எது நாகரீகம்...?


கட்டாந் தரையில் ஒரு துண்டை விரித்தேன், தூக்கம் கண்ணைச் சொக்குமே அது அந்தக் காலமே... மெத்தை விரித்தும் சுத்த பன்னீர் தெளித்தும், கண்ணில் தூக்கம் இல்லையே அது இந்தக் காலமே... (படம் : அண்ணாமலை) போன வாரம் ஒரு உறவினர் திருமணத்திற்குச் சென்றிருந்தேன்... வசதியில் நடுத்தர வர்க்கம் தான்... ஆனால் அவர் திருமணத்திற்குச் செய்திருந்த செலவுகளைப் பார்த்து வந்திருந்த எல்லாருமே மலைத்து போயிட்டாங்க... "என்னங்க இப்படிப் பணத்தைத் தண்ணீராய் வாரி இறைத்திருக்கிறீர்கள்" என்று கேட்டால், "ஒரே மகள் திருமணம், இதை விட்டால் வேறு எந்த விழாவில் நமது தகுதியை அடுத்தவர்களுக்கு வெளிக் காட்ட முடியும்...? அதனால் தான் தாராளமாகச் செலவு செய்து விட்டேன்..." என்றார்...


அண்ணாமலைக்கு இனி எப்படித் தூக்கம் வரும்...? அவர் சொல்வதிலும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது மனசாட்சி... நவநாகரீக உலகம் அல்லவா...? இந்த மாதிரி விழாக்களில் கொஞ்சம் ஆடம்பரமாக நடந்து கொண்டால் தான் நமக்கு மற்றவர் மத்தியில் மரியாதை உண்டாகும்...! சிரித்தவன் அழுவதும் அழுதவன் சிரிப்பதும்-பணத்தால் வந்த நிலை தானே ? கையிலும் பையிலும் ஓட்டமிருந்தால்-கூட்டமிருக்கும் பின்னோடு..! தலைகளை ஆட்டும் பொம்மைகளெல்லாம்-தாளங்கள் போடும் பின்னோடு ! காசே தான் கடவுளப்பா - அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா...! கைக்குக் கைமாறும் பணமே - உன்னைக் கைப்பற்ற நினைக்குது மனமே - நீ தேடும் போது வருவதுண்டோ - விட்டுப் போகும் போது சொல்வதுண்டோ...?

என்னப்பா இப்படிச் சொல்றே... கையிலிருந்த பத்து பதினைந்து லட்சம் போக, மேலே ஒரு பத்து லட்சம் செலவாகி விட்டதாம்... வீடு மேலே உள்ள கடன் சேர்த்து அந்தப் பத்து லட்சமும் கடன் தான்... கொஞ்சம் ஆடம்பரத்தைக் குறைத்திருந்தால் கடனிலிருந்து தப்பித்திருக்கலாம் இல்லையா...? அளவுக்கு மேலே பணம் வைத்திருந்தால் - அவனும் திருடனும் ஒன்றாகும்... வரவுக்கு மேலே செலவுகள் செய்தால் - அவனும் குருடனும் ஒன்றாகும்... (படம் : சக்கரம்) இதுவும் அந்தப் பாட்டிலுள்ள வரிகள்...!

போலி கெளரவத்திற்காக ஆடம்பர மோகத்தில் சிக்கி, இப்படித்தான் நம்மில் பலர் சின்னாபின்னமாகிச் சிதைந்து கொண்டிருக்கிறோம்... இருப்பிற்கேற்ப வாழ்வது கூட ஆடம்பரம் தான்... தேவைக்கேற்ப வாழ்வது தான் வாழ்க்கை... அது தான் ஆடம்பரமில்லாத தன்மை... ஹென்றி போர்ட் பற்றி :-

அவர் ஒருமுறை லண்டனுக்குச் சென்ற போது, அங்குள்ள மிகப் பெரிய விடுதிக்குச் சென்று தங்குவதற்கு அறை கேட்டார்... விடுதிக்காரர்களுக்கு ஹென்றி போர்ட் பற்றி நன்றாகத் தெரியும்... அந்த விடுதியிலேயே மிக ஆடம்பரமான அறையை ஒதுக்கீடு செய்தார்கள்... அதற்கு அவர், ஆடம்பரமான அறை வேண்டாம், நடுத்தரமான அறையே போதுமென்றார்... விடுதி வரவேற்பாளர் கேட்டார், "ஐயா நீங்கள் மிகப் பெரிய தொழிலதிபர், உலகில் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவர், அப்படியிருந்தும் என் நடுத்தர அறையைத் தேர்வு செய்கிறீர்கள்" என்று...! போர்ட் சொன்னார், "என்னுடைய எல்லாத் தேவைகளும் நிறைவு செய்வதாக நடுத்தரமான அறையே இருக்கிறது, அதனால் அதுவே போதும்" என்றார். விடுதி வரவேற்பாளர் "கடந்த மாதம் எங்கள் விடுதிக்கு உங்கள் மகன் வந்திருந்த போது அந்த ஆடம்பர அறையில் தான் தங்கினார், நீங்கள் தான் மறுக்கிறீர்கள்..." என்று... அதற்கு ஹென்றி போர்ட் சொன்ன பதிலே அலாதியானது... "தம்பி, என் மகன் ஹென்றி போர்ட் என்ற கோடீஸ்வரனின் மகன், அதனால் அவன் ஆடம்பர அறையில் தங்கலாம்... ஆனால் நானோ ஒரு நடுத்தரத் தந்தையின் மகன், அதனால் நடுத்தரமான அறையே போதும்..." என்றார்.

கோடி கோடியாய்ப் பணமிருந்தாலும், நிலைமை அறிந்து தேவைகளுக்கேற்ப செலவு செய்தும், அதைத் தனது வாரிசுகளுக்கும் உணர வைத்தால் கோடீசுவர நிலை நீடிக்கும்...! இல்லையென்றால் தெருக் கோடி தான்...!

பணங்களைச் சேர்த்துப் பதுக்கி வைத்தால் - அது மடமை2 ஆஹா பகவான் படைத்த பணமெல்லாம் - பொது உடைமை... கையில் கிடைத்ததை வீசி ரசிப்பது தான் - என் கடமை... அந்த பெருமை எந்தன் உரிமை... ஓஹோ ஹோ... ஆண்டவன் படைச்சான் எங்கிட்ட கொடுத்தான்... அனுபவி ராஜான்னு அனுப்பி வைச்சான்... என்னை அனுபவி ராஜான்னு அனுப்பி வைச்சான்... (படம் : நிச்சய தாம்பூலம்) ஹென்றியோட மகன் பாடியிருப்பார்... அவரோட பேரன் பாடுவனான்னு தெரியாது, ஹிஹி... இன்றைய நவீன நாகரீகம் என்னென்னா ஏகப்பட்ட உடைகளைப் பெருக்கணும், தங்கங்களை நிறைக்கணும், பந்தாவா ஒரு காரை வாங்கி, அதில் உலா வரணும், அப்புறம் வீட்டில் உலகத்திலே லேட்டஸ்டா என்னென்ன எலக்ட்ரானிக்ஸ் உபகரணங்கள் இருக்கோ அதெல்லாம் இருக்கணும் - இவையெல்லாம் சின்ன ஆசை... ஹிஹி... தெரிஞ்சிக்கோ...!

இது பே பே பே(ய்)ராசை...! நாகரீகம்ன்னா உடுத்துகின்ற உடை, அணிகிற அணிகலங்களிலா இருக்கு...? நமது மகாத்மா சொன்னது தான் ஞாபகம் வருது... தேவைகளைப் பெருக்குவதல்ல நாகரீகம்... தேவைகளைச் சுருக்குவதே நாகரீகம்... இன்றைய உலகம் இயந்திர உலகம்... மனித மனங்களின் இயக்கமும் இயந்திரமாச்சி... அடுத்தவரைப் பார்த்து, அடுத்தவர் வைத்திருக்கும் பொருட்களைப் பார்த்து, அடுத்தவர் செயல்படும் செயல்களைப் பார்த்து, நாம் போலி வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்... இன்றைய வாழ்க்கை நமக்காக வாழும் வாழ்க்கையில்லை... அடுத்தவர்களுக்காக வாழும் வாழ்க்கையால் தேவைகள் பெருகுது...+ ஆசைகளும் பெருகுது...++ துன்பங்களும் பெருகுது...+++ தகவல் நாயகர் தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்கள் :

குரலால், கருத்துக்களால், இன்று ஒரு தகவலாய் வானொலியை உயர்த்தியவர்... கேட்கும் நேயர்களின் சிந்தனைகளை உயர்த்தியவர்... அவருக்கு ஒரு மகள், மனைவி என அளவான வாழ்க்கை சென்னையில்... ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31-ம் தேதி அவரும் அவரது மனைவியும் வீட்டிலிருக்கும் பொருட்களைக் கணக்கெடுப்பர்... அவர் பல இடங்களுக்குச் சென்று சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்பவர் என்பதால், வீடு நிறையப் பரிசுப் பொருட்கள் குவிந்து கிடக்கும்... சமையல்கட்டிலிருந்து வரவேற்பறை வரை உள்ள எல்லாப் பொருட்களையும் இருவரும் கணக்கெடுத்து, இந்த ஆண்டு என்னென்ன புதிய பொருட்கள் சேர்ந்துள்ளன, எவையெவை தேவையற்றவை எனப் பட்டியலிடுவார்கள்... உதாரணத்திற்குச் சமையக்கட்டில் பத்து டம்ளர்கள் இருந்தால், வீட்டில் மூவருக்கு மூன்று, விருந்தினருக்கு இரண்டு, ஆக ஐந்து போக மீதியுள்ள ஐந்தை தனியே எடுத்து வைத்து விடுவார்கள்... ஒன்று மேல் குக்கர் இருந்தால், அவையும் தனியே... வரவேற்பறையில் நான்கு சேர்களுக்கு மேல் இருந்தால் அவைகளும் தனியே... பரிசுப் பொருட்களை அனைத்தையும் பிரித்து, தேவையற்றவை அனைத்தும் பிரித்துத் தனியே சாக்குப் பைகளில் கட்டி, ஒரு மினி வேன் பிடித்து, தனது சொந்த ஊரான தென்கச்சிக்கு அனுப்பி வைத்து விடுவார்கள்... ஊருக்குத் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு, "வண்டி வருகிறது, உறவினர்கள், நண்பர்கள் என யார் யாருக்கு என்னென்ன பொருட்கள் வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள்" என்று கூறி விடுவார் தென்கச்சியார்... மீண்டும் ஜனவரி ஒன்றிலிருந்து தேவையான பொருட்களோடு வாழ்க்கை... தேவைகளைச் சுருக்குவதே நாகரீகம் என்று மகாத்மா சொன்னது.....

சரி தானே நண்பர்களே...?

பணத்தைப் பூட்டி வைத்தாய், வைரத்தைப் பூட்டி வைத்தாய், உயிரைப் பூட்ட ஏது பூட்டு...? குழந்தை ஞானி - இந்த இருவரைத் தவிர இங்குச் சுகமாய் இருப்பது யார் காட்டு... ஜீவன் இருக்கும் மட்டும் வாழ்க்கை நமதுமட்டும் - இதுதான் ஞானசித்தர் பாட்டு... இந்த பூமி சமம் நமக்கு...! நம் தெருவுக்குள் மதச்சண்டை சாதிச்சண்டை வம்பெதற்கு...? வெறும் கம்பங்களி தின்னவனும் மண்ணுக்குள்ளே... அட தங்க பஸ்பம் தின்னவனும் மண்ணுக்குள்ளே... இந்த வாழ்க்கை வாழத்தான்... நாம் பிறக்கையில் கையில் என்ன கொண்டு வந்தோம் ? கொண்டு செல்ல ? (படம் : படையப்பா)

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

 1. எது நாகரீகம் என பாடல் வரிகளைக் கொண்டு
  விலக்கிப்போனவிதம் அருமையிலும் அருமை
  இரண்டு முறைப் படித்து ரசித்தேன்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. தென்கச்சி சுவாமிநாதனைப் பற்றிய நல்ல ஒரு தகவலைத் தெரிந்துகொண்டேன். அதைப் பிறரும் கடைபிடிக்கலாம். நாகரீகம் என்பது மாயை என்பதைத் தாங்கள் பகிர்ந்தவிதம் அனைவரும் பாடமாகக் கொள்ளவேண்டியதாகும். நன்றி.

  பதிலளிநீக்கு
 3. ஆசைப்பட ஆசைப்பட ஆய் வரும் துன்பம்
  ஆதலால் ஆசை அறுமின் ஆசை அறுமின்
  ஈசனோடாயினும் ஆசை அறுமின்-திருமூலர்
  ஆனால் யார் கேட்கிறார்கள் ? வெறும் எலும்பைக் கடித்து
  அதன் வாயிலிருந்து வரும் ரத்தத்தை எலும்பிலிருந்து வருவதாக எண்ணி மகிழும் நாய் போன்றவர்கள் பேராசையில் உழலும் கூட்டம்.

  பதிலளிநீக்கு
 4. போதுமென்ற மனம் பற்றிச் சொல்லும் பதிவு. போதும் என்று நினைக்கும் மனம் யாரிடம் இருக்கிறதோ அவர்தான் பெரிய பணக்காரர். தென்கச்சி சுவாமிநாதன் பற்றிய தகவல் எனக்குப் புதிது.

  பதிலளிநீக்கு
 5. கல்யாணங்கள்ல சாப்பிடறவங்க தனக்குத் தேவையானதை கேட்டு வாங்கிச் சாப்பிடாம இலையை ரொப்ப வெச்சுட்டு உணவை வீணடிக்கறதப் பார்க்கறப்பல்லாம் எனக்கு ஒரு மாதிரி ஆயிடும். ஒரே மகள் கல்யாணத்துக்குன்னு அவர் அள்ளி இறைச்ச பணத்தை சிம்பிளா கல்யாணம் பண்ணி அவ பேர்ல பாங்க்ல போட்ருந்தா உருப்படியாகியிருக்கும். ஹென்றி போர்டின் பதில் மிக அருமை. ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 6. "ஆண்டவன் படைத்தான் என்கிட்டே கொடுத்தான் அனுபவி ராஜான்னு அனுப்பிவி வைச்சான்". எவர் கிரீன் வில்லன் நம்பியாரையே, விசிலடித்து, சிரித்து, பாட வைத்த பாட்டு. எனக்கு மிகவும் பிடித்த பாட்டுக்களில் ஒன்று. நன்றி, தனபாலன் அவர்களே...ரசித்தேன்...

  பதிலளிநீக்கு

 7. ஹென்றி ஃபோர்ட் மற்றும் தென்கச்சியார் பற்றிய அறியாத தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி! வழக்கம்போல் பொருத்தமான திரைப்படப் பாடல்கள். பதிவை இரசித்தேன்!

  பதிலளிநீக்கு
 8. உண்மை.முற்றிலும் உண்மை.அருமையான கருத்து.தெளிவான நடை.வாழ்த்துகள்.கார்த்திக் அம்மா

  பதிலளிநீக்கு
 9. மகிழ்ச்சியாய் வாழும் கலை என்றே உங்கள் பதிவுகளுக்கு பெயர் சூட்டலாம் !

  பதிலளிநீக்கு
 10. கையில் கொஞ்சம் காசு இருந்தால் நீதான் அதற்கு எஜமானம்

  கழுத்துவரைக்கும் காசு இருந்தால் அதுதான் உனக்கு எஜமானன்..

  அர்த்தமுள்ள பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
 11. //மனித வாழ்க்கையில் துன்பம் யாவுமே மனதினால் வந்த நோயடா! // என்ற பாடல் வரிகள் ஞாபகம் வந்தது! அருமையான பதிவு! இரசித்துப் படித்தேன்! நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 12. வாழ்க்கை வாழ்வதற்க்கே, வாழ்ந்து பார்ப்போம் வா தோழா.....

  பதிலளிநீக்கு
 13. மனப்பக்குவம் வேண்டும், நன்றாகச்சொல்லியிருக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
 14. வாழ்க்கை விளக்கத்தை தெளிவாகச் சொன்னீர்கள்!
  த.ம.9

  பதிலளிநீக்கு
 15. DD சார், முக்கியமான ஒரு பாட்டை விட்ட்டுடீங்க

  வரவு எட்டணா செலவு பத்தணா
  அதிகம் ரெண்டணா
  கடைசியில் துந்தணா துந்தணா துந்தணா

  நிலைமைக்கு மேலே நினைப்பு வந்தா நிம்மதி இருக்காது
  ஐயா நிம்மதி இருக்காது
  அளவுக்கு மேலே ஆசை வந்தா உள்ளதும் கிடைக்காது
  அம்மா உள்ளதும் கிடைக்காது

  அப்புறம் இந்த பதிவில் திருக்குறள் எதுவும் சேர்க்காததால் இதையும் சேர்த்துக் கொள்ளவும்

  "ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
  போகாறு அகலாக் கடை"

  வருமானம் குறைவாக இருப்பது என்பது ஒருவருக்கு அவமானமோ அல்லது கேவலமோ இல்லை. வருமானத்துக்கு அதிகமாக செலவு செய்தால்தான் இவை இரண்டும் வந்து சேரும்

  பதிலளிநீக்கு
 16. மிகவும் ரசித்துப் படிக்க வைத்த இப் பகிர்வுக்குப் பாராட்டுக்களும்
  வாழ்த்துக்களும் சகோதரா .

  பதிலளிநீக்கு
 17. உணர்ந்திடும் வாழ்க்கை உலகுமெச்சும்! வீணே
  திணறுவதோ ஆசைமிகுத் தே!

  அருமையான பதிவு சகோதரரே!
  வாரம் ஒரு பதிவென்றுள்ளதை மேலும்
  சில பதிவுகள் அதிகரித்துத் தரலாமே!..
  படித்திட ஆவலும் பயனும் கொண்ட பதிவு உங்களது!

  தொடருங்கள்! நன்றியுடன் வாழ்த்துக்கள் சகோதரரே!

  பதிலளிநீக்கு
 18. வணக்கம்
  அண்ணா
  வாழ்க்கை என்றால் என்ன என்பதை மிக அருமையான பாடல்கள் மூலம் விளக்கியுள்ளீர்கள்
  மிகவும் இரசித்துப்படித்தேன் பகிரவுக்கு நன்றிஅண்ணா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 19. வணக்கம்
  த.ம 12வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 20. என் உள்ளம் நிறைந்த
  இந்தப் பதிவை
  எனது தளத்தில்
  "செலவு செய்வதென்றால் சும்மாவா?" என
  அறிமுகம் செய்துள்ளேன்!
  இதோ இணைப்பு
  http://wp.me/3oy0k
  எல்லோருக்கும்
  இப்பதிவு போய்ச் சேர்ந்தால்
  நற்பயன் கிட்டும் என்பேன்!

  பதிலளிநீக்கு
 21. எனக்கு எங்கோ படித்த வரி நினைவுக்கு வருகிறது"Follow what I say;Do not practice what I do " இது எப்படி இருக்கு.?( சும்மா தமாஷுக்கு) வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 22. ஹென்றி ஃபோர்ட் பற்றியும், தென்கட்சி ஐய்யா பற்றியும் தெரிந்து ஆச்சரியப்பட்டேன்.

  தேவைகளைப் பெறுக்குவதல்ல நாகரீகம்..சுறுக்குவதே நாகரீகம்...மகாத்மா சொன்னதை தாங்கள் பகிர்வில் பகிர்ந்து...கேள்வி தலைப்பும்...பதில் பகிர்வுமாக... நன்றாக இருக்கிறது.

  அங்கங்கே... பாட்டும் .... பாட்டு சுரங்கம் (என்சைக்கிளோபிடியாவா நீங்கள் ..? ) நீங்கள் தான்...!!!

  காலத்திற்கு ஏற்ற...பதிவு. நன்றி.

  பதிலளிநீக்கு
 23. இன்றைக்கு திருமணத்தை, இரு மனங்கள் இணையும் விழாவாக யார் கொண்டாடுகிறார்கள்? எல்லோரும் தங்களுடைய தகுதியை பறைசாற்றும் விழாவாக அல்லவா கொண்டாடுகிறார்கள்.

  உதாரணம் கொண்டு இந்த செய்தியை விளக்கிய விதம் அருமை. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 24. இப்படியெல்லாம் சிலர் இருப்பதால்தான் உலகம் இன்றும் சுழன்றுக்கொண்டிருக்கிறது போலும்.

  பதிலளிநீக்கு
 25. இப்போதெல்லாம் கல்யாணங்கள் மட்டுமில்லீங்க, பெண்கள் வயசுக்கு வரும் விழாக்கள்.....ஏன்...பிறந்தநாள் கொண்டாட்டங்கள் கூட....அதுவும் சின்ன வயதில்லை....பெரிய வயதுக்காரர்கள் கூட ஆடம்பரமாகக் கொண்டாடுகின்றார்கள்! அந்தஸ்தை சமூகத்திற்குக் காட்டுவதைப் பெருமையாக நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இதில் வருத்தம் என்னவென்றால், பள்ளியில் படிக்கும் பணக்காரக் குழந்தைகள் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் கொண்டாடும் போது அந்தக் நண்பர் குழுவில் இருக்கும் நடுத்தரவர்கத்துக் குழந்தையோ, இல்லை ஏழைக் குழந்தையோ அதே போன்று பிறந்தநாள் கொண்டாடத் தூண்டப்படுகின்றார்கள் மட்டுமல்ல கொண்டாடவும் ஆசைப்படுகின்றார்கள்! செலவும் செய்கின்றார்கள். இதில் கொடுக்கப்படும் பரிசுகளும் அப்படியே! பெற்றோரின் கஷ்டம் தெரியாமல்...வளரும் குழந்தைகள் அதிகமாகி வருகின்றார்கள். பெற்றோரும் அப்படித்தான் ஆகி வருகின்றார்கள்! பிறந்த நாள் பரிசு என்று தேவை இல்லாதப் பொருட்களை வாங்கிக் குவிக்கின்றார்கள்! சமூகம் அப்படி மாறி வருகின்றது!...விரலுக்கு ஏத்த வீக்கம் இருந்தால்தான் நல்லது!

  மிக மிக அருமையான பதிவு DD!!

  பதிலளிநீக்கு
 26. தென்கச்சியாரின் அருங்குணத்தை அறியத் தந்தது - அருமை!.

  நிச்சயம் தாம்பூலம் திரைப்பட பாடல் கவியரசரின் புலமைக்கு மற்றுமோர் சான்று!..

  சிந்தனைக்கு விருந்தாக - இனிய பதிவு!..

  பதிலளிநீக்கு
 27. ஹென்றி போர்ட், தென்கச்சி தகவல்கள் முத்துக்கள் பதிவை போலவெ ,தம 14

  பதிலளிநீக்கு
 28. ஆங்காங்கே சிந்திக்க வைக்கும் மிகச்சிறந்த பாடல்களுடன் பதிவு மிக அருமை.

  நாகரீகம் பற்றி நாகரீகமாக நயம்படச்சொன்னது மிகவும் இனிமை.

  தேவையற்ற பொருட்கள் சேர்ந்தால் மனதுக்கு நிம்மதி போய் விடுகிறது. அவற்றை அப்புறப்படுத்துவதும் சிரமமாகி விடுகிறது.

  தேவையானதை மற்றுமே உள்ளே அனுமதித்தால் மட்டுமே நல்லது.

  தேவையுள்ள நல்லதொரு பகிர்வுக்கு நன்றிகள். பாராட்டுக்கள். வாழ்த்துகள். - vgk

  பதிலளிநீக்கு
 29. ஒரு நீயா நானா நிகழ்ச்சியில் , வெறும் பெருமைக்காக பொருள் வாங்குவோரும், கடன் படுவோருமென ஒரு கூட்டம் வந்து சொன்னவை;"காவற்றுக் கஞ்சியானாலும் கடனில்லாக் கஞ்சி மேல்" என வாழ்ந்த நம் சமுதாயத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் அதுவும் குறிப்பாக நாளைய சமுதாய அங்கமான இளைஞர்கள்- மிக வேதனை தந்தது.
  தெக்கச்சியாரின் ஆண்டிறுதிக் கொடை , எவ்வளவு சீரிய சிந்தனை.

  பதிலளிநீக்கு
 30. சிந்தனைக்குரிய, திருந்தவேண்டிய விடயம் வீண் ஆடம்பரச்செலவுகள். ஹென்றிபோர்ட், தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களின் கதைகள் ஊடாக ,பாடல்களை மேற்கோளாக காட்டி அழகாக,நன்றாக விளக்கியிருக்கிறீங்க. சிறப்பான பகிர்வு. நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 31. போர்டு பற்றிய தகவல் நான் அறியாதது தங்கள் பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 32. தென்கச்சி அவர்களைப் பற்றிய சிறப்பான தகவல்.அறிந்தேன். அவருடைய் வீடு எங்கள் வீட்டுக்கருகிலதான் உள்ளது மிக எளிமையான மனிதர். பேருந்து நிலையத்துக்கும் அவருடைய வீட்டுக்கும் ஒரு கி.மீ தூரத்திற்க்குமேல் இருக்கும். என்ற போதும் நடந்தேதான் செல்வார்.வழக்கம் போல் DD முத்திரைப் பதிவு

  பதிலளிநீக்கு
 33. என்ன செய்வது....

  சின்ன சின்ன ஆசைகள் நிறைவேறியதும்
  பெரிய பெரிய ஆசைகள் துளிர்த்துவிடுகிறதே....

  நம் மானத்தை மறைக்க உடை அணிந்த காலம் போய்
  அடுத்தவருக்காக உடையாலங்காரம் பண்ணிக் கொள்ளும் காலம்
  வந்துவிட்டது...(((

  பதிவு அருமை தனபாலன் அண்ணா.

  பதிலளிநீக்கு
 34. பணத்தின் அருமையையும், சிலரிடம் அது படும் பாட்டையும், ஊதாரிகளின் செலவுகளையும், வறட்டு கௌரவத்தினால் இப்படி அளவுக்கு மீறி செலவு செய்கிறவர்களையும் அழகாக சினிமா பாடல்களின் மூலம் சித்தரித்திருக்கிறீர்கள். எத்தனை ஏழைகளுக்கு உதவலாம். எத்தனை பிள்ளைகளை படிக்க வைக்கலாம். கொஞ்சம்கூட யோசிக்கவே மாட்டார்களா?

  பதிலளிநீக்கு
 35. மிக அருமையான கருத்துக்கள்! அளவுக்கு மீறி கடன் வாங்கி செலவு செய்து கடனாளி ஆகக் கூடாது! அதற்கேற்ற பாடல் சிறப்பு! தென்கச்சியார் பற்றிய செய்தி வியக்க வைத்தது! ஹென்றிபோர்டு பற்றிய தகவலும் சிறப்பு! சிறப்பான பகிர்வு! நன்றி!

  பதிலளிநீக்கு
 36. மிகவும் அழகாக விளக்கி உள்ளீர்கள் தனபால், தகுதிக்கு மீறிய செலவும், பேராசையும் வாழ்க்கைக்கு உகந்தது அல்ல !

  பதிலளிநீக்கு
 37. பாடல் வரிகளுடன் சிறிய செய்திகளையும் சொல்லி எது நாகரீகம் என்பதை அழகாக விளக்கியிருக்கிறீர்கள்.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 38. போலி கௌரவத்தில் சிக்கி ஆடம்படம் என்னும் பெயரில் நாம் அனைத்தையும் இழந்து கொண்டுதான் இருக்கிறோம் ஐயா
  அளவுக்கு மீறய செலவு ஆபத்தில் அல்லவா கொண்டுபோய் சேர்த்துவிடும்
  அருமையான பதிவு ஐயா
  நன்றி

  பதிலளிநீக்கு
 39. தென்கச்சியார் பற்றிய செய்திகள் அருமை.
  பயனுள்ள பதிவு.

  பதிலளிநீக்கு
 40. தென் கச்சியாரைப்பற்றி அறிந்து கொள்ள முடிந்தது. இன்று கல்யாண மிகழ்ச்சிகளோ வேறு சில குடும்ப நிகழ்ச்சிகளோ இப்படி பணத்தை வாரி இறைத்துத்தான் ஆடம்பரமாக செய்து வருகிறார்கள். மனிதராய்ப்பார்த்து திருந்தினால்தான் உண்டு

  பதிலளிநீக்கு
 41. மிக அருமையான பகிர்வு.
  தேவைகள் குறைய குறைய இன்பம் தான்.
  தென்கச்சி சுவாமிநாதன் பற்றிய செய்திகள் மிக அருமை.

  நாம் பெரும்பாலும் அடுத்தவருக்காகவே தான் வாழ்கிறோம்.
  எது நாகரீகம் என்பதை அழகாய் சொல்லிவிட்டீர்கள்.
  பாடல் பகிர்வுகள் எல்லாம் மிக அருமை.

  பதிலளிநீக்கு
 42. மிக அருமையான கருத்துக்கள்! இன்றைய சமூகத்திற்கு மிகவும் தேவையான கருத்துக்கள்!

  பதிலளிநீக்கு
 43. இங்கெல்லாம் இதே விதமான ஆடம்பரத் திருமணங்கள், கொண்டாட்டங்கள் தான்.
  விரலிற்கும் அதிகமான வீக்கம் தான்.
  நல்ல படிப்;பழனையுள்ள பதிவு.
  நன்றி டிடி.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 44. அருமையான பாடல்கள் மூலம் அழகான விளக்கம்!

  பதிலளிநீக்கு
 45. அருமையான் அறிவுரையை மிக சுவாரஸ்யமாக பதிந்துள்ளீர்கள்.

  வாழ்க்கை, " வட்டிக்கு ஒட்டியாணம் வாங்கி... "

  கதையாக மாறாமல் இருக்கும்வரைதான் மனிதனுக்கு மரியாதை !

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  பதிலளிநீக்கு
 46. ஹென்றி ஃபோர்ட் பற்றி முன்னரே கேள்விப்பட்டிருந்தாலும் மீண்டும் படித்ததில் ஒரு மீள்நினைவு. தென்கச்சியாரைப் பற்றிய செய்தி புதிது.

  கருத்து செறிவுள்ள பதிவு.

  பதிலளிநீக்கு
 47. நீங்கள் சொல்வது முழக்க முழுக்க உண்மையே, என்னுடைய திருமணத்திலும் நான் எளிமையாக நடத்தவேண்டும் என்று விருப்பபட்டபோது எனது தந்தை தனது செல்வாக்கை காட்டவே நினைத்தார், இன்று பணம் என்பது எங்கும் பாய்கிறது, ஆனால் நல்ல மனிதர்களை இனம் கண்டு கொள்வது அரிதாகவே உள்ளது இல்லையா ?! உங்களது பதிவு எது நாகரீகம் என்னும் கேள்வியை நன்கு எழுப்புகிறது…. புரியவும் வைக்கிறது !

  பதிலளிநீக்கு
 48. அந்த அண்ணாமலை பாடல் நான் மிகவும் ரசிக்கும் அதிகம் கேட்க்கும் பாடல்... வரிகள் அனைத்தும் வைரங்கள்... நீங்கள் சொல்வது போல இன்றைக்கு இந்தியாவில் அதிக அளவிலான பணம் ஆடம்பர திருமணங்களில் தான் செலவழிக்கப் படுகிறது.. இதை தடுக்க ஏதேனும் நடவடிக்கை எடுத்தால் கூட நன்றாயிருக்கும்.... ஹ்ம்ம் பூனைக்கு யார் மணி கட்டுவது

  பதிலளிநீக்கு
 49. ஹென்றி போர்ட் மற்றும் தென்கச்சியார் பற்றிய தகவல்கள் புதிது, நன்றி.

  பதிலளிநீக்கு
 50. ஆடம்பரமே வாழ்க்கையென நினைக்கும் சமூகம்.....நல்ல பதிவு வாழ்த்துகள் சார்

  பதிலளிநீக்கு
 51. ஹென்றி போர்ட் பதில் வாவ்
  தென்காசி நெகிழ்வு
  நல்ல பதிவு அண்ணா
  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 52. தென்கச்சியார் தனது தேவைக்கு அதிகமாக இருந்தவற்றை ஊருக்கு அனுப்பியது சரி தான். ஆனால், அந்த பொருட்கள் தேவைப்படுபவர்களுக்கு தான் கிடைத்ததஆ என்று உறுதி செய்தாரா?

  இவர் சுருக்கியதைக் கொண்டு மற்றவர்களும் வெறுமனே பெருக்கக் கூடாதே!

  பதிலளிநீக்கு
 53. அளவுக்கு அதிகமான செலவு செய்வது தான் நாகரீகம் என நினைக்கிறார்கள் சிலர்....

  நல்ல கருத்துள்ள பகிர்வு.

  பதிலளிநீக்கு
 54. உண்டானபோது கோடானகோடி
  உறமுறையார்
  இல்லாதபோது கண்டாலும் பேசார்
  அழைத்தாலும் வாரார்
  சண்டாளரோடு உறவாகாது....

  /////
  சிறப்பான பதிவு ... ஒவ்வொருவரும் உணரவேண்டியது...

  பதிலளிநீக்கு
 55. தென்கச்சி அவர்கள் பற்றி சொன்ன விஷயம் புதிது. தேவைகளை சுருக்குவது.... நிச்சயம் கடைபிடித்தால் வாழ்வு இனிமையானதாக அமையும்.

  பதிலளிநீக்கு
 56. பழந்தமிழர் நாகரீகம் அனைத்து வித வாழ்வியல் கோட்பாடுகளையும் அனுசரித்துதான் இருந்திருக்கிறது. திருமணம் கூட அப்படி ஒரு நிகழ்வாகத்தான் இருந்திருக்கிறது. திருமண வீடு,சொந்த பந்தங்கள் எல்லாம் ஒன்றாய் கூடி, ஒரு வாரமோ பத்து நாளோ சேர்ந்து இருந்து கொண்டாட்டமாக அந்த நிகழ்வை எடுத்துச் செல்லும் ஒரு சந்தர்ப்பமாகவே திருமணங்கள் இருந்திருக்கின்றன. ஒரு ஜோடியை சேர்த்துவைக்கும் நிகழ்வில், பல புதிய ஜோடிகள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன. இப்போது அப்படியா இருக்கிறது?
  நேரம் கிடைத்தால் எனது வலைப்பதிவிற்கும் வாருங்கள்.
  http://muthuramsrinivasan.blogspot.in
  நன்றி.

  பதிலளிநீக்கு
 57. வணக்கம் திரு. டிடி அண்ணா..

  அற்ப்புதமான சிந்தனையுடன் அட்டகாசமான பகிர்வை தந்தமைக்கு மிக்க நன்றி'ணா..

  காந்திஜி அவர்கள் சொன்ன கருத்து, இக்கால தலைமுறையினருக்கு நச்சென்று பொருந்தும்..

  ஆடம்பரம் பற்றி நான் படித்த ஒரு சிறு வேறுபாட்டை தங்களிடம் இங்கு பகிர்கிறேன் திரு. டிடி அண்ணா..

  கோடை விடுமுறைக்கு ரஜினி இமயமலை போனா அது எளிமை.. அதுவே நாம போனா அது ஆடம்பரம்..இது தான் வித்தியாசம்.. (Henry FORD பற்றி படித்ததும் நினைவிற்க்கு வந்தது'.. )...:)


  பதிலளிநீக்கு
 58. தனது தேவைக்கு மேல் பொருட்கள் வைத்திருப்பவன் திருடன் என்ற மகாத்மாவின் சொற்களுக்கு ஏற்ப வாழ்க்கை நடத்தில் திரு தென்கச்சி அவர்கள் எல்லோருக்கும் முன் உதாரணமாக ஜொலிக்கிறார்.
  எங்களுடன் இந்த நிகழ்வைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி, பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.