🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



நன்றி மறவாத நல்ல மனம் போதும்...

குறள் எழுதி விட்டுப் பதிவு எழுதுகிறாயா...? இல்லை பதிவுக்கேற்ற குறள் சொல்லுகிறாயா...?" இந்த பலரின் சந்தேகத்தைப் பல பதிவுகளில் கருத்துரையில் தெரிவிக்கிறார்கள்... உனது பதில் என்ன...?

இரண்டும் தான் மனமே... வேண்டுமானால் குறள் தெரியாமல் இப்பதிவை எழுதி விடுகிறேன்... குறள் எனது வாழ்க்கைக்கு வழிகாட்டி... வாழ்வில் பல சமயங்களில் அதை அனுபவித்து இருக்கிறேன்... உணர்ந்து இருக்கிறேன்... திருந்தியும் இருக்கிறேன்... சந்தித்த ஒவ்வொரு மனிதரிடம் ஏதாவது ஒன்றை கற்றுக் கொண்டு மறக்காமல் இருக்கின்றேன்... அவைகள் என்னவென்றால்... ஒவ்வொன்றாகச் சொல்கிறேன்... ஆனால் ஒன்று தான்...!


படிச்சிருந்தும் தந்தை தாயை மதிக்க மறந்தான் - ஒருவன் - படுக்கையிலே முள்ளை வச்சி பாத்து மகிழ்ந்தான்... பிடிச்ச முயல் அத்தனைக்கும் மூன்று காலென்றான்2 - ஒருவன் - பெண்டாட்டியின் கால்களுக்குக் காவல் இருந்தான்... காவல் இருந்தான்2 // ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா // சொந்தமென்று வந்ததெல்லாம் சொந்தமும் இல்லை... ஒரு துணையில்லாமல் வந்ததெல்லாம் பாரமும் இல்லை...2 நன்றி உள்ள உயிர்களெல்லாம் பிள்ளை தானடா... நன்றி உள்ள உயிர்களெல்லாம் பிள்ளை தானடா... தம்பி நன்றி கெட்ட மகனை விட நாய்கள் மேலடா... தம்பி நன்றி கெட்ட மகனை விட நாய்கள் மேலடா... நாய்கள் மேலடா... (படம் : படிக்காத மேதை)


© படிக்காத மேதை கண்ணதாசன் K.V.மகாதேவன் 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1960 ⟫

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது (101)

ஏதோ என்னால் முடிந்த சில உதவிகளைப் பிறருக்குச் செய்கிறேன்... எந்த எதிர்பார்ப்பும் இல்லாததால், அதை மறந்தும் விடுகிறேன்... அதே சமயம் முன்பின் தெரியாதவர்களுக்கு நான் எந்த உதவியும் செய்யவில்லை... ஆனால் அவர்கள் எனக்குச் செய்த உதவிக்கு நான் என்ன செய்வது...? நன்றியையும் எதிர்பார்க்காத அந்த உன்னத உள்ளங்களுக்குக் கைம்மாறாக மண்ணுலகையும் விண்ணுலகையும் கொடுத்தாலும் சமம் ஆகாது...

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது (102)

சமம் ஆக விட்டாலும் அதற்கு ஈடாக, என்றும் நன்றி மறவாத உள்ளத்தோடு இருக்கிறேன்... காரணம் நான் நெருக்கடியான நேரத்தில் இருக்கும் போது, அவர்கள் செய்த சிறு உதவியை மறக்க முடியுமா...? பணமோ, பொருளோ அல்ல... அவை தொடராது... தொடரவும் முடியாது... வாழ்க்கைக்குச் சரியான பாதையைக் காண்பித்தலும், ஆறுதலான சில வார்த்தைகளும் கூட சின்ன உதவி தான்... அதனால் அந்த உதவியை, இந்த உலகத்தை விடப் பெரிதாக மதிக்கிறேன்...

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது (103)

மதிப்பது மட்டுமில்லை... என் மூலமாக அவர்களுக்கு என்ன பயன் கிடைக்கும்...? யோசித்துப் பார்த்தால் எதுவுமில்லை... எந்த எதிர்பார்ப்பும் இல்லையே... அன்பு ஒன்றே தான்... அப்படியானால் அவர்களின் அன்பினால் கிடைக்கும் நன்மையைக் கடலைவிட பெரியதாக நினைக்கிறேன்...

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார் (104)

கடலளவு என்பது குறைவு தான்... அன்பிற்கு அளவேது...? அவர்கள் தினையளவு செய்த உதவிக்கு எவ்வளவு தான் உயர்ந்தாலும், கர்வம் ஆணவம் நெருங்காமல் இருக்காமல் இருப்பதற்குக் காரணம் என்ன...? நன்றியுள்ளவனாக வாழ்கிறேன் என்பதை நினைத்து பெருமிதம் அடைகிறேன்... இது மட்டும் போதுமா...?

உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து (105)

போதாது... நேரம், காலம், காரண காரியம் பார்த்து அவர்கள் செய்த உதவியைப் பார்த்து நான் அவர்களுக்கு மறு உதவி செய்ய முடியுமா...? அவர்கள் செய்த சிறு உதவியை முழுதாக பயன்படுத்தி, வாழ்வில் முன்னேறி மகிழ்ச்சியாக வாழ்வது தான், நான் பெற்ற உதவிக்குத் தகுதியாவேன்...

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு (106)

அந்த தகுதிக்குப் பரிசான பணிவு எனும் பண்பையும் கற்றுக் கொடுத்த அந்த குற்றமற்றவரின் உறவை நான் மறந்தால் மனிதனே அல்ல... எனக்குத் துன்பம் வந்த போது உறுதுணையாய் உதவியவர்களின் நட்பு எப்போதும் வேண்டும்...

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு (107)

எப்போதும் என்றால்...? ஏழேழு பிறப்பு என்று சொல்கிறார்கள்... யாராலும் பழிக்கப்படாத நல்ல குணங்களை உடைய பிள்ளைகளைப் பெற்றால், பெற்றோர்களுக்கு ஏழேழு தலைமுறைக்குத் துன்பங்களும் நெருங்காது என்றும் கூறுகிறார்கள்... அப்படியானால் அவர்களின் தூய்மையான நட்பை எப்பிறப்பு என்றாலும் தொடர்வதையே வேண்டுகிறேன்...

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று (108)

தொடர்வது மட்டுமில்லாமல், அவர்கள் எனக்குச் செய்த நன்மையை மறக்காமல் இருக்கவும் வேண்டுகிறேன்... அதை விட அந்த தூய்மையான நட்பில் சிறு களங்கம் உண்டானாலும், தீமை வந்தாலும் உடனே மறந்து விடுவது தான் மனப்பக்குவத்திற்கான அடையாளம்... அனுபவம் தந்த பாடத்தால் அதுவே சிறந்த வழி என்று உறுதியுடன் சொல்வேன்...

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும் (109)

வழி சில வேளையில் வலியாக மாறுகிறது...! முன்பு நன்மை செய்தவரே பின்பு நம்மைக் கொலை செய்வது போன்ற தீமையைச் செய்தாலும், மனதைக் காயப்படுத்தும் அத்துன்பம், அவர்கள் முன்பு செய்த சிறு உதவியை நினைத்துப் பார்த்தாலே மன்னிப்பு என்ற வார்த்தை சிதறி காணாமல் போகிறது...

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு (110)

அப்படி நினைத்துப் பார்க்காமல், மீண்டும் தீமையைத் தொடர நினைத்தால், எனது கோபம் என்னையும் அழிக்கும்... எந்த நல்லவற்றையும் அழித்தாலும் அவர்களுக்குப் பாவத்தைக் கழுவ வழிகள் உண்டு... ஆனால், ஒருவர் செய்த உதவியை... அதுவும் பிறர் பாராட்ட வேண்டும் என்கிற நோக்கத்தோடு இல்லாமல், எதையும் எதிர்பாராமல் மனம் விரும்பி செய்யும் உதவியை மறந்து தீமை செய்பவனுக்கு, பாவத்தைக் கழுவ எந்த வழியும் இல்லை...

நண்பர்களே... குறள்களைப் படித்துத் தெளிவு பெற ஒவ்வொரு → ♥ ← இதயத்தின் மேல் சொடுக்கினால் குறளை படிக்கலாம்... (கைப்பேசியில் படிப்பவர்களும்) அதிகாரம் 11 - செய்ந்நன்றியறிதல்... நன்றி...

பொன் பொருளைக் கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு, கண் மூடிப் போகிறவர் போகட்டுமே... என் மனதை நான் அறிவேன்... என் உறவை நான் மறவேன்... எது ஆன போதிலும் ஆகட்டுமே... நன்றி மறவாத நல்ல மனம் போதும்... என்றும் அதுவே என் மூலதனம் ஆகும்...



© நினைத்ததை முடிப்பவன் அ.மருதகாசி M.S.விஸ்வநாதன் 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1975 ⟫

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. வணக்கம்
    அண்ணா
    தெளிவான விளக்கம் கருத்து நிறைந்த தத்துவங்கள்.... எல்லாம் அருமையைாக உள்ளது பகிர்வுக்கு நன்றி த.ம 2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. அருமையான பதிவு. குறளடியார் டிடி அல்லது குறள்தாசன் டிடி என்று அழைக்கலாம். தொழில் நுட்பத்திலும் உங்களை மிஞ்ச ஆள் யார்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே விசு அவர்களின் புத்தகவெளியீட்டு விழாவில் டிடியை அறிமுகப்படுத்திய போது எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் அவர்கள் டிடி என்று அழைக்க எல்லோருக்கும் டிடி ஆனார். டிமான்ட் ட்ராஃப்ட் போல யாருக்கேனும் டெக்னிக்கல் பிரச்சனை வந்தால் டிடி என்று கூவி அழைப்பார்கள்....பாரதிதாசன் போல இவரை திருவள்ளுவதாசன் எனலாம். இவரது பதிவுகள் அக்மார்க், ஐஎஸ்ஓ (அவர் செய்வது போல) பதிவுகளே! என்று அவையில் அறிமுகப்படுத்தியாயிற்று....இப்போது நீங்கள் குறள்தாசன் என்று சொல்லிவிட்டீர்கள்!!!!!

      நீக்கு
    2. நண்பரே அதற்கான முயற்சிகள் ஆரம்பமாகிவிட்டது.....

      நீக்கு
    3. குறள் சித்தர் என்று சொல்லலாமோ?

      நீக்கு
  3. அத்தனை குறள்களுக்கான விளக்கம் அருமை . குறிப்பாக முதல் குறளுக்கு விளக்கம் . இந்தக் குறளுக்கு பள்ளிகளில் ஆசிரியர்கள் கோனார் தமிழ் உரையில் உள்ளதை அப்படியே சொல்வார்கள். அதன் பொருள் சரியாக விளங்காது . நீங்கள் தந்துள்ள விளக்கம் புரியும் வண்ணம் அமைந்துள்ளது. திருக்குறளுக்கு உங்கள் பாணியில் உரை ஒன்று கூட எழுதுங்கள் . அல்லது நீங்கள் எழுதி உள்ளவற்றை தொகுத்து புத்தகமாக வெளியிடுங்கள்.வாழ்த்துகள். வேலூர் புத்தக வெளியீட்டில் தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  4. திருமிகு முரளிதரன் ஐயா அவர்களின் கருத்தினை வழி மொழிகின்றேன் ஐயா
    திருக்குறளுக்கு நீங்கள் எழுதிய உரைகளைத் தொகுத்து நூலாக வெளியிடலாம்
    நன்றி ஐயா
    தம +1

    பதிலளிநீக்கு
  5. எப்பொழுதும் போல எளிமையாக அதேசமயம் ஆழமாகக் குறளை விளக்கியிருக்கிறீர்கள் அண்ணா. டிடி திருக்குறள் உரை கண்டிப்பாக வர வேண்டும். வாழ்த்துகள் அண்ணா.

    பதிலளிநீக்கு
  6. வலைபதிவில் உச்சத்தை தொட்டதைப் போல புத்தகமாக வெளியிடும் போது நிச்சயம் பலரது வரவேற்பையும் பெறும். முயற்சிக்கவும்.

    பதிலளிநீக்கு
  7. திரு T.N.முரளிதரன் அவர்கள் சொல்வதுபோல் நீங்களும் உங்கள் பாணியில் குறளுக்கு உரை எழுதலாம்.

    பதிலளிநீக்கு
  8. குறளுக்கான உங்களது குரல் மூலமாக பல நல்ல செய்திகளைத் தெரிந்துகொள்கிறோம். அதில் அனுபவங்கள் சேரும்போது மேலும் பயனுள்ளதாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  9. நன்றியறிதல் - அதுவே நல்ல குணங்களுள் தலையானது..

    குறளுக்கு இனிய விளக்கங்கள்..
    திரைப் பாடல்களின் முத்தான வரிகள்..

    அருமை.. அருமை.. வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
  10. குறள்களைப் பாடமாக இல்லாமல் வாழ்க்கையாக கற்றுத்தரும் தங்கள் முயற்சி பெரிதும் போற்றுதற்குரியது. பாராட்டுகள் தனபாலன்.

    பதிலளிநீக்கு
  11. தொழில்நுட்ப வல்லமையின் நடுவே சொல்ல வந்தது மறையாமல் இருப்பது பாராட்டத் தக்கது.

    பதிலளிநீக்கு
  12. இன்றுபோல் என்றும் நன்றி மறவாமல் இருக்கவும். நானெல்லாம் பதிவெழுதத் தலையைப் பிய்த்துக்கொள்ளும் போது திரைப்படப் பாடல்களும் குறளும் உங்களுக்குக் கை கொடுப்பது பாராட்ட வைக்கிறது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  13. டிடி! அருமை டிடி. அதே அதே! அதுவும் எதிர்பாராத உதவி எஎன்பதுதான் மிக மிக முக்கியம். இதைப் பற்றி நாங்கள் ஒரு பதிவு எழுதி பாதியில் வைத்துள்ளோம். வள்ளுவரின் குறள் தலைப்பில்தான். இன்னும் எழுதி முடிக்கவில்லை.....

    வழக்கம் போல அருமையான அக்மார்க் பதிவு!

    பதிலளிநீக்கு
  14. தெளிவான கருத்து, விளக்கம் நிறைந்த பதிவு.

    பதிலளிநீக்கு
  15. மிக அழகாக 'நன்றியறிதலுக்கான குறளுக்கு விளக்கவுரை கொடுத்திருக்கிறீங்க. பாடல்கள் எல்லாமே மிக அருமையாக இருக்கு.குறளையும்,பாடல்களையும் வைத்து எழுதுவதில் உங்களோடு யாருமே போட்டியிடமுடியாது. பாராட்டுக்கள்,வாழ்த்துக்கள் அண்ணா.நன்றி

    பதிலளிநீக்கு
  16. அருமையாக எளிமையாக விளக்கம் சொல்கிறீர்கள் சகோ.

    நன்றி

    பதிலளிநீக்கு
  17. வழி எல்லாம் சில வேளையில் வலியாக மாறுகிறது.//

    உண்மைதான். இருப்பினும் வலி தராத வழி ஏதேனும் உண்டோ/

    உடலை வருத்தி உழைத்து அதன் வழி கிடைக்கும் ஊதியத்தின்
    பலன் மன அமைதி, உவகை,ஆனந்தம் எல்லாம்
    வலி தராத் தொழில் உண்டோ ?


    மடுத்த வாயெல்லாம் பகடன்னான் உற்ற
    இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து

    செல்லும் வழி நெடுகில் இடர்ப்பாடு கள் வரத்தான் செய்யும்.

    அந்த இடர்கள் தர இருக்கும் வலிகளை முன் நோக்கி அதற்கான தீர்வுகளையும் தீர ஆலோசித்த பின்

    வள்ளுவன் வாய்மொழி யாம்
    எதிராத்தாக்கும் அறிவினார்க்கு இல்லை
    அதிர வருவதோர் நோய்.

    என்ற குரளை நினைவில் இருத்தி,
    எந்த ஒரு செயலிலும் இறங்குவது நல்லது.


    தாமரை வேண்டுபவன் சேற்றில் இறங்க வேண்டுமே என எண்ணிடலாமோ ? முத்து எடுக்க நினைப்பவன் மூச்சு அடிக்கமுடியுமா என ஐயப்பாடு கொள்வின் என்று தான் முத்து எடுப்பான் ?

    வலி வருமே என்ற அச்சப்படுபவள்
    பிள்ளை பெற ஆசைப்படுவதும் சரியோ ?

    எந்த ஒரு செயலிலும்
    ஆக்கமும் உண்டு.
    அதிர்வும் உண்டு.
    ஆனந்தமும் உண்டு.
    ஆங்காங்கே
    ஆலகால விடமும் உண்டு.

    அதிகம் பேசிவிட்டேன்.

    சுப்புத் தாத்தா.
    பின்.குறிப்பு:
    உங்கள் விளக்க உரை எளியவருக்கும் புரியும் வகையில் உள்ளது மெச்சத்தக்கது. தொடரட்டும் உங்கள் பணி.
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  18. எனது பின்னூட்டத்தில்
    //வலி தராத் தொழில் உண்டோ ?///
    என்பதற்கு

    வலி தராத் தொழிலில் உண்டோ ?

    எனப் படிக்கவும்.

    சுப்பு தாத்தா.
    http://subbuthathacomments.blogspot.com

    பதிலளிநீக்கு
  19. மிக அருமையான, எளிமையான குறள் விளக்கம்.

    நன்றி
    சாமானியன்

    பதிலளிநீக்கு
  20. அற்புதம்.. அற்புதம்.

    குறளை மிக எளிமையாக கொண்டு சேர்த்ததுடன் தங்களின் அதீத குணங்களையும் ஒப்பிட்டுச் சொன்னமைக்கு நன்றி.

    மிக அற்புதமான பதிவு.

    God Bless You

    பதிலளிநீக்கு
  21. அந்தாதி மாதிரி தொடர்புடன் எழுதியிருக்கிறீங்க அண்ணா. வாழ்த்துக்கள்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  22. எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
    அதிர வருவதோர் நோய்
    (அதிகாரம்:அறிவுடைமை குறள் எண்:429)

    எனது முந்தைய பின்னூட்டத்தில்
    காக்கும் என்ற சொல்லை தாக்கும் என்று தவறாக டைப் அடித்து விட்டேன்.

    அது வலி தருமுன்னே திருத்திடவெண்டுகிறேன்.

    சுப்பு தாத்தா
    www.subbuthathacomments.blogspot.com

    பதிலளிநீக்கு
  23. குறளைச் சினிமா பாடலோடு சேர்த்து
    எழுதுவது பல இளவயதினருக்கும்
    பிடிக்கும் .
    நல்ல பதிவு டிடி

    பதிலளிநீக்கு
  24. குறள் வழி சிந்தனைக் கட்டுரை. கூடவே மனதைத் தொட்ட பாடல்கள்.
    த.ம.14

    பதிலளிநீக்கு
  25. நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!!அருமையான புரியும்படியான விபரங்கள்....!!!!

    பதிலளிநீக்கு
  26. சினிமாப் பாடல்களும் அதற்கேற்ப குறள்களும்எளிமையான விளக்கமும் அருமை சகோ வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
  27. குறள் விளக்கம் அருமை.எப்படித்தான் இப்படிச் சிந்தனை ஊற்றெடுக்கிறதோ!

    பதிலளிநீக்கு
  28. வணக்கம் டிடி சார்,
    நன்றி உணர்வு இன்று இருக்கிறதா? டிடி சார்,ஆனால் தாங்கள் சொன்ன விளக்கம், அது தொடர்பான பாடல் என் தாங்கள் அசத்தி இருப்பது, அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. நன்றி. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  29. வணக்கம் ஜி அழகான விளக்கவுரை தங்களது பாணியில்
    நன்றியைக் குறித்து சிறப்பான உரை,
    குறள் இல்லாமல் பதிவு தருகிறேன் என்று கூறிவிட்டு கடைசியில் நம்பருக்குள் குறளை மறைத்து வைத்திருந்தது சிறப்பு.
    நண்பர்கள் அனைவரும் சொல்வது போல நூல் வெளியிடுவதே மேலும் சிறப்பாகும்.
    வாழ்க வளமுடன்.
    கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
  30. குறள் வரிசை எண் 110 வரை படித்து ரசித்தேன் ,அடுத்து 111 நாமம் போட்டு விடாதீர்கள் ..தொடரட்டும் குறளுறை:)

    பதிலளிநீக்கு
  31. வாழ்வோடு இணைந்த குறள் விளக்கம். அதற்கு வலு சேர்க்கும் விதமாக வலை தொழில் நுட்பமும் இணைந்து புதியதோர் பதிவை தந்து ஆச்சரியப்பட வைத்துவிட்டீர்கள்.
    த ம 22

    பதிலளிநீக்கு
  32. தர்மத்தை போல நன்றியும் நம்மை காக்கும்.
    பதிவு அருமை DD!.

    பதிலளிநீக்கு
  33. அண்ணாச்சி மற்றவர்கள் பதிவுகளில் எனக்குத்தெரிந்த தமிழில்
    உரையாடுவேன். சிலசமயம்
    விளயாடுவேன்.
    ஆனால் தங்களைபொருத்தவரை ஏதும் செய்ய இயலவில்லை.
    ஒருவேளை ஆர்வமிகுதியால் என் அறிவை நிரூபிப்பதாக எண்ணி
    என் அசட்டுத்தனம் வெளிப்பட்டுவிடுமோ என்ற அச்சமா எனத்தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  34. அருமை குறள் அரசரே. ஒரு நண்பனோடு பேசுவதைப் போல் இருக்கிறது உங்கள் பதிவை வாசிப்பது. நன்றி.

    பதிலளிநீக்கு
  35. சிந்திக்கத்தூண்டும் பகிர்வு .அருமையான குறள்கள் எப்படித்தான் மனப்பாடம் செய்தீர்களோ டிடி!

    பதிலளிநீக்கு
  36. அனைவருக்கும் புரியும் படியான எளியநடை விளக்கம். பகிர்வுக்கு நன்றிங்க சகோ.

    பதிலளிநீக்கு
  37. வாத்தியார் வீட்டுல மக்கு இருப்பான், போலீசு வீட்டில திருடன் இருப்பான் என்பது போலத்தான்..படித்திருந்தும் தாய் தந்தையை மதிக்க மறந்தான் என்பதும்..

    பதிலளிநீக்கு
  38. ஸ்ரீராம் சொன்னதை வழிமொழிகிறேன். குறளும் அதைத் தொடர்ந்த கோவையான கருத்துகளும் அருமை டிடி சகோ. வழக்கம்போல பின்னுகிறீர்கள். :) அட்டகாசம். குறள் விளக்கத்தில் உமக்கு நிகர் நீரே :) :) :)

    பதிலளிநீக்கு
  39. எளிமையான குறள்விளக்கம்! இப்படி சொல்லிக் கொடுத்தால் எல்லா குழந்தைகளுக்கும் குறள் இனிக்கும்! தொடர்க! நன்றி!

    பதிலளிநீக்கு
  40. ஒவ்வொரு குறளுக்கும் தங்களின் அற்புதமான விளக்கம் மிக தெளிவாக புரிந்து கொள்ள கூடியவையாக இருந்தது மிக சிறப்பு. அன்று படித்ததை இன்று படித்தது நன்றாக பதிந்தது மனதில் (ஒரு வேலை நான் நன்றிக் கடன் பட்டுள்ளதால் இருக்குமோ)

    ஒருவன் எவ்வளவு பொருளாதார கடன் இருந்தாலும் அடைத்து விடலாம் . ஆனால் இந்த நன்றிக் கடன் அடைக்க முடியாத ஒன்று. எப்போதும்.. இறக்கும் வரை நாம எல்லோரும் எவ்ளோ சம்பாதித்தாலும் கடன்காரர்களே .. இதை நான் மிகப்பெருமையாக கருதுகிறேன்.

    பதிலளிநீக்கு
  41. குறள் விளக்கம் வழக்கம் போல அருமை...!

    பதிலளிநீக்கு
  42. எளிமைப்படுத்தி இதுபோல் சொல்வது எல்லோருக்கும் பயன்தரும் த.ம-24

    பதிலளிநீக்கு
  43. தங்கள் குறள் விளக்கம் அருமை
    நண்பர்கள் முன்னே
    நான் நினைவூட்டும் குறள்

    எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
    செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

    நண்ப - எந்த
    நன்றியை நாம் மறந்தாலும் - நமக்கு
    பிறர் செய்ததற்கான
    நன்றியை மறந்தால் - நமக்கு
    வாழ்வில்லைக் காணும் - எனவே
    உப்பிட்டவரைக் கூட
    எள்ளளவாவது நினைத்தாலே போதும் - அது
    நமக்கிடையே
    நல்லுறவைப் பேண உதவுமே!

    இதையேன் - இங்கு
    குறிப்பிட்டேன் என்றால்
    நன்றி மறவாத நல்ல உள்ளம் (மனம்)
    நம்மிடையே இருந்தால்
    நல்லுறவுள்ள சூழல் நமக்கிருக்குமே!

    பதிலளிநீக்கு
  44. வணக்கம் சகோதரரே.

    எளிமையான உரை நடையில், ஒவ்வொரு குறளுக்கும் அருமையான விளக்கங்கள் தந்து வழக்கம் போல் பதிவை செம்மைப் படுத்தி விட்டீர்கள். நன்றியின் பெருமையை தங்கள் வாயிலாக முழுமையாக உணர்ந்து கொண்டேன். தங்களுக்கும் எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். இவ்வளவு சிறந்த பதிவை படிக்காது சிறிது கால இடைவெளியில் தவற விட்டமைக்கு வருந்துகிறேன். அருமை!

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  45. ஒவ்வொரு குறளுக்கும் அருமையான விளக்கங்கள்
    உங்கள் தொழில் நுட்ப யுக்திகள் வியக்கவைக்கின்றன

    பதிலளிநீக்கு
  46. நல்ல விளக்கங்கள் டிடி. என்னைப்பொறுத்தவரை நானும் எனக்குத் துளி நன்மையாவது செய்தவரை மறப்பதில்லை. இந்த விஷயத்தில் பலரும் என்னைக் கேலி செய்திருந்தாலும் நான் மாற்றிக்கொள்ள முயலவில்லை. அதே மனிதர் பின்னால் எனக்குத் தீமைகள் செய்திருக்காங்க தான்! ஆனால் அதை நினைக்காமல் முதலில் செய்த நன்மையை மட்டுமே நினைத்துக் கொண்டு அவர்களைப் பற்றிப் பின்னர் கெடுதலாக ஏதும் நினைக்க மாட்டேன். கூடியவரை இதைக் கடைப்பிடிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  47. அருமையான குறள் விளக்கங்களோடு அவற்றைச் சுட்டி இருக்கப் பயன்படுத்தும் தொழில் நுட்பமும் வியக்க வைக்கிறது. உங்கள் சாதனை அளப்பரியது.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.