🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



நாற்காலி பேசினால்...?

பதவி வரும்போது பணிவு வர வேண்டும், துணிவும் வரவேண்டும் தோழா... பாதை தவறாமல் பண்பு குறையாமல் பழகி வரவேண்டும் தோழா...2 அன்பே உன் அன்னை... அறிவே உன் தந்தை... உலகே உன் கோவில்... ஒன்றே உன் தேவன்...!



© தெய்வத்தாய் வாலி விஸ்வநாதன்-ராமமூர்த்தி 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1964 ⟫


இங்கே - ஜடப்பொருள்களை உயிராய் ஜனிக்கச் செய்தவர்கள்
எனக்குக் கவிஞனாய் உட்கார ஒரு நாற்காலி கொடுத்தீர்கள் நன்றி...!
கையிலும் - தலைப்பென்று ஒரு நாற்காலி தந்து விட்டீர்கள்
கனமாய் உள்ளதய்யா... நெஞ்சும் கனமாய்ப் போனதய்யா...!

ஆனாலும் ஒரு கேள்வி : பக்திப் படங்களைத் தவிர வேறெங்கும்
பேசாதிருக்கும் கடவுள்களை நீங்கள் பேச வைக்கக் கூடாதா...?
சட்டசபைக்குள் சென்ற முதல் நாள் முதல் - பேசாமலே இருக்கும்
சில எம்.எல்.ஏக்களைப் பேச வைக்கக் கூடாதா...?

இரவல் குரலுக்கு இதழ் அசைத்தே தமிழ் வளர்க்கும்
கோடம்பாக்கத்துக்காரர்களைக் கொஞ்சம் பேச வையுங்களேன்...!
இரண்டே நாளென்று இரண்டாயிரம் வாங்கிவிட்டு இரண்டாண்டாய்
பேசாமலிருக்கும் என் உறவுக்காரரைப் பேச வையுங்களேன்...!

சரி, பேசாதவை பேசினால் என்ன பேசும்...? :-

வானம் பேசினால் - ஓசோன் ஓட்டையால்
தான் வெத்துவானமாய்ப் போன வேதனை சொல்லும்...!
பூமி பேசினால் - 'மனிதர்களே ! வருத்திப் பாரம் சுமப்பது நீங்கள் மட்டுமல்ல
நானும் தான்' என்று ஜனத் தொகையைக் குறைக்கச் சொல்லும்...!

கடல் பேசினால் - கரை மீறாத தன் அலை மொழியில்
கடத்தல் கதைகள் கூறும், பலரின் கள்ள நடத்தைகள் கூறும்...!
காற்று பேசினால் - உயிர்களின் மூச்சுக் குழலுக்குள் உயிரோடு நுழைந்து
செத்த வாயுவாய் வெளியேறும் தன் தியாகம் கூறும்...!

தீயும் - தான் எரித்த சில பிணங்கள்
தன் நாவையே சுட்ட சோகம் சொல்லும்...!
பஞ்ச பூதங்களே பாழாகிக் கிடக்கையில்
பாவம் மற்றவை எதைத்தான் பேசும்...?

அரசியல் மேடை - ஆடுகளுக்குக் குடை கொடுப்பதாய்
தினம் தினம் ஓநாய்கள் வாக்குறுதி வழங்கும் இடம் !

ஒலி பெருக்கி - ஒட்டு வங்கிக்கு இது தான் சாவி...!
மெய்யும் பெருக்கும்...! பொய்யும் பெருக்கும்...!
தேர்தல் வந்தால் நம் கழுத்தை அறுக்கும்... !

தூக்குமரம் - எல்லா மரங்களும் தூக்கு மரமாகத் தயாராயுள்ளன...!
ஆனால் - மரங்களை வெட்டுவோர்க்கு மரண தண்டனை விதிக்க
சட்டங்கள் தான் தயாராயில்லை...!

நாற்காலி பேசுகிறேன் - நாங்கள் இல்லையென்றால்
இக்கவியரங்கத்தில் ஈக்கள் தான் ஏளனமாய்த் திரியும்
அவை கூட - இலக்கியத்தில் இனிப்பு தேடும்...!

மனிதர்களே - பல கூடங்களில் உங்களைக் கூடக்
கூட்டமாய்க் குவிந்திருப்பது நாற்காலியாகிய நாங்கள் மட்டுமே...!
பழம் கேட்டு மயிலேறி உலகம் சுற்றும் பாலகனே...!
அம்மை அப்பனே அகிலமென்று சுருக்கமாய்ச் சுற்றிய விநாயகனே...!

தெரிந்து கொள்ளுங்கள் இன்று - சில நாற்காலிகளைச் சுற்றினால்
உலகத்தையே பழம் போல் பைக்குள் போட்டுக் கொள்ளலாம்...!
சில நாற்காலிகளில் உட்கார்ந்து விட்டாலோ,
ஒன்பது கிரகங்களும் உங்களையே சுற்றி வரச் செய்யலாம்...!

நாட்டில் நல்லதும் கெட்டதும் நடந்து கொண்டிருப்பது
எங்களின் நான்கு கால்களால் தான்...!
மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை - மூன்றுக்கும் 'மூத்த ஆசை'
நாற்காலி ஆசை ஐயா ! - இதற்கு முன்னால்
இதர ஆசைகளெல்லாம் 'சின்னச் சின்ன ஆசை' தானய்யா...!

நாங்கள் ஆளுமையின் அடையாளச் சின்னம்...!
அதிகாரத்தில் ஆதிமூலம்...! ஒழுங்கு, ஒழுங்கீனம்
இரண்டுக்கும் நாங்களே உற்பத்திக்கு கேந்திரம்...!

காரியங்கள் உருவாகும் கருவறையும் நாங்களே...!
பல காரியங்கள் கண்மூடிக் கிடக்கின்ற கல்லறையும் நாங்களே...!
நம்புங்கள் - இந்தக் கலியுகத்தை 'நாற்காலி யுகம்'
என்றே நாளைய வரலாறு கூறும்...!

ஆசான் முதல் அரசன் வரை, அன்ன மேசை முதல் ஐ.நா சபை வரை
அடியேன் இல்லாமல் நீங்கள் அமர்வது எப்படி...?
சாம்ராஜ்யங்கள் சரிந்ததெல்லாம்
ஆசனங்கள் ஆட்டம் கொடுத்ததால் தானே... ?
சரிந்தவை மீண்டும் எழுந்து நின்றதும்
எங்களின் நான்கு கால்களை ஊன்றித்தானே...?

நண்பர்களே கேளுங்கள், நாற்காலியிலும் நான்கு ரகம் உண்டு...!

உழைக்கும் நாற்காலி - அதில் உயர்ந்த தரம்...!
ஊழல்களின் நாற்காலி - உளுத்த ரகம்...!
சும்மா உட்கார்ந்திருப்பார் நாற்காலி - சவப்பெட்டிக்குச் சமம்...!
ஓய்வு நாற்காலி - வருமானம் கிடையாதென்பதால்
யாரும் உட்கார விரும்பாத இடம்...!

எப்போதும் நாற்காலிகளில் நல்லவர் உட்கார்ந்தால்
எங்கள் கட்டை மேனியிலும் கண்ணியப் பூ மலரும்...!
பொல்லாதவர் உட்கார்ந்தால் எங்கள் நான்கு கால்களும்
ஊழல் பந்தயத்தில் பி.டி.உஷா போல் ஓடும்...!

உத்தியோக வகைகளை உரைத்தால் வாய் வலிக்கும்...!

ஆசிரியர் அமர்வது - அறிவு நாற்காலி...!
அது போதி மரத்தில் செய்தது, மாணவ ஜாதிக்கு ஞானம் தருவது...!
அலுவலர்கள் அமர்வது - நிர்வாக நாற்காலி...!
அரசு இயந்திரத்தை இயக்கும் இதயம் இது...!

காவலர் அமர்வது - கடமை நாற்காலி...!
நம் உடமைக்கும் உயிருக்கும் உத்தரவாதம் தரும் கூலி...!
நீதி அமர்வது - சட்டத்தின் நாற்காலி...!
குற்றங்களைக் கணக்குப் போடும் சித்திரகுப்தனின் சீடர்கள் இவர்கள்...!
இவர்கள் மை தொட்டு எழுதுவதில்
மன்னிப்பு வரிகளும் இருக்கும்...! மரண வரிகளும் இருக்கும்...!

மருத்துவ நாற்காலி - ஆரோக்கியத்தை ஆளும் கட்சி,
எமனுக்கு எதிர்க்கட்சி...!
திரையரங்க நாற்காலி - விழித்திருக்கும் போதே
விழிகளைத் திருடிவிடும்...!
வாஷிங்டன் நாற்காலி - விரலசைத்தால் ஏவுகணைகள்
நிலவையும் விழுங்கி ஏப்பம் விடும்...!

அரசியலார் அமர்வதோ நாற்காலிகளையே ஆளும் நாற்காலி...!
ஜனநாயகம் கொண்டு ஜனங்கள் செய்து தரும் சிம்மாசனம்...!
கட்சிகள் ஈசல்களாய் இறக்கை கட்டிப் பறப்பது இதற்குத் தான்...!
சிங்கம்,புலி,கரடி என்று இன்னும் நாம் சின்னம் பார்த்து
வாக்களிப்பது இதற்குத் தான்...!

அடைந்தால் அமைச்சர் பதவி இல்லாவிட்டால் வாரியத் தலைவர் பதிவு...!
என்று சில வசனம் பேசுவது இதற்குத் தான்...!
நேற்று வரை செருப்பில்லாமல் திரிந்தவரும், சுமோவில் செல்ல
மார்க்கம் காட்டும் மந்திர நாற்காலி இது...!

ஊருக்கு உதவி செய்யவும் முடியும்
உறவினர்க்கு ஊரையே எழுதிக் கொடுக்கவும் முடியும்
ஆனால் - ஒரே இரவில் மந்திரிகள் எல்லாம் மாஜிகள் ஆகலாம்...!
எதிர் எதிர் நபர்கள் இடங்கள் மாறலாம்...!
நாற்காலியெனும் நாங்கள் மட்டும் மாறுவதில்லை...!
கட்சி தாவும் கால் எமக்கில்லை...!

இன்னும் இன்னும் நிறையச் சொன்னால்
காலம் கருதி தலைமை நாற்காலி தடைகள் போடும்...!
அரங்கில் என் நாற்காலி காணாமல் போகும்...!

மதுரை கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றக் கவியரங்கத்தில் வாசிக்கப்பட்ட இக்கவிதையை எழுதியவர், மறைந்த கவிஞர் திரு. அம்ஜத்பாரதி அவர்கள்... அவரைப் பற்றி அறிய இங்கே சொடுக்குவதற்கு முன்... பிடித்த வரியைக் குறிப்பிட்டு, உங்களின் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டால் அடியேன் மகிழ்வதோடு, எனது வீடு பக்கத்தில் இருக்கும் கவிஞரின் உறவுகளோடு பகிர்ந்து கொள்வேன்... வலையுலக கவிஞர்களே... கருத்துரையைக் கவிதையாகவும் சொல்லலாம்... நன்றி...

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. அரசியல் பாணியையும், அரசியல்வாதிகளையும் மொத்தமாக தமிழகத்த்தில் மாற்றவேண்டும்.

    உழைக்கும் நாற்காலியும், ஊழல் நாற்காலியும் நச்.

    பதிலளிநீக்கு
  2. நாற்காலியில் அமரும் முன் இனி ஒவ்வொருவரும் சற்றே...இல்லையில்லை...அதிகமாகவே யோசிப்பர்.

    பதிலளிநீக்கு
  3. பேசத் தயங்குவோரையும் பேசத் தூண்டும் கவிதை.

    மனம் நிறைந்த பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  4. உழைக்கும் நாற்காலி..
    உண்மையில் உயர்ந்த ரகம் தான்!..

    ஆனால்,
    அதில் உட்கார்வதற்கு -
    உழைப்பவனுக்குத் தான் நேரம் கிடைப்பதில்லை!..

    பதிலளிநீக்கு
  5. இனிய கவிதையை வழங்கிய திரு. அம்ஜத் பாரதி அவர்களுக்கும் தங்களுக்கும் அன்பின் பாராட்டுகள்.. வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
  6. அமரரான கவிஞருக்கு இதைவிட சிறந்த அஞ்சலி எதுவுமில்லை. பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  7. எல்லா வரிகளுமே நல்ல வரிகளாய் இருக்கையில், எந்த வரியைக் குறிப்பிட்டுச் சொல்வது? அம்சத் பாரதியின் ஆன்மாவுக்கு நன்றி சொல்வோம்!

    பதிலளிநீக்கு
  8. வானம்,கடல், பூமி, தீ, அரசியல் மேடை, ஒலிபெருக்கி, நாற்காலி அனைத்தும் அருமையாக பேசின. அம்ஜத் பாரதி அவர்கள் கவிதை உண்மையை உரக்க சொல்கிறது.
    பகிர்வுக்கு நன்றி.


    பதிலளிநீக்கு
  9. ஏன் அந்தக் கதிரை அப்பூடிச் சுத்துது?:), கவிதையில் நிறையச் சொல்லிட்டார்ர்... இங்கே முதல் கொமெண்ட் போட்ட கவிஞர்... ஏன் கவிதையில் பதில் சொல்லவில்லைலைலை:).

    பதிலளிநீக்கு
  10. மூன்று ஆசைகளுக்கும் மூத்த ஆசை நாற்காலி ஆசைதான். அருமை

    பதிலளிநீக்கு
  11. நாற்காலி வந்து அழுதுவிட்டுப் போகிறது.
    அது சிரிக்கும் நாள் நாம் மகிழும் நாள். அருமைக் கவிதைக்கு மிகுந்த
    நன்றி. கவிஞருக்கு வாழ்த்துகள். உங்களுக்கும் தான் தனபாலன்.

    பதிலளிநீக்கு
  12. பேசாதவை பேசினால் என்ன பேசும் என்ற காலஞ்சென்ற கவிஞர் அம்ஜத் பாரதி அவர்களின் கவிதை வரிகளில் எதை சிலாகித்து பேச?எதை விட? அனைத்தும் அருமை. அவரது கவிதை வரிகளை பகிர்ந்துகொண்ட தங்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்!

    பதிலளிநீக்கு
  13. இந்த வரி என்று ஒரு வரியை மட்டும் மேற்கோள் காட்ட்டிட முடியலை அத்தனையுமே அருமை ..கடல் பேசினால் அது தன மீது கொட்டப்பட்ட கழிவு எண்ணெய் பற்றியும் காற்று பேசினால் வெள்ளை சுருட்டினால் தனக்கும் புற்று வந்ததை பற்றியும் தீ பேசினால் தனது இயலாமையையும் சொல்லக்கூடும் ..
    நாற்காலி :) இந்த நாற்காலிக்குதான் எவ்வளவு மவுசு அதற்கு ஆசைப்பட்டு மனிதர் எதையும் செய்வார் :)ஊருக்கே நாட்டையும் எழுதி வைக்கும் நாற்காலி கனவு :)

    செருப்பில்லாமல் தெரிந்தவரை சுமோவில் செல்லவைக்கும் நாற்காலி என்ற வரிகள் பிடித்திருக்கு .பகிர்வுக்கு நன்றிகள்

    பதிலளிநீக்கு
  14. உண்மையிலேயே சொல்கிறேன், மிகச் சிறப்பான கவிதைகள்! காலஞ் சென்ற பெருங்கவிஞர் மீரா அவர்களின் கவிதைகளைப் படித்தது போல் இருந்தது. இப்பேர்ப்பட்ட கவிஞரின் பெயரையே அவர் இறந்த பிறகு இப்பொழுதுதான் அறிகிறேன் என எண்ணி வெட்கப்படுகிறேன்! கவிஞரின் உறவுகளுக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்!

    ரசித்த வரிகள் இன்னதுதான் எனச் சொல்ல முடியாதபடி பற்பல வரிகள் அட போட வைத்தன. இருந்தாலும், தாங்கள் கேட்டதால் இதோ சில மட்டும்:

    காற்று பேசினால்...
    தீ பேசினால்...
    ஆசிரியர்கள் அமர்வது...
    நீதி அமர்வது...

    பதிலளிநீக்கு
  15. அம்ஜத் பாரதியின் கவிதை வரிகள் அனைத்தும் அம்சமாய் ரசிக்க வைக்கின்றன :)
    அவர் மறைத்தாலும் அவரின் கவிதை காலமெல்லாம் வாழும் !

    பதிலளிநீக்கு
  16. நாற்காலியில்தான்
    எத்தனை எத்தனை வகைகள்
    ஆளுக்குத் தகுந்தாற்போல்
    நாற்காலியின் குணமும் அல்லவா மாறிவிடுகிறது

    அமரத்துவம் அடைந்த கவிஞர் போற்றுதலுக்கு உரியவர்

    பதிலளிநீக்கு
  17. அருமையான பதிவு க்கு மிக மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  18. நாற்காலிகளை தீர்மானிக்கிற மனிதனை
    நாற்காலிகள் காலி செய்கின்றனதான் சமயத்தில்/

    பதிலளிநீக்கு
  19. அதுதானே பார்த்தேன் பதிவில் குறள்கள் இல்லையே எழுதியது திண்டுக்கல்லார்தானா என்று. நாற்காலிகள் அவற்றில் அமர்பவரின் குணத்தைப் பிரதிபலிக்கும் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  20. அருமை அண்ணா...
    நாற்காலி... அருமையோ அருமை....

    பதிலளிநீக்கு
  21. //இந்தக் கலியுகத்தை 'நாற்காலி யுகம்'
    என்றே நாளைய வரலாறு கூறும்// - 'நச்' வரிகள் !

    CHAIR கவிதையை SHARE செய்ததற்கு நன்றி !

    பதிலளிநீக்கு
  22. நாற்காலிக்கு சண்டை!ம்ம்http://nesan-kalaisiva.blogspot.fr/2017/03/blog-post.html

    பதிலளிநீக்கு
  23. மிகச் சுவையான கவிதை ; ஆழமான கருத்துகளை நகையுடன் வெளிப்படுத்திய திறமை போற்றற்குரியது ; பகிர்ந்த உங்களுக்கு மிகுந்த நன்றி . பிடித்த அடிகள் பற்பல ; கேட்டதற்காகச் சொல்கிறேன் : ஊருக்கு உதவி செய்யவும் முடியும்
    உறவினர்க்கு ஊரையே எழுதி வைக்கவும் முடியும் .

    பதிலளிநீக்கு
  24. என்னது பேசாமல் இருக்கும் உறுப்பினர்களை பேசவைக்கனுமா? கிழிஞ்சிது போங்க..........

    பதிலளிநீக்கு
  25. நாற்காலிக்காக நம்மூர்ல நடக்குற கூத்தை என்ன சொல்ல?!

    பதிலளிநீக்கு
  26. ஜடமா யிரு ந்த வை யெல்லாம், கொடுமை கண்டு கொதி க்கையில்,இன்னும் நாம் உயிரி ருந்தும் அஞ்சி ஜடமா யிரு த்தல் சரி யோ.
    .

    பதிலளிநீக்கு
  27. அனைத்துவரிகளும் அருமை.

    குறிப்பாக " அரசியல் மேடை- ஆடுகளுக்கு குடை கொடுப்பதாய்

    தினம் தினம் ஓநாய்கள் வாக்குறுதி கொடுக்கும் இடம்"

    நிதர்சன நிகழ்வு,கவிஞருக்கு அஞ்சலிகள்.


    பகிர்விற்கு நன்றி.

    கோ

    பதிலளிநீக்கு
  28. நல்ல கவிதை அதைத் தந்த டிடி
    மிக மகிழ்ச்சி - நன்றி
    தமிழ் மணம் - 11
    https://kovaikkavi.wordpress.com/

    பதிலளிநீக்கு
  29. அரங்கில் உங்கள் நாற்காலி காணாமல் போனால்
    அங்கும் எங்கும் நிறைந்து இருக்கிறார்கள்.
    நாற்காலிகளை திருடுபவர்கள்...

    பதிலளிநீக்கு
  30. வாக்கு வேண்ட வந்தவர்கள்
    தேர்தலில் வென்றதைச் சொன்னார்கள்
    வென்ற பின் ஆள்களைக் காணோம்
    வென்றவர்களோ நாற்காலியை சுத்தி
    நாளும் தூசு தட்டும் வேலையாக...

    அரங்கிலே பேச்சுப் பேச வந்தார்கள்
    பேச வந்த பேச்சாளர்களில் சிலர்
    நாற்காலியில் இருக்காமலே பேசினர்
    எனக்கு முன் பேசிய அறிஞரோ
    அழகாகப் பேசி அறிவை ஊட்டினாரே
    அவரை விட நானெதைப் பேசுவேனென
    சுருங்கச் சொல்லி நாற்காலியில் அமரப் பலர்

    நாற்காலிகள் பேசினால்
    நாற்காலிகளில் இருந்தவர்களை பற்றி
    உலகம் அறிந்து விடுமென அஞ்சி...
    நம்மாளுங்க
    என்னென்னமோ எண்ணியிருப்பாங்க...
    எதற்கும் நாற்காலியைத் தானே
    கேட்டுப் பார்க்க வேண்டியிருக்கே!

    பதிலளிநீக்கு
  31. கவிஞரும் அறியாதவர், கவிதையும் அறியாதது! :)

    பதிலளிநீக்கு
  32. அரசியல் நாற்காலியில் அமர்ந்து ஓட்டு போட்ட மக்களை மறந்து பெஞ்ச் தட்டுவது பெரும் கடமையாக செய்வார்கள்.

    பதிலளிநீக்கு
  33. எப்படித் தவற விட்டோம்!!

    எல்லா வரிகளூமே அருமையாக இருக்கும் போது எதைச் சுட்டிக் காட்டுவது! அருமை! ஆழ்ந்த இரங்கல்களை மட்டுமின்றி வரிகள் அனைத்துமே நச் என்று அவரது உற்றாருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

    பதிலளிநீக்கு
  34. ஆடுகளுக்கு குடை கொடுப்பதாய்
    தினம் தினம் ஓநாய்கள் வாகுறுதி கொடுக்கும் இடம்
    அருமையானனிக்ழ்கால வரிகள்
    நாற்காலியை கண்டு பிடித்தவனை
    நாடு கடத்த வேண்டும்


    சரஸ்வதிராசேந்திரன்

    பதிலளிநீக்கு
  35. பக்தி படங்க ள தவிர வேறு எங்கும் பேசாத கடவுள் என்ற வரி எனக்கு அருமை என்று தோன் று கிற து

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.