🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



உண்மையா...? பொய்யா...?

நண்பர்கள் பகைவர்கள் யாரென்றும்... நல்லவர் கெட்டவர் யாரென்றும்...2 பழகும் போதும் தெரிவதில்லை - பாழாய்ப் போன இந்தப் பூமியிலே... முகத்துக்கு நேரே சிரிப்பவர் கண்கள் முதுகுக்குப் பின்னால் சீரும்... முகஸ்துதி பேசும், வளையும், குழையும்... காரியமானதும் மாறும்... ம்... காரியமானதும் மாறும்... (படம் : நாடோடி) ஏம்பா இப்படி இருக்காங்க...?


நாம பழகினது அப்படி இருக்கலாம்...! நல்லது கெட்டதுன்னு பலதையும் தெரிய வைச்சதுக்கு நாமே தான் நன்றியோடு இருக்கணும்...! தண்ணீர் தணல் போல் எரியும் - செந்தணலும் நீர் போல் குளிரும்2 நண்பனும் பகை போல் தெரியும் - அது நாட்பட நாட்படப் புரியும்... நாட்பட நாட்படப் புரியும்... உள்ளம் என்பது ஆமை - அதில் உண்மை என்பது ஊமை... சொல்லில் வருவது பாதி - நெஞ்சில் தூங்கிக் கிடப்பது மீதி... உள்ளம் என்பது ஆமை - அதில் உண்மை என்பது ஊமை... (படம்: பார்த்தால் பசிதீரும்) சொல்ல வந்த உண்மையான விசயம் வேறே போலிருக்கே...! என்ன அது...?

உண்மையை முடிவில் கேட்கிறேன்... நாட்பட நாட்படத் தான் எல்லாம் புரிகிறது என்பது சரி தான்... இப்போ கேள்வி : கேள்விப்பட்ட தகவல்களால் நாம் நினைத்துக் கொண்டிருக்கிற... கவனி... நினைத்துக் கொண்டிருக்கிற 1) நல்லவர்கள் கூட கெட்டவர்களாக இருக்கிறார்கள்... அதே போல் 2) கெட்டவர்கள் கூட நல்லவர்களாக மாறி விடுகிறார்கள்... அப்படியானால் ஒருவரை நல்லவர் என்றும், கெட்டவர் என்றும் எப்படித் தீர்மானிப்பது...?

அடேய்... நம் மனதைப் பொறுத்துத் தான் அனைத்தும் அமையும்...! ஒருவருக்கு நல்லவராகத் தெரியும் ஒருவர், இன்னொருவருக்குக் கெட்டவராகத் தெரிவார்... நல்லவர் கெட்டவர் என்பதை அளந்து அறிவிக்க நாட்டில் எந்த அளவு மானியும் கிடையாது... பார்ப்பவர்கள் தங்களை அளவுகோலாக வைத்துக் கொண்டே, அடுத்தவரை அளந்து பார்த்து முடிவு எடுத்து விடுகிறார்கள்... இந்த நாட்டில் மகாத்மா காந்திக்கும் விமர்சனங்கள் உண்டு... இராவணனுக்கும் புகழ் பக்கங்கள் உண்டு...! கதை கட்ட ஒருவன் பிறந்துவிட்டால் - கண்ணகி வாழ்விலும் களங்கமுண்டு... காப்பாற்றச் சிலபேர் இருந்து விட்டால் - கள்வர்கள் வாழ்விலும் நியாயமுண்டு... கோட்டுக்குத் தேவை சிலசாட்சி... குணத்துக்குத் தேவை மனசாட்சி - உன் குணத்துக்குத் தேவை மனசாட்சி... ஹலோ மனசாட்சி... உலகம் ஆயிரம் சொல்லட்டுமே... உனக்கு நீதான் நீதிபதி...! மனிதன் எதையோ பேசட்டுமே... மனசை பாத்துக்கோ நல்லபடி - உன் மனசை பாத்துக்கோ நல்லபடி... (படம்: அருணோதயம்) இப்போ இதைப் படி...!
ஒரு கிராமத்தில் ஒரு மரத்தடியில் காலை நேரத்தில் ஒருவர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்... அந்த வழியாகப் போய்க் கொண்டிருந்த விறகு வெட்டி அவரைப் பார்த்து, "கடுமையான உழைப்பாளி போலத் தெரிகிறது... அதனால் தான் இவ்வளவு அயர்ந்து தூங்குகிறார்...!" என்று சொல்லி விட்டுப் போனார்... பிறகு அந்த வழியாக ஒரு திருடன் வந்தான்... "இவன் பெரும் திருடனாக இருப்பான் போலிருக்கிறது... அதனால் தான் இரவு முழுவதும் வீடுகளில் திருடி விட்டு, இப்போது பகலில் இங்கு வந்து தூங்குகிறான்..." அடுத்து வந்த குடிகாரன், "ஆத்தாடி, இவன் நம்மை விடப் பெரும் குடிகாரனாக இருப்பான் போலிருக்கே...! அதனால் தான் இவ்வளவு காலையிலே மூச்சு முட்டக் குடித்து விட்டு, இப்படி முழி பிதுங்கத் தூங்குகிறான்...!" என்று சொல்லி விட்டுத் தள்ளாடிச் சென்றான்... பிறகு அங்கே ஒரு துறவி வந்தார்... "ஆகா...! இங்கே ஒரு முற்றும் துறந்த ஒரு முனிவர் தூங்குகிறார்... உலகப்பற்று எதுவும் இல்லாமல் இருந்தால் தான், இந்தக் காலை நேரத்தில் இவ்வளவு ஆழ்ந்த உறக்கத்தில் ஈடுபட முடியும்..." என்று உறங்கியவரைப் பார்த்து வணங்கி விட்டுச் சென்றார்...
பார்த்தாயா... ஒரே மனிதர்...! எந்தச் செயலும் இல்லாமல் உறங்கிக் கொண்டிருக்கிறார்... ஆனால் அவர் விறகுவெட்டிக்கு உழைப்பாளியாகவும், திருடனுக்குத் திருடனாகவும், குடிகாரனுக்குக் குடிகாரனாகவும், துறவிக்குத் துறவியாகவும் தென்படுகிறார்... அவரவர் சூழ்நிலைக்கு இருக்கும் மனதைப் பொறுத்து, பார்க்கும் காட்சிகளும் சிந்தனைகளும் மாறும்...! முடிவாக ஒருத்தர் நல்லவரா, கெட்டவரா அல்லது நேர்மையானவரா இல்லை நீதி நெறி தவறினவரா என்பதெல்லாம் அவரவருக்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் அறிந்து கொள்ளலாம்... இருக்கும் போதே அறிந்து கொள்ளணுமா...? அவரவர் பிள்ளைகளின் ஒழுக்கம் மூலம் எளிதாகக் கண்டு கொள்ளலாம்ன்னு நம்ம வள்ளுவர் சொல்கிறார் :-
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும்.
(114)

அதனாலே, "நமக்கு நாமே நல்லவராக இருப்பதே நல்லது" - இப்படிச் சொல்லப் போறேன்னு தொடர்ந்து வாசிக்கிற வாசகர்கள் அனைவருக்கும் தெரியும்...! எந்த அளவுகோலாயினும் வைச்சிக்கோ... எனக்கொரு உண்மை தெரிந்தாகணும்...! உண்மைக்கும் பொய்க்கும் எவ்வளவு தூரம்...?

அதானே குழப்பத்தைக் காணமேன்னு பார்த்தேன்...! நான்கு விரற்கடை தூரம்...

கண்ணால் காண முடியாத உண்மைக்கும் பொய்க்கும் இடையே நான்கு விரற்கடை தூரம் என்கிற அளவையால் எப்படிக் கூற முடியும்...?

காதால் கேட்பவையெல்லாம் உண்மையானதுன்னு சொல்ல முடியாது... அதைக் கண்களால் பார்த்தே உண்மை என்று உணர்ந்து கொள்ள வேண்டும்... பிறகு சந்தேகம் வந்தால் தீர விசாரிக்கவும் வேண்டும்...! ஆக, காதால் கேட்பதைப் பொய்யா...? அல்லது உண்மையா...? என்பதைக் காதிலிருந்து நான்கு விரற்கடை தொலைவிலுள்ள கண்கள் மூலமே தெரிந்து கொள்ள முடியும்... எனவே உண்மைக்கும் பொய்க்கும் இடையே உள்ள தூரம், நான்கு விரற்கடை தூரம்... வேணுமின்னா கட்டை விரலை மடக்கி விட்டு வைச்சிப் பாரு...!

"க்கும்... எழுதும் போது என்ன கவலை ?"-ன்னு வீட்டிலே கேட்கிறாங்க...! கண்டுபிடிச்சிட்டேன்...! இந்தக் கதை எல்லோருக்கும் தெரியும்... அதாவது அக்பருக்கு ஏற்பட்ட சந்தேகத்தைத் தீர்த்து வைத்த பீர்பால் கதையைக் கூறினாயே, அதைக் காதால் கேட்டேனே, அது உண்மையா...? பொய்யா...?

அடேய்... எங்கேடா நடையைக் கட்டுறே... அந்த மரத்தடியில் தூங்கிப் பார்க்க + கேட்கப் போகிறாயா...? ஹா... ஹா... கேள்விகளால் மட்டுமே உண்மைகள் வெளிச்சமிடுகின்றன + சில சிந்தனை பதிவுகளும் வருகின்றன...! கூடவே :-

பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே...! இருக்கும் இடம் எதுவோ...? நினைக்கும் இடம் பெரிது...! போய்வரும் உயரமும் புதுப்புது உலகமும் அவரவர் உள்ளங்களே...!



© சாந்தி நிலையம் கண்ணதாசன் M.S.விஸ்வநாதன் T.M.சௌந்தரராஜன் @ 1972 ⟫


புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. எல்லாம் நம் பார்வையில்தான் உள்ளது என்று தன்னை உணர்ந்தவர்கள் கூறுகிறார்கள். அதனால்தான் தன்னை அறிய கேடு ஒன்றில்லை என்று பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருமூலர் கூறியுள்ளதை நினைவில் கொண்டு காண்பதனைத்தும் அந்த பரம்பொருளின் வடிவமே என்று உணர தலைபட்டால் இவ்வுலக வாழ்வு இனிக்கும்.

    TR Pattabiraman

    பதிலளிநீக்கு
  2. ஆஹா, அருமையான வாழ்க்கைத் தத்துவம். முழு கீதோபதேசம் கேட்ட மாதிரி இருக்கிறது. பெங்களூர் GMB அவர்களும் நீங்களும் ஒரே குருவிடத்தில் குகுலவாசம் செய்தீர்களோ? கருத்துகள் ஒரே மாதிரி இருக்கின்றனவே?

    ஒருவர் பெங்களூரிலும் ஒருவர் திண்டுக்கல்லிலும் இருப்பது சரியல்ல. இருவரும் கீழ்ப்பாக்கத்தில் இருந்தால் நன்றாக இருக்கும். நாங்களும் நெருக்கமாகப் பழக சௌகரியமாயிருக்கும்.

    பதிலளிநீக்கு
  3. உங்கள் பதிவுகளை குழந்தைகளின் பாடப்புத்தகங்களில் நீதிக்கதைகளாக வைத்து விட்டால்ஆர்வமாக படிப்பார்கள் என்பதில் சிறிதும் மாற்றுக் கருத்துக் கருத்து இருக்க முடியாது.

    பதிலளிநீக்கு
  4. அருமை தனபாலன்.. மீண்டும் ஒருமுறை தம்மிடம் இருந்து ஒரு சிறந்த பதிவு. சனிகிழமை புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் சந்திப்போம்

    பதிலளிநீக்கு
  5. நல்லவை , தீயவை என்பதெல்லாம் ஒரு தனிமனிதர் பார்வை மட்டுமே. சுற்றமும் உற்றமும் வரைந்த ஒரு கோடுகள், கோட்பாடுகள்.

    நல்லவை தீயவை ஆவதும் தீயவை நல்லவை ஆவதும் அல்லது தோற்றமளிப்பதும் , சமூக பரிணாம வளர்ச்சியின் ஒரு பிரதிபலிப்பாக மாறிவிடுகிறது.

    பொய்மையும் வாய்மை இடத்த, புரை தீர்ந்த
    நன்மை பயக்கும் எனின்.

    எனும் வள்ளுவன் வாய்ச்சொல் படி,

    ஒரு பொய்யால், நன்மை விளையுமாயின் பொய் அனுமதிக்கப்பட தடை இல்லை.

    திருடுவது குற்றம். திருடியவன் திருடியதை இல்லாதவர்களுக்கு தருகிறான். குற்றம் பெரிதும் இல்லை.

    கள் குடித்தல் தீது.
    வள்ளுவன் சொன்ன கருத்து.

    இன்றோ டாஸ்மாக் வருமானத்தில் தான் அரசு தனது இலவசங்களை சமாளிக்க முடியும் என்ற நிலை.

    ஆக, ஒன்றைக் கொடுத்துத் தான் இன்னொன்றை வாங்க முடியும்.

    சிலர் தீயதை கொடுத்து நல்லதை ஏற்கிறார்கள். சிலர் நல்லதை துறந்து தீயதனை செய்கிறார்கள் . வரும் பயன் நல்லவைகளுக்குத்தானே எனவும் சொல்கிறார்கள்.

    எது ஏற்புடைத்து..?
    அவரவர் மனச் சாட்சி தான் பதில் தர இயலும்.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  6. ஜோதிஜி ஐயா அவர்களின் கருத்தே என் கருத்தும் ஐயா
    நன்றி
    தம ’+1

    பதிலளிநீக்கு
  7. அவரவர் நோக்கிலேயே எதுவும் அமையும். உண்மை என நினைத்தால் உண்மை. பொய் என நினைத்தால் பொய். அழகான நீதியைக் கொண்டு அமைந்துள்ள பதிவு.

    பதிலளிநீக்கு
  8. ஜோதிஜி சொன்னதை வழிமொழிகிறேன் சகோ. முழுக்க நல்லவர் என்றும் முழுக்கத் தீயவர் என்றும் யாருமில்லை. உண்மைதான். எல்லாரும் கடவுள் பாதி மிருகம்பாதி கலந்து செய்த கலவைதான். :)

    கடைசியாக சாந்தி நிலையம் பாட்டும் வரிகளும் அருமை. பொருத்தமாகச் சொல்லி அசர வைத்துவிட்டீர்கள் !

    பதிலளிநீக்கு
  9. அண்ணே வாழ்க்கைக்கு தேவையான பதிவா போட்டு
    கலங்கரை விளக்கமா மாரிவிட்டீர்கள்
    தம +

    பதிலளிநீக்கு
  10. உண்மையும் பொய்யும் ஒரு நா ணயத்தின் இரு பக்கங்கள் போல!

    பதிலளிநீக்கு
  11. பதிவு முழுதும் வாழ்வியல் நெறிகள்!..
    பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே!..

    நல்லதொரு பதிவு.. நல்வாழ்த்துக்கள்!..

    பதிலளிநீக்கு
  12. படிக்கும்போது என் பதிவில் இருக்கும் கருத்துக்கள் போலிருக்கிறதே என்று எண்ணினேன் அதில் நான் மட்டுமல்ல டாக்டர் கந்தசாமியும் ஒருவர். கீழ்பாக்கக் கேஸ் என்கிறார். பின்னூட்டப் புயல் என்னும் பெயர் மறந்து விட்டதோ.?

    பதிலளிநீக்கு
  13. அருமையான பாடல்களை நினைவு படுத்தியமைக்கும், எண்ணம் போல் வாழ்வு என்ற பழமொழிக்கு ஏற்ற கதையையும் சொல்லி, மனசாட்சியின் எண்ணங்களுக்கு விளக்கமும் கூறியது அருமை.
    த ம 8

    பதிலளிநீக்கு
  14. திருடன் என்றைக்கு தன்னை திருடன் என்று ஒப்புக் கொள்வான் ,நான் நல்லவனா ,கெட்டவனா என்று பிறர் சொல்வதை விட மனசாட்சி என் சொல்வதுதான் உண்மை :)

    பதிலளிநீக்கு
  15. அருமையான பதிவு. வழக்கம் போல் ரசித்து படித்தேன்.

    பதிலளிநீக்கு
  16. அவரவர் மனதைப் பொறுத்தே பார்க்கும் காட்சிகள் அமையும் என்பதை அழகாக பாடல் வரிகள் மற்றும் கதையுடன் சொன்ன விதம் சிறப்புங்க சகோ.

    பதிலளிநீக்கு
  17. பதிவுகள் வழமை போலவே அசத்தல் தான். சிறப்பான விடயங்கள் பாடல்கள், பழமொழிகள் அத்தனையும் உண்மையான வாழ்கைக்கு உகந்த கருத்துக்கள் ! அருமை அருமை! மிக்க நன்றி ! வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
  18. நீதிக்கதைகள் அருமை..அவரவர் சூழ்நிலையில் தோன்றும் நிலைமைகளே ..அவரவர் மனதில் சிந்தனையை தோற்றுவிக்கின்றதாக...

    பதிலளிநீக்கு
  19. பார்வையின் அளவு கோள்...எப்படியெல்லாம் ஆளாளுக்கு மாறுகிறது....பாடலும் கதையும் அருமை சகோ. ஜோதிஜி சென்னதை நானும் வழிமொழிகிறேன் சகோ. நன்றி.தம +1

    பதிலளிநீக்கு
  20. "நம் மனதைப்பொறுத்துத்தான் அமையும் " உண்மைதான். நல்லதொரு சிந்தனைப்பதிவு அண்ணா. முதற்பாட்டு வரிகளும் கருத்தும் அருமை.

    பதிலளிநீக்கு
  21. ஒராளை மதிப்பீடு செய்ய
    ஒரு வழி தான் இருக்கு - அது
    "ஒருவரின்
    நடை, உடை, பாவனையை
    வைத்துத்தான்
    தீர்மானிக்கப்படுகிறது." என்பதே!
    ஆயினும்,
    நம் உள்ளம்
    எப்படி ஒருவரை
    அடையாளப்படுத்துகிறதோ
    அதுவே
    நமது மதிப்பீடு என்பேன்!

    பதிலளிநீக்கு
  22. இதுதான் பெர்செப்சன் என்பதோ அண்ணா ? நல்ல கதையும் சிந்தனையும்

    பதிலளிநீக்கு
  23. அருமையான பாடல்கள் . அற்புதமான கருத்து

    பதிலளிநீக்கு
  24. மனம் பொல வாழ்வு என்பது போல
    மனம் போல் சிந்தனை என்று சொல்லலாம்.
    நல்ல புத்திமதிப் பதிவு.

    பதிலளிநீக்கு
  25. ‘கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய். தீர விசாரிப்பதே மெய் என்று சொலதைப்பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?

    பதிலளிநீக்கு
  26. அருமையான கதை . மனத்தின் எண்ணங்களே பொறுத்தே காணும் காட்சிகளும் அமையும்.மிகவும் உண்மை. நல்ல பல கருத்துகள் நிறைந்த பதிவு.

    பகிர்வுக்கு நன்றிகள் ஐயா.

    பதிலளிநீக்கு
  27. இதுதான் பொருளா?
    ஒரே மனிதரைப் பற்றி ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி நினைப்பது ரொம்பவும் பொருத்தமான உதாரணம்.

    பதிலளிநீக்கு
  28. என் சிந்தனையை தூண்டி விட்டீர்! கடந்த காலத்தில் நான் பழகிய மனிதர்களை எண்ணிப் பார்க்கிறேன்!

    பதிலளிநீக்கு
  29. வணக்கம்
    அண்ணா.

    நல்ல கருத்தை சொல்லி அருமையான நீதிகதை சொல்லி எல்லோரையும் கட்டி போட்டீர்கள் அண்ணா.... பகிர்வுக்கு நன்றி த.ம 15

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  30. துரியோதனன் உலகில் அனைவரும் தீயவர் என்றான்;தருமன் அனைவரும் நல்லவர் என்றான்
    வேறென்ன?
    அருமை

    பதிலளிநீக்கு
  31. நாம் காணும் கண்களைப் பொறுத்து பார்வையும். உண்மை. நல்ல சிந்தனையைத் தூண்டும் பதிவு. கதையும் அருமை. அந்த படம் சூப்பர்.நன்றி.

    பதிலளிநீக்கு
  32. கதையும், கருத்தும், படமும், பாடலும் அருமை...அருமை..

    உண்மையாலுமே அருமையான பதிவு..

    God Bless You

    பதிலளிநீக்கு
  33. அருமை நண்பரே வாழ்வியல் தத்தவம்.
    மிகவும் பொருத்தமான நீதிக்கதைகள்.
    அழகான பாடல்களும், குறளும்.
    எல்லோரும் எல்லோருடைய பார்வையிலும் நல்லவர் ஆகி விட முடியாது 80 உண்மையே....

    வேலூர் விழா சிறக்க வாழ்த்துகள்.
    தமிழ் மணம் 91

    பதிலளிநீக்கு
  34. TRUE FALSE - கான்சப்ட் படம் சூப்பர். வழக்கம்போல் கதையும், கருத்தும் அருமை...தரமான பதிவுகள் வரிசையில் சேர்க்கலாம் !

    பதிலளிநீக்கு
  35. அருமையான தத்துவம்! எதுவுமே நமது கண்ணோட்டத்தில், பார்வையில், சிந்தனையில்தான் உள்ளது! அருமை டிடி குட்டிக்கதையுடன்....ரசித்தோம் எப்போதும் போல்!

    பதிலளிநீக்கு
  36. பார்வைகள் பல விதம் நீதிக்கதை அருமை!

    பதிலளிநீக்கு
  37. எதையும் சொல்பவர்கள் சொன்னால் கேட்க சுவை கூட. பதிவுகளைத் தொகுத்து புத்தகம் ஆக்கி விடலாமே சகோ... இன்னும் பலருக்கும் பயனாகும்.

    பதிலளிநீக்கு
  38. காட்சி ஒன்று கருத்துகள் பலவிதம் .அருமை வழக்கம்போல் டிடி முத்திரை

    பதிலளிநீக்கு
  39. ஜோதிஜி திருப்பூர் சொன்ன கருத்துக்களையே நானும் வழிமொழிகிறேன்..
    நன்றி..

    பதிலளிநீக்கு
  40. அப்பழுக்கற்ற மனித நேயத்துடன் நோக்கினால் எல்லாமே காட்சி பிழைகளும் பார்வை மயஙக்கங்களும்தான் என்பது புரியும் ! ... எங்கும் நிறைந்திருக்கும் ஆன்மா ஒன்றுதான் !
    அருமையான பதிவு வலைசித்தர் அவர்களே...

    நன்றி
    சாமானியன்

    பதிலளிநீக்கு
  41. தூங்கும் மனிதனைப் பார்த்து ஒவ்வொருவரும் அவரவர் குணத்துக்கு ஏற்ப நினைத்துக் கொண்டு போகும் அந்தக் கதை எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் என் தாத்தா கூறியதாக நினைவு. சுவையான சிந்திக்கத் தூண்டும் அந்தக் கதையை இத்தனை காலம் கழித்து மீண்டும் நினைவூட்டியமைக்கு நன்றி!

    ஆனால், இரு சிறு திருத்தங்கள் கூற விழைகிறேன் ஐயா!

    "தக்கார் தகவிலர் என்பது அவரவர்
    எச்சத்தாற் காணப் படும்" என்கிற குறளில் 'எச்சம்' என்பது அவர்களின் பிள்ளைகளைக் குறிப்பதாகக் கூறியிருந்தீர்கள். நீங்கள் மட்டுமில்லை, பலரும் அப்படித்தான் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில், ஒருவர் இறந்த பிறகும் அவர் பெயரும் நினைவும் இந்த உலகில் எச்சமாக நீடித்திருக்கின்றன அல்லவா? அவற்றின் தன்மையைத்தான் 'எச்சம்' எனும் சொல்லால் குறிக்கிறார் வள்ளுவர். அதாவது, ஒருவர் இறந்த பிறகு அவரைப் பற்றி நமக்கு நல்ல நினைவுகள் எஞ்சியிருக்கின்றனவா கெட்ட நினைவுகள் மிஞ்சியிருக்கின்றனவா என்பதைப் பொறுத்தே அவர் நல்லவரா கெட்டவரா, தகுதியானரவா தகுதியற்றவரா என்பனவற்றைத் தீர்மானிக்க முடியும் என்பதுதான் அதன் பொருள். இதற்குச் சான்றாக ஒரு கதையே உண்டு.

    வரலாற்றில் பெரும் புகழ் பெற்ற தமிழ் அறிஞர் ஒருவர். (அவர் பெயர் எனக்கு இப்பொழுது நினைவில் இல்லை. ஆனால், தமிழறிஞர் தெ.பொ.மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களின் ஆசிரியர் என்பதாய் நினைவு). அவரிடம் தமிழ் கற்க வந்தாராம் ஆங்கிலேயர் ஒருவர். தமிழறிஞரும் மிகவும் சிரத்தையுடனும் ஆர்வத்துடனும் அவருக்குத் தமிழ் கற்பிக்க, தமிழில் எழுதப் படிக்கக் கூடத் தெரியாமல் வந்தவர் ஒரு கட்டத்தில் திருக்குறள் போன்ற பழந்தமிழ் நூல்களையே ஆராய்ச்சி செய்யும் அளவுக்கு வளர்ந்து விட்டார்!

    ஒருமுறை அவர் என்ன செய்தாராம் தெரியுமா? திருக்குறளில் சில குறட்பாக்களில் இயைபு தவறாக இருப்பதாகக் கருதித் திருத்த முற்பட்டாராம். அதில் மேற்படி குறளும் ஒன்று.

    "தக்கார் தகவிலர் என்பது அவரவர்
    எச்சத்தாற் காணப் படும்" என்பதை 'மக்களாற் காணப் படும்' எனத் திருத்தினால் எதுகை சரியாக அமைகிறதே என்றெண்ணி, அது போலவே திருத்தித் தன் ஆசிரியரான மேற்படி தமிழறிஞரின் பார்வைக்குக் கொண்டு சென்றாராம். அதைப் பார்த்துத் தமிழறிஞருக்கு வந்ததே சீற்றம்!

    "ஆனானப்பட்ட திருவள்ளுவருக்கு எதுகை - மோனை தெரியாதா? 'எச்சம்' என்பதை 'மக்கள்' என இவன் தவறாகப் புரிந்து கொண்டு வள்ளுவர் தவறு செய்து விட்டார் என்று கருதுவதா? திருக்குறளில் கை வைத்த அந்த அதிகப்பிரசங்கியின் முகத்தில் கூட நான் இனி விழிக்க விரும்பவில்லை" என்று கூறி விட்டாராம் அறிஞர்.

    ஆக, இங்கு எச்சம் என்பதற்கு மக்கள் என்பது பொருள் இல்லை என்பது இதன் மூலம் நமக்குத் தெளிவாகிறது.

    பதிலளிநீக்கு
  42. திருத்தம் இரண்டு.

    'விடற்கடை' என ஒரு சொல்லைப் பல இடங்களில் பயன்படுத்தியிருக்கிறீர்கள். அது 'விரற்கடை' என்பதே சரி. கை விரல்கள் குட்டிக் குட்டி மூட்டுகளால் பகுதி பகுதியாகப் பிரிக்கப்பட்டுள்ளன அல்லவா? அப்படி விரலின் கடைசிப் பகுதியில் அமைந்துள்ள பிரிவைத்தான் 'விரற்கடை' என்கிறோம். விரல் + கடை = விரற்கடை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரு. இ.பு. ஞானப்பிரகாசன் ஐயா அவர்களுக்கு : விளக்கங்களுக்கும் திருத்தங்களுக்கும் மிக்க நன்றி ஐயா...

      நீக்கு
    2. ஐயா வணக்கம்.

      இது உங்களின் தளமாக இருப்பதனாலும்,மதிப்பிற்குரிய ஞானப்பிரகாசன் ஐயாவை நான் நன்கு அறிந்திருப்பதாலும் அவரது பின்னூட்டம் சார்ந்து நான் அறிந்த சில தகவல்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

      “ தக்கார் தகவிலார் என்ப தவரவர்
      எச்சத்தாற் காணப் படும் “

      என்பதைத் திருத்தியவர் W H SCOTT என்னும் ஆங்கிலேயர்.

      இவர் தம் பெயரை சுகாதியர் எனத் தமிழ் வடிவில் மாற்றிக் கொண்டவர்.

      இந்தப் பாடலுக்கு அவர் செய்த திருத்தம்,

      தக்கார் தகவிலா ரென்ப தவரவர்
      மக்களாற் காணப் படும்

      என்று இருந்ததாகவே ஞானப்பிரகாசன் ஐயாவைப் போல நானும் நினைத்திருந்தேன். அப்படியே என் பின்னூட்டத்தில் எங்கோ பதிந்தும் இருக்கிறேன்.

      அந்தப் பிரதிகள் அனைத்தையும் பாண்டித்துரை தேவர் அவர்கள் விலைக்கு வாங்கி எரித்துவிட்டதால் இது பற்றிய உண்மை அறியப்படாமல் போயிற்று.

      சமீபத்தில் தமிழாய்வாளர் பொ. வேல்சாமி அவர்கள், அதன் எஞ்சிய பிரதியொன்றின் ஒளிநகலை வெளியிட்டார்.
      அதில்,

      தக்கார் தகவிலா ரென்ப தவரவர்

      பக்கத்தாற் காணப் படும்

      என்றே இருக்கிறது. எனவே பக்கத்தால் என்றே ஸ்காட் மாற்றியுள்ளார். மக்களால் அன்று என்பது துலங்கிற்று.

      அடுத்து,

      அவர் தன் திருத்தப் பிரதியைக் கல்விக் கூடங்களுக்குப் பாடமாக வைக்க விரும்புகிறார்.

      அவரது திருத்தத்தையும் வானளாவப் புகழ்ந்த தமிழறிஞர் கூட்டமொன்று, நீங்கள் போய்த் தியாகராஜ செட்டியாரைப் பார்த்து ஒரு மதிப்புரை வாங்கி வாருங்கள்.

      அப்படி அவர் கொடுத்தாரென்றால், அதைக் கொண்டு எளிதில் கல்வி நிறுவனங்களுக்குப் பாடமாக வைத்துவிடலாம் என்று கூறுகின்றது.

      தியாக ராஜ செட்டியார் திருச்சியில் வசிக்கிறார்.

      ஸ்காட், வண்டி கட்டிக் கொண்டு தியாகராஜ செட்டியாரைப் பார்க்க வருகிறார்.

      மிகுந்த ஆடம்பரத்துடன், அவரிடம் தான் திருக்குறளில் செய்த திருத்தங்களைக் கூறத் தொடங்குகிறார்.

      இந்தக் குறளுக்குச் செய்த மாற்றத்தைக் கூறத் தொடங்கியதுமே வெகுண்டெழுந்த தியாகராஜ செட்டியார் எச்சம் என்ற சொல்லின் பொருளாழம் அவர் திருத்தத்தில் இல்லாமையை விளக்கி “நீர் வள்ளுவரை விடப் பெரிய அறிவாளியோ..? இதுபோன்று உம் மனம் போன போக்கில் எதும் செய்யாமல் இருப்பதே நீர் தமிழுக்குச் செய்யும் மிகப் பெரிய சேவை! போம் ஐயா வெளியே என்று சொல்லித் துரத்தி விடுகிறார்.

      ஸ்காட்டின் பெயரைச் சொல்லாமல் தியாகராஜ செட்டியாரின் வாழ்வில் நடந்த இந்த நிகழ்வை உ.வே.சா. பதிவு செய்து வைத்திருக்கிறார்.

      அவர் ஸ்காட்தான் என்பது இது போன்ற திருத்தத்தைச் செய்த ஒரே ஆங்கிலேயர் அவர்தான் என்பதாலும் , தியாகராஜ செடடியாரின் காலத்தவர் என்பதாலும் பாண்டித் துரைத் தேவர் வாங்கி அழித்த பிரதிகள் இவருடையன என்பதாலும் தெரியவந்தது.

      (மதிப்பிற்குரிய ஞானப்பிரகாசன் ஐயா அவர்கள் நினைவில் இருந்து கூறுவதைச் சற்று மாற்றிக் காண வேண்டும். தெ.பொ. மீ அவர்களின் ஆசிரியர் தியாகராஜ செட்டியார் அல்லர்.
      உ.வே.சா வின் ஆசிரியராக இருந்த மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களின் மாணவர் இவர். பெயர் பொருத்தம் இக்குழப்பத்திற்குக் காரணமாய் இருக்கலாம்.)

      முதல் குறளிலேயே ஸ்காட் தன் கைவரிசையைக் காட்டி விட்டார் என்பதுதான் இதன் உச்சகட்டம்.

      அவர் குறள் இப்படித் தொடங்குகிறது.

      அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
      னகர முதற்றே உலகு :))

      இருவரும் என் பின்னூட்டங்களைத் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்பதால் இந்த அதிகப்படி உரிமை

      நன்றி.

      நீக்கு
    3. யார் சொல்வதை யார் தவறாக எடுத்துக் கொள்வது? ;-) தவறு செய்தவன் நான். தாங்கள் எவ்வளவு அழகாகத் திருத்தங்கள் கூறி, இந்தத் தகவல் பற்றிய இற்றைச் செய்தியையும் கூறியிருக்கிறீர்கள்! அதற்கு நாங்கள் அல்லவோ தங்களுக்கு நன்றி கூற வேண்டும்? மிக்க நன்றி ஐயா! :-)

      நீக்கு
  43. இந்த உண்மை அறியாமல்தானே வாழ்க்கையில் பல அவசரமுடிவுகளை எடுத்துவிட்டு பிறகு வருந்துகிறோம்... மிக அவசியமான பதிவு. நன்றி தனபாலன்.

    பதிலளிநீக்கு
  44. உள்ளம் என்பது ஆமை அதில் தூய்மையும் உண்டு தாய்மையும் உண்டு தடியால் அடித்து கனியவைத்து தன்னை தாழ்மை செய்கிறது.. அருமையான பதிவு...

    பதிலளிநீக்கு
  45. யாரையும் கணிப்பதென்பது வாழ்க்கையில் மிகவும் கடினம். நல்லவர் என்று நினைப்பவர் துரோகங்கள் செய்வதும் கெட்டவர் என்று நினைப்பவர் நாம் எதிர்பாராத சமயத்தில் உதவுவதும் வாழ்க்கையில் சர்வ சாதார்ணமாக நடக்கிற விஷயம். நீங்களே குறிப்பிட்டிருக்கிற பாடலின் படி ' பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ண‌ங்களே ' என்பது தான் சரி!

    பதிலளிநீக்கு
  46. அன்பு வலைப்பூ நண்பரே!
    நல்வணக்கம்!
    இன்று 08/06/2015 அன்று முதலாம் ஆண்டினை நிறைவுசெய்யும் "குழலின்னிசை"க்கு
    தங்களது அன்பான ஆதரவும், கருத்தும், அளித்து அகம் மகிழ்வுற செய்ய வேண்டுகிறேன்.

    முதலாம் ஆண்டு பிறந்த நாள் அழைப்பிதழ்

    அன்பின் இனிய வலைப் பூ உறவுகளே!
    "குழலின்னிசை" என்னும் இந்த வலைப் பூ!
    உங்களது மனம் என்னும் தோட்டத்தில் மலர்ந்த மகிழ்ச்சிகரமான நாள் இன்று.
    ஆம்!

    கடந்த ஆண்டு இதே தினத்தன்றுதான் 08/06/2014, "குழலின்னிசை" வலைப்பூ மலர்ந்தது.

    ( http://kuzhalinnisai.blogspot.com/2015/06/blog-post_7.html#comment-form )

    சரியாக ஓராண்டு நிறைவு பெற்று, இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இந்த வலைப்பூவானது, நல் இசையை நாள்தோறும் இசைத்து, அனைவருக்கும் நலம் பயக்குவதற்கு, உள்ளன்போடு உங்களது நல்லாசியைத்தாருங்கள்.

    தங்களது வருகையை எதிர் நோக்கும் வலைப்பூ நண்பர்கள்.

    மற்றும்!

    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    TM +1

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.