுத்த அருள் என்னும் குழந்தை, பொருள் என்னும் செல்வமாகிய செவிலித்தாயால் வளரும்...

நிறைநீர நீரவர் கேண்மையே போற்றி
79. நட்பு
782. நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு.

நல்ல இயல்புடையவர்களது நட்பு வளர்பிறை போன்றது... பேதையர் நட்பு தேய்பிறையின் தன்மையுடையது...

உள்ளம் பெருகுவ உள்ளுகை போற்றி
80. நட்பாராய்தல்
798. உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.

ஊக்கம் குன்றுதற்குக் காரணமாகிய செயல்களை எண்ண வேண்டாம்... தமக்குத் துன்பம் வந்த விடத்துக் கைவிடுவார் நட்பினைக் கொள்ள வேண்டாம்...

கேளிழுக்கம் கேளாக் கெழுதகை போற்றி
81. பழைமை
808. கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாளிழுக்கம் நட்டார் செயின்.

நண்பர் செய்த குற்றங்களைக் கேட்க விரும்பாத உரிமை அறிய வல்லவர்க்கு, நண்பர் பிழை செய்வாராயின் அது நல்ல நாள் ஆகும்...

இகலெனும் எவ்வம் இல்லாய் போற்றி
86. இகல்
853. இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்
தாவில் விளக்கம் தரும்.

மாறுபாடு என்னும் கொடிய துன்பத்தைச் செய்யும் நோயை ஒருவன் உள்ளத்தினின்றும் அகற்றினால், அது தவறாமல் அழிவில்லாத மன ஒளியைத் தரும்...

பகைநட்பாக் கொள்ளம் பண்பே போற்றி
88. பகைத்திறந்தெரிதல்
874. பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற்று உலகு.

பகையை நட்பாகச் செய்து ஒழுகவல்ல பண்புடையவன் பெருமைக் கண் உலகு தங்கி இயங்குகிறது...

அளவறிந் துண்ணும் அறிவே போற்றி
95. மருந்து
943. அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.

முன் உண்டது செரித்தால் அடுத்து உண்பதனைச் செரிமான அளவு அறிந்து உண்க... அது நல்லுடம்பு பெற்றவன் நீண்ட காலம் செலுத்தும் வழியாகும்...

செப்பமும் நாணும் சேர்வே போற்றி
96. குடிமை
951. இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு.

நல்ல குடியில் பிறந்தவர்களிடத்து அல்லாமல் மற்றவர்களிடத்து, நடுவு நிலைமையும் பழிநாணும் தன்மையும் ஒருசேர இயல்பாக அமைவது இல்லை...

பெருக்கத்து வேண்டும் பணிவே போற்றி
97. மானம்
963. பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு.

வளம் பெருகும்போது பணிதல் வேண்டும்... வளம் குறைந்த காலத்தில் பெருமிதம் வேண்டும்...

உள்ள வெறுக்கையாம் ஒளியே போற்றி
98. பெருமை
971. ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
அஃதிறந்து வாழ்தும் எனல்.

ஊக்கம் மிகுதியே ஒருவர்க்குப் பெருமை தரும்... அதை நீங்கி வாழ்வோம் என்று கருதுதல் சிறுமையே உண்டாக்கும்...

கொல்லா நலத்ததாம் நோன்மையே போற்றி
99. சான்றாண்மை
984. கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு.

உயிர்களைக் கொல்லாமை சிறப்பான நோன்பு... பிறருக்குத் தீமை உண்டாகக்கூடியதைச் சொல்லாமை சிறப்பான சால்பு...

நயனோடு நலம்புரி பயனே போற்றி
100. பண்புடைமை
994. நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு.

விரும்பப்படுதலோடு நன்மை செய்த பயனுள்ளவரது பண்பினை உலகோர் போற்றுவர்...

சீருடைச் செல்வ மாரியே போற்றி
101. நன்றியில்செல்வம்
1010. சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனையது உடைத்து.

சீர்மைக் குணங்கள் கொண்ட செல்வர்க்கு உண்டாகும் சிறு வறுமையால் இரப்போர்க்கு ஈயாதிருந்தால் என்பது, மழைபெய்யாது வறண்டுபோனாற் போன்ற நிலைமைக்கு ஒப்பானதாகும்...

கருமத்தால் நாணும் நாணே போற்றி
102. நாணுடைமை
1011. கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற.

நாணம் என்பது இழிச்செயலுக்கு வெட்கப்படுதல்... அழகிய முகம் கொண்ட பெண்களது வெட்கம் என்பது வேறு...

உழுதுண்டு வாழும் வாழ்வே போற்றி
104. உழவு
1033. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.

உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர்... மற்றவர் எல்லாரும் பிறரைத் தொழுது அவர் தருவதை உண்டு தருபவர் பின்னே செல்பவராவர்...


திருக்குறள் போற்றி காணொளியிலுள்ள விளக்கம் சுருக்கமாக :- // தமிழர் அனைவரும் ஆரியச் சமற்கிருத அயல் வரிகளையும் பாடல்களையும் தூக்கி எறிந்து விட்டு, தம் இன்பியல் துன்பியல் நிகழ்வுகளில் இது போன்ற திருக்குறள் வழி போற்றிகளையே இசைக்கவும் பாடவும் வேண்டும்... ஆங்கில ஆண்டு முடிவும் தொடக்கமும் பண்பாட்டுக் கேடாக இருப்பதை மாற்றி, திருக்குறள் நாளென தமிழ்ப்புனல் ஐயா மணிவெள்ளையனார் அவர்கள் அறிவித்து, இவ்வரிய பணியினைப் போற்றி மலேசியத் தமிழ் நெறிக் கழகம் தொடர்ந்து இவற்றைச் செயற்படுத்தி வருகிறது... // இதை கேட்பொலியாக மாற்றிய பின், கேட்பொலியில் காணும் மூன்று புள்ளிகளை சொடுக்கி (mp3-ஆக) தரவிறக்கிக் கொள்ளலாம்...


15.02.2016 அன்று புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில், தனித்தமிழ் இயக்கம் குறித்து ஆற்றிய உரையின் இணைப்பு →https://youtu.be/6nYDsaUJswg← உயிரில்-உணர்வில்-உடலில் தமிழாகவே வாழ்ந்தவர்... ஐயாவின் பேச்சை முழுமையாகக் கேட்டபின், இனிக்கும் தமிழைச் சுவைத்தாலும், அவரின் ஆதங்கம் - வேதனை - வருத்தம் - ஆகியவற்றை அதிகம் உணர்ந்தேன்... அவை 108-வது அதிகார குறள்களில் திருவள்ளுவரின் நெஞ்சக் கொதிப்பைப் போலவே உணர்ந்தேன்...

சரி, செய்து கொண்டிருக்கும் கணக்கியல் ஆய்வின் போது, சற்றே மனம் தொய்வு அடைந்தால், ஐயாவின் ஒரு கருத்து நினைவிற்கு வரும்... அது :- "உலகில் உயர்வான பளிங்குக் கற்களால் கட்டப்பட்ட தாஜ்மகால் என்ற கட்டிடத்தில் ஒரு பளிங்குக் கல்லை எடுத்துவிட்டு, அவ்விடத்தில் தற்காலத்தில் கிடைக்கும் அதே நிறத்திலான கல்லை வைத்துப் பூசிவிட்டால், புதிதாகப் பதிக்கப்பட்ட கல்லை அடையாளம் கண்டுகொள்ளாமல் செய்துவிட முடியும். திருக்குறளில் உள்ள 9310 சொற்களில் ஒரு சொல்லை எடுத்துவிட்டு அதற்கு மாற்றான ஒரு சொல்லை அவ்விடத்தில் வைக்க இயலாது..."

ஒவ்வொரு போற்றியின் திருக்குறளும் அற்புதம்... அவற்றின் விளக்கங்களைத் தொடர்புப் படுத்திச் சிந்திக்கும் போது அடியேன் அடையும் வியப்பு கணக்கிலடங்கா...! என்னே தொகுப்பு...! உறுதிப் பொருள் கொண்ட இந்தப் போற்றியைக் கேட்டு, அதன் விளக்கங்கள் போல் வாழ்வை அமைத்துக் கொண்டால், வாழ்வின் பொருளும் பயனும் கிடைப்பது உறுதி... "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்பதின் படி, கட்டம் கட்டியுள்ள போற்றி எண் மீது அல்லது அதன் போற்றியின் மீது சொடுக்கவும்... அதிகாரம் / குறள் / சுருக்கமான குறள் விளக்கம் உள்ளது... ஒவ்வொன்றாக அனைத்தையும் அறிந்து கொண்டபின், அதில் நம் வாழ்வை உட்படுத்திக் கணக்கிட்டும் சிறப்படையலாம்... நன்றி...

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. குறளாசானா குறளாசனா ?

    "கண்களை மூடி எழுதிப் பழகினார்" -  கண்களைத் திறந்து எழுதினாலே ஏகப்பட்ட தப்பு விடுபவன் நான்.

    போற்றி அகவல் தகவல் எனக்கு புதிது.  சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆசான் தான்... நன்றி... போற்றி பற்றித் தெரிந்தாலும் அதைப் பாடலாக மாற்றியிருப்பது இரண்டு நாட்களுக்கு முன்பு தான் தேடலில் அறிந்தேன்...

      நீக்கு
  2. அருமை ஜி தங்களது உழைப்பு பிரமிப்பாக இருக்கிறது.

    பதிவை தினம் காலையில் சொடுக்கி சுப்ரபாதம் கேட்பதுபோல் கேட்கலாம் போலிருக்கிறது.

    மிக்க நன்றி பயனுள்ள பதிவு 108 குறளையும் சொடுக்கி படிக்க ஆரம்பித்து விட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழுக்காகத் தன்னை அர்ப்பணித்தவர்... வள்ளுவர் தவச் சாலையை நிறுவி, குறள் நெறித் தமிழ்த் திருமணங்களை ஆயிரக்கணக்கில் நடத்தியவர்... ஏறத்தாழ 500 நூல்களை எழுதியிருக்கிறார்...

      நீக்கு
  3. புலவர் இரா. இளங்குமரனார் அவர்களைப்பற்றி நீங்கள் கொடுத்த சுட்டி மூலம் அறிந்து கொண்டேன். சகோ கரந்தை ஜெயக்குமார் அவர்கள் இவரின் தமிழ் தொண்டு பற்றி பதிவு போட்டு இருந்தார்கள் அதன் மூலமும் அவரைப்பற்றி அறிந்து கொண்டேன். அவர்களுக்கு வணக்கங்கள். அவர் மறைந்தாலும் வாழ்ந்து கொண்டு இருப்பார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் மூலம் அவரின் அனுபவ வரிகள் :- அவருக்கு வயது 80... அதிகாலை 4 மணிக்கெல்லாம் எழுந்து நடைப்பயிற்சி மேற்கொண்டவரை வியப்புடன் பார்த்தோம்... அவர் எங்களிடம் “என் உடம்பில் சர்க்கரை நோய் கிடையாது. கொழுப்பு (cholesterol) கிடையாது. குருதி அழுத்தம் (BP) கூடுதலாகவோ குறைவாகவோ இல்லை... அதற்குக் காரணம், தமிழர் வாழ்வியல் குறித்து நம் இலக்கியங்கள் காட்டும் உணவு-உடற்பயிற்சி-சரியான ஓய்வுடன் அதிகாலையில் எழுந்து, ஒரு செம்பு பச்சைத்தண்ணீர் குடிப்பேன்... விடியற்காலை 4 மணிவாக்கில் நரம்பு மண்டலம் நல்ல ஓய்வில் இருக்கும்... அப்போது தண்ணீர் குடித்தால், உடலில் உள்ள உறுப்புகளைத் தூய்மைப்படுத்தி, ரத்த ஓட்டத்தைச் சீராக வைத்திருக்கும்” என்றவர், “உங்கள் வயசுக்கு இப்படி நாள்தோறும் எழுந்திருக்க முடியாது. ஆனால், அதிகாலை 4 அல்லது 4.30 மணிக்கு எழுந்து தண்ணீர் குடித்துவிட்டு, சிறிது நேரம் கழித்துப் படுத்து, வழக்கம்போல எழுந்திருக்கலாம்” என்றும் சொன்னார்...

      நீக்கு
  4. திருக்குறள் போற்றி பற்றி தெரிந்து கொண்டேன்.
    108 போற்றிகளும் படித்து மகிழ்ந்தேன்.
    கேட்பொலி கேட்டேன் தரவிறக்க முடியவில்லை. மீண்டும் தரவிறக்கம் செய்து பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. அவர் பேச்சு கேட்டேன். கல் பேசுவதாக அவர் சொன்னது மிக அருமை.
    நன்றி நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் மூலம் அவரின் அனுபவ வரிகள் :- குற்றாலம் சென்ற பிறகு முறைப்படி தொடங்கிய பயிலரங்கத்தில், தொல்காப்பிய இலக்கணக் குறிப்புகளைச் சொல்லித் தந்தார்... சங்க இலக்கியங்களைப் புரிந்து கொள்ளச் செய்தார்... ‘பிரசவ வார்டு’ என்றும் 'மகப்பேறு மருத்துவமனை' என்றும் இப்போதைய தமிழ் இருக்கிறது... ஆனால், இலக்கியத்தில் அதற்கு ‘ஈனில்’ (குழந்தையை ஈனுகிற இல்லம்) என்ற சொல் இருக்கிறது... தமிழ் இலக்கிய-இலக்கண அடிப்படையில் இப்படிப் பல புதிய சொற்களை உருவாக்க முடியும் என்றார்...

      பயிலரங்கம் நடந்த கூடத்திலிருந்து பார்த்தால், குற்றால மலைகளும் அதனையொட்டிய நிலமும் தெரியும்... அதில் கொக்குகள் பறந்து வந்து ஓய்வெடுத்தன. அப்போது இளங்குமரனார், “இந்தப் பறவை கொக்.. கொக்.. என்று குரல் எழுப்பும். அதனால் கொக்கு என்று அழைத்தார்கள். இந்த கொக்கு போலவே இருக்கும் இரும்பு வளையத்தை ‘கொக்கி’ என்றார்கள்... இப்படியாகச் சொற்களை எளிமையாகக் கட்டமைத்த வளமான மொழி நம் தமிழ்மொழி. ஆனால், அதைப் பேசுவதற்கு, படிப்பதற்கு, எழுதுவதற்குத் தயங்குகிற ஒரு தலைமுறை உருவாகியிருக்கிறது” என்று சொன்னவர் கண்கள் கலங்கி, குரல் தழுதழுக்க சில மணித்துளிகள் அமைதியாகிவிட்டார்...

      மூன்று நாட்கள் அவருடன் இருந்தபோது, தமிழ் தவிரப் பிறமொழிச் சொல் ஒன்றுகூட அவரிடமிருந்து வெளிப்படவில்லை... சில தமிழ்ச் சொற்கள் நமக்குப் புரியவில்லை என்றால், அதற்கு மட்டும் ஆங்கிலத்தில் வழங்கப்படும் சொற்களைக் குறிப்பிட்டு, தமிழ்ச் சொல்லை விளக்கினார்...

      நீக்கு
  6. திருக்குறள் போற்றி பாடல் மனதை மயக்குகிறது ஐயா.
    ஒவ்வொரு போற்றி வரிகளுக்கும் உரிய குறளை தாங்கள், தங்களின் மாய வித்தைக்குள் அடக்கிக் காட்டியிருப்பது வியக்க வைத்தாலும், இப்பாடல்களுக்காக தாங்கள் எடுத்திருக்கும் முயற்சி நினைக்க நினைக்க மலைக்கத்தான் வைக்கிறது.
    தமிழ்க் கடல் ஐயா அவர்களுடன் பலமுறை உரையாடும் வாய்ப்பினைப் பெற்றுள்ளேன். எனது வித்தகர்கள் நூலில் இடம் பெற்றவர்களுள் ஐயாவும் ஒருவர்.
    ஐயா அவர்கள் எனக்கு எழுதிய இரண்டு கடிதங்கள்தான் எனது பொக்கிசம்

    பதிலளிநீக்கு
  7. நண்பர் சொன்ன அனுபவ வரிகள் அருமை.
    நம் முன்னோர்கள் பசு கன்று ஈனும் என்றுதான் சொல்வார்கள்.
    குழந்தைகள் ஈன்றாள் என்றும் சொல்வது உண்டு.
    ஐயா பேசிய தொல்லிகாப்பியமும் கேட்டேன்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  8. எங்கள் பக்கம் கழுத்தில் அணியும் அட்டிகையை கழுத்தில் மாட்டுவதை கொக்கி என்றுதான் சொல்வோம். மரத்தில் காய்கள் பறிக்க எல்லோர் வீடுகளிலும் கொக்கி இருக்கும் மரக்குச்சியின் ஓரத்தில்.
    தமிழ் கடல் ஐயா எங்கள் ஊர் பக்கம் தான். வழியை தடம் பார்த்து நட என்றார்கள்.மெதுவாக போ என்பதற்கு பைய பைய என்றார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா எழுதிய "செந்தமிழ் சொற்பொருள் களஞ்சியம்" - 10 தொகுதிகள் தமிழர்கள் வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க நூல்களாகும்... சங்க இலக்கிய சொற்களில் 8 ஆயிரம் சொற்களுக்கான விளக்கங்கள் சுமார் 3254 பக்கங்களில் இருக்கிறது... நூலில் வினைச்சொற்களாகிய 'அடி'த்தல் சொல்லடியாக 145 சொற்கள், உண்ணல் வகைகள், ஊர்ப் பெயர்கள் 504, நோய் வகைகள் 229, நோய் வினைகள் l 216, மதில் பொறி வகைகள் 28, மலை வகைகள் 25 - இவ்வாறு எத்தனையோ வகைகள் இக்களஞ்சியத்தில் அடங்கியுள்ளன... களஞ்சியத்தின் 'அ' முதல் 'வெப்' அடங்கிய பத்து தொகுதிகளில் 'அ'கர வரிசைச் சொற்கள் மட்டுமே 272 பக்கங்கள் கொண்ட தனி நூலாக அதாவது முதல் தொகுதியாயிருக்கிறது... இதில் 'அழகு' என்ற சொல்லுக்கு மட்டுமே 67 விளக்கங்கள் கொடுத்திருக்கிறார்... யானையின் பெயர்களாக அதன் விளக்கங்களாக 67 வகைப்பாட்டைக் கூறி விளக்கியிருக்கிறார்...

      தமிழுக்கு ஈடரிய செம்மை மிகு வளங்கள் சேர்த்த பெருமான்... அவருடைய அருமைகளையும் பெருமைகளையும் மாண்புகளையும், அவர் பதிந்து வைத்த அறிவுச் செல்வங்களையும் அறிந்தறிந்து போற்றவேண்டும் வழிவழியாய் வரும் தமிழ்மக்கள்... என்றென்றும் வாழ்க ஐயாவின் செம் புகழ்...

      நீக்கு
  9. ஒவ்வொரு போற்றியின் குறளும் அற்பதமாக இருக்கிறது... சிந்தியுங்கள் என்றவுடன் அரண்டு, இரண்டடி பின்னால் நகரவேண்டி இருக்கிறது

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    இன்றைய பதிவு வழக்கத்தை விடவும் அருமையாக உள்ளது. 108 போற்றி வகை குறள்களும், அதனை தொட்டால், திருக்குறளும், அதன் பொருட் விளக்கமுமாக வருவதும் மிக நன்றாக உள்ளது. அதில் உங்களது அயராத திறமை மிகுந்த தொழிற்நுட்ப வேலைகள் வியக்க வைக்கின்றன. உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

    புலவர் ஐயா. இரா. இளங்குமரன் அவர்களைப் பற்றிய தகவல்கள் தாங்கள் தந்த சுட்டியில் சென்று அறிந்து கொண்டேன். அமைதியான அறிவு நிரம்பிய முகமும், இத்தனை விருதுகள் புகழும் பெற்றும், தன்னடக்கம் நிரம்பிய உருவமுமாக திகழும் அவரைக் கண்டு பணிவுடன் வணங்கி கொண்டேன். அவர் பிறந்த திருநெல்வேலியில் நானும் பிறந்துள்ளேன் என என்னும் போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. வந்த கருத்துரைகளில், உங்கள் பதில்களை கண்டு அவர் பெருமைகளை உணர்ந்தேன். போற்றி கேட்பொலியும் ரசித்து கேட்டேன். மிக நன்றாக இருந்தது. நீங்கள் கூறியபடி போற்றி பாடல்களை தரவிறக்கம் செய்து படிக்கிறேன். இன்றைய உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.

    எனது கைபேசி இன்றைய தினத்தில் மிகவும் பேசும் உபயோகத்தில் இருந்ததினால், தாமதமாக இங்கு வருகை தரும்படி ஆகி விட்டது. வருந்துகிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  11. மிகவும் சிறப்பு. திருக்குறள் வாழ்வியல் நெறிமுறைகளை வாழ்வியல் வழிமுறையாக கொண்டு வாழ்ந்த அறிஞர்கள் பலர். அதில் புலவர் இரா. இளங்குமரனாரும் ஒருவர் என்பதனை அறிந்து மகிழ்ந்தேன். தாங்கள் தங்களின் திருக்குறள் ஆய்வுரையுடன் திருக்குறள் வழிகாட்டுதலின்படி வாழ்வாங்கு வாழ்ந்த இதுபோன்ற அறிஞர்களின் வாழ்க்கை குறிப்புகளையும் அவ்வப்போது தொகுத்து அளித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். நன்றி !!!

    பதிலளிநீக்கு
  12. சிறப்பான தகவல்கள். போற்றி மற்றும் அதற்கான குறள் என அட்டகாசமாக வந்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
  13. ஒரு மாமனிதரைப் பற்றிய அரிய பதிவு. தேடித்தேடி நுணுகி ஆராய்ந்து ஐயாவிற்குப் புகழாரம் சூட்டிய விதம் அருமை. இவரையும், இவரது பணியையும் கூறிக்கொண்டே இருக்கலாம். ஐயாவின் பொழிவினை நேரில் கேட்ட அனுபவங்கள் உண்டு. சொல்லுக்குப் பொருள் கூறும்போதும், விளக்கம் கூறும்போதும் அவர் பயன்படுத்தும் உத்தி ஒரு குறிப்பிட்ட பொருண்மையில் அடிப்படையாக எதுவும் தெரியாதவர்கள்கூட நன்கு புரிந்துகொள்வார்கள். இவரைக் கண்டதும், பேசியதும் எனக்குக் கிடைத்த பெரும் பேறாகக் கருதுகிறேன்.

    பதிலளிநீக்கு
  14. தமிழறிஞர் இளங்குமரனார் புகழ் என்றும் வாழ்க

    பதிலளிநீக்கு
  15. தங்களின் உழைப்பு மிகவும் பிரமிக்க தக்கது நண்பரே. பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.