🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎புதிய பதிவுகளை பெற ✉வாழ்க்கையில் முன்னேறுவதற்கு என்ன தேவை...?

நண்பர்களே...! இன்று நாம் அலசப் போவது வாழ்க்கையில் முன்னேறுவதற்கு என்ன தேவை...? என்பதைப் பற்றி... கவனிக்கவும்...! வாழ்க்கையில் வெற்றி பெற என்ன தேவை? என்று தலைப்பு வைக்கவில்லை. ஏனென்றால் வெற்றி அல்லது தோல்வி அவரவர் மனதைப் பொறுத்தது... மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்.


வாழ்க்கையில் முன்னேறுவதற்கு என்ன தேவை?

மனிதன் முன்னேறப் பல வழிகள் இருந்தாலும், அவற்றில் எது முக்கியமாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றி அலசப் போகிறோம். இவை யாவும் என் சொந்த கருத்துக்கள்... தவறு இருந்தால் அல்லது உங்களின் கருத்துக்கள் வேறு மாதிரி இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். நான் படித்த புத்தகங்கள் மூலமும் என் வாழ்வில் பழகிய/சந்தித்த நண்பர்களிடமிருந்தும் அறிந்து கொண்ட விசயங்கள் :

நண்பர் 1: கடவுள் அருள் இல்லாமல் வாழ்க்கையில் முன்னேற முடியாதுங்க...

நண்பர் 2: கடமையைச் செய்... பலனை எதிர் பார்க்காதே.. இது தாங்க வாழ்க்கையில் முன்னேறுவதற்குத் தேவை.

நண்பர் 3: முயற்சி திருவினையாக்கும். முயற்சியுடையார் இகழ்ச்சியுடையார்... வாழ்க்கையில் முன்னேறுவதற்கு முயற்சி தாங்க தேவை.

நண்பர் 4: பணம் தாங்க... அது அப்பா பணமோ, அண்ணன்/தம்பி/அக்கா/தங்கை - இவர்களுக்குச் சேர வேண்டிய பணமோ அல்லது அடுத்தவர்களின் பணமோ... எங்கிட்டே குடுங்க... நான் உங்களுக்கு, வாழ்க்கையில் முன்னேற வழி சொல்றேன்...

நண்பர் 5: அடுத்த மாசம் எனக்குச் சுக்கிர திசை ஆரம்பம் ஆகுதுங்க... அதற்கு அப்புறம் பாருங்க... வாழ்க்கையில் முன்னேற்றம் தான்...

நண்பர் 6: ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு திறமை இருக்குங்க... அதைத் தெரிந்து கொண்டால் வாழ்க்கையில் முன்னேறி விடலாம்.

நண்பர் 7: எல்லாமே நேரம் தான். நல்ல வாய்ப்பு வரும் போது பயன்படுத்திக் கொண்டால் வாழ்க்கையில் முன்னேறி விடலாம்.

நண்பர் 8: ஆசையே அழிவிற்குக் காரணம். சின்ன சின்ன ஆசை இருக்கலாம். பேராசை இல்லாமல் இருந்தால் வாழ்க்கையில் விரைவில் முன்னேறலாம்.

நண்பர் 9: அடுத்தவங்க எக்கேடு கெட்டா எனக்கென்னங்க...? எனக்கு ஆதாயம் இருக்கா...? நான் என்ன வேண்டுமென்றாலும் செய்வேன். நம்மைப் பற்றியும் நம் குழந்தைகளைப் பற்றியும் மட்டும் யோசிச்சா போதுங்க...வாழ்க்கையில் முன்னேறலாம்.

நண்பர் 10: முடிஞ்ச வரைக்கும் நாலு பேருக்கு நல்லது/உதவி செய்யுங்க... அடுத்தவங்க வைத்தெரிச்சல் இல்லாம வாழுங்க... வாழ்க்கையில் முன்னேறலாம்.

இன்னும் நிறைய நண்பர்கள் பல்வேறு விசயங்கள் கூறினார்கள். நீண்ட பதிவு ஆகி விடும் என்பதால்... சின்ன கதை மூலம்...

நண்பன் ஒருவன், ஒரு பெரிய மாமரத்தின் கீழே அமர்ந்திருந்தான். அவன் கண்ணிலே தாரை தாரையாகக் கண்ணீர் வந்து கொண்டிருந்தது. ஏன்?... பெரிய குடும்பம்...நல்லவன்... நன்றாகப் படித்தவன் ... அறிவாளி... புத்திசாலி... திறமைசாலி... (இன்னும் பல) ஆனால்...அவனுக்கு நினைத்த வேலை கிடைக்கவில்லை. அதனால் கிடைத்த வேலையும் சரியாகச் செய்யவில்லை. சொந்த தொழிலும் சரியாகச் செய்யவில்லை. தவறு என்று தெரிந்தும் சில கெட்ட பழக்கங்களைக் கற்றுக் கொண்டான். அதனால் பெற்றோர்கள் அவனைச் சரியாகக் கவனிக்கவில்லை. இது தான் சமயம் என்று அண்ணன்கள்/தம்பிகள் கைகழுவி விட்டார்கள். நண்பர்கள் துரோகிகளாயினர். மனைவி, குழந்தைகள் அவனை வெறுத்தனர். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அழுது கொண்டிருந்த அவனிடம் அந்த மரம், " மனிதனே, என் கதையைக் கேள்." என்று கூறியது. "மரமா? தன்னிடம் பேசியது...?" என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டே, கண்ணீரைத் துடைத்துக் கொண்டு மரத்தின் கதையைக் கேட்க ஆரம்பித்தான்.

மரம், "மனிதனே... நானும் உன்னைப் போலத் தான் ஒரு நாள் தூக்கி எறியப்பட்டேன். மண்ணில் புதைந்தேன். பெரிய மரம் ஆக வேண்டும் என்ற நினைப்பு மட்டும் எப்போதும் என்னிடம் இருந்தது. மழை பெய்தது. வெயில் அடித்தது. சிறிது துளிராக வெளியே வந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தேன். உங்களைப் போல மனிதர்கள் சிலர் என் கிளைகளை ஒடிப்பார்கள். கவலைப் படாமல் மீண்டும் மீண்டும் வளர்ந்தேன். நான் வளர்வதற்கு இந்த மண்ணும், மழையும், வெயிலும் எனக்குத் துணை புரிந்தன. 15 ஆண்டுகளுக்குப் பின் இவ்வளவு பெரிய மரமாக உள்ளேன். பல பறவைகள் என் மரத்தில் கூடு கட்டி வாழ்கின்றன. மனிதர்கள் என்னைக் கல்லால் அடித்து என் பழங்களைப் பறித்துச் சாப்பிடுவார்கள். சந்தோசப்படுவேன். மறுபடியும் என் பழங்களைச் சாப்பிட்டு விட்டு கொட்டையைத் தூக்கி எறிந்தாலும் அங்கும் நான் பெரிய மரமாக வளர்வேன். நீயும் யாரையும் நம்பாதே.. உன்னிடம் பத்து நண்பர்கள் உள்ளார்கள். அவை 2 கண்கள், 2 செவிகள், 2 கைகள், 2 கால்கள், வாய், மனம்-இவற்றைப் பயன்படுத்து. உன் தன்னம்பிக்கையை மட்டும் கை விடாதே." என்று கூறியது. அந்த நண்பருக்கு உண்மை புரிந்தது. தன்னம்பிக்கையோடு எழுந்து சென்றான்.

ஆக, நண்பர்களே, வாழ்க்கையில் முன்னேறுவதற்குத் தேவை தன்னம்பிக்கை தான். நான் சந்தித்த நண்பர்கள் பல பேர்கள் இதைக் கூறினார்கள்.

ஒரு சின்ன மாற்றம். வாழ்க்கையில் முன்னேறுவதற்குத் தன்னம்பிக்கையை விட வேறு ஏதேனும் உண்டா?

1. "கஜினி" திரைப் படத்தில் சூர்யா சொல்வார். "கஷ்டப்பட்டு வேலை செய்யாதீங்க...இஷ்டப்பட்டு வேலை செய்யூங்க...

2. உலக நாயகன் கமல்ஹாசனைப் பற்றி ஒரு கட்டுரையில் படித்தது. படிப்பு வராமல், சுட்டித்தனமாகத் திரிந்து கொண்டிருந்த கமலை அழைத்து அவரது அம்மா அவர்கள், "எதாவது ஒரு வேலையை ஒழுங்காகச் செய். குப்பை கூட்டும் வேலை கிடைத்தால் கூட அதை உன் முழு விருப்பத்தோடு செய்து, அதில் உனது தனித் திறமையைக் காட்டு," என்று கூறினார்களாம்.

மேலே உள்ள இஷ்டம், விருப்பம் அல்லது ஈடுபாடு, அர்ப்பணிப்பு - இதை ஆர்வம் என்று எடுத்துக் கொள்வோமா? என்ன தான் நாம் தன்னம்பிக்கையைப் பல நூல்கள் மூலமும், இணையத்தில் மூலமும் படித்தாலும் நமக்குத் தன்னம்பிக்கை வர தாமதமாகிறது அல்லது பெற்றோர்கள், பெரியோர்கள், சகோதரர்கள், நண்பர்கள் - இவர்கள் மூலம் தன்னம்பிக்கை விரைவில் வரலாம். ஆனால், ஆர்வம் நமக்குள்ளேயே இருப்பது. எந்த ஒரு வேலையையும் ஆர்வத்தோடு செய்தால் தன்னம்பிக்கை தானே வந்து விடும். தோல்வி வந்தால் சில சமயம் தன்னம்பிக்கை குறையலாம். ஆனால், ஆர்வத்தோடு செய்தால், தோல்வி வந்தாலும் மறுபடியும் செய்வோம் என்கிற முயற்சியும், மன உறுதியும் நம்முடன் சேர்ந்து கொள்ளும்.

தன்னம்பிக்கையை அப்பாவாக எடுத்துக் கொள்வோம்.

ஆர்வத்தை அம்மாவாக எடுத்துக் கொள்வோம்.

என்னைப் பொறுத்தவரை வாழ்க்கையில் முன்னேறுவதற்குத் தேவை தன்னம்பிக்கை என்பதை விட

வாழ்க்கையில் முன்னேறுவதற்குத் தேவை ஆர்வம் தான்.


ஆர்வத்துடன் இதையும் சேர்த்துக் கொள்வோமா ? இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை? இங்கே சொடுக்கித் தொடரவும்... அதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றித் தங்களின் கருத்து என்ன...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

 1. வாழ்க்கையில் முன்னேற மேலே படத்தில் உள்ளது போல நம்மை நேசிக்கத்தொடங்கிவிட்டாலே போதும். ஆர்வமும், தன்னம்பிக்கையும் தானே வரும். பகிர்வுக்கு நன்றி.
  -சித்திரவீதிக்காரன்.

  பதிலளிநீக்கு
 2. எனர்ஜி தரும் கட்டுரை... கடைசியில் திரைப்படங்களில் வரும் தன்னம்பிக்கை வரிகளையும் கொடுத்து கலக்கிவிட்டீர்கள்...

  பதிலளிநீக்கு
 3. நண்பரே,

  நல்ல பதிவு ...

  முதல் பக்கத்தில் இணைத்து உள்ளேன்
  பார்க்க

  தமிழ் DailyLib

  அவசியம் Vote button ஐ இணைத்து கொள்ளுங்கள்

  To get the Vote Button
  தமிழ் DailyLib Vote Button


  Thanks,
  Krishy

  பதிலளிநீக்கு
 4. நான் தேடிக்கொண்டிருந்தூ கிடைத்தது மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி நண்பரே

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.