ஓட்டு போடுவதற்கு முன்...

அனைவருக்கும் வணக்கம்... இப்பதிவில் வரும் கேள்விகளையே சுருக்கமாக → நீங்க மொத அமைச்சரானால்...?! ← பதிவில் கேட்டிருந்தேன்... அதற்கு சிறப்பான பதில்களை சொன்ன அனைவருக்கும் நன்றிகள் பல... இப்போது குறளின் குரலாக...

திருவள்ளுவருடன் ஒரு உரையாடல்...

பொருட்பால் - அங்கவியல் - 64. அமைச்சு

வணக்கம் தாத்தா, முதல்(லே) அமைச்சர்ன்னா எப்படி இருக்கணும்...?

முதல்லே தன்னோட செயல் திட்டம் என்ன என்பதை முடிவு செய்யணும்... அப்புறம் அதுக்குச் செய்யத் தேவையான பொருள்கள் என்னென்ன...? அதைச் செய்வதற்கு ஏற்ற நேர காலம் என்ன...? அடுத்து அவற்றை சிறப்பாகச் செய்யும் முறை எப்படி...? - இப்படி இதிலே எல்லாத்திலேயும் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்ன்னு சிந்திக்கிறவர் தான் அமைச்சர்...


கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு (631)


சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து... சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ தவறு சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ... தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா - அது திரும்பவும் வராம பாத்துக்கோ (2) திருடாதே பாப்பா திருடாதே (2) திட்டம் போட்டு திருடுற கூட்டம் - திருடிக் கொண்டே இருக்குது (2) அதை சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் - தடுத்துக் கொண்டே இருக்குது... திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் - திருட்டை ஒழிக்க முடியாது (2)© திருடாதே பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் S.M.சுப்பையா நாயுடு T.M.சௌந்தரராஜன் @ 1961 ⟫ம்... என்னத்தை சொல்ல... தனக்கும், தன்னைச் சார்ந்தவர்களுக்கு என்றில்லாமல், மக்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று வாழ்ந்தவர்கள் இருந்தார்கள்... ஆனா, இப்போ 'ஜி'ந்தனை எல்லாம் பலமாத்தான் இருக்கு...! பயங்கரமாவும் இருக்கு...! சரி விசயத்திற்கு வர்றேன்... சிந்தித்தால் மட்டும் போதுமா...?

போதாது... போதாது... 1) மனஉறுதியோட துணிந்து செயல்படணும்... 2) மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லாம காப்பாத்துறலே முதன்மையான இருக்கணும்... 3) எந்தப் பிரச்சனையும் தீர்ப்பதற்கேற்ப நீதி புத்தகங்களைப் படிச்சி கத்துக்கணும்... 4) தெரியலே புரியலே இல்லே முடியலேன்னா, நல்லா படிச்சவங்ககிட்டே அல்லது அனுபவசாலிங்ககிட்டே கேட்டு கத்துக்கணும்... 5) முயற்சியை கைவிடவே கூடாது... ஆக இந்த ஐந்தும் இருந்தாத்தான் நல்ல அமைச்சர்...


வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு (632)


பார் முழுதும் மனிதக்குலப் பண்புதனை விதைத்து, பாமரர்கள் நெஞ்சத்திலே பகுத்தறிவை வளர்த்து...(2) போர் முறையை கொண்டவர்க்கு - நேர்முறையை விதைத்து, சீர் வளர தினமும் வேகமதை வளர்த்து... பெற்ற திருநாட்டினிலே - பற்றுதனை விதைக்கணும்... பற்றுதனை விதைத்துவிட்டு - நல்ல ஒற்றுமையை வளர்க்கணும்... நல்ல நல்ல நிலம் பார்த்து - நாமும் விதை விதைக்கணும... நாட்டு மக்கள் மனங்களிலே - நாணயத்தை வளர்க்கணும்...© விவசாயி உடுமலை நாராயண கவி K.V.மகாதேவன் T.M.சௌந்தரராஜன் @ 1967 ⟫இதுலே இரண்டாவது மட்டும் இருந்தாலே, மத்த நாலும் தானா நடக்கும்ன்னு நினைக்கிறேன்... சரி, நல்லவரா மட்டும் இருந்தால் போதுமா...?

வல்லவர் ஆகவும் இருக்கணும்... எப்படின்னா நாட்டிற்கு நெருக்கடி நேரம் வந்தா, அதனாலே நாட்டு மக்களுக்கு பிரச்சனைகள் வந்தா, எதிரியோட சேர்ந்தவர்களைப் பிரிக்கிற திறமை இருக்கணும்... அதேசமயம் தன்னோட இருக்கிறவங்களை அரவணைச்சி, தன்னை விட்டு பிரிஞ்சு போகாம செய்றது ரொம்ப முக்கியம்... சரியான புரிதல் இல்லாததாலே முன்னாடி பிரிஞ்சி போனவங்களை, தன்னோட சுமூகமா சேர்த்துக்கிற நல்ல மனசும் இருக்கணும்...!


பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்ல தமைச்சு (633)


நான் கண்ட தெய்வங்கள் யாரென்று சொல்லு (2) நல்லோர்கள் இல்லாரை என்றென்றும் தள்ளு... ஏனென்று கேட்பார்கள் இதமாக வெல்லு (2) எல்லோர்க்கும் ஒருவன் உண்டென்று - எப்போதும் ஒரு நிலை நில்லு... இன்ப துன்பங்கள் யாவும் இயற்கை பொருள் வாழ்வில்... பண்பில் விளைந்திடுமே - பெரும் தெம்பு நிறை சுகமே (2) கண்குளிர் காட்சிகளே வெறும் கற்பனை சூழ்ச்சிகளே (2) அற்புதம் என்ன உண்டு உலகில் ஆராய்ந்து பார்த்திடிலோ (2) அதிசயம் இல்லையதில் இகபரம் இரண்டிலும் அன்பே தெய்வமென நினைத்து முடித்து... தீர்மானம் சரியாக ஆடாவிட்டால் - தன்மானம் போய்விடும்... சன்மானம் ஏது சொல்...© விக்கிரமாதித்தன் வாலி S.ராஜேஸ்வர ராவ் T.M.சௌந்தரராஜன் @ 1962 ⟫சொல்வாக்கு எல்லாம் அழிஞ்சி போய், செல்வாக்கு தான் இப்போ எல்லாமே... ம்... பணமும் பதவி ஆசையும் இல்லாம, மக்கள் சேவைக்காக என்ன வேணாலும் செய்யலாம்-ன்னு சொல்ல வர்றீங்க... அப்படியே ஆகட்டும்...சரி, நல்லது தான் செய்கிறோம்கிறதை மக்களுக்கு எப்படி புரிய வைக்கிறது...?

மக்களுக்கு செய்ற எந்த வேலையையும், அவர்களோட நன்மைக்காகத் தான் இருக்கணும்... அதுக்காக சிறப்பான வழிமுறைகளோடு நல்லா ஆராய்ச்சி செஞ்சி முடிச்சிருக்கணும்... அப்படி இருந்தா, யார் கேட்டாலும் அந்த வேலையைப் பற்றி எந்தவித சந்தேகமில்லாம விளக்கமா சொல்லத் தெரிகிற வித்தகன் ஆயிடலாம்...! இது தான் திறமையான ஒரு அமைச்சரோட சிறப்பு...!


தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
சொல்லலும் வல்லது அமைச்சு (634)


எல்லோரும் நம்பும்படி சொல்லும் திறன் இருந்தா - சொல்லிலே உண்மையில்லே...! உள்ளதை உள்ளபடி சொல்லும் மனிதனிடம் - உணர்த்திடும் திறமை இல்லே...! உண்மையும் நம்ப வைக்கும் திறனும் அமைந்திருந்தால்,- உலகம் அதை ஏற்பதில்லே...! அது இருந்தா இது இல்லே... இது இருந்தா அது இல்லே... அதுவும் இதுவும் சேர்ந்திருந்தால் - அவனுக்கிங்கே இடமில்லே... பொதுப்பணியில் செலவழிக்க நினைக்கும்போது பொருளில்லே...! பொருளும் புகழும் சேர்ந்தபின்னே - பொதுப்பணியில் நினைவில்லே...! போதுமான பொருளும் வந்து, பொதுப்பணியில் நினைவு வந்தா (2) - போட்ட திட்டம் நிறைவேற கூட்டாளிகள் சரியில்லே...! அது இருந்தா...? இது இருந்தா...?© நல்ல தீர்ப்பு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் S.M.சுப்பையா நாயுடு T.M.சௌந்தரராஜன் @ 1959 ⟫இப்போ அடுத்தவங்களை குறை சொல்வதில் தான் திறமையே இருக்கு...! இல்லேன்னா மழுப்பலான பதில்கள்... ம்... இவையெல்லாம் நீண்ட நாட்கள் நீடிக்காதுன்னு புரியுது...! கூடவே இருக்கிறவங்க எப்படி இருக்கணும்...?

அவங்களும் ரொம்ப முக்கியம்.... நீதி நேர்மைகளை தெரிஞ்சவங்களாவும், எதுக்கும் கோபப்படாம அமைதியா பேசுவரங்களாகவும் இருக்கணும்... முக்கியமா எந்தச் சூழ்நிலையிலும் எப்பேற்பட்ட வேலையையும் எளிதா செய்ற வழிமுறைகளைத் தெரிஞ்சவங்களாக இருப்பவங்க தான், ஒரு அமைச்சருக்கு சிறந்த துணைவர்கள்...!


அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்
திறனறிந்தான் தேர்ச்சித் துணை (635)


மனுசனைப் பார்த்திட்டு உன்னையும் பாத்தா - மாற்றமில்லேடா ராஜா... எம் மனசிலே பட்டதை வௌியிலே சொல்றேன் - வந்தது வரட்டும் போடா (2) உள்ளதைச் சொன்னா உதைதான் கெடைக்கும் - உலகம் இதுதாண்டா - ராஜா உலகம் இதுதாண்டா..! உள்ளத் துணிவோட பொய் சொல்லுவோர்க்கு - உல்லாச புரிதாண்டா - இது உல்லாச புரிதாண்டா (2) // எழுதிப் படிச்சு அறியாதவன்தான் உழுது உழைச்சி சோறு போட்றான் (2) எல்லாம் படிச்சவன் ஏதேதோ பேசி - நல்லா நாட்டை கூறு போட்றான்... இவன் சோறு போட்றான்... அவன் கூறு போட்றான்... (2)© கண் திறந்தது பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் T.R.ராஜகோபால் அறிவன் @ 1959 ⟫பெருமூச்சு விடாதீங்க, கொஞ்சம் பொறுங்க... "ஹேஹே... இப்படியெல்லாம் அமைச்சர்கள், இனிமேல்...?" என்று எனக்கும் உங்களைப் போல் தோன்றியது... நொந்து போன மனதிற்கு பாடல்களே சிறு மருந்து...! ஆனால், பாடல் வரிகள் நடுவில் இருந்தால், பதிலுக்கும் அடுத்த கேள்விற்கும் தொடர்பு இல்லாமல், சிந்தனை மாறக்கூடும்... அதனால் அதை மறைத்துள்ளேன்...

இப்படி தாத்தாவின் ஒவ்வொரு பதிலுக்கு பின்னால் சுத்திக்கிட்டு இருப்பதை சுட்டியாலே (Mouse) சொடுக்கினா, குறளும், பாடலும் வரும்...! கைபேசியில் வாசிப்பவர்களும் விரலால் கொடுக்கலாம்...! கேட்க நிறுத்த பட்டனையும் சொடுக்குங்க... பாடலில் இருக்கிற சில வரிகளையும் கொடுத்துள்ளேன்... அதை படிச்சிட்டா, குறள் விளக்கத்தையும் மீண்டும் படிப்பீர்கள்...! உங்க முகபாவனைகளும் மாறலாம்...! சில பாடல்களைக் கேட்டால், இன்றைய உண்மை நிலைமைக்கு சிந்தனையும் வரும்... நொந்து போய் சிரிப்பும் வரும்...!

இப்பதிவும், பதிவின் தலைப்பும் முழுமையடையவில்லை... எனவே தொடரும்...!


இதன் அடுத்த பகுதி → இங்கே ← சொடுக்கி தொடரவும்... அதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றித் தங்களின் கருத்து என்ன...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

 1. வணக்கம் ஜி
  படமே ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டுமென்ற அற்புதமான கருத்தை முன் வைக்கிறது.

  வழக்கம் போலவே நல்ல பாடல் தேர்வுகள்.

  சொடுக்கும் முறைகளும் புதுமை வாழ்த்துகள் ஜி

  பதிலளிநீக்கு
 2. முவ உரை, கலைஞர் உரை, சாலமன் பாப்பையா உரை, ஏன் சுஜாதா உரை கூட திருக்குறளுக்கு வந்து விட்டது. ஆனால் நீங்க குறளை இந்த அளவுக்கு குறுக்கு வெட்டு தோற்றத்தில் நோண்டி நொங்கெடுக்குறத பார்க்கும் போது எதிர்காலத்தில் தனபாலன் உரை என்று மின் நூலாக வந்து விடும் வாய்ப்புள்ளது என்றே நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 3. இரண்டு பாடல்கள் மட்டும் வரவில்லை, சிறிது நேரம் கழித்து வருகிறதா> என்றுப் பார்க்கிறேன்.
  மற்ற பாடல்கள் தேர்வு நன்றாக இருக்கிறது.

  பாடலும் , குறளும் பார்க்க கொடுக்கப்பட்ட சொடுக்கும் முறை அருமை.
  நீங்கள் புதுமையாக செய்து கொண்டு இருக்கிறீர்கள், உங்கள் திறமையை கண்டு வியந்து பாராட்டிக் கொண்டே இருக்கிறோம்.

  திருக்குறள் என்றால் திண்டுக்கல் தனபாலன் நினைவு வராமல் இருக்காது, அது போல சினிமா பாடல்களும் நினைவுக்கு வரும்.

  தீபத்தை வைத்துக் கொண்டு திருக்குறளும் படிக்கலாம் என்ற சினிமா பாடல் போல் .
  அருமையான சினிமா பாடல்கள் மூலம் திருக்குறளை கற்க முடிகிறது.

  முதல் பாட்டு மிக நல்ல பாட்டு திருடராய் பார்த்து தான் திருந்த வேண்டும். நாளுக்கு நாள் புதிதாக திட்டம் போட்டு திருடுகிறார்கள்..


  பதிலளிநீக்கு
 4. அடுத்த இரணடாவது திருக்குறள் பாடலில் கருவியை முன்னால் சேர்த்து காரணமாய் சேர்த்து இருக்கிறீர்களா?

  மூன்றாவது பாடலில் கருவியும் வன்கண் சேர்த்து இருக்கிறீர்கள்.
  ஏன் என்று தெரிந்து கொள்ளலாமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தவறை திருத்தி விட்டேன் அம்மா... நன்றி...

   அத்தனை பாடல்களும் வருகிறதே அம்மா... முடிவில் உள்ள இரு பாடல்களும் சிறப்பானவை...

   நீக்கு
  2. பாடல் மூன்றும், ஐந்தும் வரவில்லை மீண்டும் ரீஸ்ரடாட் செய்தும் பார்த்து விட்டேன்.

   நீக்கு
  3. அன்பே சிவம் பாடல் அருமை.
   கடைசி பாடல் சொல்வதுப் போல் உள்ளதை சொல்லமுடியாதுதான்.
   உழவன் பெருமையை சொல்லுது. சோறு போடுபவனையும், கூறு போடுபவனையும் சொல்லுது.
   கண் திறந்தது படம் என்று நினைக்கிறேன்.

   நீக்கு
 5. அமைச்சன் சிந்தித்து செயல்பட வேண்டும், முயற்சி இருக்க வேண்டும், துணிவு வேண்டும் வல்லமை வேண்டும்.அறன் அறிந்து செயல்பட நீதி நெறிகளை அறிந்தவனாக இருக்க வேண்டும்.
  கேட்க, சொல்ல படிக்க நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 6. வலைச்சித்தர்
  இப்போது
  திருக்குறள் சித்தர்
  விருதும் பெற
  இனிய வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 7. தேர்தல் நேர சிறப்பு பதிவு வாழ்த்துக்கள் பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 8. இந்த சமயத்திற்கு தேவைப்படும் பதிவு தான்.அருமை நண்பரே

  பதிலளிநீக்கு
 9. நேர்மையான அரசியல் என்பதே ஒரு ஆக்சிமோரான்!

  நம் எதிர்பார்ப்புகளை சொல்லும் பதிவு வழக்கம்போலவே சிறப்பு.

  பதிலளிநீக்கு
 10. பதிவை ரசித்தேன். குறளில் நிறைய விளையாடுகிறீர்கள்.

  பதிலளிநீக்கு
 11. உன்மை தான் அண்ணா , இனிய கருத்து வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 12. முழுமையாக ரசித்தேன். முனைவர் பட்டத்திற்கு பதிவு செய்து ஆய்வு செய்கின்ற வளர்ந்து வரும் இளம் ஆய்வாளர்கள் படிக்கும் அளவிற்கு உரிய சான்றாதாரங்களோடு சிறப்பாகவும், முன்னுதாரணமாகவும் உங்களது பதிவுகள் அமைந்துள்ளன.

  பதிலளிநீக்கு
 13. இப்போதைய நிலைக்கு நல்ல தலைவன்தான் நமக்கு வேண்டும்.

  இந்த பதிவை வாசிக்கும்போது இயர்போனில் அன்பே சிவம் பாடல். வாட் என் கோ இன்சிடெண்ட்?!

  பதிலளிநீக்கு
 14. ஜோதிஜி சொன்னதுபோல விரைவில் திருக்குறளுக்கு ஒரு உரை நூல் எழுதுங்கள் தனபாலன்.

  வழக்கம்போல மனதில் பதிகிற பதிவு. நன்றி.

  பதிலளிநீக்கு
 15. தேர்தல் நேரத்தில் மிக அருமையான அழகான பதிவு
  வழக்கம்போல் குரலும் குறளும் தேர்வுகள் அருமை தொழில் நுட்பம் அற்புதம் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தனபாலன்

  பதிலளிநீக்கு
 16. வணக்கம் சகோதரரே

  அருமையான குறள் விளக்கங்களோடு நல்லபதிவு. பாடல்களும் அதற்கேற்ற மாதிரி அழகாக தேர்ந்தெடுத்து கொடுத்திருக்கிறீர் கள். முதல் படம் கருத்துள்ளதாய் அமைந்துள்ளது. தொழில் நுட்பத்தில் தங்களுக்கு நிகர் தாங்களேதான். தங்கள் திறமை வியக்க வைக்கிறது. வாழ்த்துக்கள்.
  பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 17. குறளுக்கான விளக்கம், நீங்கள் தேர்ந்தெடுத்துத் தரும் பாடல்கள் என அனைத்தும் சிறப்பு.

  பதிலளிநீக்கு
 18. காலத்திற்கேற்ற அவசியமான பதிவு.பாராட்டுகள்!

  பதிலளிநீக்கு
 19. //இப்போ அடுத்தவங்களைக் குறை சொல்வதில்தான் திறமையே இருக்கு//

  ஹா ஹா ஹா ரசிக்கும் வசனம்...

  பதிலளிநீக்கு
 20. அன்பு தனபாலன் இனிய காலை வணக்கம்.
  திருக்குறள் படிக்க பொருள் புரிய உங்கள் பதிவுகளை ஆதாரமாகப் பார்க்கிறேன்.
  அத்தனை பாடல்களும் இனிமை.எத்தனை பொருளமைந்த
  எழுத்து. பாடியவர்களும் உணர்ந்து பாடி இருக்கிறார்கள். எனக்குப் பள்ளியில் படித்த
  குறள்கள் மட்டும் தெரியும்.
  உங்கள் பதிவு அரசியல் சம்பந்தப் பட்டதாக இருந்தாலும்,
  பாடல்கள் சொல்லும் நீதியும், குறளும் எல்லோரையும் போய்ச் சேர்ந்து
  நல்லது விளைய வேண்டும்.

  பழைய படங்களில் வேடிக்கையும் இருந்தது. நீதியும் இருந்தது.
  இப்போது அவைகளைப் பிரபலப்படுத்த நீங்களும் இருக்கிறீர்கள்

  பதிலளிநீக்கு
 21. பாஸுக்கும் லீடர்க்கும் அருமையான விளக்கம்.
  கதைகள் மூலம் திருக்குறளைப் கற்றுக்கொள்வது ஒரு முறை என்றால் பாடல்கள் மூலமாகவும் திருக்குறளை கற்றுக்கொள்ள முடியும் என்று நீங்கள் ஒரு புதிய முறையில் நடத்திக்கொண்டு வருகிறீர்கள். தொடரட்டும் தங்களின் பணி.

  பதிலளிநீக்கு
 22. பாடல்கள் அருமை
  மாயாஜாலப் பதிவு
  வலைச் சித்தர் அல்லவா

  பதிலளிநீக்கு
 23. டிடி வழக்கம் போல அருமையான பதிவு. குறள்கள்,பாடல்கள். சில பாடல்கள் கேட்க இயலவில்லை மொபைலில்தான்பார்க்க முடியும் எனக்கு. நெட் ஸ்லோவா என்று தெரியவில்லை. மீண்டும் முயற்சி செய்கிறேன்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 24. அட! இந்த முறை தாத்தா சுற்றி பாடல்கள்.. நம் மனதின் பிரதிபலிப்புதான். பதிவிற்கான படம் நன்றாக இருக்கிறது.

  // அடுத்தவங்களைக் குறை சொல்வதில்தான் திறமை// உண்மைதானே!.

  ஒவ்வொரு குடிமகனின் எதிர்பார்ப்பும் பதிவாக...சிறப்பு.

  கீதா

  பதிலளிநீக்கு
 25. ஐம்புலிங்கம் ஐயாவின் சிறப்புக் கருத்தை வரவேற்கிறேன்.

  ஜோதிஜி ஐயாவின் கருத்தை வரவேற்கிறேன். தங்கள் பதிவுகள் நூலுருப் பெறவேண்டும்.

  தங்கள் குறளோடும் திரைப்பாடலோடும ஒப்பிட்டுப் பகிரும் பதிவை வரவேற்கிறேன்.

  வாக்கு, நாடு மேம்பட மக்கள் பயன்படுத்தும் ஆயுதம்!

  பதிலளிநீக்கு
 26. ​அருமை. இந்தப் பதிவிற்கும் ​அதற்கான குறள்களை தேர்நதெடுக்கவும் திரைப்பாடல்கள் கண்டு பிடிக்கவும் எத்தனை நாட்கள் பாடுபட்டீர்களோ! வியப்பு தான் மிஞ்சுகிறது.
  ஜெயக்குமார்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி சார்... முதல் மூன்று குறள்களுக்கு எளிதாக இருந்தது... அடுத்த வரும் இரு குறள்களுக்கு தேடல் அதிகமானது... எனக்கு என்ன ஒன்று ஆச்சரியம் என்றால், பதிவில் உள்ள அனைத்து பாடல்களின் வருடமே...! (நான் பிறக்கும் முன்னே) அப்போதிலிருந்தே நம் நாடு இப்படித்தானோ...?

   நீக்கு
 27. மிக எளிய நடையிலான உரையாடலில் மிக அருமையான [குறளுக்கான] விளக்கங்களைத் தருகிறீர்கள். இது உங்களுக்கு மட்டுமே சாத்தியமானது. நன்றி D.D.

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.

 


சுய விவரம் | தொடர்பு படிவம் | பிரபலமான 10 பதிவுகள் | குறளின் குரல் மற்றும் வலைப்பூ உருவாக்கம் பற்றிய பதிவுகள் | அனைத்திற்குமான இணைப்பு :-

வணக்கம்

பக்கக்காட்சிகள் 18/10/2011 முதல் :வாருங்கள் நண்பர்களாவோம் :


சமூக வலைத்தளங்கள் மூலம் இணைந்து தொடர :