🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



கொம்பில்லா தலைமை...

அனைவருக்கும் வணக்கம்... இந்திய அரசியலமைப்பைப் பற்றிய பல்வேறு விளக்கங்கள் விக்கிப்பீடியாவில் இருந்தாலும், உலகிலேயே எழுதப்பெற்ற மிகவும் நீளமான அரசியலமைப்பைக் கொண்டுள்ளது நம் நாடு... சரி, எந்த நாடாக இருந்தாலும், கொம்பில்லா தலைமையும் வாய்க்க வேண்டும்...!


முந்தைய பதிவு கொம்பில்லா மனிதத்தின் குறள்களின் குரலை இங்கே சொடுக்கிச் சென்று வாசிக்கலாம்...

கொம்பில்லா பொருட்பால் குறள்களின் குரல் :

385. இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு - (39.இறைமாட்சி)

தரிசு நிலங்களை விளை நிலங்களாக ஆக்குதல், கனிம வளங்களை மேம்படுத்தி வருவாய்க்கு உரியதாக மாற்றல், புதிய வரிகளைச் சுமையாக்காமல் வருமானம் ஈட்டல் போன்ற வருவாய் பெருக்கும் பல்வேறு துறைப் பணிகளைத் தொகுத்தல், தொகுத்த பொருளைப் பாதுகாத்தல், அவற்றைச் சரியாகப் பங்கீடு செய்தல் போன்ற அரிய பணிகளைச் செயல்படுத்தத் தனித்திறம் வாய்ந்தவர்களை அமைப்பதோடு, மிகவும் முக்கியமாக "ஒட்டுமொத்த சமுதாய மக்களுக்கு எவை நல்லவையோ அவற்றைக் கருத்தில் கொண்டு" உறுதியுடன் செயல்படுவதே வல்லரசு...!

399. தாமின் புறுவது உலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார் - (40.கல்வி)

அவ்வாறு தனித்திறம் வாய்ந்த கற்றறிந்தவர்கள் தாம் இன்புறுவதற்குக் காரணமான கல்வியால் உலகமும் இன்பம் அடைகிறதைக் காண்பார்கள்... அவற்றைப் பயிற்றுவிக்கும் போது, எவ்வாறு இன்பத்தை உணர்ந்தாரோ, அதே இன்பத்தைக் கற்பவர்கள் உணருகின்ற வகையில் பயிற்றுவித்தால், இருவரும் ஊக்கத்துடன் பல பயன்களை அடைவதோடு, கல்வியின் மேல், மேலும் மேலும் காதல் கொண்டு கற்பார்கள்... "யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்..."

452. நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு இனத்தியல்ப தாகும் அறிவு - (46.சிற்றனம்சேராமை)

ஆனால் இவ்வையகத்தில், ஒரே பகுதியில் உள்ள கிணற்று நீர்கூட ஒரே சுவையாக இருப்பதில்லை... ஓரிடத்தில் இனிமையாகவும் வேறொரு இடத்தில் உப்புச் சுவையாகவும் இருக்கும்... காரணம் அந்தந்த இடத்தில் உள்ள மண்ணின் இயல்பேயாகும்... அதே போல் சிலரின் அறிவு, சேர்ந்து பழகும் கூட்டத்தாரைப் பொறுத்து, "காணுதல், நினைத்தல், ஒழுகுதல்" ஆகியவற்றில் மாற்றம் உண்டாகி வாழ்க்கை கெடும்... சிற்றினத்தோடு சேர்ந்தால் நல்லோர் அறிவும் திரிந்தே செயல்படும்...

485. காலம் கருதி இருப்பர் கலங்காது ஞாலம் கருது பவர் - (49.காலமறிதல்)

அதனால் அவ்வாறில்லாமல் கவனத்துடனும், துருதுருத்து படபடவென்று ஒரு செயலில் ஈடுபடாமல், கலக்கமில்லாமல், விரைவு காட்டாமல், பதற்றம் கொள்ளாமல், "காலம் வரட்டும்" என்று பொறுமையாகக் காத்திருந்து, எடுத்த முயற்சியில் வெற்றி கொள்ளத் தேவையான உத்திகளை வெளியார் அறியா வண்ணம் மேற்கொண்டால், இந்த உலகத்தையே ஆள எண்ணலாம்...!

625. அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கட் படும் - (63.இடுக்கணழியாமை)

அவ்வாறு எண்ணங்கள் உயர்வடைந்து செயலாக்கம் போது, அலை அலையாக எத்துணை துன்பங்கள் எதிர்ப்பட்டாலும், தனது முயற்சியில் சற்றும் கலங்காமல் அழுந்தக் காலூன்றி நின்று விட்டால், வந்த துன்பம் 'இவரைத் துன்புறுத்தித் துவளச் செய்யமுடியவில்லையே' என்று, துன்பமே துயரப்பட்டு ஓடிவிடும்... இதற்குத் தேவை "எதையும் தாங்கும் இதயம்..."

நண்பர்களே... இந்தப் பதிவில் குறள்களுமே அரசு இயலில் வருவதைக் கவனிக்கத்தக்கது... இதுவரை மொத்தம் குறள்கள்; வேறு ஏதேனும் குறள்கள் உள்ளதா...? அதோடு தங்களின் கருத்தையும் பதிவு செய்யுங்கள்... நன்றி...
கொம்பில்லா குறள்கள் அவ்வளவு தானா...? - இல்லை, தொடரும்...!
ஏன்...?
கொம்பில்லா மனிதத்திற்கும், தலைமைக்கும், முளைக்கக்கூடாதது :


புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. புதுமையான தலைப்புகளில் குறளை அறிமுகப் படுத்துவது டிடியின் தனிச் சிறப்பு

    பதிலளிநீக்கு

  2. வணக்கம் ஜி
    குறள்களோடு தந்த விளக்கம் நல்ல புரிதலை கொடுத்தது.

    இறுதியில் வந்த கொம்பு இதற்கு எப்படி இரண்டு நிறம் கொடுத்தீர்கள். ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டு யோசிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. இதுவரையிலும் மொத்தம் எத்தனை குறள்களை ஆராய்ச்சிப் பூர்வமாக எடுத்து இருக்குறீங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணே, வியாபாரத்தைப் பற்றிய Excel - Database பார்த்து மாமனார் சொன்னார், "லாப கணக்குகளைத் தினம் தினம் ஆராயக்கூடாது, வருடாவருடம் மட்டும் பாருங்கள்..." என்றார்... Excel File-ல் சில Column-களை நீக்கி விட்டேன்...! அது போல நீங்கள் கேட்டதால் ஒரு தேடல் :- 100 அதிகாரங்களை இன்னமும் குறளின் குரலாகப் பதிவு செய்ய வேண்டும்... அதை தற்சமயம் செய்யாமல், வேறு பாதையில் சிறிது சென்று கொண்டிருக்கிறேன்... ஆய்வு என்று எடுத்துக் கொண்டால், புகழ் மற்றும் ஊழ் அதிகாரம் மட்டுமே என்று நினைக்கிறேன்... நன்றி...

      நீக்கு
  4. அரசு என்ன திட்டங்கள் வகுத்தாலும் அதற்குள் புகுந்து ஆட்டையும் தேட்டையும் போடும் பெருச்சாளி அலுவலர்களைப் பற்றியும் தாங்கள் ஒரு பதிவிட வேண்டும் தனபாலன்.. வெட்ட வெட்ட முளைக்கும் பல்லியின் வால் போல கயமைத் தனத்தில் ஊறிக் கிடக்கும் இவர்களைப் பற்றியும் குறளில் இருந்து எழுத வேண்டும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வலைப்பூ நண்பர்களைத் தவிர்த்து, உறவினர்கள், நண்பர்கள் பலரும், மத்திய மாநிலக் கட்சிகள் அனைத்திலும் உள்ளார்கள்... சில நேரம், பதிவுகளை வாசித்துவிட்டு, தொடர்பு கொண்டு, "எங்களைத்தான் சொல்கிறாயா...?" என்று கேட்பார்கள்... இவை குறள் விளக்கங்கள் என்று புரிய வைப்பதற்குள், முருகா...! அரசு இயலில் 25 அதிகாரங்கள் இருக்கிறது... செங்கோன்மை & கொடுங்கோன்மை இணைத்து எழுதியிருந்தாலும், இன்னொரு அதிகாரத்தையும் தேர்ந்தெடுத்துள்ளேன்... நன்றி ஐயா...

      நீக்கு
    2. ஓ!... இப்படியும் ஒன்று இருக்கிறதா!... தங்களது பதிலுரைக்கு நன்றி..

      நீக்கு
  5. குழந்தைகளுக்கு பள்ளியில் பாடத்திட்டமாக கொண்டு வரலாம்.
    அவ்வளவு விளக்கம் மிக அருமை..

    வல்லரசு எப்படி இருக்க வேண்டும் என்று சொன்னது மிக அருமை.

    நம்மிடம் உள்ள குற்றத்தை நீக்கி, அறிவை பெருக்கி வாழவேண்டும் என்று ஐயன் சொல்கிறார்.

    அருமையான பதிவு.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    பதிவு வழக்கம் போல் அருமை. குறள்களும், அதற்கேற்ற விரிவான விளக்கங்களும் படித்துணர்ந்தேன். குறள்களை இப்படி அலசி ஆராய்வதில் உங்களுக்கு நிகர் நீங்களே... உங்களின் இந்தத் தனித் திறனால் ஒவ்வொரு குறள்களையும் தெளிவான வகையில் நாங்கள் புரிந்து கொள்கிறோம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. இன்றையிலிருந்து தமிழ்நாட்டில் கொம்பில்லா தலைமை வாய்க்க போராடுவோம் ...!!!!


    பதிலளிநீக்கு
  8. தலை சுற்றுகிறது நண்பரே
    தமிழ் படித்த நாங்கள் உங்களிடம் பிச்சை வாங்க வேண்டும்.
    முதல் வேலையாக ஒரு நூலாக்குங்கள்.

    பதிலளிநீக்கு
  9. குறள்களும் அதற்கான விளக்கங்களும் சிறப்பு. தொடரட்டும் உங்களது தேடல்.

    பதிலளிநீக்கு
  10. குறள்களை புதிய கோணத்தில் பார்த்து,படித்து ஆய்வு செய்து இருக்கிறீர்கள். பாராட்ட சொற்களைத் தேடுகிறேன்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.