🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



நடையைக் கட்டுங்கள், எதுவும் சொல்ல வேண்டாம்...

வணக்கம் நண்பர்களே... ஒரு பாடல் கேட்போமா...?




© பனித்திரை கண்ணதாசன் K.V.மகாதேவன் P.B.ஸ்ரீனிவாஸ் @ 1961 ⟫

நாயாய் மனிதன் பிறந்திருந்தாலும் - நன்றி எனும் குணம் நிறைந்திருக்கும்... நரியாய் அவனே உருவெடுத்தாலும் - தந்திரமாவது தெரிந்திருக்கும்... காக்கைக் குலமாய் அவதரித்தாலும் - ஒற்றுமையாவது வளர்ந்திருக்கும்... காற்றாய் நெருப்பாய் நீராய் இருந்தால் - கடுகளவாவது பயனிருக்கும்... ஆறறிவுடனே பேச்சும் பாட்டும் அறிந்தே மனிதன் பிறந்து விட்டான் - அந்த ஆறாம் அறிவைத் தேறா அறிவாய், அவனே வெளியில் விட்டு விட்டான்... ஏதோ மனிதன் பிறந்து விட்டான்... அவன் ஏனோ மரம் போல் வளர்ந்து விட்டான்... ஆமா... மரங்கள் தரும் பயன்களுக்கு மனிதன் ஈடாக முடியுமா என்ன...?

ம்ஹீம்... முடியாது மனசாட்சி... சாகும் முன் ஒரு மரமாவது வளர்த்து விட்டால் மனிதன் தான்... ஆமா யார் யார் மீது என்னென்ன கோபம்...?

ம்... என்னத்த கோபப்பட்டு... என்னத்த சொல்லி... நன்கு அறிந்து தெரிந்து புரிந்து பேசி பழகிய எனது நண்பரைப் பற்றி என்னிடமே... ம்...வேணாம்... பொதுவாகவே கேட்கிறேன்... அடுத்தவரைப் பற்றிப் பேசுவதில் இருக்கிற ஆனந்தம்... பரமானந்தம்... ஆகா... நம்மைப் பற்றிச் சிந்திப்பதில் கூட இருப்பதில்லை... அடுத்தவரைப் பற்றிப் பேசுவது தவறா...?

அடேய்... அதற்காக இப்படி ஒரு வில்லங்க கேள்வியா...? ம்... பொதுவாகவே சொல்றேன்... அடுத்தவரைப் பற்றிப் பேசுவது எந்தத் தவறும் கிடையாது... ஆனால் அடுத்தவரைப் பற்றி நல்லவிதமாகப் பேசுகிறோமா...? இல்லை மோசமாகப் பேசுகிறோமா...? என்பதில் தான் விசயமே இருக்கிறது...

க்கும்... அது சரி...! இன்றைய காலகட்டத்தில் அடுத்தவர்களின் சாதனைகளை, அடுத்தவர்களின் நன்மைகளை, அடுத்தவர்கள் செய்த சின்ன சின்ன உதவிகளைக் கூட, அதிகமாக மகிழ்ந்து பேசுவதோ அல்லது பாராட்டிப் பேசுவதோ குறைந்தே போய் விட்டது என்கிறேன்... எத்தனை பெரிய மனிதனுக்கு - எத்தனை சிறிய மனமிருக்கு...! எத்தனை சிறிய பறவைக்கு - எத்தனை பெரிய அறிவிருக்கு...! கோழியைப் பாரு காலையில் விழிக்கும்... குருவியைப் பாரு சோம்பலைப் பழிக்கும்...2 காக்கையைப் பாரு கூடிப் பிழைக்கும்2 நம்மையும் பாரு நாடே சிரிக்கும்... (படம் : ஆசைமுகம்)

உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது2 உன் செயலைப் பார்த்து உன் நிழலும் வெறுக்கிறது... எப்படி எதிர்ப்பாட்டு...? இன்னும் 4 வரிகள்... சேவல் கூட தூங்கும் உலகைக் கூவி எழுப்பும் குரலாலே... ஏவல் செய்யும் காவல் காக்கும் நாய்களும் தங்கள் குணத்தாலே... இரை எடுத்தாலும் இல்லை என்றாலும் - உறவை வளர்க்கும் காக்கைகளே2 இனத்தை இனமே பகைப்பது எல்லாம் - மனிதன் வகுத்த வாழ்க்கையிலே... (படம் : அடிமைப்பெண்) உன் கோபத்தைத் திசை திருப்ப ஒரு கேள்வி கேட்கிறேன்... ஒரு வெண்மையான சுவர்... அப்போது தான் வெண்மை வண்ணம் பூசப்பட்டிருந்தது... அதன் நடுவில் ஒரு சிறு புள்ளி அளவிற்கு ஒரு கருப்பு பொட்டு ஒன்றை வைத்து வெள்ளை வண்ணம் பூசியவர், இரண்டு நண்பர்களை அழைத்துச் சுவரைப் பார்க்கச் சொன்னார்... அந்தப் பத்துக்குப் பத்து சுவரைப் பார்த்த முதல் நண்பர், "அடடா...! எவ்வளவு அழகான வெள்ளை வண்ணம்...!" என்று பாராட்டினான்... இரண்டாம் நண்பர், "என்னங்க இது... இவ்வளவு வெள்ளைக்கு நடுவிலே ஒரு கரும் புள்ளி...? அதாங்க பெருசா தெரியுது...!" என்றார்... நீ என்ன சொல்வாய்...?

வெள்ளைத் தூரிகையை எடுத்து கரும்புள்ளி மகானிடம் கொடுப்பேன்... ஹா... ஹா... முழு வெள்ளைக்கு நடுவில் உள்ளே ஒரு சிறு கரும்புள்ளி, அவர் மனம் முழுவதும் கருப்பாகப் பரவி இருந்ததால் தான் அப்படிச் சொல்கிறார்... ஹேஹே... புதிய படைப்புகளை எழுதிப் பெயர் வாங்கும் புலவர்களை விட, குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவர்களுக்குப் புகழ் அதிகம் என்று பலரும் நினைத்து, அவர்களின் பல படைப்புகளைப் பாடாவதி ஆக்குகிறார்கள் !

அடுத்தவரைப் பற்றி இல்லாதவற்றையும் பொல்லாதவற்றையும் கூறி மேலதிகாரிகளிடம் பெயர் வாங்கும் அலுவலர்கள் அலுவலகங்கள் தோறும் இருக்கத்தான் செய்கிறார்கள்... சிலர், நண்பர்களைப் பற்றி நண்பர்களிடம் கூறி பிரித்தாளும் சூழ்ச்சியும் ஈடுபடுகிறார்கள்... அதை நம்பும் நண்பர்களுக்குத் தீராத் துன்பத்தையே தரும்... தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும் (510) இவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது எப்படி...? இங்கே ஒருவர் எந்தத் தகவலையும் கேட்பதற்கு முன் என்ன செய்கிறார் :-

கிரேக்க ஞானி சாக்கிரடீசைப் பார்க்க ஒருவர் வந்திருந்தார்... வந்தவர் புதியவர்... இருந்தாலும் உபசரித்து வீட்டில் அமர வைத்தார்... "சாக்கிரடீஸ் அவர்களே... உங்கள் நண்பரைப் பற்றி நான் சமீபத்தில் கேட்ட ஒரு தகவலை உங்களிடம் கூற வந்துள்ளேன்... சொல்லவா...?" என்று கேட்டார்...

"ஒரு நிமிடம் காத்திருங்கள்... நான் எந்தத் தகவலையும் யார் மூலமாகக் கேட்டாலும், அதனைக் கேட்பதற்கு முன்பாக மூன்று விதமான சோதனைகளுக்கு உட்படுத்துவேன்... மூன்று முன் பரிசோதனைகளையும் சரியாய் இருந்தால் மட்டுமே தகவல்களைக் கேட்பேன்..."

"முதல் சோதனை : உண்மை... என் நண்பரைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்ட செய்தி உண்மையானது தான் என்பது உங்களுக்குத் தெரியுமா...?" // "உண்மையானது தானா என்பது எனக்குத் தெரியாது... கேள்விப்பட்டதையே உங்களிடம் அப்படியே சொல்லிப் போக வந்தேன்..." //

"இரண்டாவது சோதனை : நன்மை... என் நண்பரைப் பற்றி நீங்கள் கூற வரும் செய்தியால் எனக்கு எதுவும் நன்மை உண்டாகுமா...?" // "அப்படியொன்றும் உங்களுக்கு நன்மை விளையாது... கெட்ட செய்திகளே உண்டு..." //

"மூன்றாவது சோதனை : பயன்மை... அந்தச் செய்தி உண்மையாகவோ, நன்மையாகவோ இல்லாவிட்டாலும் எனக்கு எந்தவிதத்திலாவது பயன்பாடு உண்டா...?" // "பயன்படாது..." //

"நண்பரே... உண்மையில்லாத, எனக்கு நன்மை செய்யாத, எனக்குப் பயன் தராத தகவலை... நீங்கள் சொல்லக் கேட்டு நான் என்ன செய்யப் போகிறேன்...? நடையைக் கட்டுங்கள்... எதுவும் சொல்ல வேண்டாம்..."

போட்டுக் கொடுப்பவர்களையும், பொல்லாங்கு பேசுபவர்களையும் இப்படிப் புறக்கணிக்கத் தொடங்கினால் சிறக்கும் நம் வாழ்வு...

புறணி பேசாமலும் கேட்காமலும் இருந்தால் தரணி பேசும்...! நம்ம வள்ளுவரின் "புறங்கூறாமை" அதிகாரம் ஒரு உரையாடலாக... இங்கே புறணி-பரணி-தரணி சொடுக்கி வாசிப்பதற்கு முன் இப்பதிவைப் பற்றி தங்களின் கருத்து என்ன...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. நல்ல சிந்தனையைப் பகிரும் கட்டுரை. தங்களது பதிவுகள் மூலமாக நாங்கள் பல கருத்துக்களைத் தெரிந்துகொள்கிறோம். நடையைக் கட்டவேண்டிய அவசியம் எங்களுக்கு எழாது என்றே நினைக்கிறோம். புறங்கூறாமை இருப்பின் நாம் மென்மேலும் முன்னேறலாம் என்பது தெளிவு.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    அண்ணா.
    என்ன நடந்தது.... யார் என்று சொல்லுங்கள்...
    மற்றவரைப்பற்றி பேசுவது என்றால் நல்ல விடயங்களை பேச வேண்டும் இவர் இப்படித்தான் இவள் இப்படித்தான் என்று தப்பாக பேசுவது தப்பு . நல்ல விளக்கம் கொடுத்துள்ளீர்கள்
    உலகம் ஆயிரம் சொல்லட்டும் நம்ம நமட வழியில் செல்வோம் நல்லதை செய்வோம நல்லதை பேசுவோம்.. பகிர்வுக்கு நன்றித.ம 2

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. சாக்ரடீஸ் தத்துவம் கேள்விப்பட்டிருக்கிறேன். நல்ல குணங்கள் வளர்க!

    கறுப்புப் புள்ளி, வெள்ளைப் புள்ளி சம்பந்தமாக ஒரு வில்லங்க சிந்தனை!

    மனதில் கருப்பே இல்லாதவருக்குத்தான் கறுப்புப் புள்ளி பூதாகரமாகத் தெரிகிறது. மனதில் எப்போதும் வெள்ளையாகவே இருக்கும் பாஸிட்டிவ் மனிதருக்கு சுவரில் இருக்கும் சிறு கறை தெரியாமல் வெண்மையாகவே காட்சி தருகிறது!

    :)))))))))))))

    பதிலளிநீக்கு
  4. அன்புள்ள திரு டிடி அண்ணா அவர்களுக்கு வணக்கம்.

    புறம் பேசும் மனிதர்களின் முகத்திரையை கிழித்து, அதன் தீமையை அருமையாக எடுத்துரைத்துள்ளீர்கள். பதிவிற்கு நன்றி அண்ணா.

    பதிலளிநீக்கு
  5. அடுத்தவரைப் பற்றி நம்மால்பேசாமல் இருக்கவே முடியாது. ஆனால் நல்லவற்றை அதிலும் அவர் அங்கே இல்லாத பட்சத்தில் அவரைப்பற்றிய நல்லவைகளையே பேசணும். நல்லது ஒன்னும் கிடைக்கலையா.... சுப்ன்னு சும்மா இருக்கணும்.

    அதெப்படி எதுன்னாலும் அதுக்குப் பொருத்தமாகப் பாட்டைக் கண்டுபிடிச்சுப் பட்டையைக் கிளப்புறீங்க!!!!

    பதிலளிநீக்கு
  6. உண்மையில்லாத
    பயன் தராத
    நன்மை செய்யாத
    ஆகா அருமையான சிந்தனை ஐயா
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
  7. நான்கூட கருத்தே சொல்லவேண்டாம் நடைய கட்டுங்கன்னு சொல்றீங்களோனு நினைத்து பயந்துவிட்டேன் அண்ணா:))))) சாக்ரடீஸ் ஐடியா சூப்பர் !

    பதிலளிநீக்கு
  8. எதார்த்த உண்மைகள் உரத்துத் சொல்கின்றது இந்தப் பதிவு

    பதிலளிநீக்கு
  9. இந்த பதிவை படித்தபோது எனக்கு தோன்றியவை இதுதான் “நட்புச் செய்து கொளவது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்க்காக மட்டும் அல்ல. மிகுதியாக தவறு செய்யும்பொது அவரை கடிந்து திருத்துவதற்கே” ஆகும்----

    பதிலளிநீக்கு
  10. நல்ல கருத்து நயம்பட உரைத்தீர்.

    குற்றமற்றவர் யாரும் இல்லை
    குறைகூறவும் யாருக்கும் தகுதி இல்லை. பதிவுக்கு நன்றி ! தொடர வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
  11. மனசாட்சியின் கேள்வி பதிலும் சாக்ரட்டீஸின் கேள்விகளும் அருமை. எவ்வளவு அருமையான கேள்விகள். சிந்திக்க வைத்துவிட்டது.
    த ம 10

    பதிலளிநீக்கு
  12. எல்லோரும் சாக்கிரடீஸ் ஆக முடிந்தால் அவருக்குதான் என்ன மதிப்பு ...ஹி ஹி :)

    பதிலளிநீக்கு
  13. சுட்டிக்காட்டியுள்ள திரைப்படப் பாடல் வரிகளும், கடைசியில் கிரேக்க ஞானி சாக்ரடீஸ் கூறியுள்ள தத்துவக்கதையும் மிகவும் அருமை. அருமையான பகிர்வுக்கு பாராட்டுகள். வாழ்த்துகள் நன்றிகள், Mr DD Sir.

    பதிலளிநீக்கு
  14. இன்னும் நான் ஏதேதோ

    ’சொ ல் ல த் தா ன் நி னை க் கி றே ன் ....’

    தலைப்பினைப் பார்த்ததும், நான் சொல்வதால் யாருக்கும் எதுவும் பயனில்லை என நினைத்து .... சொல்லாமலேயே .... நடையைக்கட்டிவிட்டேன்:)

    பதிலளிநீக்கு
  15. உண்மை, நன்மை, பயன்மை சிந்தித்து செயல்பட்டால் எல்லாச் செயலுமே சிறப்பானதாக அமைந்துவிடும். மிக அருமையான பதிவு சகோ. :)

    பதிலளிநீக்கு
  16. இல்லாததையும் பொல்லாததையும் கூறி - அடுத்தவர்க்குக் குழி பறித்துக் குடி கெடுப்பவர்கள் - எங்கெங்கும் இருக்கின்றார்கள்..

    அவரவர் எடுக்கும் மண்வெட்டி அவரவர்க்கே!..

    அடுத்தபடியாக -

    நாமும் ஒரு மண்வெட்டியை எடுத்து குழி பறித்து ஒரு மரக்கன்றினை நட்டு விட்டு நடையைக் கட்ட வேண்டியதுதான்!..

    (கிடைத்த பொழுதில் நானும் சில மரக்கன்றுகளை நட்டிருக்கின்றேன்)

    பதிலளிநீக்கு
  17. வழக்கம்போல அருமையான , ஆழ்ந்தோசிக்கவைத்த பதிவு அண்ணா .

    பதிலளிநீக்கு
  18. உங்கள் பதிவு முற்றும் உண்மை !சில நாட்களாக எனக்கும் ஒரு சிலரால் , உதவப்போய் துன்பம்தான் பரிசு!

    பதிலளிநீக்கு
  19. எல்லோரும் சாக்ரடீஸ் போல இருந்தால் நலமே.
    நம்மைப் பற்றீப் பேசுபவர்களைப் பற்றிக் கவலைப் படுவதை விட்டுவிட்டால் தலைவலி நடையைக் கட்டிவிடும்.
    அருமையான பதிவு. இன்னொருவன்///வள் என்ன நினைக்கிறான் என்று யோசிப்பதே

    பலனற்ற நேரம் விரையமாகும் வழக்கம். இன்னும் கற்க வேண்டி இருக்கிறதே..
    மிக நன்றி டிடி.
    உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
    உனக்கு நீதான் நீதிபதி
    பாடலும் நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் டிடி சார், தாங்கள் சொல்வது எவ்வளவு பெரிய உண்மை. அடுத்தவரைப் பற்றி நம்மிடம் குறைவாக தவறாக பேசுவதை நாம் விரும்பினால் நம்மைப் பற்றியும் இப்படித்தான் பேசுவார்கள் என்று உணர்ந்து கொள்ள வேண்டும்.யாரையும் கெட்டவர்கள் என்று புரம் பேசாத நா ,,,,,,,,,,,,,
    அருமை தங்களின் கருத்துக்கள் அனைத்தும்.
    நன்றி டி டி சார்.

    பதிலளிநீக்கு
  21. டிடி யின் பதிவுகள் எப்போதும் உண்மையையே பேசும். படித்து சிந்தித்து செயல்பட்டால் நன்மை பயக்கும். எல்லோருக்கும் பயனுள்ளது.
    நடையைக் கட்டிவிட்டேங்கோ!

    பதிலளிநீக்கு
  22. வழக்கம்போல் நல்ல கருத்துகளின் தொகுப்பு.சிறப்பு டிடி

    பதிலளிநீக்கு
  23. அற்புதமான பதிவு. உண்மையில் இப்படி ஒரு கூட்டம் இருந்துகொண்டுதான் இருக்கிறது.அவர்களை எப்படி எதிர்கொள்ளவேண்டுமென்று வள்ளுவனையும் சாக்ரடீசையும் வைத்து உங்கள் பாணியில் வெளுத்துக் கட்டிவிட்டீர்கள்.

    அருமை.

    God bless You

    பதிலளிநீக்கு
  24. அன்புள்ள வலைச்சித்தருக்கு,

    நல்ல பதிவு. நான் இரு சக்கர வாகனத்தில் செல்லுகின்ற பொழுது இடது விரல்கள் அடிபட்டு மிகுந்த பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. ஒரு கையால் மட்டும் தட்டச்சு செய்கிறேன். மன்னிக்கவும்.

    நன்றி.
    த.ம.15.

    பதிலளிநீக்கு
  25. அன்பு டிடி, பதிவு உங்கள் பாணியில் நன்றாகவந்திருக்கிறது. குறையே இல்லாத மனிதர்களைக் காண்பது அரிது. எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்று சொல்லி இருப்பதிலேயே பொய்ப் பொருளும் கூறப்படும் கேட்கப் படும் என்று புரிகிறதில்லையா.

    பதிலளிநீக்கு
  26. அன்புள்ள தனபாலன்..

    வணக்கம். எதார்த்தமான இன்றைய காலக் கட்டத்திற்குத் தேவையான பதிவு. நிரம்பவும் மென்மையாகக் கையாண்டிருக்கிறீர்கள். இன்றைக்குப் பலரின் வாழ்க்கையே அடுத்தவரைப பற்றிய பேச்சின் நினைவிலேயே பொழுது விடியக் கிளம்பி விடுகிறார்கள். யாரை பற்றியேனும் யாரிடமேனும் எதையேனும் சொல்லிவிட்டு தங்களை திருப்தி படுத்திக்கொள்கிறார்கள். ஆனால் எல்லாவற்றுக்கும் காலக் கணக்கும்கடவுள் கணக்கும் இருக்கிறதல்லவா. அது நிச்சயம் இதுபோன்றவற்றைத் தராசிலிட்டு நீதி வழங்கிவிடுகிறது. அருமையான பதிவு.

    பதிலளிநீக்கு
  27. உண்மை தான் புறணி கூடாது அருமையான விளக்கம்.

    பதிலளிநீக்கு

  28. நடையைக் கட்டுங்கள்...
    எதுவும் சொல்ல வேண்டாம்...
    அடடே!
    மிக்க நன்றி என்றாவது
    கருத்திடாமல் செல்லச் சொல்கிறாரோ
    என நினைத்தாலும் தொடர்ந்து படிக்கையிலே
    முதலில்
    சிந்திக்கப் பாவரிகள்
    அடுத்து
    மூன்று சோதனைகள் - அதில்
    மூன்று மை!
    உண்மை, நன்மை, பயன்மை (அருமையான சொல்லாக்கம்)
    ஆகிய மூன்றாலும்
    மூளைக்கு வேலை கொடுக்கீறீர்கள்!
    ஆங்கிலம் கலக்காட்டி
    பதிவு படிக்க இனிக்காதென
    உலாவும் பதிவர்கள் முன்னே
    பிறமொழி கலக்காது
    நல்ல தமிழில் பதிவு தரும்
    தாங்கள்
    பயன்மை - பயன்படு தன்மை
    என்று பொருள் விளங்க
    புதிய சொல்லைத் தந்தமைக்குப் பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  29. அருமை நண்பரே சமீபத்திய ஏதோவொரு பாதிப்பின் பிரதிபலிப்பு புரிகின்றது இருப்பினும் இது காலங்காலமாக எல்லா நாட்டிலும் எல்லா இடங்களிலும் நடந்து கொண்டே........ இருக்கின்றது இதில் பந்தப்படாத மனிதர்களே இருக்க முடியாது...

    சாக்ரடீசின் எடுத்துக்காட்டு மிகவும் பயனுள்ளது பொருத்தமானது இதை பயன் படுத்துபவர்கள் கொஞ்சமே நல்லதொரு விடயத்தை தங்களது பாணியில் வழக்கம்போல பாடினீர்கள் குரல் கொண்டு குறளாலும்... வாழ்த்துகள்

    தமிழ் மணம் 18 ஆம்படி கருப்பர் துணை

    பதிலளிநீக்கு
  30. மிகவும் சிறப்பாக நல்லதொரு கருத்தை பதிவாக்கியிருக்கின்றீர்கள். சாக்ரட்டீஸ் கதை அருமை..

    பதிலளிநீக்கு
  31. திண்டுக்கல் ஐயா மிக அருமையா

    5048. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), ”புறம் பேசுதல் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், ”அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்” என்று பதிலளித்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”நீர் உம்முடைய சகோதரரைப் பற்றி அவர் விரும்பாத ஒன்றைக் கூறுவதாகும்” என்று பதிலளித்தார்கள். அப்போது, ”நான் சொல்லும் குறை என் சகோதரரிடம் இருந்தாலுமா? (புறம் பேசுதலாக ஆகும்), கூறுங்கள்” என்று கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”நீர் சொல்லும் குறை உம்முடைய சகோதரரிடம் இருந்தால்தான், நீர் அவரைப் பற்றிப் புறம் பேசினீர் என்றாகும். நீர் சொன்ன குறை அவரிடம் இல்லாவிட்டாலோ, நீர் அவரைப் பற்றி அவதூறு சொன்னவராவீர்” என்று கூறினார்கள். -புகாரி

    பதிலளிநீக்கு
  32. நல்ல பதிவு வழக்கம்போல் ஆழமாகயோசிக்க வைத்தது. சாக்கிட்டீசை இணைத்தவிதமும் கருத்தும் இன்னும் அருமை.

    பதிலளிநீக்கு
  33. எப்போதும் பாடல்களோடு ஆரம்பித்து வள்ளுவரை சாட்சிக்கு வைத்து ஒரு தத்துவக் கதையோடு நிறைவு செய்யும் தங்கள் பதிவுகள் எல்லாம் மிக்க பயனுடையவை வலைச்சித்தரே அருமை அருமை
    தொடர வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  34. அருமையான பதிவு அண்ணா ..
    நல்ல வழி இது ...
    தம +

    பதிலளிநீக்கு
  35. திரைப்படப் பாடலில் ஜனரஞ்சகமாகத் தொடங்கி, நல்ல செய்திகளை வாசிப்பவர் அறியாமலே படிக்கவைத்து, திருக்குறளில் முடித்துவிடும் உங்களின் அனாயாச நடைதான் பலம்! பள்ளிக்கூட வாத்தியாராக வந்திருந்தால் பல்லாயிரம் மாணவர்கள் திருக்குறளை விரும்பிப் படித்திருப்பார்கள் வலைச்சித்தரே! வாழ்த்துகள். த.ம.கூ1

    பதிலளிநீக்கு
  36. குறள்,கதை அருமை அருமை அருமை சகோ. உங்கள் பதிவு எப்போது நல்ல மணத்தைப் பரப்பும். நுகர்பவர்களுக்கு ஆனந்தத்தை அளிக்கும் நன்றி சகோ. தம +1

    இன்டர்நெட் பிராபளம் அதனால் கால தாமதம் மன்னிக்கவும்.

    தம +1

    பதிலளிநீக்கு
  37. வணக்கம் சகோதரரே.

    எப்போதும் போல் இந்தப் பதிவும் சிறப்புத்தான்.பாடல்கள், குறள், கதை என்று சொல்வது பிறர் மனதில் புரியும் வண்ணம் தங்களால்தான் ஒரு பதிவை சிறக்க வைக்க முடியும். பாராட்டுக்களுடன் ௬டிய வாழ்த்துக்கள்.

    கிரேக்க ஞானியின் சொல்படி நாமனைவரும் பொல்லாதவைகளை புறக்கணித்தால் வாழ்வு சிறக்கும். உண்மையை உணர்த்தும் கதை அருமை.

    என் கடமையின் நிமித்தம் நான் காணாமல் போனாலும், மனம் தங்கள் பதிவுகளை தவற விட்டமையை நினைத்தபடி வலையுலகை சுற்றி வருகிறது. விடுபட்ட அனைத்தையும் வாசித்து வருகிறேன். என் தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  38. எனது முதல் வருகை. மிக எளிமையாக எழுதியிருக்கிறீர்கள். தேனும் பாலும் கலந்து ருசித்த ருசியை ஏற்படுத்திவிட்டது தங்களின் பதிவு. அமிர்தம்.. அருமை.....!

    என்னுடைய வலைப்பூவில் இன்று: நோய் தீர்க்கும் மூலிகைகள் மற்றும் மருத்துவ குறிப்புகள்

    பதிலளிநீக்கு
  39. அருமை
    பின் பற்றப் பெருமை.

    பதிலளிநீக்கு
  40. பொல்லாங்கு பேசுவோரை புறக்கணித்தால் சிறக்கும் வாழ்வு-நற்சிந்தனை வழங்கிய தனபாலன் சாருக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  41. அருமையான சிந்திக்கத் தூண்டும் கருத்துக்கள்
    மற்றவரை நிந்தனை செய்யாது
    நல்ல வழியில் செல்வோம்

    பதிலளிநீக்கு
  42. மிகப் பழைய பதிவு!! இப்போது ஜி+ இல் வந்திருக்கு, பார்த்தேன். அருமையான பதிவு. எக்காலத்துக்கும் பொருந்தும். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  43. அருமை டிடி! சாக்ரடிஸ் கதையுடன் சொல்லியவிதம் அருமை...

    பதிலளிநீக்கு
  44. நாங்கள் நடையைக் கட்ட வேண்டி வராது இல்லையா டிடி ஹஹஹ

    பதிலளிநீக்கு
  45. சாக்ரடீசும் திருவள்ளுவரும் இணைந்து அழகா சொல்லிட்டாங்களே..
    பின்ன? இணைத்தது தனபாலன் அண்ணாவாச்சே

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.