🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



தமிழை இன்னும் தமிழ்ப்படுத்த வேண்டும்...!

முந்தைய பதிவான இதயமே இதயமே பதிவில் கண் சிமிட்டும் கண்களும், கண்ணீர்த் துளிகளும் சரிவர வருமா...? என்கிற சின்ன சந்தேகம் இருந்தது... பாராட்டிப் பரவசப்பட்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி... எல்லாப் புகழும் வள்ளுவருக்கே...! அதன் அடுத்த பகுதி விரைவில்...


தமிழ் எங்கள் இளமைக்குப் பால்...2 இன்பத் தமிழ் நல்ல புகழ் மிக்க - புலவர்க்கு வேல்… புலவர்க்கு வேல்... தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்... இன்பத் தமிழ் எங்கள் அசதிக்கு - சுடர் தந்த தேன்... சுடர் தந்த தேன்...2 தமிழுக்கும் அமுதென்று பேர்... அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் - உயிருக்கு நேர்... உயிருக்கு நேர்... தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்... இன்பத் தமிழ் எங்கள் கவிதைக்கு - வைரத்தின் வாள்... வைரத்தின் வாள்... தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்... இன்பத் தமிழ் எங்கள் வளம் மிக்க - உளமுற்ற தீ...2 தமிழுக்கும் அமுதென்று பேர்... அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் - உயிருக்கு நேர்... உயிருக்கு நேர்...

© பஞ்சவர்ணக்கிளி பாரதிதாசன் விஸ்வநாதன்-ராமமூர்த்தி 🎤 P.சுசீலா @ 1965 ⟫


  ஊரெங்கும்
  அந்நியக் கலாச்சார
  அடை மழை...!
  அதில் அழுதபடி நனைகின்றாள்
  நம் தமிழன்னை...!
அந்தக் கண்ணீர் மழை   
அறியாமல்   
"ராப்"பென்றும் "பாப்"பென்றும்   
  குதிபோடுது அவள் பிள்ளை...!   
  ஆயிரக்கணக்கான
  ஆண்டுகள் முன்னமல்ல
  ஐம்பதுகளில் கூட
  மேடையெங்கும் வழிந்த தமிழ்
  வடிந்து போனதெங்கே...?
அன்று - அரசியலைக் கரையேற்ற   
சென்ற தமிழ்   
அலட்சியக் கடலில் விழுந்தது.   
அரசியல் அதைக் கைகழுவிவிட்டு   
ஊழல் வாகனத்தில்   
ஊர் சுற்றி வருகிறது...!   
  தனக்கு நாற்காலி தேடுகின்ற காலம்...!
  தமிழுக்குத் தங்க நாற்காலி
  இவர்கள் தருவது எக்காலம்...?

  பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளை
  "மம்மி டாட்டா" என்றது
  அதன் அன்னை அகம் மகிழ்ந்தாள்.
  தமிழன்னை தலை கவிழ்ந்தாள்.
  காரணம் -
  அது சொன்னது தமிழுக்கு "டாட்டா"...!
உலகத்தைச் சுற்றி வர   
ஆங்கிலம் வேண்டுமென்பார்...!   
இந்தியாவைச் சுற்றி வர   
"இந்தி"யும் வேண்டுமென்பார்...!   
  போகட்டும்
  தமிழ்நாட்டுக்கென்று
  கொஞ்சம் தமிழ் கற்றால்
  நட்டமில்லை தமிழா...!
  கொஞ்சு தமிழ் படித்தல்
  குற்றமில்லை தமிழா...!
உதவுமெனில் உலக மொழியனைத்தும்   
ஒருசேரக் கற்றுக்கொள்   
ஆனால் - உதட்டோடு நிறுத்துக்கொள்...!   
தாய் தமிழை மட்டும்   
உயிருக்குள் வைத்துக்கொள்...!   

  தமிழா,   
  ஆங்கிலேயனோடு
  ஆங்கிலம் பேசு.
  "இந்தி"யனோடு
  இந்தி பேசு...!
  தமிழனோடு மட்டுமாவது
  தமிழ் பேசு...!
வயிற்றுப் பாட்டுக்காக   
வாய்மொழியை மாற்றாதே...!   
வந்த மொழியைப் போற்றாதே...!   
உன் தாய்மொழியைத்   
தள்ளி வைக்காதே...!   
  புட்டிப்பால் பூரிப்புத் தரலாம்...!
  தாய்ப்பால்தான்
  தன்மானமும் சேர்த்துத் தரும்...!
இங்கே - எண்ணற்ற மக்கள்   
தொலைக்காட்சியில் தலைவைத்து   
தன் கலாச்சாரத்தில் கால் வைத்து   
கவலையின்றித் தூங்குகின்றார்கள்...!   
  அவர்கள் கனவில்   
  ஆடையுரிந்து நிற்கிறது   
  மேற்கத்தியக் கலாச்சாரம்...!   

  இன்றைய   
  செயற்கைக் கொள் தொலைக்காட்சிகள்
  நம் வரவேற்பறையை
  வகுப்பறையாக்கி
  இழிந்த பண்பாடுகளைப் போதிக்கும்
  புதிய ஆசான்கள்...!
தமிழைச் சிதைப்பதில்   
சின்னதிரையும் வண்ணத்திரையும்   
சின்னதம்பி, பெரிய தம்பி...!   
இவற்றில்   
கன்னித் தமிழ் கிளிகள்   
கலப்பட மொழி பேசும்..!   
  தமிழறியா மும்பைப் புதுமயிலோ
  முத்த மொழி பேசும்...!
  சண்டைக்காட்சிகள்
  குடம் குடமாய் இரத்த மொழியும் பேசும்...!
  கட்டிலறைத் காட்சி கண்டால்
  காமனுக்கும் கண் கூசும்...!
பாடல்களில் -   
ஔவை வளர்த்த தமிழ்   
ஆங்கில ஒப்பனையில்   
ஔவை ஷண்முகியாய் மாறும்...!   
அர்த்தம் - ஆங்கிலேயனுக்குத்தான் புரியும்...!   

  நடனக் கோலம் கண்டால்
  கீழ்ப்பாக்கம் நினைவில் வரும்...!
  சில கல்லூரிக் காளைகளோ
  திரையரங்கிலே அருள் வந்து ஆடும்...!
  ஆம், அந்தப்படம் தான்
  தமிழ் கூறு நல்லுலகில்
  நூறு நாள் ஓடும்...!
மொழிமாற்றத் தொடர்களில்
தமிழ் விழி பிதுங்கித் தவிக்கிறது.   
செந்தமிழ் நாட்டில்   
ஜூனூன் தமிழ் கூட செழித்து வளர்கிறது...!   

  பாவம் - முத்தமிழும் அந்த
  சின்னதிரைக்குள் சிக்கி
  மூச்சுத் திணறுகின்றன...!
  தமிழ் மண்ணில்
  தமிழை இன்னும் தமிழ்ப்படுத்த வேண்டும்...!

தமிழரையெல்லாம்   
தமிழன்பராக்க வேண்டும்...!   
கனவு இலக்கியம் பண்பாடுகள்   
களவு போகாமல் காக்க வேண்டும்...!   

  அறிவுத் தமிழ் அறிவியல் தமிழாய்
  அவதாரம் எடுக்க வேண்டும்...!
  அப்போது தான் உலகம் நம்மை உற்று உற்றுப் பார்க்கும்...!

மறைந்த கவிஞர் திரு. அம்ஜத்பாரதி அவர்களை அறிய இங்கே சொடுக்குவதற்கு முன்... பிடித்த வரியைக் குறிப்பிட்டு, உங்களின் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டால் மிகவும் மகிழ்வேன்... நன்றி...

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. வணக்கம்
    அண்ணா
    அற்புதமாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள் கவிதை அருமையாக உள்ளது.சொல்லிய விடயம் உண்மைதான்.த.ம2

    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    பதிலளிநீக்கு
  2. 'தமிழனுடன் மட்டுமேனும் தமிழ் பேசு'

    அனைத்து வரிகளும் அருமை!

    பதிலளிநீக்கு
  3. அருமை DD. தொழில் நுட்பமும் சேர்ந்து!

    பதிலளிநீக்கு
  4. புட்டிப்பால் பூரிப்பு தரலாம்! தாய்ப்பால்தானே தன்மானம் சேர்த்து தரும்! பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளை டாட்டா என்றதால் அகமகிழ்ந்தாள் அன்னை! தமிழன்னை தலைகவிழ்ந்தாள் அவன் சொன்னது தமிழுக்கு டாட்டா! போன்ற வரிகள் மிகவும் கவர்ந்தது. சிறப்பான கவிதையை வழக்கம் போல உங்களின் தொழில்நுட்ப மாயாஜாலத்தில் பகிர்ந்து அசத்திவிட்டீர்கள்! வாழ்த்துக்கள்! தொடரட்டும் உங்களின் புதுமை முயற்சிகள்! நன்றி!

    பதிலளிநீக்கு
  5. டிடி கலக்கிட்டீங்க போங்க!! கவிதை அருமை!!! வரிகள் அப்படியே துளைக்குது...உங்கள் தொழில்நுட்பம் புகுந்து விளையாடுது!!! கலக்குங்க டிடி! இந்தத் தொழில் நுட்பம் ரொம்பவே நல்லாருக்கு டிடி. உங்களிடம் தொலை பேசியில் பேசுகின்றோம் இதைக் குறித்து விரிவாக....இன்றே!

    பதிலளிநீக்கு
  6. நீங்கள் பதிவு போட்டதும் நாங்கள் படித்து பின்னூட்டம் போட முயன்று முயன்று இதோ இப்போதுதான் சென்றது...

    பதிலளிநீக்கு
  7. உங்கள் எண்ணம் ஈடேற வேண்டும். தமிழ் வாழ்க – என்று நமக்கு நாமே முழங்குவதை விட, தமிழ் வாழ்க என்று மற்றவர்கள் சொல்லும் காலம் வரவேண்டும்.
    த.ம.6

    பதிலளிநீக்கு
  8. அன்பின் டிடி, இப்படி அழைப்பதும் தமிழைப் புறக்கணிப்பதாகுமோ? தொழில் நுட்பம் எல்லாம் சரிதான்.இடது வலது பக்கம் எழுத்துக்கள் வேண்டுமென்றே அமைக்கப் பட்டதா?பகுதி ஒன்றைச் சொடுக்கி முதலில் பகுதி எங்கே என்று தேடினேன் . பிறகுதான் புரிந்தது மறுபடியும் மேலே பார்க்கவேண்டும் என்று. பாவம் என்னைப் போன்ற வாசகர்கள். சொல்லவந்தது அருமை. அதை இன்னும் எளிமையாகச் சொல்லலாமே not withstanding தொழில் நுட்பம். பாராட்டுப் பின்னூட்டங்க்ள் நடுவே மனதில் பட்டது. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. தமிழின் பெயரைச் சொல்லிச் சொல்லி
    தங்களுக்க நாற்காலி தேடுகிறவர்கள்
    தமிழுக்கு எப்படி நாற்காலி தருவார்கள்

    பதிலளிநீக்கு
  10. தமிழை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு இப்பதிவு ஒரு பாடம்.

    பதிலளிநீக்கு
  11. அம்ஜத் பாரதியின் கவிதைகள் யாவும் ,தங்களின் 'சித்து 'வேலையில் அம்சமாய் இருக்கிறது :)

    பதிலளிநீக்கு
  12. தொழில் நுட்பமும், அனைத்து கவிதை வரிகளும் அருமை.

    பதிலளிநீக்கு
  13. இந்த தமிழ படிக்கவே எனக்கு படுபயங்கரமா திணறுதே, இதுல தமிழ இன்னும் தமிழ் படுத்தினா எங்கள மாதிரி உள்ளவங்க கதி?

    ஜோக்ஸ் அப்பார்ட், தூய தமிழ் வார்த்தைகளோட பயன்பாடு முதல்ல ஆரம்பிக்கணும். அப்படினா தான் என்னை மாதிரி கத்துக்குட்டிங்களும் தமிழ் படிக்க ஈசியா இருக்கும்.

    உங்களோட தொழில்நுட்பமும் எப்பவுமே என்னை சுத்தல்ல விடுது. சீக்கிரம் புரிஞ்சுக்குற பக்குவம் வரணும்

    பதிலளிநீக்கு
  14. ஆம் நிச்சயம் தமிழ்ப்படுத்த வேண்டும்
    சொல்லிச் சென்றவிதம் அருமை

    பதிலளிநீக்கு
  15. மொழிபெயர்ப்பு சீரியல்களில் வேண்டுமென்றே தமிழ்
    சரிவர மொழிபெயர்ப்பு மற்றும் பேச்சு செய்யப்படுவதில்லை என்றே தோன்றுகிறது

    பதிலளிநீக்கு
  16. தொழில் நுட்பமும், விளக்கமும் அருமை.

    பதிலளிநீக்கு
  17. தமிழை இன்னும் தமிழ் படுத்தவேண்டும் - இன்றைய காலகட்டத்துக்கு மிக மிகவும் தேவையான விஷயத்தை (அழகாக, எளிமையாகவே தமிழ்படுத்தி) சொல்லியிருக்கிறீர்கள், படித்து விட்டேன். நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறேன். நன்றி.
    - திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

    பதிலளிநீக்கு
  18. வள்ளுவனின் கம்பீரமான படம் அருமை.
    தன்னுடைய் நாற்காலி நாளை நிலைக்குமோ நிலைக்காதோ என்ற நிலையில் தமிழுக்காக ஏன் கவலைப் படப் போகிறார்கள்.அதிக பட்ச தமிழை பயன்படுத்த முயற்சி செய்வோம்.
    அழகுணர்ச்சியுடன் பதிவுடன் ஒரே பதிவர் நீங்கள்தான் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  19. நன்றாக சொன்னீர்கள் அனைத்தும் ரசித்தேன். நிச்சயம் தமிழை தமிழ் படுத்தனும். முதற்பகுதி இன்னும் பிடித்துள்ளது.மேடை எனக்கும் வழிந்த தமிழ் வடிந்து போனதெங்கே. அட என்ன தொழில் நுட்பம். எப்போதும் போல் அசத்திட்டீங்க சகோ ! வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
  20. பஞ்சவர்ண கிளி பாடத்தில் பயன்படுத்தப் பட்ட பாடல் வரிகள் பாவேந்தரின் பொன் வரிகள் ஊமைகளாகவும் பேடிகளாகவும் முடங்கிக் கிடக்கிறதமிழ்ச் சமூகம் தலை நிமிர்ந்து தன்மானம் பெற்றிட பாவேந்தர் எழுதிய வரிகள் ...

    தமிழை இன்னும் தமிழ் படுத்த வண்டிய நிலையில் இல்லை இன்று தமிழை எளிமைப்படுத்துகிற அளவிற்கு தமிழறிஞ்ச்ர் கள் இல்லை எல்லோரும் பயன் படுத்தும் விதத்தில் எளிமையாகவும் தண்டமிழகவும் இருக்கிறது பவேந்தரையும் வள்ளுவரையும் எழுதியமைக்கு பாராட்டுகள் ....

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் நண்பரே...

    உதவுமெனில்
    உலக மொழியனைத்தும்
    ஒருசேரக் கற்றுக்கொள்
    ஆனால் - உதட்டோடு நிறுத்துக்கொள்...!
    தாய் தமிழை மட்டும்
    உயிருக்குள் வைத்துக்கொள்...!--,

    பதிலளிநீக்கு
  22. வணக்கம்,
    டிடி சார்,
    நாம் தொடங்குவோம்,
    கவிதைகள் அருமை,
    தங்கள் சித்து விளையாட்டு அருமை,
    ஆனால் ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனி கலர் நல்லா இருக்குமோ,,,,,,,,,,,
    தாய்மொழி மட்டும் தான் உயர்வுக்கு சிறந்தது
    என்ற நிலைவரனும்,
    பதிவு அருமை,
    வாழ்த்துக்கள்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  23. உலகம் நம்மை உற்றுப்பார்க்க அறிவுத் தமிழ் அறிவியல் தமிழாய் திருப்பிறப்பு எடுக்கவேண்டும் என்பதை அழகாய் சொன்னீர்கள். கவிதைகள் அருமை. வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  24. ஏதோ டெக்னிகல் கிளிட்ச் போலிருக்கே..

    சுட்டினால் வரவில்லை.

    வள்ளுவரின் படம் மிக அழகாக இருக்கிறது. மணியம் செல்வன் வரைந்ததோ?

    நல்ல முயற்சி.

    God Bless You

    பதிலளிநீக்கு
  25. மன்னிக்கவும். பக்கங்களை புரட்டுவது போல சுட்டிகள் அடுத்தடுத்த கவிதைப் பகுதியைக் காட்டுகிறது.

    சற்றுத்தாமதமாகத்தான் விளங்கியது.

    பதிலளிநீக்கு
  26. எனக்கென்னவோ உங்களை திண்டுக்கல் தனபாலன் என்றோ அல்லது வலைச் சித்தர் என்றோ அல்லது தயாள தன்பாலன் என்றோ (இதுவும் பொருத்தமானதுதான்) சொல்வதை விட திருக்குறள் தனபாலன் என்று சொல்வது சாலச் சிறந்ததெனத் தோன்றுகிறது.

    திருக்குறள் முனுசாமி என்று ஒருவர் இருந்தார். அவரும் உங்களைப் பொலவே குறளில் வித்தகர். ஆனால் நீங்களோ புதிய தலைமுறையைத் தொடுகிறார்ப்போல் திரைப்பாடலையும் திருக்குறளையும் எளிமைப்படுத்தி எல்லொரையும் சென்றடையச் செய்கிறீர்.

    உமது முயற்சிகள் அத்தனையும் இந்தச் சமூகத்திற்குச் சேவைதான்.

    God Bless You

    பதிலளிநீக்கு
  27. தமிழின் பெயரைச் சொல்லி - தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டவர்களின் காலத்தில் தானே - தமிழுக்குக் கொடுமைகள் செய்யப்பட்டன..

    சும்மா இருந்திருக்கலாம்.. இப்போது ஊரிலுள்ளதெல்லாம் செம்மொழியாகி விட்டன!..

    வெடித்தது எது என்று தெரியாமலேயே - ஓடும் எழுத்துக்களை ஒளிபரப்பக் கண்டோம்..

    ஆனாலும் - தமிழ் நின்று வாழும்..

    பதிலளிநீக்கு
  28. அருமை அண்ணா
    அற்புதமான விளக்கம்
    உண்மகள் ஏராளம்
    படித்து மகிழ்ந்தோம்

    பதிலளிநீக்கு
  29. ஒவ்வொரு பகுதியில் உள்ள கவிதைகளும் தமிழை வளர்க்கத் தவறியவர்களை தட்டிக் கேட்பது போல இருக்கிறது. ஐம்பதுகளில் மேடைகளில் முழங்கிய தமிழ் இப்போது போனது எங்கே?
    தனக்கு நாற்காலி தேடுபவர்கள் எப்போது தமிழுக்கு தங்க நாற்காலி கொடுக்கப் போகிறார்கள்? இப்படிப்பட்ட கேள்விகளுடன் 'தமிழனோடு மட்டுமாவது தமிழ் பேசு என்ற உங்கள் வேண்டுகோளும் மனதை நெருட வைக்கின்றன. காலம் கூடிய சீக்கிரம் மாறும் என்று நம்புவோம்!

    பதிலளிநீக்கு
  30. வள்ளுவன் வகுக்க பாரதி வளர்க்கதேன் மதுரமாய் வளர்ந்த பேரின்பமே என் தாயே தமிழ்.

    அழகிய பதிவுஃவாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  31. அபாரமான தொழில் நுட்பம். அசத்தலான கவிதை மூலம் அருமையான வேண்டுகோள். இன்றைய நிலையின் அவலத்தை எடுத்துச் சொல்வதோடு தேவையையும் காட்டுகிறது. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  32. உணர்வுள்ள தமிழனை
    ஒருகணம்
    சிந்திக்க வைத்த வரிகள் என
    எனக்குத் தோன்றுது...
    ஒவ்வொரு தமிழனையும்
    சிந்திக்க வைக்க - தங்கள்
    கவிதையால் முடியும்...
    தங்கள் கவிதை வரிகளை
    எடுத்துக்காட்டாகக் காட்டி
    நானும்
    https://yarlpavanan.wordpress.com தளத்தில்
    கேள்விக்கணைகளைத் தொடுத்துள்ளேன்!
    பலரது உள்ளத்தில்
    மாற்றத்தை நிகழ்த்தவல்ல
    தங்கள் கவிதைக்கு
    எனது பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  33. அருமையான கவிதையும் அதற்கேற்ற தொழில்நுட்ப இணைப்பும்! திண்டுக்கல் புகையிலை வாசம் போல கவிஞரின் கவிதை ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  34. ஆதங்கம் ...நியாயம்..
    அனேகமாக ஆங்கில வழிக் கல்வி முறை காலி செய்திருக்க வேண்டும்.
    வித்தைகளைக் காட்டி
    கவிதையை
    வெளியிட்டிருப்பது
    அருமை
    தம +

    பதிலளிநீக்கு
  35. //உதவுமெனில் உலக மொழியனைத்தும் ஒரு சேரக் கற்றுக்கொள்
    தாய் தனிழை மட்டும் உயிருக்குள் வைத்துக் கொள்//

    இதற்கு மேல் என்ன சொல்ல வேண்டும்?செய்வது நம் கடமை

    பதிலளிநீக்கு
  36. அருமையான பதிவு ,அழகான வியக்க வைக்கும் தொழில் நுட்பம்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  37. ஒவ்வொரு பதிவும் அற்புதமான தொழிற்நுட்பத்துடன் கலக்குறிங்க.

    பதிலளிநீக்கு
  38. தாய் தமிழைமட்டும் உயிருக்குள் வைத்துக்கொள

    அறிவுத்தமிழ் அறிவியல் தமிழாய்
    அவதாரம் எடுக்க வேண்டும்

    இவை மிகப் பிடித்த வரிகள்.

    த.ம.24

    பதிலளிநீக்கு
  39. அன்புள்ள தனபாலன்.... இவர்களால் ஒருபோதும் தங்க நாற்காலி தர இயலாது. அதற்கான தகுதியும் திறனும் அற்றவர்கள். இவர்கள் உயிர் போகும்வரை பிழைப்பதற்குத் தமிழ் இவர்களுக்கு ஒரு பற்றுக்கோடு அவ்வளவுதான். அதேபோன்று இவர்களால் தமிழைக் காப்பாற்ற முடியாது. அழிக்கவும் முடியாது. அது சுயம்புவானது. அது தன்னைத் தானே காப்பாற்றிக்கொண்டு இது போன்ற பதர்களையும் காப்பாற்றும் வல்லமை பெற்றது தமிழ். அண்டிப் பிழைப்போர் எப்படி உண்டி கொடுப்பார்.?

    பதிலளிநீக்கு
  40. இன்று தமிழ்நாட்டில் தமிழ்படும் பாட்டைப் பார்த்து மனம் படும் பாட்டை அந்த தமிழின் இன்வரிகளாலேயே கொட்டித் தீர்த்துவிட்டார் கவிஞர். பகிர்வுக்கு நன்றி தனபாலன்.

    பதிலளிநீக்கு
  41. பாடல்களை சரியான இடத்தில் பயன்படுத்தி நீங்கள் எழுதும் பதிவுகள் தனிதன்மை வாய்ந்தது.நன்றி

    பதிலளிநீக்கு
  42. வணக்கம் சகோதரரே.

    அற்புதமான படைப்பு .தமிழுக்கு ஈடு இணையேது.? தமிழ் சிறக்க வழிவகுக்கும் பதிவிது. அனைத்து கவிதைகளுமே தமிழின் தரம் உணர்த்தி மனதை விட்டு அகலாது நின்றன. தங்களின் சிறந்த தொழிற்நுட்பங்கள் வியக்க வைக்கின்றன. இந்த மாதிரி படைப்புக்களில் தங்களை மிஞ்ச யாருமேயில்லை. தொடரட்டும் தங்களின் புரட்சிகரமான வியக்கத்தகும் பதிவுகள் என ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

    தங்களின் மற்ற பதிவுகளை விரைவில் படிக்கிறேன். என் தளம் வந்து வாழ்த்துரைத்தமைக்கு என் பணிவான நன்றிகள்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  43. ஒரு Discovery Channel தமிழுக்கு செய்யும் சேவையை எந்த தமிழ் தொலைக்காட்சிகளும் செய்வதில்லை. எல்லா நிகழ்ச்சிகளிலும் இடையிடையே பீட்டர் விடுகிறார்கள். ஒரு சில நிகழ்சிகளில் அவை தமிழ் நிகழ்ச்சி என்று ஞாபகப்படுத்த இடையிடையே தமிழை பேசுகிறார்கள். தமிழ் விளம்பரங்களில் 80 சதவீதம் ஆங்கில வார்த்தைகள்தான் பயன்படுத்தப்படுகின்றன.

    தற்போதுள்ள சூழ்நிலையில் ஆங்கிலத்தால் வட்டார வழக்குகள் அழிந்து வருகின்றன; தமிழ் வார்த்தைகள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகின்றன. உதாரணமாக அன்று நாம் பயன்படுத்திய மேல்வாய், முகவாய் போன்ற வார்த்தைகள் இன்று யாரும் பயன்படுத்துவதில்லை. தமிழை தமிழ்ப்படுத்த அரசு ஏதாவது முயற்சி எடுக்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
  44. அன்பின் சகோ தனபாலன் அவர்கட்கு,

    வான் புகழ் வள்ளுவரின் அற்புதப் படமும், அழகான தமிழ் பாடலும்
    தமிழன்னைக்கு சமர்ப்பணம் செய்துவிட்டு, பகுதி பகுதியாக தமிழுக்கு
    நடந்து கொண்டிருக்கும் அவலத்தை சிறிதும் பொய்யில்லாமல்
    எடுத்துச் சொல்லி ஆற்றாமையை கொட்டியிருக்கும் கவிதைகள்
    பிரமாதம். ஒவ்வொரு கவிதையும் தமிழன்னைக்கு ஆதரவு அளித்து
    எழுதப் பட்டிருக்கிறது. இந்த அவலங்கள் தீர வேண்டும். மாற வேண்டும்.
    தமிழ் நாட்டிலாவது தமிழ் கம்பீரமாக நிமிர்ந்து நிற்க வேண்டுமென்றால்
    உங்கள் கவிதை வரிகளில் வாழும் நிலைமை கூனிக் குறுக வேண்டும்.

    அம்ஜத் பாரதியின் கவிதைகள் .... எழுத வார்த்தைகள் வரவில்லை.
    இணையத்தில் தொழில்நுட்ப வல்லுநர் நீங்கள்....பதிவுகளில் வெற்றிக்கொடி
    கட்டுகிறீர்கள். வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

    அன்புடன்
    ஜெயஸ்ரீ ஷங்கர்.

    பதிலளிநீக்கு
  45. அய்யா,

    கவிதைகளின் ஒவ்வொரு வரியும் சிந்திக்கவைக்கும் நெத்தியடி !

    நீங்கள் சொன்னதுபோல தமிழனோடு மட்டுமாவது ஒழுங்கான தமிழ் பேசினாலே போதுமே !

    நன்றி
    சாமானியன்

    பதிலளிநீக்கு
  46. படப்பாடலாக பலருக்கும் அறிமுகமான பாவேந்தரின் வரிகளை அருமையாக எடுத்துக்காட்டி இருக்கிறீர்கள். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெற வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  47. தமிழைச் சிதைப்பதில் சின்னத் திரையும் வண்ணத்திரையும் சின்னத்தம்பி பெரியதம்பி ..... என்ற வரிகளை மிகவும் ரசித்துப் படித்தேன். நீங்கள் குறிப்பிட்டுள்ளவை அனைத்தும் உண்மையே

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.