🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎புதிய பதிவுகளை பெற ✉மனித உறுப்புகளில் சிறந்தவை எது...?

நண்பர்களே!... இன்று நாம் அலசப் போவது கொஞ்சம் வித்தியாசமாக... நம் உடம்பில் உள்ள உறுப்புகளில் எந்த உறுப்பு மிகவும் உதவுகிறது...? அவற்றை எப்படி எவ்வாறு பயன்படுத்துகிறோம்...? அதில் எந்த உறுப்பு முக்கியத்துவம் பெறுகிறது...? என்பதைப் பற்றியெல்லாம் அலசப் போகிறோம்... இப்போது...


மனித உறுப்புகளில் சிறந்தவை எது...?

நம்முடைய உடல் உறுப்புகளில் எல்லா உறுப்புகளும் நமக்கும், மற்றவர்களுக்கும் எதோ ஒரு வகையில் உதவுகின்றன... இருந்தாலும் அவற்றில் எது சிறந்தது...? மற்றும் பல விசயங்களை அலசுவோம்... இவை யாவும் என் சொந்த கருத்துக்கள்.....தவறு இருந்தால் அல்லது உங்களின் கருத்துக்கள் வேறு மாதிரி இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்... நான் படித்த புத்தகங்கள் மூலமும் என் வாழ்வில் பழகிய / சந்தித்த நண்பர்களிடமிருந்தும் அறிந்து கொண்ட விசயங்கள் :

நண்பர் 1: கண்கள் தாங்க... இந்த உலகத்தை ரசிக்க, பலவற்றைப் பார்த்துத் தெரிந்து கொள்ள, இன்னும் பல... நமது குழந்தைகளையோ, நாம் செய்யும் வேலையையோ, நமக்குப் பிடித்தவற்றையோ 'என் கண்களைப் போல' என்று சொல்வோமில்லையா...? கண்கள் தான் சிறந்தவை.

நண்பர் 2: வாய் தாங்க... இந்தக் காலத்திலே பேசாம இருந்தா பிழைக்க முடியுமா...? வாயுள்ள பிள்ளை பிழைச்சிக்கும் என்று பெரியவங்க சொல்வாங்க... மனித உறுப்புகளில் சிறந்தவை வாய் தான்...

நண்பர் 3: காதுகள் தாங்க... நம் அறிவை வளர்க்க, நம்மை மேம்படுத்த, நமக்குப் பிடித்த பாடல்களை ரசிக்க, நம்ம வள்ளுவரே "செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை." என்று சொல்லிருக்கிறார்... மனித உறுப்புகளில் சிறந்தவை செவிகள் தான்...

நண்பர் 4: நாம் சுவாசிக்க, வாசனை அறிய மூக்கு தாங்க உதவுது... மனித உறுப்புகளில் சிறந்தவை மூக்கு தான்...

நண்பர் 5: கைகள் இல்லாம எந்த வேலையும் செய்ய முடியாது... இது தாங்க ரொம்ப முக்கியம்... கைகள் தான் சிறந்தவை...

நண்பர் 6: கால்கள் தாங்க முக்கியம்... நாம் வெளியில் சென்று வர, ஓட, ஆட, விளையாட, கால்கள் தாங்க என்னைப் பொறுத்தவரை மிகச் சிறந்தவை...

நண்பர் 7: மூளை தாங்க முக்கியம்... மூளை சரியாய் வேலை செய்யலேன்ன என்ன ஆகும்...? நினைத்து பாருங்க... மூளை தான் சிறந்தவை...

நண்பர் 8: நாக்கு தாங்க... "உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது...?" நாக்கு தான்...! பழைய பாட்டு கேட்டதில்லையா...? நான் அப்படி இல்லேங்க... எதுக்காக வேலை செய்றோம்...? சம்பாதிக்கிறோம்...? ருசியாய் சாப்பிட்ட தானே...? நாக்கு தாங்க என்னைப் பொறுத்தவரை மிகச் சிறந்தவை...

நண்பர் 9: பற்கள் தான் சிறந்தவை... பல்லு போச்சின்னா சொல்லு போச்சின்னு பெரியவங்க சொல்வாங்க... உடம்பிலேயே வலிமையானது... செத்தாலும் சிரிச்சிட்டே இருப்போம்... ஹி...ஹி... பற்கள் தான் சிறந்தவை...

நண்பர் 10: எல்லா உறுப்பும் நல்லா இருந்து என்ன பிரயோசனம்...? மனுசுன்னு ஒன்னு இருக்கே... அது மட்டும் நல்லா வச்சிக்கிட்டா போதும்... !!!

இன்னும் நிறைய நண்பர்கள் உடலில் உள்ள பல அவயங்களைப் பற்றிக் கூறினார்கள்... நண்பர்கள் கூறிய எல்லாமே முக்கியமானது தான்... நாம் நம் உடலைக் கவனிக்கிறோமா...? அந்தக் காலத்தில் "நாற்பது வயது வரை சாப்பிடுவதற்காக வாழு, நாற்பது வயதிற்குப் பின்னால் வாழ்வதற்காகச் சாப்பிடு" என்று சொல்வார்கள்.,, ஆனால், இப்போது...? அதே தான் சொல்கிறார்கள்... ஆனால், வயது மட்டும் இருபதாக மாற்றிக் கொள்ளுங்கள்... அது வேறு கதை... இப்போது இந்தச் சின்ன கதை... எல்லாருக்குமே தெரிந்தது தான்... இருந்தாலும் படியுங்கள்...

மனித உறுப்புகளுக்குள்ளே "யார் பெரியவன்" என்று ஒரு சண்டை வந்ததாம்... கண்கள்: நான் தான் எல்லாமே பார்த்துத் தெரிவிக்கிறேன்... எனவே, நான் தான் பெரியவன்... காதுகள்: நான் தான் எல்லாமே கேட்டு உணர்த்துகிறேன்... எனவே, நான் தான் பெரியவன்... மூக்கு: நான் மட்டும் இல்லாவிட்டால் சுவாசிக்கவே முடியாது... வாசனையை முகர்ந்து தூண்டி விடுவதால் நான் தான் பெரியவன்... வாய்: நான் தான் சாப்பிடுவதற்கும் பேசுவதற்கும் உதவுவதால் நான் தான் பெரியவன்... நாக்கு: சுவை அறிந்து சொல்வதே நான் தான், எனவே, நான் தான் பெரியவன்... பற்கள்: உணவை நன்றாக அரைப்பதும், கடினமானவற்றை உடைப்பதும் நான் தான், எனவே, நான் தான் பெரியவன்... கைகள்: நான் இல்லாவிட்டால் எந்த வேலையும் செய்ய முடியாது... எனவே, நான் தான் பெரியவன்... கால்கள்: நான் இல்லாவிட்டால் எங்கேயும் செல்ல முடியாது... எனவே, நான் தான் பெரியவன்... மூளை: உங்களுக்கெல்லாம் ஆணையிடுவதே நான் தான், எனவே, நான் தான் பெரியவன்... இப்படி மாறி மாறி எல்லா உறுப்புகளும் தன்னுடைய முக்கியத்துவத்தைச் சொல்லி சண்டை போட்டுக்கொண்டே இருந்த போது, அது வரை அமைதியாக இருந்த வயிறு மெதுவாக 'பசிக்கிறது' என்று கூறியது... அதன் பிறகு அங்கே சண்டையுமில்லை, ஒரு சப்தமுமில்லை...

இதற்காக, வயிறு தான் மனித உறுப்புகளில் சிறந்தவை என்று நான் சொல்லப் போவதில்லை... பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பதை உணர்த்தவும், ஒற்றுமையை வலியுறுத்தவும் சொல்லப்பட்டவை.

நண்பர்களை 'தோள் கொடுப்பான் தோழன்' என்று கூறுகிறோம்... அழுகையை நிறுத்தாத குழந்தையைச் சிறிது நேரம் தோளில் போட்டுக் கொண்டு மெதுவாகத் தட்டிக் கொடுத்தால் உடனே தூங்கி விடும்... நாம் கஷ்டமான நிலையில் இருக்கும் போது அல்லது ஏதாவது நினைத்து மனது பாரமாக இருக்கும் போது, அதைத் தெரிந்து கொண்ட நம் அம்மாவோ / அப்பாவோ / மனைவியோ / அண்ணன்களோ / நண்பர்களோ / இல்லை யாராக இருந்தாலும் நம்மை அழைத்து, தன் தோள் மீது நம் தலையைச் சாய்த்து, அன்பாக, ஆறுதலாகப் பேசினாலே போதுமே... கஷ்டமாவது... நஷ்டமாவது... எல்லாமே காற்றாய் மறைந்து போகும்...

அடம் பிடிக்கும் குழந்தைகளை அன்பாக அழைத்து நமது தோளில் அணைத்து, பிறகு அறிவுரை சொல்லிப் பாருங்கள்... நமது கவிஞர் பாரதிதாசன் 'இன்பத்தமிழ்' பாடலில் "தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்" என்று குறிப்பிடுகிறார்... அந்தக் காலத்தில் தோள்கள் வீரத்திற்கும் தைரியத்திற்கும் ஒரு சின்னமாக இருந்தது... இந்தக் காலத்திலும் நமது கவிஞர்கள் திரைப்படங்களில் பல பாடல்கள் எழுதி உள்ளார்கள்... நமது உறுப்புகளில், மேலே சொன்னவாறு பல உறுப்புகள் பயன்பட்டாலும், மற்றவர்களுக்கு ஆறுதல் தருகின்ற, நம்பிக்கையைத் தருகின்ற நமது தோள்கள் தான் மனித உறுப்புகளில் சிறந்தவை... அன்பையும், அரவணைப்பும் தருகின்ற தோள்கள் போல் மற்றவர்களிடம் இருப்போம்... ஆக, என்னைப் பொறுத்தவரை,

மனித உறுப்புகளில் சிறந்தவை தோள்கள் தான்.


வாங்க அப்படியே இதையும் தெரிஞ்சிக்குவோம்... மிக மிக நல்ல நாள் எது...? இங்கே சொடுக்கித் தொடரவும்... அதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றித் தங்களின் கருத்து என்ன...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

 1. அருமை நண்பரே தோள்கள் தான் சிறந்தவை உணர்வு பூர்வமாக இருந்தது அருமையான பதிவு

  பதிலளிநீக்கு
 2. ஓ அதனால் தான் தோள் கொடுப்பான் தோழன் என்று கூறுகிறோமா.

  பதிலளிநீக்கு
 3. பார்த்தல் (கண்கள் )
  நுகர்தல் (மூக்கு)
  கேட்டல் (காது)
  ருசித்தால் (நாக்கு)
  தொடுதல் (தோல் )
  சிந்தித்து செயல் படல் (மூளை )
  இப்படி எல்ல்லாம் உறுப்புக்களும் சேர்ந்து செயற்பட்டால் தான் அவன் மனிதன்,நான் பெரியவன் நீ பெரியவன் எனும்போட்டி தேவை இல்லை

  பதிலளிநீக்கு
 4. மனித உறுப்புகளில் கண், காது, மூக்கு, வாய், கை, கால் போன்ற ஹார்டுவேர் உறுப்புகள் எல்லாம் சிறந்ததுதான். உள்ளே அன்பு எனும் ஸாஃப்ட்டுவேர் இருந்தால் போதும். பகிர்விற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 5. தோள் கொடுப்பான் தோழன்..

  பிறரும் அரவணக்கும் தோள் தான் சிறந்தது என்பது அருமை!

  பதிலளிநீக்கு
 6. அன்பின் தனபாலன் - நல்லதொரு சிந்தனை - தோள் தான் சிறந்ததெனத் தேர்ண்டெடுத்தமை நல்ல செயல் - உறுப்புகள் அனைத்துமே நமக்குத் தேவை தான் - ஒவ்வொன்றும் மற்றவற்றோடு இணைந்து செயல் படுகின்றன. சித்திர வீதிக்காரன் கூறியது போல அன்பு வேண்டும் - அன்பு தான் சிறந்தது - அன்பினைக் காட்டுவதற்கு தோளின் அணைப்பே சான்று. நல்வாழ்த்துகள் தனபாலன் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 7. மற்றவர்களுக்கு ஆறுதல் தருகின்ற, நம்பிக்கையை தருகின்ற நமது தோள்கள் தான் மனித உறுப்புகளில் சிறந்தவை. அன்பையும், அரவணைப்பும் தருகின்ற தோள்கள் போல் மற்றவர்களிடம் இருப்போம்

  அனைவருக்கும் தோள் கொடுப்போம் நண்பரே...

  பதிலளிநீக்கு
 8. சித்திரைவீதிக்காரன் சொன்னதைத்தான் நான் ஆமோதிக்கிறேன்.

  அன்பின் வெளிப்பாடுதானே

  அரவணைப்பு....

  ஆறுதல்....

  தோள்கொடுதல்....

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.