🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



உலகத்தில் கோழைகள் தலைவன்...

அனைவருக்கும் வணக்கம்... நல்லாட்சி எப்படி இருக்க வேண்டும்...? கொடுமையான ஆட்சி இருந்தால்...? என்பதைப் பற்றிய பதிவு... எனது மனதுடன் ஒரு உரையாடலாக...

அமைதியாக வெளிமனம் நல்லாட்சியைப் பேசுகிறது...
அதை எதிர்த்துக் கொந்தளிப்பான உள்மனம் கொடுமையான ஆட்சியைக் கேள்வி கேட்கிறது... + வெறுப்புடன் சில பாடல்களும் பாடுகிறது...!

முக்கிய குறிப்பு :- நீங்கள் விரும்பும் ஆட்சியை நினைத்துக் கொண்டு நீல வண்ண வரிகளையும், விரும்பாத ஆட்சியை நினைத்துக் கொண்டு சிகப்பு வண்ண வரிகளையும் வாசிக்கலாம்... உங்கள் விருப்பப்படி நேர்மாறாகவும் இருக்கலாம்...! மனதில் தோன்றுவதைக் கருத்துரையிலும் சொல்லலாம்... மத்திய அரசு / மாநில அரசு மட்டுமல்ல, உலகத்தில் உள்ள எந்த அரசிற்கும் இப்பதிவுகள் பொருந்தும் என்பதை விட, உலகப் பொதுமறையாம் திருக்குறள் என்பதைக் கூறிக்கொண்டு...

முந்தைய பதிவின் இணைப்பு இங்கே எல்லா பணத்தையும் எடு...!

மக்களுக்கு எவ்வித சந்தேகமோ அல்லது குறைகளோ இருந்தால், அவர்கள் யாராக இருந்தாலும் எந்த நேரமாக இருந்தாலும், தன்னை சந்தித்து ஆலோசிக்கும்படி ஆட்சி செய்பவரே எளிமையானவர்... அவர்களின் குறைகளை விரைவில் நிவர்த்தி செய்ய வேண்டும்... அவ்வாறு செய்யவில்லையென்றால் தன்னோட அரசு தானே தாழ்ந்து அழிந்து விடும் என்று உணர்ந்தவரே சிறந்த ஆட்சியாளன்...

எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும் (548)



க்கும்... நாட்டிலே எவ்வளவோ போராட்டம் நடக்குது... எதையும் கண்டுக்கிறதே இல்லே, இல்லேன்னா அடக்குமுறை, இது தான் தீர்வா...? முக்கியமா விவசாயிகள் போராட்டம்... அதை உடனே சுமுகமாகப் பேசி, நல்லதொரு தீர்வு காண்பது ஒரு அரசின் கடமை தானே...? தேர்தல் வர்றப்போ மட்டும் மக்களிடம் போறது, நீலிக் கண்ணீர், கூழைக் கும்பீடு, வார்த்தை ஜாலங்கள், தீடீர் தேசபக்தி... நாடு வெளங்குமா...? தினமும் நாட்டிலே என்ன நடக்குது என்பதை தெரிஞ்சிக்க வேண்டாமா...? பிரச்சனை மேல் பிரச்சனை வளர்த்(ந்)துக்கிட்டே போனா, நாளுக்கு நாள் இந்த நாடு கெட்டுச் சீரழிந்து தானே போகும் என்பது தெரியாதா...?

நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும் (553)


நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு - அவன் பேர் மனிதனல்ல...2 நாவில் ஒன்று நினைவில் ஒன்று - அதன் பேர் உள்ளமல்ல...2 // உள்ளத்தில் வைத்ததை உதட்டிலும் வைப்பவன் - எவனோ அவனே மனிதன்...2 ஊரார் வேர்வையில் உடலை வளர்ப்பவன் - உலகத்தில் கோழைகள் தலைவன்...2 // காட்டில் நிலவாய் கடலில் மழையாய் - பிறந்தால் யாருக்கு லாபம்...?2 பகையில் துணையாய் பசியில் உணவாய் இருந்தால் ஊருக்கு லாபம் - இருந்தால் ஊருக்கு லாபம்...© ஆசை முகம் வாலி S.M.சுப்பையா நாயுடு T.M.சௌந்தரராஜன் @ 1965 ⟫

சீரழிவு வருவதாக அறிகுறி தெரிந்தாலே, தனக்கும் தன்னை சார்ந்தவர்களைப் பற்றி கவலைப்படாமல், மக்கள் சேவையே மகத்தான சேவை என்று முன்னுரிமை தந்து, நாட்டை காப்பாற்றுபவன் சிறந்த ஆட்சியாளன்... நீதிமுறை கெடாத அவனது நேர்மையான ஆட்சி, எந்த மோசமான சூழ்நிலை வந்தாலும் ஆட்சியையும் மக்களையும் காப்பாற்றும்...

இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின் (547)



நல்லா சொன்னே போ... எப்படியும் ஆட்சிக்கு வந்தா போதும், பிறகு ஆடம்பர சொகுசான உல்லாச தனது வாழ்க்கையே பிரதானம்ன்னு நினைச்சா எப்படி...? வருங்காலத்தில் மக்கள் நிலைமை என்னவாகும் என்பதை மறந்து, முறைதவறி ஆட்சி செஞ்சா...? பேராசையால் சேர்த்த பாவ சொத்து எல்லாம் போனா பரவாயில்லே, அதோட சேர்ந்து முக்கியமா மக்கள் மனசிலே இருக்கிற அன்பும் மதிப்பும் போயிடும்ன்னு தெரியாதா...? என்னவொரு கேவலமான அரசாட்சி இது...?

கூழும் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு (554)


உனக்கெது சொந்தம் ? எனக்கெது சொந்தம் ? உலகத்துக்கு எது தான் சொந்தமடா...? பாவக்கணக்குகளை பணத்தாலே மூடிவைத்து, பாசாங்கு வேலைசெய்த பகல் வேஷக்காரர்களும், ஆபத்தில் சிக்கி அழிந்தார்களானாலும், அடுத்தடுத்து வந்தவரும் அவர்களுக்குத் தம்பியடா...! அவருவந்தார்... அவருவந்தார் இவருவந்தார் ஆடினார், முடிவில் எவருக்குமே தெரியாம ஓடினார் - மனதிலிருந்ததெல்லாம் மறந்து கண்ணை மூடினார்2 செவருவச்சுக் காத்தாலும் செல்வமெல்லாம் சேர்த்தாலும் செத்தபின்னே அத்தனைக்கும் சொந்தக்காரன் யாரு...? நீ துணிவிருந்தாக் கூறு...! ரொம்ப எளியவரும் பெரியவரும் எங்கே போனார் பாரு - அவர் எங்கே போனார் பாரு...!© பாசவலை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் விஸ்வநாதன்-ராமமூர்த்தி C.S.ஜெயராமன் @ 1956 ⟫

பிற்சேர்க்கை : ← இந்த மணியைச் சுட்டியால் (Mouse) சொடுக்கினால் குறளை வாசிக்கலாம்... கைப்பேசியில் வாசிப்பவர்கள் விரலால் சொடுக்கி வாசிக்கலாம்...

பாடல்கள் தேர்வு மட்டும் தான் அடியேனது... மற்றவை எல்லாம் உங்களுக்குத் தெரிந்த 2 அதிகாரங்கள்... அதாவது 20 குறள்கள்... இதற்கு முந்தைய பதிவில்.......

இரு அதிகாரங்களையும் சரியாகக் கணித்தவர் : ஒருவர்
அவற்றில் சில குறள்களைச் சொன்னவர்கள் : மூவர்

இந்த தொடர் முடிந்தவுடன், அவற்றை எவ்வாறு இணைத்துள்ளேன் என்பதை பிறகு சொல்கிறேன்... தெரிந்தவர்கள் கருத்துரையில் சொல்ல வேண்டுகிறேன்... உங்கள் மனதில் வேறு பாடலும் நினைவுக்கு வரலாம்... அதை மட்டும் கருத்துரையில் சொல்லாம, மேலே சொன்ன முக்கிய குறிப்புடன்.............




?

அதிகாரங்கள் தொடரும்... நன்றி...

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. மக்களை எந்த நொடியும் சந்திக்க தயாராகும் தலைவன் இன்று எவன் இருக்கிறான் ஜி ?

    நடிகை ரம்பா தலைவனை கண்டு பிறந்தநாள் ஆசி வாங்க நினைத்தவுடன் வீட்டுக்குள் செல்ல முடிகிறது.

    ஆனால் தொண்டன் வாழ்க கோஷமிட்டே வாசலில் நிற்கின்றான்.

    தலைவர்கள் திருந்தவேண்டிய அவசியமில்லை. மக்கள்தான் திருந்தவேண்டும் இனி இதற்கு சாத்தியங்கள் குறைவே...

    அருமையான பாடல் வரிகள் சேர்ப்பு.

    உங்களது அதிகாரங்கள் தொடர்ந்து வரட்டும் ஜி

    பதிலளிநீக்கு
  2. எண்பதத்தான் ஓரா முறைசெய்யாமன்னவன்
    தண்பதத்தான் தானே கெடும்.

    காட்சிக்கு எளியனாயும், குடிமக்களின் குறையைக் கேட்டு ஆராய்ந்து முறை செய்யாத மன்னவன் தாழ்ந்த நிலையில் சென்று கெடுவான்.

    ஊருக்கும் மக்களுக்கும் என்ன வளம் சேர்க்கலாம் என்று நினைப்பவன் நல்ல தலைவன், தனக்கு என்ன வளம் சேர்க்கலாம் என்ற தலைவன் தாழ்ந்த நிலை அடைந்து அழிந்து போவான்.

    பதிலளிநீக்கு
  3. இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
    முறைகாக்கும் முட்டாச் செயின்.

    அரசன் உலகத்தையெல்லாம் காப்பாற்றுவான். நீதி தவறமல் ஆட்சி செய்வானாயின் அரசனை அந்த ஆட்சி முறையே காப்பாற்றும்.

    ஆனால் நல்லாட்சி செய்யும் தலைவனுக்கு இது பொருந்தும், தன் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள மனசாட்சியை அடகு வைத்து பணத்தாட்சி செய்யும் தலைவனுக்கு ?

    பதிலளிநீக்கு
  4. நீங்கள் தேர்வு செய்த பாடல்கள் இரண்டும் மிக அருமை.
    நாளொரு மேடையும் பொழுதொரு நடிபாய் தினம் அரசியல்வாதிகள் பேசுவதை கேட்கிறோம்.நாவில் ஒன்று உள்ளத்தில் ஒன்றுமாய் தான் பேசபடுகிறது.

    காட்டில் நிலவாய் கடலில் மழையாய் (அவர்கள் காட்டில் மழை, அவர்கள் வீட்டில் நிலவு)
    மக்கள் வாழ்வு இருட்டு, விவாசாயி வாழ்வில் வறட்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எவ்வளவு சரியாய் சொல்லி உள்ளீர்கள் அம்மா... பாட்டின் வரிகளோடு உங்கள் கருத்துக்களும் சிறப்பு என்பதை விட உண்மை...

      நீக்கு
  5. செங்கோன்மை, கொடுங்கோன்மை இரண்டு அதிகாரத்திலும் வள்ளுவர் சொன்னபடி ஆட்சி செய்பவர் அவர் அவர் செயலுக்கு ஏற்ற பலனை அனுபவிப்பார்கள்.

    பதிலளிநீக்கு
  6. கூழும் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
    சூழாது செய்யும் அரசு

    நடக்கப் போவதைப் பற்றிக் கருதாமல், முறைதவறி ஆட்சி செய்யும் மன்னன் பொருளையும், குடிமக்களையும் ஒரு சேர இழந்து விடுவான்.

    பதிலளிநீக்கு
  7. மன்னர்க்கு மன்னுதல் செங்க்கோன்மை அஃதின்றேல்
    மன்னவாம் மன்னர்க்கு ஒளி.

    செங்கோன்மையால்தான் மன்னர்க்கு புகழ் நிலைபெறும். அச்செங்கோன்மை இல்லையென்றால் புகழ் நிலைபெற்றிராது.

    ஆனால் இப்போது நீடித்து நிலைபேரும் புகழை யாரும் எதிர்பார்ப்பது இல்லை.
    ஏழு எட்டு தலைமுறைக்கு எப்படி சொத்து சேர்க்கலாம் குறுகிய காலத்தில் என்பதைபற்றிய கவலைதான் காணப்படுகிறது .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் குறள் தேர்வு விளக்கங்களைப் படித்து நான் எழுத வந்ததே மறந்து போய்விட்டது. அற்புதம்.

      நீக்கு
    2. என்ன இப்படி சொல்லி விட்டீர்கள் ஜோதிஜி?
      நீங்கள் நிறைய எழுதுங்கள்.
      படிக்க காத்து இருக்கிறோம்.

      நீக்கு
  8. மக்களை நேரடியாகச் சந்திக்கிற ஆட்சியாளர்கள் யார் இருக்கிறார்கள்? ஆட்சியர் குறைகேட்பு நாள் முன்பெல்லாம் அடிக்கடி நடக்கும். அதுகூட இப்போது எல்லா இடங்களிலும் நடக்கிறதா தெரியவில்லை. சொல்லப்படும் எத்தனை பிரச்னைகளுக்கு உடனே தீர்வு கிடைக்கிறது என்பதும் கேள்விக்குறி. பெரும்பாலான மக்கள் ஆளும்கட்சியின், அல்லது எதிர்க்கட்சியின் அங்கத்தினர்களால் பாதிக்கப் பட்டவர்களாகவே இருப்பார்கள்.​

    பதிலளிநீக்கு
  9. இரண்டு சினிமா பாடல்களும் கேட்டு மகிழ்ந்தேன்.
    இரண்டும் மிக அருமையான பாடல்கள்.
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. இரண்டாவதற்கு என் தெரிவாக "இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே" பாடலைச் சிபாரிசு செய்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டிடி எனக்குப் பாடல்கள் அவ்வளவாகச் சொல்லத் தெரியாது இங்கு ஸ்ரீராம் சொல்லியிருக்கும் பாடல் அட!! கரீக்டு என்று தோன்றியதால்...

      இதை நானும் வழி மொழிகிறேன்...

      கீதா

      நீக்கு
    2. அடுத்த பதிவில் இந்தப் பாடல் இருக்கிறது... ஏனென்றால் குறளின் குரல் அப்படி... அதன் குறளுக்கேற்ப இந்தப் பாடல் தவிர வேறு பாடல் எதுவும் எனக்கும் பொருந்தவில்லை...

      நீக்கு
  11. குறளும் பாடல்களும் கருத்துக்களும் அருமை. நன்றி

    பதிலளிநீக்கு
  12. "ஓடி வா என்று உலகத்தை அழைப்போம், உலகம் வரவிடில் புதியதை அமைப்போம் "என்ற பாடலைச் சிபாரிசு செய்கிறேன்.
    ஏனென்றால் இப்போது நல்லாட்சி அமைப்பது மக்களின் கையில். அவர்கள் துணிந்து முடிவு எடுக்க வேண்டிய காலம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் சொல்லியிருக்கும் பாடலைப் பாடிவிட்டு அடுத்து கோமதிக்கா சொல்லியிருக்கும் பாடல் பொருந்து..இதையும் நானும்...

      எவ்வளவு நாள் ஏமாறுவோம்....நாம் அமைப்போம்...ரெண்டு பேரும் அழகா அடுத்தடுத்து பொருள் வருவது போல் சொல்லியிருக்காங்க...

      மீக்கு பாடல்கள் டக்குனு சொல்லத் தெரியாது எனவே இப்படி....

      கீதா

      நீக்கு
    2. அமைச்சு அதிகாரத்தில் வரும் குறளுக்கு தங்களின் பாடல் சரியாக பொருத்தும் கோமதி அரசு அம்மா... நன்றி...

      நீக்கு
  13. "நமது வெற்றியை நாளைய உலகம் சொல்லும்
    இப்படை தோற்கின் எப்படை வெல்லும்"

    என்ற பாடலை சிபாரிசு செய்கிறேன்.

    இதை கோமாளி வாயசைத்து சொல்லி ரசித்தது போதும்... மக்களாகிய நாம் நமது சந்ததிகளுக்கு சொல்லிச் செல்வோம்.

    பதிலளிநீக்கு
  14. பெரும்பாலான கருத்துகள் நேர்மறை மற்றும் எதிர்மறை இரண்டுமே நான் நினைப்பதை ஒத்திருந்தன. உலகிலுள்ள எந்த அரசுக்கும் இது பொருந்தும் என்ற உங்களின் வரிகள் முத்தாய்ப்பானவை.

    பதிலளிநீக்கு
  15. அரசியலை பணம் காய்க்கும் தொழிலாக மாற்றி இவ்வுலகை நாசம் செய்கின்றனர். மாற்றிக் காட்டுவோம்.

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் டிடி. பாருங்க முதல் நீல எழுத்திலேயே நம்ம எல்லாரது மனசுலயும் இருக்கற ஐடியல் தலைவர் ஆட்சியைப் பத்தி சொல்லிட்டீங்க.. மத்த கலர் வந்து யதார்த்தம் பேசுது.
    மனசாட்சி கேட்கும் கேள்வி பத்தி ஆட்சி புரிபவருக்கும் தெரியுமே. தெரிஞ்சே தானே செய்யறாங்க. தூங்கறவனை எழுப்பலாம். தூங்குவது போல பாசாங்கு செய்பவனை?

    கீதா

    பதிலளிநீக்கு
  17. நாளொரு மேனி பொழுதொரு நடிப்பு பாடல் இப்பத்தான் கேட்கிறேன் டிடி.

    இரண்டாவது நீலக் கலர் மற்றும் மனசாட்சி…..நீலம் சொல்லுவது நல்லாத்தான் இருக்கு. அப்படொ ஒரு தலைவர் மற்றும் ஆட்சி கிடைச்சா நல்லாத்தான் இருக்கும். ஆனா அவங்க அப்படி இல்லையே. மனசாட்சி சொல்லுவது போலத்தானே இருக்கு!!!

    எனக்கு நினைவுக்கு வந்தது இரு படங்கள் ஒன்று சத்தியராஜ் எம் எல் ஏ ஆகும் போது கொஞ்சம் கொஞ்சமா மாறுவதைக் காட்டும் காட்சி வருமே? அமைதிப் படை படம்? அப்படித்தான் நினைக்கிறேன் அந்தப் படமும் கொஞ்சம் சமீபத்துல வந்த படம் சகுனி படமும் நினைவுக்கு வந்துச்சு…

    திருக்குறள் கண்டு பிடிக்கறேன்…

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மக்கள் என் பக்கம் - இந்த படமும் அருமையாக இருக்கும்...

      அந்தப் படத்தில் ஒரு பாட்டு :-

      நாவுக்கு அடிமை தான் ஆறு வயசுல...
      பூவுக்கு அடிமை பதினாரு வயசுல...
      நோவுக்கு அடிமை தான் பாதி வயசுல...
      சாவுக்கு அடிமை அட நூறு வயசுல...
      அடிமைகளா பொறந்து விட்டோம்...
      அதை மட்டும் தான் மறந்துவிட்டோம்...

      இப்போது யாருடைய ஞாபகம் வருகிறது...?
      ஹா... ஹா... ஹா... ஹா...

      நீக்கு
    2. உங்களுக்கு யார் நினைவு வந்ததோ அதே நினைவுதான் எனக்கும். பூவையின் நினைப்புதான் வந்தது.

      நீக்கு
  18. உங்களின் முதல் நீலத்திற்கு…..
    எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
    தண்பதத்தான் தானே கெடும்
    குறள் 548
    இதற்கு அமைச்சு விலும் இருக்கு ஆனால் ஆட்சியாள்பவர் என்பதால் இது…

    கீதா

    பதிலளிநீக்கு
  19. இரண்டாம் நீலத்திற்கு…
    குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
    அடிதழீஇ நிற்கும் உலகு
    குறள் எண் 544 இதுவும் பொருந்துவது போல் உள்ளது..

    இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
    முறைகாக்கும் முட்டாச் செயின்
    குறள் 547

    நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
    நாடொறும் நாடு கெடும்.
    குறள் 553:
    நான் இப்போது பார்த்த வரையில் செங்கோன்மையில் உள்ள குறள்களைச் சொன்னாலும், மனசாட்சியின் வரிகளுக்குத் தேடிய போது, கொடுங்கோன்மை அதிராகமும் பொருந்துவது போன்றுஇருந்தது.
    வெருவந்த செய்யாமை அதிகாரத்தைப் பார்த்தப்ப இக்குறள் மெய்ப்படாதோ என்றும் தோன்றியது!!!!!!!!!
    வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
    ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.
    குறல் 563

    இக்குறள் நீலத்திற்குப் பொருந்தும். ஏனென்றால் எவ்வளவு மோசம் செய்தாலும் அந்த ஆட்சியாளரேதானே மீண்டும் மீண்டும் பதவி வகிப்பது போல் மக்களும் இருக்கின்றனர். இந்தக் குறளை வாசித்ததும் எனக்கு மக்கள் புரட்சி செய்து நல்ல தலைவனைக் கொண்டு வரனும் என்றும் தோன்றியது நோட்டா!!!!!!!!ஆட்சியை விரும்புபவன் பயத்துடன் அரியணை ஏறுவான் என்றும் தோன்றியது….நடக்குமா?????!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா...! நீங்கள் கண்டுபிடித்து விட்டீர்கள் என்பதை விட ஒரு நூலை பிடித்து விட்டீர்கள்... அப்படியே மேலேறி வந்தாலே போதும்... உங்களின் கருத்துரையை கண்டு மிகவும் மகிழ்ச்சி...

      நீக்கு
  20. நல்ல அலசல் பதிவு. டிடி சொல்லி இருப்பது எந்த ஆட்சியாளருக்கும் பொருந்தும். குறள்களை கோமதி அரசு தேர்வு செய்து சொல்லி விட்டார்கள். மற்றபடி சமீபத்திய (சுமார் 30 ஆண்டுக்கும் மேல் அரசியல் படங்களோ/வேறே திரைப்படங்களோ) பார்க்காதபடியால் பாடல்கள் தேர்வு குறித்து எதுவும் சொல்லத் தெரியவில்லை. இருந்தாலும் "எத்தனை காலம் தான் ஏமாற்றினார் நாட்டிலே! இந்த நாட்டிலே!" என்னும் பாடல் நினைவில் வந்தது. மேலே சொல்லப் போகும் அன்பர்களின் கருத்திற்குக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதற்கு முன்பு ஸ்ரீராம் சார் கருத்துரையில் சகோதரி கீதா அவர்களும் மறுமொழியாக சொல்லி இருந்தார்கள்... அங்கு விளக்கம் கொடுத்துள்ளேன் அம்மா... (வாசிக்கவும்)

      எனக்கு மிகவும் சவாலாக இருந்தது பாடல்கள் தேர்வு தான்... சில பாடல்கள் அனைத்திற்கும் பொருத்தமாக இருந்தது... கிட்டத்தட்ட ஐம்பத்திற்கும் மேலான பாடல்களை தேர்வு செய்தேன்... அதிலிருந்து தான் சில பாடல்களை இணைத்துள்ளேன்... அனைத்து பாடல்களும் நான் பிறந்ததிற்கு முன்பு வந்தது...!

      நீக்கு
  21. கார்ட்டூன் ஷார்ப்!
    உத்தம(!) தலைவர்களை தேர்ந்தெடுக்க வாய்ப்பு வருது.. குறிப்பாகத் தமிழ்மண்ணின் உத்தமர்கள்! கண்ணதாசன்வேற, இந்த நேரம்பாத்து மனசுக்குள்:

    மேடையேறிப் பேசும்போது ஆறுபோலப் பேச்சு
    கீழிறங்கிப் போகும்போது சொன்னதெல்லாம் போச்சு
    காசை எடுத்து நீட்டி.... கழுத பாடும் பாட்டு
    ஆசை வார்த்த காட்டு.. உனக்குங்கூட ஓட்டு !

    ஹஹஹா..!

    காலங்காலத்துக்கும் இப்படித்தான் அவஸ்தப்படப்போறோம்னு தெரிஞ்சுதான் எழுதிவச்சிட்டுப் போயிருக்கான் மனுஷன்..!

    பதிலளிநீக்கு
  22. காலத்திற்கேற்ற சிறந்த பதிவு ஐயா! குறிப்பாக கவிஞர் வாலி அவர்களின் குறிப்பிட்ட அந்தப் பாடலை எடுத்துக்காட்டியிருந்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மற்றபடி பதிவின் குறிப்பிட்ட வரிகள் சில குறள்களை நினைவூட்டினாலும் சரியாக எந்தக் குறளை இவை சுட்டுகின்றன என்பதை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நேரம் நம் பதிவுலகத் தோழர்கள் கண்டுபிடித்து முடித்தே இருப்பார்கள் என நினைக்கிறேன். (இன்னும் கருத்துரைகளை முழுக்கப் படிக்கவில்லை). அதிகாரங்கள் எனப் பார்த்தால் ‘இறைமாட்சி’, ‘கொடுங்கோன்மை’ ஆகியவையே அந்த இரு அதிகாரங்கள் என நினைக்கிறேன், சரியா?

    பதிவின் முடிவில் இருக்கும் அந்த அசைவூட்டம் (animation) நன்றாக இருக்கிறது; சுவைத்தேன்.

    பதிலளிநீக்கு
  23. தேர்தல் சமயம்... இப்படி எழுதியிருக்கீங்களே.... காமராஜரை, மீண்டும் கல்லறையிலிருந்து எழுப்பிக் கொண்டுவந்தால்தான் இதெல்லாம் சாத்தியம்.

    அரசியல்வாதிகளைத் தோலுரிக்கும் நீங்கள்,

    ஆடி அடங்கும் வாழ்க்கையடா
    ஆறடி நிலமே சொந்தமடா

    பாட்டை சொத்துக்கு மேல் சொத்து சேர்க்கும் அரசியல்வாதிகளுக்கு டெடிகேட் பண்ணியிருக்கலாமே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அமைச்சு அதிகாரம் குறளின் குரல் பதிவுகளில், தேர்வு செய்து வைத்திருக்கும் பாடல்களில் தாங்கள் குறிப்பிட்டிருக்கும் பாடலும் உண்டு ஐயா...

      நீக்கு
  24. வேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும்
    கோலொடு நின்றான் இரவு - வரிக்கு மேல் வரி வசூலிக்கும் அரசுக்கு

    அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
    செல்வத்தைத் தேய்க்கும் படை. - இங்கு செல்வம் என்பது தாங்கள் ஏற்கெனவே ஜெயித்திருக்கும் எம்பி சீட், எம்.எல்.ஏ சீட் என்று வைத்துக்கொள்ளலாம்.

    முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
    ஒல்லாது வானம் பெயல். - வள்ளுவர் ஒருவேளை நம் காலத்தில் வாழ்ந்திருந்தால், 'ஒல்லாது வானம் பெயல்' என்றும், 'ஒல்லாது கெடுக்கும் பெய்து' என்றும் 2015ஐ நினைவுகூர்ந்தும், மற்ற வருடங்களை நினைவு கூர்ந்தும் இரண்டு குறள்கள் எழுதியிருப்பார்.

    பதிலளிநீக்கு
  25. முதல் பாட்டு கேட்டிருக்கவில்லை முன்பு, ரெண்டாவது கேட்ட பாடல்...
    பாடலை மட்டுமே பேசுகிறேன் என பார்க்கிறீங்களோ?:)... குறள் தெரிஞ்சா மின்னி முழக்கிட மாட்டேன்ன்ன்?:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தீர்க்கதரிசி, இந்த அழகில் தமிழில் "டி" எல்லோ! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
    2. கீசாக்கா மீக்கு தற்பெருமை பிடிக்காதாக்கும்:) அதனாலதான் இப்பூசிச் சொல்கிறேனாக்கும் ஹா ஹா ஹா:)..

      நீக்கு
  26. கடசியில ஒரு கேள்வி கேட்டு, எல்லோரையும் அரசியல்வாதி ரேஞ்சுக்கு மாத்திட்டீங்க:)...

    முதல் தடவையாக என் மொபைல் வரலாற்றி ல் உங்கள் புளொக் ஆடுது... ஏனோ தெரியாது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னுடைய பதிவுகள் பலவற்றை கணினியில் பார்ப்பதே உத்தமம்... ஏனென்றால் தொழிற்நுட்பம் சேர்த்து வருவதால்...

      "உங்களுக்கு ஞாபகம் வருகிற அரசியல் நிகழ்வு என்ன...?" என்பதை (குத்தி குத்தி) தனித்தனியாக கேட்டு உள்ளேன்... அது தான் காரணம்... மற்றபடி அந்த தொழிற்நுட்பம் பதிவின் முடிவில் என்பதால், பதிவு படிக்கும் வரை எதுவும் ஆடாது...! அதன் பிறகு...

      பலரையும் நடுங்க வைக்கும் பல அரசியல் நிகழ்வுகள் உள்ளதால் தான் இந்த ஆட்டம்...! நன்றி சகோதரி...

      நீக்கு
    2. ஹா ஹா ஹா அதேதான், பதிவின் முடிவின் பின்புதான் ஆடுது போனில் ஹா ஹா ஹா:).. நல்லவேளை நீங்க சுட்டு சுட்டுக் கேட்காமல் விட்டீங்க:)..

      நீக்கு
  27. மக்கள் விரும்பும் ஆட்சியை தருவதாக வாக்குறிதிகள் பல அள்ளி தெளித்துவிட்டு ஆட்சியை பிடித்த பின் தான் விரும்பியபடி ஆட்சி செய்து மக்களை ஏமாற்ற செய்வதுதான் இந்த அரசியல் தலைவர்கள் செய்வது...இதற்கு காரணம் நல்ல தலைவர்கள் நம்மிடம் இல்லாததுதான் ..... நல்ல தலைவர்கள் இல்லாதற்கு காரணம் நாம் நம் பிள்ளைகளை சுயநலத்துடன் வளர்ப்பதால் அந்த குழந்தைகள் வளர்ந்து தலைவன் ஆன பின் சுயநலமிக்க தலைவானக உருவாகிறான் அப்படிப்பட்ட தலைவன் நல்ல ஆட்சியை தருவான் என்று எப்படி நாம் எதிர்பார்க்க முடியும்

    பதிலளிநீக்கு
  28. தனபாலன், முதல் பாட்டு போலவே ஒரு பாட்டு இன்று கேட்டேன் மிக பழைய பாட்டு.நாகேஸ்வரராவ், ராஜசுலோஜனா பாடுகிறார்கள் படத்தில்தேசபக்தி பாடல்.,

    தேசமெங்கும் விடுதலை விழா என்று ஆரம்பிக்கிறது. சுந்திரம் வந்ததும் தூங்கி விட்டோம்

    சொன்னதை மறந்து விட்டோம், பதவி வேட்டை, லஞ்சம், ஊழல் மலிந்து விட்டது, பதுக்கிவைக்கும் குணம் வந்து விட்டது, பதவி வேட்டை , பதவி மோகம், சாதி சண்டை வளர்ந்து விட்டது, இவை சுயநலத்தால் வந்தது அல்லவா? இதை தொலைப்பது நம் கடமை அல்லவா? சாதனை ஏதும் இல்லை, மேடை பேச்சு நிறைந்து விட்டது.

    https://www.youtube.com/watch?v=T_L4vRk8hdo

    கேட்டு பாருங்கள்.

    பதிலளிநீக்கு
  29. திருடன் தானா திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது எல்லோரும் ஒரேபோல் ஆதங்கப் படுகிறார்கள்

    பதிலளிநீக்கு
  30. நல்லாட்சியா?! இனி வாய்ப்பில்லைன்னுதான் நினைக்குறேன்.

    பதிலளிநீக்கு
  31. பாசவலை பட்டுக்கோட்டையாரின் பாடல் எத்தனை உண்மை !! கண்முன்னே நடந்து முடிந்த பல காட்சிகள் ஓடுவதை தவிர்க்க முடியலை

    பதிலளிநீக்கு
  32. மக்கள் சேவையே மகேசன் சேவை என்று இன்று எந்த தலைவர்கள் சிந்திக்கின்றனர்??டிடி!

    பதிலளிநீக்கு
  33. மனுநீதி சோழன் போல இப்ப யார் உண்டு ஆட்சியாளர்கள். காலத்தின் கோலம் வாக்காளர்களும் வருவது இலாபம் என்ற சிந்தனையில் ஓட்டை விற்கும் நிலையில் என்று திருந்தும் இந்த தேசம்! அருமையான பாடல்கள்.

    பதிலளிநீக்கு
  34. அன்பு தனபாலன் வாழ்க வளமுடன்.
    திருமதி கோமதி அரசின் தமிழ் அறிவு,உங்கள் குறள் அறிவு, அதுவும் எங்கள் காலத்திய பாடல்களோடு
    பிரமிக்க வைக்கிறது.
    நாளொரு மேடை,பொழுதொரு நடிப்பு அருமையான பாடல்.
    ஆட்டம் போட்டவர்கள் எல்லாம் அடங்கி விட்டார் மண்ணுக்குள்ளே.
    இப்போதும் அவர் எச்சம் இன்னும் ஆடக் காத்திருக்கிறது.
    அரிதாரம் கலைத்து நிஜ முகத்தோடு மனிதர்கள்
    ஆட்சிக்கு வந்தால் சென்னெல் விளையும். பூமி செழிக்கும். உங்கள் விழிப்புணர்வுப் பதிவு உற்சாகம் கொடுக்கிறது. நல்லதே நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  35. நெல்லைத்தமிழன் மனம் நிறை பாராட்டுகள்.
    அன்பு கீதா ரங்கனுக்கும் சேர்த்து.

    பதிலளிநீக்கு
  36. வணக்கம் சகோதரரே

    நல்லதோர் பதிவு. பாட்டுக்கள் எப்போதும் போல் பதிவுக்கு பொருத்தமாக கருத்துச்செறிவுடன் இருக்க, அதற்கேற்றவாறு கருத்துகளில் குறள் வழி விளக்கமுமாய் பதிவு அருமை. சகோதரிகள் கீதா ரெங்கன். கோமதி அரசு அவர்களும் நன்றாக பதில் தந்துள்ளார்கள். வாழ்த்துகள். சுயநலம் கருதாத ஆட்சி நல்லாட்சியாக இருக்க முடியும். ஆனால் சுயநலமென்பது மனித வர்க்கத்திற்கு அமைந்த சாபமல்லவா? தலைவனை தேர்ந்தெடுக்கும் போதிலும், அதுவல்லவா குறுக்கிடுகிறது.. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  37. வணக்கம் டிடி !

    தங்கள் பதிவுகளின் ரசனையும் போல அழகுதான் தத்துவங்களுக்கும் குறைவில்லை .....
    படுக்க கோட்டையாரின் பாடல் வரிகள் அருமை !


    வாழ்க நலம்

    பதிலளிநீக்கு
  38. அன்பின் தனபாலன்...

    தங்களது பதிவைப் படித்தபின் என்ன சொல்வது என்று தெரியவில்லை...

    என் மனதில் கொதிக்கும் பல விஷயங்கள் தங்களது பதிவில்.... மேலும் அடுத்து வந்துள்ள கருத்துரைகளில்....

    1967/69 களிலேயே கூழைக் கும்பிடும் நீலிக் கண்ணீரும் அரங்கேற்றப்பட்டு விட்டன..

    ஏழைப் பங்காளனின் ஏழடுக்கு மாளிகையைப் பாரீர்.. என்று வாடகை வீட்டைப் படம் பிடித்துப் போட்டு கடையை விரித்தார்கள்...

    அதன் உட்பொருள் விவசாயிகளும் உழைப்பாளிகளும் அல்லவா அங்கிருக்க வேண்டியவர்கள் என்பது.....

    இந்த அரசுகளால் எத்தனை உழைப்பாளிகள் ஏழடுக்கு மாளிகையில் தலை சாய்த்து உறங்கினார்கள் என்று தெரியவில்லை...

    உழைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்த மக்களைத் திசை திருப்பி விட்டவை திராவிட அரசுகள்....

    உழைத்தால் தான் ஒவ்வொருத்தனுக்கும் ஒவ்வொரு வேளையும் சோறு என்று இருந்தால் அநியாயயும் அக்கிரமமும் முளை விட்டிருக்காது...

    கருவில் தோன்றியதில் இருந்து கட்டையில் வெந்து சாகும்வரை எல்லாமும் இலவசம்.. இலவசம் என்றால்

    இப்படியான (பொள்ளாச்சி) கழிசடைத் தனங்களும் களவாணித் தனங்களும் தான் மிச்சமாக இருக்கும்...

    எட்டாண்டுகளுக்கு முன் - அரசு வழங்கிய இலவசம் ஒன்றினைச் சென்று வாங்காதிருந்த போது கட்சியினர் வந்து அன்பாக (!) சொல்லி விட்டுப் போனார்கள்... சரி என்று வாங்கி வந்தால் - விடியும் முன்பாக வெளியில் தூக்கிப் போட்டு விட்டான் மகன்...

    அவரவரும் திருந்தாவிட்டால்
    ஆவது ஒன்றுமில்லை...

    கைத்தொலைபேசியில் இருந்து கருத்துரை சரியாக சொல்ல முடியவில்லை...

    நல்லவர்களால் புதிய அரசு அமைந்தால் நல்லது தான்... வெட்ட வெளிப் பாலையில் விடியலுக்குக் காத்திருக்கிறோம்...

    வாழ்க நாடு.. வாழ்க மக்கள்...

    எண்ணிய திண்ணியராகப் பெறின் - வாழ்க நலம் எனும் வாக்கும் வலுப் பெறும்..

    வாழ்க நலம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமீபத்திய பல நிகழ்வுகளை பார்க்கும் போது, கோபமும் எரிச்சலும் உண்டாகி மனம் கொதிக்கிறது... தமிழ்நாட்டை துண்டுதுண்டாக்கி சுடுகாடு ஆக்கிக் கொண்டு இருக்கிறார்கள்...

      உங்கள் கருத்து எனது மனதிற்கு மிகவும் ஆறுதலாக இருந்தது...

      மிக்க நன்றி ஐயா...

      நீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.