🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை...

உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது...? கத்தி - இல்லே; கோடாரி - இல்லே; ஈட்டி ம்ஹூம்; கடப்பாரை - இல்லே; அதுவுமில்லையா...? அப்புறம் பயங்கரமான ஆயுதம் ஆறறிவாகுமோ...? - அது ஆயுதம் இல்லையே; அட தெரிய மாட்டேங்குதே, நீயே சொல்லப்பா...! உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது...? நிலைக்கெட்டு போன நயவஞ்சகரின் நாக்கு தான் அது...!



© சக்கரவர்த்தித் திருமகள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் G.ராமநாதன் N.S.கிருஷ்ணன், சீர்காழி கோவிந்தராஜன் @ 1957 ⟫

கையில் கொஞ்சம் காசு இருந்தால், நீ தான் அதற்கு எஜமானன்; கழுத்து வரைக்கும் காசு இருந்தால், அதுவே உனக்கு எஜமானன்...! அனைவருக்கும் தெரிந்த முத்(து)தான பாடல்... இதை விட எஜமானன் நாம் பேசும் பேச்சு, அதிக வலிமை வாய்ந்தது... "பேசிய வார்த்தை உனது எஜமானன்; பேசாத வார்த்தைக்கு நீ எஜமானன்" என்றும், "நெல்லைக் கொட்டினால் அள்ளி விடலாம்; சொல்லைக் கொட்டினால் அள்ள முடியாது" என்றும் சொல்வார்கள்... போனால் வராததில் உயிர், நேரம், உட்படச் சொல்லும் ஒன்று !

யாகாவாராயினும் நாகாக்க, நாவினாற் சுட்ட வடு ஆறாது என்று சொன்ன நம்ம வள்ளுவர், அதிகாரம் 20 - பயனில சொல்லாமையில் என்ன சொல்லியுள்ளார் என்பதைக் கேள்வி பதில் மூலம் அறிவோம் வாங்க...

பதில்களை அறியக் கேள்விற்கு முன் சுட்டியைக் கொண்டு செல்லவும்... அலைபேசியில் பதிவை வாசிப்பவர்கள் கேள்வியைச் சொடுக்கவும்... கீழுள்ள கேள்வியும் (!)



மந்திரச் சொல்லாக மனதில் வைத்துக் கொள்ளக்கூடாதது எது...?

நன்றியும்... பாராட்டும்...

உலகத்தில் எல்லோராலும் இகழ்வாகப் பேசப்படுபவன் யார்...?
பலரும் வெறுக்கும்படி பயனில்லாத சொற்களையே சொல்லும் ஒருவன் தான்...

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும் (191)


நண்பர்களுக்குத் தீமை செய்வதைக் காட்டிலும் கொடியது எது...?
பல பேர் முன்பாக பயனற்ற பேச்சைப் பேசுதல் தான்...

பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலிற் றீது (192)


நல்ல பண்பில்லாதவன் என்பதை உலகிற்கு அறிவிப்பது எது...?
பயன் இல்லாத ஒன்றைப் பற்றியே விரிவாகப் பேசும் ஒருவனின் பேச்சு தான்...

நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை (193)


எந்த நன்மையையும் தராததோடு, இருக்கும் நன்மையையும் போக்குவது எது...?
பயனற்ற பண்பற்ற சொற்களை, பலரோடும் சொல்வது தான்...

நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து (194)


ஒருவனின் சிறந்த தன்மையும் சிறப்பும் நீங்கிப் போவது எதனால்...?
நல்ல பண்பு உடையவர்களும் பயன் இல்லாத சொற்களைச் சொல்லும் போது...!

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின் (195)


மனிதருள் பதர், அதாவது பயனற்றவன் என்று யாரைச் சொல்லலாம்...?
தன் சுயநலத்திற்காகப் பயனில்லாத சொற்களையே விரும்பித் தொடர்ந்து பேசுபவனைத் தான்...
பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல் (196)


பண்பாளர்கள் எப்போதுமே சொல்லக்கூடாதது எது...?
நன்மை இல்லாதவற்றைச் சொன்னாலும் சொல்லலாம், பயனில்லாத சொற்களைச் சொல்லவே கூடாது...
நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று (197)


பயன் இல்லாத சொற்களை ஒருபோதும் செல்லாதவர்கள் யார்...?
அருமையான பயன்களை ஆராய்கின்ற அறிவாளர்கள் தான்...

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல் (198)


மனமயக்கம் நீங்கிய குற்றமற்ற தூய அறிவுடையவர்கள் யார்...?
பயனில்லாத சொற்களை மறந்தும்கூட ஒருகாலத்தில் சொல்லாதவர்கள் தான்...

பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர் (199)


யாவரும் சொல்லவேண்டியதும் வேண்டாததும் எது...?
சொல்ல வேண்டியது பயன்தரும் சொற்கள்... சொல்லக்கூடாதது பயனில்லாத சொற்கள்...
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல் (200)



சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை... பொருளென்றும் இல்லை... சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை... விலையேதும் இல்லை...

© பாலும் பழமும் கண்ணதாசன் விஸ்வநாதன்-ராமமூர்த்தி 🎤 T.M.சௌந்தரராஜன், P.சுசீலா @ 1961 ⟫


நாம் பேசும் சொல்லின் வலிமையை அறிய இங்கே சொடுக்கி வாசிப்பதற்கு முன் இப்பதிவைப் பற்றி தங்களின் கருத்து என்ன...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. எல்லா அறிஞர்களும் ஞானிகளும் நாவை அடக்கத்தான் சொல்கிறார்கள்.அதிலிருந்தே அது எத்தனை வலிமை உடையது என்பது புரிகிறது. ஆனாலும் பல சமயங்களில் அது நம்மை வென்று விடுகிறது
    பதிவு நன்று

    பதிலளிநீக்கு
  2. வலைச் சித்தரே
    தங்களின் வலை வித்தைகள் பலவற்றைக் காட்டுகின்றது
    நா காப்போம்
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு


  3. உலகத்திலே பயங்கரமான ஆயுதம்
    நயவஞ்சகரின் நாக்குத் தான் - அப்ப
    நாக்கறிந்து நலம் விசாரி!

    நாம் சொன்ன சொல்கள்
    எம்மை ஆளும்
    நாம் சொல்லாத சொல்களை
    நாமே ஆளுவோம்!

    கணினி நுட்பம் கலந்த
    சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  4. குறள், தொழில்நுட்பம், அனுபவம் அனைத்தும் இணைந்து அருமையாகப் பகிர்ந்துகொள்ளும் விதம் நன்று.

    பதிலளிநீக்கு
  5. அன்புள்ள சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு வணக்கம்! உங்களது வலைத்தள வாசகர்களில் நானும் ஒருவன் என்பதனைச் சொல்ல வேண்டியதில்லை.

    நமது மூத்த வலைப்பதிவர் அய்யா திரு வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்கள், தனது வலைத்தளத்தில் ”நினைவில் நிற்கும் பதிவர்களும், பதிவுகளும்” என்ற தலைப்பினில் வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தும் தொடர் ஒன்றினை தொடங்கி எழுதி வருகிறார்.

    தங்களின் வலைத்தளத்தினை இன்று (23.06.2015) அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.

    அவரது வலைத்தளத்தின் இணைப்பு இதோ:
    நினைவில் நிற்போர் - 23ம் திருநாள்
    http://gopu1949.blogspot.in/2015/06/23.html

    பதிலளிநீக்கு
  6. http://panimalar.blogspot.com/2013/02/blog-post.html

    என்னக்கும் அப்படி தான் தோன்றியது

    பதிலளிநீக்கு
  7. குறளின் குரல் ,அதுவும் முதன் முதல் என்றதும் குறள் 'ஆடியோ 'வாய் இருக்கும் என்று நம்பி ஏமாந்து போனேன் :)

    பதிலளிநீக்கு
  8. சரியான நேரத்தில் சரியான கருத்துக்களை (அறிவுரைகளை) பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  9. வணக்கம்
    அண்ணா

    சிந்திக்கவைக்கும்வினாக்கள் குறள் விளக்கம் எல்லாம் வெகு சிறப்பாக தொகுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் நா.. காப்போம்.த.ம 8
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  10. வார்த்தை பற்றி முன்பு நான் ஒரு பதிவு எழுதி இருந்தேன் அது ஒரு கோணம் வலைச் சித்தரின் பரிமாணங்கள் மிளிருப் பதிவு. என் பதிவினை நேரம் கிடைத்தால் வாசித்துப் பார்க்கவும் சுட்டி இதோ
    http://gmbat1649.blogspot.in/2011/09/blog-post_30.html

    பதிலளிநீக்கு
  11. நாவை அடக்கினால் நாட்டையும் ஆளலாம் வழக்கம்போல குறள்களுடன் புதுமையான டெக்னிக்கலையும் ரசித்தேன் வாழ்க நலம்.

    பதிலளிநீக்கு
  12. தப்பு செய்வது நாக்கு! தண்டனையாக உடைபடுவது மூக்கு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனம் போகும் போக்கிலே
      வாக்கும் நாக்கும் போனால்
      உடைவது மூக்கு தானே என்பது
      உண்மை தான்
      ஆனால், அப்பாவி பல்லும்
      உடைபடுகிறதே !!

      பாவம் இல்லையா !!

      சுப்பு தாத்தா.
      www.subbuthathacomments.blogspot.com

      நீக்கு
  13. யாகாவாராயினும் நா காக்க என்று சொல்லி இருக்கின்றாரே குறளின் தந்தை. அதை வழிமொழிந்த அருமையான இடுகை சகோ. எதையும் பேசுமுன் & எழுதுமுன் அவ்வப்போது நினைவில் கொள்ள வேண்டிய இடுகை :) தக்க சமயத்தில் பகிர்ந்துள்ளீர்கள் . நன்றி :)

    பதிலளிநீக்கு
  14. தகுந்த பாடலுடனும் பழமொழி மற்றும் குறளுடன் நாவடக்கம் பற்றி விளக்கும் பகிர்வு வெகுசிறப்புங்க சகோ.

    பதிலளிநீக்கு
  15. டிடி சார், தங்களுக்கு வலைச்சித்தர் என்ற பெயர் ஏன் இப்ப புரிகிறது, வலையில் நடக்கும் சித்துவிளையாட்டினைப் பார்த்து,
    நாகாக்க, எவ்வளவு பெரிய விசயம், ஆனா முடியுமா? அதனால் எப்படியும் வலையமுடியும். ஆதனால் தான் இவ்வளவு,,,,,,,,,,,,,,
    அருமையான கருத்துக்கள் கொண்ட பதிவு. வாழ்த்துக்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  16. உண்மையாலுமே நீங்கள் வலைச்சித்தர்தான்.

    பயனுள்ள சொற்களைச் சொல்லியிருக்கிறீர்கள்.

    God Bless You

    பதிலளிநீக்கு
  17. நாவினை அடக்குவது கடினமான ஒரு பணி! அருமையான தொகுப்பு.

    பதிலளிநீக்கு
  18. கோபம் வரும்போது நாக்கு மூளையை விட வேகமாகச் செயல்படுகிறது என்றான் ஓர் அறிஞன்.
    அருமையான விளக்கங்கள் சித்தரே

    பதிலளிநீக்கு
  19. நாவடக்கம்...குறித்து அழகான விளக்கம் தந்து இருக்கிறீர்கள் அதில் விந்தையும் காட்டி நிற்கிறீர்கள். எக்காலத்துக்கும் பொருந்துவது இந்த நாவடக்கம்.

    நாம அதை அடக்கலாம் என் நினைத்து முடிப்பதற்குள் அது நம்மை முந்திவிடும்.

    ஒன்றும் இல்லாத ஒன்றுக்கு...பேசிக் கொண்டு இருப்பதை விட பேசாமல் இருப்பதே...பல சமயங்களில்...மனதுக்கு நிம்மதியாக இருக்கிறது.

    தம +1

    பதிலளிநீக்கு
  20. வெட்டி பேச்சு கூடாது என்று ஒரு புறம் இருக்க,

    சான்றோர் அவையிலே அவர்கள் பேசுகையிலே
    வெட்டி பேசுவதும் .
    தவறன்றோ..

    ஆக, ஒரு எண்ணம் ஏற்படுகையில், அந்த எண்ணம் சரி தானா என சீர் தூக்கிப் பார்த்து, விருப்பு, வெறுப்பு அன்றி, காய்தல், உவத்தல் தவிர்த்து
    அவ்வெண்ணத்துக்குச் சரியான சொற்களைத் தீர யோசித்து, தேர்ந்தெடுத்து, மேலும் வாய் வழி உதிரும் சொற்களைப்
    பேசித்தான் ஆக வேண்டும் என்ற நிலையிலே
    பேசவேண்டியவர்களிடம்
    பேசவேண்டியதை மட்டும்
    பேசுவது பண்பாம்.
    சொல்லுக சொல்லிற் பயனடைய வேண்டும்.
    சொல்லும் சொல்லும் சொல்பவனுக்கும் கேட்பவனுக்கும் பயன் அளிக்காது போயின் அது
    வெட்டி பேச்சே.


    சுப்பு தாத்தா.
    www.subbuthathacomments.blogspot.com
    www.subbuthatha72.blogspot.com

    பதிலளிநீக்கு
  21. பயனிலா சொல்லை சொல்லாதே! நாவை அடக்கு! என்ற கருத்தை தரும் அருமையான குறள்களையும் கருத்துக்களையும் வித்தியாசமான முறையில் பகிர்ந்து கொண்டமை சிறப்பு! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  22. பட்டறிவை பகரும் பகலவன் ஆனாயோ?
    தொட்டணைத் தூறும் மணற்க்கேணி ஆனாயோ?
    அய்யனின் ஆளுமையை அளிப்பதில் - அன்பரே!
    மெய்யான பத்தும் உன்னுள் உண்டய்யா!!!
    த ம +1
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  23. உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது?..
    நிலை கெட்டுப் போன நயவஞ்சகரின் நாக்கு தான் அது!..

    நாவடக்கம்.. அதுவே சிறப்பு!..

    அன்பும் அறனும் பேசி - நா எப்போது அடங்கும்?..
    சிந்தை சிறப்புடன் செம்மையுறும் போது!..

    நல்விருந்து - தங்களுடய பதிவு..
    வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
  24. நரம்பில்லா நாக்குக்கு இவ்வளவு குறள்களாக....!!!!!!!

    பதிலளிநீக்கு
  25. குறள் நெறி உங்களின் குரலில் இனிமை.


    தொடர்கிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  26. செலவழிக்கு முன் சம்பாதி .என்பார்கள். பேசுமுன் கேள், யோசி என்பார்கள்.

    நல்ல பதிவு. தொழில் நுட்பத்தில் கலக்குகிறீர்கள்.

    குரல் பதிவு கேட்கவில்லை.

    பதிலளிநீக்கு
  27. பேசிய வார்த்தைகள் நமக்கு எஜமானர்கள்; பேசாத வார்த்தைகளுக்கு நாம் எஜமானர்கள் என்பதை கேள்விகளும், அதற்கு பதில்களுமாக சொல்லியிருக்கிறீர்கள். தொழில் நுட்பத்துடன் நீங்கள் சொல்ல வந்த விஷயத்தை சுவாரஸ்யமாகச் சொல்லி இருப்பது நன்றாக இருக்கிறது.
    பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  28. பல சமயங்களில் அதிக பிரசங்கித்தனமாக பேசிவிட்டோமே என்று யோசித்துள்ளேன். நாவை அடக்குவது சிரமம்தான். ஆனால், நாவடக்கம் இல்லையெனில், இழப்புதான்.

    பதிலளிநீக்கு
  29. எல்லா மனித உறுப்புகளையும் தன்னிச்சியாக செயல்பட உருவாக்கிய இயற்க்கை நாவைமட்டும் முப்பத்தி இரண்டு பேருக்கு நடுவே வைத்ததன் காரணம் .... இதைத்தான் வள்ளுவப் பேராசான் யாகவராயினும் நாகாக்க .... என்கிறார் பதிவுக்கு பாராட்டுகள்....

    பதிலளிநீக்கு
  30. குரலை அழகாக அடக்கியிருக்கிறீர்கள்..!
    குறளையும் அழகாக அடுக்கியிருக்கிறீர்கள் ..!

    பதிலளிநீக்கு
  31. "யாகவராயினும் நா காக்க" என்ற வள்ளுவனின் குறளை மையம் கொண்டு நீங்கள் பகிர்ந்துள்ள கருத்துக்கள் அருமை !

    பதிலளிநீக்கு
  32. முன்பு படித்து அறிந்ததை விட உங்கள் பதிவில் இன்னும் தெளிவாக விளங்குகிறதே அண்ணா.
    இன்னொரு விசயம் அண்ணா, நான் ஐபோனில் உங்கள் பதிவைத் திறந்தேன். அதில் நீங்கள் சொல்லியுள்ளவாறு பார்க்க முடியாதே..
    ஐபோனில் படிப்பதற்கு ஒவ்வொரு கட்டத்திலும் சில நொடிகள் விரல் வைத்திருந்தால் திறக்கும் விருப்பப்பட்டியலில் 'open' என்பதைத் தேர்ந்தெடுத்தால் பதில் காட்டுகிறது. உங்களுக்குத் தெரியும் என்றே நினைக்கிறேன். ஒவ்வொரு போனிற்கும் குறிப்பு எழுதுவது கடினம் இல்லையா? தகவலுக்கு இங்கு பதியலாம் என்று நினைத்தேன் அண்ணா.

    பதிலளிநீக்கு
  33. தீயினால் சுட்ட புண் ஆறும்
    நாவினால் சுட்ட புண் ஆறாதே!

    நாவடக்கம் தேவை தான். பேச்சுக்கு மட்டுமல்ல உணவுக்குமே ம் நன்றி பதிவுக்கு!

    பதிலளிநீக்கு
  34. தனபாலன் சார்,

    கவனித்தீர்களா.. இப்போது உங்கள் பதிவுகளில் மிகுந்த கூர்மை தெரிகிறது. No words wasted .

    அது மட்டுமல்ல முந்தைய பதிவும் (விதிகள்) இந்தப் பதிவும் சேர்ந்து படிக்கும் போது நிறைய அர்த்தங்கள் (சொல்லாதது ) தானாகவே புரிகிறது.

    Great.

    God Bless You

    பதிலளிநீக்கு
  35. நல்ல பல கருத்துக்களை திருக்குறள் வாயிலாகச் சொல்லியுள்ளது அருமை. பாராட்டுகள் Mr DD Sir.

    பதிலளிநீக்கு
  36. ளே;வியும் பதிலுமான தங்கள் ரெக்னிக் அருமை.
    வலையை விட்டுப் பொகவே மனமில்லை.
    கருத்துகள் அதை விட சுப்பர் .
    இனிய வாழ்த்து டிடி

    பதிலளிநீக்கு
  37. நல்ல உத்தியில் செய்தியைச் சொல்லும் தங்களின் பாணிக்கு வணக்கங்கள், வாழ்த்துக்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  38. எது நல்லது எது தீயது என்பதை திருக்குறள் மூலம் அழகாக எடுத்துரைத்துள்ளீர்கள் . அனைத்தும் அருமை.

    பதிலளிநீக்கு
  39. அருமை. குறளும் பதிவும் அதன் தொழினுட்பமும் அருமை. நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.