குறிப்பு...!
// தொடர்ச்சியான பத்து (10) குறள்கள், அதாவது ஏதேனும் ஓர் அதிகாரம்; அவ்வாறு ஆறு (6) அதிகாரங்களில் உயிரெழுத்தில்லாத குறள்கள் உள்ளன; ஒரே ஒரு அதிகாரத்தில் மெய்யெழுத்தில்லாத குறள்கள் உள்ளன; மேலும் ஒரு அதிகாரத்தில் உயிரெழுத்தில்லாத மெய்யெழுத்தில்லாத குறள்கள் உள்ளன... //
①இருவருக்கிடையே கருத்து வேறுபாடோ முரண்பாடுடைய பூசலோ ஏற்படும்போது, அதில் குறுக்கிடாமல் யார் பக்கமும் சேராமல் ஒதுங்கி நடுநிலையாக நிற்பதே நேர்மை... உணர்ச்சியோ பந்தமோ பாசமோ போன்ற வெவ்வேறான திசையிலே ஒருவரை இழுத்தாலும், நேர்மையிலிருந்து பிறழாமல் உண்மை என்று உணர்வதன் மூலம், தான் உறுதியாக நிற்பதே நேர்மை... அதே சமயம் உதவி செய்தோர்க்கு உதவவேண்டும் என்ற மனநிலை, இதற்குத் தடையாக இருக்கவே கூடாது என்பதற்காக "நன்றியுள்ள" ஒரு அதிகாரத்திற்கு அடுத்து இந்த உயிரும் மெய்யும் இல்லாத அதிகாரம் வருகிறது....! "தனக்குப் பிடித்த எந்த உயிரின் மேலும் ஈர்ப்பு கொண்டு செயல் படாதே" என்பதால் தான் உயிரெழுத்து இல்லையோ...? வீட்டிலும் நாட்டிலும் உலக அளவிலும் இன்றைக்கு இன்றியமையாத தேவை இது தான்...! ஒருவருடைய வாழ்வில் தம் பெற்றோர், மனைவி, மக்கள், உடன்பிறந்தோர், நண்பர்கள், சுற்றத்தார், ஆகியோருடன் கருத்து வேறுபாடு ஏற்படும் சமயங்களில் சார்புநிலை எடுக்காமல் உண்மை கண்டறிந்து ஒழுகுவதே சிறந்தது... "தனக்கு நன்மையே தரும்; செல்வம் தரும் ஆக்கமும் தரும்; ஆனாலும் அவற்றை அப்போதே கைவிடுக" என்கிறது ஒரு குறள் ! நன்மை தானே தருகிறது ? பின் ஏன் அச்செல்வத்தைக் கைவிடவேண்டும் ? கறை படிந்த செல்வத்தை கை நீட்டி வாங்கி அடிமையாகலாமா ? "குறுக்குவழியில் எளிதாகப் பொருள் சேர்த்து, முதலில் இன்பம் தந்தாலும், முடிவில் கெடுதலையே தரும்" என்ற அறவுணர்வு இல்லாமல் போய், மேலும் பழக்கம் செய்து கொள்வது :
②மனதார துறவு கொள்ளாமல் பொருள் வருவாய் கருதியோ, பிறர் மதிப்பைப் பெற விரும்பியோ, அரசியல் செல்வாக்குப் பெறும் நோக்கத்திலோ, துறவியர் போலத் தவவேடம் போட்டு, உலகம் பழிக்கும் இழிவான செயல்களை மறைவாகச் செய்து, வஞ்சக மனம் கொண்டு உலகத்தாரை ஏமாற்றி, பொய் ஒழுக்கத்தோடு வாழும் இவர்களுக்கு உயிரெழுத்தை வைக்கவில்லை... இவர்களும் இவர்களை நம்பும் கூட்டத்தையும் மொட்டையடித்தல் உண்டு - ...! தலைமுடி, தாடி முதலியவற்றை நீண்டு வளர விடுவதும் உண்டு... ஆனால் இத்தகைய இழிவானவர்களை இன்றைக்கும் கண்மூடித்தனமாக நம்பும் கூட்டம் அதிகமாகி வருகிறது... வெள்ளையாக இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என்பது பேதைமை...! மின்னுவதெல்லாம் பொன்னல்ல...! காரணம், குன்றிமணியினைப் போலச் சிலர் புறத்தே தோற்றத்தில் "பளபள" என்று செம்மையுடையவராக இருந்தாலும், அதன் மூக்கு கறுத்திருப்பதைப் போல அவர்கள் உள்ளத்தில் வஞ்சக எண்ணம் உண்டு என்று சொல்கிறது ஒரு குறள்...! ஆனால் இதையும் மீறிச் சேர்வது :
③ஒவ்வொரு காலகட்டத்திலும் நல்ல சிந்தனைகளுக்கான குழுக்கள் அமைவது போல, வன்முறை, வஞ்சனை, மூடநம்பிக்கைகள் இவை போன்றவற்றில் நம்பிக்கை கொண்ட குழுக்களும் அமையும்... சிறுமைப் பண்பு கொண்ட மக்கள் சிறு குழுவாக இருந்தாலும் நாட்டிற்கு மிகவும் ஆபத்தானவை...! இந்த சிறுமை இனச்சேர்க்கையால் கிடைக்கப்பெறும் அறிவு, இருக்கும் அறிவைத் திரிக்கும் ஆற்றல் கொண்டது...! அடிமைத்தனத்தை வஞ்சகமாக வளர்க்கும் ஆற்றலும் கொண்ட கூட்டத்தில் சேராமையும், அதை வளர விடாமல் அகற்றுவதும் சிறப்பு... ஆனால் நம் நாட்டின் முக்கிய பொறுப்புகளில் எல்லாம் பெரும்பான்மையாக இந்தக் கும்பல் தான் உள்ளது...!
இவ்வதிகாரத்திலும் உயிரெழுத்து இல்லை...! இதன் குறள்களில் மனம், அறிவு, இனம் இவற்றிற்கிடையே தொடர்பு உண்டு...! மக்களாட்சி முறையில் நம்பிக்கை உள்ள அமைப்பைச் சேர்ந்தவன் நல்லமனம் கொண்டவன் என்றும், வேற்றுமைகளைத் தோற்றுவித்துப் பிரித்தாளும் கொள்கைகளைப் பரப்பும் குழுவில் நாட்டம் உள்ளவன் தீய உள்ளம் படைத்தவன் என்றும், உலகம் கருதிக்கொள்வதில் தவறேதுமில்லை... காரணம் தான் சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீரின் தன்மை மாறுதல் போலத் தாம் சேர்ந்த கூட்டத்தின் இயல்பினால் மக்கள் தம் அறிவு நிலையில் மாறுவார்கள் என்கிறது ஒரு குறள்... அடுத்த குறளில், இனத்தைப் பொறுத்து உணர்ச்சி மாறுபடும் என்கிறது... ஆங்கில வழக்கு: "Tell me who your friends are, and I'll tell you who you are" ஆனால் இப்போது : "உனது தலைமை யார் என்று சொல், நீ இப்படிப்பட்டவனென்று நான் சொல்லுகிறேன்...!" குறளில் : "இனத்தானாம் இன்னான் எனப்படும் சொல்"
④மக்கள் விரும்பி வாழுமிடம் என்றதால் இதற்கு இந்த பெயர்...! வரும் பொருட்சுமையெல்லாம் பொறுத்து அரசுக்குரிய வரியெல்லாம் கொடுக்கும் மக்கள் அதிகம் உண்டு... முயற்சியில் தாழ்வில்லாத ஆள்வினைச் செல்வரும் இங்கு உண்டு... ஆனால் நாட்டின் தலைமை வெங்கோலனாக அமைந்து விட்டால், நாட்டின் அனைத்து வளங்களும் சிறப்புகளும் வீண்... உழைக்கும் மக்களை வெறும் மெய்யாக (பிணமாக) கருதும் வெங்கோலன் என்பதால் பத்து குறள்களையும் மெய்யெழுத்தில் முடிக்கவில்லையோ...?
⑤காணும் கனவிற்கு உயிரில்லை (இருக்காது...!) ⑥ஒவ்வொரு உறுப்பும் அழகை இழக்கின்றது... ⑦ நாணத்திற்குக் கட்டுப்படாமல் உள்ளத்தை அடக்கி நிறுத்தும் தன்மையும் கெடுகிறது... மூன்றிலும் உயிரெழுத்தில் தொடங்கவில்லை...!
⑧முந்தைய பதிவில் பாட்டி சொன்னது :
// "தொடர்ச்சியான பத்து (10) குறள்களைக் கவனித்தாலே போதும் என்று தானே அவர் சொன்னார்; அதைச் செய்தாயா...? முடிவில் சொன்ன இரண்டு "புரியலை"- களையும் குறள்களில் கவனித்தாலே போதுமே...!" // அதைவிட "குறிப்பே தான் குறிப்பு" என்றவுடன், 71. குறிப்பறிதல், 110. குறிப்புணர்தல், 128. குறிப்பறிவுறுத்தல் - ஆகிய மூன்று அதிகாரங்கள் நினைவிற்கு வந்தது; ஏனெனில் அவற்றில் தான் குறிப்பு உள்ளது...! அவற்றின் குறள்களைப் பாட்டி சொன்னபடி கவனித்தேன்...! 128. குறிப்பறிவுறுத்தல் அதிகாரத்தில் மட்டும், அதன் பத்து (10) குறள்களின் முதலெழுத்தும், கடையெழுத்தும் உயிர்மெய் எழுத்துக்கள் மட்டும் தான் உள்ளன... உயிருமில்லை; மெய்யுமில்லை...! அப்பாடா...! தலையும் காலும் புரிந்தது...! தாத்தாவின் நுட்பம் அப்படி...! எப்படி...? :
தமிழிலக்கணத்தில் உவமையணி என்றும் ஒன்று உண்டு... எ.டு.: கொடுங்கோலன் அரசு : குறள் 552 : வேலொடு நின்றான் இடுஎன்றது : உவமானம் ഽ போலும் : உவம உருபு ഽ கோலொடு நின்றான் இரவு : உவமேயம் - இவைபோன்று இன்னமும் முப்பாலில் நிறையவே உண்டு... நமது ஐயன், தான் பிறருக்குக் கூறக் கருதிய பொருளை, மக்கள் அனைவருக்கும் நன்கு தெரிந்த ஒன்றைக் காட்டி விளக்குவார்... "இவ்வாறு எழுத்துக்களின் கட்டமைப்பு இருக்கலாமோ...?" என்று விளையாட்டாக ஒரு சிறிய சிந்தனை...! உயிரெழுத்தில் தொடங்கும் குறள்கள், மெய்யெழுத்தில் முடியும் குறள்கள் என்று ஒரு கணக்கு பார்த்தேன்; ஒன்றைக் கவனிக்கவேயில்லை...! என்ன அது...? :
"சில அதிகாரங்களின் குறள்கள் முழுவதும் உயிரெழுத்தில் தொடங்கவில்லை; இதேபோன்று மெய்யெழுத்தில் முடியவில்லை" என்று சில நாட்கள் கழித்துத் தான் அறிந்தேன்... அப்போதும்கூட உயிர்மெய்யெழுத்தில் தொடங்கி உயிர்மெய்யெழுத்தில் முடியும் குறள்களையும் கவனிக்கவில்லை என்பதும் கூடுதல் புல்லறிவு...(!) ഽ "குறிப்பு அறிவுறுத்தல்" அதிகாரம் : கடமை காரணமாக நெடுநாள் பிரிந்த கணவன், மனைவியைச் சந்திக்கும் காலம் வரும்; அப்போது வீடு முழுவதும் சுற்றத்தார்; என்ன செய்வது...? மெய்யுடன் கூடிய இரு உயிர்கள் இங்கு இணையத் தவித்துக் கொண்டிருக்கிறது; தங்களின் உள்ளக் குறிப்பைப் புறத்தே உடம்பில் தோன்றும் மெய்ப்பாடுகளால் ஒருவர்க்கொருவர் அறியுமாறு செய்தலை விவரிக்கும் பத்து குறள்களுக்கும், "உயிர் எதற்கு ? மெய் எதற்கு ? உயிர்மெய்யெழுத்து போதுமே...!" என்பது தாத்தாவின் நுட்பம்...! இந்த உவமையின் சிறப்பை என்னவென்று சொல்வது...?!
புதிய பதிவுகளை பெறுதல் :
தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :
ஒன்று கள்ளாமை அதிகாரமோ... 2 கூடாவொழுக்கமோ... மூன்று சேராமை?
பதிலளிநீக்குஉங்கள் முயற்சி பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
ஆகா...! நன்றி...
நீக்கு2) கூடாவொழுக்கம்,
3) ___சேராமை
திருக்குறள் பதிவு அருமை.
பதிலளிநீக்குசொல்லிய கருத்துக்கள் அனைத்தும் நன்றாக இருக்கிறது.
குறுக்கு வழியில் பொருள் சேர்க்க வேண்டாம். வஞ்சக எண்ணத்தை கைவிட வேண்டும்,
வழி நடத்தி செல்லும் தலைவன் சரியாக இருக்க வேண்டும்.
வெங்கோலன் ஆட்சியில் இருந்தால் நாடு நலம் அடையாது.
7 குறிப்பறிதல் அதிகாரமா?
தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.
உங்கள் ஆய்வுக்கு வாழ்த்துகள்.
இல்லை அம்மா... அதன் குறள்களைப் பார்த்தாலே தெரிந்து விடும்...
நீக்குஎளிதான கூடுதல் குறிப்பு : ஐந்தாவது சொல்லிவிட்டால், அதன் அடுத்தடுத்து உடனே சொல்லிவிடலாம்...!
சிறப்பு பதிவு நானும் தொடர்ந்து வருகிறேன் ஜி
பதிலளிநீக்கு2. கூடாவொழுக்கம்
பதிலளிநீக்கு1. நடுவுநிலைமை
3. சிற்றினஞ் சேராமை
4. நாடு
5. கனவுநிலை உரைத்தல்
6. உறுப்பு நலன் அழிதல்
7. நாணுடைமை
கீதா
அட்டகாசம்... நன்றி...
நீக்கு7) ______ ?
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குதிருக்குறளைப்பற்றிய பதிவு அருமை. தங்கள் அறிவு பூர்வமான ஆய்வுகள் வியப்படைய வைக்கின்றன. திருக்குறளை நீங்கள் முற்றிலும் கரைத்துக் குடித்தவர். உங்களால், உங்கள் பதிவின் மூலமாக நான் மறந்து போன குறள்களை நினைவுபடுத்திக் கொள்கிறேன். நீங்கள் சொல்லும் விஷயத்தில் என் எளிதான அறிவு திறன் கொண்டு திரட்ட முயற்சிக்கிறேன். உங்கள் ஆய்வுகளுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
திருக்குறள் ஆய்வு வியக்க வைக்கிறது. நன்றி ஐயா
பதிலளிநீக்குமுனைவர் பட்ட ஆய்வாளரையும்விட ஆழமாகச் சிந்திக்கின்ற, எழுதுகின்ற உங்கள் பாணி சிறப்பு.
பதிலளிநீக்கு