அடுத்து என்ன...?


அடுத்த வீட்டில் தீப்பிடிக்க நினைப்பவன் மனிதனா...? அந்த நேரம் ஓடிவந்து அணைப்பவன் மனிதனா...? கொடுமை கண்டும் கண்ணை மூடி கிடப்பவன் மனிதனா...? கோபம் கொண்டு நியாயம் கேட்டு கொதிப்பவன் மனிதனா...? மனிதன் மனிதன்... எவன் தான் மனிதன்...? வாழும் போதும் செத்து செத்து பிழைப்பவன் மனிதனா...? வாழ்ந்த பின்னும் பேரை நாட்டி நிலைப்பவன் மனிதனா...? பிறருக்காகக் கண்ணீரும்... பிறருக்காகச் செந்நீரும்... சிந்தும் மனிதன் எவனோ - அவனே மனிதன் மனிதன் மனிதன்.... (படம் : மனிதன்)

மனச்சாட்சி... எந்தச் சூழ்நிலையிலும் எவன் ஒருவன் தன் மனத்தை இதமாக வைத்துக் கொள்கிறானோ அவன் தாண்டா மனிதன் ! பிறகு தான் மற்றவை...


வந்தது தெரியும், போவது எங்கே...? வாசல் நமக்கே தெரியாது... வந்தவர் எல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது...? வாழ்க்கை என்பது வியாபாரம், வரும் ஜனனம் என்பது வரவாகும், அதில் மரணம் என்பது செலவாகும்.... போனால் போகட்டும் போடா... இந்தப் பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா...? போனால் போகட்டும் போடா...! (படம்: பாலும் பழமும்)

அடேய், இந்த "நமக்கே" தான்டா சுயநலம்...! தன் அறிவை மட்டுமல்ல... தன்னையே உலகிற்காகச் செலவழித்தால் நிலையாய் வாழலாம்...!

இன்பமும் காதலும் இயற்கையின் நீதி, ஏற்றத் தாழ்வுகள் மனிதனின் சாதி, பாரில் இயற்கை படைத்ததை எல்லாம்... பாவி மனிதன் பிரித்து வைத்தானே... மனிதன் மாறிவிட்டான் ஓ..ஓ..ஓஒஒ...ம்..ம்..ம்..ம்.. ஓஹொஹோய்... வந்தா நாள் முதல், இந்த நாள் வரை... வானம் மாறவில்லை... வான் மதியும் மீனும் கடல் காற்றும்... மலரும் மண்ணும் கொடியும் சோலையும்... நதியும் மாறவில்லை... மனிதன் மாறிவிட்டான்... மதத்தில் ஏறிவிட்டான்... ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஹோய்ய்ய் (படம் : பாவ மன்னிப்பு)

சாதிப்பவனுக்குத் தெரியாது சாதி... தாமதமாக உணர்ந்தவர்கள் சம்மதம் என்பார்கள்... இந்த உலகில் சூரியன் மாறவில்லை... நிலவு மாறவில்லை... காற்றும், மழையும் மாறவில்லை... இப்படி இயற்கை நிகழ்வுகள் எல்லாம் மாறாமல் இருக்கும் போது, மனிதன் ஏன் மாறினான் என்கிறாயா...? என்ன தாண்டா சொல்ல வர்றே...? பாடல் வரிகள் ஆராய்ச்சியா...?

நேற்று போல் இன்று இல்லை... இன்று போல் நாளை இல்லை (2) அன்பிலே வாழும் நெஞ்சில் ஆஆஆஆஆ.... அன்பிலே வாழும் நெஞ்சில்... ஆயிரம் பாடலே... ஒன்றுதான் எண்ணம் என்றால்... உறவு தான் ராகமே... எண்ணம் யாவும் சொல்லவா...? (படம் : தம்பிக்கு எந்த ஊரு)

யாவும் வேண்டாம்... எண்ணத்தைக் கொஞ்சமாச் சொல்லு...! பாடாதே...!

இந்த உலகத்திலே யாரையும் யாராலேயும் மாற்ற முடியாது... தானாக மாறினால் தான் உண்டு... என்னை மாற்றவும் யாராலும் முடியாது... அவ்வளவு ஏன்...? என்னை மாற்ற என்னாலேயே முடியாது...!

கண்டிப்பாக...! அது தான் எல்லோருக்கும் தெரியுமே...! பாடல்களும் நீயும்...!

என்ன இப்படி சொல்லிட்டே...! பாடின நாலு பாடலும் இனி வரும் பத்தியிலே வந்திருக்கணுமோன்னு வாசிக்கிறவங்க நினைப்பாங்க பாரு...! நீ என்னடான்னா பதிவின் கடைசியிலே சொல்றதுக்கு ஏத்தமாதிரி பதில் சொல்றே... சரி விசயத்திற்கு வர்றேன்... இந்த உலகத்திலே "மாறுதல் ஒன்றே மாறாதது"ன்னு தத்துவம் சொல்றாங்க... அப்படியானால், உலகம் மாறிக் கொண்டே இருக்குமென்றால்... நாமும் மாறிக் கொண்டே இருக்க வேண்டும் என்றால்... நமக்கென்று சொந்த அடையாளங்களை எப்படி தக்க வைப்பது...?

அரிய சிந்தனை...! அரிய கேள்வி...! ஹா... ஹா... குறட்+பா நமது பதிவுலக அடையாளம்...! நேற்று இருந்தது போல் இன்று இல்லை... இன்று இருப்பது போல் நாளை இருக்காது... கற்கால மனிதர்கள் போல் நாம் இல்லை... நம்மைப் போல அடுத்த நூற்றாண்டு மனிதர்கள் இருக்கப் போவதுமில்லை... அப்படியானால் கால ஓட்டத்தில் நாமும் மாறிக் கொண்டே இருக்கவேண்டியது தானே...? இல்லையென்றால் காணாப் போயிடுவோம்...!

இந்த உலகத்தில் சில நிலைத்த நிகழ்வுகள் தொடர்ந்து மாறாமல் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கு... கோள்களின் நிகழ்ச்சி, இரவு பகல் மாற்றம் என்று சில நிகழ்வுகள், ஒர் ஒழுங்குக்குள் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கு... அப்படி இருக்கும் போது மனிதன் மட்டும் ஏன் மாற வேண்டும்...?

ஒழுங்குக்குள்... இப்ப தான் விசயத்திற்கு வர்றே... சூரியன், நிலவு, காற்று, மழை போன்றவை, தனது தன்மைகளிடமிருந்து மாறாமல் இருப்பதை போல, மனிதனும் தன் மனிதப் பண்புகளிடமிருந்து மாறாமல் இருக்கணும்... அதே நேரத்தில் வாழ்வியலில் நேரும் சில சங்கடங்களுக்கும், எதிர்ப்பாராத சில இடையூறுகளுக்கேற்ப மனதை பக்குவப்படுத்துவதற்காக... சில மாற்றங்களை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்... ஒரு நிகழ்வை கேள்...

தாமஸ் ஆல்வா எடிசன் - அறிவியல் உலகில் நூற்றுக்கணக்கான கண்டுபிடிப்புகளை உருவாக்கியவர்... தனது வாழ்நாள் முழுவதையும் ஆராய்ச்சி கூடத்திலேயே செலவழித்தவர்... ஓர் நாள் அவர் ஆராய்ச்சிக் கூடத்தில் தீ பிடித்தது... ஆராய்ச்சிக் கூடமே தீப்பற்றி எரியத் தொடங்கியது... கேள்விப்பட்டு வந்து பார்த்த அவரின் மகன் சார்லஸ், அப்பாவை தேடினான்... தாமஸ் ஆல்வா எடிசன் ஆராய்ச்சி கூடத்தின் வெளியே ஒரு ஓரமாக நின்று எரிந்து கொண்டே ஜூவாலையை ரசித்துக் கொண்டிருந்தார்... "அப்பா... அப்பா... ஆராய்ச்சிக் கூடம் எரிகிறது...! நீங்கள் பல ஆண்டுகளாகச் செய்த ஆராய்ச்சியெல்லாம் சாம்பலாகிக் கொண்டிருக்கிறது..." என்று சொன்னான் மகன்... எடிசன் பதட்டப்படாமல் மகனிடம் சொன்னார், "இது போல் ஒரு காட்சியை இனிமேல் காண்பது கடினம்...! போ... உன் அம்மாவை அழைத்து வா...! குடும்பத்தோடு கண்டு ரசிப்போம்...!" "என்னப்பா, உங்களின் எல்லா கண்டுபிடிப்புகளும் எரிந்து கொண்டிருக்கிறதே என்று நான் வருத்தத்தோடு சொன்னால், நீங்கள் ரசித்துக் கொண்டு இருக்கிறீர்கள்...? என்றான் சார்லஸ்... "மகனே எரிந்து கொண்டிருப்பவை என்னோட தவறுகள்... இதுவரை நான் ஆய்வு செய்த தவறுகள் எரிந்து கொண்டிருக்கின்றன; வா, இனி புதிதாகத் தொடங்குவோம் !" என்றார் Thomas alva Edi(t)son...?!!!

எத்தனை அழிவுகள் வந்தாலும், எத்தனை தோல்விகள் வந்தாலும், உடனே மனதை மாற்றிக் கொண்டு, "அடுத்து என்ன...?" என மீண்டும் மீண்டும் எழுவதே வாழ்க்கை; அடுத்து என்ன மனச்சாட்சி...?

அடையாளத்தில் ஒன்று குறைகிறதே... சொல்கிறேன்... தாமஸ் ஆல்வா எடிசன் அவர்களின் நிகழ்வில், நிலை இல்லாத பொருள்களை நிலையானவை என்று எண்ணுவது அற்ப அறிவு என்று நிலையாமை அதிகாரத்தில் முதல் குறள் ஞாபகம் வருகிற அதே நேரத்தில்... போனால் போகட்டும் போடா... இந்த உலகம் இவ்வளவு தான்னு அதன் பெருமையைப் பற்றி நம்ம அய்யன் ஒரு குறளில் அற்புதமாகச் சொல்லியுள்ளார்... அதை அறிய → இங்கே ← சொடுக்கி வாசிப்பதற்கு முன்... இப்பதிவைப் பற்றிய தங்களின் கருத்து என்ன நண்பர்களே...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

 1. எண்ணம் யாவும் சொல்லவா? எண்ணம் யாவும் சொல்ல வா!

  இரண்டு அர்த்தம் உண்டு!

  மாற்றம் தன்னில் நிகழ்ந்தாலொழிய மாற முடியாது. திருடனாய்ப் பார்த்துத் திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல! எடி(ட்)சன் - ஆஹா...

  பதிலளிநீக்கு
 2. ரொம்பச்சரி. என்னை என்னாலயே மாத்திக்க முடியலை என்பதே உண்மை. வாழும்வரை மனுஷியாக, கொஞ்சூண்டு நல்ல மனுஷியாக வாழ முடிஞ்சால் அதுவே போதும் என்ற நிலைதான்.

  பதிலளிநீக்கு
 3. ஆமாம் டிடி! எத்தனை தோல்விகள் வந்தாலும் அடுத்து என்ன என்று நம்மை நாமே முடுக்கிக் கொண்டு நம் இலட்சியத்தை நோக்கிச் செல்ல வேண்டும்...அதுவே ஓர் அடையாளம் ஆகிவிடுமே?!!!

  ஆம் நாமேதான் உணர்ந்து திருந்த வேண்டும். என்னதான் பிறர் அறிவுரைகள் சொன்னாலும், நமக்கே அனுபவங்கள் ஏற்பட்டாலும், அதை நாமே உணர்ந்தால் தான் திருந்தவோ, மாறவோ முடியும்.

  அருமையான பதிவு! வழக்கம் போல்!!! இதுவே உங்கள் அடையாளம் !!! டிடி....

  பதிலளிநீக்கு
 4. தாமஸ் எடிசனின் புகைப்படத்துடன் கூடிய மேற்கோளை எனது ஆய்வுடன் பொருத்திப் பார்த்தேன். எனது களப்பணி ஆய்வின்போது நான் கண்டுபிடித்ததைவிட கண்டுபிடிக்காததுதான் அதிகம். இனிவரும் ஆய்வாளர்களுக்கு இத் தடம் உதவும், அவர்கள் மாற்றுப்பாதையைத் தேட இது உதவியாக இருக்கும் என்பதை நான் தெரிந்துகொண்டேன். எந்த ஒரு உழைப்பும் வீணாவதில்லை.

  பதிலளிநீக்கு
 5. மனித நேயம் கொண்டு மனிதனாக வாழும் மாற்றமே நல்லது

  பதிலளிநீக்கு
 6. எத்தனை அழிவுகள் வந்தாலும் எத்தனை தோல்விகள் வந்தாலும் உடனே மனதை மாற்றிக்கொண்டு அடுத்தது என்ன? என்பதுதான் வாழ்க்கை பாடல்களோடும் வரலாற்று சம்பவத்துடனும் புரிய வைத்திருக்கிறீர்கள்.
  த ம 6

  பதிலளிநீக்கு
 7. நீங்கள் பகிர்ந்த பாடல்களே போதும் அண்ணா . அதை ஒருமுறைக்கேட்டால் எல்லோரும் யோசிப்பார்கள் .

  பதிலளிநீக்கு
 8. எங்கள் கருத்து உங்கள் ஆக்கத்தால் உயர்வடைகின்றது

  பதிலளிநீக்கு
 9. எத்தனையோ தோல்விகள்!..
  அதன் பிறகு அடுத்து என்ன என்ற கேள்வியுடன் தான் எழுந்ததால் தான் - இன்று இயங்கிக் கொண்டிருக்கின்றேன்..

  இதெல்லாம் என் தந்தையிடம் கற்றது..

  அப்போது - இதைப் போன்ற முன் நடத்திச் செல்லும் கட்டுரைகள் எதையும் வாசித்ததில்லை..

  Dr. B. ஜம்புலிங்கம் அவர்கள் சொன்னதைப் போல -
  எந்த உழைப்பும் வீணாவதில்லை!..

  சீரிய பதிவில் - சிந்தைக்கு விருந்து!..
  வாழ்க நலம்!..

  பதிலளிநீக்கு
 10. கொஞ்சம் தலை சுற்றுகிறது. அவகாசம் கொடுங்கள். தலைச்சுற்றல் சரியானவுடன் கருத்து சொல்கிறேன்.

  பதிலளிநீக்கு
 11. பக்குவப்படுவதற்காக சில மாற்றங்களை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். மிகச்சரியாக சொன்னீர்கள்.

  பதிலளிநீக்கு
 12. எப்படி தனபால் இவ்வளவு பாடல்கள்!!!!! நினைத்தாலே வியப்பாக,உள்ளது!

  பதிலளிநீக்கு
 13. இழப்பிலும் பெரும்லாபத்தைப் பெறுபவர்கள் எதுவும் நிலைப்பதில்லை எனும் மனமுடையோர். உண்மைதான்.

  சிறப்பான செய்தியை மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.

  God Bless YOu

  பதிலளிநீக்கு
 14. தன் கண்முன்னே அனைத்தையும் இழந்து ரசிப்பதென்பது இயலாது. நாம் ரசித்து சிரித்துக்கொண்டுதான் இருக்கிறோம். மக்கள் மகேசன்கள்.மாறுவதென்பதேது

  பதிலளிநீக்கு
 15. அஹா அட்டகாசம். மிகுந்த தன்னம்பிக்கைப் பதிவு. ஆம் முன்பு செய்தவைகளை விட்டு விட்டு புதிதாக முயற்சி செய்யணும் படைப்புகளிலும் என்று தோன்ற வைத்த இடுகை. பாராட்டுகள் தனபாலன் சகோ. :)

  பதிலளிநீக்கு
 16. விழுகிறோம்.
  எழுகிறோம்.
  அடுத்தது என்ன !
  சிறிது ஆராய்வு தொடர்கிறோம்.
  இதைப் பல மேற்கோளுடன் கூறப்பட்டது அருமை....டிடி

  பதிலளிநீக்கு
 17. வணக்கம்
  அண்ணா.
  பாடலுடன் கூடிய விளக்கம்... மனித வாழ்க்கை தத்துவத்தை தெளிவாக சொல்லியுள்ளீர் தாமஸ் ஆல்வா எடிசன் அவர்களின் ஆய்வுக்கூடம் எரிகிறது அதைபார்த்து சிரிக்கிறபோது சொல்லிய கருத்து அற்புதம்... த.ம 12.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 18. விடுப்பு பார்க்க நேரம் வீணாக்காது
  "அடுத்தது என்ன..?" என்று
  எண்ணிப் பார்த்து முன்னேற
  கண்ணில் பட்டு மூளைக்கு ஏறும்படி
  எல்லோரும் படிக்க ஏற்ற
  நல்வழிகாட்டலை வரவேற்கிறேன்!

  பதிலளிநீக்கு
 19. வணக்கம் சகோதரரே.!

  பாடல்கள் ஒவ்வொன்றும் தங்கள் பதிவுகளுக்காவே எழுதப் பட்டது போல் எவ்வளவு ஒற்றுமையுடன் ஒத்துப் போகிறது. நீங்கள் அதை தேர்ந்தெடுக்கும் விதமும் அருமை... தோல்விகளை கண்டு துவண்டு விடாமலிருக்க, தாமஸ் ஆல்வா எடிஸனின் தன்னம்பிக்கை கதை, இன்றைய நாளை ரசித்த துணிவு, அனைவரின் மனதிலும் கண்டிப்பாக வெற்றி ஏணிகளை கொண்டு வந்து நிறுத்தும். ..
  எதுவுமே வாழ்வில் நிலையானவையில்லை என உணர வைக்கும் பதிவு... சிறந்த கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி. சகோதரரே..

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 20. மாற்றம் ஒன்றே மாறாதது ..!

  எடிசன் தத்துவங்களோடு இனிய தத்துவ பாடல்களும் தந்து அசத்திட்டீங்க டிடி சார் அருமை !

  எங்கே நாங்கள் போகின்றோம்
  எதனால் இங்கே வாழ்கின்றோம்
  தங்கும் இடமும் வாடகைதான்
  தந்தான் இறைவன் சோதனைதான்
  தங்கத் தட்டில் உண்டாலும்
  தரையில் கொட்டி உண்டாலும்
  மங்கும் காலம் வந்திட்டால்
  மரணம் யார்க்கும் சமனாகும் !

  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 21. முதல் பாடல் அருமையான வரிகள் எனக்கு மிகவும் பிடித்த மலேசியா வாசுதேவன் பாடிய பாடல்.

  உண்மையே மனதை கட்டுப்படுத்துவனே மனிதனாக இருக்கமுடியும் இது தவறும்போதுதான் அவன் மிருகமாகி பலதவறுகள் செய்ய நேரிடுகிறது.

  தன்னையே உலகுக்கு நத்து வாழ்ந்தவர்கள் இறந்தும் வாழ்கிறார்கள் தாமஸ் ஆல்வா எடிசனைப்போல், மஹாத்மாவைப்போல்..

  உண்மை சாதிப்பவனுக்கு சாதி தெரிவதில்லை அருமை,
  திருடனாய்ப்பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது 80தைப்போல் அவன் அவனையறிந்து மாற்றவேண்டும் மற்றவர் சொல் எடுபடாது.

  தாமஸ் ஆல்வா எடிசனைப்பற்றிய அரியாத தகவல் அறியத்தந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 22. /மனதை பக்குவப் படுத்துவதற்காக சில மாற்றங்களை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்..// ஆம். மிக அருமையான கருத்துக்கள் சிறப்பான பகிர்வு.

  பதிலளிநீக்கு
 23. அருமையான விளக்கம் மனம் ஒரு குரங்கு ஆனால் மாற்றம் நல்லதாக இருந்தால் சிறப்பே! எடிசன் பற்றி புதிய குறிப்பு அறிந்தேன்.

  பதிலளிநீக்கு
 24. உங்கள் பதிவுகளில் மனசாட்சி கேள்வி கேட்பதாக பல இடங்களில்வருகிறது. இந்த மனசாட்சி என்பது என்ன என்று ஒரு பதிவு போடுங்கள். இல்லாவிட்டால் நான் எழுதி விடுவேன். கபர்தார்...!

  பதிலளிநீக்கு
 25. அடுத்த வீட்டில் தீ பிடிக்க வேண்டும் என்று இன்றைய மனிதன் நிணைக்கிறான் ஜி

  பதிலளிநீக்கு
 26. டிடி யின் அசத்தல் ஸ்டைலில் பதிவு ஒளிர்கிறது.எடிசனின் பல்பைப் போல .

  பதிலளிநீக்கு
 27. தாமஸ் ஆல்வா எடிசன் ,மீண்டும் தொடங்குவோம் என்று சொன்னதை கேட்ட அவர் மகன் .வடிவேலு மாதிரி மறுபடியுமாஆஆஆஆஆ என்று வாயைப் பிளந்திருப்பாரே :)

  பதிலளிநீக்கு
 28. தாமஸ் ஆல்வா எடிசன் வித்தியாசமான மனிதர்தான். அவரைப் பற்றிய தகவல்களுடன் எத்தனை பாடல் வரிகள்? அத்தனையும் சிந்தனை முத்துக்கள்.
  த.ம.17

  பதிலளிநீக்கு
 29. அன்புள்ள அய்யா,

  அடுத்து என்ன? தாமஸ் ஆல்வா எடிசனின் ஆய்வுக்கூடம் தீப்பற்றி எரியும் போதுகூட பதட்டப்படாமல்... இதுபோல் காட்சியைப் பார்க்க உன் அம்மாவை அழைத்துவாவென் தன் மகனிடம் கூறினாரே...! ‘வலிகளை ஏற்றுக்கொள், இதுவும் கடந்து போகும்.’ என்ற தங்களின் வலைத்தள விருதுவாக்கே என் நினைவிற்கு வந்தது.

  அவன் தான் மனிதன் என்றும்....

  மனிதன் காலில்பட்ட பூமி மட்டும் பிரிந்து கிடக்கிது...

  மனிதன் மாறிவிட்டான்....

  மனிதன் இறக்கின்ற செய்தி இருக்கின்றதென்பது மெய்தானே....! இதுதான் மாறாதது என்று சொல்லி இருக்கிறீர்கள்.

  நிலையில்லா உலகில் எதுவும் நிலையில்லை...!

  அருமை.
  -நன்றி.
  த.ம. 18.

  பதிலளிநீக்கு
 30. தோல்விகளை கண்டு துவளாமல் மாற்றங்களோடு நம்மை மாற்றிக் கொண்டு உலகை வெல்ல வேண்டும் என்று அருமையாக உதாரணப் பாடல்களோடு விளக்கிச் சொன்ன பதிவு! அருமை! எடிசனின் தன்னம்பிக்கை அசாத்தியமானது! சிறப்பான உதாரண புருஷன்!

  பதிலளிநீக்கு
 31. திரைப்படப்பாடல்களும் திருக்குறளும் எடிசனின் வெளிச்சத்தில்... அருமையான காம்பினேஷன்!!

  தொடருங்கள் டிடி சார்!

  பதிலளிநீக்கு
 32. தன்னம்பிக்கையூட்டும் ஒரு பதிவு.
  தோல்வி தானே வெற்றிக்கான படிக்கட்டு.
  அருமை.

  பதிலளிநீக்கு
 33. மனசாட்சிகளை தொலைத்தவர்கள் நிறைந்த நாடு இது..ஜீ

  பதிலளிநீக்கு
 34. கருத்தும் கானமும் அருமை, குறள் தந்த பாடமும் அருமை.
  ”மரம் சாய்ந்து போனால் விலையாகலாம், மலர் சாய்ந்து போனால் சரமாகலாம், ஆனால் மனம் சாய்ந்து போனால் என்னவாகலாம்?” என்ற பாடல் நினைவுக்கு வருகிறது தனபாலன் , மனம் சாயாமல் இருந்தால் மீண்டும் உயிர்த்தெழலாம் என்பது உங்கள் கட்டுரை மூலம் தெரிகிறது.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 35. அருமையான செய்திகள். அற்புதமான பாடல்கள்.

  ’அடுத்து என்ன ?’ என அறிபூர்வமாக யோசிக்க வைத்துள்ளீர்கள். :)

  பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 36. தாமஸ் ஆல்வா எடிசன் அவர்களைப் பற்றிய தெரியாத தகவலை தந்து நிலையில்லாத பொருட்களை நிலையானது என எண்ணுவது பேதமை என்பதை அழகாக விளக்கியமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 37. அருமையான பாடல்கள், மிக அற்புதமான சிந்தனை.
  எடிசனை மேற்கோள் காட்டிய விதம் சிறப்பு.

  பதிலளிநீக்கு
 38. இறக்கும்வரை புதிது புதிதாய் சிந்திப்போம்........

  பதிலளிநீக்கு
 39. பாடல் வரிகள் மனதிற்குள்ளேயே தங்கிவிட்டது.அருமை.காலத்தால் அழியாத வரிகளை நினைவுபடுத்தியதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 40. சபாஷ் டி.டி சார்! ஆரோக்கியமான எழுத்து உங்களுடையது.

  பதிலளிநீக்கு
 41. வாழ்வில் நேரும் சங்கடங்கள், எதிர்பாராத இடையூறுகளுக்கு ஏற்ப மனதை பக்குவபடுத்தவற்காக சில மாற்றங்களை ஏற்று கொண்டே ஆக வேண்டும்.


  மிக சரியே , அருமை

  பதிலளிநீக்கு
 42. பாடல்களின் தொகுப்பு அருமையாக இருந்தது .
  எடிசனை பற்றிய அரிய தகவல் தந்து சிந்திக்க வைத்து விட்டீர்கள்....

  நன்றி...
  வாழ்க வளமுடன்...

  பதிலளிநீக்கு
 43. தோல்வியிலிருந்தும் பாடங்களைக் கற்றுக்கொண்டவர்.. கற்றுக்கொடுத்தவர் எடிசன். பாடலையும் போட்டு பிரமாதப்படுத்துகிறீர்கள்.

  பதிலளிநீக்கு
 44. பாடல்களின் தொகுப்பு மிக அருமை.எடிசனை பற்றிய புதிய தகவல்களை தெரிந்து கொண்டேன்.எனது பக்கத்திற்கும் வருகை தாருங்கள்.

  பதிலளிநீக்கு
 45. அருமையான தகவல் அது என்ன ஒஒஒொொஒஒஒஒஒஒ ஒயய்யய்ய்ய்

  பதிலளிநீக்கு
 46. அடுத்தது என்ன?--- தங்கள் பதிவு வந்தபிறகுதான் தெரிந்து கொள்ள முடியும்.

  பதிலளிநீக்கு
 47. நேற்றுதான் மாற்றம் குறித்து நானும் யோசித்தேன் அடுத்தவருடைய சுதந்திரத்தையும உரிமையையும் நசுக்காத குலைக்காத எந்த மாற்றமும் மகிழ்ச்சியே மனிதன் பாடல் வாழ்வியல்

  பதிலளிநீக்கு
 48. திருடனாய்ப் பார்த்துத் திருந்திவிட்டாலும் திருட்டை ஒழிக்க முடியாது என்பது நிதர்சன உண்மை.

  பதிலளிநீக்கு
 49. சில மாத இடைவெளிக்குப் பிறகு தங்கள் தளத்திற்கு வருகிறேன்.வசந்தப் பூக்கள் அல்லவா என்னை வரவேற்கின்றன!இளம் உள்ளங்களுக்கு எழுச்சியை ஊட்டிடும் வலியதோர் எழுத்து உங்களது. வாழ்த்துக்கள் !-இராய செல்லப்பா

  பதிலளிநீக்கு
 50. அடுத்த பாடல்களை படிக்க.... தயாராக இருக்கிறேன் ஜீ

  பதிலளிநீக்கு
 51. வலைசித்தர் அவர்களே...

  வழக்கம் போலவே அருமையான பதிவு !

  ஆமாம் ! அடுத்து என்ன என எழுந்து ஓடிக்கொண்டிருக்கும்வரைதான் வாழ்க்கை ! அதே போல மனிதம் மட்டுமே மன அமைதிக்கான வழி !

  நன்றி
  சாமானியன்

  பதிலளிநீக்கு
 52. \\எத்தனை அழிவுகள் வந்தாலும் எத்தனை தோல்விகள் வந்தாலும் உடனே மனதை மாற்றிக்கொண்டு 'அடுத்து என்ன?' என்று மீண்டும் மீண்டும் எழுவதே வாழ்க்கை.\\ இந்த பக்குவம் இல்லாததால்தானே வாழ்க்கை சிக்கலாகிப்போகிறது பலருக்கும். மிக அருமையான பதிவு. பாராட்டுகள் தனபாலன்.

  பதிலளிநீக்கு
 53. அடுத்து என்ன என எழுந்து ஓடிக்கொண்டிருக்கும்வரைதான் வாழ்க்கை ! உண்மையும் கூட....

  பதிலளிநீக்கு
 54. என்னுடைய பதிவு பீச்சாங்கை DETELE ஆகிவிட்டது. மீள் வரவுக்கு என்ன செய்ய?

  பதிலளிநீக்கு
 55. தோல்வியால் துவலாமல் எழுத்து அடுத்து செய்வது என்பது சற்று சிரமமான காரியம். ஆனால் அவர் சாதனை புரிந்து இருக்கிறார். பொருத்தமான பாடல்களுடன் விளக்கம் நன்றாக இருக்கிறது சகோ
  த ம +1

  பதிலளிநீக்கு
 56. அழகான பாடல்கள் இடம்பார்த்து அமர்ந்திருக்கின்றன.

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.