🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



கோபமுள்ள இடத்தை நிரப்புக

மனிதா உன் மனதைக் கீறி விதைப் போடு மரமாகும்... அவமானம் படுதோல்வி எல்லாமே உரமாகும்... தோல்வியின்றி வரலாறா? துக்கமில்லை என் தோழா... ஒரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால்... அந்த வானம் வசமாகும்... (படம்: ஆட்டோகிராஃப்)


இந்த அவமானம், படுதோல்வி வந்தா தான், தெளிவான முடிவுக்கு நாம் வருவது எல்லாம் சரி தான்... ஆனா, அதுக்கு முன்னாடி இந்த கோபம் பொத்துக்கிட்டு வருதே... ஏன்...? ஆமா கோபம் - சரியா ? தவறா ?

வில்லங்க மனமே... ஏற்கனவே கோபத்தைப் பத்தி செய்கூலி, சேதாரம் இல்லாம ஒரு பதிவிலே பேசிட்டோமே...! (படம் : ஆண்டவன் கட்டளை) ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம்... அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்...

ஏஹே... அது பழைய நல்ல பாட்டு "மாறு மனமே மாறு" பாட்டையும் மாத்துறேன்...! மாறு - மாற்றம் ஒன்றுதான் மாறாதது... மாறுவதெல்லாம் உயிரோடு... மாறாததெல்லாம் மண்ணோடு... பொறுமை கொள்... தண்ணீரைக் கூடச் சல்லடையில் அள்ளலாம் - அது பனிக்கட்டி ஆகும் வரை பொறுத்திருந்தால்...! (படம் : கோச்சடையான்) போதுமாப்பா...? இது பொறுமை பற்றிய பதிவுன்னு வைச்சிக்கோ... பொறுமையாகவே கேட்கிறேன்...மனிசங்களுக்குக் கோபம் வருவது சரியா...? தவறா...? முதலில் உனக்குக் கோபம் வருமா...? அதை முதல்லே சொல்லு...!

எனக்கும் கோபம் வரும்... கோபமே வராமலிருந்தால் அவன் மனிசனாகவே இருக்க முடியாது... நினைச்சது நடக்கலேன்னா, இல்லே மத்தவங்க நான் நினைச்சது போல் நடக்கலேன்னா... அதே மாதிரி நாம சொல்றதை மத்தவங்க புரிஞ்சிக்கலையேன்னு புலம்பினா... (+vice versa) ஒன்றா இரண்டா... எடுத்துச் சொல்ல...? சொல்லிக் கொண்டே போலாம்... அப்ப எனக்கு வரும் பாரு கோபம்...! "யார்கிட்டே"ன்னு கேட்கலையே...? என் மீது தான்...! ஹா... ஹா... இதெல்லாம் கூட வீட்டுக்கு வெளியே தான்... வீட்டுக்குள்ளே "கப்சிப்"... அடுத்த வேளை சோறு கிடைக்கனுமில்லே...! அதனால் வீட்டில் எங்கும் எதிலும் அமைதி...! அடடா...! இங்கே 1330-வது குறளை சொல்ல மறந்துட்டேனே...!

ஜோக்கு...? நல்லவேளை மூஞ்சிப்புத்தக ஸ்டேசஸ்சு, வாட்ஸ்அப்பு-ன்னு போய் மூழ்கியிருந்தா, முகம் வீங்குகிற அளவுக்குக் கோபம் வந்திருக்கும்...! ஆனாலும் உன் மனசாட்சி என்பதால் ஒரு உண்மையை சொல்றேன்... அது என்னான்னா "திருக்குறளில் எந்த அதிகாரம்...?-ன்னு கண்டுபிடிங்க பார்க்கலாம்...! ன்னு 10 காதல் பாடல்களோடு பதிவு போட்டோமில்லே... முக்கியமான விசயத்தை அங்கே சொல்ல மறந்துட்டேன்... அது என்னான்னா "பாடல் வரிகளை வாசிக்கும் போதே தெரியவில்லையா நண்பர்களே... அறத்துப்பால், பொருட்பால் கிடையாது, ஆக மீதம் உள்ள காமத்துப்பால் - 25 அதிகாரத்தில் கண்டுபிடியுங்கள்" என்று...! வாசிப்பவர்கள் அனைவரும் ஒரு நிமிடம் குறளை கையில் எடுத்து இருந்தால், சரியாகச் சொல்லி இருப்பார்கள்... ம்... இப்போது என்ன செய்வது...?

அடேய் இது கோபம் மாதிரி தெரியலே... வருத்தம்...! நான் கோபப்பட்றேன் பாரு : கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் - இது பழைய பழமொழி, குறள் இல்லா வீட்டில் குடியிருக்க வேண்டாம் - இது என்னோட புதுமொழி...! ஹா... ஹா... 5 நண்பர்கள் சரியாகச் சொல்லி உள்ளார்களே... சந்தோசப்படு...! அவரவர் சூழ்நிலையில் நின்று யோசித்தால் கோபம் "சுழியம்"

ம்... கோபத்திலே வர்ற வார்த்தைகளும் எழுத்துகளும் சில நாட்கள் கழித்து, நம்மைப் பார்த்து கெக்கேபிக்கேன்னு சிரிக்கும்ன்னு எனக்கு புரியுது... ஐம்பதில் வளையாதது எல்லாம் ஐந்தில் வளைந்தே இருக்காது... ஐம்பதிற்கு மேல் வளைய வாய்ப்பும் தராது மனசு...! மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் துப்பலாமா...? வீண் குறைகள் சொல்வதும் கோபமும் சில சமயம் அப்படித்தான்... சரி விசயத்திற்கு வா... சின்ன சின்ன விசயங்களுக்கெல்லாம் கோபம் வருவது சரியா...?

தவறே தான்... இதிலென்ன சந்தேகம்...? மறைமுகக் கோபங்கள் மறைந்தே போகணும்... புரியாத கோபங்கள் புதைந்தே போகணும்... மனித குணங்கள் நவரசங்களும் பொருந்தியது... அவற்றில் கோபம் என்பதும் ஒரு அம்சம்... நமக்கு வருகின்ற கோபம் தன்மானம் கருதுவதாக, பொது நலம் பேணுவதாக இருந்தால், அது பல வேளைகளில் சரியானதாகவே இருக்கும்...

க்கும்... நல்லாச் சொன்னே போ... என்ன எதுன்னு அறிந்து தெரிந்து புரியாம, உள்ளே புகுந்து, குழு குழுவாகப் பிரிந்து, இதிலே எங்கே பொது ? எங்கே நலம் ?

அது, தானே நீர்த்துப் போய் ஒரு நாள் ஒன்று சேர்ந்து விடும்... சின்ன சின்ன விசயங்களுக்கெல்லாம் கோபத்தை வெளிப்படுத்திக் கொண்டு இருந்தால், நம்முடைய ஆற்றல் தான் வீணாகிக் கொண்டு இருக்கும்... "சிறுமை கண்டு பொங்குவாய்... வா வா வா..." என்றார் பாரதி... இதைத் தார்மீக கோபம் என்றும் கூறுவார்கள்... கோபம் அறம் சார்ந்ததாக இருக்க வேண்டும்... அநீதி என்று உறுதியானதுடன் "ரௌத்திரம் பழகு..." அதைப் பக்குவமாக வெளிப்படுத்த வேண்டிய இடத்தில், வெளிப்படுத்த வேண்டிய நேரத்தில் வெளிப்படுத்த வேண்டும்... அவசரப்பட்டால் நீ சொன்ன மாதிரி வீண் குழுக்கள் உருவாக்கி, பெயருக்கென்று ஒற்றுமை இருக்கும்...! ஒரு நிகழ்வு:-

இங்கே ஒருவருக்கு அடங்காத கோபம் உண்டு... அந்தக் கோபம் அணையாத நெருப்பாய் அவர் நெஞ்சத்தில் தணலிட்டு எரிந்து கொண்டு தான் இருந்தது... எப்போது எங்கு எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்பது அவருக்குத் தெரிந்திருக்கிறது... சின்ன சின்னச் சங்கடங்களுக்கெல்லாம் அவர் பொறுமையே காத்தார்... ஒரு நாள் கப்பலில் சென்று கொண்டிருந்தார்... இதைப் பார்த்த இன்னொருத்தர் வருவோர் போவோரிடமெல்லாம் அவரைப் பற்றி அவதூறாகத் திட்டிக் கொண்டே இருந்தார்... திட்டியது போதாதென்று, அவரைப் பற்றித் திட்டி திட்டி வெள்ளைத்தாள்களில் எழுதி, நாள்தோறும் நேரில் சென்று அவரிடமே கொடுக்கவும் செய்தான்... அவரும் எழுதித் தரும் தாள்களை அமைதியோடு வாங்கிப் பார்த்து வைத்துக் கொள்வார்... நாள்தோறும் எழுதி தரும் தாள்களின் எண்ணிக்கை பெருகியது... கத்தை கத்தையாகக் கொடுக்கத் துவங்கினான்...!


இங்கே தான் நம்ம வள்ளுவர் வர்றார்... "வள்ளுவரே... கோபமுள்ள இடத்தை நிரப்புக" அதற்கு அவர் "பொறை உடைமை அதிகாரத்திலே என்ன சொல்லிருக்கின்னா, வரம்பு கடந்து மத்தவங்க செய்ற தீங்கை எப்போதும் பொறுத்துக் கொள்வதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்... அதை விட அந்தத் தீங்கைச் சுத்தமா மறந்துட்டோம்ன்னா, அது தான் சிறந்த பண்பு... பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை மறத்தல் அதனினும் நன்று (152) அப்புறம் கோபத்தைப் பற்றிய எழுதிய "வெகுளாமை" அதிகாரத்தில் குறள் எண் 303-லிலும் இதைத்தான் சொல்லியிருக்கிறேன்..." அப்படின்னு சொல்லிட்டார்... சரி... இப்போ இங்கே என்ன நடந்ததுன்னு பார்ப்போம்...!


அவன் எவ்வளவு கொடுத்தாலும் புன்னகையோடு வாங்கிக் கொள்வார்... "உங்களுக்குக் கோபமே வராதா...?" பொறுக்க முடியாமல் ஒரு நாள் கேட்டான் அவன்... அதற்கு அவர் கலகலவெனச் சிரித்துக் கொண்டே சொன்னார், "கோபமா....? உங்கள் மீதா...? நீங்கள் நாள்தோறும் நிறையத் தாள்களைத் தருகிறீர்கள்... அதுவும் ஒரு பக்கமாகவே எழுதித் தருகிறீர்கள்... தாள்கள் கிடைக்காத இந்தக் கப்பலில், நீங்கள் கொடுக்கும் தாளின் மறுபக்கம் எனக்கு மிகவும் பயன்படுகிறது... மேலும் தாள்களை ஒரு குண்டூசியால் இணைத்து வேறு தருகிறீர்கள்... நாள்தோறும் எனக்கு ஒரு குண்டூசியும் கிடைக்கிறது... எனவே நாள்தோறும் தாள்களும் குண்டூசிகளும் தரும் உங்கள் மீது எனக்கு எப்படிக் கோபம் வரும்...?" என்றார்...

சரி... குறள் விளக்கம் புரியுது... அந்த இருவர் யார்...?

அடிமை இந்தியாவை அலங்கோலப்படுத்திக் கொண்டிருந்த வெள்ளையர் அரசாங்கம் மீது, அடங்காத கோபம் கொண்டவர்... ஆனால், அந்தக் கோபத்தை அகிம்சையின் மூலமாகச் சாத்வீக முறையில் அவ்வப்போது வெளிப்படுத்திக் கொண்டே இருந்தவர்... முதல் வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்காகக் கப்பலில் லண்டன் சென்று கொண்டிருந்த காந்திஜி தான் அவர்... எங்குச் சென்றாலும் தன் அன்றாடக் கடமைகளில் ஒன்றான ராட்டையில் நூல் நூற்பதை கைவிடுவதே இல்லை... நாள்தோறும் கப்பலின் மேல் தளத்தில் ராட்டையில் நூல் நூற்றிக் கொண்டிருக்கும் போது, ஒரு வெள்ளைக்காரன் செய்த சங்கடங்கள் தான் இவை...!

கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும் என்பதை விட, நல்ல குணங்கள் உள்ள இடத்தில் தான் கோபமும், போராடி வெற்றி பெறும் வரையில் அமைதியும் எளிமையும் இருக்கும்ன்னு புரியுது...!

அந்த எளிமையோடு எதிலும் பொறுமை இருந்தால், எதுவும் கலாம் ! சாதிக்கலாம் !! பிரமாண்டமாகச் சாதிக்கலாம் !!!



© கடவுளைக் கண்டேன் கண்ணதாசன் K.V.மகாதேவன் 🎤 P.சுசீலா @ 1963 ⟫

தீபத்தை வைத்துக் கொண்டு திருக்குறளும் படிக்கலாம்... தீயைக் கொண்டு மூடரெல்லாம் ஊரைக் கூட எரிக்கலாம்... கோபம் மட்டும் அடங்கி விட்டால் கோபுரத்தில் ஏறலாம்... குணமிருந்து மனமிருந்தால் கடவுளாக மாறலாம்... கண்ணிரண்டு காலிரண்டு கையிரண்டு படைத்தான்... கட்டி வைத்துக் காப்பதற்கு மனது ஒன்றைச் சமைத்தான்... நினைத்துப் பார்க்க மறந்து விட்டால் முரட்டுத்தனம் வளரும்... முரட்டுத்தனம் நிறைந்தவனை உலகமெல்லாம் பழிக்கும்... காற்றின் வேகம்தனை அடக்கி சுதி கொடுத்தால் பண் பாடும்... மலைக் கல்லைக் கூட மலரைப் போலச் செதுக்கி வைத்தால் வண்டாடும்... ஆற்று வெள்ளம் மடையில் வந்தால் பயிர்கள் கோடி உண்டாகும்... ஆத்திரத்தில் அறிவு கண்டால் உலகமெங்கும் கொண்டாடும்...

நன்றி நண்பர்களே... ஹலோ.. யாருங்க அது...? முந்தைய பதிவுக்குச் சென்று சரியான குறள் அதிகாரம் என்னான்னு சொல்ல போறீங்களா...? அதுக்கு முன்னாடி இந்தப் பதிவு பற்றி தங்களின் கோபம் என்ன...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. அருமை ஐயா
    குறள் இல்லா வீட்டிலே குடியிருக்க வேண்டாம்
    நன்று கூறினீர்
    தம +1

    பதிலளிநீக்கு
  2. இப்போ வந்து நான் பதில் அதுவும் குழம்பிப்போய்ச் சொல்லியிருப்பது உங்களுக்கு கோபம் வரலாம் ஹஹஹா . ஆக மொத்தம் இன்பத்துப்பால் அதிகாரங்கள் இரண்டை படிக்க வைத்துவிட்டீர்கள். எவ்ளோ அழகா வர்ணிக்கிறார் வள்ளுவர் என்று குட்ட வேண்டிய இடத்தில குட்டியதால் ஒருவர் உங்களைப் பார்க்க ஆவலுடன் (கோபத்துடன்?) காத்திருக்கிறார்.

    பதிலளிநீக்கு

  3. வழக்கம்போல் அருமையான கருத்துக்கள்...வில்லியம் ப்ளேக்-கின் POISON TREE என்ற அற்புதக் கவிதை சொல்லும் தத்துவம்...சொல்லுவது எளிதுதான்...ஆனா..

    பதிலளிநீக்கு
  4. //கோபமுள்ள இடத்தை நிரப்புக //.தலைப்புக்கேற்ற அசத்தல் பதிவு
    கோப வசப்பட்டு
    மனிதன் மிருகத் தனமாக
    நடந்து கொண்ட பின்னர்
    சொல்லும் வார்த்தை
    நானும் மனிதன்தானே

    பதிலளிநீக்கு
  5. அருமை ஜி எனக்கு இதைப் படித்ததும் கோபத்தை கட்டுப்படுத்த தோன்றுகிறது.

    செல்லில் எழுதுவதால் அதிகம் எழுத இயலவில்லை

    பதிலளிநீக்கு
  6. கோபத்திலும் நியாயம். எங்கள் கால வள்ளுவரான உங்களுக்கு பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  7. கோபம் மட்டும் அடங்கிவிட்டால் கோபுரத்தில் ஏறலாம். மூளைக்குத் தெரியுது மனசுக்குத் தெரியலையே சகோ :)

    பதிலளிநீக்கு
  8. கோப விளக்கம் சிறப்பு சகோதரா.
    தமிழ் மணம் 5
    https://kovaikkavi.wordpress.com/

    பதிலளிநீக்கு
  9. கோபம் இனி வேண்டாம் அருமையாக இருந்தது நன்றி.

    பதிலளிநீக்கு
  10. நல்ல பதிவு ஐயா! எங்கே, கோபம் தவறு எனச் சொல்லி விடுவீர்களோ என்று நினைத்தேன். இறுதியில் நல்ல தீர்ப்பு! மகிழ்ச்சி!

    பதிலளிநீக்கு
  11. கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்பார்கள்

    பதிலளிநீக்கு
  12. நான் கோபப்பட்டா பெரிய செலவுகள் வரும் தலைவரே.... அதனால்தான் நான் கோபப்படாமல்... அடுத்தவர்கள் காட்டும் கோபத்தால் கொஞ்சமாக செலவு செய்து என்ன தற்காத்து வருகிறேன் தலைவரே...

    பதிலளிநீக்கு
  13. கோவும் பம்(sorry for the slang!) காக்க கோபம் காக்கவேண்டும்!

    பதிலளிநீக்கு
  14. ஐயா! முந்தைய கருத்தில் ஒன்றைச் சொல்ல மறந்து விட்டேன்.

    கட்டுரையின் தொடக்கத்தில் நீங்கள் மேற்கோளிட்டுள்ள பாடலின் இரண்டாவது வரி, "அவமானம் படுதோல்வி எல்லாமே உறவாகும்" என்பதில்லை. "அவமானம் படுதோல்வி எல்லாமே உரமாகும்" என்பதே!

    பதிலளிநீக்கு
  15. கோபமுள்ள இடத்தை நிரப்ப ,சிலர் காலி கிளாஸை நிரப்புவது வருத்தம் தருகிறது ஜி :)

    பதிலளிநீக்கு
  16. கோபத்தையும் வள்ளுவரையும் இணைத்து இவ்ளோ எழுதிவிட்டீங்கள். சின்னச் சின்னக் கோபங்களைக் காட்டுவது தப்புவது சொல்லிட்டீங்கள்.. ஆனா பிரம்மக்குமாரிகள்...எனும் நிகழ்வில் சொல்கிறார்கள், சின்னச் சின்னக் கோபங்களை அப்பப்பவே வெளிக்காட்டிவிட்டால் நல்லதாம் இல்லையெனில் அது உள்ளே இருந்து சேர்ந்து என்றோ ஒருநாள் பூதமாக வெடிக்க வாய்ப்பிருக்கிறது என.. அதுவும் சரியாத்தான் படுது... நீங்கள் சொல்வதும் சரியாத்தான் படுது.....

    பதிலளிநீக்கு
  17. நாள்தோறும் தவறாமல் திறப்பாடல்களைத் தொகுத்து வழங்கும் உங்களுக்கு "திரை ஞாபகத் திலகம்" என்று பட்டம் தரலாமா என்று யோசனை. கோபித்துக்கொள்ள மாட்டீர்களே?
    - இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.

    பதிலளிநீக்கு
  18. கோபம் பற்றிச் சிந்திக்க வைத்திருக்கிறியள்.
    கோபம் வந்தால் உடலில் 13 நரம்புகள் தான் இயங்குமாம்.
    நகைச்சுவையோடு இருந்தால் 65 நரம்புகள் தான் இயங்குமாம்.
    அப்படி என்றால்
    கோபம் உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கலாம்.
    கோபம் தணிப்போம்
    நீண்ட ஆயுளுடன் வாழ்வோம்

    பதிலளிநீக்கு
  19. நான் கோபம் வந்து அது அடங்கும்வரை மூச்சுப் பயிற்சி செய்கிறேன்.

    நல்ல பயன்தரும் சிந்தனை.

    பதிலளிநீக்கு
  20. கோபம் கொள்வது மனித இயல்பு. ஆனால் கண்டதிற்கெல்லாம் கோபம் கொள்ளக்கூடாது. கோபத்தை அடக்க கற்றுக்கொள்ளவேண்டும். ஒரு நல்ல பதிவை தந்தமைக்கு பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  21. அருமை. திண்டுக்கல் தனபாலனின் எழுத்துக்களுக்கென்று ஒரு தனி நடை உண்டு. உங்கள் எழுத்துக்களை வாசிப்பவரை சுவாரசியம் குறையாமல் இறுதி வரை அழைத்துச் செல்லும் உங்களை மனதாரப் பாராட்டுகிறேன். அத்தனை குறள்களும் மனப்பாடம் போலும். சிறப்பான பதிவு. இப்பதிவு மனதில் இருந்தால் யாருக்குமே கோபமே வராது.

    பதிலளிநீக்கு
  22. அருமையான பதிவு க்கு மிக நன்றி பொங்கல் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  23. இந்தப்பதிவுக்கு படிக்கும்வரை கோபத்தைப்பற்றி இவ்வளவு விஷயங்கள் தெரிந்திருக்கவில்லை. இப்ப எனக்கு கோவம் கோவமா வருது...காரணம்..------ டி.டி. ஸார்பதிவுக்கு இவ்வளவு பேரு கமெண்டு போட்டிருக்காங்க.. அவங்க ஏன் ரிப்ளை கமெண்டும் போடமாட்டேங்குறாங்க..?????

    பதிலளிநீக்கு
  24. அருமையான பதிவு சகோ ..கோபம் வேணவே வேணாம் ..நம்ம கோபம் மற்றவர்களை கஷ்டப்படுத்துனா அது மிக பெரிய தவறில்லையா ..கோபப்பட்டாலும் அதை கண்ட்ரோலில் வைத்தால் நல்லதே ..
    நம்ம பழமொழி பாட்டி சொஅன்ன கதை மாதிரி கோபம் உள்ள இடத்தில்தான் குணம் இருக்கும்னு எல்லாம் சொல்லி கோபத்தை தண்ணி ஊத்தி வளர்த்து விட்டுட்டாங்க உண்டு ..கோபத்தை அடக்கியாள்வதே நல்லது

    பதிலளிநீக்கு
  25. வணக்கம்
    அண்ணா

    சிறப்பாக விளக்கம் தந்துள்ளீர்கள் படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  26. ”சினம் தவிர்த்தல்” என்று வேதாத்திரி மகரிஷி பாடமாய் சொல்லிக் கொடுத்ததை கற்றுக் கொண்ட எனக்கு கோபம் வரத்தான் செய்கிறது.கோபத்தை வெல்ல வலைசித்தர் சொன்ன யோசனைகள் அருமை.
    பாடல் பகிர்வு, குறள் எல்லாம் மீண்டும், மீண்டும் படிக்க ஆவலை தூண்டுகிறது. தனபாலன் உங்களுக்கு நன்றி .
    நல்ல பதிவுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  27. எத்தனை திரைப்படப் பாடல்கள்! இத்தனையும் நினைவிலும் வைத்திருக்கிறதைப் பார்த்தால் ஆச்சரியமா இருக்கு!

    படத்தில் இருக்கும் குட்டிப்பயலின் கோபம் நல்லா ரசிக்கும்படியா இருக்கு!

    பதிலளிநீக்கு
  28. இன்று மீண்டும் படித்தேன் ஜி
    குறிப்பாக காந்திஜியின் கப்பல் பயண விடயம்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.