🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



ஆருயிரே மன்னவரே...

வணக்கம் நண்பர்களே... இந்த வருட ஆரம்பத்தில் → முன்னோட்டமாக ← ஆரம்பித்து,
நாணுத்துறவுரைத்தல் ← | → அலரறிவுறுத்தல் ← அதிகாரங்கள் அடுத்து,
நிகழ்வது பிரிவு - கற்பியலின் முதல் அதிகாரம் பிரிவாற்றாமை - அதற்கேற்ப ஒரு பாடலை முதலில் கேட்போமா...?


தேரோடும் வாழ்வில் இன்று ஓடோடி வந்த என்னை, போராட வைத்தானடி - கண்ணில் நீரோட விட்டானடி... கையளவு உள்ளம் வைத்து கடல் போல் ஆசை வைத்து... விளையாடச் சொன்னானடி, என்னை விளையாடச் சொன்னானடி – அவனே விளையாடி விட்டானடி... எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த என் தலைவன், விட்டு விட்டுச் சென்றானடி – இன்று வேறுபட்டு நின்றானடி...© பாத காணிக்கை கண்ணதாசன் விஸ்வநாதன்-ராமமூர்த்தி P.சுசீலா @ 1962 ⟫

அன்பின் அருமை பிரிவில் தான் நன்றாகத் தெரியும் என்பார்கள்... ஒருவரை ஒருவர் நினைத்துப் பார்ப்பதற்கு, பிரிவினாலும் ஒரு வாய்ப்பு அதிகம்...! தனது குடும்பத்தின் வளத்திற்காக வீட்டைப் பிரிந்து வேறு இடங்களில் வேலை செய்யும் சூழல் பலருக்கும் அமைந்து விடுகிறது... அறிவியலின் வளர்ச்சி இருவரின் தொடர்பு நிலைக்குச் சிறிது உதவினாலும், பிரிவின் துயரம் உள்ளம் தொடர்பானதாதலால், தொலைத்தொடர்பு கருவிகள் ஓரளவிற்கே மனதிற்கு ஆறுதல் சிறிது தர முடியும்... சரி, பிரிவாற்றாமை அதிகாரத்தில் குடும்பத் தலைவனைப் பிரிய நேரிடும் குடும்பத்தின் ஆணி வேரான தலைவியின் நிலையை... இன்றைய காலத்தின் உரையாடலுக்கேற்ப சொல்லியுள்ளேன்...



அதிகாரம் 116 பிரிவாற்றாமை (1151-1155)

என்னைய விட்டு போகப்போறதில்லைன்னா, அந்த மகிழ்ச்சி செய்திய என்கிட்ட சொல்லுங்க... இல்லையா, நீங்க திரும்பி வரும்போது யாரு உசுரோட இருப்பாங்களோ அவங்ககிட்டே சொல்லிக்கிங்க...

செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை 1151


வார்த்தைக் கனவுகளைக் கலைத்தாயோ...? ஒரு வாசல் திறந்ததென்று நினைத்தாயோ...? மாயப் பறவை ஒன்று, வானில் பறந்து வந்து, வாவென அழைத்ததைக் கேட்டாயோ...? என்ன நினைத்து என்னை அழைத்தாயோ...? ஏன் இந்தக் கோலத்தைக் கொடுத்தாயோ...? முன்னம் இருந்த நிலை நினைத்தாயோ...? முகத்தைப் பார்த்துக் கொள்ளத் துடித்தாயோ...?© நெஞ்சில் ஓர் ஆலயம் கண்ணதாசன் விஸ்வநாதன்-ராமமூர்த்தி P.சுசீலா @ 1962 ⟫

க்கும்... என்னதான் நான் கத்தி முறைச்சிக்கிட்டாலும், உங்க பார்வையைப் பார்த்தா எனக்குக் கொஞ்சம் சந்தோசமாத்தான் இருக்கு... ஆனா மூட்டை முடிச்சிக்கிட்டு கிளம்புறத்தைப் பார்த்தா, அடுத்த நொடியிலிருந்து தனியா இருக்கப்போறதை நினைச்சி எனக்கு ரொம்பவே பயமா இருக்கு...

இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு 1152


இதயம் காட்டும் கண்ணாடி வதனம் இல்லையா...? இரு விழிகள் படைத்திருந்தும் புரியவில்லையா...? சிதறி வரும் வார்த்தைகளில் தெரியவில்லையா... சிந்தனையில் தெளிவுடையோர் யாருமில்லையா...? சிரிக்கச் சொன்னார் சிரித்தேன்... பார்க்கச் சொன்னார் பார்த்தேன்... எனக்கெனவோர் உணர்ச்சி இல்லை தோழி... காதல் இன்னமுதே வாடிய நீ வாழி...© கவலை இல்லாத மனிதன் கண்ணதாசன் விஸ்வநாதன்-ராமமூர்த்தி P.சுசீலா @ 1960 ⟫

சரி, உங்களுக்கும் எவ்வளவு சிரமம்ன்னு புரியுது... ஆனாலும் என்னைய விட்டு பிரியரத நினைக்கும் போது, என்மேலே பிரியமே இல்லையான்னு தோணுது...

அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவோ ரிடத்துண்மை யான் 1153


காரிருளில் அகல் விளக்கைத் தூது விட்டு நின்றேன் - அது காற்றினில் ஒளியிழந்து திரும்பிடக் கண்டேன்... ஓருயிரை உனக்கெனவே வழியனுப்பி வைத்தேன் - அது உன்னிடமே தங்கியதால் உயிரிழந்து நின்றேன்... ஆருயிரே மன்னவரே... அன்பு மயில் வணக்கம்... உன் ஆசை நெஞ்சம் மாறியதேன்...?, புரியவில்லை எனக்கும்... ஆருயிரே மன்னவரே...© குலமகள் ராதை கண்ணதாசன் K.V.மகாதேவன் P.சுசீலா @ 1963 ⟫

ஒன்னும் பயப்படாதே எந்தக் காலத்திலும் உன்னைப் பிரியமாட்டேன்னு, எவ்வளவு அன்பா கல்யாணத்தப்போ சொன்னீங்க; மறந்திட்டீங்களா...? அப்போ நான் நம்புனது தவறப்போச்சே... இப்படி என்னை கதற வைச்சிட்டீங்களே...

அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
தேறியார்க்கு உண்டோ தவறு 1154


மணமுடித்தவர் போல் அருகினிலே ஓர், வடிவு கண்டேன் தோழி... மங்கை என் கையில் குங்குமம் தந்தார், மாலையிட்டார் தோழி... வழி மறந்தேனோ...?, வந்தவர் நெஞ்சில் சாய்ந்து விட்டேன் தோழி... அவர் மறவேன் மறவேன் என்றார் உடனே - மறந்து விட்டார் தோழி... பறந்து விட்டார் தோழி... ஆஆஆஆஆ... மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான், கனவு கண்டேன் தோழி...© பாக்யலக்ஷ்மி கண்ணதாசன் விஸ்வநாதன்-ராமமூர்த்தி P.சுசீலா @ 1961 ⟫

என்னை விட்டுப் போயிட்டா, அப்புறம் நாம சேர்றது ரொம்ப சிரமம்ங்க.. ஏன்னா, உங்க பிரிவாலே நான் செத்தே போயிட்டேன்னா...? என் உயிரைக் காப்பாத்திக்க இதை தடுக்கவே முடியாதா...?

ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
நீங்கின் அரிதால் புணர்வு 1155


கண்களில் தோன்றும் காட்சியில் ஒன்றாய், கலந்தே நின்றாயே கலந்தே நின்றாயே... நினைவுகள் தோன்றும் நெஞ்சில் என்றும், நிறைந்தே நின்றாயே நிறைந்தே நின்றாயே... இனி அவருடன் வாழ்வில் ஒன்று சேரும், திருநாள் வாராதோ, என் மண நாள் வாராதோ...? மலரே மலரே தெரியாதோ...? மனதின் நிலைமை புரியாதோ...? எனை நீ அறிவாய், உனை நான் அறிவேன்...© தேன் நிலவு கண்ணதாசன் A.M.ராஜா P.சுசீலா @ 1961 ⟫



தன்னைப் பிரிந்து செல்லும் கணவனிடம் நடந்த உரையாடலை அறிந்தோம்... இனி அடுத்த ஐந்து குறள்களில், பெண் எனும் பெருந்தகை தனது மனதிடம் உரையாடி, தன்னை எவ்வாறு சாந்தப்படுத்தி சமாதானமாகிறார் என்பதை விவரிக்கும்... அதை அடுத்த பகுதியில் கேட்போம்... இனி...
குறளும் அதன் விளக்கமும் தரும் பிரிவின் சோகத்தை உணர, ஓரளவு குறளுக்கேற்ப பாடலை கேட்க, மேலிருந்து ஒவ்வொரு இதயத்தையும் சொடுக்கிக் கேட்கவும்...
கேட்பொலிகள் ஒவ்வொன்றும் அதிகபட்சம் 1.5 நிமிடங்களே...

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. இன்றைய பதிவின் தலைப்பு பி. சுசீலாம்மாவின் குரலையும், பாலகுமாரனையும் ஒரே நேரத்தில் நினைவு படுத்துகிறது!  பதிவு வழக்கம்போல சிறப்பு.

    பதிலளிநீக்கு
  2. பிரிவாற்றாமை ....குறளை வாசித்து கருத்துக்களை அறிந்துக் கொண்டேன் ...

    அருமை

    பதிலளிநீக்கு
  3. தொழில்நுற்பம் வழக்கத்தைவிட பிரமிப்பூட்டுகிறது ஜி.

    பாடலுக்கான எழுத்துரு அசத்தல், குறளுக்கானதும் அருமை.

    நல்ல பாடல் வரிகள் ஜி மொத்தம் நான்கு எழுத்துருக்கள்.

    பதிலளிநீக்கு
  4. எனக்கு எழுத்துரு மாற்றத்தினை ஏற்க மனசு ஏற்கவே இல்லியே! என்ன செய்ய?!

    பதிலளிநீக்கு
  5. அன்பின் அருமை பிரிவில்தான் தெரியும்....உண்மை

    பதிலளிநீக்கு
  6. என் மனசு கல்போல... பிரிவின் துயரம் எனக்கு தெரியவேயில்லை....அனுபவமில்லையோ...??

    பதிலளிநீக்கு
  7. பிரிவின் சோகத்தைப் பதிவும் பாடலும் மனதைக் கலங்க வைக்கிறன
    எழுத்துக்களோ மாயாஜாலம் புரிகின்றன

    பதிலளிநீக்கு
  8. திருக்குறள் ஓவியம் அருமை.

    பாடல்கள் அனைத்தும் நல்ல தேர்வு. திருக்குறளும் கண்ணதாசன் பாடல்களும் மிக அருமை.
    இதயத்தை சொடுக்கி குறளும் அதன் அதன் விளக்கமும் கேட்டு குறளுக்கு ஏற்ற பாடலையும் கேட்டு ரசித்தேன்.

    அன்பின் அருமை இந்த கொரோனா காலத்தில் ரொம்பவே தெரிகிறது. பிரிந்து ஊரில் வேலைப்பார்க்கும் தலைவன், தலைவி (இப்போது பெண்களும் வெளி நாட்டில் வேலைபார்க்கிறார்கள்) பிரிவு துன்பம் நிறையவே!
    சகோதர சகோதரிகளை , சொந்தங்களை பார்க்காமல் இருப்பதே மனது கனத்து போகிறது.

    குடும்பத்தை பிரிந்த தலைவனின் பிரிவை தாங்க முடியாது பேசும் தலைவியின் துயரத்தை நன்றாக சொல்லி இருக்கிறீர்கள். ஆனால் ஏற்கனவே வேறு வழி இல்லாமல் வெளி நாடுகளுக்கு வேலைக்கு போனதலைவர்கள் பாடு இதை கேட்டால் இன்னும் வருந்தும்.

    புதிய எழுத்துறு , இதய தொழில்நுட்பம் எல்லாம் அருமை.

    பதிலளிநீக்கு
  9. டிடி பதிவு வழக்கம் போல சிறப்பு. இடையிடையே இதயத்தைத் தொட்டால் திருக்குறள்!! சிம்பாலிக்?!!!! எழுத்துருக்கள் நல்லாருக்கு. நானும் எடுத்து வைத்திருக்கிறேன் பெரும்பாலும் எல்லாமே.

    கீதா

    பதிலளிநீக்கு
  10. திருக்குறள் ஓவியம் மிகவும் நன்றாக இருக்கிறது

    கீதா

    பதிலளிநீக்கு
  11. பிரிவின் அருமை இப்ப யாரும் எங்கும் போக முடியாது என்ற சூழல் இருப்பதால் ரொம்பவே தெரிகிறது. முன்பு இருந்ததை விட எனலாம். ஒன்று இல்லை என்று வரும் போதோ அல்லது தடங்கள் வரும் போதுதான் கூடுகிறது. விந்தை மனித உள்ளம் ! வாய்ப்பு கிடைக்கும் போது அனுபவித்துவிட வேண்டும் கூடியவரை அன்பையும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  12. அருமையான பதிவு. நல்ல பாடல்கள்.

    பதிலளிநீக்கு
  13. அன்பு தனபாலன். குறள்களின் இனிமையோடு
    மனதைப் பிழியும் குரல் இனிமையும் சேர்வது கற்பனைக்கு எட்டாத அதிசயம்.
    எழுத்துக்களின் வண்ணமும், பாடல்களில் தெரியும் பிரிவாற்றாமையும் மனதைக் கலங்க வைக்கிறது.
    அதுவும் எல்லாமே 60 களில் வந்த திரைப்பாடல்கள்.
    குறளோவியமும்
    குரலினிமையும் மறக்க இயலாதவை .நன்றி மா.
    ஆற்றமுடியா பிரிவுகளுக்கு இவை மருந்தாகலாம்.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    வழக்கம் போல் பதிவு மிகச்சிறப்பு. இதயம் தொட்ட பாடல்கள்.. , இதயத்தை தொட்டால் வருவது போல், அமைத்திருக்கும். உங்கள் தொழில் நுட்பமும், பாடலுக்கேற்ற ஐயனின் குறள்களையும், கேட்டும், படித்தும், கூடவே பாடியும் ரசித்தேன். பதிவு மிக அருமையாக உள்ளது. இனி அடுத்த பதிவில் பெண் தன் மனதோடு பேசி சமாதானமாகும் ஐந்து குறள்களையும்
    அதற்கேற்ற திரைப்படப் பாடல்களையும், உங்கள் பாணியில், ரசிக்க காத்துக் கொண்டிருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  15. அடுத்த பதிவில் பெண் தன் மனதோடு உரையாடி தன்னை தேறுதல் செய்து கொள்ளபோவது மனதுக்கு ஆறுதல்.
    நிரந்தரமான பிரிவு இல்லை தன் நலத்திற்காகவும், தங்கள் குடும்ப நலத்திற்காகவும் தான் இந்த பிரிவு என்று தன்னை தேற்றிக் கொள்வதும் சாந்தபடுத்தி சமாதானம் ஆகபோவது
    மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  16. திருக்குறள் முதலில் எழுத்துவடிவில் பின் இசைவடிவில் அதன் பொருள் அதற்கேற்ற திரைப்பாடல் சூப்பர்

    பதிலளிநீக்கு
  17. அருமையான பதிவு அதற்கேற்ற பாடல் தேர்வு.

    பதிலளிநீக்கு
  18. என்னாச்சு எல்லோரும் புதிய எழுத்துருவுக்கு மாறிகிட்டு இருக்கீங்க அது பார்க்க நன்றாக இருந்தாலும் படிக்கும் போது கண்ணை உறுத்துவதாகவே இருக்கிறது... வேண்டுமானால் தலைப்பிற்கு வேண்டுமானால் புதிய எழுத்துருவை வேண்டுமானால் பயன்படுத்தலாம் மற்ற பகுதிகளில் பழைய எழுத்துருவை பயன்படுத்தலாம் இது என் கருத்து

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படியெல்லாம் சொன்னா எப்படி தல... ஏதோ பாடல் வரிகள் மட்டும் அப்படி ஆகிப்போச்சி...! "பிரிவிலே அப்படித்தான் இருக்கும், பாடலை கேட்கத்தானே போறோம்...?" என்று நினைத்து விட்டுவிட்டேனாக்கும்...! நம்ம நீச்சல்காரன் அவர்கள் என்ன சொல்றார்ன்னா, "அவரவர் எழுதும் எழுத்துக்கள் போலவே, புதிய தமிழ் எழுத்துருவை நாமே உருவாக்க முடியும்" என்கிறார்...! எப்படி போகிறது தொழினுட்ப வளர்ச்சி....! நீங்கள் சொன்னமாதிரி பதிவின் தலைப்பிற்கு மட்டுமல்ல... அனைவரின் மறுமொழியையும் அழகாக மாற்ற முடியும்... ஆனால் அதற்கு தளத்தின் HTML-ல் கை வைக்க வேண்டும்...! சரி இதை விடுங்க...

      வேறு ஒரு பதிவிற்காக செய்த ஒரு தொழினுட்பத்தை இந்தப்பதிவிலே முயற்சி செய்து இருக்கிறேன்... அதை கவனிக்காமல் வெளியீடும் செய்து விட்டேன்... பாடலை கேட்க Player-யை சொடுக்கி கேட்டவர்களின் கருத்துரைகளை கண்ட பின்பு தான், கண்டு கொண்டேன்... அதையும் மாற்றவில்லை...! நன்றி...

      நீக்கு
  19. இனிமையான பாடல்கள்.... குறளும் இசையாக...

    உங்கள் உழைப்பு பிரமிக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  20. அற்புதமான உழைப்பில் குறளும் திரைப்பாடலும் நெஞ்சைக் கவர்ந்திழுக்கின்றன. எல்லா வயதினரையும் எப்படியாவது கட்டிப்போட்டுவிடுவதென்று முடிவுசெய்துவிட்டீர்கள்! சபாஷ்! புதிய எழுத்துருக்களும் அழகுக்கு அழகு சேர்க்கின்றன என்றால் மிகையில்லை.

    பதிலளிநீக்கு
  21. திருக்குறளை ஆழமாக உள்வாங்கினாலேயே இவ்வாறு எழுத முடியும். ஒவ்வொரு தரமும் உங்கள் வலைக்கு பிரவேசிக்கும் போது ஆச்சரியமும் அழகும் என்னை ஆட்கொள்ளும்

    பதிலளிநீக்கு
  22. அருமை, முதற்பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.. பார்த்தால் அட எங்கட கண்ணதாசன் அங்கிள் எழுதியது... அதுதானே பார்த்தேன்:)..

    பதிலளிநீக்கு
  23. எழுத்துருக்களும் ஓவியமும் கண்களை கவர்கின்றன நண்பரே. அருமை.

    பதிலளிநீக்கு
  24. குறளுக்கு பொருத்தமான அருமையான பாடல்களைத் தேர்ந்தெடுத்து வெளியிட்டிருக்கிறீர்கள். இதில் தங்களது அயராத உழைப்பு தெரிகிறது.வாழ்த்துகள்! அதுவும் 1154 ஆவது குறளுக்கு தந்திருக்கும் ‘மாலைப்பொழுதின் மயக்கத்திலே’ என்ற பாடல் மிக மிக பொருத்தம். பதிவை இரசித்தேன்! பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.