🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



வயதான காலத்தில் நிம்மதியைத் தருவது எது...?

நண்பர்களே...! இன்று நாம் அலசப் போவது வயதான காலத்தில் நிம்மதியைத் தருவது எது...? கடந்த பதிவில் மனிதனுக்குக் கடைசி வரை இருக்கும் குணம் என்ன...? என்ன என்பதைப் பார்த்தோம்... அதைப் படிக்காதவர்கள் இங்கே சொடுக்கவும்...


வயதான காலத்தில் நிம்மதியைத் தருவது எது...?

நம்முடைய வயதான காலத்தில் எந்த வழியில் நாம் நிம்மதியைத் தேடிக் கொள்ளப் போகிறோம்...? மனைவி, குழந்தைகள், சகோதர சகோதரிகள், உறவினர்கள் மற்றும் பலருக்கும் செய்ய வேண்டிய கடமைகள் எல்லாம் செய்து விட்டோம்... எப்படி நேரத்தை நிம்மதியாகக் கடத்துவது...? மற்றும் பல விசயங்களை அலசுவோம்... இவை யாவும் என் சொந்த கருத்துக்கள்... தவறு இருந்தால் அல்லது உங்களின் கருத்துக்கள் வேறு மாதிரி இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்... நான் படித்த புத்தகங்கள் மூலமும் என் வாழ்வில் பழகிய மற்றும் சந்தித்த நண்பர்களிடமிருந்தும் அறிந்து கொண்ட விசயங்கள் :

நண்பர் 1: எல்லாமே அவன் செயல்... அவன் கூப்பிட்ட நேரத்தில் போய்ச் சேர்ந்திட வேண்டியது தான்... வயதான காலத்தில் நிம்மதியைத் தருவது இறை பக்தி தான்...

நண்பர் 2: நம்மால் முடிந்த வரைக்கும் எதாவது ஒரு வேலையைச் செய்யணும்... சும்மாவே இருந்து சோம்பேறியாயிட்டா தவறான பழக்கம் நம்மை வந்து ஒட்டிக் கொள்ளும்... வயதான காலத்தில் நிம்மதியைத் தருவது உழைப்பு தான்...

நண்பர் 3: நாலு பேருக்கு நல்லது செய்யுங்க... வீட்டிலேயே உட்கார்ந்திருந்தால் வேஸ்ட்... வயதான காலத்தில் நிம்மதியைத் தருவது சமூகப் பணி தான்...

நண்பர் 4: எனக்கு நிறைய நண்பர்கள் உள்ளார்கள்... பல சங்கங்களில் உறுப்பினராக உள்ளதால் நேரம் போவதே தெரியாது... வயதான காலத்தில் நிம்மதியைத் தருவது நண்பர்கள் மூலம் தான்.

நண்பர் 5: பேரக்குழந்தைகளோடு விளையாடவும், படிக்க வைக்கவும், நல்லது கெட்டது சொல்லி தருவது-எல்லாமே நான் தாங்க... வயதான காலத்தில் நிம்மதியைத் தருவது பேரக்குழந்தைகள் தான்...

நண்பர் 6: போன மாசம் காசிக்கு போயிட்டு வந்தேன்... இப்போ அடுத்து ராமேஸ்வரம் போகணும்... வருடம் ஒரு முறை திருப்பதி சென்று விடுவேன்... வயதான காலத்தில் நிம்மதியைத் தருவது சுற்றுலா தான்...

நண்பர் 7: வீட்டிலே வேலை செஞ்சாதான் எனக்குச் சாப்பாடு கிடைக்கும்... ரேசனுக்குப் போவது, கடைக்குச் சென்று சாமான் வாங்குவது - இப்படிப் பல வேலைகள்... செய்யலேனா முதியோர் இல்லம் தான்...!

நண்பர் 8: கை நிறையப் பணம் இருக்கு... எனக்கென்ன கவலை...? தினமும் 'குடி'ப்பேங்க... ஆனா யாருக்கும் எந்தத் தொந்தரவும் செய்ய மாட்டேன்... நிம்மதியாத் தூங்குறேன்...!

நண்பர் 9: T.V. எதுக்கு இருக்கு...? ஒரு நாள் மெகா தொடர்களைப் பாக்கலேன்னா என் நிம்மதி போச்சி...!

நண்பர் 10: தினம் தினம் வீட்டில் எதாவது ஒரு பிரச்சனை... நிம்மதியா...? அப்படின்னா...?

இப்படியும் சிலர்... அப்படியும் பலர்...! இன்னும் நிறைய நண்பர்கள் பல்வேறு விசயங்கள் கூறினார்கள்... இவை அவரவர் குடும்பச் சூழ்நிலைக்கேற்ப மாறுபடலாம்... நிம்மதியைப் பொருத்தமட்டில் அவரவர் திருப்தியைப் பொறுத்தது... இருந்தாலும் வயதான காலத்தில் நிம்மதியைத் தருவது எது...?

ஒரு வீட்டில் சிறுவன் தாத்தாவின் ஈசிசேரில் அமர்ந்து கொண்டு T.V. பார்த்துக் கொண்டிருந்தான்... வெளியே போயிருந்த தாத்தா வீட்டிற்குள் வந்து இதைப் பார்த்ததும் அவனை அழைத்துப் பக்கத்தில் உட்கார வைத்து...

தாத்தா: "இப்படி T.V. பார்த்துக் கொண்டிருக்கிறாயே, நன்றாகப் படிக்கணும்"
பேரன்: "படித்து...?"
தாத்தா: "படித்தால் தான் நல்ல வேலை கிடைக்கும்."
பேரன்: "நல்ல வேலை கிடைத்தால்...?"
தாத்தா: "கை நிறையச் சம்பளம் கிடைக்கும்"
பேரன்: "கை நிறையச் சம்பளம் கிடைத்து...?"
தாத்தா: "இந்த மாதிரி வீடு வாங்கி, இன்னும் பல வசதிகள் செய்து கொண்டு, என்னைப் போல் 'ஹாய்'யாக ஈசிசேரில் அமர்ந்து T.V. பார்க்கலாம்."
பேரன்: "அதைத் தானே தாத்தா இப்போ செய்து கொண்டிருந்தேன்."
தாத்தா: !!! ???

இப்படித் தான் வயதான காலத்தில் யாரிடமும் எதைப் பற்றியும் பேச முடியாது... காரணம் இன்றைய சூழல் அப்படி.! அப்படியானால், வயதான காலத்தில் என்ன செய்வது...? புத்தகம் படிப்பது.

ஆம், நண்பர்களே... நாம் சம்பாதிக்கும் வயதில் "புத்தகம் படிப்பது" என்பது சற்று இயலாத காரியம்... ஆனால், வீட்டில் உள்ள பெரியோர்களுக்கு நல்ல புத்தகங்களை வாங்கித் தரலாம் அல்லவா...? முதலில் அவரை அன்போடு கவனியுங்கள்... அவர் நமக்காக வாழ்ந்து கொண்டிருப்பவர்... நாம் எப்படி அவரை நடத்துகிறோமோ பிற்காலத்தில் நமக்கும் அதே நிலை தான்... மேலும்... தலைப்பு மாறி வேறு பாதைக்குச் செல்வதால் இதைப் பற்றி மற்றொரு பதிவில் அலசுவோம்...

மிகப் பெரிய ஞானிகள், அறிஞர்கள், மேதைகள், தத்துவவாதிகள், கலைஞர்கள் மற்றும் பல பேர் புத்தகம் படிப்பதை ஒரு பழக்கமாகவே வைத்திருந்தார்கள்... அறிஞர் அண்ணா அவர்கள் புற்று நோய் காரணமாக மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன்பு கூடக் கையில் ஒரு புத்தகம் வைத்துக் கொண்டு படித்துக் கொண்டிருந்தாராம். கற்றது கைமண் அளவு... கல்லாதது உலகளவு... ஆக, என்னைப் பொறுத்தவரை

வயதான காலத்தில் நிம்மதியைத் தருவது புத்தகம் படிப்பது தான்.


இந்தக் காலக் குழந்தைகள் எப்படியெல்லாம் அசத்துறாங்க இங்கே சொடுக்கித் தொடரவும்... அதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றித் தங்களின் கருத்து என்ன...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. வணக்கம், அருமையான படைப்பு.... நண்பர்கள் மூலம் வாழ்வின் ஒரு பகுதியை குறிப்பிட்டு காட்டியிருகிங்க. நன்றி பகிர்வுக்கு......

    பதிலளிநீக்கு
  2. புத்தகம் வாசிக்கும் பழக்கம் இப்ப உள்ளவங்ககிட்ட குறாஇந்து வருவது வேதனை அளிக்கத்தக்கதே. பேருந்து, ரயில் பயணங்களிலும், எங்காவது காத்திருக்கும் சமயங்களில் புத்தகம் போல நண்பன் வேறில்ல.

    பதிலளிநீக்கு
  3. நன்றி தனபாலன் நன்றிகள் பல

    பதிலளிநீக்கு
  4. நீங்கள் சொல்வது சரி தான். ஒரு மனிதனுக்கு 'புத்தகம்' என்றுமே சிறந்த நண்பன் தான்.

    பதிலளிநீக்கு
  5. புத்தகங்கள் வாசிப்பது வயதான காலத்தில் மட்டுமல்ல, தினமும் நம்முடைய கடமைகளுள் ஒன்றாக கொள்ள வேண்டும். வாசிக்க நேரமில்லை என்று சொல்லாமல் தினமும் முப்பது நிமிடங்கள் புத்தகம் வாசித்தாலே வருடத்திற்கு ஐம்பது புத்தகங்களுக்கும் மேல் வாசித்துவிடலாம். வழிபாடுகளுக்கும், பொழுதுபோக்குக்கும், உண்பதற்கும் நேரம் ஒதுக்கும் நாம் புத்தகங்கள் வாசிப்பதற்கும் நேரம் ஒதுக்க வேண்டும். நம் வீட்டு அருகிலுள்ள நூலகத்தில் உறுப்பினராக இருப்பது நம் கடமை. நம் வீட்டிலும் சிறு நூலகம் ஒன்று வைத்திருக்க வேண்டும். குழந்தைகளையும் வாசிக்க பழக்குவோம். அம்புலிமாமா, சுட்டிவிகடன் போன்ற புத்தகங்களை அவர்களுக்கு வாங்கி கொடுக்க வேண்டும். பாரதி புத்தகாலயம் சிறுவர்களுக்கு ஐந்துரூபாய் முதல் நிறைய நல்ல புத்தகங்களை வெளியிட்டு உள்ளது.மாதவருமானத்தில் புத்தகங்கள் வாங்குவது செலவு அல்ல மூலதனம். வீட்டுக்கு வீடு நூலகம் அமைப்போம். பகிர்விற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. மிக அருமையான பதிவு தோழரே பலது ஏற்றுக்கொள்ளக் நுடியதாகவும் சிலதை தவிர்க்க வேண்டியதாகவும் இருக்கிறது
    என்னைப்பொறுத்தவரை முதியவர்கள் அதிக அன்பு செலுத்துபவர்களாகவும் மற்றவர்களது ஆசைகளை மதிப்பவர்களாகவும் இருந்தால் எங்கும் எந்தப்பிரச்சினையும் ஏற்படாது மகிழ்வாக காலத்தினை கழித்திடலாம் நன்றி

    பதிலளிநீக்கு
  7. புத்தகம் படிப்பது நல்ல விஷயம்தான். சிறு வயது முதலே நல்ல நூல்களைப் படிக்க வேண்டும். நான் குழந்தைகளுக்கு புத்தகங்கள் தான் பரிசளிப்பேன். அவர்கள் வயதுக்கு ஏற்ப கதை கட்டுரை ஒவியம் வரைவது. போன்ற புத்தகங்கள் கொடுப்பேன்.

    நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  8. படிப்பதால் வயதான காலத்தில் மட்டும் அல்ல, வயது காலத்திலும் பயன் தான்!!

    பதிலளிநீக்கு
  9. வயதான காலத்தில் என்ற ஒரு அருமையான கட்டுரையைப் போட்டு நான் வயதானவன் என்பதனை நினைவுக்கு கொண்டு வந்த உங்கள் மீது ஒரு குற்றம் சுமத்துகிறேன்

    நான் வயதானவன் என்று என்றும் நினைப்பதில்லை

    நான் லயோலா கல்லூரியில் படிக்கும்போது (இறுதி ஆண்டு) பேராசிரியர் அனைவரையும் ஒரு கேள்வி கேட்டார் .
    'மேற்கொண்டு என்ன செய்வதாக உங்கள் திட்டம் என்ன' என்று.
    ஒவ்வொருவரும் ஒரு பதில் சொன்னார்கள் .
    நான் சொன்னது 'இந்த ஆண்டு தேர்வில் வெற்றி அடைவதுதான்' எனது திட்டமென்றேன்

    வாழும் வயதான காலத்தில் காட்டில் உள்ள கலாக்காயை விட கையில் உள்ள பலாக்காயை உபயோகப் படுத்த பழகிக் கொள்ள வேண்டும். கிடைப்பதை வைத்து பயனடைய பழகிக் கொள்வது சிறப்பு

    இறைவா உன்னை நேசிக்கும் நிலை அதிகமாகிவிட்டது. அதற்கு உன்னை தொழுது வாழ
    இன்னும் எனக்கு வயது கொடு என இறைவனை இறைஞ்சுவேன்
    முதுமை மறதிக்கு இடம் கொடுக்கும். தனக்கு இழைக்கப்பட்ட தீமையும் மறந்து நிற்கும்.
    முதுமை மனவியின் மீது வைக்கும் பாசம் தியாக வாழ்வின் வழி வந்தது .
    முதுமை உண்மையின் உறைவிடம் .
    பழம் இனிக்கும் .காய் கசக்கும் .முதிர்ச்சி அனுபவத்தின் ஆழம். முதுமை பாசத்தின் பண்பு .
    முதுமை முன்னேற்றம் நாடாது இருப்பதனை பாதுகாக்க நாடும்.
    முதுமை பதுமையல்ல அது பாதுகாவலன் .
    முதுமையில் வரும் வேதனை தாங்கும் சக்தியுடையதல்ல.
    இளமைக்கும் முதுமையுண்டு. என்றும் இளமை என்பது பேதமை

    இளம் வீரர்களே முதியோரிடம் பரிவு காட்டுங்கள்.
    இப்பொழுதே முதியோரிடம் பாசத்தைக் காட்டுங்கள், பரிவைக் காட்டுங்கள்,கனிவு காட்டுங்கள், அன்பாகப் பேசுகள்,இறையருள் பெற்றிடுங்கள் , இறைப் பொருத்தத்தை பெற்றிடுங்கள்.
    -----------------------------------------------------
    “முதுமை வந்து கூன் விழுமோ
    மூன்றுகால் நடை வாய்த்திடுமோ

    புதுமை உலகம் கேலி செய்யுமொ
    என்று வரும் எனக்கு அழைப்பு – அங்கு
    சென்று விடத்தான் நினைப்பு”
    என் உடன் பிறந்த அண்ணன் நீடூர் சயீது தனது மரணத்துக்கு இரண்டு நாள் முன் எழுதிய கவிதை.

    பதிலளிநீக்கு
  10. வயதான காலத்தில் நிம்மதி தருவது எது என்ற கேள்விக்கு எளிமையான பதில் ஞாபக மறதிதான். அது இருந்துசுன்னா மிக மிக நிம்மதி

    1.யாரவது திட்டினா சிறிது நேரத்துக்கு பின் மறந்துவிடுவோம்
    2. மனைவி திட்டினா யாரோ யாரையோ திட்டுவதாக நினைத்து கொள்வோம்.
    3. அழகான பெண்ணை பார்த்து டார்லிங்க் என்று அழைக்கலாம் அவர்கள் முறைத்தால் அடிக்க வந்தால் குடும்பத்தார்கள் வந்து இந்த ஆளுக்கு ஞாபக மறதி அதிகம் உங்களை அவர் மனைவியாக நினைத்துவிட்டார் என்று சொல்லி நம்மை காப்பாற்றிக் கொள்ளலாம்
    4.கடன் காரன் பணம் கேட்டு வந்தால் நீ யாருப்பா என கேட்கலாம்.
    5 யாருடைய காரையாவது எடுத்துகிட்டு போய் அதை நல்லா யூஸ் பண்ணலாம் கார ஒனர் அந்த காரை கண்டுபிடித்தால் அது நம்ம காரு என்று அடம்பிடிக்கலாம்.
    6. நம்ம வீட்டு சமையல் பிடிக்கவில்லையென்றால் பக்கத்து வீட்டு கிச்சனுக்கு போய் நமக்கு வேண்டியதை சாப்பிடுவிட்டு அப்பாவி மாதிரி அந்த வீடு நம்ம வீடுதான் என்று சொல்லாம்

    இப்படி நிறைய காரியம் நாம் நிம்மதியாக செய்யலாம் ஆனால் அடுத்தவங்க நிம்மதி குறையும் அதுகெல்லாம் கவலைப்பட போவதில்லை காரணம் நமக்கு ஞாபக மறதி இருக்கே ஹீ,ஹீ

    பதிலளிநீக்கு
  11. நல்ல பகிர்வு
    54 க்கு முன்பு பிறந்தவன் ஆகையால்
    கூடுதல் சுவாரஸ்யத்துடன் படித்தேன்
    பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.