🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



மனிதனுக்குக் கடைசி வரை இருக்கும் குணம் என்ன...?

நண்பர்களே...! இன்று நாம் அலசப் போவது மனிதனுக்குக் கடைசி வரை இருக்கும் குணம் என்ன? என்பதைப் பற்றி... முந்தைய பதிவில் மனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் என்ன? இப்போது...


மனிதனுக்குக் கடைசி வரை இருக்கும் குணம் என்ன?

மனிதனுக்கு எல்லா நல்ல குணங்கள் இருந்தாலும் அல்லது வளர்த்துக் கொண்டாலும் இந்தக் குணம் மட்டும் அவன் சாகும் வரை மறைவதே இல்லை. அது என்ன?.....ஏன்?..... என்று கடைசியில் பார்ப்போம்.

இவை யாவும் என் சொந்த கருத்துக்கள்.....தவறு இருந்தால் அல்லது உங்களின் கருத்துக்கள் வேறு மாதிரி இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். நான் படித்த புத்தகங்கள் மூலமும் என் வாழ்வில் பழகிய/சந்தித்த நண்பர்களிடமிருந்தும் அறிந்து கொண்ட விசயங்கள் :

நண்பர் 1: எனக்கு இன்பம் துன்பம் எது வந்தாலும் கடவுள் பக்தியோடு இருப்பேன். நடப்பதெல்லாம் நன்மைக்கே!, எல்லாம் அவன் செயல்! என்று நினைப்பேன். நான் சாகும் வரை கடவுள் பக்தியோடு இருப்பேன்.

நண்பர் 2: செய்யும் தொழிலே தெய்வம். 'சும்மா ' இருந்தால் சோம்பேறி ஆகி விடுவோம். நான் சாகும் வரை உழைத்துக் கொண்டே இருப்பேன்.

நண்பர் 3: பணம் தாங்க எல்லாமே. நான் சாகும் வரை சம்பாதித்துக் கொண்டே இருப்பேன்.

நண்பர் 4: சந்தோசத்திலே பெரிய சந்தோசம் அடுத்தவர்களைச் சந்தோசப் படுத்திப் பார்க்கிறது தான். என்னால் முடிந்த வரை உதவி செய்வேன். தர்மம் தலை காக்கும். நான் சாகும் வரை இரக்கக் குணத்தோடு இருப்பேன்.

நண்பர் 5: கெடுவான் கேடு நினைப்பான். விட்டுக் கொடுப்பவன் கெட்டுப் போக மாட்டான். நான் சாகும் வரை விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையோடு இருப்பேன்.

நண்பர் 6: எல்லாவற்றிலும் நேர்மையாக இருப்பேன். நான் சாகும் வரை ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பேன்.

நண்பர் 7: மனிதன் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் எல்லோரிடமும் பணிவாக நடந்து கொள்ள வேண்டும். என்னைப் பொறுத்தவரைப் பணிவு தான் சாகும் வரை இருக்க வேண்டும்.

இன்னும் நிறைய நண்பர்கள் பல்வேறு விசயங்கள் கூறினார்கள். நண்பர்கள் கூறிய பணம், பதவி, புகழ், வாய்மை, நேர்மை, உழைப்பு, தானம், தர்மம், ஒழுக்கம், பொறுமை, சாந்தம், வீரம், தைரியம், பணிவு, விட்டுக்கொடுக்கும் தன்மை, மற்றும் பல-இவற்றில் மனிதனுக்குச் சாகும் வரை இருக்கும் குணம் என்ன...? கண்ணதாசனின் வரிகளிலிருந்து தெரிந்து கொள்வோம்.

படம்: கவலை இல்லாத மனிதன்.
பாடல்: பிறக்கும் போதும் அழுகின்றாய்... இறக்கும் போதும் அழுகின்றாய்...
ஒருநாளேனும் கவலை இல்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே.....

ஒரு மனிதன் இறந்த பின் அவனைச் சுற்றியுள்ளோர், அவன் செய்த நல்லவற்றையோ, உழைப்பையோ, தான தர்மத்தையோ, ஒழுக்கத்தையோ, மற்றும் நண்பர்கள் மேலே கூறிய அனைத்தையும் பற்றிக் கூறுபவர்கள் மிக மிகக் குறைவு. அதற்குப் பதிலாக, "தன் கடைசி மகனுக்குக் கல்யாணம் பண்ண வேண்டும் அல்லது பேரன் பேத்தி பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டிருந்தான்," என்று புலம்புவார்கள். இறந்த மனிதனுக்கேற்ற இந்தப் புலம்பல்கள் மாறுபடலாம்.

கண்ணதாசன் அவர்கள் மேலே உள்ள பாட்டின் கடைசி வரியில் எழுதி இருப்பார்.

தன்னை அறிந்தால் உண்மையில் இன்பம்.....
தன்னலம் மறந்தால் பெரும் பேரின்பம்...

கண்ணதாசன் அவர்கள் "தன்னலம் மறந்தால் பெரும் பேரின்பம்" என்பதற்குப் பதில் "தன்னலம் துறந்தால் பெரும் பேரின்பம்" என்று எழுதியிருக்கலாம் அல்லவா? அவருக்குத் தெரியும் தன்னலத்தைத் துறக்க முடியாது, மறக்க முடியும் என்று!

ஆக, அந்த இறந்த மனிதனுக்குள்/வாழும் மனிதனுக்குள் இருக்கும் அளவிட முடியாத ஆசை தான் மனிதனின் கடைசி வரை... தவறு...தவறு... சாகும் வரை இருக்கும் குணம்..... அவனுடனேயே சேர்ந்து புதைக்கப்படுகிறது... (வாழ்வின் முடிவில் தான் அறிந்து கொள்கிறான்...!)



இதை மாற்ற முடியாதா ? மேலும் சிந்திக்க இங்கே சொடுக்கித் தொடரவும்... அதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றித் தங்களின் கருத்து என்ன...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. //வாழும் மனிதனுக்குள் இருக்கும் அளவிட முடியாத ஆசை தான் மனிதனின் கடைசி வரை (தவறு) சாகும் வரை இருக்கும் குணம்..... அவனுடனேயே சேர்ந்து புதைக்கப்படுகிறது.//

    மிகச்சரியான வார்த்தைகள் நண்பரே..

    பேராசை கூட அழிவிற்க்கு காரணம் என்பது என் எண்ணம்

    பதிலளிநீக்கு
  2. தளராத கொள்கைப் பிடிப்புடன் வாழும் தங்களை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

    தங்களின் வெள்ளை உள்ளம் போற்றுதலுக்கு உரியது.

    பலராலும் பின்பற்றத் தக்கவர் தாங்கள்.

    இன்று உள்ள மன உறுதி என்றும் நீடிக்க வாழ்த்துகிறேன்.

    தங்களின் வலைப் பக்கம் மிக அழகாகவும் புதுமையாகவும்
    உள்ளது!

    பதிலளிநீக்கு
  3. மனிதனின் கூடப் பிறந்த ஒன்று தான் ஆசை. அந்த ஆசை, அவன் இந்த உலகத்தை விட்டு மறையும்வரை அவனுடன் வாழும்.

    பதிலளிநீக்கு
  4. மிகச் சிந்த பதிவுகள். மனித மனத்தின் தன்மைகள் பற்றி ஒரு ஆய்வு செய்துள்ளீர்கள். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  5. வாசித்தேன் சகோதரா.ஆசை பற்றி.
    பேராசை எழுதப்பட்ட எழுத்து
    தமிழ் எழுத்து பெயர் தெரியுமா?
    தங்களிடம் உள்ளதா.
    முடிந்தால் உதவ முடியுமா?.
    ஆசை ஆக்கம் மிக நன்று.
    நல்வாழ்த்து. சகோதரா.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  6. எதற்கு ஆசைப்படவேண்டும். நல்லதைச் சிந்திக்கவும்,செயல் படுத்தவும்,சொல்லவும் ஆசைப்படலாம்.
    இந்தக் குணங்களைக் கொடுக்கக் கடவுளைத் துதிக்க ஆசைப்படலாம்.


    நல்லபகிர்வு தனபாலன்.

    பதிலளிநீக்கு
  7. நல்லதொரு பதிவு.

    ஆம், ஆசை யாரை விட்டது?

    எவ்வளவு வயதானாலும் ஆசையைத்துறக்க முடிவது இல்லை என்பதே உண்மை.

    அனுபவங்களும், வயதும் ஏற ஏற ஆசைகளும் நிழலாகத் தொடர்ந்து ஏறிக்கொண்டே தான் உள்ளன.

    நம்மை புதைக்கும் போதே அல்லது எரிக்கும் போதோ மட்டுமே, அந்த ஆசைகளும் அழிக்கப்படுகின்றன.

    நிராசைகளான [நிறைவேறாத ஆசைகளான அவை] அடுத்த பிறவியிலும் அப்படியே தொடர்கின்றன, எனவும் சொல்லுகிறார்கள்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.