🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



பரிசு பெறுவதா...? கொடுப்பதா...?

அச்சச்சோ...! கப்பல் கவிழ்ந்து இப்படி நாம மட்டும் இந்த ஆளேயில்லாத தீவிலே ஒதுங்கிட்டோமே... சாப்பிடக் கூட எதுவும் இல்லையே இங்கு...!

கவலைப்படாதே நண்பா... இதோ கடவுளிடம் மனமுருகப் பிரார்த்தனை செய்கிறேன்... "கடவுளே... சாப்பிட ஏதாவது ஒரு வழி செய்...!"


நன்றி... பல பழ மரங்கள் வந்து விட்டன... வா... பறித்துச் சாப்பிடுவோம்...

குடிக்கத் தண்ணீர் வேண்டாமா...? "கடவுளே, தண்ணீர் வேண்டும்...!"

ஆகா... அழகான நீருற்று... நன்றி நன்றி நண்பா...

சரிப்பா... இங்கே வந்து ரொம்ப நாள் ஆச்சி... அதனால் பிரார்த்திக்கிறேன் "இந்தத் தீவிலிருந்து எப்படியாவது வழி ஏற்படுத்தித் தாருங்கள் கடவுளே...!"

ஐ...! கப்பல் வந்து விட்டது...! வாப்பா போகலாம்...

(பிரார்த்தனை செய்வது நான்... ஆனால், பலன்களையெல்லாம் இவனும் அனுபவிக்கிறானே...! ம்...) "நீ ஏறாதே...!"

"ஏன் தடுக்கிறாய்...?" வானத்திலிருந்து கடவுளின் குரல்...!

கடவுளே, என்னைப்போல அவன் நெடுநேரமோ, பலமுறையோ பிரார்த்திக்கவில்லை; ஆனால் அவனும் தப்பிப்பது என்ன நீதி ? நியாயம் ?

அவனும் என்னிடம் பிரார்த்தனை செய்வே செய்தான்... ஆனால் குறைந்த நேரத்தில்...! அவன் பிரார்த்தித்தது எல்லாம் என்ன தெரியுமா...? "கடவுளே, என் நண்பன் என்னவெல்லாம் கேட்கிறானோ, அதையெல்லாம் நிறைவேற்றி வை; அது ஒன்றே போதும்" என்பது தான்...!

(படம் : சுமைதாங்கி) மனிதன் என்பவன் தெய்வமாகலாம்; வாரி வாரி வழங்கும் போது வள்ளல் ஆகலாம்; வாழை போல தன்னைத் தந்து தியாகி ஆகலாம்; உறுதியோடு மெழுகு போல ஒளியை வீசலாம்; மனிதன் என்பவன் தெய்வமாகலாம் தெய்வமாகலாம்; ஊருக்கு என்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகள் ஆகலாம்; உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்கள் ஆகலாம்2 யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்; மனம்-மனம் அது கோவிலாகலாம்...!

நண்பனாக வந்த மனசாட்சியே... "ஆகலாம்" என்பதை "ஆக்கணும்...!"

அது சரி... திடமாக, பொறுமையாக, நிலையான நம்பிக்கைங்கிற அஸ்திவாரத்தோடு பிரார்த்தனை செய்தால், பூரணப் பலனைக் கொடுக்கும் என்பது தெரிந்தது தான்... ஆனா, பிரார்த்தனை பண்றதுக்கோ, கடவுளை வணங்குறதுக்கோ ஒரு நாளைக்கு எத்தனை மணிநேரம் செலவழிக்கணும்...?

நல்ல நினைவுகள், நல்ல செயல்கள் இருந்திச்சின்னா, எப்போவுமே கடவுள் நம்ம கூடத் தான் இருப்பாரு... நம்ம வாழ்க்கையிலே நாம சாப்பிட, தூங்க, விளையாட, வேலை பார்க்க என்று நேரங்களை ஒதுக்குவது போல, வழிபாடு அல்லது பிரார்த்தனை செய்ய நேரம் ஒதுக்குவது அவசியம் தான்... ஆனா, நாம் செய்யும் ஒவ்வொரு செயலின் போதும் இறையுணர்வோடு செயல்பட்டால், தனியாக இதற்கு நேர ஒதுக்கீடு என்பது தேவையில்லாமல் கூடப் போகலாம்...! "லாம்" இல்லை... நேர ஒதுக்கீடு அவசியமேயில்லை...!

ஆக, ஐந்து வினாடி பிரார்த்தனை பண்றதும் ஒன்னு தான்... ஐந்து மணிநேரம் பிரார்த்தனை பண்றதும் ஒன்னு தான்... நேரம் முக்கியமில்லை... எவ்வளவு ஆழமா பிரார்த்தனை பண்றோம்கிறது தான் முக்கியம்ன்னு சொல்றே...! அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவே இல்லையடா, மனதின் நீளம் எதுவோ அதுவே → வாழ்வின் நீளமடா...! அன்பே சிவம் ← படம்

பரிசு பெறுவதா...? கொடுப்பதா...?

அதாவது வாழ்க்கையில் பல பரிசுகள் வாங்குவது முக்கியம் தான்... அதே பரிசுகளைக் கொடுக்கும் நிலைக்கு முன்னேறுவது அதை விட மகிழ்ச்சி தானே...? அதே போல் ஆழமான பிரார்த்தனையை விட யாருக்காக, எதுக்காகப் பிரார்த்தனை செய்கிறோம் என்பது முக்கியம்...! ஏனென்றால், பிறருக்காகச் செய்வது தான் பிரார்த்தனை... எண்ணம் போல் வாழ்வு - அவரவர் மனசாட்சி கடவுளிடமிருந்து பிரார்த்தனைக்கேற்ப பரிசு உண்டு...! அடுத்தவன் கண்ணில் இன்பம் - காண்பதும் காதல் தான்... இனி இவன் நெஞ்சில் இல்லை பாரம்... ஓ ஹோ... தனக்காக வாழ்வதா வாழ்க்கை...? விழி ஈரம் மாற்று தந்த போக்கை - இவன் பாவம் கங்கையில் தீர - என்று நாளும் வணங்கும் நம் தெய்வம் எங்கே இருக்கிறது...? ஓ ஹோ... தெய்வம் வாழ்வது எங்கே...2 தவறுகளை உணரும் மனிதன் நெஞ்சில்...

© வானம் நா.முத்துக்குமார் யுவன் ஷங்கர் ராஜா 🎤 யுவன் ஷங்கர் ராஜா @ 2011 ⟫

நண்பர்களே... பிரார்த்தனை விசயமே பலன் பெற்றவருக்குத் தெரியாது... பிரார்த்தித்தவர்க்குத் தன்னால் கிடைத்த பலன் வியப்பையும், மகிழ்ச்சியையும் கொடுத்தாலும், மேலும் பிரார்த்தனை மீது நம்பிக்கை வராமல், மனித மனம் நொடிப் பொழுதில் எப்படி மாறுகிறது என்பதற்குப் பதிவின் ஆரம்பக் கதை ஒரு சான்று... நமக்கு உதவ நம் மூளையைப் பயன்படுத்துவோம்... பிறருக்கு உதவ நம் மனதைப் பயன்படுத்துவோம்... தனக்காக மட்டும் பிரார்த்திப்பது மனிதனின் சாதாரண இயல்பு... அனைத்து உயிர்களிடத்தும் கருணைக் கொண்டு காத்து, அவற்றின் மீது அருள் உள்ளவனுக்குத் தன் உயிரைப் பற்றி எவ்வித பயமும் வாராதென்று நம்ம ஐயன் சொல்கிறார் : மன்னுயிர் ஓம்பி அருளாள்வாற்கு இல்லென்ப தன்னுயிர் அஞ்சும் வினை. (244) பிறருக்காகப் பிரார்த்தனையை விட உலகில் உயர்ந்த உன்னதச் செயல் வேறேதும் உண்டோ...?

கொடுப்பதற்கு எந்தக் குணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்...? அறிய இங்கே சொடுக்கித் தொடரலாம். அதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றி தங்களின் கருத்து என்ன...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. இறையுணர்வு என்பதை நம்பிக்கை என்றும் வைத்துக் கொள்ளலாம்!

    கோவிலுக்குச் சென்றால் எனக்கு இதைக் கொடு, என் பிள்ளை நன்றாகப் படிக்க வேண்டும் என்றெல்லாம் பிரார்த்திப்பதே அர்த்தமில்லாமல் தோன்றும் எனக்கு!

    பதிலளிநீக்கு
  2. சுயநலம் இல்லாத நல்லதொரு பிரார்த்தனை என் நாளும் நல்லதே நல்கும்!

    நல்லதொரு பதிவு! DD!

    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  3. தனக்கான சுயநலத்தில் இருக்கும் சக்தியை விட
    அடுத்தவருக்கான பொதுநலத்தில் ஒரு உண்மையான சக்தி இருக்கத்தான் செய்கிறது....

    தொடக்கத்தில் அழகிய நல்ல கதை....

    பதிலளிநீக்கு
  4. நாட்டுல நிறையப்பேர் இப்படித்தான் இருக்கிறார்கள்... நாள் முழுவதும் கடவுளிடம் பக்தியாக இருப்பதாக காட்டிக்கொண்டு நம்மை மிகப்பெரிய பக்திமான எண்ணிக்கொள்கிறார்கள்...

    உண்மையான பக்தி பேர்டும் வேஷத்தில் இல்லை...
    நினைக்கும் எண்ணத்தில்தான் இருக்கிறது...

    நல்லதொரு பதிவு

    பதிலளிநீக்கு
  5. ஒரு பொருளை பெறுவதில் உள்ள ஆனந்தத்தைவிட, ஒரு பொருளை மற்றவர்களுக்குக் கொடுப்பதில் ஏற்படும் ஆனந்தம்தான் அதிகம். வழங்கிப் பழகுவோம்.

    பதிலளிநீக்கு
  6. வழக்கம் போல உங்கள் பாணியில் இறை நம்பிக்கை எப்படி இருக்க வேண்டுமென்பதனை உணர்த்தும் உன்னத பகிர்வு!

    நன்றி சகோ!

    பதிலளிநீக்கு
  7. பிரார்த்தனை என்பதே பிரபஞ்ச சக்தியோடு தொடர்பு கொள்ள வைக்கக் கூடியது.

    பதிலளிநீக்கு
  8. தெய்வம் வாழ்வது எங்கே.. அருமையான கருத்துள்ள பாடல்..

    நல்ல பகிர்வு..

    பதிலளிநீக்கு
  9. நல்லதொரு கற்பனைக் கதை. தங்களின் நல்ல மனதைப் போற்றுகிறேன்.

    பதிலளிநீக்கு
  10. மிக அருமையான பதிவு
    நீங்கள் வேண்டும் எல்லாம் கிடைக்க நான் வேண்டுகிறேன்...
    (மொதல்ல நான் கேட்ட படங்களை குடு அப்புறம் பேசு என்கிற உங்கள் மைன்ட் வாய்ஸ் கேட்குது)
    நன்றி..

    பதிலளிநீக்கு
  11. பிறருக்காக பிரார்த்தனை செய்வதைவிட உலகில் வேறெந்த உன்னத செயலும் இல்லை என்பதை அழகாக தங்கள் பாணியில் கதையையும் திரைப்படப் பாடலையும் இணைத்து சொல்லியுள்ளீர்கள். இரசித்தேன்.வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  12. அருமையான கதையுடன் கட்டுரை. போட்டோ எல்லாம் எப்படி பொருத்தமா கண்டுபிடிக்கிறீங்க? வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  13. இறை நம்பிக்கையோடு அவன் தாளில் தஞ்சம் புகுந்தாலே எல்லாம் கிட்டும் எதையும் குறிப்பிட்டு கேட்க தேவை இல்லை. குசேலர் கிருஷ்ணரை பார்க்கப் போன போது அவர் எதையும் சொல்லவில்லை. ஊர் திரும்பியதும் தேவையான அனைத்தும் அங்கிருக்க கண்டார்.
    ஆண்டவன் நம்பிக்கை, அன்பு ஒன்றே போதும்.அது நல்வழிப்படுத்தும்.
    வழமை போல் அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.....!

    பதிலளிநீக்கு
  14. மனிதன் என்பவன் தெய்வமாகலாம்! உண்மை சகோதரரே. அன்பைக் கொடுத்தால் அன்பைப் பெறலாம். அன்பே தெய்வம்! நாமும் தெய்வமாகலாம்! ஆகா, தெய்வமாவது இவ்வளவு எளிதா?

    அன்புடன்
    பவளா

    பதிலளிநீக்கு
  15. யஸ்ய பிரம்மனி ரமதே சித்தம்
    நந்ததி நந்ததி நந்தத்யேவ

    என ஆதி சங்கரர் தனது மோஹ முத்கரஹ எனப்படும் பஜ கோவிந்தத்தில் சொல்வதை

    எளிய நடையில் நீங்கள் சொல்வது
    அற்புதம்.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  16. பிரார்த்தனை விளக்கம் அருமை ...இந்த பதிவுக்கு நிறைய வோட் விழுந்து அதிக வாசகர் பரிந்து உரைத்த இடுகையில் தோன்ற பிரார்த்திக்கிறேன் !காரணம் ...ஹிஹி!
    த ம 7

    பதிலளிநீக்கு
  17. அருமையான கதை...! அதைப் படைத்த விதமோ அருமையிலும் அருமை...!
    //மனதின் நீளம் எதுவோ... அதுவே வாழ்வின் நீளமடா... // அருமையான வரிகள்...!

    வாழ்த்துக்கள்...!

    பதிலளிநீக்கு
  18. நல்லதொரு பதிவு.
    "//பிராத்தனைக்கு நேரம் முக்கியமில்லை. எவ்வளவு ஆழமா பிராத்திக்கிறோம் என்பது தான் முக்கியம்//" - உண்மை. உண்மை.

    கோவிலுக்கு போய், உதடு மட்டும் இரவனிடம் பிராத்தித்துக்கொண்டு இருந்து, கண்ணும் மனதும் மற்றவர்களிடம் இருந்தால், அது பிராத்தனையே கிடையாது.

    சிறப்பான ஒரு பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  19. பைபிளில் சொல்லியிருப்பது: கடுகளவு நம்பிக்கையில் வேண்டினாலும் மலையையும் நகர்த்த முடியும் என்று..அதனால் நேரம் பொருட்டல்ல..எவ்வளவு நம்பிக்கை என்பதே முக்கியம்.
    பிறருக்குப் பிரார்த்திப்பது மிகச் சிறந்தது..சாலையில் செல்லும் ஆம்புலன்சில் இருப்போருக்கு அரை நிமிடம், மருத்துவமனையில் இருப்பவர்களுக்காக அரை நிமிடம், மனித உரிமை மறுக்கப்படுபவர்களுக்காக அரை நிமிடம் என்று பிறருக்குப் பிரார்த்திக்க பல விசயம் இருக்கிறது...
    நல்லதொரு கருத்துமிக்க பதிவிற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  20. இப்போதெல்லாம் பிராத்தனை என்பது மிகவும் அறிதாகிவிட்டதோ என்று எண்ண தோன்றுகிறது சார்......... ஒரு முறை கோவிலில் கண்களில் நீர் வடிய மனமுருகி பிராத்தனை செய்தவரை பார்த்தேன், எனக்கும் மனம் உருகியது. அப்படிப்பட்ட பிராத்தனைகளை இந்த பொருள் தேடும் உலகத்தில் எதிர்பார்க்க முடியுமா ?!

    எனினும் உங்கள் சிந்தனைகள் சிரிக்கவும், சிந்திக்கவும் செய்கிறது ! நன்றி !

    பதிலளிநீக்கு
  21. எல்லாரும் வாழ வேண்டும் என - பிரார்த்தனை செய்வதே உன்னத தவம். அதைவிட சிறந்தது வேறெதுவும் இல்லை!..

    நல்ல விஷயத்தினை விளக்கும் இனிய பதிவு!..
    வாழ்க வளமுடன்!..

    பதிலளிநீக்கு
  22. அனைவருக்காகவும் தியானம் செய்யும் போது அந்த நன்மை
    நமக்கும் கிடைக்கும். நல்ல கருத்து. நன்றி.

    பதிலளிநீக்கு
  23. பிரபஞ்ச சக்தி என்றால் என்னவென்று ஜோதிஜி சொல்லட்டும்.. :-)

    பிரார்த்தனை எண்ணத்தின் வேர் பொதுநலம்.. அதனால் பிரார்த்தனை செய்வதால் மனம் சுத்தப்படும் என்பதில் சந்தேகமில்லை.

    பிரார்த்தனைக்கும் வேண்டுதலுக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் மிக மிக அதிகம்.

    பதிலளிநீக்கு
  24. பிரார்த்தனையினால் ஆகாதது ஒன்றும் இல்லை. முதலில் இறையை நினைத்து மனம் உருகும் போது நமக்கே கிடைக்கும் மகிழ்ச்சி. அது பெருகி மற்றவர்களையும் வாழவைத்தால் அது இரட்டிப்பாக்கிகிறது. மிக மிக நன்றி தனபாலன்.

    பதிலளிநீக்கு
  25. ஆன்மா முயன்று எழுப்பும் குரல் பிரார்த்தனை.

    பிரார்த்தனை என்பது தெய்வீகம் பொருந்தியது.

    பிரார்த்தனை ஒரு வணக்கம் என்பதாக நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்

    பதிலளிநீக்கு
  26. எனது பிரார்த்தனைகள் எல்லாம் சில நிமிடங்கள் மட்டுமே அதுவும் படுக்கையில் இருக்கும் போதுதான் இறைவா எல்லாம் உனது செயல். நான் நல்லது செய்வதும் தீயது செய்வது உன் செயல்தான் அதனால் ஏறப்டும் விளைவுகளுக்கும் நீதான் காரணம், என்னையும் என்னை சார்ந்த எல்லோரையும் காப்பாற்று என்பதுதான் என் பிரார்த்தனை

    என்னை பொறுத்தவரை நல்லது செய் நல்லது நடக்கும் அதுதாமதமாக வந்தாலும் நல்லாதாகவே இருக்கும்

    பதிலளிநீக்கு
  27. அகத்தில் உள்ளது வெளியே அதுவே உங்கள் மனதும் இறை நம்பிக்கையில் ஆழமாக உள்ளது என்பதனை வெளிப்படுத்தும் சிறப்பான கட்டுரை .
    நமது ஒவ்வொரு செயலும் இறைவன் நினைவோடு இருப்பது உயர்வு .நல்லதும் கெட்டதும் நடப்பதாக நாமே நினைத்துக் கொள்கின்றோம் .கெட்டதாக உள்ளதும் ஒரு நன்மையின் காரணமாகவே இருக்கக் கூடும். கடமையை செய் மற்றதை இறைவனிடம் விட்டு விடு .
    இறைவா நீ என்னை படைத்தாய் அதற்காகவே உன்னை தொழுகின்றேன் .நரகத்திற்கு பயந்தோ அல்லது சுவனத்திற்கு ஆசைப்பட்டோ அல்ல . என்னை எங்கே அனுப்புவது என்பது உன் வசம் உள்ளது .உன்னை வணங்குவது என் ஆத்மாவில் உறைந்துள்ளது .
    “Should I tie my camel and have Tawakkul (trust in Allah for her protection) or should I leave her untied and have Tawakkul.” Rasul Allah (sal Allahu alaihi wa sallam) replied, “Tie her and have Tawakkul.” -நபி மொழி
    Tawakkul means to put in one's best efforts to do what Allah expects one to do and then leave the results to Allah's will.

    பதிலளிநீக்கு
  28. "ஐந்து வினாடி பிரார்த்தனை பண்றதும் ஒன்னு தான்...
    ஐந்து மணி நேரம் பிரார்த்தனை பண்றதும் ஒன்னு தான்...
    நேரம் முக்கியமில்லை...
    எவ்வளவு ஆளமா பிரார்த்தனை பண்றோம்கிறது தான் முக்கியம்" என்ற
    வழிகாட்டலை வரவேற்கிறேன்"
    தங்கள் பணி தொடர வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  29. பிரார்த்தனை என்பது கடவுளையும் மனிதனையும் இணைக்கிற இணைப்பு. இதற்கு மணிக்கணக்கான வேண்டுதல்கள் தேவையில்லை தூயமனதுடன் பிரார்த்திக்கிற நிமிடநேரமே போதும்.

    எளிமையான எடுத்துக்காட்டுடன் அருமையான பதிவு.

    பதிலளிநீக்கு
  30. மனிதன் என்பவன் தெய்வமாலாம் அருமையான பாடல்! அதுபோல நாம் வாழ முற்பட்டால் உலகமே சொர்க மாகிவிடும் ! தனபால்!

    பதிலளிநீக்கு
  31. அருமையான கருத்துக்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை இறைவனை 'என்றும் என்னோடு இரு' என்று கேட்டாலே போதும். இது வேண்டும் அது வேண்டும் என்று கேட்பதும் நீ இதை கொடுத்தால் பதிலுக்கு இதை நான் காணிக்கையாக தருகிறேன் என்பதெல்லாம் ஒரு வியாபாராம் போலத்தான். இன்று எம்மை வழிநடத்தும் என்ற ஒரே பிரார்த்தனை போதும்.

    பதிலளிநீக்கு
  32. பெரிய விஷயத்தை எளிமையாக சொல்லிவிட்டீர் கள் .

    சுயநலமில்லாத பிறருக்காக செய்யப்படும் பிரார்த்தனை உன்னதமானது ...

    அதனால் தான் இன்றும் பல பெரிய பிரச்சனைகளுக்கு கூட்டுப் பிரார்த்தனை நல்ல பலன் தருகிறதோ?

    பதிலளிநீக்கு
  33. அருமையான விளக்கம் மனம் நெகிழப் படித்தேன் .நாம் செய்கின்ற
    ஒவ்வொரு செயலுக்கும் பின்னால் இறை பக்தி இருக்க வேண்டும் .
    கிட்டும் நன்மை தீமை அனைத்தையும் அறிந்தவன் அவன் ஒருவனே
    என்ற உணர்வு வேண்டும் ஆதலால் உள்ளத்தளவு ஒழுக்கமும்
    நேர்மையும் உடையவர்கள் பிரார்த்திக்கும் போது பிறர் நலனை
    எண்ணிப் பிரார்த்திப்பார்கள் பிறருக்காக உழைப்பார்கள் அவர்களை
    இறைவன் எங்கிருந்தாலும் ரட்சிப்பார் என்பது தான் மிகச் சரியான
    கருத்து .தங்களின் இந்த கருத்தைக் கண்டு தலை வணங்குகின்றேன்
    அருமைச் சகோதரரே .வாழ்த்துக்கள் தாங்களும் தங்கள் உறவினர்களும் எங்கிருந்தாலும் சிறப்பாக வாழ்கவென மனதார வாழ்த்துகின்றேன் .மிக்க நன்றி சகோதரா பகிர்வுக்கு .

    பதிலளிநீக்கு
  34. 'எத்தனை நேரம் பிரார்த்தனை செய்கிறோம் என்பது முக்கியமில்லை; எத்தனை ஆழத்துடன் (உள்ளன்போடு) பிரார்த்திக்கிறோம் என்பதுதான் முக்கியம்' - அருமையான வரிகள்!

    நமக்காகப் பிரார்த்தனை செய்யும்போது கிடைக்கும் பலனை விட, பிறருக்காக உருகி பிரார்த்திக்கும்போது கிடைக்கும் நிம்மதியும், மகிழ்ச்சியும் அதிகம், இல்லையா?

    பதிலளிநீக்கு
  35. நமக்காக பிரார்த்திக்கும் போது கிடைக்கும் உணர்வைக் காட்டிலும் பிறருக்காக பிரார்த்திக்கும்போது நம்முள் உருவாகும் மாற்றம் அளப்பரியது.. பிறருக்காக உண்மையிலேயே உருகிப் பிரார்த்திக்கும் போது இறை கருணை நம்மீது அளவின்றி பொழிவதைக் கண்கூடாகக் காணலாம் !

    பதிலளிநீக்கு
  36. தனக்காகச் செய்யும் பிரார்த்தனையை விடப் பிறருக்காகச் செய்யும் பிரார்த்தனை நிச்சயம் பலன் தரும்!அருமை டிடி

    பதிலளிநீக்கு
  37. "யாருக்காக எதுக்காகப் பிரார்த்தனை செய்கிறோம்,என்பது முக்கியம்.ஏனென்றால் பிறருக்காக செய்வதுதான் பிரார்த்தனை" உண்மை(சரியான)யான கருத்து. முதல் கதை அருமை.நல்ல பாடல் தெரிவுகள்.வாழ்த்துக்கள்.நன்றி.

    பதிலளிநீக்கு
  38. எண்ணம போல் வாழ்வு.......இதுதான் உண்மை
    நண்பரே இதற்கு வெளியே இருக்கும் கடவுள் தேவையில்லை
    நம் மனதிற்குள் இருக்கும் எண்ணம் என்ற கடவுளே போதுமானது இல்லையா?

    பதிலளிநீக்கு
  39. அருமையான அழகான பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    பெறுவதை விட கொடுப்பதில் தான் உண்மையான இன்பம் என்பது மனம் ஓரளவு பக்குவப்பட்ட பின்னரே தோன்றக்கூடிய, இறைவன் அளித்த மிகச்சிறந்த பொக்கிஷம் போன்ற பரிசாகும்.

    பதிலளிநீக்கு
  40. ஒரு கதை நினைவுக்கு வருகிறது. நாரதருக்குத் தான் தான் அதிக பக்திமான் எனும் நினைப்பு.ஆனால் மஹாவிஷ்ணு வேறு விதமாக நினைத்தார். நாரதரை கையில் ஒரு அகலுடன் அது அணையாமல் உலகை சுற்றி வரச் சொன்னார். நாரதர் கவனமெல்லாம் அகல்விளக்கு அணையாமல் இருப்பதிலே கவனம் செலுத்தியதால் நாராயணஸ்மரணம் செய்ய முடியவில்லை. விஷ்ணு ஒரு குடியானவனைக் காட்டி அவன் எல்லா வேலைகள் துன்பங்கள் இடையில் படுக்கச் செல்லும்போது ஈஸ்வரோ ரக்‌ஷது என்று பிரார்த்திப்பதைக் காட்டி. எந்தக் கஷ்டத்திலும் ஒரு நொடியாவது இறைவனை பிரார்த்திப்பதே சிறந்தது என்று கூறித் தெளிவித்தாராம்
    நல்ல பதிவு .வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  41. அடுத்தவர் நலனை நாடுபவர் தமக்கு எல்லா நாளும் சுபதினம்.

    பதிலளிநீக்கு
  42. பிரார்த்தனை கதை பிரமாதம்... நெகிழ வைத்தது.

    பதிலளிநீக்கு
  43. வணக்கம்
    அண்ணா

    கடவுள் பக்தி எப்படி இருக்க வேண்டும் என்பதை மிக தெளிவாக பாடல்கள் மூலமும் குறள் வழியாகவும் மிகச் சிறப்பாக எடுத்துச்சொல்லியுள்ளீர்கள்... வாழ்த்துக்கள் அண்ணா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  44. தனக்கு தீங்கிழைத்தவனுக்கும் நல்லது நடக்கவேண்டும் என்று வேண்டுவதே உண்மையான பிரார்த்தனை. .அது இருவருக்கும் நன்மை பயக்கும்

    பதிலளிநீக்கு
  45. மிக மிக அற்புதம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  46. பரிசு பெறுவதைவிட
    பரிசு கொடுக்கும் நிலைக்கு
    உயரும் வாழ்வே சிறப்பு...!

    பதிலளிநீக்கு
  47. பிராத்தனையின் பொருள் புரிந்து கொண்டேன்.

    நன்றி தனபாலன் அண்ணா.

    பதிலளிநீக்கு
  48. பிறருக்காகச் செய்வதுதான் பிராத்தனை.... உண்மைதான்.

    பதிலளிநீக்கு
  49. நன்று...
    இதையேத்தான் டைரக்டர் பாக்யராஜ், ஒரு முறை, தன் பத்திரிக்கையின் கேள்வி-பதில் பகுதியில் "சந்தோசத்துல பெரிய சந்தோசமே, அடுத்தவங்கள சந்தோசப் படுத்தி பாக்கறது தான்"ன்னு சொல்லியிருப்பாரு...!!

    பதிலளிநீக்கு
  50. கொடுப்பதில் அதிகம் ஏற்படும் ஆனந்தம்.
    மிக அற்புதம்!
    நல்ல பதிவு .வாழ்த்துக்கள்..
    Vetha.Elangathilakam.

    பதிலளிநீக்கு
  51. பிரார்த்தனை என்பது பக்தனையும் இறைவனையும் இணைக்கும் பாலம்!.. இறைவனது திருமுன் உலகனைத்தும் வாழ, வேண்டுவதே சிறந்தது!.. இறைவன் அறியானா நம்மை!!!.. ' வேண்டத்தக்கது அறிவோய் நீ!
    வேண்ட முழுதும் தருவோய் நீ!' என்பதே நம் பிரார்த்தனை!..

    மிக அருமையான, மிகச் சிறப்பான பகிர்வு.. மிக்க நன்றி!..

    பதிலளிநீக்கு
  52. அருமை DD.
    குறிப்பா நாம் மற்றவர்க்கு பிரார்த்தனை செய்து பழகவேண்டும் .

    பதிலளிநீக்கு
  53. பரிசு பெறுவதைவிட, பரிசு கொடுப்பதில் உள்ள மனநிறைவு அதிகமாக உள்ளதை நான் அனுபவத்தில் கண்டுள்ளேன்.

    பதிலளிநீக்கு

  54. 'உன்னைப்போல உன் அயலானையும் நேசி' என்பது பைபிள் வசனம். இதனை மிக அழகாக எடுத்துரைத்துள்ளீர்கள். அருமையான செய்தி.

    108 அல்லது ஆம்புலன்ஸ் சைரன் கேட்டாலோ வண்டியை பார்த்தாலோ நான் அவர்களுக்காக பிராத்திப்பது உண்டு.

    பதிலளிநீக்கு
  55. //பிறருக்கு உதவ மனதைப் பயன்படுத்துவோம்//
    அதற்கும் மூளையைப் பயன்படுத்தலாமே!

    பதிலளிநீக்கு
  56. சுய தேவையன்றி மற்றவர்களின் நலனுக்கு பிரார்த்திப்பது எப்போதும் நல்லது அருமையான பகிர்வு தனபாலன் சார் எப்போதும் போல என்றாலும் இன்று என் நெஞ்சில் பதிந்துவிட்டது! வானம் பாடல் போல நீங்கள் அறிவீர்கள்§§

    பதிலளிநீக்கு
  57. இது உண்மைங்க.
    பிறருக்காக பிரார்த்திக்கும் போது அதற்கு வலிமை அதிகம். இது மட்டுமல்லாது அந்த பிரார்த்தனை நம்மை உயரத்தில் கொண்டுபோய் நிறுத்தும்.

    பதிலளிநீக்கு
  58. நேர ஒதுக்கீடு பற்றிய கருத்து & பிறருக்காகச் செய்வதுதான் பிரார்த்தனை - 100% உண்மை தனபாலன். அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  59. நாம் செய்யும் ஒவ்வொரு செயலின் போதும் இறைவனை வணங்கி செயல்பட்டால் தனியாக இதற்கு நேர ஒதுக்கீடு என்பது தேவையில்லை என்பதை மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.
    பதிவிற்குப் பொருத்தமான திரைப்பாடல்கள். வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  60. அருமையான வரிகள், பாடல்கள். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  61. தனக்காக பிரார்த்தனை செய்வதை விட அடுத்தவர்களுக்காக செய்தால் உடனடி பலன் நிச்சயம்.

    நல்ல பதிவு அண்ணா....

    பதிலளிநீக்கு
  62. நல்ல பதிவு எனக்குள் ஒரு தெளிவை உருவாக்கியுள்ளது ... இத்தளம் மென்மேலும் வளர இறைவனை வேண்டுகிறேன்

    பதிலளிநீக்கு
  63. பிரார்த்தனை எப்படி அமைய வேண்டும் என்று சிறப்பாய் விளக்கியது பதிவு. நமக்கு உதவ நம் மூளையை பயன்படுத்துவோம்! பிறருக்கு உதவ மனதை பயன்படுத்துவோம்! மிகவும் பிடித்த வரிகளாய் அமைந்தது. இரண்டு நாட்களாக சிவராத்திரி வழிப்பாட்டு வேலைகளில் ஈடுபட்டதால் உடனே கருத்திட முடியவில்லை! நன்றி!

    பதிலளிநீக்கு
  64. எனக்கு ரெண்டு பாட்டும் பிடிக்கும். மேலும் நண்பர்கள் கதை அட்டகாசம் அண்ணா !

    பதிலளிநீக்கு
  65. அன்புக்குள் ஊறும் அமுதங்கள் உண்டாலே
    துன்பங்கள் ஓடும் தொலைந்து !

    குறுங்கதையில் நல்லதொரு விளக்கம் ..அன்பால் உலகையே ஆளலாம்
    தொடர்ந்து இதுபோல் பதிவுகள் இடுங்கள்

    இனிய வாழ்த்து வாழ்க வளமுடன்


    பதிலளிநீக்கு
  66. சிறுகதை அருமையான விளக்கம். பிராத்தனைக்கு அழகான விளக்கம். தொடருங்கள்.
    வாழ்த்துக்களுடன் வாழ்க வளமுடன்.
    வேலன்.

    பதிலளிநீக்கு
  67. மற்றவர்களுக்காக பிரார்த்திப்பதில் ஒரு ஆத்ம த்ருப்தி தான். சிறப்பான பகிர்வு.

    பதிலளிநீக்கு
  68. மிக அருமையான குட்டி கதையுடன் தொடங்கிய இந்த பதிவு மனதில் நிலைக்கிறதுப்பா..

    பிரார்த்தனைகள்: எங்கோ தெரியாத ஒரு வனாந்திரத்தில் மாட்டிக்கொண்டபோது பசியை தீர்க்கவும் வீட்டை சென்று அடையவும் பிரார்த்தனை செய்யும் மனிதன் தன்னுடன் இருக்கும் நண்பன் பிரார்த்திக்காதபோது அவனுக்கு என்ன தகுதி இருக்கிறது இந்த பலன்களை அனுபவிக்க என்று கேட்கிறான். ஆனால் இவன் அறியாத ஒரு விஷயம் என்னவென்றால் அவன் கேட்ட ஒரே ஒரு எளிய வரம் இறைவனிடம் என் நண்பன் வேண்டுவதெல்லாம் நிறைவேற்றிக்கொடு பகவானே என்பது மட்டுமே.. தனக்காக பிரார்த்திப்பது என்பது மனித இயல்பு.. ஆனால் அதுவே பிறருக்காக பிரார்த்திப்பது என்பது தெய்வ இயல்பு…

    எத்தனைப்பேருக்கு இப்படி ஒரு உன்னதமான மனநிலை இருக்கிறது? நாம் நினைப்பதை, நாம் கேட்பதை எல்லாம் கடவுள் நமக்கு பிறர் மூலமாக கொடுக்க வைக்கிறார். அது சந்தோஷமான விஷயம் தான். ஆனால் அதுவே நாம் கொடுக்கும் நிலைக்கு முன்னேறுவது என்பது அதை விட அற்புதமான விஷயம் அல்லவா? எத்தனை ஒரு அற்புதமான விஷயத்தை எளிதாய் சொல்லிவிட்டீர்கள்..

    நான் நல்லா இருக்கணும்.. என் குடும்பம் நல்லா இருக்கணும் என்று இறைவனிடத்தில் வேண்டுவோர் இடையே…. தனக்காகவும் தன் குடும்பத்துக்காகவும் எதுவுமே இறைவனிடம் வேண்டாமல் பிறரின் நலனுக்காக மட்டுமே பிரார்த்திக்கும் அற்புத தெய்வ குணம் கொண்ட மனிதர்களும் உள்ளார்கள் இந்த உலகில்… நானே நேரில் கண்டு தரிசித்திருக்கிறேன் இப்படிப்பட்ட உன்னத உயர்வான மனிதர்களை. தெய்வ சங்கல்பம் இது.

    நீங்க பகிரும் ஒவ்வொரு விஷயமும் ரொம்ப ஆழ்ந்து மனித மனங்களையே புடம் போட வைக்கும் கருத்துகளை எளிமையா சொல்லிவிடுகிறீர்கள்பா… இன்றைய பகிர்வும் அதே போல் தான். பிரார்த்தனை என்பது அபூர்வமான விஷயம் என்றாகிவிட்டது இப்போதைய காலக்கட்டத்தில்.. கடவுளே கடவுளே நான் படிச்சதெல்லாம் எனக்கு வரணும் எக்சாம்ல, நான் பாசாகிடவேண்டும், ஃபர்ஸ்ட் க்ளாஸ்ல பாசாகிவிடவேண்டும் இது பிள்ளைகளின் இயல்பான வேண்டுதல்… அதுவே எல்லோரும் நலமுடன் இருக்க பிரார்த்திக்கும்படி பெற்றோர்கள் பிள்ளைகளை வளர்த்தால் அந்த குழந்தையின் வேண்டுதலே வேறு மாதிரி இருந்திருக்கும். பகவானே எல்லோரும் நல்லா படிச்சு கஷ்டப்பட்டு எழுதிய இந்த பரிட்சையில் எல்லோருமே நல்ல மதிப்பெண் பெற்று பாசாகவேண்டும் என்பதாக இருக்கும்..

    பெறுவதில் இருக்கும் மகிழ்ச்சியை விட நூறு மடங்கு அதிக மகிழ்ச்சி பெறுவோம் கொடுக்கும்போது… கர்ணனின் சந்தோஷம் எப்போதுமே இதில் தான்.. தான் பஞ்சப்பாண்டவருக்கெல்லாம் மூத்தவன் என்று தெரியாது. தன்னை அவமதித்த கூட்டத்திடையே துரியோதனன் வந்து அவமானம் துடைத்து வாழ்க்கை கொடுத்தான் என்ற நன்றிக்கடனுக்காகவே தன் நல்லவைகளை, தர்மத்தை விட்டுக்கொடுக்காமலும் நட்பையும் காத்தவன் கர்ணன். தன்னிடம் வந்து யார் என்ன கேட்டாலும் இல்லை என்று சொல்லும் தயாள குணம் படைத்தவன். இவன் செய்த தர்மமே இவன் உயிரை போக்காமல் சிரமப்பட வைத்தது. அப்போதும் பகவான் க்ருஷ்ணர் அந்தணராக வந்து எனக்கு ஏதேனும் கொடு என்று கேட்டபோது இந்நிலையில் என்னிடம் கொடுக்க என்ன இருக்கிறது என்று கேட்டான் கர்ணன்.. நீ செய்த தர்மம் என்று சொன்னதுமே யோசிக்காமல் உடனே தந்தான் கர்ணன்..

    தன்னை விட உயர்ந்தவனாகிவிடுவானோ என்ற அச்சத்தில் இந்திரன் மாறுவேஷத்தில் வந்து கர்ணனின் கவசக்குண்டலத்தையும் கவசத்தையும் கேட்டபோது வந்தவன் யார் என்று அறியவைத்த சூரியபகவானுக்கு நன்றி சொல்லிவிட்டு மனம் உவந்து கொடுத்தானே கர்ணன்…

    இப்படி ஒரு மனநிலை யாருக்கு வரும்?

    நல்லவைகளை குழந்தைகளுக்கு சிறுவயதில் இருந்தே விதைத்துவிட்டால் மனதில்..

    குழந்தைகள் பிற்காலத்தில் நல்லவை புரியும்.. விட்டுக்கொடுக்கும்… பிறருக்காக பாடுபடும்.. பிறரின் நலன்களுக்காக இறைவனிடம் வேண்டும் என்ற மிக உன்னதமான விஷயத்தை உணர்த்திய பகிர்வுக்கு அன்பு நன்றிகள்பா..

    பதிலளிநீக்கு
  69. மனிதன் என்பவன் தெய்வமாகலாம்... இந்த பாட்டு எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்றாகும். நாங்கள் வண்டியில் போகும்போது இந்த பாட்டு எனக்கு பிடிக்கும் என்பதற்காகவே என் கணவர் திரும்ப திரும்ப முடிந்ததுமே ரீவைண்ட் செய்து போடுவார்... அன்பு நன்றிகள்பா..

    பதிலளிநீக்கு
  70. அருமையான கதை படிப்பினையுடன்
    ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  71. // நமக்கு உதவ நம் மூளையைப் பயன்படுத்துவோம் ...பிறருக்கு உதவ நம் மனதைப் பயன்படுத்துவோம் ! // - வாஹ் ! வாஹ் ! சொல்ல வைத்த வரிகள் ! திருக்குறளை அருமையாக மேற்கோள் காட்டி முடித்ததும் ரசித்தேன் !

    பதிலளிநீக்கு
  72. அன்பு சகோதரருக்கு வணக்கம்
    ஒரு நல்ல உள்ளம் படைத்த மனிதரிடம் இருந்து வந்துள்ள அத்தனை சொற்களும் அழகு. பல இடங்களில் அசந்து போனேன் சகோதரரே. முதல் கதை, பிறருக்காக செய்வது தான் பிரார்த்தனை, எவ்வளவு நேரம் பிரார்த்தனை செய்கிறோம் என்பது முக்கியமல்ல, செய்யும் செயலிலே பக்தி இருந்தால் தனியாக வேண்டுதல் தேவையில்லையே!, நமக்கு உதவ மூளையைப் பயன்படுத்துவோம், பிறருக்கு உதவ மனதைப்பயன்படுத்துவோம், பாடல் தெரிவு, முத்தாய்ப்பாக இறுதியில் குரல் இப்படி எல்லா இடங்களிலும் அசத்தி விட்டீர்கள். தங்களோடு நட்பு கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. பதிவிற்கு நன்றி சகோ. தாமத வருகைக்கு மன்னிக்கவும். இனி விரைந்து வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  73. சில நேரங்களில் காரணமே இல்லாமல் கண்களில் நீர் சுரக்கும். அப்படித்தான் இப்போதும் நெகிழ்ந்து விட்டேன். மனிதத்தை இதைவிட எளிய வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியுமா தெரியவில்லை. சும்மாவா சொல்லி இருப்பாங்க தங்க மனசுக்காரர்னு! நன்றி. அன்பே சிவம்..

    பதிலளிநீக்கு
  74. ஏதோ ஒரு திரைப்படத்தில் வந்த புராணக் கதையிது - தினமும் பலநூறுமுறை நாராயணா சொல்லும் தன்னைவிட யார்சிறந்த பக்தன் என்ற நாரதரிடம் ஒரு கிண்ணத்தைக் கொடுப்பார் கடவுள். “இதில் வழிய வழிய உள்ள எண்ணெயில் ஒரு சொட்டும் சிந்தாமல் இந்த உலகைச் சுற்றிவா” என்பார். அவ்வாறே சுற்றிவந்த நாரதர் தாம் வெற்றிபெற்றதாக நினைப்பார். அப்போது கடவுள் கேட்பார்- “இன்று என்னை எத்தனை முறை நினைத்தாய்?”. “அட நான் எண்ணெய் சிந்தாம கவனத்தில் இருக்கும்போது உங்களை எங்க நினைக்ிறது?” என்பார் உடனே கடவுள் சொல்வார். “அதுபோலத்தான் குடும்ப வேலைகள் கழுத்தைப்பிடிக்க எலலா வேலையும் முடித்து ஒருமுறை “கடவுளே“ என்று சொல்லும் பக்தனை விட நீ எப்படி உயர்ந்தவனாவாய்?”

    பதிலளிநீக்கு
  75. அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவே இல்லையடா மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளம் -மிக சிறப்பான வரிகள்

    பதிலளிநீக்கு
  76. நீங்க கூப்பிட்ட உடனே வரமுடியலை. :( பல சமயங்களிலும் எனக்கு இப்படி ஆகிவிடுகிறது. முதலில் தாமதமான வரவுக்கு மன்னிக்க வேண்டுகிறேன். உங்கள் ஆக்கபூர்வமான பதிவுகளை அவ்வப்போது படித்தாலும் எல்லாவற்றுக்கும் பின்னூட்டம் கொடுக்க முடிவதில்லை. :(

    பதிலளிநீக்கு
  77. ஸ்ரீராம் சொல்வது போல் எனக்கும் கடவுளிடம் பேரம் பேசுவதில் உடன்பாடு இல்லை. பரிக்ஷைக்குப் படிக்காமலேயே பரிக்ஷையில் பாஸ் போட வைனு கேட்பவர்களையும் ஏன் இப்படினு கேட்டிருக்கேன். நமக்காக இல்லாமல் பிறருக்காக எதையும் இறைவனிடம் யாசிப்பதும் மிக உயர்ந்ததே. சுயநலம் இல்லாத பிரார்த்தனை நன்மையே தரும்.

    பதிலளிநீக்கு
  78. மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
    வாரி வாரி வழங்கும் போது வள்ளல் ஆகலாம்..
    வாழைபோல தன்னை தந்து தியாகி ஆகலாம்...
    ------------------------------------------
    எவ்வளவு உண்மை....மிகவும் ரசிதேன்...

    பதிலளிநீக்கு
  79. கதையிலும் பாடலிலும் மனதில் நிற்கும் பதிவு டிடிசார்.
    பரிசு பெறவேண்டி பிரார்த்தனை எலலாம் செய்ததில்லை நான்.
    போட்டிகளிலும் அதன் பின் கலந்து கொண்டதில்லை.நான் தோற்ற கதையில்,
    http://oomaikkanavugal.blogspot.com/2015/04/blog-post_16.html பகிர்ந்ததன் பொருள் விளக்கி இருக்கிறேன்.
    நேரமிருக்கும் போது வருகைதர வேண்டுகிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  80. நல்ல கதை, நல்ல பாடல் பகிரவு.
    கொடுப்பது இன்பம், வாங்கும் நிலையில் வைக்காமல் கொடுக்கும் நிலையில் வைப்பது இறைவன் அருள். அருமையான பதிவு.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.