🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



விதியென்பது அனைவருக்குமே பொதுவானது...!



© அவன் தான் மனிதன் கண்ணதாசன் M.S.விஸ்வநாதன் 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1975 ⟫

விதியின் ரதங்களிலே நாம் விரைந்து பயணம் செய்தால்... மதியும் மயங்குதடா - சிறு மனதும் கலங்குதடா...! கொடுக்க எதுவுமில்லை - என் குழப்பம் முடிந்ததடா...! கணக்கை முடித்து விட்டேன் ஒரு கவலை முடிந்ததடா...! மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று...! இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று...! ஆமா, விதியைப் பத்தி என்ன நினைக்கிறாய்...? ISO உட்படப் பலவற்றிலும் உள்ளதைப் படிக்க மட்டும் தானா...? விதிகளை மதித்துச் செயல்பட்டால் மனிதன் மகிழ்ச்சியாக இருக்கலாம் அல்லவா...?


லாம் தான்... இப்ப யாரு இல்லேங்கிறா...? ISO-வைப் பொருத்தவரை, "சொன்னதைச் செய்வோம்...! செய்வதையே சொல்வோம்...!" அப்படீன்னு தான் இருக்கு...! அதாவது ஒரு நிறுவனம் தன்னுடைய ஒவ்வொரு துறைக்கும் செய்யும் வேலைகளை விளக்கமாக விவரமாகச் சொல்வதோடு மட்டுமில்லாமல், பதிவு செய்து செயல்பட ஆரம்பித்து விடுவார்கள்... அப்படிச் சொன்ன வேலையை அவர்கள் சரியாகச் செய்கிறார்களான்னு ISO சான்றிதல் கொடுக்கிறவங்க சரி பார்ப்பாங்க... குறை இருந்தால் சரி செய்தே ஆக வேண்டும்..! எதையும் சொல்லித் தப்பிக்க முடியாது...! அதில்லாம அந்த நிறுவனம் கொடுத்திருக்கிற தரக் கொள்கை (QUALITY POLICY) மற்றும் வேலை முறைகளை (Work Instructions / Procedures) எவ்வளவு தூரம் கடைப் பிடிக்கிறாங்கன்னு பார்ப்பாங்க... குறள் போல ISO-வின் பல கோட்பாடுகள் வாழ்விலும் பயன்படும்-படுகிறது... ஆமா, நீ எந்த விதியை சொல்கிறாய்...?

விதி என்றால் விதி தான்... நாம் அடிக்கடி நொந்து கொள்வதற்குக் காரணமாய் இருக்கின்றதே.... அந்த விதி தான்...!

சாலையில் நடக்கும் போது இடது புறமாகச் செல்ல வேண்டும் என்பது விதி... "தலைக்கவசம் உயிர்க்கவசம்" என்று அரசாங்கம் சொல்வது(ம்) விதி...! கடையில் பொருட்களை வாங்கும் போது சரியான எடையில் வாங்க வேண்டும் என்பதெல்லாம் கூடத் தான் விதி... அரசாங்கம், நாட்டில் சட்டம், ஒழுங்கு சரியாக நடக்க வேண்டும் என்பதற்காகப் பல விதிகளை வகுத்திருக்கிறது... அவையும் விதி தான்... எதுவுமே வாழ்க்கையில் தீடிரென நடந்து விட்டால், அனைத்தும் தலைவிதி என்று அதனைச் சொல்லுகிறோம்... அதுவும் விதி தான்... நீ எந்த விதியைச் சொல்லுகிறாய்...?

எந்த விதி என்றாலும் அவதி தான்...!

இப்படி நொந்து போய்க் கேட்ட கேள்விக்கு, பதில் சொல்கிறேனே அதுவும் விதி தான்...! விதிகள் எங்கே உடைந்து போகிறதென்றால், அடுத்தவரின் அத்து மீறலை நினைக்கும் போதே...! ஒரு பதிவில் சொன்னது போல், பத்துக்கு பத்து வெண்மையான சுவரில் கரும்புள்ளி ஆராயும் மகான்கள் இருக்கிறார்கள்...! விதிகள்யற்று வாழ்வது காட்டுமிராண்டி வாழ்க்கையாக ஆகிப் போகும்... ஆதிமனிதன் சமூக மனிதனாக, கூட்டமாக வாழத் தொடங்கியவுடன் விதிகள் உருவாகின... மனித பண்பாடும் நாகரீகமும் நாட்டில் தழைக்க வேண்டுமானால் சில கட்டுப்பாடுகள் உருவாக்க வேண்டும்... சில விதிகள் வகுக்கப்பட வேண்டும்... இயற்கை கூட சில விதிகளுக்கு உட்பட்டுத் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது...

சரி சரி... சூரியன் உதிப்பதும், நிலவு தோன்றுவதும், காலங்கள் மாறுவதும், மழை வருவதும், வெயில் அடிப்பதும் என எல்லாமே விதிகளுக்கு உட்பட்டுத் தான் நடக்கிறது... விதிகள் நம்மால் வகுக்கப்படுகிறது... நாம் வகுத்த விதிகளுக்கு வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் அடங்கி நடந்தால் தான், வாழ்க்கை சிறப்பாக அமையும்... இப்போ கேள்வி என்னவென்றால், விதிகளை வகுக்கும் தலைமைத் தகுதி யாருக்குண்டு...?

விதிகளுக்கு அடங்கி நடப்பவருக்கே விதிகளை உருவாக்கும் தலைமைத் தகுதியும் கிடைக்கும்...! இதற்குக் காந்திய நிகழ்ச்சி ஒன்றைச் சொல்கிறேன்...

சட்ட மறுப்புப் போராட்டம் காந்தியடிகள் ஈடுபட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்... வெளியில் வெள்ளையரின் அநியாயச் சட்டங்களை எதிர்த்துப் போராட்டங்களை நடத்தினாலும், சிறைக்கு வந்ததும், சிறை விதிகளை ஒழுங்காகக் கடைப்பிடித்து நடக்க வேண்டும் என்பதில், எப்போதும் காந்திஜி குறியாக இருந்தார்... பல மாதங்கள் சிறையிலிருந்தார் மகாத்மா... அவரைக் கண்டு பேச கஸ்தூரிபா காந்தி அவர்கள் சிறைக்கு வந்தார்... பல மாதங்களாகக் கணவரைச் சந்திக்கவில்லை... சந்தித்தவுடன் பேசுவதற்கு மணிக்கணக்கில் நேரம் தேவைப்படும்... ஆனால் சிறைச்சாலை விதிப்படி 15 நிமிடங்களே கஸ்தூரிபா காந்தி அவர்களுக்கு வழங்கப்பட்டது... சந்தித்து நேரத்தில் அரசியல் பேசக்கூடாது... ஆசிரம விசயங்களையும், குடும்ப விசயங்களையும் பேசிக் கொள்ளலாம்... சிறைக் காவலர்கள் கஸ்தூரிபா காந்தியை அண்ணலின் சிறை அறைக்கு முன் நிறுத்தி விட்டுச் சென்று விட்டனர்... சிறையின் அப்பக்கம் அண்ணல்... இப்பக்கம் அன்னை...

பேசுவதற்கு நிறைய விசயங்கள்... அன்னை பேசத் தொடங்கினார்... அவர் பேசத் தொடங்கியதும் காந்திஜி அவர்கள், "உஷ்" என்று கூறி, கை விரல்கள் கொண்டு தன் வாயை மூடி, பேச வேண்டாம் என்பது போல் சைகை காட்டினார்... அன்னை பேசவில்லை... 1 நிமிடம்... 2 நிமிடம்...3 நிமிடம் என 15 நிமிடங்களும் மௌனமாகக் கடந்தன... சிறைக் காவலர்கள் வந்து நின்றனர்...

"15 நிமிடங்கள் ஆயிற்று; பேசியது போதும்; கிளம்புங்கள்" என்றனர்... "இப்படிப்பட்ட சந்திப்புகளும் பேச்சுகளும் சிறைக் காவலர்கள் முன்னிலையிலேயே நடக்க வேண்டும் என்பது விதி... நீங்கள் எங்களைத் தனிமையில் விட்டுவிட்டுச் சென்று விட்டீர்கள்... அருகில் நீங்கள் இல்லாததால், நாங்கள் பேசவேயில்லை..." என்றார் காந்திஜி... "ஐயா இந்த விதி உங்களுக்குப் பொருந்தாது... அதனால் தான் தனிமையில் பேசட்டும் என்று நாங்கள் சென்று விட்டோம்" என்றனர் சிறைக் காவலர்கள்... "விதியென்பது அனைவருக்குமே பொதுவானது...!" என்றார் மகாத்மா... பிறகு ஒரு நாள் 15 நிமிடங்கள் வழங்கப்பட்டு, சிறைக் காவலர்கள் முன்னிலையிலேயே பேச்சுவார்த்தை நடந்தது...!

பார்த்தாயா அண்ணலின் விதி மதிக்கும் பண்பை...! யார் விதிகளை மதிக்கிறார்களோ, அவர்களே விதிகளை உருவாக்கும் தலைமைத் தகுதி படைத்த தலைவர்கள் ஆவார்கள்...! முக்கியமா விதி என்பது யாருக்காகவும் மாற்றுவது அல்ல... மாற்றினால் அது சதி...!

முடிவாகக் குறளை கையிலெடுத்துச் சிந்திப்பவர்க்கு : அறத்துப்பாலின் கடைசி (38) ஊழ் எனும் அதிகாரத்தில் உள்ள முதல் குறளின் (371) பொருளுக்கு "தலைவிதியே" என்று உட்கார்ந்து கொள்பவருக்கு, ஊழ் என்ற சொல்லினை பயன்படுத்திய, வேறொரு குறள் ஒரு மருந்து :-
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழா துஞற்று பவர் (620)




© நாடோடி கண்ணதாசன் M.S.விஸ்வநாதன் 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1966 ⟫

பொருளேதுமின்றிக் கருவாக வைத்து உருவாக்கி விட்டுவிட்டான்... அறிவென்ற ஒன்றை மரியாதை இன்றி இடம் மாற்றி வைத்து விட்டான்...2 கடவுள் செய்த பாவம்... இங்குக் காணும் துன்பம் யாவும் - என்ன மனமோ...? என்ன குணமோ...? - இந்த மனிதன் கொண்ட கோலம்... மனிதன் கொண்ட கோலம்... கொடுப்பவன் தானே மேல் ஜாதி... கொடுக்காதவனே கீழ் ஜாதி...2 படைத்தவன் பேரால் ஜாதி வைத்தான் - பாழாய்ப் போன இந்தப் பூமியிலே...2 நடப்பது யாவும் விதிப்படி என்றால் வேதனை எப்படித் தீரும்...?2 உடைப்பதை உடைத்து வளர்ப்பதை வளர்த்தால்... உலகம் உருப்படியாகும்... ம்... உலகம் உருப்படியாகும்...!

தங்களின் கருத்து என்ன நண்பர்களே...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. வணக்கம்
    அண்ணா.

    யாவரும் சிந்திக்கும் வகையில் அருமையான கதை சொல்லி பதிவை அசத்தி விட்டீர்கள் வாழ்த்துக்கள் அண்ணா த.ம 2

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. வழக்கம்போல் தங்கள் பாணியில் அருமையாகப் பகிர்ந்துள்ளீர்கள். விதியைப் பற்றிய ஒரு விவாதத்தை முன்வைத்துள்ளீர்கள். அனைத்துமே நியாயமாகப்படுகிறது. காந்திஜியின் மனைவி அவரைச் சந்திக்கச் சிறைக்குச் சென்றபோது நடந்த நிகழ்வு இதுவரை நான் படித்ததில்லை. இப்பதிவு மூலமாகத் தெரிந்துகொள்ளவேண்டுமென்றிருந்தது போலிலுள்ளது. அதுதான் விதி.

    பதிலளிநீக்கு
  3. காந்தியார் சிறை அனுபவம் அருமை...
    வகுப்பறையில் பகிரலாம்
    தம +

    பதிலளிநீக்கு
  4. சமீப கால நிகழ்வுகளைப் பார்த்தால் இளைஞர்களைவிட முதியவர்களுக்குத் தான் விதி சதியாகத் தெரிகின்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்திற்கு ஒத்து போகிறேன்......
      முதியவர் என்ற காரணத்தாலே பல சலுகைகள் எதிர்பார்க்கப்படுகின்றன!!!

      நீக்கு
  5. சரிதான், விதியை மதிக்க வேண்டும்.
    காந்திஜி பற்றிய அனுபவப் பகிர்விற்கு நன்றி ..

    பதிலளிநீக்கு
  6. விதியை மதித்ததால் தான் அவர் மகாத்மா என அழைக்கப்பட்டார். நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  7. விதியைப் பற்றிய அருமையான பதிவு டிடி சகோ. விதிப்படித்தான் நடக்கும். விதியை மதியால் வெல்லலாம் என்ற பழைய நினைப்புகளோடு வந்தால் இங்கே விதிக்கு வேறொரு டெஃபனிஷன் கொடுத்து சிறப்பித்துள்ளீர்கள். அருமை :)

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் தனபால் சார், நீண்ட நாட்கள் கழித்து தொடர்பு. நேரமில்லாமைதான் காரணம். அருமையான பதிவு இது. ஆனால் காந்தி காலத்து கருத்துக்கள் இன்று எடுபடும் என்றா நினைகிறீர்கள்? காந்திய பெயரை சொல்லி பிழைத்தவர்களே இன்று தடம் மாறி நிற்கிறார்களே அதுக்காக சொன்னேன். தவறென்றால் மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
  9. விதி பற்றிய இந்தப்பதிவும், விதியை மதித்து நடந்த மஹாத்மா காந்தி
    அவர்கள் பற்றிய செய்திகளும் அருமை. படத்தேர்வுகள் இரண்டும் மிகப் பொருத்தம். எனக்கும் ஏதோ நல்லதொரு தலைவிதி இருந்ததால் இதை இங்கு வந்து படிக்க நேர்ந்தது. மிக்க மகிழ்ச்சி. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  10. அனைவருக்கும் பொதுவானது தான் விதி..
    காந்திஜி பற்றிய தகவல் இன்று தான் தங்கள் பகிர்வின் மூலம் தெரிந்துகொண்டேன்.

    பதிலளிநீக்கு
  11. விதியை மதிப்பதே மதி .அருமையான பதிவு

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் டிடி சார்,
    தகவல்கள் அனைத்தும் அருமை, கதையும் கூட,
    தெரியாத தகவல்கள் தெரிந்துக்கொண்டோம்.
    விதி எந்த விதி,,,,,,,,,,,,
    எல்லாம் பொது தான்
    வாழ்த்துக்கள், நன்றி.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் ,வித்தியாசமான கோணத்தில் சிந்திக்கிறீர்கள் எப்படியாயினும் விதியை மதிப்பதே மதி காந்திஜி பற்றிய செய்தி புதுசு
    மொத்தத்தில் அருமையான பகிர்வு--சரஸ்வதிராசேந்திரன்

    பதிலளிநீக்கு
  14. ஆனால் இப்போதெல்லாம் மீறப்படுவதற்கென்றே விதிகள் இருக்கின்றன, அதுவுமில்லாமல் அதை நியாயப் படுத்துவதும் வழக்கமாகி விட்டது. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  15. விதியை மதித்து நடத்தல்....எப்போதும் போல் நன்றாக இருக்கிறது சகோ.
    காந்திஜி பற்றி மேலும் அறியத்தந்தீர்கள்...நன்றி
    தம 13

    பதிலளிநீக்கு
  16. வாகன விபத்தில் உயிர் பிழைக்கக் கவசம் அணியலாம்.ஆனால் மெட்ரொ பாலத்திலிருந்து இரும்பு உத்தரம் விழுந்து இறப்பது விதிதானே!”விதிக்கு மனிதன் உலகிலே விளையாட்டுப் பொம்மை”

    பதிலளிநீக்கு
  17. விதி என்பது அனைவருக்கும் பொதுவானது
    மிக அருமையான பதிவு.

    பதிலளிநீக்கு
  18. சித்தரே அண்ணலின் அருமையைச் சொல்லி விதிபற்றிவிளக்கிய பாங்கு மிகவும் போற்றத் தக்கது!

    பதிலளிநீக்கு
  19. விதியின் படி நடந்தால் விதிப்படி நடப்பதை நாம் கட்டுக்குள் வைக்கலாம் என்பதை உங்கள் பாணியில் சொல்லியிருக்கிறீர்கள்.

    நன்று.

    God Bless You

    பதிலளிநீக்கு
  20. எல்லாம்
    ஊழ் (விதி) வினைப் பயன் என்பது
    பொய் என்பதால் தானே
    ஊழை (விதியை) அறிவால் (மதியால்) வெல்லாம் என்றனர்,
    ஆயினும்
    அண்ணல் காந்தி வெளிப்படுத்தியது
    ஒழுக்கமே!
    சிறந்த வழிகாட்டல்
    தொடருங்கள்!

    பதிலளிநீக்கு
  21. உண்மையில் விதி எல்லோராலும் மதிக்கப் படுகிறதா ? என்பதை கனிவுடன் சிந்திக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம் விதி என்பது ஒரு சிலருக்கு மாத்திரம் கொட்டுகிறது என்றல் அந்த விதியில் பிழை என்று பொருளாகும் விதி விலக்கு உண்டு என்றாலும் பிழையானதே . ஒரு சிலருக்கு மட்டும் எப்படி விதி வந்து அமர்ந்து கொள்ளும் ? வினா எழுகிறது கடவுட் கொள்கையும் அத்தகையதே உலகில் மற்றம் என்பதே மாறாதது எல்லாமே தற்செயல்

    பதிலளிநீக்கு
  22. விதிகளை மதித்து நடக்க வேண்டும்! அப்படி நடப்போர் விதிகளை உருவாக்கலாம் என்ற சிறந்த கருத்தை சிறப்பாக சொல்லிச்சென்றது பதிவு.காந்தியடிகள் பற்றிய குட்டிக் கதைச் சிறப்பு! சிறந்த பகிர்வு! நன்றி!

    பதிலளிநீக்கு
  23. விதிக்கும் விதி விதித்த வித்தகப் பதிவு!..

    வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
  24. அருமையான விளக்கம் காந்தியின் செயல் புதுமையானது இன்றுதான் கேள்விப்படுகின்றேன்.

    பதிலளிநீக்கு
  25. அருமை நண்பரே காந்திஜியின் சிறைச்சம்பவம் முதல் முறையாக கேள்விப்படுகிறேன் வழக்கமான குறளோடு பாடல் வரிகளும் சிறப்ப்பே....
    வாழ்த்துகள் தகுதி உள்ளவனே விதியை வகுக்க முடியும் அருமை இன்றைய அரடியல்வாதிகள் யாருமே இதற்க்கு தகுதி இல்லைதான் என்ன செய்வது.

    பதிலளிநீக்கு
  26. விதி வலியது மதியே அதற்கு ஈடானது அட அந்த நிலாவை சொல்லலீங்க விதிக்கு சரி எடை போடணும் என்டால் மதியால் போடு நீதிதேவனும் உன்னோடு.... அருமையாகச் சொன்னீர்கள் திண்டுக்கல் தனபாலன்

    பதிலளிநீக்கு
  27. வேலைப் பளு காரணமாக உடனடியாக வரமுடியவில்லை. கருத்தான பாடல் வரிகளும் கவனத்தை ஈர்க்கும் காந்தி கதையும் அருமை.
    த ம 19

    பதிலளிநீக்கு
  28. விதி எல்லாம் சதியாகத்தான் மாறிக் கொண்டு இருக்கிறது. அய்யா....

    பதிலளிநீக்கு
  29. நம்பவே முடியலே ,அதனால்தான் அவர் மகாத்மாவா :)

    பதிலளிநீக்கு
  30. காந்தியின் அனுபவ கதையை பகிர்ந்து விதியின் முக்கியத்துவத்தை பாடல்கள் உவமை சொல்லியிருக்கிங்க... அருமை

    பதிலளிநீக்கு
  31. இதில் இருந்து கொஞ்சமாவது கற்றுக் கொள்ளவேண்டும். விதிகளை மீறுவது நமக்கு அல்வா சாப்பிடுவது போல

    பதிலளிநீக்கு
  32. விதி பற்றிய பதிவு அருமை ஐயா
    ஆனாலும் நமக்காகத்தான் விதிகள் என்பதை சில நேரம் மறந்துவிடுகிறோம்
    விதிக்காகத்தான் நாம் என்று நிலைமை மாறும்போது
    பிரச்சனைகள் தோன்றத்தொடங்குகின்றன
    நன்றி ஐயா
    தம +1

    பதிலளிநீக்கு
  33. சிந்திக்க வைத்தது. rulea and destiny கலந்து புதியதோர் விதி செய்தீர்...அருமை...

    பதிலளிநீக்கு
  34. விதிகள் இருப்பதே மீறுவதற்காக என்றெல்லாம் ஜோக் அடிப்பவர்கள் நாம்!
    முதியவர்கள் மட்டும் விதியில் சலுகை கேட்பதில்லை; பெண்களும் கூடத்தான். எல்லாவற்றிலும் சமஉரிமை கேட்பவர்கள், வரிசையில் நிற்கும்போது பெண்களுக்குத் தனி வரிசை கிடையாதா என்பார்கள்! விசித்திரமான மனிதர்கள்!
    விதியை மீறினால் சதி - அசத்தலான வாக்கியம்.

    பதிலளிநீக்கு
  35. சிந்திக்க வைக்கும் சிறப்பான பதிவு

    பதிலளிநீக்கு
  36. விதி என்னும் சொல்லுக்கு இரு பொருள் .

    விதிக்கப்பட்ட வினைப்பயன்., தலை விதி.
    சட்ட திட்டம் சொல்வது.

    நான் இந்த நிகழ்வை இன்னொரு கோணத்தில் பார்க்கிறேன்.



    கஸ்துரிபா காந்தியின் மன நிலை எப்படி இருந்திருக்கும் ?

    பதிலளிநீக்கு
  37. அருமை. " மனிதன் நினைப்பதுண்டு " பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். வழிகாட்டும் பதிவு.

    பதிலளிநீக்கு
  38. விதி பற்றிய நல்ல அலசல் டிடி
    பாடல்கள், குறள்களை இணைப்பதில்
    உங்களிற்கு நிகர் நீங்கள் தான்.

    பதிலளிநீக்கு
  39. திரு.காந்தி அவர்களின் வாழ்க்கை நிகழ்வு ஒரு நல்ல தகவல். சாலை விதிகள்! போக்குவரத்து என்பது பலரும் பங்கெடுக்கும் இடம். அங்கு ஒரு ஒழுங்குமுறை இல்லாதவிடத்து பாதிப்புக்கள் அதிகம். ஒருவரின் மீறல் மற்றொருவரையும் பாதிக்கிறது.
    வாழ்க்கைக்கான விதிகள் தேவையை நோக்கி உடைக்கப்பட்டு விடுகின்றன. சில சமூக விதிகள் உடைக்கபடவேண்டி இருக்கிறது, மாற்றங்களுக்காக.//உடைப்பதை உடைத்து வளர்ப்பதை வளர்த்தால் உலகம் உருப்படியாகும்.

    பதிலளிநீக்கு
  40. அன்புடையீர்! வணக்கம்!
    அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (23/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
    இணைப்பு: http://gopu1949.blogspot.in/

    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    FRANCE

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.