🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? எது சிறந்தது?

நண்பர்களே... இதற்கு முந்தைய பதிவில் எனது பத்தாம் வகுப்புத் தமிழ் மற்றும் கணக்கு வகுப்பு ஆசிரியர் கூறிய அறிந்து கொள்தல், தெரிந்து கொள்தல், புரிந்து கொள்தல் ஆகியவற்றுக்குக் கூறிய விளக்கங்களைப் படித்திருப்பீர்கள்... →முதல் பகுதி← // →இரண்டாம் பகுதி←


நண்பர்களே... இதைப் பற்றி முந்தைய பதிவுகளில் சிலவற்றை மட்டும் அலசினோம். ஒரு காரியத்தை நாம் என்ன தான் அறிந்து, தெரிந்து, புரிந்து செய்தாலும் வெற்றி கிடைக்கவில்லை என வைத்துக் கொள்வோம். என்ன செய்வது? வீட்டில் உள்ள பெரியவர்களிடம் கேட்கலாம். அவர்களுக்கு இந்தக் கால நவீன உலகத்தைப் பற்றித் தெரியாவிட்டாலும், நமக்கு அந்தக் காரியத்தைச் செய்ய நம்பிக்கையையும், ஆர்வத்தையும் தருவார்கள். அது போதுமே? அடுத்து என்ன செய்வது?

நமது திருவள்ளுவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். 'வினைத் தூய்மை, வினைத்திட்பம், வினை செயல்வகை' ஆகிய மூன்று அதிகாரங்களில் உள்ள 30 குறள்களையும் ஒரு முறை முடிந்தால் படியுங்கள். அதில் எனக்குப் பிடித்த குறள் (குறள் எண் : 677)

செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளங் கொளல்.


பொருள் : ஒரு செயலைச் செய்வதற்குரிய செயல்முறையாவது, அதனை முன்பே செய்து முடித்துத் தெளிந்தவனிடம் கேட்டறிந்து, அவைகளைத் நாமும் மேற்கொள்ளுதல் ஆகும்.

ஒன்னே முக்கால் அடியில் முடிந்ததா? நமக்கு அறிந்து, தெரிந்து, புரிந்து கொள்ள முடியவில்லை என்றால், அவையனைத்தும் செய்து, வெற்றி பெற்றவனிடம் கேட்பதில் என்ன தவறு? அதற்கு மனசு தான் வேண்டும்... என்னென்ன?

(1) முதலில் தயக்கம் கூடாது. (2) இவனிடம் போய்க் கேட்பதா?... அதாவது, அவர்களின் வயதைப் பார்ப்பது! (3) இனத்தைப் பார்ப்பது... ஆண், பெண். (4) பாழப் போன ஜாதியைப் பார்ப்பது!... இப்படிப் பலவற்றைச் சொல்லிக் கொண்டே போகலாம். நீங்கள் தெரிந்தோ, தெரியாமலோ பகைத்துக் கொண்ட நண்பர்களிடம் கூடக் கேட்கலாம். இதனால் மறுபடியும் நட்பு மலரும். அதற்கு முன்...

வீட்டில் சின்னக் குழந்தைகளுக்கு என்ன சொல்கிறோம். "பள்ளியில் அவனிடம் சேராதே. இவனிடம் சேராதே" என்று. இதனால் அவர்கள், நன்றாகப் படிக்கும் மாணவர்களையும் இழப்பதுண்டு. படிப்பு மட்டும் அல்ல, நல்ல நண்பர்களையும். நல்லது கேட்டது என்று அவர்களே தீர்மானிக்கக் கற்றுக் கொடுங்கள். சாப்பாடும் அப்படித் தான். நீங்கள் முதலில் தினமும் கீரை வாங்கிச் சமையுங்கள். காய்கறிகளை மாற்றி மாற்றி வாங்கிச் சமையுங்கள். சுருக்கமாக நீங்களும் குழந்தைகளும் விருந்தில் இலைக்கு மேலே உள்ளவற்றைக் கேட்டு வாங்கிச் சாப்பிட வேண்டும். இலைக்குக் கீழே உள்ளவற்றை அளவோடு சாப்பிட வேண்டும்.... சரி... அடுத்து ?

நாம் ஒரு காரியத்தை எப்படியோ வெற்றிகரமாகச் செய்து விட்டோம். அவ்வளவு தானா? "எனக்கு எல்லாம் தெரியும்' என்று சொல்லிக் கொண்டு திரிகிறோம். அதற்குப் பதிலாக அந்தக் காரியத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டால்?

(1) இன்னும் அந்தக் காரியத்தில் வெற்றி பெறலாம். (2) புதுப்புது விசயங்கள் தெரிந்து கொள்ளலாம். (3) நம்மால் மட்டும் தான் முடியும் என்கிற அகந்தை போகும். (4) 'சின்னக் கோடு போட்டோம். அவன் ரோடே போட்டு விட்டானே' என்று மற்றவர்களின் சந்தோசத்தைப் பார்த்து நாமும் சந்தோசப்படலாம். (5) முடிவாகச் சுயநலம் அற்றுப் போகும். மறுபடியும் வீட்டிற்குப் போவோம்.

வீட்டில் சில பெண்கள் குழந்தைகளிடம் 'சிற்றுண்டி' செய்து கொடுக்கும் போது, "அம்மா உனக்காகக் கஷ்டப்பட்டுச் சமையல் செய்திருக்கிறேன். யாருக்கும் கொடுக்காமல் நீ மட்டும் தான் சாப்பிட வேண்டும்" என்று சொல்வார்கள். அவர்களை நான் குறை சொல்லவில்லை. தன் குழந்தை நன்றாகச் சாப்பிட வேண்டும் என்பதற்காகத் தான். அதற்குப் பதிலாக 'சிற்றுண்டியை' கொஞ்சம் அதிகமாக வைத்து விட்டுக் குழந்தைகளிடம், "'சிற்றுண்டி' கொஞ்சம் அதிகமாக வைத்திருக்கிறேன். உன் நண்பர்களிடம் பகிர்ந்து சாப்பிடு" என்று சொல்லலாமே. மற்றக் குழந்தைகளிடம் பகிர்ந்து சாப்பிடுவதற்கு முன்...

வீட்டில் (1 குழந்தைக்கு மேல் உள்ளவர்கள்) ஒரு சின்னச் சாக்லேட் கொண்டு வந்தாலும், ஒரே மாதிரி (நிறம் கூட) கொண்டு வந்து முதலில் பெரிய குழந்தைகளிடம் அவைகளைக் கொடுத்து, சின்னக் குழந்தைகளுக்குக் கொடுக்கச் சொல்லுங்கள். பிற்காலத்தில் பல பிரச்சனைகள் வராது. உதாரணத்திற்காகச் சாக்லேட் என்று சொன்னேன். எல்லாவற்றையும் அவ்வாறே நாம் செய்ய வேண்டும்.

நண்பர்களே... எனது ஆசிரியருக்குக் கடந்த மூன்று பதிவுகளையும் சமர்ப்பிக்கிறேன். அவர் திருக்குறள் போல் சொல்லிக் கொடுத்தார். நான் இராமாயணம் போல் எழுதி விட்டேன். சரி... என்னைப் பொறுத்தவரை ...

அறிந்து, தெரிந்து, புரிந்த விசயங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதே சிறந்தது.

ஒரு விசயமும் இல்லையா?
முதலில் குழந்தைகளிடமும், பிறகு மற்றவர்களிடமும்

உங்கள் அன்பைப் பகிர்ந்து கொள்ளுங்கள் (அம்மாவைப் போல)

உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள் (அப்பாவைப் போல)

யாரிடம் பகிர்ந்து கொள்வது...? மேலும் சிந்திக்க : இங்கே சொடுக்கித் தொடரவும்... அதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றித் தங்களின் கருத்து என்ன...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. நல்ல பதிவு நண்பரே...
    உங்கள் மேன்மையான பகிர்தலுக்கு நன்றி...
    பெற்றோர் என்ற நிலையில் உங்களுக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. பகிர்ந்துகொள்ளுதல் என்பது எவ்வளவு மகத்தான விஷயம்..
    அற்புதமாக சொல்லிவிட்டீர்கள்..
    குழந்தைகளுடன் பழகுவதே ஒரு தனி கலை..
    அவர்களுக்கு பிடித்த வகையில் அவர்களுக்கு பிடித்தவற்றை
    நன்கு பகிர்ந்து கொண்டால் பின்னாளில் நாம் ஏற்றுவிக்கும் எந்த
    பகிர்தலுக்கும் அவர்கள் பின்வர்வார்கள் அன்பது நிதர்சனமான உண்மை..
    அருமை.. அருமை...

    பதிலளிநீக்கு
  3. அன்பின் தனபாலன்

    அருமையான சிந்தனை - அன்பின் அம்மா - அனுபவ அப்பா. அருமை அருமை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  4. அருமை அருமைத் தோழரே!

    பதிலளிநீக்கு
  5. அருமை அருமைத் தோழரே!

    பதிலளிநீக்கு
  6. அறிந்து, தெரிந்து, புரிந்த விசயங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதே சிறந்தது. - Really true..

    பதிலளிநீக்கு
  7. ////இதனால் அவர்கள், நன்றாக படிக்கும் மாணவர்களையும் இழப்பதுண்டு. ////

    இதானால் பல பிரச்சனைகள் தோன்றியிருக்கிறது...

    சொந்த அனுபவமுங்க..

    நன்றி நன்றி..

    பதிலளிநீக்கு
  8. நல்ல பதிவு பெற்றோர்கள் அனைவருமே படித்து தெரிந்து கொள்ளவேண்டிய விஷயம்.

    பதிலளிநீக்கு
  9. கற்க கசடற என்ற குரல் தான் என் கொள்கை... மீள் கல்வி அவசியம்.. நாம் கற்றது எதுவாக இருந்தாலும், அதில் சந்தேகம் எழுப்ப பட்டால் அதை நிவர்த்திக் கொள்ள வேண்டிய தைரியம் வேண்டும்... அது மட்டும் தான் பல நபர்களிடம் இருப்பதில்லை

    பதிலளிநீக்கு
  10. //அறிந்து, தெரிந்து, புரிந்த விசயங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதே சிறந்தது.//
    சிறந்த செயல்தான் செய்திருக்கிறீர்கள் பதிவின் மூலம்.

    பதிலளிநீக்கு
  11. அவர் திருக்குறள் போல் சொல்லிக் கொடுத்தார். நான் இராமாயணம் போல் எழுதி விட்டேன். சரி... என்னைப் பொறுத்தவரை ...

    அறிந்து, தெரிந்து, புரிந்த விசயங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதே சிறந்தது.

    பயனுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  12. சந்தோஷமாக இருக்கிறது பதிவைப்படிக்க! அருமை.

    பதிலளிநீக்கு
  13. நல்ல பதிவு..
    பகிர்ந்து கொள்ளுதலும் கற்றுக் கொள்ளும் தேவையும் அவசியம்தான். எடுத்துரைத்ததற்கு வாழ்த்துகள்.

    இருக்கிற விலை வாசியில் என்னத்த பகிர்கிறது.

    பதிலளிநீக்கு
  14. படிப்போமே!வாழ்வில் கடைபிடிப்போமே
    ஈதல் இசைபடவாழ்தல் என்பதுதான் அந்நாள் தமிழர்களின் வாழ்க்கை முறை .அந்த பண்பு தற்காலத்திலும் கடைபிடிக்கபட்டால் நாமும் நம்சமுதாயமும் நலம்பெறும்,வலம் பெறும்
    வல்லமை பெறும்.
    அது ஒவ்வொருவர் மனதிலிருந்து,குடும்பத்திலிருந்து தொடங்கவேண்டும்
    அதன் இன்பத்தை உணர்ந்தோர் பாக்கியசாலிகள்

    பதிலளிநீக்கு
  15. அருமை! தெரிந்ததை பகிர்வதில் கிடைக்கும் ஆனந்தமே தனி!

    பதிலளிநீக்கு
  16. -குழந்தைகளுக்குள் எந்த வித்தியாசமும் காட்டக் கூடாது என்ற கருத்து எனக்கு மிகவும் பிடித்தது. ஒவ்வொரு பெற்றோரும் படிக்க வேண்டிய அவசியமான விஷயங்கள். அருமை தோழரே...

    பதிலளிநீக்கு
  17. தேவையான பதிவு சரியான முறையில் .தெளிவாக விளக்கப்பட்டுள்ளது . உங்கள் பதிவுகள் வித்தியாசமாகவும், சுவாரஷ்யமாகவும் முக்கியத்துவமனதாகவும் இருப்பது விரும்பத்தக்கது. தொடர்ந்து கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
  18. ஒரு ஆசிரியர் போல் தெளிவாய் விளக்குறீர்கள்... நன்று பாஸ்....

    பதிலளிநீக்கு
  19. நிறைவுப் பகுதி நிறைவான பகுதி சகோ!
    தெள்ளிய நீராக தெரிவித்துள்ளீர்
    கருத்துக்களை! அருமை!

    த ம ஒ 11
    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  20. மிகவும் சிறப்பு வள்ளுவரை மேற்கோள் காட்டி ஒரு உந்து சக்தியாக ... பாராட்டுகள் ...

    பதிலளிநீக்கு
  21. அறிந்தது , புரிந்தது , தெரிந்தது , பகிர்வுக்கு நன்றி ...!

    பதிலளிநீக்கு
  22. மாற்றங்களை வீட்டிலிருந்து ஆரம்பிக்க சொல்றீங்க ரட்டு. இன்றிலிருந்து அந்த நல்ல விஷயத்திஅ ஆரம்பிச்சுடுறேன் சகோ

    பதிலளிநீக்கு
  23. //அறிந்து, தெரிந்து, புரிந்த விசயங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதே சிறந்தது.//....

    பயனுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள்!!!

    பதிலளிநீக்கு
  24. அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?(3) எது சிறந்தது?
    //அறிந்து, தெரிந்து, புரிந்த விசயங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதே சிறந்தது.//

    நீங்கள் அறிந்து, தெரிந்து, புரிந்த விசயங்களை எங்களோடு பகிர்ந்து கொள்கிறீர்கள்...
    என்னைக் கேட்டால், பகிர்ந்தவர்களுக்கு நன்றி
    சொல்வது அதனினும் சிறந்தது....

    நன்றிகள் பல!!

    பதிலளிநீக்கு
  25. சிறப்பான பதிவுகள். ஆசிரியர் எவ்வளவு தூரம் உங்கள் மனதைக் கவர்ந்திருக்கார்னு நினைக்கையிலே ஆச்சரியமா இருக்கிறது. நல்லாசிரியர் விருதும் கிடைச்சிருக்குமே!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.