🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



எல்லா பணத்தையும் எடு...!

அனைவருக்கும் வணக்கம்... முந்தைய ஒரு பதிவில் 'அமைச்சு' அதிகாரத்தோடு பத்து குறள்களுக்கான விளக்கத்தைப் பதில்களாகச் சொல்வார்கள் என்று எதிர்பார்த்தால், குறளுக்குக் குறள் சொல்லி, அற்புதமான கருத்துரைகளைக் கூறிய அனைவருக்கும் நன்றி... அவற்றை வாசித்துச் சிந்திக்க இணைப்பு இங்கே

மேற்படி 'அமைச்சு' அதிகாரத்தின் குறளின் குரல் பகிர்வுகள், பாடல் சேர்க்கையால் சிறிது தாமதமாக வரும்...! சரி, அமைச்சர் மற்றும் அமைச்சரவை எல்லாம் சிந்தனை செய்தாயிற்று... இனி ஆட்சி அரசாங்கத்தைப் பற்றி...

நல்லாட்சி எப்படி இருக்க வேண்டும்...? கொடுமையான ஆட்சி இருந்தால்...? என்பதைப் பற்றிய பதிவு... எனது மனதுடன் ஒரு உரையாடலாக...

அமைதியாக வெளிமனம் நல்லாட்சியைப் பேசுகிறது...
அதை எதிர்த்துக் கொந்தளிப்பான உள்மனம் கொடுமையான ஆட்சியைக் கேள்வி கேட்கிறது... + வெறுப்புடன் சில பாடல்களும் பாடுகிறது...!

முக்கிய குறிப்பு :- நீங்கள் விரும்பும் ஆட்சியை நினைத்துக் கொண்டு நீல வண்ண வரிகளையும், விரும்பாத ஆட்சியை நினைத்துக் கொண்டு சிகப்பு வண்ண வரிகளையும் வாசிக்கலாம்... உங்கள் விருப்பப்படி நேர்மாறாகவும் இருக்கலாம்...! மனதில் தோன்றுவதைக் கருத்துரையிலும் சொல்லலாம்... மத்திய அரசு / மாநில அரசு மட்டுமல்ல, உலகத்தில் உள்ள எந்த அரசிற்கும் இப்பதிவுகள் பொருந்தும் என்பதை விட, உலகப் பொதுமறையாம் திருக்குறள் என்பதைக் கூறிக்கொண்டு...

ஈவு இரக்கம் இல்லாமல் நாட்டு மக்களிடம் கொள்ளை அடிப்பவர்களை, கேவலம் - பணத்திற்காகக் கொலை செய்பவர்களை, காமக்கொடூரர்களை... சுருக்கமாக நாட்டைக் கெடுக்கும் நயவஞ்சக செயல் செய்யும் சில கொடியவர்களைத் தண்டித்து, அவர்களிடமிருந்து நல்லவர்களைக் காப்பாற்ற வேண்டியது ஒரு அரசின் பொறுப்பு... தகுந்த தண்டனை கொடுத்தும் மாறவில்லையெனில், மரண தண்டனையே சரி... அது ஒரு விவசாயி களையைக் களைந்து, பசுமையான பயிரைக் காப்பதற்குச் சமம்...

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர் (550)



தகுந்த தண்டனை சரி தான்... களைகள் முளைக்க ஆரம்பித்தவுடன் கண்டறிந்து வேரோடு எடுக்க வேண்டியது அவசியம் தான்... ஆனா ஒரு அரசாங்கமே களைகளாக மாறி விட்டால்...? மக்களுக்கு நல்லது செய்யலேன்னா எப்படி...? தொடர்ந்து மக்களை துன்புறுத்துகின்ற செயல்களை செய்றது, கொலையே தொழிலா செய்ற கொலைகாரனை விட கொடியது... அவர்களுக்கெல்லாம் தண்டனை என்ன...?

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து (551)


ஏய்ச்சி பிழைக்கும் தொழிலே சரிதானா எண்ணி பாருங்க - அய்யா எண்ணி பாருங்க2 // தேட்டை போடும் புள்ளிகள் எல்லாம், கோட்டை விட்டு கம்பி எண்ணனும் - சிறையில் கம்பி எண்ணனும்... பூட்டை உடைக்கும் புலியே இதை நீங்க புரிஞ்சு கொள்ளுங்க... காலமெல்லாம் வழிப்பறிக் கொள்ளை, கன்னம் போட்டுப் பிழைப்பதும் தொல்லை... கனவில் கூட வேண்டாம் ஐயா, நல்லாக் கேளுங்க2© மதுரை வீரன் தஞ்சை ராமையா தாஸ் G.ராமநாதன் T.M.சௌந்தரராஜன், ஜிக்கி @ 1956 ⟫

ஒரு ஆட்சியாளனின் தொழில் என்னவென்றால், குற்றம் செய்து விட்டால் அது யாராக இருந்தாலும், அதற்கு சரியான தண்டனை வழங்குவது தான்... அதோடு, குற்றம் இல்லா நாட்டை உருவாக்கி விட்டால் ஆட்சியாளன் மீது குற்றமில்லை...

குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில் (549)



யாராக இருந்தாலும்...? ஏம்பா எரிச்சலை கிளப்புறே... நீதிங்கிறது எல்லோருக்கும் சமமாயிருக்கா...? சரி அதை விடு... இப்போ நடக்குற தொழில் வேறே... பல வகையிலே பல விதத்திலே 'வரி'ங்கிற பெயரிலே(யும்), மக்களிடம் பணம் / பொருள் வசூல் செய்யும் தொழில்...! இது எப்படி இருக்கு தெரியுமா, மக்கள் போற வழியிலே, திருடன் கத்தியைக் காட்டி "எல்லா பணத்தையும் எடு"-ன்னு மிரட்டுகிற மாதிரி...!

வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு (552)


அநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம்... // தனிமையாக ஒரு வாலிபன் இருந்தால், தரவேண்டும் பிரம்மச்சாரி வரி...! தாலி கட்டியே குடும்பம் நடத்தினால், அவனும் தரணும் சம்சார வரி...! இங்கு தடுக்கி விழுந்தா வரி, குனிந்து நிமிர்ந்தா வரி, இட்லி வரி, சட்னி வரி, பட்னி வரி© குலேபகாவலி தஞ்சை ராமையா தாஸ் விஸ்வநாதன்-ராமமூர்த்தி T.M.சௌந்தரராஜன் @ 1955 ⟫

பிற்சேர்க்கை : ← இந்த மணியைச் சுட்டியால் (Mouse) சொடுக்கினால் குறளை வாசிக்கலாம்... கைப்பேசியில் வாசிப்பவர்கள் விரலால் சொடுக்கி வாசிக்கலாம்...

பாடல்கள் தேர்வு மட்டும் தான் அடியேனது... மற்றவை எல்லாம் உங்களுக்குத் தெரிந்த 2 அதிகாரங்கள்... அதாவது 20 குறள்கள்... அவற்றை எவ்வாறு இணைத்துள்ளேன் என்பதை பிறகு சொல்கிறேன்... தெரிந்தவர்கள் கருத்துரையில் சொல்ல வேண்டுகிறேன்... உங்கள் மனதில் வேறு பாடலும் நினைவுக்கு வரலாம்... அதை மட்டும் கருத்துரையில் சொல்லாம, மேலே சொன்ன முக்கிய குறிப்புடன்.............




?

அதிகாரங்கள் தொடரும்... நன்றி...

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. தகுதியான பாடல்களுடன் வழக்கம்போல நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  2. அருமை. ஆட்சி எதுவாக இருந்த்தாலும் காட்சி ஒன்றாகத்தான் இருக்கிறது. எதிர் கட்சியாய் இருக்கும்போது எதை எதிர்த்தார்களோ ஆளுங்கட்சியாகும்போது ஆதரிக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது தான் உண்மையான விமர்சனம். நாட்டில் நடந்து கொண்டிருக்கும் நிதர்சனமும் கூட.

      நீக்கு
  3. அரசியல்ல இதெல்லால் சாதாரணப்பா.. என்று சொல்லிவிட்டு வாயை மூடிக்கொண்டு போய்விடவேண்டும். அவ்வளவுதான்

    பதிலளிநீக்கு
  4. நம் நாட்டில் மட்டுமல்ல , உலகின் பற்பல தேசங்களிலும் ஆட்சியாளர்கள் ஊழல்காரராயும் ஊர்ப் பணத்தைக் கொள்ளை அடிப்பவராயும் இருப்பதை அறிகிறோம் . வாக்காளர்கள் 90% அளவாவது படித்தவர்களாகவும் செல்வர்களாகவும் இருக்கிற நாடுகளில் ( அமெரிக்கா , ஐரோப்பா கண்டங்களில் ) நல்ல ஆட்சி நடக்கிறது .

    பதிலளிநீக்கு
  5. ஓட்டுக்கு எவ்ளோ தருவேன்னு கேட்டு வாங்கிக் கொள்ளும் ஜனங்களுக்காக தங்கப்பதுமை படத்திலிருந்து கொடுத்தவனே எடுத்துக்கொண்டாண்டி பாடலைப் பகிர்ந்திருக்கலாமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மக்கள் எவ்வழியோ மன்னன் அவ்வழி. முன்பெல்லாம் தேவகோட்டைகாரர் போல ரொம்பவே டென்சன் உருவாகும். இப்போது இது தான் எதார்த்தம் என்று மனம் இயல்பாக எடுத்துக் கொள்ளத் துவங்கி விட்டது தனபாலன். பலரும் நீங்க அப்டேட் ஆகாமல் இருக்குறீங்க என்று சொல்கிறார்கள். அதாவது இது போன்ற அக்கிரமம் என்பது இயல்பானது என்று அவர்கள் எனக்கு அறிவுரை சொல்லத் துவங்கிவிட்டார்கள். கிருஷ்ணமூர்த்தி சொன்னதும் சரி தான். 2000 வாங்க கார் எடுத்துக் கொண்டு வரிசையில் நிற்கிறார்கள். மானம் கெட்ட அரசியல்வாதிகள் அல்ல. மக்களே.

      நீக்கு
    2. தங்களுக்கு நேரம் இருப்பின் இன்றைய எங்கள் blog வலைத்தளத்தை வாசிக்கவும் - கருத்துரைக்களை...

      நீக்கு
  6. எல்லாப் பணத்தையும் எடு.. என்பதைப் பார்த்து 1ஸ்ட்டா ஓடி வந்தால் பணத்தை மூக்கிலகூடக் காட்டல்ல கர்ர்ர்ர்:)). ஹா ஹா ஹா.

    வரி விசயம், பாடல்போலத்தானே இருக்கு இங்கெல்லாம்.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    நல்ல பாடல்களை உதாரணம் காட்டி தங்கள் நடையில் மிகச்சிறந்த பதிவு. அருமையாக சிந்திக்க வைக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. எல்லா பணத்தையும் எடு..

    இப்படி ஒரு தலைப்பு வைத்தால் எப்படிதான் வருவதாம்?!

    பதிலளிநீக்கு
  9. நடப்பு அரசியல், குடிமக்கள் நிலையின் நிதர்சனத்தையும் எடுத்து சொன்னது உங்க பதிவு.

    பதிலளிநீக்கு
  10. எனக்கு இடுகையைப் படித்தவுடன்,

    'வானோக்கி வாழும் உலகெலாம் மன்னன்
    கோல்நோக்கி வாழும் குடி'

    என்பதைத்தான் நினைவுபடுத்தியது. அரசன் எவ்வழி குடிமக்கள் அவ்வழி.

    இரண்டாவது சிந்தனை,

    கொலையில் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
    களைகட் டதனொடு நேர்.

    குறளை நினைவுபடுத்தியது. பல சமயங்களில் எனக்கு,

    கட்சியில் குண்டர்களை வேரறுத்தல் பைங்கூழ்
    களைகட் டதனொடு நேர்

    என்று எழுதியிருக்கலாமோ என்று தோன்றுகிறது. 'குண்டர்கள்' என்ற இடத்தில் ஊழற்றலைவர் (ஊழல் தலைவர்) என்றும் போட்டிருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'குண்டரை' என்று வரணும். (குண்டர்களை க்குப் பதில்). அப்போதான் தளை தட்டாது.

      நீக்கு
    2. தங்களின் கருத்துரையில் ஒரு அதிகாரத்தை கண்டுபிடித்து விட்டீர்கள் ஐயா... அருமை... நன்றி...

      நீக்கு
  11. வழக்கம் போல அருமையான கருத்துகள் ப்ளஸ் பாடல்கள்

    துளசிதரன், கீதா

    கீதா: டிடி உங்களின் முதல் நீல வரிகளைப் படித்ததுமே....அந்நியன் நினைவுக்கு வந்துட்டாரே!!!!!!! ஹா ஹா ஹா ஹா...

    பதிலளிநீக்கு
  12. மிகவும் நன்று பாராட்டுகள் தேர்தல் நேரத்தில் பதிவு செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்

    பதிலளிநீக்கு
  13. இந்தியாவில் மட்டும் தானா இந்த நிலை?
    இலங்கையிலும் இதே தொல்லை!
    அருமையான தங்கள் படைப்புக்குப் பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  14. இங்கும் எல்லாத்துக்கும் வரிதான் .பாடல்கள் எல்லாம் அருமை .
    ஞாபகம் வரும் அரசியல் நிகழ்வு ...எதை சொல்ல எதை விட !!
    மாட்டுத்தீவன ஊழல் செஞ்சிட்டு கண்ணன் கூடத்தான் வெண்ணை திருடினானு சொல்லிய லாலு
    இப்படி எல்லாமே கண்முன்னாடி வருதே .
    மனதில் தோன்றும் நினைவுக்கு வரும் பாடல் ..எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே

    பதிலளிநீக்கு
  15. எனக்கு ரெண்டு சந்தேகம் டிடி. எப்படி உங்களுக்கு தலையில முடி கொட்டாம இருக்குதுன்னு. அப்புறம் பாடல்களை தேர்வு செஞ்சுட்டு, உரையை எழுதுவீங்களா இல்ல உரையை எழுதிட்டு பாடல்களை தேர்வு செய்வீங்களா? எப்படியிருந்தாலும் எப்படி, இப்படி பாடல்களை எல்லாம் மிக சரியாக தேர்வு செய்கிறீர்கள்?

    அருமை.

    பதிலளிநீக்கு
  16. அன்றே கூறிவிட்டார் வள்ளுவர். இன்று மிக எளிமையாக நீங்கள் பகிர்ந்துகொள்கின்றீர்கள். நாட்டு நடப்பினைக் கூறுகின்ற விதம் அருமை.

    பதிலளிநீக்கு
  17. படமும் நாட்டு நடப்பை நாசுக்காக சொல்லி சென்றவிதம் பாராட்டுகுரியது.....

    பதிலளிநீக்கு
  18. நாட்டு நடப்பு எல்லோருக்கும்தெரிந்ததுதானே ஆனால் நம்மில் எத்தனைபேர்வாய்ப்பு இருந்தால் சுருட்டாமல் இருப்போம்

    பதிலளிநீக்கு
  19. சாலையில் நடக்க இன்னும் வரி போடவில்லை என நினைக்கிறேன்/

    பதிலளிநீக்கு
  20. இப்போதிருக்கும் அரசியல்வாதிகள், அவர்தம் வாரிசுகளான நாளைய ராஜாக்கள் (வந்தா ராசாவாத்தேன் வருவேன்..!) எப்படி வளர்ந்துவருகின்றனர்? வாழ்வில் இதுகளின் சித்தாந்தம்தான் என்ன...? ம்.. சிந்தித்ததே தப்பு:

    ஆளும் கொழுக்கணும்-எப்படியோ
    அக்கவுண்ட்டும் கொழுக்கணும்
    அதுதாண்டா அசல் கொழுப்பு
    ஊரையடிச்சு உலையிலப் போட்டா
    உனைத் தேடியே ஓடிவரும் மதிப்பு..

    பதிலளிநீக்கு

  21. வழக்கம்போல் குறளுக்கு பொருத்தமான பாடலை இணைத்துள்ளீர்கள். பாராட்டுகள்!

    செங்கோன்மை மற்றும் கொடுங்கோன்மை அதிகாரங்களிலிருந்து குறள்களை மேற்கோள்காட்ட இருக்கிறீர்கள் என எண்ணுகிறேன். தங்களின் பதிவில் குறிப்பிட்டுள்ளவைக்கு பொருத்தமாக எனக்குத் தெரிந்த இரண்டு குறள்களை கீழே தந்துள்ளேன்.

    செங்கோன்மை அதிகாரம்
    குறள் 550:
    கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
    களைகட் டதனொடு நேர்.

    கொடுங்கோன்மை அதிகாரம்
    குறள் 552:
    வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
    கோலொடு நின்றான் இரவு.

    எனது பதில் சரியானதுதானா என அறிய காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  22. அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
    நின்றது மன்னவன் கோல்.

    குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
    அடிதழீஇ நிற்கும் உலகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதன் விளக்கங்கள் இந்த அதிகாரங்களின் நான்காவது பதிவில் வரும் அம்மா...

      நீக்கு
  23. இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
    வகுத்தலும் வல்லது அரசு.
    பொருள் வரும் வழிகளை உண்டாக்குவதிலும் , வரும் பொருளைச் சேமித்தலிலும் , பாதுகாத்தலிலும் , தக்க வழியில் செலவிடுதலிலும் வல்லதே அரசு.

    இப்படி இருக்க வேண்டிய அரசே முறையற்ற வகையில் பொருள் சேர்ப்பது, என்று அரசாங்கமே களைகளாக மாறி விட்டால் என்ன செய்வது?
    உணரவேண்டியவர்கள் அரசியல்வாதிகளும், அரசும்.

    பதிலளிநீக்கு
  24. வேலோடு நின்றான் இடுஎன்றது போலும்
    கோலோடு நின்றான் இரவு.
    அரசன் முறைகடந்து பொருளைக் கேட்பது, கையில் வேலோடு வழிபறி செய்யும் கள்வன் கொடு என்று கேட்பது போன்றது.

    அப்படித்தான் இருக்கிறது இன்றைய நிலை.

    பதிலளிநீக்கு
  25. கட்சிகளின் நிலைப்பாட்டை காட்சிப்படுத்திய விதம் அருமை ஜி.

    பதிலளிநீக்கு
  26. ஆராய்வுப் பதிவு என்ற போதிலும் குறள்கள்மற்றும் சில பாடல்களை நினைவு கூர முடிந்த பதிவு

    பதிலளிநீக்கு
  27. உங்கள் ஆதங்கம் புரிகிறது.
    வரி வசூலிக்கட்டும், ஆனால், அவை முறையாக, மக்கள் நலனுக்காக பயன்படுத்தப்பட்டால் எந்த தவறும் இல்லை.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.