🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



தேசம் சுடுகாடு ஆவது நன்றோ...?

அனைவருக்கும் வணக்கம்... நல்லாட்சி எப்படி இருக்க வேண்டும்...? கொடுமையான ஆட்சி இருந்தால்...? என்பதைப் பற்றிய பதிவு... எனது மனதுடன் ஒரு உரையாடலாக...

முந்தைய பதிவின் இணைப்புகள் :-
1) எல்லா பணத்தையும் எடு...!
2) உலகத்தில் கோழைகள் தலைவன்...
3) மக்களின் கண்ணீரே ஆட்சியை அழிக்கும் ஆயுதம்...!

அமைதியாக வெளிமனம் நல்லாட்சியைப் பேசுகிறது...
அதை எதிர்த்துக் கொந்தளிப்பான உள்மனம் கொடுமையான ஆட்சியைக் கேள்வி கேட்கிறது... + வெறுப்புடன் சில பாடல்களும் பாடுகிறது...!

முக்கிய குறிப்பு :- நீங்கள் விரும்பும் ஆட்சியை நினைத்துக் கொண்டு நீல வண்ண வரிகளையும், விரும்பாத ஆட்சியை நினைத்துக் கொண்டு சிகப்பு வண்ண வரிகளையும் வாசிக்கலாம்... உங்கள் விருப்பப்படி நேர்மாறாகவும் இருக்கலாம்...! மனதில் தோன்றுவதைக் கருத்துரையிலும் சொல்லலாம்... மத்திய அரசு / மாநில அரசு மட்டுமல்ல, உலகத்தில் உள்ள எந்த அரசிற்கும் இப்பதிவுகள் பொருந்தும் என்பதை விட, உலகப் பொதுமறையாம் திருக்குறள் என்பதைக் கூறிக்கொண்டு...

மக்களை அன்போடும், அரவணைத்துக் கொண்டும் செயல்படும் ஒரு நேர்மையான ஆட்சியாளரை, மக்கள் வணங்கி வாழ்த்தி வளமுடன் வாழ்வார்கள்...

குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு (544)



என்னது நேர்மையா...? அப்படின்னா...? "ஆளுக்கொரு மரம் வளர்க்கணும்"ன்னா, ஆளாளுக்கு மரங்களை அழிச்சா மழை பெய்யுமா...? மழை இல்லேன்னா எவ்வளவு கஷ்டம் வரும்ன்னு சொல்லனுமா...? இதை விட மோசம் என்னான்னா, "நேர்மைன்னா கிலோ எவ்வளவு...?"-ன்னு கேட்கிற அரசாங்கம் இருந்தா என்ன செய்றது ? கொடுமையிலும் கொடுமை இது தான்.

துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு (557)


மண்ணில் பலவித பிரிவினையாலே - மனிதன் மிருகமாய் மாறுவதாலே... என்னே கொடுமை எங்கும் இந்நாளே - ஈனர்கள் தாண்டவம் பேய்களைப்போலே... அன்பையும் பண்பையும் தன்னலத்தால் பலி ஆக்கிடும் பேதையாய் - மனிதன் மாறியதேன் ஐயா...? மாநிலம் மேல் சில மானிடரால், என்ன மாறுதல் பாரைய்யா... மனிதன் மாறியதேன் ஐயா...?2 ஈஸ்வரன் அல்லா தாசர்கள் இன்றோ, பூசனை செய்தல் நாசத்தை அன்றோ... தேசம் சுடுகாடு ஆவது நன்றோ...? தெய்வத்தின் பெயரால் கொல்வதும் உண்டோ... நேசம் மறந்து ஆசை மிகுந்து மோசடி புரிபவனாய் - மனிதன் மாறியதேன் ஐயா...?2© நாஸ்திகன் கு.மா.பாலசுப்ரமணியம் M.S.விஸ்வநாதன் திருச்சி லோகநாதன் @ 1954 ⟫

அறிவை வளர்த்துக் கொள்ளும் அந்தணரது நூல்களுக்கும், இந்த உலகில் அறம் நிலைத்து நிற்பதற்கும் அடிப்படையாக இருப்பது, ஆட்சியாளர்களின் அறம் தவறாத நேர்மையான ஆட்சியே ஆகும்...

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல் (543)



நேர்மைன்னு, திரும்பத்திரும்ப பேசுற... திரும்பத்திரும்ப பேசுற... நானும் இப்போ திருப்பி திருப்பி உண்மைய சொல்றேன்...! எதுன்னாலும் எப்படியும் சமாளிச்சி வாழ்ற ஏழைகளின் வறுமை நிலையை விடக் கொடியது, தப்பு தப்பா ஆட்சி செய்றவன் கீழே வாழ்றது... இதை விட, மோசமான ஆட்சியிலே பணக்காரனா வாழ்றது கூட நிறையச் சிரமம்-ன்னு தெரியுமா உனக்கு...?

இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின் (558)


பாய் விரித்துப் படுப்பவரும் வாய் திறந்து தூங்குகிறார், பஞ்சணையில் நான் படுத்தும் நெஞ்சில் ஓர் அமைதியில்லை... கொஞ்சிவரும் கிளிகளெல்லாம் கொடும்பாம்பாய் மாறுதடா... கொத்தி விட்டு புத்தனைப் போல் சத்தியமாய் வாழுதடா... இல்லாத மனிதருக்கு இல்லையென்றும் தொல்லையடா... உள்ளவர்க்கு வாழ்க்கையிலே உள்ளதெல்லாம் தொல்லையடா ஆஆஆ... சொன்னாலும் வெட்கமடா ஆஆஆஆஆஆ... அன்னமில்லை என்றாலும் அமைதி கொண்ட மானிடனே... உன் வாழ்வை நினைக்கையிலே என் மனது தவிக்குதடா... வண்ணமுத்து மண்டபமும் வைரநகைப் பஞ்சணையும்... உன்னிடத்து நான் தருவேன் நிம்மதியை நீ தருவாய்... சொன்னாலும் வெட்கமடா, சொல்லாவிட்டால் துக்கமடா... துக்கமில்லாமல் வெட்கமில்லாமல் வாழுகிறேன் ஒரு பக்கமடா...© முத்துமண்டபம் கண்ணதாசன் K.V.மகாதேவன் T.M.சௌந்தரராஜன் @ 1962 ⟫

பிற்சேர்க்கை : ← இந்த மணியைச் சுட்டியால் (Mouse) சொடுக்கினால் குறளை வாசிக்கலாம்... கைப்பேசியில் வாசிப்பவர்கள் விரலால் சொடுக்கி வாசிக்கலாம்...

முந்தைய பதிவுகளில் பலரும் சொல்லி விட்டார்கள்... அவை செங்கோன்மை மற்றும் கொடுங்கோன்மை அதிகாரங்களில் உள்ள குறள்களின் குரல்கள்... இணைப்பை பிறகு சொல்கிறேன்... மற்றபடி உங்கள் மனதில் வேறு பாடலும் நினைவுக்கு வரலாம்... அதை மட்டும் கருத்துரையில் சொல்லாம, மேலே சொன்ன முக்கிய குறிப்புடன்.............




?

அரசியல் அதிகாரங்கள் தொடரும்... நன்றி...

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. ஆட்சியாளர்களிடம் காணாமல் போன முக்கியமான விஷயம் நேர்மையும் வாய்மையும்.

    பதிலளிநீக்கு
  2. நேர்மை வாய்மை இவற்றோடு கருணையையும் தொலைத்து விட்டார்கள்.

    பதிலளிநீக்கு
  3. இவைகள் அனைத்தும் தொலைந்து போனதற்கு அடிப்படை காரணம் மனிதநேயத்தை (ஈதல்) நாம் நமது குழந்தைகளுக்கு போதிப்பதை மறந்து விடுகிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகவும் சரி. நாம் நேர்மை உண்மை போன்றவற்றை வெளியேயிருந்து தான் தேடுகின்றோம்.

      நீக்கு
    2. கில்லர்ஜி, ஜோதிஜி, உங்கள் இருவரின் கருத்தையும் ஆமோதிக்கிறேன். கூடவே..... பெற்றோர் சொல்லிக் கொடுத்தல் ஒரு புறம் என்றாலும் மறுபுறம் அவர்கள் செயல்களிலும் அது இருக்க வேண்டும் இல்லையா. சொல்லிக் கொடுத்துவிட்டுச் செலயல்களில் இல்லை என்றால் குழந்தைகளுக்கு முரண்பாடாகவே தோன்றும். குழப்பம் வரும். ஒரு குழந்தை அதை அப்படியே பின்பற்றுலாம். மற்றொரு குழந்தை தவறான வழியில் செல்லக் கூடும். மற்றொன்று சுயமாகச் சிந்தித்து தன் பெற்றோர் செய்த தவறைசெய்யாமல் அதில் உள்ள நல்லதை மட்டும் பிரித்து எடுத்து செயல்படுத்தலாம். ஒரு வகுப்பறையில் 30 குழந்தைகளுக்கு ஒரே ஆசிரியர்தான் என்றாலும் எல்லாக் குழந்தைகளும் அப்படியே நல்லதைப் பின்பற்றுவதில்லையே....

      அப்படியே சொல்லிலும் செயலிலும் பெற்றோர் இருந்தாலும், அவர்களுடைய குழந்தைகள் எல்லோரும் ஒரே போலவா இருக்கிறார்கள்? ஒரே பெற்றோர் ஆனால் ஒவ்வொருகுழந்தையும் தான் பெறும் அனுபவங்களில் தன் சிந்தனைகளையும் எண்ணங்களையும் மாற்றிக் கொண்டுவிடத்தானே செய்கிறது. எனவே என்னதான் போதனைகள், உதாரணங்கள் இருந்தாலும் ஒவ்வொருவரும் அவரவர் எது சரி எது தவறு என்று உணர்ந்தால் மட்டுமே சாத்தியமாகும். பிரித்து ஆராயும் திறன் வேண்டும் இல்லையென்றால் இல்லை என்றால் நல்லதை இது சரி என்று கண்ணை மூடிக் கொண்டு கேள்வி கேட்காமல் பின்பற்றும் திறனேனும் வேண்டும்.

      இதில் கேள்விகேட்காமல் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதே இங்கு பெரும்பாலும் நடக்கிறது.பெற்றோராகவே இருந்தாலும் சரி, ஆசிரியராகஏ இருந்தாலும் சரி.

      எல்லா விரல்களும் ஒரே போல இருக்காது என்பது போலத்தான்....சுய சிந்தனை அதாவது நல்ல சுய சிந்தனை, சுய உணர்வு மிக மிக அவசியம்.

      கீதா

      நீக்கு
  4. சிறப்பான பகிர்வு.

    மனித மனம் இங்கே அழுக்காகி விட்டது. ஆதாயம் தேடியே அனைவரும் இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  5. அன்பறிவு தேற்றம்,அவாஇன்மை இன்நான்கும்
    நன்குடையான் கட்டே தெளிவு.

    அன்பு ,அறிவு, ஐயம் இல்லாமல் தெளியும் தெளிவு, அவா இல்லாமை ஆகிய இந் நான்கும்
    பண்புகளையும் நிலையாக உடையவனை செயல்களை ஆறுமாறு தெளியலாம்.

    அப்படி பட்டவர்கள் இருக்கிறார்களா? என்பது தான் கேள்வி இப்போது.


    இதனை இதனால் இவனமுடிக்கும் என்றாய்ந்து
    அதனை அவன்கண் விடல்.

    இவர் வந்தால் நாடு நலம் பெறும் ,நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வார் நாட்டுக்கு நலம் செய்வார் என்று யாரை நம்புவது ?

    பதிலளிநீக்கு
  6. 1954 கேட்ட கேள்வி தான் இப்போதும்.(முதல் பாடல்)
    நேசம் மறந்து மோசடி புரிபவனாக தான் மாறி வருகிறான்.
    மக்களுக்கு, நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதில் எல்லோரும் ஒரு புள்ளியில் இணைந்தால்(அரசியல் வாதிகள்) இந்த சண்டை சச்சரவு வருமா?

    ஆசை இல்லா மனிதன் எதை பற்றியும் கவலை இல்லாமனிதன் இருக்கிறானா?

    இயற்கையை அளித்து வருகிறான். தன் வளம் சேர்க்க பிறர் வளம் பறிக்கிறான்.

    எங்கும் மரங்கள் வீழ்ந்து கிடக்குது, பாதைகள், பாதைகள் நீண்டு போகிறது! எங்கு எதை நோக்கி போகிறான் ? அதுதான் தெரியவில்லை.



    பதிலளிநீக்கு
  7. டிடி வழக்கம் போல நீல எழுத்துகள் நாம் விரும்புவதைச் சொல்ல நம் மற்றொரு மனம் கேள்வி கேட்க...

    நம்மை ஆள்பவர்களில் நீதி நேர்மை, நியாயம் இதெல்லாம் தொலைந்து பல வருடங்கள் ஆகிவிட்டதே சுயநலம் ஓங்கி நிற்கும் போது....என்ன சொல்ல?

    யாரையும் நல்ல தலைவராகப் பார்க்க முடியவில்லையே....சாக்கடையில் எந்தச் சாக்கடை நல்லது என்ற நிலைமைதானோ?!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  8. நேர்மை உண்மை என்பது அரசியல்வாதிகளிடம் மட்டுமல்ல... நம்மிடமும் குறைந்து விட்டது.

    பிள்ளைகளுக்கு இதை எல்லாம் சொல்லி வளர்க்க தவறிவிட்டோம். குறிப்பாக மனிதாபிமானம், மனிதநேயம் எல்லாவற்றையும் குழந்தைகள் அறிய விரும்புவதில்லை... அவர்கள் உலகம் இப்போ செல் போனில்... உறவுமுறைக்கூட தெரியாமல் போய்விட்டது...

    நல்லரசு வரும் என்பதெல்லாம் கானல் நீராய்... பகல் கனவாய்த்தான் இருக்கும் இனி...

    நல்ல கட்டுரை அண்ணா...

    பதிலளிநீக்கு
  9. ஆக, உள் மனம்தான் படாத பாடு படுகிறது. ஏனென்றால் நாம் நினைப்பது அதையே. ஆனால் அது நடப்பதில்லையே.

    பதிலளிநீக்கு
  10. ஆட்சிப் பதவி, தன்நலம், கையூட்டு
    என்றலையும் அரசியல் தலைவர்களால்
    நாடு எங்கே உருப்படப்போகிறது!

    பதிலளிநீக்கு
  11. பிள்ளை களுக்கு எதையும்சொல்லித்தர வேண்டாம் நல்லவராக வாழ்ந்து காட்டினால் போதும் இம்முறை திரைப்பாடல்கள்இரண்டுதான் என்றாலும் சொல்ல வந்தது ஏராளம்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  12. நம்மை ஆட்சி செய்பவர்கள் எங்கேயிருந்து வருகிறார்கள்? வெளிநாட்டிலிருந்தா?

    அவர்கள் நம்மிடமிருந்தே உற்பத்தி ஆகிறார்கள்.

    நாம் காசு வாங்குகிறோம். அரசு வேலை நடக்க காசு கொடுக்கிறோம். அரசு இலவசமாக தருது என்றால் தன் மானத்தை விட்டு வாங்க வரிசையில் முன் நிற்கிறோம். அரசு இலவசமாக தரவில்லை என்றால் வாக்களிப்பதில்லை. வாக்களிக்கவும் வெட்கப்படாமல் காசு வாங்குகிறோம். அதிலும் நேர்மை நம்மிடம் இல்லை.

    நாம் மோசமானவர்களாக இருந்துவிட்டு, ஆட்சியாளர்கள் மட்டும் நேர்மையாக, ஒழுக்கமாக, நல்லாட்சி செய்பவர்களாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது, எந்த விதத்தில் அறிவுடைமை?

    பைக் திருடனைவிட சைக்கிள் திருடன் மேல் என்று நினைக்கிறோம். சுயேச்சையாக நல்லவர்கள் நின்றாலோ இல்லை சிறிய கட்சியிலிருந்து நல்லவர்கள் நின்றாலோ நமக்கு அவர்களுக்கு வாக்களிக்கும் மனம் வருவதில்லை. நம் பெண்ணுக்கு கணவரைத் தேர்ந்தெடுக்கும்போது, பிக்பாக்கெட் பரவாயில்லை என்று திருமணம் செய்துகொடுக்கிறோமா?

    பிரச்சனை முற்றிலும் மக்களிடம்தான். ஆட்சியாளர்களிடம் கிடையாது. வள்ளுவர் எழுதியது, முடியாட்சிக்கு. குடியாட்சியில், மக்கள்தான் நீதிபதிகள். தவறு அவர்களிடம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லைத்தமிழருக்கு ஒரு சபாஷ். மிகவும் அருமையான கருத்து.

      நீக்கு
  13. மனம் நீல எழுத்தில் உள்ளவற்றையே விரும்புது ஆனாலும் சிவப்பு வண்ணத்தில் என்ன இருக்குன்னும் பார்க்க ஆவலில் எட்டிப்பார்க்கிறோம் .இப்படித்தான் துவக்கத்தில் நல்லவரா இருக்கிற ஆட்சியாளரும் காலப்போக்கில் கிளிகளாயிருந்து பாம்பாய் மாறுகிறாங்க .மனிதனை அழிக்க வேறொன்றும் தேவையில்லை அவனாலே அவன் அழியப்போகிறான் .

    கையளவேதான் இதயம் வைத்தான் அதில் கடலளவு ஆசை வைத்தான் எனும் பாடல் நினைவுக்கு வருது .சீர்காழி ஐயாவின் குரலில் வரும்

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    நல்ல பதிவு. இராமாயணத்தில் அண்ணனின் பாதுகையை வைத்து அவன் திரும்பி வரும் வரை மனிதாபிமானத்துடன், தனக்கென ஆசைகள் ஏதுமின்றி மக்களுக்கு நல்லாட்சி தந்தான் பரதன். நம் ஆட்சியாளர்கள் ஆசைகளின் காரணமாக ஆட்சிக்கு வரும் பாதையிலேயே மனித நேயத்தை தொலைத்து விடுகிறார்கள் எனில், மக்களும் தங்களுக்கென ஒரு பாதையை வகுக்கத் தெரியாமல், தினமும் அல்லாடிக் கொண்டிருக்கின்றார்கள். இதில் யாரைக் குறைச்சொல்வது? பாடல்கள் வழக்கம் போல் நன்றாக உள்ளது. நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  15. அன்னமில்லை என்றாலும் அமைதி கொண்ட மானிடனே//
    இது சொல்கிறது எல்லா உண்மையையும்.
    அமைதி கொள்ள முடியாத பேராசை எல்லாரையும் ஆட்டிவைக்கிறது.
    பணத்துக்கும், குக்கருக்கும் ஓட்டு உரிமையை விட்டுக் கொடுக்கிறோம்.

    மக்களின் மனம் மாறாவிட்டால் ,தலைவர்கள் மாறப் போவதில்லை.
    அருமையான பதிவு தனபாலன்.பாடல்களும் ஆயிரம்
    அர்த்தங்களை அள்ளித் தருகிறது. மிக நன்றி.



    பதிலளிநீக்கு
  16. இரு பாடல்களும் இம்முறை தத்துவம் தத்துவம்...

    நாம் என்னதான் குரல் எழுப்பினாலும் கூக்குரல் போட்டாலும் நடக்கிறதுதான் நடக்கும்...

    பதிலளிநீக்கு
  17. இன்றைக்குள்ள அரசியல்வாதிகள் பலர் இப்படித்தானே இருக்கிறார்கள்

    பதிலளிநீக்கு
  18. அருமையான பதிவு ...வாழ்த்துக்கள்!...

    பதிலளிநீக்கு
  19. நேர்மை அழிந்து சுயநலம் பெருகிவிட்டது

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.