🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎புதிய பதிவுகளை பெற ✉தெய்வம் இருப்பது எங்கே...?

வாம்மா... தங்கச்சி ! நல்லா இருக்கியா ?

நலம் அண்ணே... இன்னைக்கி என்ன எழுதப் போறீங்க? நானும் கலந்துக்கிறேனே...

சரிம்மா... நீ வந்தா அமர்க்களம் தான்... நீ ரொம்ப படிச்சவ...


இந்தக் கதை எல்லாம் வேண்டாம்... ரொம்ப நாளைக்கு முன்னாடி உங்களின் மந்திரச் சொல் என்ன...? - பதிவில் கலந்துக்கிட்டேன்... சரி... இப்ப என்ன தலைப்பு...? சொல்லுங்கண்ணே...

இதோ தலைப்பு - தெய்வம் இருப்பது எங்கே...? அதுக்கு முன்னாடி நண்பர்களிடம் ஒரு (சிறு வேண்டுகோள் : நண்பர்களே ! கீழே உள்ள பிளே பட்டனை இருமுறை அழுத்தவும்... பதிவைப் படித்து முடிப்பதற்குள் "Load" ஆகி விடும்...


சரி... உன் சிந்தனை ஆரம்பிக்கட்டும்...

அண்ணே... தாயிற் சிறந்ததொரு கோயிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை, மாதா பிதா குரு தெய்வம் - இவையெல்லாம் உலகிற்கு அளித்தது நம்ம நாடு தாண்ணே... ஒரு தாய் தன் குழந்தைகளுக்காகப் படும் கஷ்டங்களுக்கும், வேதனைகளுக்கும், தியாகங்களுக்கும் உலகில் விலையே கிடையாது; ஈடுகட்ட முடியாது; அந்த நன்றிக் கடனை தீர்க்க முடியாது...

ஆரம்பமே அசத்துறீயே தங்கச்சி... அப்புறம்...?

நான் எங்கேயோ படித்தது... காதலி, காதல் பரிசாகக் கேட்டாள் என்பதற்காகத் தன்னுடைய தாயைக் கொன்று, அவர்களின் இதயத்தைத் தட்டிலே வைத்து காதலிக்கு அளிக்கச் சென்று கொண்டிருந்த ஒரு முட்டாள், கல் தடுக்கித் தடுமாறும் போதுகூட, அந்தத் தாயின் இதயம், "மகனே... பார்த்துச் செல்... அடிப்பட்டு விட்டதா...?" என்று கேட்டதாம்...எப்படி அண்ணே...?

ஓஹோ... அப்புறம்...? இன்னும் இருக்கா...?

மகான்கள், மகரிஷிகள் கால்களில் ஆசி பெறுவதை எல்லாரும் செய்யலாம்... அவருடைய தந்தையும் செய்யலாம்... ஆனால், அந்த மகானை விட உயர்ந்தவள் அவனை ஈன்றெடுத்த தாய். ஆக, அந்தத் தாய் அவருடைய மகனின் காலில் விழக்கூடாது என்பது நியதி...

சரியாச் சொன்னே... யாருக்குத் துன்பம் அளித்தாலும் அது பாவம்... நம்முடைய பெற்றோர்களுக்கு நாம் துன்பமளித்தால் அது மகாபாவம்... எல்லோருக்கும் முதல் தெய்வம் அம்மா தான்...

அம்மா தான் காலம் ஆயிட்டாங்களே அண்ணே...

அதெல்லாம் இல்லே... என் பொண்ணு செய்ற எல்லாச் செயலிலும் நம்ம அம்மாவை நான் தினமும் பார்க்கிறேன்... உன் முகம் கூட அம்மா மாதிரி தானேயிருக்கு...!

ஐ... இந்த ஐஸ் எல்லாம் வேண்டாம்... மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம், தாய்க்குப்பின் தாரம் என்று அடிக்கடி சொல்லுவீங்களே... தெய்வந் தொளாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை - குறள் எண் 55 - தெய்வம் தொழாதவளாய் தன் கணவனையே தொழுது துயிலெழுகின்ற கற்புடையவள் 'பெய்' என்றால் மழையும் பெய்யும்... ஆலம் விழுதுகள் போல் - உறவு ஆயிரம் வந்தும் என்ன...? வேர் என நீ இருந்தாய்... அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்...

அடியேய்... பாடுறதை நிப்பாட்டு... பதிவின் ரூட் மாறுது.... விசயத்திற்கு வா... மாப்ளே எப்படி இருக்கிறார்...? தொழில் எப்படி...?

சரி அண்ணே...! அதைப் பற்றி அடுத்த பதிவில் அலசுவோம்... "கடவுள் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார்... ஆகவே, கடவுள் இல்லாத இடமே இல்லை... எல்லா உயிர்களிலும் கடவுள் இருக்கிறார்.." என்று பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது... அப்புறம் உங்க மாப்ளே நல்லா இருக்கிறார்... உங்களை மாதிரி தான் அவரும்; என்ன பிரச்சனை வந்தாலும், கஷ்டங்கள் வந்தாலும் அவருக்கு செய்யும் தொழிலே தெய்வம்...!"

ஆமா... முயற்சியும் உழைப்பும் இல்லாதவருக்குக் கடவுளின் அருள் கிடைக்காது... சரி... பெரிய கூட்டுக்குடும்பமாயிற்றே... எல்லோரும் சௌக்கியமா...?

...ம்... ம்... எல்லாரும் நல்லா இருக்காங்க... மருத்துவச் செலவு தான் ஜாஸ்தி... எங்க குடும்ப மருத்துவர்-மனித வடிவில் ஒரு தெய்வம்... நாங்க கொடுத்து வச்சவங்க... சுயநலம் இல்லாத, மனித நேயம் உள்ள, சேவை எண்ணம் கொண்ட நல்ல மனிதர்... பெரியவங்க, சின்ன வயசிலே கண்டபடி சாப்பிட்டு, உடற்பயிற்சி செய்யாம, இப்ப கஷ்டப்பற்றாங்க... உண்மையிலே அண்ணே... நம்ம உடம்பை கோயிலாகவும், மனதை தெய்வமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்... அதுவே போதும்... எந்தக் கோயிலுக்கும் போக வேண்டாம். எந்தச் சாமியின் அருளும் தேவையில்லை...

இப்ப சொன்னே பாத்தியா... இது தான் உண்மையான உண்மை...! இதைப் பெரியவங்க மட்டுமல்ல... சிறியவர்களுக்கும் நாம் தான் சின்ன வயதிலிருந்து கற்றுக் கொடுக்க வேண்டும்... அதே மாதிரி உண்மையான ஆன்மீகம் - கடவுளைச் சரியாகப் புரிந்து கொள்ளுதல், வாழ்க்கையில் எப்படி வாழ வேண்டும் என்று தெரிந்து கொள்ளுதல் - இவையெல்லாம் இருபது வயதிலேயே தேவை; அறுபது வயதில் அல்ல. காடு வா வா என்றும் வீடு போ போ என்றும் கூறுகின்ற வயதிலே ஆன்மீகம் தெரிந்து கொள்வதால் நாம் பெரிதாக ஒன்றும் சாதித்து விடப் போவதில்லை... இளமையிலேயே அதைச் சரியாகப் புரிந்து கொண்டால், நமக்கும், நம் குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும், நாம் பிறந்த நாட்டிற்கும், நன்மைகளும், பெருமையும் வரும்படி வாழ்வதற்குப் பேருதவியாக இருக்கும்... சரி நீ சொல்...

பகவத்கீதையின் ஒரு ஸ்லோகத்துக்குக் கொடுக்கும் விளக்கத்தில் ராமகிருஷ்ண பரமஹம்சர் "மதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர் கடவுள்... எந்த மதத்தின் மூலமாக எந்தச் சம்பிரதாயத்தைக் கடைப்பிடித்துக் கடவுளை வழிபட்டாலும் உன் வழிபாடு கடவுளைப் போய் அடைகிறது... ஆகவே, கடவுளுக்கு எந்தவிதமான குறிப்பிட்ட உருவமும் இல்லை... எந்த உருவத்திலும் அவரைக் கட்டுப்படுத்த இயலாது... நீ எந்த உருவத்தைக் கடவுள் என்று நினைத்து வழிபடுகிறாயோ, அந்த உருவ வாயிலாக உனக்கு அருள் புரிவார் என்ற உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும்" என்று கூறுகிறார்.

சரி தங்கச்சி... 'நல்லவர் உள்ளம் இறைவன் வாழும் இல்லம்' என்பது எல்லோருக்கும் தெரியும்... ஆனா எத்தனை பேர் உண்மையான பக்தியுடன் கடவுளை வணங்குகிறோம்...? கற்பூர ஆராதனை காட்டும் ஓரிரு நிமிடங்களில் மட்டுமே கடவுளை நினைக்கிறோம்... அப்போது கூட கடவுளிடம் பேரம் தான்... // எனக்கு இந்த நன்மையைக் கொடுத்தால் நான் உனக்கு அபிஷேகம் செய்கிறேன், உண்டியலில் இந்தத் தொகையைப் போடுகிறேன், இந்த உற்சவம் செய்கிறேன், தங்கரதம் இழுக்கிறேன் // - என்று வியாபாரம் தான் செய்கின்றோம்... எத்தனை பேர் எனக்கு 'நல்ல எண்ணத்தைக் கொடு, நல்வழியைக் காட்டு' என்று வணங்குகிறார்கள்...? ஜோதிடம், ஜாதகம் - இவற்றிற்குப் பயந்து வழிபடும் கூட்டம் ஒருபுறம்...

ஆமாம் அண்ணே... இந்தப் பேரத்திற்கெல்லாம் கடவுள் மயங்க மாட்டார்; கருணை புரியமாட்டார்... பகவத்கீதையில் "எளிதில் கிடைக்கக்கூடிய நீர், இல்லை, பூ, பழம் ஆகியவற்றால் தூய மனதோடு யார் என்னைப் பிரார்த்திக்கிறானோ, அதை நான் அன்போடு ஏற்றுக் கொள்கிறேன்..." என்று கூறப்பட்டுள்ளது... கடவுள் விரும்பும் காணிக்கை நமது கனிவுள்ள இதயம் தான்... அதே போல் 'அச்சத்தின் அடிப்படையிலான கடவுள் வழிபாட்டை விட அன்பில் வழிபடும் கடவுள் வழிபாடே நலம் பயக்கும்...' சரியா அண்ணே...!

அது மட்டுமா தங்கச்சி... சடங்கு சம்பிரதாயங்களுக்கு, நம்முடைய சமூகத்தில் மிக அதிக முக்கியத்துவம் அளிக்கின்றோம்... அதன் மையக் கருத்தான பக்தி, மனித நேயம், மக்களை நல்வழிப்படுத்துதல் ஆகியவற்றை மறந்து விடுகிறோம்...

ஆமாண்ணே... இறைவனுக்குப் படைக்கக்கூடாத மாமிசத்தை, அதிலும் 'சுவையானதா ?' என்று வாயில் கடித்துப் பார்த்துப் படைத்த எச்சில் பட்ட மாமிசத்தை அளித்த கண்ணப்பரை, கடவுள் ஏற்றுக் கொள்ளவில்லையா...? சடங்கு-சம்பிரதாயம் செய்கின்ற நபரின் உள்ளத்தையும், அதிலிருக்கும் எண்ணத்தையும் தான் கடவுள் பார்ப்பார்... 'ஒரு விதவையின் கண்ணீரைத் துடைக்காத, பசியோடு இருப்பவனுக்கு உணவளிக்காத, மதத்தைத் தூக்கியெறியுங்கள்...' என்று விவேகானந்தர் கூறியுள்ளார் அண்ணே...

கோயிலுக்குச் சென்றவுடன் நமது பலபல பிரார்த்தனைகளையும், எண்ணங்களையும் கடவுள் தெரிந்து கொள்வார் என்று நம்புகிறோம்... கோயிலில் பொய் பேசக்கூடாது, தவறு செய்யக்கூடாது என்று கூறுகிறோம்... கோயிலை விட்டு வெளியில் வந்த பிறகு பொய் பேசலாமா...?, தவறு செய்யலாமா...? அவ்வாறு செய்தால், கடவுளுக்குத் தெரியாமல் போய் விடுமா...?

சரி தான் அண்ணே... எந்தக் காலத்திலே நீங்க இருக்கீங்க...? பொய் பேசுவது தற்போது நடைமுறையில் எல்லோராலும் செய்யப்படுகின்ற ஒன்றாகி விட்டது; பொய் பேசுதல் என்பது தவறான செயல், பாவச் செயல் என்பது கூடத் தெரியாமலே அதைச் செய்கிறோம்...

இப்ப என்ன சொல்ல வர்றே...? பிறருக்கு நன்மை உண்டாகும் என்றால் பொய் சொல்லலாமா...?

அப்படி இல்லை அண்ணே... பொய் பேசுவதை மிகமிகக் குறைத்துக் கொள்வேன் என்று உறுதி பூண்டு, அதை நடைமுறை வாழ்க்கையிலே அமல்படுத்தினால் அந்த ஒரு செயல் மட்டுமே பெரியளவில் உயர்த்தி விடும்... உங்கள் மனதைச் சுத்தமாக்கி விடும். உங்கள் வாழ்க்கையை மாற்றி விடும். நம்ம தெய்வப்புலவர் என்ன சொல்கிறார் என்றால் குறள் 294-ல் உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன். பொருள் : உள்ளத்தால் பொய்யாமல் நடந்து வருவானாயின், அவன் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் இருப்பவன் ஆகும் சிறந்த உயர்வைப் பெறுவான். - உலகத்தில் உள்ள எல்லா மனிதர்களின் மனங்களில் உள்ளவர் தான் தெய்வம் ..... எப்படி அண்ணே...!

சூப்பர்...! வழக்கமா நான் தான் குறள் சொல்லுவேன்... ம்... ரொம்பச் சந்தோஷம் !

நான் உங்க தங்கச்சி... உண்மை பேசுவது மட்டுமல்ல... நம்ம கூடவே நண்பனைப் போல் இருந்து கொண்டு, மகாபாரதத்துச் சகுனியைப் போல நம்மைப் பழிவாங்குகின்ற குணம் - கர்வம். இது நம் முன்னேற்றத்தை அடைத்து விடும்... கர்வமுள்ள மனது மற்றவர்களிடம் உள்ள நல்லவற்றை எடுத்துக் கொள்ளாது; திறமைகளுக்கு மதிப்பளிக்காது; மற்றவர்களின் நல்ல செயல்களைப் பாராட்ட நம்மை விடாது; நிறையப் பேருக்குக் கர்வம் அழிவைத் தான் உண்டாக்கும்... 'விட்டுக் கொடுப்பவன் கெட்டுப் போக மாட்டான்...' கர்வம், பேராசை உள்ளவர்கள், எளியோரை - அதாவது ஏழைகள், பாதுகாத்துக் கொள்ள முடியாத கீழ்நிலையிலே உள்ளவரைத் துன்புறுத்துவார்கள்... 'எளியோரை வலியார் வாட்டினால், வலியோரைத் தெய்வம் வாட்டும்'

உண்மை தான் தங்கச்சி... நம்முடைய எப்படிப்பட்ட குற்றங்களும் மன்னிக்கப்படும் என்கிற நம்பிக்கையைத் தருவது தான் இறையன்பு... தவறுகள் செய்யாத மனிதனே கிடையாது... நமது தவறுகளையே நினைத்துக் கொண்டு மேலும் மேலும் தப்பு செய்கிறோம்... மன்னிக்கத் தெரிந்தவன் மனிதன்; மன்னிப்பு கேட்கத் தெரிந்தவன் பெரிய மனிதன் என்று திரைப்படத்தில் கேட்டிருக்கிறோம்... ஆனால் நமது தவற்றை மன்னித்து, மறந்து நம்மை மறுபடியும் ஏற்றுக் கொள்பவன் இறைவன்... அந்த இறைவன் பெற்றோர்களாக, சகோதரர்களாக, சகோதரிகளாக, நண்பர்களாக, குருவாக, யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்...

கமல் மாதிரி புரியாத மாதிரியே சொல்றீங்களே... இன்னொரு வாட்டி நீங்க சொன்னதை மெதுவா படிச்சி புரிஞ்சிக்கிறேன்...! நாம் செய்யும் தவறுகளையே நினைத்துக் கலங்கிக் கொண்டிருக்காமல், அவற்றிலிருந்து விடுபட்டு நம்பிக்கையுடன் புதிய செயல் செய்யப் புறப்பட வழி வகுப்பது தான் இறைநம்பிக்கை...! இந்தக் கருத்து எப்படி அண்ணே...? // தவறு என்பது தவறிச் செய்வது... தப்பு என்பது தெரிந்து செய்வது...! தவறு செய்தவன் திருந்தியாகணும்... தப்பு செய்தவன் வருந்தியாகணும்...! //

சரிம்மா... தாயே ! நல்ல பாட்டு ! (If wealth is lost, nothing is lost ! If health is lost, something is lost ! If character is lost, everything is lost !) செல்வத்தை இழந்து விட்டாயா-எதையும் நீ இழந்துவிடவில்லை ! ஆரோக்கியத்தை இழந்து விட்டாயா - ஆம் சிலதை இழந்துவிட்டாய் ! நல்ல குணங்களை இழந்து விட்டாயா - எல்லாவற்றையும் இழந்துவிட்டாய் ! நல்ல குணங்களை இழந்தவன் தவறான செயல்களைச் செய்து, பாவத்தைத் தான் தேடிக் கொள்கிறான். இறப்பின் பிறகு ஒன்று மட்டும் நம்முடன் கூட வரும். அது தான் நாம் செய்த பாவ புண்ணியங்கள். 'காதற்ற ஊசியும் வாராது காணும் கடை வழிக்கே' - இது பட்டினத்தார் பாட்டு...!

ஆமாம் அண்ணே... நம்முடைய குழந்தைகளுக்கும், அதற்குப் பின் வரும் தலைமுறைகளும் நன்றாக இருக்க வேண்டுமென்றால், நிறைய நல்ல காரியங்கள் செய்ய வேண்டும்... நாம் செய்த புண்ணியங்கள் தான் அவர்களைக் காப்பாற்றும்...

சரியாச் சொன்னே... குழந்தைகளுக்குக் காசு, பணம் சேர்த்து வைக்காவிட்டாலும் ஒழுக்கத்துடன் வளர்த்து, அவர்களின் விருப்பப்படி படிக்க வைத்து, புண்ணியங்களைச் சேர்த்து வைத்தாலே போதும். அப்புறம் முடிவாக 'கடவுள் நமக்குள்ளே தான் இருக்கிறார். நம் மனம் தெளிவாக, சலனமில்லாமல் இருக்கும் போது நமக்குள் இருக்கும் கடவுளை நாம் பார்க்கலாம்...!'

சரி... இது என்ன அண்ணே புதுசா...? DD Mix:(Dindigul Dhanabalan Mix)

இதுவா தங்கச்சி ! உங்கிட்டே பேசும் போது என் மனதில் சில பாடல் வரிகள் தோன்றின. அவற்றைத் தொகுத்து இந்தப் பதிவிற்கு ஏற்றபடி மிக்ஸ் செய்துள்ளேன். அற்புதமான கருத்துக்களை நமது திரையுலகக் கவிஞர்கள் சொல்லி உள்ளார்கள் என்பதைக் கேள். மேலே இப்போது பாடல் லோட் ஆகியிருக்கும். பிளே பட்டனை அழுத்து ! எப்படி இருக்கு நம்ம DD Mix ?"தங்கச்சி வீட்டிலே ஏதோ பிரச்சனையாம். அதை என்னவென்று இங்கே போய் பார்ப்போமா நண்பர்களே...? அதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றி தங்களின் கருத்து என்ன நண்பர்களே...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

 1. கடந்து நம் உள்ளே கரைந்து நிற்கும் கடவுளைப்பற்றிய கருத்தான பகிர்வுக்கு பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 2. ஏராளமான விஷயங்களை ஒரு பதிவில் தந்து விடுகிறீர்கள். பாடல் கோர்ப்புத்தான் சிறப்பு!

  பதிலளிநீக்கு
 3. மெய்சிலிர்க்கச்செய்யும் அற்புதமான இடுகை ஆனால் எத்தனை பேர் இதனை முழுமையாக படித்துவிட்டு பின்னூட்டுவார்கள்..?

  தயவு செய்து எல்லோரும் ஒரு முறை முழுமையாக படித்து விட்டு பின்னூட்டுங்கள் ..!

  பதிலளிநீக்கு
 4. அன்பே சிவம்.உதவி கேட்டு வருபவர்களுக்கு தட்டாமல் உதவிடும் மனித நேயத்தில் கடவுள் இருக்கின்றார்..நீங்களே கடைசி பாட்டில் சொல்லீட்டிங்களே...

  பதிலளிநீக்கு
 5. பதிவின் நீளம் கொஞ்சம் அதிகமாக இருப்பது போல தோன்றுகிறது...
  எனினும், நன்றாக இருக்கிறது... பதிவும், பாட்டும் அருமை!!

  தாயிற் சிறந்த கோயில் இல்லை என்பதே தெர்ய்வத்தின் இடம் என்பது என் கருத்து!

  பதிலளிநீக்கு
 6. கள்ளம் கபடமில்ல
  குழந்தைச் சிரிப்பினில் தான்
  தெய்வத்தைக் காணலாம்
  என்பது என் கருத்து நண்பரே...

  பதிலளிநீக்கு
 7. நல்ல செயல்களிலும் கடவுள் இருக்கின்றார்

  பதிலளிநீக்கு
 8. அன்னையும் பிதாவும் முன்னறி
  தெய்வம்!
  அன்னைதான் முதலில் சொல்லப்பட்ட தெய்வம் ஆகும்
  நல்லபதிவு ! சற்று நீளமே! இரண்டு பதிவுகளாக போட்டிருக்கலாமே!

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 9. @மகேந்திரன் அவர்களுக்கு, தங்களின் கருத்து மிகச் சரியே ! கடவுளை பார்க்கிறோமோ இல்லையோ, என் மகளின் செய்கையில் எனது தெய்வத்தை (அம்மாவை) பார்க்கிறேன் ! நன்றி !

  பதிலளிநீக்கு
 10. நல்ல ஆடியோ கலெக்‌ஷன். பிளாக்கினில் ஆடியோவினை பதிவிடுவது எப்படி... இன்னும் எனக்கு புரியவில்லை.ப்ளீஸ் கொஞ்சம் சொல்லிக்கொடுங்களேன்.

  பதிலளிநீக்கு
 11. அன்பே சிவம்
  மனம் கவர்ந்த அருமையான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 12. நன்றி தனபாலன் சார்.. உங்கள் பதிலைப் படித்தேன். இனி நானும் முயற்சி செய்கிறேன்.

  பதிலளிநீக்கு
 13. தெய்வம் நம்முள்ளே வியாபித்து இருக்கிறான்...நாம் வெளியில் தேடிக்கொண்டு இருக்கிறோம்...அழகாக சொல்லி இருக்கிறீர்கள் நன்றிகள் உமக்கு!

  பதிலளிநீக்கு
 14. உரையாடுவது போல் அறிவுரைகளும் அழகான கருத்துகளும் கூறும் பதிவு, நன்றாக உள்ளது அய்யா.


  படித்துப் பாருங்கள்

  வாழ்க்கைக் கொடுத்தவன்

  பதிலளிநீக்கு
 15. வருங்கால சந்ததிக்கு சேமிப்பு வேண்டாம் ஒழுக்கத்தை கற்பிப்போம் என்று கூறியது சரியே நல்ல பகிர்வு .

  பதிலளிநீக்கு
 16. அன்புள்ள தனபாலன்..

  நீங்கள் ஏற்கெனவே என் வலைப்பதிவிற்கு வந்துள்ளீர்கள். நானும்.
  உண்மையில் இந்தப் பதிவு எனக்கு மிகவும் நிறைவைத்தநத்து எனலாம். மனச் சோர்வையும் உடல் சோர்வையும் தணிப்பதற்கேற்ற பதிவும் பாடல்கள் கலவையும். அருமை. நிச்சயம் மனநிறைவளிக்கும் பதிவு, சமயம் வாய்க்கும்போது அடிக்கடி வருவேன்,

  பதிலளிநீக்கு
 17. அப்பா! என்னே உழைப்பு!! வாழ்த்துக்க‌ள்.
  மிக‌ வித்தியாமாக‌ இருக்கிற‌து உங்க‌ளின் வலை.
  பொறுமையும், அறிவும், எழுத்து வ‌ண்மையும்
  ஒன்றோடு ஒன்றாய் நேர்த்தியான‌
  வண்ண‌த்தோடு மின்னுகிற‌து.
  (பாட‌லின் ஆளுமை. எழுத்தின் ப‌ல‌த்தை அட்க்கிவிடுகிற‌து.
  அங்கொரு க‌ண்ணும், இங்கொரு காதும் ப‌திவை ஒன்றினைந்து
  த‌ரிசிக்க‌ த‌டுக்கிற‌து த‌ன‌பால‌ன்.

  பதிலளிநீக்கு
 18. நான் நாற்பதாவது கருத்துரை இப்பதிவிற்காக பதிவு செய்கிறேன்.. எனக்கு முன்னர் வந்து கருத்து சொன்ன அனைவரின் கருத்தையும் படித்தேன்.. பதிவானது மற்றவர்களின் மனதில் எப்படி பதிவாகியிருக்கிறது இக் கருத்துரைகளின் மூலம் அறியமுடிகிறது..

  இத்தனைக்கும் தங்களின் பதிவில் பொதிந்துள்ள மிகச்சிறந்த கருத்துகளே காரணம்.. தொடர்ந்து எழுதுங்கள்.. தூய்மையாகட்டும் எங்கள் மனது....!!!!

  பகிர்வுக்கு மிக்க நன்றி திரு. தனபாலன் அவர்களே..!

  பதிலளிநீக்கு
 19. அன்பே கடவுள் சார் ,
  பிறர் கஷ்டம் உங்களை நெருடுகிறதா ? கைவிடபட்ட முதியோரை கண்டால் உங்கள் கண்கள் கலங்குகிறதா?
  மற்றோரின் கஷ்டம் நீக்க உத்வுகிறிரா?அட நீங்க தாங்க கடவுள் .
  நட்புடன் ,
  கோவை சக்தி

  பதிலளிநீக்கு
 20. பதிவு நீளம் கருத்து மிக அருமை

  பதிலளிநீக்கு
 21. அருமையான் கருத்து... நல்ல சிந்தனை..

  <<<
  அந்த இறைவன் பெற்றோர்களாக, சகோதரர்களாக, சகோதரிகளாக, நண்பர்களாக, குருவாக, யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.
  >>>

  இத கொஞ்சம் மாத்திருக்கலாமோ???

  பதிலளிநீக்கு
 22. அஹம் பிரம்மாஸ்மி ...அருமையான பதிவு ...

  பதிலளிநீக்கு
 23. நல்லாத்தான் இருக்கு ரொம்ப கஷ்டப்பட்டு எழுதி இருக்கீங்க

  பதிலளிநீக்கு
 24. பாடல் மிக்ஸ் தான் சிறப்பு அன்பரே பதிவின் நீளம் அதிகமோ

  பதிலளிநீக்கு
 25. இந்த வசனங்கள் எனக்காக பியப்பட்டன போலவே உள்ளன..

  இதோ வந்திட்டன் உங்கள பின்பற்ருறன்.....

  பதிலளிநீக்கு
 26. பதிவில் தாங்கள் எடுத்தாண்ட கருத்துக்களும் அவைகளுக்கு தாங்கள் தந்துள்ள விளக்கமும் அருமை. நம் மனம் தெளிவாக சலனமில்லாமல் இருக்கும்போது நமக்குள் இருக்கும் கடவுளை நாம் பார்க்கலாம் என்று முத்தாய்ப்பான கருத்தும் மிக அருமை. DD Mix ல் தந்துள்ள அருமையான காலத்தால் அழிக்கமுடியாத பாடல்களின் தொகுப்பையும் இரசித்தேன்.
  வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 27. நன்றி தனபாலன் சார். என் ப்ளாகில் இப்போது ஈமெயில் விட்ஜெட் சேர்த்திருக்கிறேன்.

  :)))))

  பதிலளிநீக்கு
 28. பகிர்வு மிக அருமை.விளக்கம் சூப்பர்.

  பதிலளிநீக்கு
 29. அன்னையின்றி அகிலம் ஏது..?

  நல்ல பதிவுங்க ஐயா.

  பதிலளிநீக்கு
 30. அடேங்கப்பா - எவ்வளவு விசயங்கள். உங்கள் உழைப்புக்கு தலை வணங்குகிறேன்/.
  பாடல் மிக்சிங் அருமை.

  பதிலளிநீக்கு
 31. அடேங்கப்பா - எவ்வளவு விசயங்கள். உங்கள் உழைப்புக்கு தலை வணங்குகிறேன்/.
  பாடல் மிக்சிங் அருமை.
  http://sivakumarankavithaikal.blogspot.in/2010/09/kadavul-engay.html
  கடவுள் எங்கே என்று நானும் கேட்டிருக்கிறேன் ஒரு காலத்தில்.

  பதிலளிநீக்கு
 32. பல நல்ல விஷயங்களை சுவையாகச் சொன்னதற்கு நன்றி. பாடல் தொகுப்பு அருமை.

  பதிலளிநீக்கு
 33. சகோதரா தங்களின் வலைக்கு இது எனது முதல் வருகை அல்ல. ஏற்கெனவே வந்துள்ளேன். எனது வலையில் தங்களின் கருத்துகளிற்கு மிக நன்றி.
  என்றாலும் மிக ஆசை பிடித்தவர் தாங்கள். இவ்வளவு சங்கதிகளை ஒரு பதிவில் இடுகிறீங்களே. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விடம், விசம் என்பது மறந்து விட்டதா?
  பாடல் இணைப்பும் மிக நன்று.
  ஆக்கமும் மிக நீட்டம். (தலை சுத்துது (சுற்றுகிறது)
  மிக நல்லகருத்து. அது சிறப்பு.
  உங்கள் முயற்சி வளர்க! வாழ்க!
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 34. அன்பு நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு ,
  உங்கள் வருகைக்கும் நல்ல ஆலோசனைக்கும் மற்றும் இனிய வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
  திண்டுக்கல் ஹல்வா மிக்க சுவை.
  அது உடலுக்கு.உங்கள் சிறப்பான சிந்தனையை தூண்டும் கட்டுரைகள் அறிவை வளர்த்து மனதை உறுதிப்படுத்துகின்றன. வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 35. நல்லதொரு பகிர்வு நன்றி எனது தளத்திற்கு தொடர்ந்து வருகை தருகிறீர்கள் மிக்க நன்றி தொடர்ந்து வருகிறேன்

  பதிலளிநீக்கு
 36. மன நிறைவளிக்கும் பதிவு தனபாலன்...

  பதிலளிநீக்கு
 37. பல்வேறுகோணங்களில் ஒரே உண்மையை சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள். பாடல் இணைப்பு ஒரு புதுமையான விடயம்

  பதிலளிநீக்கு
 38. சகோதரரே அருமையான கருத்துக்கள் நிறைந்த பதிவு... இவ்வளவு பெரிய பதிவு எழுதவே தனி பொறுமை வேண்டும்...

  அந்த தாயின் இதயத்தை கொண்டு செல்லும் கதையை படித்தால் செம கோபம் வருது, அது ஏண்ணுதான் தெரியல.......

  பதிலளிநீக்கு
 39. வணக்கம்! உங்களது அறிமுகமே அற்புதம்.

  //எனது சொல்லாலும் செயலாலும் யாரையும் துன்புறுத்தக் கூடாது என்பதற்காக நான் எடுத்துக் கொண்ட வழி - தீதும் நன்றும் பிறர் தர வாரா, வலிகளை ஏற்றுக் கொள், இதுவும் கடந்து போகும்//

  //கற்றது கைமண்யளவு கல்லாதது உலகளவு.//

  //அன்பே சிவம்//

  //இன்னும் நிறைய கேட்க வேண்டும்.//

  இனி தொடர்வேன்.

  அன்புடன்,
  பலராமன்.
  orbekv.blogspot.in

  பதிலளிநீக்கு
 40. சூப்பர் ..எக்கசக்க சிந்தனைகள் ..ஒவ்வொன்றும் மணிமணியாய்..எப்படி சார் உங்களால மட்டும் முடியுது!

  பதிலளிநீக்கு
 41. தெய்வம் இருப்பது எங்கே? என்று உரையாடல் அமைப்பில் நல்ல அலசல். தாயினும் சிறந்த தெய்வம் இல்லை. சிலசமயம் தெய்வம் தன்னை வேறு இடத்திலும் உணர்த்துகிறது.

  பசித்த வயிற்றில் உணவு தெய்வம்
  பாலைவனத்தில் தண்ணீர் தெய்வம்
  கொட்டும் மழையில் கூரை தெய்வம்
  கோடை வெயிலின் நிழலே தெய்வம்
  -- பாடல்: கண்ணதாசன் (படம்: எங்க வீட்டுப் பெண்)

  பதிலளிநீக்கு
 42. எனது முதல் வருகை!
  மிக அழகிய கருத்துகள் கோர்த்த சரம்.
  அடுத்த முறை சற்று சிறு பதிவாகத் தருமாறு
  விண்ணப்பிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 43. என்க்குள்ள இருந்த பல கேள்விகளுக்கு இங்க விடை கிடைச்சது. மிக்க நன்றி ஸார். 'கடவுள் நமக்குள்ளே தான் இருக்கிறார். நம் மனம் தெளிவாக, சலனமில்லாமல் இருக்கும் போது நமக்குள் இருக்கும் கடவுளை நாம் பார்க்கலாம்.' -இந்த வரிகள் எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிச்சது. எவ்வளவு உண்மை.

  பதிலளிநீக்கு
 44. அன்பு திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  அருமையான பதிவு.

  தாயிற் சிறந்ததொரு கோயில் இல்லை.

  அன்பே கடவுள்

  இவை சான்றோர் வாக்கு.

  மனதோடு கோபம் நீ வளர்த்தாலும் பாவம்.
  மெய்யான அன்பே தெய்வீகமாகும்.
  -நம்நாடு திரைப்படத்திலிருந்து.

  பலநூல்படித்து நீயறியும் கல்வி.
  பொதுநலன் கருதி நீவழங்கும் செல்வம்.
  பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம் - இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம். -பாபு திரைப்படத்திலிருந்து

  இப்படி நிறைய அடுக்கிக்கொண்டே போகலாம்.

  மிக்க நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 45. எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் பொருளை பற்றி விளக்க பலர் அவரவர் புரிந்துகொண்ட முறையில் விளக்கமளித் திருப்பதை சுவையாக தொகுத்து வழங்கியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

  இருந்தும் அவரவர் தானே அந்த பொருளை அறிந்துகொண்டு புரிந்துகொள்ளும்போதுதான் உண்மை விளங்கும்

  அதனால்தான் பலதரப்பட்ட மனநிலை கொண்ட மக்களுக்கு என்று பலவிதமான் வழிபாட்டு முறைகளை ஞானிகள் ஏற்படுத்தியுள்ளார்கள்.
  இந்த உண்மையை புரிந்து ஏற்றுகொண்டால்
  மத மோதல்கள் ஒழியும்.
  அந்த நிலைமை விரைவில் ஏற்பட
  இறைவன் அருள் புரியவேண்டும்.

  பதிலளிநீக்கு
 46. தங்களுடைய ஒவ்வொரு பதிவும் நல்லதை நினைத்து,நல்லதைச் செய்து நல்லவராக வாழத் தூண்டுவதுதான்.

  மனத் தூய்மையுடன், தாயையே தெய்வமாகப் போற்றும் கொள்கையை அனைவரும் ஏற்றால், உலகில் அமைதி நிலவும்; மகிழ்ச்சி தவழும் என்பதில் சந்தேகம் இல்லை.

  பதிவுக்குப் பாராட்டு.

  மிக்க நன்றி தனபாலன்.

  பதிலளிநீக்கு
 47. உங்கள் வலைத்தளத்தின் முகப் பக்கத்தை இன்னும் மெருகேற்றலாமே!

  பதிலளிநீக்கு
 48. பதிவு அருமை. ஆனால், நீளம் அதிகம். பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 49. வணக்கம்
  தனபால் (அண்ணா)

  இன்று உங்களின் படைப்பு ஒன்று வலைச்சரம் கதம்பத்தில் 28/11/2012அறிமுகமாகியுள்ளது, நல்ல படைப்பு படைப்புக்கு ஏற்ற படல்கள் அருமையான பதிவு வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 50. புதுமையான செயல்பாடு .எதையும் விட முடியாது . இதை படிப்பதா! அல்லது அதை முதலில் படிப்பதா! மனம் அலைபாய்கிறது .படிப்பது பிறகு அப்புறம் முதலில் கருத்துள்ள இனிய நினைவில் நிற்கக் கூடிய பாடலை கேட்போம் . அப்பப்பா!அத்தனை பாடல்களை எப்படித்தான் திரட்டி முறையாகத் தந்தீர்களோ ! பாராட்டுகள் .உங்கள் வலைத்தளத்தை முழுதும் முறையாக படிக்க ஆண்டு கடந்து விடும் .
  அருமையான ரசனை உங்கள் மனதில் உறைந்துள்ளது எங்கள் மனமும் நிறைந்துள்ளது .நன்றி

  பதிலளிநீக்கு
 51. மிக அருமையான பதிவு... தாயும், செய்யும் தொழிலும், அன்பும் தெய்வம்.... நல்லவர் உள்ளம் தெய்வம் வாழும் ஆலயம்... என்று நிறைய கருத்துக்களை மிக அருமையாக பட்டியலிட்டிருக்கிறீர்கள்... மிக அருமை...

  பதிலளிநீக்கு
 52. வணக்கம்.

  முதலில் இந்தப் பாடலை வெட்டி இணைக்கும் தொழில் நுட்பத்திற்கு எவ்வளவு பொறுமையும் அப்பாடல்கள் குறித்த நினைவும் வேண்டும் என்பதை அறிவேன். ஏனென்றால் எங்கள் பள்ளி ஆண்டுவிழாவிற்கு இதைச் செய்து கொடுக்கும் ஆசிரியர் ஒருவர்தான் அந்தப் பத்துப் பதினைந்து நாளும் மாணவர்களுக்கும் கண்கண்ட தெய்வம்.

  எத்தனை பாடல்கள், தாயைக் குறித்தும் தெய்வம் குறித்தும்.... இதை இணைக்க எவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டிருப்பீர்கள்....

  அது மட்டுமல்லாமல்.....பழமொழி........திருக்குறள்..........அறிஞர் கருத்துகள் என்றெல்லாம் வேறு.......!

  வியக்கிறேன் .......... தொடர்கிறேன் டி டிசார்.

  உங்கள் பழைய பதிவுகள் அனைத்தையும் பார்க்க வேண்டும் என்று தோன்றும் எண்ணம் மீண்டும் வலுப்படுகிறது.
  பார்க்கிறேன்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
 53. அன்புள்ள அய்யா,

  ’தெய்வம் இருப்பது எங்கே?’ - ஒரு நல்ல பதிவு.

  அன்னை - தந்தை - மனைவி - தொழில் - கள்ளமற்ற நல்லவர் உள்ளம் - உள்ளத்தால் பொய்யாது ஒழுகல் - கடவுள் நமக்குள்ளே இருக்கிறார்.

  D.D. Mixing பாடல்கள் அனைத்தும் நன்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அருமையான பாடல்கள். மீண்டும் மீண்டும் கேட்டு இரசிக்கும்படி இருந்தது.

  பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

  நன்றி.

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.