🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



கடமை நம் கடமை...!

வணக்கம் நண்பர்களே... சபாஷ்..! நீங்க சொல்லப் போறதும் சரி...! பதிவைப் படிக்காதவர்கள் தலைப்பின் மேல் சொடுக்கிப் படித்து விட்டுத் தொடரலாம்... அந்தப் பகிர்வின் தொடர்ச்சியாக... நமக்கு நல்லவனாக இருந்தால் மாத்திரம் போதாது, மற்றவர்களுக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற குறிக்கோளோடு வாழும் பலரின் சமூகச் சேவைகளைப் படித்து அறிந்திருப்போம்... பலரைச் சந்தித்த எனது அனுபவத்தில், எந்தப்பதவியாக இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும், எதோ ஒருவிதத்தில் சமூகச் சேவையோடு வாழ்பவர்களுக்கு இந்தப் பகிர்வு சமர்ப்பணம்...


பலரும் சமூகச் சேவையைப் பற்றி எழுதியிருந்தாலும் அல்லது சொல்லியிருந்தாலும், நம்ம ஐயன் திருவள்ளுவர் சொன்ன இந்த ‘ஒப்புரவு’ எனும் சொல் தற்காலத் தமிழ் அகராதிகளில் இருப்பதாகத் தெரியவில்லை... வாழ்வதற்கான அர்த்தம், சமுதாய நலத்தை நாடுதல், தாம் வாழும் குடியைச் சிறப்பித்தலை; பொருட்பால்-அரசியலில் சொல்லவில்லை... அறத்துப்பால்-இல்லற இயலில் எப்படிச் சொல்லியுள்ளார் என்பதை ஒரு உரையாடல் மூலம் ஓரளவு சொல்லியுள்ளேன்...

அதிகாரம் : ஒப்புரவறிதல் = சமூகத்திற்குச் செய்ய வேண்டிய கடமை

வணக்கம் ஐயா... நலம் தானே... இன்றுள்ள சமூகச் சூழ்நிலையைப் பார்த்து வாய் பொத்தி, கேள்வி கேட்காம, அநியாயங்களைக் கண்டும் காணாம, வாழப் பழகணுமோ...? அதுக்குத்தான் வள்ளுவர் 'உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார்' என்று சொன்னாரோ...?

நம்ம அறிவுக்கேத்தபடி எப்படி வேண்டுமானாலும் புரிஞ்சிக்கலாம் தம்பி...! என் கடமை என்னவென்று எனக்கு நன்றாகவே தெரிந்தது... எந்தவொரு உதவியும் திரும்பச் செய்வார்கள்ன்னு எதிர்பார்த்து யாருக்கும் எந்த உதவியும் செய்யாதே, உன்னால் முடிகிற அளவிற்கு உதவி செய்ன்னு என் குழந்தைகளையும் வளர்க்கிறேன்... ஏன்னா அன்பைத் தவிர எதையுமே எதிர்பார்க்காத எனது பெற்றோர்களின் வளர்ப்பு...! பெயரில் தர்மர் என்று இருந்தாலும், கைம்மாறு கருதாத மழையைப் போல் கர்ணனின் கொடைக்கு ஈடாகுமா...? அப்படித்தான் எனது வாழ்க்கையும்...

211. கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு

“நலிந்தவன், ஊனமுற்றவன், பிச்சைக்காரன் இப்படிப் பலரையும் படைக்கும் கடவுளே... ஏன்...?" என்பதற்கு "இவர்களுக்கு உதவத் தான் உன்னைப் படைத்தேன்" என்று படித்திருக்கிறேன்... எந்த நிலையிலும் தளராமல், உங்கள் வாழ்க்கையில் பல முயற்சிகள் செய்து சம்பாதித்த பொருள்கள் எல்லாம் உதவுவதற்கே என்பதும், உழைக்க முடியாமல் பொருள் தேவைப்படுவோர்க்கும், வழி இல்லாமல் அவதிப்படும் பலருக்கும் நல்லதொரு பாதையைக் காட்டியதும் எனக்குத் தெரியும் ஐயா...

212. தாளாற்றித் தந்த பொருள்எல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு

இது இன்றைய வாழ்க்கை சிறக்கவும், எதிர்கால வாழ்க்கை மேலாக வளரவும், சமுதாயப் பொதுநலன் கருதி உழைக்கும் ஒரு வாய்ப்பு... உழைக்க முடியாதவர்களுக்கும், பிறர் துன்பங்களை அறிந்து உடனேயே உதவுவதை விட, வேறு எந்த நல்ல செயல்களும் எந்த லோகத்திலும் இல்லை...அதிகம் நான் படித்ததில்லை... என்னை நான் படித்தேன்... எதிரில் உள்ளவர்களையும் நானாக நினைப்பதால் பேச்சில் இனிமை, எளிமை, நளினம்... 'உலகத்தோடு ஒட்ட ஒழுகல்...' இப்போது உனக்குப் புரிகிறதா தம்பி...?

213. புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற

நன்றாகவே புரிகிறது ஐயா... படிப்பறிவு என்பது வெறும் தகவல்கள் தான்... நிறையப் படித்தவரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குப் பல உண்டு... அவர்களுக்கு நிறைய நல்ல குணம் இருக்கும். ஆனா பழகுவதற்குச் சங்கடப்படுவார்கள். அப்படியே பழகிப் பேசினாலும் என்ன சொல்கிறோம் என்பதையே தெரியாமல் எல்லோரிடமும் சண்டையும் சச்சரவும் தான்... இதை ஆணவம் என்பதா...? இல்லை வீண் வாதம், பிடிவாதம் என்பதா...? எல்லா உயிர்களும் ஒத்த தன்மையானது என்பதை அறியாத இவர்களுக்கு உதவுவது என்பது தெரியுமா...? ம்... பிணம் தான்... பிணம் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறதுன்னும் தெரியாது; தன்னால் நாற்றம், சுகாதாரக் கேடு இவை எல்லாம் பிறருக்கு வரும் என்பதையும் உணராது, அது பாட்டுக்குக் கிடக்கும்...!

214. ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்

தம்பி, கோபம் என்பதே வரக்கூடாது... எந்தவிதத்தில் உயர்ந்தாலும் பணிவு மட்டும் இல்லையென்றால் எல்லாமே வீண் தான்... என்னை விடுப்பா... சுயநலம் இல்லாத பொதுநல நோக்குடன் வாழ்கின்ற பேரறிவாளர்கள் பலர் இருக்காங்க... அவங்க காசு பணமெல்லாம் ஊர் மக்கள் உட்படப் பலருக்கும் பயன் தரும் நீர் நிறைந்த ஊருணியைப் போல உதவுதப்பா...

215. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு

ஏதோ சில நிறுவனங்கள் Scouts, NCC போன்ற சமூகச் சேவையை ஒரு பகுதியாகத் தங்கள் பயிற்சிகளில் திணித்திருக்கிறார்கள். மற்றபடி சமூகச் சேவையைப் பற்றி நம் வளரும் இளைஞர் சமுதாயத்திற்கு எவ்வளவு தூரம் விழிப்புணர்வு தேவை...? அப்புறம் இது அத்தியாவசியமான செயல்பாடுன்னு நினைக்கணுமில்லையா...? ம்... சும்மாவா சொன்னாங்க ஐயா... உங்களை மாதிரி உள்ளவங்ககிட்டே இருக்கிற செல்வமும் அறிவும், ஊருக்குள்ளே பழமரம் பழுத்திருப்பதைப் போலப் பலருக்கும் பயன் தருகிறதைய்யா...

216. பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்

சரி தானப்பா... வாழை மரத்தின் எல்லாப் பாகங்களுமே மனிதனுக்கு உதவுகிறது இல்லையா...? அது மாதிரி உதவி செய்ய ஆரம்பித்தாலே பெருந்தன்மை தானா வந்துடும்... நடுநிலைப் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் 10 மணி நேரமாவது சமூகத் தொண்டு செய்தால் தான் உயர்நிலைப் படிப்பு என்றிருந்தால் நன்றாக இருக்கும்... அவர்களும் சமூகச் சேவை செய்து பழகப்பழக, அதில் ஒரு ஈடுபாடு ஏற்பட்டு, பிற்காலத்தில் அவர்கள் சமூகத்திலும் சிறப்பான கவனம் செலுத்த முடியும் என்பது என் கருத்து... சமூகச் சேவை என்பது மனித சமுதாயத்தைப் புரிந்துகொள்ள உதவும் ஒரு சாதனம்; மற்றவர்களுக்குப் பரிவுடன் உதவி செய்வது ஒரு பொறுப்பல்ல...ஒரு கடமை... ஒரு அரிய வாய்ப்பு...

217. மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்

சிறப்பாச் சொன்னீங்க... இந்த மாதிரி எண்ணம் இருக்க வேண்டும்... சமூகச் சேவை என்றால் நமது bio-data-வை அலங்கரிக்கும் தகவலும் இல்லை, சுய தம்பட்டம் அடித்துக்கொள்ளும் விசயமும் இல்லை என்பதும் புரிகிறது ஐயா... அதைவிடப் பணம் அல்லது பொருள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உதவி செய்யத் தயங்கவே மாட்டீர்கள் என்பது தான் ஐயா சிறப்பு...

218. இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்

மற்றவர்களுக்கு உதவி செய்ய முடியாத சமயத்திலே தான், எனது வறுமை எனக்குத் தெரிவதை விட, உதவி செய்ய முடியவில்லையே எனும் வருத்தம் தான் அதிகம் இருக்கும்... சமூகச் சேவை எனும் எண்ணமே, நம்மை நம் சொகுசுப் போர்வையிலிருந்து வெளிவரச் செய்து, உலக நடப்பைப் பார்க்கத் தூண்டும்... நாம எல்லோருமே ஒருவரை ஒருவர் சார்ந்து இருக்கும் போது, பகிர்ந்து கொள்வதே வாழ்க்கையின் லட்சியமாக இருக்கணும்...

219. நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யாது அமைகலா ஆறு

சமூகச் சேவையால் கேடு வருமென்றாலும், சொந்த பிற நலன்களை இழக்க வேண்டியிருந்தாலும், சமுதாயத் தொண்டில் தன்னை இழந்து ஈடுபட்டு, துன்பம் வந்தாலும் பரவாயில்லையென்று தன்னை விற்றாவது ஒருவர் பெறுவதற்குத் தகுந்த சிறப்பை பெற்றவர்கள் ஐயா நீங்கள்... உங்களிடம் பேசியதில் பணிவையும், நாம் எப்படி நம்முடைய குழந்தைகளையும், வயதானவர்களையும், நோயாளிகளையும், ஊனமுற்றோர்களையும் நடத்த வேண்டும் என்பதையும் கற்றுக் கொண்டேன்; வாழ்க்கையைப் பற்றி ஒரு புதுப் பரிமாணம் கிடைத்தது ஐயா... நன்றி... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

220. ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து

பதவி வரும் போது பணிவு வர வேண்டும்... துணிவும் வர வேண்டும் தோழா... பாதை தவறாமல், பண்பு குறையாமல் பழகி வர வேண்டும் தோழா... அன்பே உன் அன்னை... அறிவே உன் தந்தை... உலகே உன் கோவில்... ஒன்றே உன் தேவன்... மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்... அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்... உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்... அந்த ஊருக்குள் எனக்கொரு பெயர் இருக்கும்... கடமை அது கடமை... கடமை அது கடமை

© தெய்வத்தாய் வாலி விஸ்வநாதன்-ராமமூர்த்தி T.M.சௌந்தரராஜன் @ 1964 ⟫

தங்களின் கருத்து என்ன நண்பர்களே...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. ஒரு உரையாடல் போல அமைத்து நல்ல வள்ளுவரின் நல்லபால் கருத்துகளை நயமுடன் சொல்லியிருக்கிறீர்கள். நன்று.

    பதிலளிநீக்கு
  2. வாழ்க்கை என்பது வாழ்வதற்கு மட்டுமல்ல,
    பிறரை வாழ்விப்பதற்கும்தான்
    அருமையான கருத்துக்கள்
    எளிமையான குறள்களின் மூலம்
    பகிர்ந்தது அருமை ஐயா
    நன்றி
    தம 3

    பதிலளிநீக்கு
  3. ரொம்ப நாள் முன்பு படித்த குறள்களை ஞாபகப் படுத்தி விட்டீர்கள் .211 ம் குறள் எனக்கு கடவுள் மீது இருந்த ஆதங்கத்தை யும் எனக்கு வெகு நாட்களாக இருந்த சந்தேகத்தையும் தீர்த்தது. பாராட்டுக்கள் .

    பதிலளிநீக்கு
  4. சமூகச் சேவை செய்து இறை அருள் நாடும் சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு அன்பான வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  5. தனபாலன் உரை என்று தனியே உருவாக்கிடலாம் .அனைத்தும் சிறப்பு .
    அதிகம் அறிந்தறியாத அதிகாரத்தின் குறள்களை இலக்கியமைக்கு பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  6. அருமையான கருத்துகள் விளக்கங்கள் தனபால் நன்றி !

    தனக்காக மட்டுமே வாழாமல் பிறருக்காகவும் வாழ வேண்டும் இல்லையா அருமை !

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் சகோதரர்
    தமிழ் மெத்த படித்தவர்கள் கூட சிந்திக்காத என்ன ஒரு சிந்தனை! தனக்கு என்று வாழ்வது சுயநலம். பிறருக்கென வாழ்வதே தான் போது நலம்! வள்ளுவனின் வரிகளூடே நீங்கள் பேசியது போன்ற ஒரு உணர்வு. சிறப்பான கருத்துகளைத் தாங்கிய பதிவுக்கு எனது அன்பான வாழ்த்துகளும் பாராட்டுகளும் சகோதரரே. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  8. திரு டி.என்.முரளிதரன் அவர்களின் கருத்தே என் கருத்தும்.

    திருக்குறளுக்கு இருக்கும் பரிமேலழகர் உரை,மு.வ உரை, மணக்குடவர் உரை, கலைஞர் உரை. சாலமன் பாப்பையா உரை ஆகியவற்றோடு இனி திண்டுக்கல்லார் உரையையும் சேர்த்துக் கொள்ளலாம்.

    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  9. படித்து, மறந்துப் போன திருக்குறள்களைலாம் நினைவுப் படுத்திட்டீங்கண்ணா!

    பதிலளிநீக்கு
  10. பொன்னெழுத்துக்கள்..
    நாம் வாழுகின்ற வாழ்க்கை பிறரையும் வாழ்விப்பதற்கே!...
    இனிய குறட்பாக்களுடன் பகிர்ந்த அன்பின் இனிய தனபாலன் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  11. அருமையான குறள்கள் அருமையான எளிய விளக்கம்.அனைவரும் அறியவேண்டிய கருத்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. உங்களின் பதிவுகள் மூலமாகத்தான் திருக்குறள் விளக்கங்கள் படிக்க முடிகிறது ,வாங்கி வைத்த திருக்குறள் புத்தகங்களை படிக்க நேரம் இன்னும் கிடைப்பதில்லை .தொடருங்கள் ,தொடர்கிறேன் !
    த ம 7

    பதிலளிநீக்கு
  13. மிக அருமையான சிந்தனைக்கருத்துக்கள். குறள் எடுத்துக்காட்டுடன் விளக்கங்கள். சிறப்பான பகிர்வு. நன்றி.

    பதிலளிநீக்கு
  14. குறள்களும், உங்கள் 'குரலில்' அதன் விளக்கமும் அருமை!!

    பதிலளிநீக்கு
  15. மிக, மிக அருமையான பதிவு. ஒவ்வொரு பதிவையும் சிறப்பாக செய்ய நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அற்புதம். பிறருக்கு உதவும் குணம் உங்களிடம் அதிகமாக இருப்பதை நீங்கள் எழுதும் டெக்னிகல் பதிவுகளிலிருந்தே தெரிந்துக்கொள்ள முடிகிறது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  16. ஆழமான ஒரு கருத்து, சிந்தனை DD! குறள்களால் குரல் கொடுத்து நல்ல நல்ல கருத்துக்களை அழகாகச் சொல்லிச் செல்லும் விதத்தை எப்படிப் பாராடுவது என்று தெரியவில்லை!

    எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே! அது நல்லவனாவதும், தீயவனாவதும் பெற்றோர் வளர்ப்பினிலே! ஒவ்வொரு குழந்தையும் பிறந்த பிறகு தனக்கு ஏற்பரும் அனுபவத்தினால், அதன் மூளையில் ஏற்படும் ரசாயன் மாற்றங்களினாலும், பரம்பரையாக வரும் ப்ழக்க வழக்கங்களினால் மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்களினாலும் தான் மனிதனாக வரும் போது நமது குணாதிசயங்கள் மாறி இந்த உலகில் ஒவ்வொரு மனிதனும் தனித் தனியாக யாரையும் யாரோடும் ஒத்துப் பார்க்க முடியாத வகையில் உருவாகின்றனர் என்பதுதான் மன உளவியல் சொல்கின்றது. எனவேதான் நமது முன்னோர்கள் குழந்தை கருவில் உருவாகும் போதே நாம் நல்ல விஷயங்களை மட்டுமே பேச வேண்டும், நல்ல விஷயங்களை மட்டுமே கேட்கவேண்டும், பார்க்க வேண்டும், படிக்க வேண்டும், நமது மனதும் சிந்தனையும் தூய்மையாக இருக்க வேண்டும் என்று சொல்லியது! குழந்தை பிறந்த பின்னும் இதையே நாம் பின்பற்றினால், நல்ல விதைகளை அவர்கள் மனதில் தூவினால் அவை பின்னால் நல்ல மரங்களாக வளர்ந்து மற்றவர்களுக்கும் நிழல் கொடுக்கும் நல்லவர்களாக வளர்வார்கள்.

    மிக மிக நல்ல பதிவு DD! எங்கள் பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  17. ஒப்புரவு ஒழுகு என
    துப்புரவாக எடுத்து
    சிறப்புடன் இயம்பியமைக்குப்
    பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  18. Muthal kural ennai migavum eerthathu, ungalai pola thiruvalluvarathu thirukkuralgalai nangu eduthu solpavargal arithu. Migavum rasithen sir.
    Tamil Manam +1

    பதிலளிநீக்கு
  19. குறள்களை அருமையான விளக்கத்தோடு தொடர்ந்து அளித்து வருவதற்குப் பாராட்டுகள் தனபாலன் சகோ. அருமையா இருந்தது. :)

    பதிலளிநீக்கு
  20. வள்ளுவர் எளிதாக குறள் எழுதிவிட்டார். தனபாலன் சார் கொஞ்சம் கஷ்டப்பட்டு நமக்கு எளிதாக புரியும்படி விளக்கியுள்ளார். ரொம்ப கஷ்டமா இருந்தாலும் மனம் தளராமல் முயற்சித்து
    நடைமுறை படுத்திகொண்டு நாமும் பயனடைவோம்

    பதிலளிநீக்கு
  21. பிழிந்து தந்த திருக்குறள் கருத்துகள் அருமை.
    மிக நன்றாக எழுதுகிறீர்கள் டிடி.
    மிக்க நன்றி.
    இனியவாழ்த்து
    வேதா.இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  22. கடமையை கச்சிதமாக கவனப்படுத்தியுள்ளீர்கள். பதிவிற்கும், பகிர்விற்கும் நன்றி...

    பதிலளிநீக்கு
  23. திருக்குறள்கள் மூலம் மிக அருமையான எளிமையான அறிவுரைகள். பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  24. திருக்குறளுக்கு தங்களின் பாணியில் அழகாக விளக்கம் தந்துள்ளீர்கள்...சகோ...மேலும் தொடருங்கள்.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  25. மீண்டும் ஒருமுறை திருக்குறள்களை நினைவு கூற வைத்தமைக்கு நன்றி. மாதம் ஒருமுறையாவது திருக்குறள் பதிவினை எதிர்பார்க்கிறோம். நேரமில்லாவிட்டால் மீளபதிவிடுங்கள். அதனால் மீண்டும் மீண்டும் படிக்க, நினைவில் பதிக்க வாய்ப்புள்ளது.

    பதிலளிநீக்கு
  26. புதுமையான அருமையான விளக்கம்
    அனைவருக்கும் அவசியமான கருத்துடன் கூடிய
    பதிவினை சுவாரஸ்யத்துடன் தொடர்ந்து தருவதற்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  27. உலகில் வாழ்பவர்கள் ஐயா திருவள்ளவர் கூறியபடி ஒரு திருக்குறள்படி வாழ்ந்தாலே போதும். விளக்கம் அருமை நண்பரே.

    பதிலளிநீக்கு
  28. பல நல்ல விஷயங்கள் கேட்டுத்தெரிவது.பல நல்ல விஷயங்கள் பார்த்துத் தெளிவது. இன்னும் சில விஷயங்கள் படித்துத் தெரிபவை எல்லாவற்றையும் வாழ்ந்து காட்டுபவர் மூலம் கற்பதே சிறந்தது. நடக்கக்கூடியது. ஒருவனின் குணாதிசயங்கள் அவன் மூன்று நான்கு வயதுக் குழந்தையாய் இருக்கும் போதே படிப்பிக்கப் பட்டு விடுவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள் ஆகவே சிறார்களின் பெற்றோர் வாழ்ந்து காட்டுவதே சிறந்தது என்பது என் அபிப்பிராயம் குறள் மூலம் பல விஷயங்களை அலசியது தனபாலனின் ட்ரேட் மார்க். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  29. குறள்கள் தேர்வும் சரி விளக்கமும் சரி அருமை!

    பதிலளிநீக்கு
  30. அருமையான விளக்கவுரையும் குறளும் சேர்த்தவிதம் பாடல் மிகவும் பிடிக்கும்

    பதிலளிநீக்கு
  31. அருமையான விளக்க உரைகளுடன் அமைந்த பயனுள்ள பதிவு!
    பகிர்விற்கு நன்றி! த.ம. 16

    பதிலளிநீக்கு
  32. சிறந்த திருக்குறள் விளக்கம்
    ஒப்புரவு போன்ற பல சொல்
    மூடப்படவில்லை, மறைக்கப்படவில்லை
    நம்மாளுகள் - அதனை
    கையாளா விட்டாலும்
    தாங்கள்
    பாவித்துக்காட்டி விட்டீர்களே!

    பதிலளிநீக்கு
  33. அருமையான பதிவு! நல்ல பல கருத்துகளை தெளிவாக, எளிமையாக வழகியமைக்கு பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  34. நல்லவற்றை கற்று கொள்ளவும் மற்றவருக்கு உதவுவதையும் விட வேறு என்ன பெரிதாக செய்து விட முடியும் இந்த சிறிய வாழ்கையில்

    பதிலளிநீக்கு
  35. வாழ்வதற்காக பிறந்தோம், அதில் பிறரும் பயன்படும்படி வாழும் வாழ்வே உயர்ந்தது. நல்ல விசயங்கள் சொன்ன திரு.தி.த சகோவுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  36. மிக நீண்ட நாளுக்கு பிறகு உங்கள் விளக்கத்தில் திருக்குறள் பதிவு! படித்தேன்! ரசித்தேன்! அருமை! அடிக்கடி தொடருங்கள்!

    பதிலளிநீக்கு
  37. சமூகப் பற்று உள்ளவர்கள் யார் சொன்னாலும் எது சொன்னாலும் நிறுத்த மாட்டார்கள். இது அவர்கள் இரத்தத்தில் ஊறிய செயற்பாடாக இருக்கும். வள்ளுவர் வாக்குகளை மிகச் சிறப்பாகத் தந்துள்ளீர்கள்

    பதிலளிநீக்கு
  38. முரளி சார் சொன்னது போல் டி.டி. அண்ணா உரை என தனியவே போடலாம் போல அருமை அண்ணா.

    பதிலளிநீக்கு
  39. அருமையான விளக்கம் தனபாலன் அண்ணா.

    இந்த மாதிரி நான் பள்ளியில் படிக்கும் பொழுது சொல்லிக் கொடுத்திருந்தால் திருக்குறளைச் சாய்ஸ் ல் விட்டிருக்கமாட்டேன்.

    இப்பொழுது உங்களின் கருத்துப் பெட்டியில் ஈஸியாக கருத்திட முடிகிறது. நன்றி

    பதிலளிநீக்கு
  40. "//உதவி செய்ய ஆரம்பித்தாலே, பெருந்தன்மை தானா வந்துவிடும்//" . உணர்ந்து எழுதியிருக்கிறீர்கள் என்று புரிகிறது.

    மிக அழகாக தேவையான இடத்தில் குறளையும் சேர்தத்து மிகவும் அருமை.

    பதிலளிநீக்கு

  41. வணக்கம்!

    இல்லா இடத்தின் இயலாமை தான்போக்கி
    எல்லாம் அளிப்போம் இனி!

    பதிலளிநீக்கு
  42. வணக்கம் அண்ணார் அவர்களே! மிக நேர்த்தியாக எடுத்துச்சொல்லப்பட்ட கருத்துரை...அனைவரும் செயற்படுத்தினால் நீங்கள் சொல்வதைப்போல் வாழும்போதே சொர்க்கமாக அமையும்....பகிர்விற்கு வாழ்த்துக்களுடன் நன்றிகள் .

    பதிலளிநீக்கு
  43. வணக்கம்
    அண்ணா

    உலகப்பொது மறை சொல்லிய கருத்துக்களை மிகநேர்த்தியாக எழுதியுள்ளீர்கள்எல்லோரும் இதை கடைப்பிடித்தால் வாழ்வு நன்றாக அமையும் பகிர்வுக்கு வாழ்த்துக்கள் அண்ணா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  44. நீஈஈண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு தமிழிலக்கிய வகுப்பிற்குள் சென்று வந்ததுபோல் உள்ளது.

    பதிலளிநீக்கு
  45. மிக அருமை. கடமையோடுக் கருத்தாகத் திருக்கிறலஈYஊM ஆல்லீK KஓDஊKKஈரிற்Kஆல் DHஆணாBஆஆளாண். ஏள்ளாஆMஏ PஆDஈKKஆVஊM Mஆணாத்Hஈள் Pஆத்HஈYஆVஊM எர்ராMத்Hஆஆண். Wஆண்ரீ.

    பதிலளிநீக்கு
  46. அடடா! ஒவ்வொரு குரளையும் உங்கள் பாணியில் விளக்கி தனித் தனி பதிவுகளாய் போட்டிருக்கலாமே... இத்துனை நல்ல சமாச்சாரம் ஏதோ 'டீசர்' பார்த்தது போல மிக வேகமாக மனதில் முகம் காட்டி போனார்ப் போல ஒரு உணர்வு.

    மிக நன்று. தற்காலத்திற்கு வேண்டிய பதிவு.

    God Bless You

    பதிலளிநீக்கு
  47. வணக்கம் சகோதரா ! அறிவுரைகள் குறள்களோடு, விளக்கமும் தந்து அசத்தி விட்டீர்கள். உதவும் மனப் பான்மையை வளர்த்துகொள்வது அவசியமே என்று அழகாகவும் எளிமையாகவும் உரைத்தமைக்கு நன்றி ! வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
  48. அருமையான பகிர்வு தங்கள் மனம் போல வாழ்வும் சிறக்கும் வாழ்த்துக்கள் சகோதரா .

    பதிலளிநீக்கு
  49. நல்ல பதிவுதான். ஆனால், நான் எதிர்பார்த்து வந்தது வேறு.

    "பலரைச் சந்தித்த எனது அனுபவத்தில், எந்தப் பதவியாக இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும், எதோ ஒருவிதத்தில் சமூகச் சேவையோடு வாழ்பவர்களுக்கு இந்தப் பகிர்வு சமர்ப்பணம்" என்று எனக்கு அனுப்பியிருந்த இந்தப் பதிவு பற்றிய மடலில் நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்களா? அதனால், தன்னலமற்ற சமூகச் சேவகர்கள் பலரைப் பற்றிய பதிவு இது என்று நினைத்து விட்டேன். பரவாயில்லை, இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், ஒரு குறை! 'ஊனமுற்றவர்கள்' எனும் சொல்லாட்சியைத் தவிர்க்கலாமே? 'மாற்றுத்திறனாளிகள்' என அழைத்தால் மகிழ்வாக இருக்கும்.

    மேலும், பிச்சைக்காரர்கள் வரிசையில் மாற்றுத்திறனாளிகளைச் சேர்ப்பதும் உள்ளத்தை வருத்துகிறது! பிச்சைக்காரர்கள் சோம்பேறிகள்! ஆனால், மாற்றுத் திறனாளிகள் மிகப் பெரும்பாலானோர் உழைத்து முன்னேறுபவர்கள். "தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு" எனும் குறளில் வரும் 'தக்கார்' என்பதை நீங்கள் 'இயலாதவர்கள்' என்று புரிந்துகொண்டு அப்படியொரு விளக்கத்தை அளித்திருக்கிறீர்கள். உண்மையில், அதற்குப் பொருள் அஃது அன்று! 'தக்கார்' என்பதற்குத் 'தகுதியுடையவர்' என்பதுதான் பொருள். இக்காலத்தில், ஆங்கிலத்தில் 'Deserve' என்கிறோம் இல்லையா? அதைத்தான் வள்ளுவர் அந்தச் சொல்லால் குறிப்பிட்டுள்ளார். 'முயன்று பெற்ற செல்வம் அனைத்தும் தகுதியுடையவர்களுக்கு உதவுவதற்காகவே' என்பதே அதன் பொருள். பார்க்க: http://www.tamildictionary.in/thirukkural-detail/Oppuravaridhal/Thaalaatrith-Thandha-Porulellaam

    'திருக்குறள்' மிக மிக நுட்பமானது. ஒரு சொல்லைத் தவறாகப் புரிந்துகொண்டாலும் மொத்தப் பொருளே மாறிவிடும்! எச்சரிக்கையாக இருங்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொன்ன பொருள் சரி தான்... ஆனால் அதைப் பற்றி குறிப்பிடாமல் "பலருக்கும் நல்லதொரு பாதையைக் காட்டியதாக" சொல்லி உள்ளேன் ஐயா... அதற்கான தொடர்பு பதிலை அடுத்த குறளில் அய்யன் சொல்லியுள்ளார் : "பிறர் துன்பங்களை அறிந்து உடனேயே உதவுவதை விட, வேறு எந்த நல்ல செயல்களும் எந்த லோகத்திலும் இல்லை..."

      /// பாத்திரம் அறிந்து பிச்சை போடு, தனக்கு மிஞ்சி தான் தானமும் தர்மமும் என்பதெல்லாம் தோற்றவர்களின் / சோம்பேறிகளின் புலம்பல்கள்... கொடுக்கும் குணம் வந்தால், கெடுக்கும் நிலையே வராது... விதைத்தால் - தானே பல மடங்கு விளையவும் செய்யும்... /// <--- இந்த பகிர்வை வாசிக்க சொடுக்குக : வாழும் காலத்திலேயே சொர்க்கம்...!

      நன்றி...

      நீக்கு
  50. ஐயா ரொம்ப அருமை! உரைநடையில் குறளுக்கு உரை என்பது புதுமை மட்டுமல்ல; புரட்சியும் கூட! எப்படி ஐயா உங்களுக்கு மட்டும் புதுப் புது சிந்தனைகள் வந்துகொண்டே இருக்கிறது..!

    பதிலளிநீக்கு
  51. @திண்டுக்கல் தனபாலன் நல்லது ஐயா! ஏதோ, நீங்கள் மிகுதிக்கண் மேற்சென்று இடித்தல் பொருட்டே நட்பென்று மேற்கோளிட்டதால் நட்புமுறையில் சுட்டினேன். தவறாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் எனத் தெரியும். :-)

    பதிலளிநீக்கு
  52. அனைத்து விளக்கங்களும் மிகத் தெளிவாகவும் சிறப்பாகவும் உள்ளன.

    பாராட்டுகளும் நன்றியும் தனபாலன்.

    பதிலளிநீக்கு
  53. புகழ்ச்சிக்காக சொல்லவில்லை...திருக்குறளுக்கு எத்தனையோ தெளிவுரைகள் வந்துள்ளன... அவற்றில் சிறந்தவைகளுக்கு ஈடாக உள்ளன உங்களின் பொருள் விளக்கம்.

    முக்கியமாய், உரையாடல்நடையில்... இன்றைய நவீன எடுத்துகாட்டுகளுடன் !

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    பதிலளிநீக்கு
  54. கருத்துக்கள் அத்தனையும் அதற்Kகான குறள்களும் அனைத்தும் அற்ப்புதம்.... நீண்ட இடைவேளைக்கு பின் பதிவுகளைப் படிக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  55. சிந்தனையைத் தூண்டும் பதிவு. முன்னுதாரணமாக வாழ்வதற்கு இதுபோன்ற பதிவுகள் மிகவும் உதவும். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  56. சிறப்பான பகிர்வு தனபாலன். 214 ஆம் குறள் விளக்கம் வேறு ஒரு பாதையைத் திறந்து தெளிவுபடுத்தியது. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  57. ஒரே பதிவில் எவ்வளவு செய்திகள். வியப்பாக உள்ளது. பள்ளி நாள்களில் நீதி வகுப்புகள் நடக்கும். அவ்வாறான ஒரு நீதி வகுப்பிற்குச் சென்றுவந்ததுபோல் இருந்தது, உங்களதுஇப்பதிவைப் படித்த பின்னர். நன்றி.

    பதிலளிநீக்கு
  58. அய்யா,
    எளிய தமிழில் யாவரும் அறியக்
    குறளைக் கொண்டு செல்லும் இப்பணி வாழ்க! வளர்க!!

    பதிலளிநீக்கு
  59. அருமை. குறள்களை சொன்னது மட்டுமல்லாது அருமையான பாடலையும் தந்து நெகிழ வைத்து விட்டீர்கள்.நமது வலைத்தளத்தில்: http://newsigaram.blogspot.com

    பதிலளிநீக்கு
  60. காலத்துக்கு ஏற்ற மாதிரி விளக்கம் குடுத்திருகீங்க, ரெம்ப சுலபமா புரிஞ்சிக்க முடியுது. இதே முயற்சியை எல்லா குறளுக்கும் பண்ணுங்க அண்ணா......

    பதிலளிநீக்கு
  61. சிறப்பான விளக்கங்களுடன் பகிர்வு மிக அருமை..... தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  62. 'ஒப்புரவு' இன்றைய அகராதிகளில் தொலைந்து போய்விட்டது. தங்களது கரிசனை எழுத்துகளால் பளீரிடுகிறது. நன்று!!

    பதிலளிநீக்கு
  63. தனபாலன் சார், ஒரு ஹெல்ப் பண்ணுவீங்களா? இந்த வேர்ட் வெரிபிகேஷன் எப்படி நீக்கணும்?

    பதிலளிநீக்கு
  64. வணக்கம் தங்களது பதிவு இன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது//http://blogintamil.blogspot.in/2014/07/super-hit-post.html// நன்றி!

    பதிலளிநீக்கு
  65. வணக்கம்


    இன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்


    அறிமுகம் செய்தவர்-மகிழ்நிறை மைதிலி கஸ்தூரி ரெங்கன்


    பார்வையிடமுகவரி-வலைச்சரம்


    அறிமுகம்செய்த திகதி-18.07.2014

    -நன்றி-

    -அன்புடன்-

    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  66. மகிழ்நிறை மைதிலி கஸ்தூரி ரெங்கன் இன்று வலைச்சரத்தில் தங்களைப் பற்றி விவாதிக்கிறேன். வாழ்த்துக்கள்.
    www.drbjambulingam.blogspot.in
    www.ponnibuddha.blogspot.in

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.