🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



துன்பம் நேர்கையில்...

துன்பம் வரும் வேளையிலே சிரிங்க... என்று சொல்லி வச்சார் வள்ளுவரு சரிங்க... // மேற்புறத்தில் கசப்பு கீழ்ப்புறத்தில் இனிப்பு... பட்டினத்தார் கையில் உள்ள கரும்பு - இது பட்டினத்தார் கையில் உள்ள கரும்பு...! நான் சிரிக்கிறேன் சிரிக்கிறேன் சிரிப்பு வல்லே... நான் அழுகிறேன் அழுகிறேன் அழுக வல்லே...



முந்தைய பதிவுகள் : சிரிக்க சிரிக்க... மானிட லீலை...!



63. இடுக்கணழியாமை : 621. இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வது அஃதொப்பது இல்

இக்குறளின் தழுவலாக சிந்தாமணி காவியம் : காந்தருவ தத்தையார் இலம்பகம்:509 : | இடுக்கண்வந் துற்ற காலை | எரிகின்ற விளக்குப் போல | நடுக்கமொன் றானும் இன்றி | நகுக. தாம் நக்க போழ்தவ் | விடுக்கணை அரியும் எஃகாம் | இருந்துஅழுது யாவர் உய்ந்தார் | நடுக்கடலில் புயலில் சிக்கிகொண்ட சூழலில் சீதத்தன் என்னும் வணிகன் : “துன்பம் வந்தபோது எரியும் விளக்கு காற்றால் நடுங்குவது போல் நடுங்காமல் மகிழ்க.. அது அத்துன்பத்தைப் போக்கும் கருவியாகும்... அத்துன்பத்தை எண்ணித் துக்கமுற்றால் அத்துக்கத்தினின்றும் நீங்கினார் யாருமில்லை..."

துன்பமில்லாத வாழ்க்கை என்றால், இன்பம் என்பது தெரியாது... ஆனால் துன்பமே வாழ்வென்றால் துன்பமே... ஆனால் துன்பம் அறியாச் சூழலை நமக்கு நாமே உண்டாக்கிக் கொள்ள முடியும்... வேலை செய்யும் இடத்தில் எதிர்ப்பு, தோல்வி போன்ற இடையூறுகள் அவ்வப்போது நேரிடுவது இயல்பு... அதில் சில இடையூறுகள் மிகுந்த துன்பம் தருவதாக இருக்கும்... அதுபோன்ற சமயங்களில் சூழ்நிலையை நகைச்சுவை உரையாடல் மூலம் சிரிப்பு உண்டாக்கும் சூழ்நிலையாக உருவாக்கிக் கொள்ளவேண்டும்... இதனால் மன உளைச்சலைக் குறைத்து அத்துன்பங்களை மேன்மேலும் நெருக்கிப் போராடத் துணை செய்து, நகைப்பதனால் மனத் தளர்ச்சி குறைந்துபோகும்... துன்பம் வருகின்றபோது சிரிப்பு தோன்றாத போது, பின் ஏன் மகிழ்ந்திருக்க வேண்டும் என்கிறார் தாத்தா...? "துன்பமே ஒதுங்கிப் போ" என்று அதை வெளியே தள்ளிவைப்பதால், அது மீண்டும் வந்து தாக்குமோ என்ற அச்சம் குறைக்கப்படும்... நகைத்து மன எழுச்சி பெற்றவுடன் துன்பத்தை நெருக்கிப் போராடி வெல்ல முடியும் ஆற்றல் உண்டாகும்... அதன்பின் தொடர்ந்து செயலில் ஈடுபடமுடியும்... எனவே இடையூறுகளைத் தவிர்த்து, இல்லாததாகச் செய்ய உதவும் சிரிப்பு நல்லதொரு கருவி... வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகத்தில் வாழும் நமக்கு இந்தக் கருவி அவசியம் தேவை...! ஏனெனில் துன்பம் அடைந்த செய்தியைப் பகைவர் அறிந்துகொள்ளாதவாறு மறைக்கச் செய்வதற்கும் அது துணைசெய்யும்...! "அதற்காகப் போய் அந்த வயசிலே கஷ்டப்பட்டிருந்தேன்" - இவ்வாறு சொல்லிச் சிரிக்காத மனிதர்கள் இல்லை...!

குளம் குளமா தவம் இருந்து கொக்கு சிரிக்குது - அது கொத்தப் போவதை மறந்து மீனும் சிரிக்குது...! குளத்தை விட்டுக் கரையில் ஏறி நண்டு சிரிக்குது - அதைக் கொண்டு போயி உண்டு பார்த்த நரியும் சிரிக்குது...! பதமா இதமா - சிரிச்சா சுகமா... ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது - ஆகாயம் பூமியெங்கும் இளமை சிரிக்குது... வேண்டும் மட்டும் குலுங்கிக் குலுங்கி நானும் சிரிப்பேன் - அந்த விதியைக் கூட சிரிப்பினாலே விரட்டி அடிப்பேன்...

© அரங்கேற்றம் கண்ணதாசன் வி. குமார் 🎤 P.சுசீலா @ 1973 ⟫


69. தூது : 685. தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி நன்றி பயப்பதாம் தூது

'வளவள' 'கொழகொழ' என்று நீண்ட உரை பேசுவது பிறருக்கு அயர்வையும் வியர்வையும் உண்டாக்கி நம்மைப் பிடிக்காமல் போய் விடும்...! நீண்ட உரையால் சொல்லவந்த கருத்தை விவரிக்க முடியாமலோ அல்லது மறந்தே போகவும் வாய்ப்பு உண்டு...! அதே சமயம் யாருக்கும் பயன்படாத, நயமில்லாத, வெறுப்பைக் கக்கும் தீச்சொற்களாக மாறிப் போவதும் உண்டு...! எனவே பேசப்போவது பற்றி முன்பே ஆராய்ந்து, சொல்லவேண்டியவற்றைச் சுருக்கமாகத் தொகுத்து. கேட்பவர்கள் மனம் மகிழுமாறு இனிமையாகவும், அதையும் சிரிப்புண்டாகும்படி பேசத் தெரிந்து விட்டால், கேட்பவர்கள் மகிழ்வதோடு மறக்கவும் மாட்டார்கள்... இதையெல்லாம் சிறந்த தூதுவனுக்குச் சொன்னதாக மட்டும் எடுத்துக் கொள்ளாமல், நம்மைப் பற்றியோ அல்லது நம் வீடு / நாடு பற்றிய செய்திகளைப் பிறரிடத்தில் பேசும் போதும் கவனத்தில் கொள்ள வேண்டும்... ஒவ்வாதவற்றைச் சொல்லக்கூடிய சூழல் ஏற்பட்டாலும், அவற்றை கலகலவென்ற சூழலில் தெரிவிக்கவும் கற்றுக் கொண்டு விட்டால் நமக்குக் கிடைக்கும் மதிப்பெண் நூற்றுக்கு நூறு...! குறள் எண் 100 : இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று - கொம்பில்லா முதல் குறள்...!

உள்ளம் சொன்னதை மறைப்பவன் இல்லை; ஊருக்கு தீமை செய்தவன் இல்லை - வல்லவன் ஆயினும் நல்லவன்... நல்லவன் எனக்கு நானே நல்லவன் - சொல்லிலும் செயலிலும் நல்லவன்... சிட்டு போலே வானில் துள்ளி செல்ல வேண்டும் - மண்ணில் கீறி பிள்ளை போலே ஊர்ந்து செல்ல வேண்டும்... தொல்லை என்ற பாம்பை கவ்வி கொள்ள வேண்டும் - தூய உள்ளம் வேண்டும் - என்றும் சேவை செய்ய வேண்டும்...

© படித்தால் மட்டும் போதுமா கண்ணதாசன் M.S.விஸ்வநாதன் 🎤 T.M.சௌந்தரராஜன், P.B.ஸ்ரீனிவாஸ் @ 1962 ⟫

பிறக்கும் போதும் அழுகின்றாய் - இறக்கும் போதும் அழுகின்றாய்... ஒருநாளேனும் கவலை இல்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே...
நகை தொடரும்...

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. பதிவு அருமை. திருக்குறள் ஓவியம் நன்றாக இருக்கிறது.

    பாடல் இடம் மாறி வந்து இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. பாடல்கள் மிக அருமையான தேர்வு.
    இடம், பொருள் அறிந்து பேச தெரிந்து இருக்க வேண்டும். இனிமையாக பேச தெரிய வேண்டும். பேசுவதும் ஒரு கலைதான்.
    அருமையாக குறள் விளக்கம். நன்றி.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. அலுவலக இடையூறுகளில் சிரிக்கச் சிரிக்கப் பேசி  சூழ்நிலையை மாற்றுவது அவ்வப்போது செய்து வருவது!!

    பதிலளிநீக்கு
  4. அன்பு தனபாலன் ,
    நல்ல அறிவுரைதான் கொடுக்கிறார்கள்.
    சின்னச் சின்ன இன்பங்களைச் சேர்த்து வைத்துக்
    கொண்டு,
    நடந்த துன்பத்தைத் தள்ளி வைக்கப் பழக வேண்டும்.
    நன்மைகளை விரும்பி வரவழைக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  5. பாடல்கள் இடம் மாறி ஒலித்தாலும்
    என்றும் இனிமை சொல்பவை. மிக மிக ரசித்தேன் மா.
    நன்றியும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  6. வாழ்க்கையில் பக்குவம் உணர்ந்து நடப்பவர்களைத் தான் இந்த சமுதாயம் பழித்தும் பரிகசித்தும் மகிழ்கின்றதே!..

    பதிலளிநீக்கு
  7. சிறப்பான விளக்கம் தனபாலன். பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  8. திருக்குறள் விளக்கங்கள் வழக்கம் போல் அருமை. நன்றி

    பதிலளிநீக்கு
  9. வழக்கம் போல அருமையான பதிவு.
    ஆண்டவனின் தோட்டத்திலே பாடல் LR ஈஸ்வரி என்று நான் நினைத்ததை இன்று மாற்றி கொண்டேன்

    பதிலளிநீக்கு
  10. துன்பம் நேர்கையில் சிரிக்க முயன்றால் சிரிக்கமுடியவில்லை..அட...அழுதாச்சும் துன்பத்தை போக்கலாம் என்றால் அதுவும் தலை காட்டவில்லை.- இவை. பல பேர்களின் அங்கலாயி்ப்பாகவே இருக்கிறது.....

    பதிலளிநீக்கு
  11. "பயனற்ற" நீண்ட பேச்சு கேட்பவருக்கு அயர்வையும், வியர்வையும் கொடுப்பது மட்டுமல்லாது, முடிவில் பேசுபவருக்கே அது துயரத்தை தருவது மட்டுமல்லாது அவர் தொடவேண்டிய உயரத்தையும் தொட முடியாமல் செய்துவிடும் என்பதனை திறம்பட சொல்லியுள்ளீர்கள் ... நன்றி !!!

    பதிலளிநீக்கு
  12. வழக்கம்போல மிகவும் சிறப்பு. துன்பம் நேர்கையில்... என்ற இரு சொற்களைக் கொண்ட தலைப்பானது மிகவும் பொருந்திவருகிறது. உரிய ஒப்புமைகளைத் தந்த விதம் சிறப்பு. அரங்கேற்றம் பாடல் நான் ரசித்த பாடல்களில் ஒன்று.

    பதிலளிநீக்கு
  13. பதிவு மிகவும் அருமை ஜி.
    நானும்கூட பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி என்று நினைத்திருந்தேன்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.