🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



தலையும் புரியலை... காலும் புரியலை...

அனைவருக்கும் வணக்கம்... "திருக்குறளில் தொடரும் தவறான சிறப்புகள்" எனும் பதிவில் தொடங்கி, "பகா எண் - மூல எண்" பதிவு வரை, மொத்தம் 13 பதிவுகளில் எந்த கணக்கையும் செய்யவில்லை... இவற்றில் 8 பயிற்சி பதிவுகள் மூலம், சுளகு எனும் சொல்லாய்வுக் கருவி பயன்படுத்தி, தமிழ் எழுத்துக்களை எளிதாகக் கணக்கிடுவதைப் பற்றி அறிந்து கொண்டோம்... அத்துடன் திருக்குறள் சிறப்புகளில் உள்ள தவறுகளைக் கண்டுபிடித்துச் சரி செய்தோம்... இனி :-


ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா அவர்கள், சமீபத்திய ஒரு பதிவிலும், கிட்டத்தட்ட 2½ ஆண்டுகளுக்கு முன்பும் ஒரு கேள்வியைக் கருத்துரையில் கேட்டிருந்தார்கள்; அது :- // "மெய்யெழுத்து இல்லாத குறள்கள் உள்ளனவா? ஆராய்ச்சி செய்து வெளியிடுங்கள்." // அடுத்ததாக தில்லையகத்து வலைப்பூ சகோதரி கீதா அவர்கள் // "சொற்களின் கணக்கை வைத்துத் தான் எது சரி என்ற ஆராய்ச்சியா...?" // என்று கருத்துரையில் கேட்டிருந்தார்... அதைக் கண்டு மிகவும் மகிழ்வாக இருந்தது, நன்றி சகோதரி... அது தான் திருக்குறள் கணக்கியலின் நோக்கம்...!

திருக்குறள் கற்றல் என்பது கற்பவரின் ஆர்வத்திற்கேற்ப பலவகைப் படும்... திருக்குறளிலுள்ள ஏதேனும் ஒரு சொல்லைத் தேர்ந்தெடுத்து, திருக்குறள் முழுவதும் அச்சொல் எங்கெங்கு உள்ளன என்பதைத் தொகுத்து கற்பதும் ஒருவகையாகும்... அத்துடன் அடியேன் செய்வது என்னவென்றால், எழுத்துக்களின் கட்டமைப்பை ஆய்வு செய்கிறேன், அவ்வளவே...! சரி, மேற்சொன்ன இருவரின் கருத்துரைகளுக்குத் தொடர்பாக நமது தாத்தாவிடம் ஓர் உரையாடல் தொடர்கிறது :-
ஐயனே; முப்பாலில் உள்ள சொற்களை எண்ணிப்பார்க்கும் போது, இதில் ஏதோ ஒரு கணக்கின் கட்டமைப்பில் உள்ளது போலப் பல ஆண்டுகளாக எனக்கு ஐயம் உண்டு... சொற்கள் மட்டுமில்லாது ஒவ்வொரு எழுத்தும் அவ்வாறே என்று தோன்றுகிறது... சிறிது விளக்க வேண்டுகிறேன்...

ஓ...! அப்படியா...! நல்லது... தொடர்ச்சியான பத்து குறள்களைக் கவனித்தாலே போதும், எந்தக் கணக்கையும் செய்ய வேண்டாம்...! ஆனால் எழுத்துக்களின் கணக்கைத் தானாகவே செய்யத்தூண்டும்...! சொற்களின் கட்டமைப்பை அறிந்துகொள்ள இதுவே அடிப்படை...! விளையாடுவோமா...?

பல கட்டமைப்பு இருக்கும் போல...! சரி சொல்லுங்கள்...

உயிரில்லாத அறுபது (60) குறள்கள் உள்ளது... அவற்றின் அதிகாரங்களைச் சொல்...

என்னது உயிரில்லாத குறள்களா...? இப்படிக் குறிப்பு தந்தால் எப்படி தாத்தா...?

எழுத்துக்களின் கணக்கைத் தானே செய்ய நினைக்கிறாய்...? 'உயிரில்லாத' என்றால் உயிரெழுத்து இல்லாத குறள்கள்...

அகரம் இல்லாத குறள்களே இல்லை; ஆனாலும் இரண்டு குறள்களில் குறிலாகிய "அ" தான் இல்லையே அன்றி, அதன் நெடிலாகிய "ஆ" உள்ளதாகக் கேள்விப்பட்டேன்; அதையும் சரி பார்க்க வேண்டும்; இப்படி இருக்கும்போது அதெப்படி உயிரெழுத்தே இல்லாத குறள்கள் இருக்க முடியும்...? சரி அடுத்து...?

மெய் இல்லாத பத்து (10) குறள்கள் உள்ளது, அதன் அதிகாரத்திற்கும் மெய் கிடையாது...

தலையும் புரியலை... காலும் புரியலை... இந்த விளையாட்டிற்கு நான் வரலே...! நான் பாட்டியிடம் போகிறேன்...

[ பாட்டியிடம் நடத்தவற்றைச் சொன்னபிறகு...]

தொடர்ச்சியான பத்து குறள்களைக் கவனித்தாலே போதும் என்று தானே அவர் சொன்னார்; அதைச் செய்தாயா...? முடிவில் சொன்ன இரண்டு "புரியலை" -களையும் குறள்களில் கவனித்தாலே போதுமே...! சரி எளிதாகப் புரியவைக்க ஒரு கேள்வி கேட்கிறேன்; உயிருமில்லை; மெய்யுமில்லை; உயிர்மெய் மட்டும் உள்ள பத்து குறள்களைச் சொல்... ஒரு காலத்தில் அப்படித்தான் நானும் இருந்தேன்...! ஏனெனில் கடமை காரணமாகப் பிரிந்து சென்றிருந்தார் உங்கள் தாத்தா; நெடுநாட்கள் கழித்து அவர் திரும்பி வந்த போது, குறிப்புக்கள் மூலம் தான் பேசிக் கொள்வோம்...!

(தாத்தாவே பரவாயில்லை போல...!) சரி சரி குறிப்பை சொல்லுங்கள்...!

அதுதான் சொன்னேனே; குறிப்பே தான் குறிப்பு...!
முப்பாலைக் கையில் எடுப்பவர்களுக்கு நன்றி 人

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. தாத்தா பாட்டி பேரன் உரையாடல் சூப்பர்தான்..   கண்டு பிடிங்க DD..  நானும் பின்னாலேயே நைஸாக வந்து பார்த்து தெரிந்து கொள்கிறேன்!

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமையாக உள்ளது. .ஒவ்வொரு பதிவிலும் திருக்குறளை பற்றிய ஆராய்ச்சிகள் நன்றாக உள்ளன. இன்று சகோதர, சகோதரிகளின் கேள்விகள் சிறப்பென்றால், அதற்கு நீங்கள், தாத்தா, பாட்டியிடம் உரையாடி தந்த பதில்களும் அருமை. உங்களளின் இந்த வளமான ஆராய்ச்சிகள் தொடரட்டும். உங்களால் நானும் ஏதோ சிறிது கற்று கொள்ள முயற்சிக்கிறேன்.

    உங்களின் இந்த திறமையை கண்டு வியக்கிறேன். பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. ஆ! டிடி நான் அப்படிக் கேட்டிருந்தது, உங்கள் ஆய்வுக்கு ஒத்த உங்கள் மகிழ்ச்சிக்குக் காரணமான கேள்வியா !!! (கீதா மெய்யாலுமே நீயா!!!?) மிக்க நன்றி டிடி!

    மெய் இல்லாமல் உயிரில்லாமல் - இவை புரிந்தன....மெய் எழுத்து உயிர் எழுத்து இல்லாமல்! பார்க்க வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. தாத்தா பாட்டி உரையாடல் சிறப்பாக உள்ளது ஜி

    பதிலளிநீக்கு
  5. இப்படியான பதிவு தங்களுக்கே உரியது..

    வாழ்க தமிழ்..
    வாழ்க குறள்!..

    பதிலளிநீக்கு
  6. தாத்தாவும் , பாட்டியும் குறிப்புகள் மூலம் பேசி கொள்வது கேட்க அருமை.
    முன்னோர்கள் எல்லா வற்றிலும் சிறந்து விளங்கி இருக்கிறார்கள். இப்போது உள்ள வசதிகள் இல்லாதபோதே அவர்கள் மிகவும் கெட்டிக்காரத்தனமாக பேசி இருக்கிறார்கள்.
    திருக்குறள் ஆராய்ச்சி தொடர வேண்டும். உங்கள் ஆராய்ச்சி புத்தக வடிவம் ஆக்குங்கள். பள்ளி , கல்லூரியில் பாட புத்தகமாக இடம்பெற வேண்டியது உங்கள் ஆயுவுகள்.

    மாணவ, மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
    திருக்குறள் கற்றல் ஆர்வம் உங்களை போல யாருக்கும் இருக்காது. தினம் ஒரு திருக்குறள் படிப்பேன், ஆனால் இந்தளவு புரிந்து கொண்டு படிக்கவில்லை.
    வாழ்த்துகள். உங்கள் ஆய்வு தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  7. குறளை உங்கள் குரல்மூலம் அறிந்து கொள்வது உண்மையில் ஆனந்தமாகத்தான் உள்ளது. ஆனால் நீங்கள் சொல்லும் இந்த கணக்குவழக்குகள்தான் கொஞ்சம் அலர்ஜியை தருகின்றது. ஏனென்றால் ஸ்கூல்ல படிக்கும்போதே நாங்களெல்லாம் கணக்குல பெரிய புளி...

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.