சூழ்ச்சியில் மாட்டிக்கிட்டேன்...!


நான் வளர்த்த பூங்குருவி வேறிடம் தேடி செல்ல நினைத்தவுடன் அமைந்ததம்மா அதற்கொரு ஜோடி... நிழற்படமாய் ஓடுது என் நினைவுகள் கோடி... அந்த நினைவுகளால் வாழுகிறேன் காவியம் பாடி...! (படம் : மோகனப் புன்னகை) போன வாரம் நண்பரோட மகளின் கல்யாணத்திற்குப் போயிருந்தப்போ, நண்பர் இந்தப் பாடல் பாடுவதாக மனசிலே தோணிச்சி...!


அன்பை உரைத்திட வாயில்லாத அழகுச் சிலை இவள்... கொண்ட பசியையும் கூறிடாத குழந்தை போன்றவள்... உன் வசத்தில் இந்த ஊமைக்குயில்... இவள் இன்பதுன்பம் என்றும் உந்தன் கையில்... காவல் நின்று காத்திடுக கண் போலவே... பொன் போலவே... (படம் : நீதிபதி) எதிர்ப்பாட்டு நான் பாடலே... வாசிக்கிற + பெண்ணை பெற்ற பெற்றோர்கள் எல்லோரும் பாடியிருப்பாங்க...!

மூங்கில் விட்டு சென்ற பின்னே, அந்தப் பாட்டோடு மூங்கிலுக்கு உறவு என்ன...? பெற்ற மகள் பிரிகின்றாள் - அந்தப் பெண்ணோடு தந்தைக்குள்ள உரிமை என்ன...? காற்றைப் போல் வெயில் ஒன்று கடந்து போன பின் - கை காட்டி மரம் கொள்ளும் தனிமை என்ன...? மாயம் போல் கலைகின்ற மனித வாழ்க்கையில் - சொந்தங்கள் சொல்லி செல்லும் செய்தி என்ன...? பாசத்தின் ஊடாக ஞானம் கொள்ளப் படைத்தவன் புரிகின்ற சூழ்ச்சி என்ன...? (படம் : அபியும் நானும்) என்ன...? என்ன...? என்ன...? என்னென்ன...?

சுற்றி வளைத்து நீ எங்கே வருகிறாய் என்று எமக்குப் புரிகிறது...! நீ சொல்ற சூழ்ச்சி-ஆண்டவனுக்கே பெண் கொடுத்தாலும் பெண்ணைப் பெற்றவர்களுக்குப் புலம்பல்தான் மிச்சம்... அகனானூற்றில் கூட ஒரு பாடல் : தொடிமாண் சுற்றமும் எம்மும் உள்ளாள்... நெடு மொழித் தந்தை அருங் கடி நீவி...

என் அக ஒன்றுக்கு முதல்லே விளக்கம் சொல்லு... முடிவிலே வேற கேள்விகள் கேட்கிறேன்... இப்போ ஒரே ஒரு சந்தேகம்...! முள்ளை முள்ளாலே எடுக்கணும்ன்னு சொல்றாங்களே, ஏன் ஊக்காலே எடுத்தா வராதா...? இல்லே ஊசியாலே எடுத்தாத்தான் வராதா...?

வில்லங்க கேள்விகளை ஆரம்பித்து விட்டாயா ? ம்... ஊசியும் ஊக்கும் வாராத காலத்தில் வந்த பழமொழி இது...! அதனால் முள்ளை முள்ளாலே எடுக்கணும்ன்னு சொல்லியிருக்காங்க... ஊசியும் ஊக்கும் இல்லேன்னா கத்தியால் எடுத்தாக் கூட வரும்... பாவம் முள், அதுக்குக் குத்த தான் தெரியும்... வெளியே வரத் தெரியாது... விடு... பொழச்சி போகட்டும்...

இதை இப்படி விட்றதுக்காகவா கேள்விய கேட்கிறோம்... இந்தப் பழமொழி முள்ளை எடுக்குறதுக்காக வந்த பழமொழியா...? இல்லே வேற ஏதாவது அர்த்தத்தை உள்ளடக்கிய பழமொழியா...? சொல்லுப்பா...

பழமொழிகள் எப்பவுமே எளிமையாத் தான் இருக்கும்... நேரடி அர்த்தம் லேசிலே புரிஞ்சிடும்... ஆனா உள்ளிருக்கிற அர்த்தத்தைப் புரிஞ்சிக்கிறதிலே தான் தத்துவம் அடங்கியிருக்கும்...! முள்ளை முள்ளாலே எடுக்கணும் அப்படின்னா, வாழ்க்கையிலே முள் மாதிரி குத்திட்டேயிருக்கிற சூது, வாது, வஞ்சனைகள் - இவைகளை அதுகளாலே எடுக்கணும் அப்படின்னு அர்த்தம்...!

இது எப்படிப்பா சரியா இருக்கும்...? ஒருத்தர் நமக்கு சூழ்ச்சி செய்து தீமைகள் பண்றார்ன்னா, அதெப்படி சூழ்ச்சியாலே வீழ்த்துறது...?

ஆமா, சூது வாது தெரியாத வாத்தா நீ...? இதுவரைக்கும் எந்தச் சூழ்ச்சிக்கும் நீ மாட்டவில்லையா...? அடேய் இது தந்திர பூமி... யாரையும் தந்திரத்தாலும் சூழ்ச்சியாலும் வீழ்த்த தெரிந்தவர்களே மேலே வர முடியும்ன்னு காலப் போக்கு திகழ்ந்து கொண்டிருக்கு...! ம்... காலக் கொடுமை...!

ஒரே வாரத்தில் சூழ்ச்சி நிபுணர் ஆக, தொலைக்காட்சி மெகா தொடர்களை எல்லாம் பார்க்கிறதே இல்லையாக்கும்...! தெரிஞ்சிக்கோ...!

நல்லது... நாமாக சென்று யாரையாவது சூழ்ச்சி செய்து வீழ்த்தினால் தான் தவறு... ஆனால் நமக்கு சூழ்ச்சியால் தீமை செய்பவர்களை வெல்வதற்கு, சூழ்ச்சி ஆயுதம் கையாள்வது தவறில்லை என்கிறது பழமொழி, கதை இதோ

ஒரு ஊரில் இருந்த இரும்பு வணிகன் சில காலம் வெளியூர் செல்ல வேண்டியிருந்தது... அந்த ஊரிலிருந்த பணக்கார வணிகனிடம் சென்று, தன்னிடமிருந்த இரும்பையெல்லாம் தந்து, தான் சில நாட்கள் வெளியூர் செல்வதாகவும், திரும்பி வரும்வரை பத்திரமாகப் பார்த்து கொள்ளும்படியும் கேட்டுக் கொண்டான்... உறுதி அளித்தான் பணக்கார வணிகன்... சில நாட்கள் கழிந்து ஏழை வணிகள் திரும்பி வந்தான்... தான் தந்த இரும்பை திரும்பி தரும்படி கேட்டான்... "நீ தந்த இரும்பினை எலிகள் தின்று விட்டன..." என்று பொய் சொல்லி ஏமாற்றினான்... வருத்தத்தோடு திரும்பிக் கொண்டிருந்த ஏழை வணிகன், பணக்கார வணிகனின் மகன் விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்தான்... அவனைத் தூக்கிக் கொண்டு போய் வீட்டில் மறைத்து வைத்துக் கொண்டான்... ஏழை வணிகனிடம் தன் மகன் காணாமல் போனதை வருத்தத்தோடு சொன்னான் பணக்கார வணிகன்... "நேற்று மாலை உன் மகனை ஒரு பருத்து தூக்கி சென்றதை நான் என் கண்ணால் பார்த்தேன்" என்றார் ஏழை வணிகன்... "இது எப்படி சாத்தியமாகும்...? ஒரு சிறிய பருந்தால் எப்படி என் மகனை தூக்கிச் செல்ல முடியும்...?" அதற்கு ஏழை வணிகன் "இரும்பை எலிகளால் தின்ன முடிகிற போது, சிறுவனைப் பருந்தால் தூக்கிச் செல்ல முடியாதா...?" என்று சாதுர்யமாகப் பதில் சொன்னான்... தன்னுடைய தவறை உணர்ந்து கொண்ட பணக்கார வணிகன், தான் விற்ற ஏழை வணிகனின் இரும்புக்கு ஈடான இரு மடங்கு பணத்தைத் தந்து, மன்னிப்பு கேட்டு, தன் மகனை மீட்டுக் கொண்டான்...
பொது நீதிக்கும் நேர்மைக்கும் பயந்துவிடு... நல்ல அன்புக்கும் பண்புக்கும் வளைந்து கொடு... இன்றோடு போகட்டும் திருந்தி விடு (2) உந்தன் இதயத்தை நேர் வழி திருப்பிவிடு... ஏமாற்றாதே ஏமாற்றாதே... ஏமாறாதே ஏமாறாதே... (படம் : அடிமைப்பெண்)

சரி தான்... ஏழை வணிகன் பணக்கார வணிகனிடம் ஏமாந்தாலும், தனக்கு நேர்ந்த தீமையை எந்தவித தீங்கும் செய்யாமல் சூழ்ச்சியால் விலக்கினான் என்பதும் சரி தான்... முள்ளை முள்ளால் எடுக்கும் சாதூர்யம் புரிகிறது... மறுபடியும் நண்பர் நினைப்பு... அதாவது (1) தன் துணைவியை இன்னொரு வீட்டிலிருந்து கொண்டு வந்ததை மறந்த ஆண்களும்... (2) தன் மாமனார், மாமியாரை முதியோர் இல்லங்களுக்கு அனுப்பிய அல்லது அச்சமயம் தடுக்காத பெண்களும், (1a) தன் மகள் இன்னொரு வீடு போகும் போது (2a) தன் மகன் தனிக்குடித்தனம் போகும் போது மனம் கலங்குவது ஏனப்பா...? வியப்பு வியப்படையும் இந்த வில்லங்கமில்லாத கேள்விற்கு விடை இருக்கா...? தென்னைய பெத்தா இளநீரு... பிள்ளைய பெத்தா கண்ணீரு (2) பெத்தவன் மனமே பித்தம்மா... பிள்ளை மனமே கல்லம்மா... பானையிலே சோறிருந்தா - பூனைகளும் சொந்தமடா... சோதனையை பங்கு வச்சா - சொந்தமில்லே பந்தமில்லே... (படம் : எங்க ஊரு ராஜா)

அடேய் ராசா...! நிப்"பாட்டு"... மிச்சத்தை படிக்கிறவங்க பாட்றாங்க...! அன்பு எனும் முள் எடுக்கவே முடியாதது...! சில வலிகளை ஏற்றுக் கொள்வது தான் சிறந்த வழி... செய்யும் தவறுகளுக்கு மனச்சாட்சி முள் குத்திக் கொண்டே இருப்பது தான், மனிதன் திருந்துவதற்கு ஒரே வழி...! ஏதோ பழமொழிக்கு எனக்குப் புரிந்த அர்த்தம் சொன்னேன்... உன் சூழ்ச்சியில் மாட்டிக்கிட்டேன்...! ம்... அட...! ஐயம் தீர்க்க ஐயன் இருக்கும் போது பயமேன்...?

நமக்கு நாமே சூழ்ச்சி செய்து கொள்வது தான் அதிகம்... ஆனால் சூழ்ச்சி என்றாலே நாமும் + பலரும் நினைப்பது "கெடுதல் இழைக்கும் தந்திரம்" என்பதே... உண்மையான பொருள் வேறு... திருக்குறளில் 15 குறட்பாக்களில் மொத்தம் 20 தடவை சூழ் என்னும் சொல் வருகிறது + கீழுள்ள குறளையும் சேர்த்து...! சூழ் என்றால் சிந்திக்க, நினைக்க, எண்ணிப் பார்க்க, ஆராய்க, ஆலோசிக்க என்று தான் எல்லா இடங்களிலும் பொருள் கொள்ள வேண்டும்...! அதே போல் நாம்... ம்ஹீம்... வாசிக்கும் பெற்றோர்களும்... உனது கேள்விக்கான பதிலை கீழுள்ள குறளின் விளக்கம் கண்டு சிறிது ஆறுதலும் அடையலாம்...! மேலும் சிந்திக்க குறள் நூலை தேடுபவர்களுக்கும் நன்றி...!

சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது
(671)

இன்றைய மனிதனுக்கு மிகப் பெரிய தேவை எது...? அறிய → இங்கேசொடுக்குவதற்கு முன்... இப்பதிவைப் பற்றிய தங்களின் கருத்து என்ன நண்பர்களே...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

 1. //பாவம் முள். அதற்குக் குத்தத்தான் தெர்யும். வெளியில் வரத் தெரியாது//

  ஹா...ஹா...ஹா...

  பாடல்களுடன் பதிவு வழக்கம் போல ஜோர்! ஆனால் ஏழை வணிகன் செய்வது போல இந்தக் காலத்தில் செய்தால் காவல்துறை அந்த ஏழையை உள்ளே வைத்து முட்டியைப் பேர்த்து விடும்! பழமொழி போல கதையும் அந்தக் காலத்துக்கு ஏற்றதுதான் போல!

  பதிலளிநீக்கு
 2. //தன் மகள் இன்னொரு வீடு போகும் போது... ஐயோ அங்கே இவளை யாராவது கொடுமைப்படுத்துவாங்களோ...... தனிக்குடித்தனம் போனால் தேவலையே....

  //தன் மகன் தனிக்குடித்தனம் போகும் போது.....//

  ஐயோ.... மகன் சம்பாரிப்பதையெல்லாம் இவள் எங்கே அனுபவிச்சுருவாளோ....

  பதிலளிநீக்கு
 3. உண்மையை சொல்லுங்கள் உங்களுக்கு திருக்குறள் அனைத்தும் அத்துப்படித்தானே. எப்படி டிடி உங்களால் சிந்தனையை தூண்டுகிற மாதிரி ஒரு பதிவு எழுதி அதற்கு ஏற்ற மாதிரி திரைப்படப் பாடல்களையும் சேர்க்க முடிகிறது.

  அந்த 1,1a,2,2a கேள்விகளுக்கான விடை தெரிந்துவிட்டால், அந்த கேள்விகளுக்கு வேலையே இருக்காதே...

  பதிலளிநீக்கு
 4. சூழ்ச்சி செய்யக் கற்றுத் தந்தமைக்கு நன்றி ஸார்

  பதிலளிநீக்கு
 5. மெகாத் தொடர்களைப் பார்த்தால் ஒரே வாரத்தில் சூழ்ச்சி நிபுணர் ஆகிவிடலாம் ..ஒரு வார்த்தை என்றாலும் நச் :)
  த ம 4

  பதிலளிநீக்கு
 6. வணக்கம்
  அண்ணா.

  குறம் பாடலும் கலந்த கலவையாக பதிவை அசத்தி விட்டீர்கள்... அண்ணா அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி. த.ம6

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 7. சூழ்ச்சியை - ''சூழ்ச்சியால்'' வெல்லலாம்.. உண்மைதான்!..

  விடை கிடைத்தாலும் ஒத்துக் கொள்வார்களா!?...

  சிந்தனைக்கு விருந்தான பதிவு.. வாழ்க நலம்!..

  பதிலளிநீக்கு
 8. சிறந்த இலக்கிய விளக்கம்
  இலக்கியச் சுவை சொட்டும்
  இனிய பதிவு இது!
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 9. அருமையான பதிவு.....முள்ளை முல்ளால் தான் எடுக்க முடியும்....நல்ல ஒரு விஷயம்..அருமையான பாடல்களுடன்....

  பதிலளிநீக்கு
 10. குறள், விளக்க கதை... கருத்து....என அனைத்தும் அருமை அய்யா.
  தம+1

  பதிலளிநீக்கு
 11. தாழ்ச்சி சூழ்ச்சி தவறு. நல்ல கருத்து. நன்றி

  பதிலளிநீக்கு
 12. நாங்களும் சரியாத்தான் இருக்க நினைக்கிறோம், விட்டால் தானே, நொடுந்தொடர் பார்ட்டிகள் தங்களைத் தெடிக்கொண்டு இருப்பதாக கேள்வி.

  பதிலளிநீக்கு
 13. அருமையான பாடல் பாசமலரே.. :)

  சூழ்ச்சியை சூழ்ச்சியாலதான் எடுக்கணும். பிள்ளைகளுக்கும் பையன் பிறக்க வேண்டிக்குவோம். :)

  முள்ளுவாங்கின்னு ஒண்ணு உண்டு அதால எடுக்கலாம். ஆனா நீங்க எழுதி இருக்கத படிச்சி சிரிச்சுகிட்டே இருந்தேன்.

  உங்க இடுகை மட்டுமில்ல. அதுக்கான எல்லா பின்னூட்டங்களையும் ரசித்து படிப்பேன். அழகா எழுதுறீங்க எல்லாருமே. :) துளசி & ஸ்ரீராம் கமெண்ட்ஸ்.. :)

  ஒரே வாரத்தில் சூழ்ச்சி நிபுணர் ஆக.. இதப் படிச்சிட்டு கன்னா பின்னான்னு சிரிச்சுக்கிட்டு இருக்கேன். என் பையன் என்ன ஒரு மாதிரி பார்த்துக்கிட்டே ஆஃபீஸ் கிளம்புறான் ஹாஹாஹா

  குறள் அருமை. பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 14. பாடல்+குறள் எடுத்துக்காட்டுடன் சிந்திக்கவைக்கும் அருமையான பதிவு.

  பதிலளிநீக்கு
 15. கூடுதலும் பிரிதலும் வாழ்வு. என்று தொடங்கி சூழ்ச்சியில் முடித்து
  நிறைந்த விளக்கங்கள் தந்தீர்கள் அருமை.
  மிக்க நன்றி டிடி.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 16. முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும். வைரத்தை வைரத்தால் அறுக்க வேண்டும். ஆனாலும் குடும்பப் பிரச்சினைகளில் முள்ளில் விழுந்த துணியை எடுப்பது போல் எடுக்க வேண்டும்.
  த.ம.13

  பதிலளிநீக்கு
 17. உங்கள் சூழச்சியில் பலரும் மாட்டிக் கொண்டது உண்மை dd

  பதிலளிநீக்கு
 18. முள்ளை முள்ளால் எடுப்பது பற்றிய கதை அழகிய விளக்கம் .
  சிந்தனையை தூண்டும் பதிவு. அருமை.

  பதிலளிநீக்கு

 19. திரு சொக்கன் சுப்ரமணியன் அவர்கள் சொன்னதைத்தான் சொல்ல விரும்புகிறேன். எப்படி உங்களால் திரைப்பட பாடல்களை சொல்ல வந்த கருத்தோடு இணைக்க முடிக்கிறது? பழமொழிக்கான விளக்கம் புதுமையானது. வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 20. அருமை நண்பரே சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்லவேண்டும் என்பதற்காக சொன்ன இரும்பை எலி தின்ற கதை பொருத்தமானதே...
  குறளும் பொருத்தம்.

  முள்ளை முள்ளால் எடுப்பதுபோல...
  வைரத்தை வைரத்தால் அருப்பதுபோல...
  மரத்தை மரத்தால் அறுக்க முடியவில்லை..... 80தான் என் கவலை.

  வழக்கம்போல அருமையான பாடல்களும் ஸூப்பர்.
  சூது, வாது தெரியாத எனக்கு பல விடயங்கள் கிடைத்தது நன்றி.
  வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 21. தற்சமயம் கொஞ்சம் சூழல் மாறுவது போலத் தெரிகிறது. பெண்ணைப் பெற்றவர்கள் தகுந்த மரியாதைக்குரியவர்களாகத்தான் கருதப்படுகிறார்கள் என நினைக்கிறேன். இது மாறாக இருந்தால் அந்தக் குடும்பச் சூழல் சற்று பிற்போக்கான குடும்பச் சூழலாக இருக்கலாம் என நினைக்கிறேன்.

  அது சரி..பெண்ணைப் பெற்றவனின் நிலைக்கும் சூதை சூதால் வெல்வதற்கும் சம்பந்தம் சற்று புரியவில்லையே..

  ஏதோ சொல்லாததை கதைசொல்லி சொல்ல முயல்வதைப் போல இருக்கிறதே.. அப்பாடியா?

  "தந்திரத்தாலும் சூழ்ச்சியாலும் வெல்லத்தெரிந்தவர்களே மேலே வரமுடியும்னு காலப்போக்கு இருக்கு.." சொன்னல் நம்ப மாட்டீர்கள் நேற்று எனது மனைவி புலம்பிய புலம்பல் இதுதான்.

  உலகம் கெட்டுக் கிடப்பது இருக்கட்டும் அதனால் நாமும் கெட்டு விடலாமா?
  "

  ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 22. கண்ணுக்குக் கண் கத்திக்குக் கத்தி என்பதுபோல் இருக்கிறதே சூழ்ச்சிக்கு சூழ்ச்சி.தமிழ் இளங்கோவின் கருத்தே எனக்கும். மணமாகிப் போகும் பெண் மணமாகி வரும் பெண்நிலைகள் வெவ்வேறு குடும்பஙகளில் ஒரே மாதிரிதானே. இந்தப் பழிக்குப் பழி எனக்கு உடன்பாடில்லை.

  பதிலளிநீக்கு
 23. உலகமே ஒரு சூழ்ச்சியாதான் போய்ட்டிருக்கு:(( அதை வழக்கம் போல குரலோடும், குறளோடும் சொல்லி அசத்திருக்கீங்க அண்ணா!

  பதிலளிநீக்கு
 24. இரும்பு வணிகன் கதையையொட்டிய கதையை நான் கேட்டுள்ளேன். இருப்பினும் தங்கள் பாணியில் கதை கேட்பது என்பது வித்தியாசமாகத்தான் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 25. பழமொழிகள் என்றுமே சுவையானவை. பாடல்கள் அருமை.

  பதிலளிநீக்கு
 26. அருமையான தகவல்
  உங்களுக்கு நன்றி சொல்ல நான் கடமைப்பட்டுள்ளேன் அப்பதிவை பார்க்க :- http://techtamilblog.blogspot.com/2015/03/50thpost.html

  பதிலளிநீக்கு
 27. பழமொழியும், கதையும் அருமை அருமை.
  வழக்கம் போல் பாடலும் விளக்கமும் ...பிரமாதம்...சகோ த.ம 19

  பதிலளிநீக்கு
 28. அதே பெற்றோரும் ஏற்கனவே இன்னொரு தம்பதிகயினருக்கு மகன் / மகளாக இருந்துதானே வந்திருப்பார்கள் . எனவே எப்படிப்பார்த்தாலும் தங்களின் தலைப்பிலே பொருந்தி விடுகிறதே !
  ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா ’

  இதற்கான முடிவும் தங்களின் தளத்தின் தலைப்பிலேயே இருக்கின்றது .

  ‘வலிகளை ஏற்றுக்கொள் . இதுவும் கடந்துபோகும் .’

  தம +

  பதிலளிநீக்கு
 29. பழமொழிக்கேற்ற பாடல்களா? பாடல்களுக்கேற்ற பழமொழிகளா? என்று ஒரு குழப்பம்..

  பதிலளிநீக்கு
 30. தெரிந்த விஷயத்தையே மிகவும் அழகாகக் கொடுக்க உங்களால் தான் முடியும். :)
  சூழ்ச்சின்னதும் கொஞ்சம் என்னவோ, ஏதோனு நினைச்சுட்டேன். :)

  பதிலளிநீக்கு
 31. //ஐயோ.... மகன் சம்பாரிப்பதையெல்லாம் இவள் எங்கே அனுபவிச்சுருவாளோ....//

  இப்போதும் இந்த எண்ணம் பல பெற்றோரிடம் இருப்பது தான் கவலை தரும் விஷயம். :(

  பதிலளிநீக்கு
 32. சூழ்ச்சி சூழ் உலகு! அழகான தெளிவான விளக்கம். நன்றி தனபாலன்.

  பதிலளிநீக்கு
 33. அன்புள்ள அய்யா,

  சூழ்ச்சியில் மாட்டிக்கிட்டு... முள்ளை முள்ளால் எடுக்க பழமொழிக்கு கதையுடன் கூடிய விளக்கமளித்தது பாராட்டுக்குரியது.

  ‘பொது நீதிக்கும் நேர்மைக்கும் பயந்துவிடு...’ எம்.ஜி.ஆர். பாடலும்..............

  ‘தென்னைய பெத்தா இளநீரு...’ சிவாஜியின் பாடலும்...
  அருமை...

  தாங்கள் பொருத்தமான பாடலைத் தேடிக் கண்டுபிடித்து அனைவரும் அறியத் தருவதை எண்ணி எண்ணி வியந்து போகிறேன்.

  குறளும் நல்ல தேர்வு.
  1...1a. 2...2a நல்ல பொருத்தம்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 34. வணக்கம் சகோதரரே.

  வழக்கம் போல் யோசிக்க வைக்கும் பதிவு. அதை பாடல்களுடனும். குறளினுடனும் ஒப்பிட்டு படைத்திருப்பதும் சிறப்பு..

  சூழ்ச்சியை அதாலேயே வெல்லும் கதை அருமை. பெற்றவர்கள் இரு கண்களையும் ஒருங்கே பார்க்கும் காலங்கள், முழுதுமாக வர வேண்டும். அதை இறைவனிடம் வேண்டுகிறேன்.

  சூழ்ச்சி நிபுணர்கள் ஆகாமலிருக்க நம்மை நாமே தடுத்துக் கொள்ளலாமே..( நிபுணர்கள் ஆவதற்குரிய உண்மையைச் சொல்லி வாய் விட்டு சிரிக்க வைத்ததற்கு நன்றி..)

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 35. இந்த பழமொழியும் இந்த கதையும் இப்போதைய வாழ்க்கையுடன் என்னவோ பொருந்தினாலும், கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் என்பது எத்தனை தூரம் சரியானதாய் இருக்கும் என்பதும் யோசிக்க வேண்டியதே

  பதிலளிநீக்கு
 36. அருமையான கருத்துக்கள், அழகிய விளக்கங்கள் வழக்கமான படப் பாடல்களுடன். அருமையான பதிவு.

  பதிலளிநீக்கு
 37. திரைப்படப்பாடல் வரிகள் அத்தனையும் இனிமை.

  இரும்பை எலி கடித்ததும் .... பிள்ளையைப் பருந்து தூக்கிச் சென்றதும் தெரிந்த கதைதான் என்றாலும் இங்கு கொடுத்துள்ளது மிகவும் பொருத்தமானதேயாகும்.

  முள்ளை முள்ளால் எடுப்பதுபோல சூழ்ச்சிகளை சூழ்ச்சிகளால் மட்டுமே வெல்ல முடியும். பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.