வெள்ளி, 2 டிசம்பர், 2011

அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? - பகுதி 1

நண்பர்களே... முதலில் இந்தப் பதிவை, என் பத்தாம் வகுப்புத் தமிழ் மற்றும் கணக்குப் பாடங்களைக் கற்றுக் கொடுத்த ஆசிரியருக்குச் சமர்ப்பிக்கிறேன். அவர் சொல்லிக் கொடுத்த முறை எனக்குப் பலவற்றில் உதவுகிறது. அது என்ன? என்று பார்ப்போமா?


நான் பள்ளிக் கூடத்தில் படித்த போது, எனது கணக்கு ஆசிரியர், ஒரு கணக்கை மட்டும் விளக்கமாகக் கரும் பலகையில் எழுதி விட்டு, மற்றக் கணக்குகளை எல்லாம் இதே போல் செய்யுங்கள் என்று கூறி விட்டு, சிறிது நேரம் அவகாசம் கொடுப்பார். பிறகு, ஒவ்வொருத்தராக அருகில் கூப்பிட்டு, "கணக்கு அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?" என்று கேட்பார்.

"கணக்கை அறிந்து கொண்டேன்" என்று சொன்னால், "அப்போ உனக்குக் கணக்கு சரியா தெரியலே, புரியலே..... மறுபடியும் செய்." என்பார்.

"கணக்கை தெரிந்து கொண்டேன்" என்று சொன்னால், "அப்போ உனக்குக் கணக்கு சரியா புரியலே.... மறுபடியும் செய்." என்பார்.

அதற்காக, "கணக்கை நன்றாக புரிந்து கொண்டேன்" என்று சொன்னால், எப்படிப் புரிந்து கொண்டாய் என்பதைத் தெரிந்து கொண்டு , இரண்டாவது கணக்கை செய்யச் சொல்வார்.

[ அந்த இரண்டாவது கணக்கு, முதல் கணக்கில் சின்ன மாற்றம் செய்தால் விடை வந்து விடும். ]

நாமாக யோசித்து இரண்டாவது கணக்கின் விடையைச் சரியாகக் கண்டுபிடித்து, அவரிடம் காண்பித்தால், "இப்போது தான் முதல் கணக்கை நீ அறிந்து, தெரிந்து, புரிந்து கொண்டாய், அடுத்து மூன்றாவது கணக்கை செய்" என்று கூறுவார்.

தவறாகச் செய்து விட்டு "எப்படி இந்தக் கணக்கை செய்வது" என்று அவரிடமே கேட்டால், "முதல் கணக்கை நீ சரியாகப் புரிந்து கொள்ளவில்லை" என்று கூறி பிறகு விளக்கமாகச் சொல்லிக் கொடுப்பார். இப்படியே இந்தக் கணக்கு வகுப்பு போகும்.

என்னடா இது... "அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?" என்று எங்களுக்கு எரிச்சலாக அப்போது இருக்கும். ஆனால், அதைத் தெரிந்து கொள்ளச் சிறிது நாட்களிலே ஒரு சந்தர்ப்பம் வந்தது. ஏனென்றால் அவரே தான் தமிழ் வகுப்பும் எடுத்தார். கணக்கு வகுப்பையே இந்தப் பாடு படுத்துகிறாரே இப்போ என்ன செய்யப் போகிறாரோ என்று பயந்து கொண்டிருந்தோம். ஆனால், நாங்கள் நினைத்தது மாறாக அருமையாகச் சொல்லிக் கொடுப்பார். சின்னச் சின்னக் கதைகள் சொல்லி, நகைச்சுவையாகச் சொல்லிக் கொடுப்பார். எல்லாவற்றுக்கும் ஒரு திருக்குறளை சொல்லி அழகாக விளக்கம் கொடுப்பார்.

கணக்கு வகுப்பில் மட்டும் இவ்வளவு கண்டிப்பாக இருக்கிறாரே என்று நாங்கள் நினைத்துக் கொள்வோம். ஒரு முறை தமிழ் வகுப்பில் அவரிடமே கேட்டு விட்டோம். "ஒவ்வொரு முறையும் கணக்கை முடித்துக் காண்பிக்கும் போது ஏன் "அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?" என்று கேட்கிறீர்கள்" என்று. அதற்கு அவர் சொன்ன பதில் :

" மாணவர்களே... இதை நான் கணக்குப் பாடத்திற்காக மட்டும் சொல்வதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. எல்லாப் பாடங்களையும் அறிந்து, தெரிந்து, புரிந்து படியுங்கள். உங்களுக்கு எல்லாருக்கும் நான் சொல்லும் திருக்குறள் தெரியும்.

கற்கக் கசடறக் கற்பவை கற்ற பின்
நிற்க அதற்குத் தக.

அதற்கு விளக்கம் என்னவென்றால், நீங்கள் படிப்பதற்குத் தகுதியான புத்தகங்களை மட்டும் படிக்க வேண்டும். அந்தப் புத்தகங்களை எவ்வித பழுதில்லாமல் படிக்க வேண்டும். அவ்வாறு படித்த பின் அந்தப் புத்தகத்தின் தகுதிக்குத் தகுந்த படி நீங்கள் வாழ்க்கையில் நடந்து கொள்ள வேண்டும் என்பது மிக முக்கியம்.

தமிழைப் போல் கணக்கை மனப்பாடம் செய்ய முடியாது, செய்யவும் கூடாது. அதை நான் என்ன தான் விளக்கமாகக் கூறினாலும் நீங்களாக அறிந்து, தெரிந்து, புரிந்து கொண்டால், அதில் எளிய வழி இருந்தால் எனக்கும் நீங்கள் கூறலாம். அதற்காகத் தான் நான் அப்படிக் கூறுகிறேன்." என்று கூறினார்.

[... அப்போது நாங்கள் "எனக்கும் நீங்கள் கூறலாம்" என்று சொன்னதை நினைத்து சிரித்தோம். "நல்ல வேலை கணக்கைப் போலத் திருக்குறளையும் கேட்டிருந்தால்.....?" என்று நினைத்து பயந்தோம். மேலும் அவர் அந்தத் திருக்குறளை வைத்தே, அதிலும் "கசடறக் கற்பவை" என்பதற்கு மட்டும் அவர் இந்தப் பதிவின் தலைப்பைப் பற்றிக் கூறிய விளக்கங்கள் : ...]

"மாணவர்களே : தினமும் ஒரு திருக்குறளைப் படியுங்கள். அந்தக் குறளின் பொருளை முழுமையாக அறிந்து, தெரிந்து, புரிந்து படியுங்கள். திருக்குறளில் இல்லாத விசயமே இல்லை. நான் சொல்லும் "அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?" பற்றிச் சொல்கிறேன்.

1. அறிந்து கொள்தல் : பாட புத்தகத்திலுள்ளவற்றை மட்டும் நான் அறிந்து கொள்ளச் சொல்லவில்லை. உங்கள் தாய் தந்தையரைப் பார்த்து பல நல்ல விசயங்களை அறிந்து கொள்ளலாம். உங்கள் வீட்டில் உள்ள புத்தகத்தின் மூலம், நாளிதழ்கள் மூலம் பல நல்ல விசயங்களை அறிந்து கொள்ளலாம். மேலும் வானொலி, தொலைக்காட்சி மூலமும் பலப்பல நல்ல விசயங்களை அறிந்து கொள்ளலாம். இல்லையென்றால் சுயமாகக் கூட அறிந்து கொள்ளலாம்.

2. தெரிந்து கொள்தல் : ஒரு நல்ல விசயத்தை முழுமையாக அறிந்து கொண்ட பின், அதைப் பற்றிய தேடல் உங்களுக்கு வர வேண்டும். அதற்கு உங்கள் முயற்சியும், ஆர்வமும் இருக்க வேண்டும். மனதை தளர விடக் கூடாது. அப்படி முயற்சியும் ஆர்வமும் இருந்தால், அந்த விசயத்தைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளலாம்.

3. புரிந்து கொள்தல் : ஒரு நல்ல விசயத்தை முழுமையாக அறிந்து, தெரிந்து கொண்ட பின், அதைச் செயல் படுத்திப் பார்க்க வேண்டும். பயம் இருக்கக் கூடாது. அதற்கு உங்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அவ்வாறு செயல் படுத்திப் பார்க்கையில், அந்தச் செயலில் நமக்குக் கிடைக்கும் நன்மை/தீமை, வெற்றி/தோல்வி, லாபம்/தோல்வி, உங்களால் முடியும்/முடியாது போன்றவற்றைப் புரிந்து கொள்ளலாம்.

நீங்கள் செய்யும் செயலானது திருந்தச் செய்ய வேண்டுமென்றால் "அறிந்து கொள்தல், தெரிந்து கொள்தல், புரிந்து கொள்தல்" இந்த மூன்றையும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது இதைப் பற்றி உங்களுக்குச் சரியாக அறிந்து கொள்ள, தெரிந்து கொள்ள, புரிந்து கொள்ள முடியாவிட்டாலும், பிற்காலத்தில் பல நேரங்களில் இந்த மூன்றும் உதவும்...." என்று கூறினார்.

அப்போது எங்களுக்கு ஒன்றுமே அறியவில்லை... தெரியவில்லை... புரியவில்லை. நண்பர்களே... உங்களுக்கு.....?


அடுத்த பதிவில் சிந்திப்போம்... போகலாமா...? இங்கே சொடுக்கி தொடரவும்... அதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றித் தங்களின் கருத்து என்ன...?

நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி !


தொடர்புடைய பதிவுகளை படிக்க :


66 கருத்துக்கள்:


நட்புக்களின் கருத்துக்களைக் காண இங்கே சொடுக்கவும் !

கருத்து பதிய இங்கே சொடுக்கவும் !