🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎புதிய பதிவுகளை பெற ✉வாங்க பழகலாம்...! ISO - Part 2

வணக்கம் நண்பர்களே... முந்தைய அட... அவ்வளவு தானா...! ISO - PART 1 பதிவில் ISO பெறும் நிறுவனங்களில், பல பேருக்குக் கொடுக்கப்படும் தகவல்களைக் கொடுத்து இருந்தேன்... (படிக்காதவர்கள் பதிவின் மீது சொடுக்கிப் படிக்கவும்) இந்தப் பதிவைச் சிலர் "உறவுகள் மேம்பட" என்று RAMRAJ நிறுவனத்தின் மூலம் படித்திருக்கலாம்...


வீட்டிலோ, அலுவலகத்திலோ எந்த இடத்திலும் பிரச்சனை என்றால், அதனின் தாக்கம் செல்லும் இடத்திலெல்லாம் எதிரொலிக்கும்... அதனைத் தவிர்க்க வைக்கும் சில கருத்துக்கள் கீழே... முதல் பதிவைப் போன்றே இதையும் (xerox எடுத்து) தொழிலாளர்களுக்கும், மற்றும் சில பேருக்கும் கொடுப்பதுண்டு அல்லது இந்தக் கருத்துக்களை விளக்குவதுண்டு... இனி...

குடும்பத்திலும் சரி, அலுவலகத்திலும் சரி, மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும்... ஏற்பட்ட விரிசல்கள் மேலும் பெரிதாகாமல் இருக்கவும்... உறவுகள் மேம்பட :

01) பேச்சிலும், நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதைத் தவிர்த்து அடக்கத்தையும், பண்பையும் காட்டுங்கள். (121)

02) பிரச்சனைகள் ஏற்படும் போது, அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல், நீங்களே பேச்சைத் துவக்க முன் வாருங்கள். யாரையும் ஒப்பிடாதீர்கள். (685)

03) எல்லோரிடத்திலும் எல்லா விசயங்களையும், அவர்களுக்குச் சம்பந்தம் உண்டோ, இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். (649)

04) புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரமில்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள். (92)

05) கேள்விப்படுகிற எல்லா விசயங்களையும் நம்பி விடாதீர்கள். (423)

06) அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள். (294)

07) அற்ப விசயங்களைப் பெரிதுபடுத்தாதீர்கள். (336)

08) மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்துக் கர்வப்படாதீர்கள். (Superiority Complex) அதே போல் தயக்கத்துடன், பயத்துடன் பேசாமலும் இருக்காதீர்கள். (Inferiority Complex) (124)

09) மற்றவர் கருத்துக்களை, செயல்களை, நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். (Misunderstanding) (99)

10) உண்மை எது, பொய் எது என்று விசாரிக்காமல், இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும், அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள். உங்களை நோக்கி அது ஒரு நாள் திரும்பும்... (Carrying Tales)

11) நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று வாதாடாதீர்கள். (Adamant Argument) நீங்கள் 'முடியவே முடியாது' என்று நினைத்ததை உலகில் ஒருவன் செய்து கொண்டிருப்பான்... (140)

12) உங்கள் கருத்துக்களில் உடும்புப் பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள். பிடிவாதத்தைக் கை விடுங்கள். (Flexibility) (523)

13) அளவுக்கதிகமாய், தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள். (Over Expectation) திருப்தி என்பது எல்லாவற்றிலும் மிகவும் முக்கியம். (362)

14) அர்த்தமில்லாமலும், பின்விளைவு அறியாமலும் பேசிக் கொண்டே இருப்பதை விடுங்கள். (Loose Talks) நேரம் தான் விரயம். (196)

15) எந்த விசயத்தையும் பிரச்சனையையும் நாசூக்காகக் கையாளுங்கள். (Diplomacy) விட்டுக்கொடுங்கள். (Compromise) (318)

16) சில நேரங்களில் சில சங்கடங்களைச் சகித்துத்தான் ஆக வேண்டும் என்பதை மனதார உணருங்கள். (Tolerance) (156)

17) நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள். (Ego) வல்லவனுக்கு வல்லவன் இருக்கிறான். (268)

18) மற்றவர்களுக்குரிய மரியாதை காட்டவும், இனிய, இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள். (Courtesy) (163)

என்ன நண்பர்களே... ஒவ்வொரு கருத்துக்கும் முடிவில் () எண்கள் உள்ளதே என்று நினைக்கிறீர்களா...? உங்களுக்கே தெரியும்... அது திருக்குறள் எண்கள்... ஒவ்வொரு கருத்துக்கும் பல குறள்கள் உள்ளன... எனக்கு விருப்பப்பட்டதைக் கொடுத்துள்ளேன்... குறள்களின் விளக்கத்தை நீங்களே படித்துக் கொள்ளுங்களேன்... இவையெல்லாம் ISO xerox தாளில் கொடுப்பதில்லை... இந்தப் பதிவிற்காக இணைத்தது...

"ஹலோ... உன் மனசாட்சி... கருத்து எண் 10 - குறள் எங்கே...?"

மறந்துட்டேன்... மறதி கூட சிறந்த மருந்து தானே... ஒரு சொந்த அனுபவம் : 25 வருடத்திற்கு முன் வேலைக்குச் சென்ற புதிதில், கருத்து எண் 10 போலத் தான் எனது மேலாளர்... அதுவும் அவருடன் பலரும் சேர்ந்து கொண்டால் அவ்வளவு தான்... எதற்கெடுத்தாலும் ஒரு திருக்குறளைச் சொல்லி, மற்றவர்களையும் ஒப்பிட்டு, ஒழுங்கா படித்திருக்க வேண்டுமென்பார்... மனதில் அப்போது பாரதியார் வரிகளும், கண்ணதாசன் வரிகளும், முக்கியமாக எனது பத்தாம் வகுப்பு ஆசிரியர் வந்து போவார்... (அறிந்ததா ? தெரிந்ததா ? புரிந்ததா ? பதிவில் சொல்லி இருந்தேன்) சில மாதங்கள் கழித்து, சரியான ஒரு நேரத்தில் ஒரு நாள் நானும் வேண்டுமென்றே "திருக்குறள் எண் 186 அர்த்தம் தெரியலை சார்... கொஞ்சம் சொல்லுங்களேன்..." (குறளின் விவரம் அறிய மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது? என்னும் பதிவை, படிக்காதவர்கள் தொடரலாம்...)

அதன் பிறகு மேலாளரின் போக்கில் மாற்றம்... விடுவாரா... அவரால் ஐந்து டிபார்ட்மென்ட் மாற்றம்... (1. Testing Lab, 2. Research & Development, 3. Statistical Quality Control, 4. Production Planning & Control, 5. Waste Control) நிறையக் கற்றுக் கொள்ள முடிந்தது... அதனால், பிறகு இந்த ஐந்து டிபார்ட்மென்ட்டிற்கும் Technical Services Manager ஆனது அவரால் தான்... அதற்கு நன்றி சொல்வதா...? இல்லை அன்று ஆரம்பித்த திருக்குறள் ஆர்வம், பல ஆண்டுகள் கழித்தும் இன்று பதிவு வரை தொடர்வதற்கு நன்றி சொல்வதா...?

பள்ளிக்குச் சென்ற வயதில்... தந்தையிடம் "ஒருத்தன் வாத்தியார் கிட்டே என்னைப் பற்றி... இல்லாததையும், பொல்லாததையும் சொல்றான்... கேட்டா அடிக்க வர்றான்பா..." என்றால், என் தந்தையிடமிருந்து வரும் முதல் கேள்வி, "நீ என்ன செய்தாய்...?" பிறகு "அவன் தான் உனக்கு நல்ல நண்பனாக வருவான் பாரு... அவனுடன் நல்லபடியா பழகு... அவனுக்குப் பிடிக்கலையா ஒதுங்கி விடு" என்பார்... அது போல் வேலை செய்யும் இடத்தில் நடக்குமா...? மேலாளரை அறிந்து, தெரிந்து, புரிந்து கொள்ளாமல் இருந்தது என் தவறு... எனது மேலாளரும் எனக்கு மிகச் சிறந்த ஆசிரியரே... அவரவர் வாழ்வின் சூழ்நிலைக்கேற்ப... மேலே உள்ள 18 கருத்துக்களை விட நிறைய இருக்கலாம்... எல்லாவற்றுக்கும் அவரவர் அனுபவத்திற்கேற்ப மனம் பக்குவப்பட்டு விடும்... பக்குவப்பட வேண்டும்...

உறவுகள் மேம்பட ஒரு திருக்குறள் :

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
(குறள் எண் : 151)
தன்னை அகழ்பவரையும் தாங்கும் நிலத்தைப்போல், தம்மை இகழ்வாரையும் பொறுத்தலே மிகச் சிறந்த பண்பாகும்.

எதிரிகளே... வாங்க பழகலாம்...!

யாருங்க அது எதிரி ? அறிந்து கொள்ள மனிதனின் மிகப்பெரிய எதிரி யார்...? சொடுக்கித் தொடர்வதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றி தங்களின் கருத்து என்ன நண்பர்களே...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

 1. அருமையான பதிவு. ISO பற்றி கூறுவீர்கள் என்று படித்தால் அதை விட அருமையாக கூறிவீட்டிர்கள். திருக்குறளை நோட் செய்து உள்ளேன் தேரம் கிடைக்கும் போது சென்று படித்து பார்க்கிறேன். பகிர்ந்தமைக்கு நன்றி.தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
 2. அனைவரும் நன்கு அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள், மனதிலும் பதிந்து வைத்திருக்க வண்டிய கருத்துகள்... அதிலும் திருக்குறளுடன் கூறியுள்ளது அழகு அண்ணா...

  பதிலளிநீக்கு
 3. அருமையான கருத்துக்களை, குறளை மேற்கோள் காட்டி தந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 4. மிக மிக அருமையான பபதிவு யாவரும் படித்து தெளிய வேண்டிய விடயம்தான்...

  பதிலளிநீக்கு
 5. திண்டுக்கல் தனபாலன்,

  உறவுகள் சிக்கலாகி வரும் இன்றைய நாட்களுக்கு மிகவும் தேவையான பதிவு. எண்களால் குறளை அடையாளம் காட்டியிருப்பது சிறப்பு.

  ஸ்ரீ....

  பதிலளிநீக்கு
 6. குடும்பத்திலும் அலுவலகத்திலும்

  மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும்...

  ஏற்பட்ட விரிசல்கள் மேலும் பெரிதாகாமல் இருக்கவும்...

  உறவுகள் மேம்பட அளித்த அருமையான பகிர்வுகளுக்கு நிறைவான இனிய பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 7. நம்பர் எதுக்கு இருக்கு என்று தான் யோசித்தேன் கடைசியில் சொல்லி விட்டீர்கள்

  பதிலளிநீக்கு
 8. சுவையான பதிவு சார்.ஒவ்வொன்றுக்கும் ஒரு ஒரு குறள்.....உங்கள் உழைப்புக்கு தலை வணங்குகிறேன்....திருக்குறள் தனபாலன் என்று அழைக்கலாமா?

  பதிலளிநீக்கு
 9. வள்ளுவனை மேற்கோள் காட்ட பயன்படுத்துவது சிறப்பு.

  பதிலளிநீக்கு
 10. I S O முதல் பகுதியெ ரொம்ப நல்லா உபயோகமான தகவல்களுடன் இருந்ததுன்னா ரெண்டாவது பகுதி அதை விடவும் சிறப்பாக சொல்லி இருக்கீங்க. நிறையா விஷயங்கள் தெரிஞ்சுக்க முடியுது நன்றி

  பதிலளிநீக்கு
 11. ஹா ஹா ஹா நிறைவான பதிவு சார்... பதிவுலகின் தற்போதைய சூழலின் வெளிபாடு தங்கள் எழுத்துக்களில் தெரிகிறது

  தம்மைப் இகழ்வார் பொறுத்தல் தலை என்று அன்றே சொல்லிவிட்டானே வள்ளுவன்

  பதிலளிநீக்கு
 12. "உறவுகள் மேம்பட" அத்தனையும் முத்துக்கள்! செதுக்கிக்கொள்கிறேன் என் இதயத்திற்குள்!

  பதிலளிநீக்கு
 13. நண்பரே இப்படி திருக்குறளை மேற்கோள் காட்டி ஒரு பதிவை எழுத உங்களின் மின்சாரத் தடையை மீறியும் எழுதினீர்கள் என்றால், இந்த பதிவிற்கான உழைப்பை தெரிந்துக் கொள்ள முடிகிறது.

  அருமையான பதிவு

  பதிலளிநீக்கு
 14. பாங்கான பதினெட்டு குறிப்புகளும் தேர்ந்தெடுக்கப்பட்ட முத்துக்கள்.இன்றைய சூழலுக்கு ஏற்ற பொன் மொழிகள்.

  பதிலளிநீக்கு
 15. அருமையான கருத்துக்கள்..ஆக்கபூர்வமான பதிவு....கலக்கிட்டிங்க சார்...

  பதிலளிநீக்கு
 16. மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும்...

  ஏற்பட்ட விரிசல்கள் மேலும் பெரிதாகாமல் இருக்கவும்...

  உறவுகள் மேம்பட அளித்த அருமையான பகிர்வுகளுக்கு
  மனமார்ந்த நன்றிகள்.

  பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 17. உறவுகள் மேம்பட அருமையான கருத்துரை.
  நன்றி தனபாலன் ஐயா.

  பதிலளிநீக்கு
 18. வாழ்வை உறவுகளோடும் நட்புக்களோடும் சந்தோஷமாக வைத்திருக்க அத்தனை வழிகளையும் சொல்லித் தந்திருக்கிறீர்கள்.நன்றி !

  பதிலளிநீக்கு
 19. அனைவருக்கும் தேவையான பதிவு நன்றி நண்பரே..

  எனது தளத்தில் தங்கத்தின் கடந்த ஆண்டுகளின் விலை விவரம்...( http://yayathin.blogspot.in/2012/09/blog-post_4418.html)

  பதிலளிநீக்கு
 20. மகரிஷி அவர்களின் உறவுகள் மேம்பட பகிர்தலுக்கு நன்றி. அதற்கு ஏற்ற குறள் தேர்வு அருமை.

  விட்டுக்கொடுத்தல், சகிப்புதன்மை இருந்தால் உறவுகள் நலமாக இருக்கும்.
  நல்ல பதிவுக்கு வாழ்த்துக்கள் நன்றி.

  பதிலளிநீக்கு
 21. அருமையான கருத்துகள். சொல்லி இருப்பதில் ஒருசிலவற்றையாவது கடைபிடிக்க முயற்சிசெய்கிறேன்!

  பதிலளிநீக்கு
 22. நல்ல மனத்தெளிவை தரும் 18 குறிப்புகளும் மிக அருமை..

  பதிலளிநீக்கு
 23. அவசியம் நகல் எடுத்துக் கொள்ள்வேண்டிய
  பயனுள்ள அருமையான பதிவு
  பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 24. வணக்கம் தோழரே மிகவும் அருமையான பயனுள்ள தகவல்ல்கள் குறளை மேற்கோள் கட்டியுளிர்கள் நன்றி

  பதிலளிநீக்கு
 25. என்னடா என்னுடைய ப்ளாக் தலைப்பு போலவே இருக்கிறதே என்ற ஆச்சர்யத்துடன் தான் உள்ளே நுழைந்தேன் , வந்து பார்த்தால் வழக்கம் போல அருமையான பதிவை தந்துள்ளீர்கள் ...

  பதிலளிநீக்கு
 26. தங்களின் அறிவுறுத்தல்களில் கணிசமானவற்றை ஏற்கனவே நான் பின்பற்றுகிறேன்.

  மற்றவற்றையும் பின்பற்ற முயல்வேன்.

  மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 27. உண்மைதான் சார்..
  எமக்கு மேலேயுள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் ஆசிரியர்களாகத்தான் இருக்கிறார்கள்..

  அவர்களிலிருந்து நாம் கற்றுக் கொள்வது சொற்பமாக இருந்தாலும் சரியே

  பதிலளிநீக்கு
 28. சகோ!
  மிக்க
  நன்றி!

  அழகான வாழ்வில் முக்கியமான விஷயங்கள் சொன்னீங்க...

  பதிலளிநீக்கு
 29. ரொம்ப தெளிவாக "வாங்க பழகலாம் ' என்று அழைக்கும் பதிவு. பலருக்கும் உபயோகமான தகவல்கள்

  பதிலளிநீக்கு
 30. மிக அருமையான பதிவு


  நேரமின்மையால் வலைச்சர அறிமுகங்களுக்கு போய் சொல்ல முடியல, இரண்டு முன்று பேருக்கு நீங்க
  சொன்னதாக கேள்விபட்டேன்.

  மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 31. நல்லதொரு பதிவு... பகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள் !by. www.99likes.blogspot.com

  பதிலளிநீக்கு
 32. மறதி சில விசயங்களில் நல்லதுதான் சகோ. நெருங்கிய சொந்தங்களின் பிரிவு, அடுத்தவர் துரோகம்ன்னு. ஆனா படிப்பு விசயத்துல??!!

  பதிலளிநீக்கு
 33. வணக்கம் நண்பரே,,,, "இசையின் ஈர இயக்கங்கள்" எனும் என் வலைத்தலத்தில் நீங்கள் அளித்த கருத்துகளைக் கண்டேன்... மிக்க மகிழ்ச்சி ஐயா... உங்கள் வலைத் தலத்தையும் வலம் வந்தேன்... அருமை.. :)

  பதிலளிநீக்கு
 34. அன்பின் இனிய கோபால் தங்கள் பதிவு மகத்தானது உழைப்பும் ஆர்வமும் வியப்பைத் தருகின்றது வாழ்க உங்கள் பணி,எழுதும் பாணி!

  பதிலளிநீக்கு
 35. மிகவும் அழகான முறையில் உங்களின் விளக்கங்கள் அமைந்துள்ளன ........வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 36. நல்லதொரு குறளின் உதாரணத்துடன் அருமையானதொரு பதிவு! வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
 37. ஒரு பர்சனாலிட்டி டெவலப்மெண்ட் கிளாஸ் க்கு போய் வந்தது போன்ற உணர்வு இருக்கிறது. ஒரு மனிதவள மேம்பாட்டு அதிகாரிக்கு தேவையான அனைத்து பாடங்களும், தம்மாத்துண்டு குறளின் ஓரிரு அதிகாரத்திற்க்குள் இருப்பது தமிழின் சிறப்பு. படிக்க வேண்டிய காலத்தில் படிக்காமல் விட்ட குறள் கருத்துரைகள் மீண்டும் புதிய கோணத்தில் அறிய கிடைப்பது திண்டுக்கல் தனபாலன் அவர்களின் வலைப்பூவின் சிறப்பு. அருமையான பதிவுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 38. மிக அருமை. திருக்குறளோடு உங்கள் குரலும் ஒலித்தது.:)

  பதிலளிநீக்கு
 39. அருமையான பதிவு இந்த பதிவை அனைவரும் படிக்க என் முகநூளிலும் பகிர்ந்து கொள்கிறேன் அண்ணா

  பதிலளிநீக்கு
 40. மிகப்பயனுடைய கருத்துகள். பல தடவை வாசித்து மனதில் பதிக்க வேண்டும். ஆனாலும் ரெம்ப ஆசைக்காரர் தாங்கள். கொஞ்சம் கொஞ்சமாகத் தராமல் ஒரேதாக அள்ளித் தருகிறீர்கள் செமிபாடடைய வேண்டுமல்லவா! அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சல்லவா!
  நல்வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 41. பயனுள்ள குறிப்பு.

  என் வலைதளத்திற்கு தங்கள் தங்கள் தரிசனமும் கரிசனமும் கிட்டியதற்கு கடவுளுக்கு நன்றி. தவறாது படித்து கருத்துரையிடுவதற்கு நன்றி ! என்ற வார்த்தை போதாது அண்ணா.

  நீரோடை மகேஷ்.

  பதிலளிநீக்கு
 42. அருமையான கருத்துக்களை அழகான திருக்குறள் கொண்டு பதிவியற்றியுள்ளது அருமை...

  வாழ்த்துக்கள் சகோ...

  பதிலளிநீக்கு
 43. வாங்க பழகலாம் படித்தல் வாழ்க்கையில் மகிழலாம்-அருமையான பதிவு

  பதிலளிநீக்கு
 44. ஆஹா! கலக்கல் அண்ணே! அருமையான பதிவு. இதுபோல பதிவுகளை தொடர்ந்து எழுதுங்க படிக்க காத்திருக்கோம்

  பதிலளிநீக்கு
 45. உங்கள் இடுகைகள் அனைத்துமே அருமையாக இருக்கின்றன. பின்தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 46. வணக்கம்

  திண்டுக்கல் தனபால்(அண்ணா)

  உங்களின்(Iso) படைப்பு இன்று வலைச்சரம் வலைப்பூவில் வந்துள்ளது வாழ்த்துக்கள் அண்ணா. (Iso) பற்றிய விளக்கம் மிகவும் உரையாடல் வடிவில் அண்ணே.தம்பி என்ற பாத்திரத்தின் மூலம் அழகாக வெளிக்காட்டப்பட்டுள்ளது மற்றது உறவுகள் மேம்பட சொல்லிய கருத்தும் திருக்குறல் விளக்கத்தையும் அழகாக சொல்லி விட்டிர்கள் (Iso) பதிவு அருமை..

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.