சுயநலம் தேவை...!


பிறக்கும் போதும் அழுகின்றாய்... இறக்கும் போதும் அழுகின்றாய்... (2) ஒரு நாளேனும் கவலையில்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே (2) அன்னையின் கையில் ஆடுவதின்பம்; கன்னியின் கையில் சாய்வதும் இன்பம் (2) தன்னை அறிந்தால் உண்மையில் இன்பம்... தன்னலம் மறந்தால் பெரும்பேரின்பம்...பெரும்பேரின்பம்... (படம்: கவலை இல்லாத மனிதன்)கண்ணதாசன் அவர்கள் "தன்னலம் மறந்தால்" என்பதற்குப் பதில் "தன்னலம் துறந்தால்" அப்படிங்கிறதையும் ஏற்கனவே ஒரு பதிவில் கொஞ்சம் சொல்லிட்டே... (படிக்காதவர்கள் → இங்கே ← சொடுக்கி பிறகு வாசிக்கலாம்) இப்ப ஒரு சந்தேகம்... அதாவது, நம்முடைய செயல்களில் தன்னலம் தான் ஒளிந்திருக்கிறது என்று சொல்கிறார்களே, அது உண்மையா...? அப்படிச் சுயநலமாக இருப்பது சரியா? அப்படியிருந்தால், குடும்பம் உருப்படுமா ? பொதுநலம் பேணுவது, பிறர் நலத்திற்காகப் பாடுபடுவதெல்லாம் எப்போது..?

உருப்படியா கேள்விகள் மனச்சாட்சி... நாட்டில் அடுத்தவர்களுக்கு உதவுகிறவர்கள் எத்தனை பேர் ? பிரதிபலன் கருதாமல் தர்மம் செய்பவர்கள் எத்தனை பேர் ? உயிரையும் துச்சமென மதித்து நாட்டின் பாதுகாப்பிற்காக வாழ்பவர்கள் எத்தனை பேர் ? உழைப்பைத் தவிரச் சிறந்த தெய்வம் எதுவுமில்லை என்று உழைப்பவர்கள் எத்தனை பேர் ? - இவர்கள் அனைவர்களின் செயல்களிலும் சுயநலம் எப்படி ஒளிந்திருக்கும்...? பொதுநலம் தானே மேலோங்கி இருக்கும்...! நல்லதைப் பார்ப்போமே...!

எதற்கெடுத்தாலும் அடுத்தவங்களுக்கு, இல்லேன்னா நாட்டுக்கு ! முதல்லே நம்மளப் பத்தி சொல்லு... கேள்விகளெல்லாம் எவ்வளவு வேகமா வருது...?

பலரின் சுயநலத்திலே பொதுநலமும் இருக்குன்னு சொல்ல வந்தேன்... சரி... ஒரு உளவியல் அறிஞர் சொல்கிறார் : சாலையோரத்தில் பிச்சை போடுகிறோமே பிச்சைக்காரர்களுக்கு, அதில் கூடத் தன்னலம் ஒளிந்து இருக்கிறதாம் ! எப்படி ? பிச்சை கேட்கிற பெரியவர், மூதாட்டி, குழந்தை - இப்படி யாரைப் பார்த்தாலும், அவர்களில் நம் தந்தை, தாய், குழந்தைகள் முகம் தெரிவதால் தான் பிச்சை போடுகிறோமாம்... இது எப்படி இருக்கு...?

அசிங்கமா இருக்கு...! வேறு ஏதாவது புரியிற மாதிரி சொல்லுப்பா...!

அசிங்கமாவா ? சரி... இந்த உலகத்திலே இருக்கிற நிலத்தையெல்லாம் எல்லோருக்கும் சரிசமமா பிரித்துக் கொடுத்திடலாமா...?

ஐ... அருமையான யோசனை...! கொடுத்திடலாம் மேலே சொல்லு...

இருக்கிற தங்கத்தையெல்லாம் சரிசமமா பிரித்துக் கொடுத்திடலாமா ?

பேஷ் பேஷ்...! பிரமாதம்...!!! சுறுசுறுப்பு இப்பத்தான் வருது...!!!

அதே போல இருக்கிற ஆடு மாடுகளையெல்லாம் கூடச் சரிசமமா...?

வேணாம்... ஏன்னா எனக்குன்னு சொந்தமா 20, 30 ஆடு மாடுகள் இருக்கு...!

அதானே...! ஊருக்கென்று பொதுநலம் பேசுகிற நாம், தனக்கென்று வரும்போது ரொம்பவே சிந்திக்க ஆரம்பிக்கிறோம்... ஹா... ஹா...

சுறுசுறுப்பு டொய்ங் தன்னலம் கருதாத பொதுநலம் சாத்தியமேயில்லையா ?

வேறு மாதிரி யோசிப்போம்; தன்னலச் சேவைகளிலே பொதுநலம் கருதுவது சாத்தியமாகுமா ? நிச்சயமாக முடியும் ! நாம் நம்முடைய தேவைக்கேற்ப... ஒஓ அதுவே சந்தேகம் தான்; சரி, தேவைக்கேற்பத் தான் சம்பாதிக்கிறோம் என்றே இருக்கட்டும்... சம்பாதிக்கிற பணத்தில் நியாயமான பகுதியை வரிப்பணமாக நாட்டுக்கு செலுத்தி விட்டால், அது கூட பொதுநலம் தான் !

அதைச் சொல்லு முதல்லே ↔ வீடு உருப்படும்...! அப்படி ஒழுங்கா, ஒழுக்கமா சம்பாதிச்சா, நம்முடைய குழந்தைகளை நல்லெண்ணத்தோடு படிக்க வைச்சி சாதிக்கலாம்... அவங்க படிக்கிற படிப்பும், தேடுகிற வேலையும் நாட்டுக்குப் பயன்படுகிற வகையில் இருந்தாலே போதும், அதுவே பொதுநலமாக ஆகிவிடும்... நாடும் உருப்படும்...! இந்தச் சுயநலம் தேவை...! தப்பில்லை...!

ஆரம்பத்திலே உருப்படியா கேள்வி கேட்டு, இப்போ பதிலும் சொல்லிட்டே...! ம்... நம்மின் எந்தச் செயலும் நம்மிடமிருந்தே தான் தொடங்க வேண்டும்; ஆனால், செயலின் முடிவு பொதுநலமாக இருந்தால் போதும் ! அதுவே தன்னலத்தில் பொதுநலம் கருதும் செயலாக அமைந்து விடும்...!

தங்களின் கருத்து என்ன நண்பர்களே...?

இப்போ மேலே நான் சொன்னதே என்னை கேள்வி கேட்குது, என்னென்னா : "ஒழுங்கா, ஒழுக்கமா" எல்லாம் சரி தான்... இந்த "நம்முடைய" நினைப்பாலே தான் கூட்டுக் குடும்பம் இல்லையோ...? முறைக்காதே...! அடுத்த பதிவுக்கு அச்சாரம்ன்னு வைச்சிக்கோ... ஹிஹி... "தன்னலம் துறந்தால்"-ன்னு கவிஞர் ஏன் எழுதலைன்னு லேசா புரியுது..! வேற பாட்டு பாடிட்டு கிளம்புறேன்..!

'நாடென்ன செய்தது ந‌ம‌க்கு...?' - என கேள்விகள் கேட்பது எதற்கு...? 'நீயென்ன செய்தாய் அதற்கு...' - என நினைத்தால் நன்மை உனக்கு...! (2) 'நான் ஏன் பிறந்தேன்...? நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்...?' - என்று நாளும் பொழுதும் வாழும் வரையில்... நினைத்திடு என் தோழா... நினைத்து செயல்படு என் தோழா... உடனே செயல்படு என் தோழா... (படம்: நான் ஏன் பிறந்தேன்...?)

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

 1. சுயநலம் பெருகிவிட்ட காலம் ஐயா இது. சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் கடந்தும் கூட, அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய இயலாத நிலையில்தானே இருக்கிறோம்.
  அரசு அதிகாரிகளின் சுய நலம், ஆட்சியாளர்களின் சுய நலம், தனி மனிதர்களின் சுய நலம் என எங்கும் எதிலும் சுய நலம், சுய நலம்

  பதிலளிநீக்கு
 2. தன்னலம் மறந்து பொதுநலம் கருதி அவர் அவர்களும் தன் கடமைகளை ஒழுங்காய், ஒழுக்கமாய் செய்ய வேண்டும் என்பதை அழகாய் சொல்கிறது கட்டுரை.

  பாடல் பகிர்வு இரண்டும் மிக அருமை.
  வாழத்துக்கள்.

  பதிலளிநீக்கு
 3. சுயநலத்திலிருந்தே பொதுநலம் என்று சொல்லியுள்ள கருத்து சிந்திக்க வைக்குது.

  அதுவும் கரெக்ட் தான் !

  பகிர்வுக்கு நன்றிகள்.

  பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 4. அவ்வப்போது பொதுநலம் கலந்த தன்னலமும் தேவையான ஒன்றே...

  பதிலளிநீக்கு
 5. அதானே! ஊருக்குன பிறர்நலம் பேசுற நாம், நமக்குன்னு வந்த சுயநலமா மாறி விடுகிறோம்!

  பதிலளிநீக்கு
 6. நம் தெருவை சுத்தமாக வைத்துக் கொண்டால் சுயநலமா? நம் ஊரைச் சுத்தமாக வைத்துக் கொண்டால் சுய நலமா? தனி நன்மைகள் பொது நன்மைக்கு வழி வகுத்தால் நல்லதுதானே? டெண்டுல்கரின் சதம் இந்தியாவுக்கு வெற்றி தேடித் தருவது போல! :)))

  பதிலளிநீக்கு
 7. வணக்கம் சகோதரர்
  தன்னலமின்றி பொதுநலத்திற்கு அச்சாரமிடும் அழகான கட்டுரை. பாடல்கள் அனைத்தும் அதற்கு உறுதுணையாக உள்ளது. அடுத்த பதிவிற்கு அச்சாரம் சூப்பருங்கோ. வழக்கம் போல் அசத்தியிருக்கிறீர்கள். எனது வாழ்த்துகளும் நன்றிகளும் தங்களுக்கே...

  பதிலளிநீக்கு
 8. வணக்கம்
  அண்ணா

  இன்றைய காலத்திற்கு ஏற்றதாய் அமைந்துள்ளது அத்தோடு அழகிய பாடல்கள் மூலம் சிறப்பாக விளக்கியுள்ளீர்கள்..... வாழ்த்துக்கள் அண்ணா

  நன்றி
  அன்புடன்
  ரூபன்

  பதிலளிநீக்கு
 9. அற்புதம்.

  ஒரு நல்ல குடும்பம் ஒரு நல்ல நாட்டிற்கு அடித்தளம்.

  ஒரு நல்ல குடிமகன் ஒரு நாட்டின் வளத்திற்கும் வளற்சிக்கும் அச்சாணி.

  ஒரு நல்ல குடிமகனையும், குடும்பத்தையும் ஒருவன் மிகுந்த சுயநலத்தோடு உருவாக்கினானால் ஒரு பெரிய பொதுநலம் தானாகவே உருவாகிறது.

  இந்த யாரையும் சுரண்டாத, காயப்படுத்தாத சுயநலம் அனைவருக்கும் தேவைதான். இந்த சுயநலம் ஒரு வகையில் கடமையும் பொறுப்புமாகும்.
  அருமை. இதுதான் உண்மையும் கூட.

  God bless you.

  பதிலளிநீக்கு
 10. சுயநலத்தில் பொது நலமும் கலந்து இருக்குன்னு கூறிய கருத்தை ரசித்தேன் தனபாலன் சகோ :)

  பதிலளிநீக்கு
 11. //நம்மின் எந்த செயலுமே நம்மிடமிருந்தே தான் தொடங்கவேண்டும்.ஆனால் செயலின் முடிவு பொது நலமாக இருக்கவேண்டும்.//
  உங்கள் கருத்தை நானும் ஆமோதிக்கின்றேன். வழக்கம்போல் நல்ல கருத்துள்ள பதிவு.வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 12. என்க்குத் தெரிஞ்சு பொதுநலம்ன்னு ஒன்னு கீதா இன்னா? அகராதி காண்டி அப்புடிக்கா ஒரு வார்த்தை கெடியாதுபா... அப்புடிக்க ஒன்னு இர்ந்தா அத்த நல்லா சொரண்டி பாருபா... பேக்குல சுயநலம் ஒயின்ஞ்சுகினு இர்க்கும்பா...

  பதிலளிநீக்கு
 13. பொது நலத்திற்காக பாடுபடுவதாக சொல்லிக் கொள்ளும் தலைவர்கள் சுயநலமாக இருப்பதால்தான் ,மக்களிடமும் சுயநலம் பெருகி விட்டது என்று தோன்றுகிறது !
  த ம 5

  பதிலளிநீக்கு
 14. ஆமாம். பொது நலத்திலும், தன்னலம் ஊடுருவியே வருகிறது. நல்ல பாடல்களுடன் நலம் கருதும் கட்டுரை. நன்றி.

  பதிலளிநீக்கு
 15. தன் நலத்தையே பேணிக்கொள்ள துப்பில்லாதவன் எப்படி
  பொது நல்ச்சேவை ஆற்றமுடியும்??

  பதிலளிநீக்கு
 16. முன்பெல்லாம் பொதுவுடைமை கட்சிகளை விமரிசிக்க நீங்கள் சொல்லும் பங்கீடுகதை சொல்லப் படும். எந்தசெயலையும் ஏதாவதுஒரு கோணத்தில்சரியென்று கூறிவிட முடியும். ஆனால் எந்த செய்திக்குமொருமித்த ஒத்த கருத்து எழாது (நம்மை பாதிக்காதவரை ஒத்துப் போவோம்)

  பதிலளிநீக்கு
 17. //எந்த செயலுமே நம்மிடமிருந்து தான் தொடங்க வேண்டும்.ஆனால் செயலின் முடிவு பொது நலமாக இருக்கவேண்டும்.//

  இது தான் நியாயம்.. இனிய கருத்துக்களுடன் அருமையான பதிவு..
  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
 18. நல்லதொரு பதிவு...

  பொதுநலம் என்ற வார்த்தையை மறந்துவிடும்நாள் வெகுவிரைவில் வரப்போகிறது.... இந்த உலககே சுயநலத்துக்காக சுயற்ற ஆரம்பித்துவிட்டது...

  இதில் தர்மம், தியாகம், மனசாட்சி, உண்மை போன்றவைகளுக்கு வேலையில்லாமல் போய்விட்டது...

  நாம் சுயநலத்தோடு ஒழுக்கமாக இருந்தால் அதிலொரு பொதுநலம் இருக்கிறது என்ற கருத்தைநானும் ஏற்றுக்கொள்கிறேன்...

  ஆனால் இங்கு காண்பது ஒழுக்கமான சுயநலம் அல்ல அயோக்கியத்தனமான சுயநலமாக இருக்கிறது என்ன செய்வது...  பதிலளிநீக்கு
 19. சுயநலத்தின் மூலம் பொதுநலம் என்று சொல்லியிருப்பது, சரியான ஒன்று தான் என்று எண்ணுகிறேன்.

  கண்டிப்பாக நாம் செய்யும் பொதுநலத்தில் நமக்கே தெரியாமல் ஏதாவதொரு சுயநலம் ஒளிந்திருக்கும். அது நான் கண்ட உண்மை.

  அருமையான கட்டுரை. வாழ்த்துக்கள் டிடி.

  பதிலளிநீக்கு
 20. சிறப்பான கட்டுரை தந்தமைக்கு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 21. நல்ல பதிவு..உண்மையில் சுயநலம் தான் மிகுந்து இருக்கிறது. என்ன செய்ய, மாறும் என்று நம்புவோம்.

  பதிலளிநீக்கு
 22. கொஞ்சம் சுயநலமு வேண்டும்தான். ஆனா, அது அடுத்தவங்களைப் பாதிக்கக்கூடாதுங்குறதுல கண்டிப்போடு இருக்கனும்.

  பதிலளிநீக்கு
 23. முழுக்க முழுக்கு சுயநலம் பற்றி புழுங்கும் எனது ஆக்கமும் இது போலவே சிறிது.
  சுயநலம் பொதுநலமாவது நன்று.
  சிந்திக்க வைக்கும் பதிவு.
  இனிய வாழ்த்து.
  வேதா.இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 24. தன்னலத்தில் பொதுநலம் காண்போம். நல்ல கருத்து

  பதிலளிநீக்கு
 25. சிந்திக்கவேண்டிய சிறப்பான கட்டுரை.
  அதிகமாக சுயநலமில்லாத பொதுநலன் இல்லை.
  /நாம் சுயநலத்தோடு ஒழுக்கமாக இருந்தால் அதிலொரு பொதுநலம் இருக்கிறது//ஏற்புடையதே.

  பதிலளிநீக்கு
 26. அருமையான பதிவு நண்பா. பொதுநலம் செய்வதில் சற்று தன்னலம் காட்டினால் நேற்றை விட நாளை நன்றாக இருக்கும். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 27. (1) தன்னலமே இல்லாதவர்கள்தான் தலைவர்கள ஆகவேண்டும் (ஜோதிபாசுபோல)
  (2) சாதாரண மனிதர்கள் தன்னலம் கலந்த பொதுநலத்தோடு வாழ்ந்தாலே அந்த சமூகம் முன்னேற்றமடையும்.
  (3) பொதுநலமே இலலாத தன்னலமே மிகுந்தது நரகக் குழிதான் - இப்ப நம்நாட்டுப் பயணம் இதுதான்

  பெரியார் சொன்ன விளக்கம் அருமை- “மழை பெய்யணும்னு நினைக்கிறது பொதுநலம், நாம நனையாம குடைபிடிச்சிக்கிறது சுயநலம்” இது நல்லாருக்கில்ல.
  தங்கள் பதிவும் நல்லாருக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 28. மிக அருமையான பதிவு.

  தற்போது காலகட்டத்தில் சுயநலம் அதிகமாகிக்கொண்டுதான் இருக்கிறது.

  நட்புடன் ஸ்ரீ

  தொழில்நுட்ப பதிவுகளுக்கு http://tamiltechguru.blogspot.in/

  பதிலளிநீக்கு
 29. அன்பு இருந்தால் போதும்
  அன்புடையார் தன் உடலில் உள்ள எலும்பையும் கூட பிறருக்கு வழங்கிடுவார் என்றார் வள்ளுவர்.

  பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை என்றார் வள்ளுவர்

  இந்த இரு நல்ல சிந்தனைகளையும் இளமையிலே இளம் உள்ளங்களில் புகுத்திவிட்டால் போதும் சுயநலம் ஒழிந்துவிடும்.

  பதிலளிநீக்கு
 30. நல்ல விஷயங்கள் வீட்டிலிருந்துதான் ஆரம்பமாகின்றன என்பார்கள். அதுபோலத்தான் நாம் ஒவ்வொருவரும் நல்லதொரு குடிமகன்களாக இருந்தால் நாடே நலம் பெரும்.
  வரும் தேர்தலில் நல்ல குடிமக்களாக (நமக்கு நல்லாட்சி வேண்டும் என்ற சுயநலத்துடன்) வோட்டு பதிவு செய்வோம். பொதுநலம் பேணுவோம்.

  பதிலளிநீக்கு
 31. நல்ல அருமையான ஒரு இடுகை! சுயநலம் பெருகிக் கிடக்கும் சமூகத்திற்குத் தேவையான ஒரு இடுகை! முதலில் நாம் எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாத அன்பையும், பிறரிடம் குற்றம் காணாமல் வாழும் வாழ்வையும் சிறு வ்யது முதலே ஆழமாகப் பதித்து விட்டால் நல்ல ஒரு சமுதாயம், சுயநலமற்ற ஒரு சமுதாயம் வளரும்! உருவாகும்!

  நல்லதொரு பகிர்வு! பாடல்கள் அருமை!வாழ்த்துக்கள்1

  பதிலளிநீக்கு
 32. சிந்திக்க வைக்கின்ற
  எடுத்துக்காட்டுகள் நிறைந்த
  தங்கள் பதிவுகள் மீது
  எனக்குத் தனி விருப்பம்!
  சரி,
  கருத்துக்கு வருகிறேன்...
  தன் (சுய) நலமா, பொது (பிறர்) நலமா
  முதலில் தோன்றியது என்றால்
  தன் (சுய) நலம் என்பேன்.
  தான் மகிழப் பிறரைச் சேர்க்கையிலே
  பொது (பிறர்) நலம் தானென
  நம்மாளுகள்
  உணராமல் இருந்திருக்கலாம்...
  எப்படி இருப்பினும்
  தன் (சுய) நலம் தான்
  பொது (பிறர்) நலம் தோன்ற
  வாய்ப்பளித்திருக்கிறது!

  பதிலளிநீக்கு
 33. தன்னலமும் பொது நலத்தோடு அமைந்தால் நல்லது என்பதை அழகாக சொல்லிவிட்டீர்கள்! சிறப்பான பதிவு! நன்றி!

  பதிலளிநீக்கு
 34. சிந்திக்க வைக்கிற சிறந்த பதிவு, உங்களுக்கே உரிய ஸ்பெஷல் நகைச்சுவையுடன்...

  பதிலளிநீக்கு

 35. ஒவ்வொரு பொதுநலத்திற்கும் பின்னால் கண்டிப்பாக சுயநலம் ஒளிந்துகொண்டுதான் இருக்கும்
  Killergee

  பதிலளிநீக்கு
 36. கருத்துக்கள் அருமை.

  தன்னலம் காத்தல் தவறில்லை; அதில் பொதுநலம் சிறிதேனும் இருந்தால்...

  பதிலளிநீக்கு
 37. அனைவரையும் சிந்திக்க வைத்த, சிந்திக்க வேண்டிய அருமையான பதிவு.பகிர்விற்கு நன்றி.புதுநலத்திற்கான விதை ஊன்றப்பட்டுள்ளது.

  பதிலளிநீக்கு
 38. வருடக் கணக்கின் முடிவு காலத்தில் வரி குறித்தும் சொல்லியுள்ளீர்கள் சரிதான்... வரி செலுத்துவதில் நம்முடைய பொதுநலம் இருக்கிறதுதான்... ஆனால் செலுத்துகிற வரி யாருடைய சுயநலத்திற்காக போகிறதென்ற கேள்வியும் சேர்ந்தே எழுகிறதே... அதற்காக வரி செலுத்த வேண்டாம் என்று சொல்கிறேனென்று நினைக்க வேண்டாம்... நாம் செய்வதை செய்து கோண்டுதான் இருக்கிறோம்...

  பதிலளிநீக்கு
 39. தொத்து நோய் பிடித்தவன் தன் நோயைக் குணப்படுத்திவிட்டு பொதுஇடத்திற்கு வரவேண்டும். அப்போதுதான் மற்றவர்களுக்கு நோய் தொத்தாது.

  நல்ல பதிவு தனபாலன அண்ணா.

  பதிலளிநீக்கு
 40. பொது நலம் பேணுவது சரிதான். ஆனால் தனக்கு மிஞ்சி தன தான தருமம் என்பது என் கருத்து.

  பதிலளிநீக்கு
 41. ///////நம்மின் எந்த செயலுமே நம்மிடமிருந்தே தான் தொடங்கவேண்டும்.ஆனால் செயலின் முடிவு பொது நலமாக இருக்கவேண்டும்./////

  அருமையான, எப்போதும் மனதில் கொள்ள வேண்டிய கருத்து!.. பகிர்வுக்கு மிக்க நன்றி!..

  பதிலளிநீக்கு
 42. எல்லாப் பொதுநலமும் ஒரு சுயநலப்புள்ளியில் இருந்தே தொடங்குகின்றது. எல்லா சுயநலமும் ஒரு பொதுநலப்புள்ளியில் தான் முடிகின்றது.

  பதிலளிநீக்கு
 43. நன்றாக சொன்னீர்கள் அடிப்படை தேவைகளுக்கான சுயநலம் தவறில்லை நம் சுயநலத்தால் பிறர் பாதிக்காமல் இருக்கவேண்டும் என்பதே முக்கியம்

  பதிலளிநீக்கு
 44. தன்னலம் கருதிதான் உங்கள் பதிவைப் படிக்கிறேன். எனக்கு ஏதாவது யோசிக்க நீங்கள் கொடுப்பீர்கள் என்பதால். பொதுநலம் நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்குத் தொந்தரவு இல்லாமல் வாழ்வது. பாடல்கள் எப்பவும் போல அருமை. தனபாலன் உங்கள் பதிவுகளே பொது நலப் பதிவுகளே.

  பதிலளிநீக்கு
 45. சுயநலம் தான் அதிகம் பொது நலத்தையும் பாதிக்கின்றது என்பதே என் கருத்து.

  பதிலளிநீக்கு
 46. சுயநலத்தில் நிச்சயமா கொஞ்சம் பொதுநலம் இருக்க வேண்டும். அதாவது மற்றவர்களும் நம்மை போலவே சுயநலம் கொண்டவர்கள் என்ற உண்மையை அறிந்திருக்க வேண்டும்

  பதிலளிநீக்கு
 47. பொது நலத்துடன் கூடிய தன்னலம் நன்மை பயக்கும் என்ற கருத்தை விளக்கும் பதிவு. பகிர்வுக்கு நன்றிகள் ஐயா.

  பதிலளிநீக்கு
 48. தன்னலம் இருக்கலாம். தனக்கு மிஞ்சியதை தானம் செய்யும் பொதுநலனும் கண்டிப்பாக இருக்கவேண்டும் என்று அருமையான கருத்தைக் கூறினீர்கள். பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 49. சுயநலம் அடுத்து நிற்கும் எவரையும் கெடுக்காதவரை இருந்தால் பறவாய் இல்லை. நன்மை செய்யாவிட்டலும் தீமையாவது செய்யாதிருப்பதும் மேல் சில தொழில்களுக்கு நிச்சயம் பொதுநலம் உள்ளவர்கள் தான் வரவேண்டும். வாழ்கைக்கு பணம் அவசியமே ஆனால் அது மட்டுமே அவசியம் என்று நினைப்பவர்களாகவும் இருக்கக் கூடாது அல்லவா(ஆசிரியர்,மருத்துவர்)போன்ற தொழில்கள்.
  அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்....!

  பதிலளிநீக்கு
 50. Charity begins at home என்பார்கள். இதை வலியுறுத்தும் குட்டிக் கதைகள் பைபிளிலும் உண்டு. சுயநலத்துடன் பொதுநலமும் கலந்திருப்பதை வருமான வரி செலுத்தும் உதாரணத்தின் மூலம் சிறப்பாக வெளிப்படுத்திவிட்டீர்கள். ஆனால் அதையும் செலுத்த மறுத்து நாட்டுக்காக உழைக்கிறேன் என்கிற அரசியல்வாதிகளை என்னவென்பது?

  பதிலளிநீக்கு
 51. படிப்பவர்களை சிந்திக்க வைக்கும் அருமையான கட்டுரை. பொருத்தமான திரைப் பாடல்கள் பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
 52. சுயநலம் + எதிர்பார்பில்லா பொது நலம் இரண்டும் தேவைதான்.வாழ்க்கை திருப்தியாக இருக்கும்.

  நல்ல பதிவு...!

  பதிலளிநீக்கு
 53. பெரும்பாலான பொதுநலத்தில் சுய நலம் இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

  பதிலளிநீக்கு
 54. தற்போது சுயநலம் மேலோங்கி காணப்படுவது வருந்ததக்கது. மனிதரிடேயே பொதுநலன் மேலோங்க வேண்டும்.

  சிறந்த பதிவு - வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 55. பொதுவுடமை சிற்பியே உங்கள் கருத்தை ஏற்கிறேன்.

  பதிலளிநீக்கு
 56. மொத்தத்துல சொல்லப்போனால் உலகில் சுயநலமே பெருகி வருகிறது !

  பதிலளிநீக்கு
 57. நன்றாக சொன்னீர்கள். சிந்திக்க வைக்கும் பதிவு.

  பதிலளிநீக்கு
 58. தன்னலத்தில் பொதுநலம்..

  ரொம்ப அருமையான அறிவுரைகள்.. அதுவும் அன்பாகவே சொல்லி இருக்கீங்கப்பா..

  தனக்கென்று முதலில் பார்த்துக்கொண்டு மிச்சம் இருப்பதில் பிறருக்கு செய்வது கூட ஏற்கக்கூடியதே..

  தான் நன்றாக சாப்பிட்டு தன் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது கூட பொது நலம் தான் எப்படி என்றால் நாம் உடல்நலம் சரியில்லாமல் படுத்துவிட்டால் வீட்டில் உள்ளோருக்கு சிரமத்தை கொடுக்கிறோம். நம் ஆரோக்கியம் நல்லமுறையில் பார்த்துக்கொண்டால் அதனால் பலருக்கும் நன்மை பயக்கிறோம்.

  வரிகள் எல்லாம் நல்லமுறையில் நேர்மையாக கட்டிவிட்டால் அதுவும் பொதுநலமே..

  தன் நலம் பார்க்காமல் நீங்கள் சொன்னது போல ஒரு உதவி செய்துவிட்டு அதற்கு எந்த பிரதிபலனும் எதிர்ப்பார்க்காமல் இருப்பது அதற்கு பெயர் தெய்வச்செயல் தான்… ஆமாம்.. இறைவனுக்கு செய்யும் தொண்டு பிரதிபலன் எதிர்ப்பாராமல் செய்வது. ஆனால் ஒருசிலர் சாமி எனக்கு நீ இதை முடிச்சுக்கொடு உனக்கு உண்டியலில் ஒரு பங்கு போட்டுடறேன். எப்டி.. கடவுளுக்கு லஞ்சம் கொடுத்து தன்னோடு ஒரு பார்ட்னராக சேர்த்துக்கொள்வது…

  நல்லதை செய்… அதையும் அன்றே செய்… அதையும் திரும்ப இத்ற்காக எதையும் எதிர்ப்பார்ப்பில்லாமல் செய்.. என்ற அருமையான அறிவுரையுடன் இந்த பகிர்வு எல்லோருக்குமே பயன்படக்கூடிய எல்லோரும் தெரிந்துக்கொள்ளவேண்டிய… நடக்கவேண்டிய பகிர்வுப்பா.. அன்பு நன்றிகள் பகிர்வுக்கு..

  பதிலளிநீக்கு
 59. அன்பே சிவம் என்பதை, அன்பே DD அண்ணாச்சி என்று அகராதியில் மாற்றம் செய்திட இந்த பேரவை (பேருக்கு அவை அல்ல) ஒரு (மன்னிக்கவும்) முழு மனதாக தீர்மானிக்கிறது.
  இப்படிக்கு DD அண்ணாச்சியின் விழுதுகள்..

  பதிலளிநீக்கு
 60. சுயநலத்திலும் பொதுநலம் இருக்கு...
  நல்ல பகிர்வு...
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 61. நல்லா இருக்கு ..
  வரியைக் கட்டிவிட்டு
  சுயநலமாக இருந்தால் கூட போதும்

  பதிலளிநீக்கு
 62. வணக்கம் சகோ,
  சிந்திக்கத்தூண்டும் பதிவு சிறப்பான இரு
  பாடல் அருமை.

  பதிலளிநீக்கு
 63. ஒரு பிச்சைகாரனுக்கு காசு போடறது கூட சுயநலம் தான் நீங்க சொல்றது சரி தான் அண்ணே. அங்கே குறைந்தபட்சம் புண்ணியமாவது எதிர்பாக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 64. புத்தாண்டு வாழ்த்துக்கள் சார்

  பதிலளிநீக்கு
 65. எப்படியோ, பொதுநலத்தை விரிவாக ஆயும் போது முடிவில் அதில் தொக்கி
  நிற்பது ஓரளவு சுயநலமே!

  பதிலளிநீக்கு
 66. என்னை கேட்டால் இந்த பொது நலம் என்பதே பலருக்குள் இருக்கும் சுய நலத்தின் வெளிப்பாடு தான் என்பேன். பொது நலன் எனும் போர்வையில் கடுகளவு எதையேனும் செய்து விட்டு அதை மலையளவு பெரிதாக்கி விளம்பரப்படுத்துவதே அதனால் தான்.

  தற்புகழ்ச்சிக்கு மயங்காதோர் யார்?

  தன்னலம் இன்றி என்றும் எதுவுமே சாத்தியமில்லை தான்.எனினும் பொது நலனில் அக்கறை கொண்டு வலது கை செய்வதை இடது கைக்கு கூட அறிவிக்காதது போல் செயல் படுவோரும் இங்குண்டு.

  தன்னலம் கலந்த பொது நலமானாலும் அது நான்கு பேருக்கு நன்மை தருமெனில் அதை வரவேற்கலாம்.

  பொது நலன் கலந்த தன்னலத்தின் மூலம் அதை செய்வோருக்கு இன்னும் அதிகமாக சேவை செய்ய வேண்டும் தூண்டல் கிடைக்கும் என்பதையும் நான் கருத்தில் கொள்ளலாம்.

  என்ன தான் சொல்லுங்க தனபாலன் சார்... நம்ம ஆட்கள் வெளி வேடங்களுக்கும் ஜிகினாக்கலின் பளபளப்புக்கும், ஆடம்பரத்துக்கும் ஆங்கிலத்துக்கும், அடிமைப்பட்டுக்கிடக்கும் வரை பொது நலன் எனும் போர்வையின் தன்னலவாசிகள் உருவாகிக்கொண்டு தான் இருப்பார்கள்.

  நாமும் கும்பலில் கோவிந்தா போடாமல் நமக்கு நல்லதெதுவென தோன்றுவதை மட்டும் சார்ந்து முடிவெடுக்காமல் நாட்டு நலனும் சார்ந்து முடிவெடுத்தால்... எல்லாம் நலமே!

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.