🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



நெய்யா இருந்தா இப்படி ஊத்துவியா...?

ஆகாய கங்கை காய்ந்தாலும் காயும், சாராய கங்கை காயாதடா...! ஆள்வோர்கள் போடும் சட்டங்கள் யாவும், காசுள்ள பக்கம் பாயாதடா...! குடிச்சவன் போதையில் நிற்பான், குடும்பத்தை வீதியில் வைப்பான், தடுப்பது யாரென்று கொஞ்சம் நீ கேளடா...! கள்ளுக்கடைக் காசிலே தாண்டா, கட்சிக் கொடி ஏறுது போடா...!2 மண்ணோடு போகாமல் நம் நாடு திருந்தச் செய்யோணும்...! உன்னால் முடியும் தம்பி ← இது படத்தோட பெயர்...!


அதுசரி மனசாட்சி...! நீ இந்த வேற "தண்ணி"யை பற்றி சொல்றே... அதைப் பற்றி மனிதன் செய்யும் மிகப் பெரிய துரோகம் என்ன? பதிவிலே சொல்லியாச்சி... இப்போது சொல்லப் போவது வேறு... பருவம் தவறிய மழையின்மை, நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, நெகிழி பொருட்களின் அபரிமிதமான பயன்பாடு, சுற்றுச்சூழல் மாசு, இன்னும் பல்வேறு காரணங்கள் - இவற்றை விட வருங்கால சந்ததிகளைப் பற்றியே சிந்திக்காத சுயநல மனங்கள் இருந்தால், தண்ணீர் தட்டுப்பாடு எல்லா நாடுகளிலும் வருவதற்கு வாய்ப்புகளுண்டு... அதற்கு முன்னாடி தண்ணீர் வளத்தைப் பெருக்குவதற்கும், தண்ணீர் சிக்கனம் பேணுவதற்கும் இப்போதிலிருந்தே முன்னேற்பாடுகள் கண்டிப்பாகச் செய்ய வேண்டும்... (படம் : கைகொடுத்த தெய்வம்) சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம்... சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்2 வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால்... மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்...2 [பாடல் வரிகள் : மகாகவி பாரதியார்]

கடைசியிலே சொன்னியே, அந்த சுயநலம்; அது மாறினா போதும்... எல்லாவற்றுக்கும் மனதில் ஏற்படும் "கஞ்சத்தனம்" தான் காரணமோ...? (படம் : அன்னை) பணம் இருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை... மனம் இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை...

எதிலும் சிக்கனம் என்பது தந்தை பெரியாரின் தலைசிறந்த கோட்பாடு... சிலர் பெரியாரைக் கஞ்சத்தனத்தோடு வாழ்ந்தவர் என்று கூறுவார்கள்... கஞ்சத்தனம் என்பது வேறு... சிக்கனம் என்பது வேறு... எதற்குச் சுருக்கமாகச் செலவழிக்க வேண்டும்; எதற்கு தாராளமயமாக இருக்க வேண்டும் என்பதில் தந்தை பெரியார் நிபுணர்... அதனால் அவர் சிக்கனவாதியே தவிரக் கஞ்சத்தனமானவர் கிடையாது... எந்தெந்த வழிகளிலெல்லாம் பணம் சேகரிக்க முடியுமோ, அந்தந்த வழிகளிலெல்லாம் பணம் சேர்த்தவர் அவர்... கையெழுத்துப் போட, புகைப்படம் எடுத்துக் கொள்ள, பொதுக் கூட்டம் பேச, கொடியேற்ற - இப்படி எல்லாவற்றுக்கும் பணம் கேட்பார்... அவர் சேகரித்த பணத்தில் சல்லிக்காசு கூட சொந்த உபயோகத்திற்குச் செல்லவில்லை... சமூக இயக்க பணிகளுக்காகவே சேமிக்கப்பட்டது... இவ்வளவு சிக்கனமாக இருந்த பெரியார், "திருச்சிராப்பள்ளியில் அரசுக் கல்லூரி ஒன்று தொடங்கப்பட வேண்டும்; நிதி தருவீர்களா...?" என்று கேட்டவுடன், அந்தக் காலத்திலேயே ஐந்து லட்சம் ரூபாய் தந்தார்... இன்று தந்தை பெரியார் அரசுக் கலைக் கல்லூரியாக அந்த கல்வி நிறுவனம் திருச்சியில் தழைத்தோங்கி நிற்கிறது...! கல்விப் பணியில் தாராளம் தேவை... சிக்கனம் தேவையில்லை என்பது தந்தை பெரியாரின் சிந்தனை... உனது சிந்தனை என்ன...?

இன்றைய நாட்டு நிலையும், மேலே உள்ள மகாகவி பாரதியாரின் பாடலையும் நினைச்சேன்... ம்...ஹா..ஹா... ஹஹஹஹா... மேடையேறிப் பேசும் போது ஆறு போலப் பேச்சு...!2 கீழே இறங்கிப் போகும் போது சொன்னதெல்லாம் போச்சு...!2 காசை எடுத்து நீட்டி, கழுத பாடும் பாட்டு... ஆசை வார்த்தை காட்டு, உனக்குங்கூட ஓட்டு ஹஹஹா... சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்கச் சிரிப்பு வருது... சின்ன மனிசன் பெரிய மனிசன் செயலைப் பாக்க சிரிப்பு வருது...!

© ஆண்டவன் கட்டளை கண்ணதாசன் விஸ்வநாதன்-ராமமூர்த்தி 🎤 சந்திரபாபு @ 1964 ⟫

சிரிக்காம, நமக்குள்ளே இருக்கிற மனிதத்தைப் பார்ப்போமா...? தந்தை பெரியார் ஒருமுறை ஒரு விருந்தில் சாப்பிட்டு விட்டு கை கழுவச் சென்றார்... அந்த இடத்தில் ஒருவர் நின்று கொண்டு, அவருக்குச் செம்பில் தண்ணீர் ஊற்றினார்... அவர் 'சலசல'வென்று தண்ணீரை ஊற்றியதைப் பார்த்த பெரியார், "ஏம்பா... தண்ணீரைக் கொஞ்சமா ஊத்துப்பா... நெய்யா இருந்தா இப்படி ஊத்துவியா...?" என்றாராம்... தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டுமென்பதில் கவனமாக இருந்த பெரியார், அதை நெய்யைப் போலப் பயன்படுத்த வேண்டுமென்பதைச் சிந்திக்க வேண்டாமா...? இது கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி...! சிக்கனம் தேவை; அதே சமயம் தேவையானவற்றுக்குத் தாராளமும் தேவை என்று வாழ்ந்தவர்...! நம்ம ஐயன் என்ன சொன்னார் :- வானத்திலிருந்து மழைத்துளி விழாது போனா, இந்தப் பூமியிலே பசும்புல்லின் நுனியைக்கூடப் பார்க்க முடியாது... தண்ணீர் சிக்கனம் தேவை எக்கணமும்; இல்லையென்றால் அடுத்த போர் தண்ணீருக்காக...!
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது. (குறள் எண் 16)


எல்லோரும் அப்படித்தான் சொல்லி ஆச்சரியப்பட்றாங்க...! ஆத்தா அழுத கண்ணீர் ஆறாகப் பெருகி வந்து; தொட்டில் நனைக்கும்வரை உன் தூக்கம் கலையும்வரை; கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே... கண்ணுறங்கு சூரியனே... ஊத்துமலை தண்ணீரே என் உள்ளங்கை சக்கரையே... நீ நான் பெத்த தங்கரதம்; இடுப்பிலுள்ள நந்தவனம்... காயப்பட்ட மாமனின்று கண்ணுறக்கம் கொள்ளவில்ல... சோகப்பட்ட மக்களுக்கு சோறு தண்ணி செல்லவில்ல... ஏகப்பட்ட மேகமுண்டு மழை பொழிய உள்ளமில்ல... இந்தப் பாடலைப் பார்த்து அழாத கண்களே இல்லை... வருங்காலத்திலே கண்ணீருக்குக் கூட இனி தண்ணீர் வாராது போலிருக்கே...!

© ஆண்டவன் கட்டளை வைரமுத்து M.S.விஸ்வநாதன் 🎤 P.சுசிலா @ 1981 ⟫

எதையுமே தாராளமாக கிடைக்குதேன்னு தாராளமாகப் பயன்படுத்தக்கூடாது என்பதற்கு, தண்ணீர் இப்போது கண்கூடான காட்சியாக, சாட்சியாகத் தெரிகிறதா...? இனத்திற்காக, மண்ணிற்காக, பொன்னிற்காக, பெண்ணிற்காக, ஆட்சி அதிகாரத்திற்காக, புகழுக்காக, ஆணவத்திற்காக, இன்னும் பலவற்றுக்காக எத்தனையோ போர்கள் நடந்திருக்கின்றன... இனி ஒரு போர், உலகப் போர், அதாவது மூன்றாம் உலகப் போர் வருமென்றால், அது தண்ணீருக்காக மட்டுமே வரும்..! போரைத் தடுப்பதும் நம் கையில்...!



© ரிதம் வைரமுத்து A.R.ரகுமான் உன்னி மேனன் @ 2000 ⟫

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா... நதியே நதியே காதல் நதியே நீயும் பெண் தானே - அடி நீயும் பெண் தானே... ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே - நீ கேட்டால் சொல்வேனே... நடந்தால் ஆறு; எழுந்தால் அருவி; நின்றால் கடலல்லோ... சமைந்தால் குமரி; மணந்தால் மனைவி; பெற்றால் தாயல்லோ... சிறு நதிகளே நதியிடும் கரைகளே; கரை தொடும் நுரைகளே; நுரைகளில் இவள் முகமே... தினம் மோதும் கரை தோறும் அட யாரும் இசை பாடும்... ஜில் ஜில் ஜில் என்ற ஸ்ருதியிலே... கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருனை வரும் - ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே... காதலில் அருமை பிரிவில்; மனைவியின் அருமை மறைவில்; நீரின் அருமை அறிவாய் கோடையிலே; வெட்கம் வந்தால் உறையும்; விரல்கள் தொட்டால் உருகும்; நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே... தண்ணீர்க் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ - தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ... வண்ண வண்ண பெண்ணே; வட்டமிடும் நதியே; வளைவுகள் அழகு - உங்கள் வளைவுகள் அழகு... ஹோ மெல்லிசைகள் படித்தல்; மேடு பள்ளம் மறைத்தல்; நதிகளின் குணமே - அது நங்கையின் குணமே... தேன்கனியில் சாறாகி பூக்களிலே தேனாகி பசுவினிலே பாலாகும் நீரே... தாயருகே சேயாகி தலைவனிடம் பாயாகி சேயருகே தாயாகும் பெண்ணே... பூங்குயிலே பூங்குயிலே... பெண்ணும் ஆறும் வடிவம் மாறக்கூடும்... நீர் நினைத்தால் பெண் நினைத்தால் கரைகள் யாவும் கரைந்து போகக் கூடும்...

நான் பேசி நீங்கள் கேட்டு என்ன பயன்...? அறிய இங்கே சொடுக்கித் தொடரலாம். அதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றி தங்களின் கருத்து என்ன...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்


  1. சரியான கருத்து. பெரியாரின் நெய்யா இருந்தா வரிகள் 'அதானே' என்று மனதுக்குள் சொல்ல வைத்தது. தெருவில் நடந்து போகும்போது சொட்டும் குழாயைக் கண்டால் கூட நின்று மூடத் தோன்றும்.

    பதிலளிநீக்கு
  2. சரியாகக் கூறுனீர்கள் !

    நான்கில் மூன்று பங்கு நீரைக்கொண்டுள்ள உலகப் பரப்பளவில் உயிர் வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானதாக உள்ள தண்ணீரை இன்று நம்மில் அநாவசியமாக செலவழிப்பது வேதனையளிக்கக் கூடியதாகவே உள்ளது.

    பதிலளிநீக்கு
  3. தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம்
    தண்ணீர் கரையில் கரைகிறோம்
    தண்ணீரால்தான் வாழ்கிறோம்
    தண்ணீரல்இல்லையேல் நாமேது- இருந்தும்
    உணர்வில்லை நமக்கு
    தண்ணீரின் அரருமை புரியவில்லை
    புரியும்போது தண்ணீர் கானல் நீராய் தெரியும்.

    காலம் கடந்த ஞானம் பெற்று பயனேது.
    அருமையான பதிவு ஐயா நன்றி

    பதிலளிநீக்கு
  4. தண்ணிய வெசசு அசத்திட்டீங்களே... அப்பாவிக் கவிஞன் பாரதி மனிதர்கள் ஒருத்தருக்கொருத்தர் விட்டுத் தருவாங்கன்னு கனா கண்டு வங்கத்தில் ஓடிடவரும் நீரின் மிகையை பகிர்ந்தளிக்க ஆசைப்பட்டாரு. இப்ப மனுஷ மனங்கள் ஒரேயடியா சுருங்கிட்டுல்ல வருது...? நீங்கள் குறிப்பிட்டிருக்கற ஒவ்வொரு பாடலும ரசனைக்கு உத்தரவாதமானவை. மிக ரசித்தேன்!

    பதிலளிநீக்கு
  5. மீசைக்கார அண்ணே...மீசையில் தான் வயதில் இல்லை என்று தெரியும். வயதில் நான் மூத்தவன்!

    பெரியாரையப் பற்றி பேசும்போது எங்க அப்பா தான் எனக்கு நினைவில் வருவார். எல்லாம் ஒரே ஊர்.

    தேவைக்கு செலவு செய்ய அஞ்ச மாட்டார் என் அப்பா! அதே சமயம் தேவை இல்லாததற்கு பத்து பைசா கொடுக்கமாட்டார்!

    ஒரு வரியில் என் அப்பாவின் தாரக மந்திரம்--பணம் சம்பாதிக்க கண்டபடி செலவு செய்வதை குறை! இது தான் முதல் படி! வீண் செலவைக் குறைத்தால் பணம் சேரும்; அதே சமயம் ரயிலில் சென்றால் முதல் வகுப்பு தான்.

    இன்றைக்கு என் அப்பா அம்மாவிற்கும சண்டை வருவதற்கு ஒரே காரணம்--என் அப்பா தினமும் இரவு கணக்கு எழுதறேன் பேர்வழி என்று என் அம்மாவை சித்திரவதை செய்வார்!

    கேட்டால்...எங்களுக்கு, அவர்கள் குழந்தைகளுக்கு, பேரன் பேத்திகளுக்கு பணம் சேர்க்கிறாராம்!

    பதிலளிநீக்கு
  6. எதையுமே தாராளமாக கிடைக்குதேன்னு தாராளமாக பயன்படுத்தக்கூடாது என்பதற்கு, தண்ணீர் இப்போது கண்கூடான காட்சியாக, சாட்சியாக தெரிகிறதா...? ஆம் உண்மைதான்

    பதிலளிநீக்கு
  7. ஏகத்து செலவு செய்து விழா நடத்துபவனை பார்த்து...காச தண்ணியா செலவழிச்சாம்ப்பா...என்று சொல்வது உண்டு எதிர்காலத்தில் தண்ணியா எங்கேப்பா ? எனக் கேட்கும் காலமாகிப் போகும் வாய்ப்பு இருக்கிறது. நம் மூதா தையர் இதை யோசித்து செய்ததை எல்லாம் நம் தலை முறையில் நாசமாக்கி வருகிறோம் என்பது கவலையான விசயம். அரசு தண்ணீரை விற்பது என்பது எனக்கு கொஞ்சம் நெருடலாய்த் தான் இருக்கு

    பதிலளிநீக்கு
  8. இப்போதே உள்நாட்டில் தண்ணீருக்காக சண்டைவருகின்றது. மூன்றாம் உலகப்போர் வந்தால்அது தண்ணீருக்காகதான உண்மைதான்...நல்ல பதிவு...
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    பதிலளிநீக்கு
  9. சரியான கேள்வி.தண்ணீரை வீனடிப்பவர்களை கண்டால் எனக்கு எரிச்சல்ஏற்படுவதுண்டு. ஹோட்டலில் சாப்பிடுவதற்கு முன் ஒரு சிலர் கை கழுவார்கள் பாருங்கள். குழாயை திறந்துவிட்டு நீண்ட நிறம் கை கழுவுகிறேன் நீரை வீணடிப்பது கண்டு வருந்துவதுண்டு.
    பொருத்தமான பாடல்கள்.பொருத்தமான குறள் அருமை

    பதிலளிநீக்கு
  10. வாழக்கையில் முக்கியமானவைகள் அனைத்தையும் இயற்கை நமக்கு நன்றாகத்தான் கொடுத்திருக்கிறது. நாம்தான் சரிவர பாதுகாத்துக் கொள்ள தவறுகிறோம். கை மீறுவதற்குள் காப்பாற்றிக் கொள்ள முயற்சிப்போம். அருமையான பாடல் வரிகளுடன் நல்ல தேவையான பதிவு. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  11. குழந்தைகளுக்கு பா பா பிளாக் ஷீப் சொல்லிகொடுக்கும் முன்பே தண்ணீரின் சிக்கனம் பற்றி சொல்லித்தரணும்

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் சகோதரர்
    இயற்கையில் இறைவன் கொடுத்த கொடையை நாம் கண்டபடி பயன்படுத்தி விட்டு இப்பொழுது அடுத்த மாநிலத்திடம் கையேந்தும் சூழ்நிலை. நீங்கள் எடுத்துக்காட்டிய விடயங்கள் யாவும் ஒவ்வொருவரும் மனதில் வைத்து செயல்பட்டால் நிச்சயம் நன்மை விளையும். நன்றி சகோதரர்

    பதிலளிநீக்கு
  13. அடுத்தவன் வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே என்றால் இப்படி தாராளமாகத்தான் இருக்கும் ...
    தண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம்னு விழிப்புணர்வு ஊட்டியது உங்கள் பதிவு !

    பதிலளிநீக்கு
  14. தண்ணீர் தண்ணீர் படத்தைப் பார்த்தும் மக்கள் திருந்தவில்லையே!?.. இருப்பினும் அந்தப் படத்தின் அருமையான பாடலைப் பதிவிட்டமைக்கு நன்றி!..

    பதிலளிநீக்கு
  15. மிக மிக அவசியமான தண்ணீர் சிக்கனத்தைப் பேசும் பதிவு... பெரியார் பற்றிய தகவல் புதியது... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  16. "நீரின்றி அமையாது உலகு; அது எதிர்வரும் காலங்களில் உலகப்போருக்கும் வழிவகை செய்துவிடும்."

    அருமையான கருத்து.

    எனக்குப் பிடித்த பாடல்களில் ஒன்றான ரிதம் படத்தின் நதியும்-பெண்ணும் ஒப்புமை சிலேடைப் பாடல் வரிகளும் இந்த பதிவுக்கு மேலும் மெருகூட்டுகின்றன. வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பதிவுகள்...

    பகிர்வுக்கு நன்றி!

    நட்புடன்,
    நடராஜன் வி.

    பதிலளிநீக்கு
  17. நெய்யா இருந்தா இப்பிடி ஊத்துவியா ?//

    தண்ணீரின் அருமையை இப்பிடி எளிமையா யாரும் சொன்னதே இல்லை , மூன்றாம் உலகப்போர் நிச்சயமாக தண்ணீருக்காகத்தான் இருக்கும்...!

    நினைவில் வைக்கவேண்டிய பதிவு !

    பதிலளிநீக்கு
  18. நல்லதொரு பதிவு..அனைவரும் கட்டாயம் உணர்ந்து தண்ணீரைச் சிக்கனமாக பயன்படுத்தவேண்டும். அதோடல்லாமல் சிறிது மழை பெய்தாலும் அதை சேமிப்பதைப் பற்றியும் முடிந்த அளவு தண்ணீரை பூமிக்கே செல்லுமாறும் சிந்தித்துச் செயல்படவேண்டும்.
    நன்றி!

    பதிலளிநீக்கு
  19. படிக்க படிக்க அருமை இதை படித்த பிறகு தான் தண்ணீரின் பெருமை தெரிந்தது பதிவிட்டமைக்கு நன்றி.......

    பதிலளிநீக்கு
  20. அருமையாகக் கருத்தைக் கொடுத்திருக்கிறிர்கள் தனபாலன். அனைவரும் சேர்ந்து பாடுபட்டால் தான் தண்ணீரின் அருமை புரியும். திண்டுக்கல்லில் வாழ்ந்தவர்கள் தண்ணீரைப் பொன்னாக மதிப்பதில் வியப்பில்லை.சென்னை போன்ற மாநகரங்களிலும் ஒரு சில இடங்களைத் தவிர மற்ற இடங்களில் மக்கள் படும் அவதி சொல்லி முடியாது. நாமாகத்தான் திருந்தவேண்டும். மற்றவரைச் சொல்லிப் பயனில்லை.

    பதிலளிநீக்கு
  21. பெரியாரைப் பற்றிய நல்ல பகிர்வு.வாசிக்கவே எத்தனை இதம்.திருச்சியில் பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியும் இருக்கு.இனிமே எனக்கு தண்ணீர் ஊற்றும் பொழுது நெய் நினைவு வரும்.நன்றி பகிர்வுக்கு.இப்போதைக்கு தேவையான பகிர்வு.

    பதிலளிநீக்கு
  22. விழிப்புணர்வை தூண்டும் நல்ல பதிவு.
    இலவசமாக கிடைத்தாலும் தண்ணீரை யாரும் வீணடிக்ககூடாது. யாராவது வீணடித்தாலும் எனக்கு சகிக்க முடியாமல் இருக்கும்.
    பகிர்வுக்கு நன்றி...!
    தொடரவாழ்த்துக்கள்....!

    பதிலளிநீக்கு
  23. சிக்கனத்திற்கு பெரியார்! நன்றாகவே எடுத்துக் காட்டினீர்கள். பதவி ஆசையும் இல்லாதவர் பெரியார். நானும் அந்த பெரியார் ஈ.வெ.ரா அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ பயின்றவன்தான். பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  24. தண்ணீரின் தேவையையையும், சிக்கனத்தின் அவசியத்தையும் உணர்த்திய அருமையான பதிவு..

    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  25. மேடையேறி பேசும் போது ஆறு போல பேச்சு..........

    பதிலளிநீக்கு
  26. மேடையேறி பேசும் போது ஆறு போல பேச்சு.......... அருமையான,அர்த்தமுள்ள வரிகள்

    பதிலளிநீக்கு
  27. எதை வேணுமினாலும் தண்ணியா செலவு பண்ணலாம். ஆனா, தண்ணியை, தண்ணியாதான் செலவுப் பண்ணனும்

    பதிலளிநீக்கு
  28. தண்ணீர் பட்ட பாடு என்பது போய்
    தண்ணீருக்குப்படும் பாடு என்பதாய்
    மாற்றியது மனிதனின் சாதனை தான்.1

    பதிலளிநீக்கு
  29. நீங்கள் சொல்வதுபோல் மூன்றாம் உலகப்போர் வந்தால் அது தண்ணீருக்காகத்தான் இருக்கும். எனவே தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துவோம். பதிவிற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  30. சரியான சிந்தனை ! பள்ளியில் டிஃபன் பாக்ஸ் கழுவும் போது, என் நண்பன் சொன்னது நினைவுக்கு வந்தது !
    "தண்ணிய நம்ம தண்ணியா பயன்படுத்தினா தண்ணி நமக்கு தண்ணி காட்டும் !"

    பதிலளிநீக்கு
  31. "// சிக்கனம் என்பது வேறு, கஞ்சத்தனம் என்பது வேறு"//
    ஆனால் இது நிறைய பேருக்கு புரிய மாட்டேங்குது.

    தண்ணீருக்கும் வரி கட்ட வேண்டும் என்ற நினைப்பு இருந்தால், ஒரு வேளை தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவார்களோ!!

    சிந்திக்கக்கூடிய பதிவு.

    பதிலளிநீக்கு
  32. உயர்வான் கட்டுரை வழக்கம் போல்.தொடரட்டும் உங்கள் சேவை உணர்வு .விழிப்புணர்வை தூண்டும் நல்ல பதிவு.
    பெரியாரைப் பற்றிய நல்ல பகிர்வு.
    மிகவும் மகிழ்வு . சிறப்பான கட்டுரை தந்தமைக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  33. மூன்றாம் உலக யுத்தம் தண்ணீருக்குத்தான் என்று சரியாத்தான் சொல்லி இருக்க்கீங்க தனபாலன் சகோ.

    ஊரான் வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே என்ற பழமொழியும் ஞாபகம் வருது. :)

    தண்ணீர் பற்றி அருமையான பாடலும் பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  34. சரியான நேரத்தில் சரியான பகிர்வு எல்லா சிக்கனத்தின் முன்பு தேவை தண்ணீர் சிக்கனம் தகுந்த விளக்கத்துடன் விளக்கிய விதம் சிறப்புங்க.

    பதிலளிநீக்கு
  35. அன்பு தனபாலன், பயனுள்ள கருத்துக்கள் பலவற்றைத் தாங்கி வரும் பதிவுகள் உங்களுடையது. தேவைக்குச் செலவு செய்யாது இருப்பது சிக்கனமாகாது. அதேபோல் தேவை எது என்று அறிந்து கொண்டு செலவு செய்வதும் அவசியமாகும் அந்தமாதிரி இரு அணில் சேவைக்குத் தோள் கொடுக்க இன்றைய என் பதிவைப் பார்க்கவும் நன்றி.

    பதிலளிநீக்கு
  36. தண்ணீரின் அருமையை சினிமாப் பாடல்களோடு இணைத்து
    அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.
    பெரியாரின் சிக்கன விளக்கம் அருமை .

    பதிலளிநீக்கு
  37. தண்ணீருக்கான கணணிர் பதிவு.
    நெய்யானால் வரிகள் அருமை.
    சிக்கனம் கடைப்பிடிக்கப் படட்டும்.
    மிக முக்கிய பதிவு. இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  38. வணக்கம்
    அண்ணா

    தண்ணீர் சிக்கனம் பற்றி பதிவு மிகச்சிறப்பு
    கருத்துமிக்கப்பாடல்கள் திருக்குறள் எல்லாம் பதிவுக்கு ஒரு சிறப்பு பெரியாரின் அருள் மொழியையும் எடுத்துக்காட்டிய விதமும் நன்று வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  39. திண்டுக்கலாரின் பதிவு, கல்லில் இருந்தும் தண்ணீரைப் பீரிடவைக்கும் உணர்ச்சியுள்ள எழுத்து. பாடல்களின் தேர்வு வழக்கம்போலவே பொருத்தமானது, இனிமையானது, சுவையானது.

    பதிலளிநீக்கு
  40. நான் தஞ்சையில் பணியாற்றியபோதுதான் பெரியாரைப் பற்றி நன்கு அறிந்துக்கொண்டேன். தஞ்சைதான் பெரியாரின் கோட்டை என்னும் அளவுக்கு அவருடைய கட்சி மாநாட்டிற்கு கூட்டம் குவியும். ஊரே விழாக்கோலம் போட்டுக்கொள்ளும். பெரியாரின் வாழ்க்கைச் சரிதத்தையும் படித்திருக்கிறேன். அவர் சிக்கனக்காரர் என்பதுதான் சரி. அதுபோலவே கடவுள் என்கிற பெயரில் நாட்டில் நடக்கும் அக்கிரமங்களை சகித்துக்கொள்ள முடியாமல்தான் கடவுளே இல்லை என்ற வாதத்தை முன்வைத்தார். கடவுள் பெயரால் சிலர் வேறு சிலரை தள்ளி வைப்பதையும் அவர் பொறுத்துக் கொள்ளவில்லை. என்னைப் பொறுத்தவரை இன்று மக்கள் மத்தியில் உலா வரும் பல பொய் அரசியல்வாதிகளைக் காட்டிலும் அவர் எவ்வளவோ மேல்.

    பதிலளிநீக்கு
  41. உண்மைதான் சார்..... நாம் கஞ்சத்தனமாக எவ்வளவுதான் சேர்த்து வைத்தாலும், அதை செலவழிக்க வேண்டிய நேரத்தில் செலவழிக்க வேண்டும், அதை சரியான காரியத்திற்கு செய்வதில் தப்பில்லை என்பதை பாடல்களுடன் அருமையாக சொல்லி உள்ளீர்கள்...... பெரியாரை பற்றி நீங்கள் பகிர்ந்த செய்தியும் வியக்க வைத்தது. பகிர்வுக்கு நன்றி !

    பதிலளிநீக்கு
  42. மிக அருமையான பதிவு. இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சீரழிவு என்றால் பிளாஸ்டிக் கழிவுகளும், நீர் நிலைகள் ஆக்ரமிப்பும்தான். எதிர்கால சந்ததியரைப் பற்றிக் கொஞெசமும் கவலைப்படாமல் நாம் நம் வாழ்விடத்தைச் சிதைத்துக் கொண்டிருக்கிறோம். பெரியாரைப் பற்றிய தகவல்களும் அருமை!

    பதிலளிநீக்கு
  43. நல்லதொரு பதிவு! அந்தக் காலத்தில் பெண் பார்க்கப் போகும் போது பெண்ணைத் தண்ணீர் கொண்டுவரச் சொல்லியும், குடத்தில் தண்ணீர் கொண்டுவரச் சொல்லியும் அதாவது தண்ணீரை எப்படிச் செலவழிக்கிறாள் என்று! அதாவது சிக்கனமாக இருக்கிறாளா என்று பார்க்க!(இந்த டெஸ்ட் ஆணுக்கு ஏன் இல்லை என்று தெரிய வில்லை)
    எங்கள் தாத்தா எங்களுக்கு அறிவுரை சொல்லும் போது "தண்ணீர் தங்கம் போன்றது. பார்த்து கவனமாக செலவழிக்க வேண்டும் என்று!" இப்போது பாருங்கள் நல்ல தண்ணீர் கூட விலை கொடுத்து வாங்கும் படி ஆகிவிட்டது!

    இப்போது உள்ள தலைமுறைக்கு பணத்தின் அருமை தெரியாமல் கண்டபடி செலவழிக்கவும் செய்கின்றார்கள்! தேவையானது, தேவையாற்றது என்று பிரித்துப் பார்க்காமலேயே! பெரியாரின் கருத்துக்கள் காலம் சென்றாலும் கருத்துள்ளவை என்பது நிரூபணம் ஆகின்றது!
    நல்ல பகிர்வுக்கு பாராட்டுக்கள்!! வாழ்த்துக்கள்!! நண்பரே!!

    பதிலளிநீக்கு
  44. தண்ணீரின் அருமையையும் சிக்கனத்தின் பெருமையையும் இதைவிட நன்றாக விளக்க முடியாது! இந்த மாதத்தின் சிறந்த பதிவுகளில் ஒன்று!

    பதிலளிநீக்கு
  45. நிச்சயமாக இந்தக் காலகட்டத்தில் தண்ணீர் சிக்கனம் மிக அவசியம். த,ம 16

    பதிலளிநீக்கு
  46. நீரின்றி அமையாது உலகு எனின் யார் யார்க்கும்
    வா னின் றமையாதொழுக்கு.

    என வள்ளுவன் கூறியவாறு,
    நீர் இல்லை எனின் இவ்வுலகத்தே தானம் தவம் சிறக்காது என்பது மட்டுமல்ல, ஒழுக்கம் கெடும், போரும் மூண்டுவிடும்.

    என அறிவுறுத்தியதை எத்துனை போற்றினாலும் தகும்.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  47. அன்பு ஓட்டுகளால் மணிமகுடம் ஏறுவது வலையுலகில் நீங்க மட்டும் தான் போல.

    பதிலளிநீக்கு
  48. தண்ணீர் தேவை பற்றி திண்டுக்கல் மக்கள் மிகவே அறிவார்கள் ,உணர்வார்கள் என்பதை பெரியாருடன் உலக அளவில் சொல்லிவிட்டீர்கள் .அற்புதம் .

    பதிலளிநீக்கு
  49. பெரியார், பகுத்தறிவிலும் பண்பாட்டிலும் மட்டுமல்ல, நற்காரியங்களுக்கு வாரி வழங்குவதிலும் பெரியார்தான்.

    பதிலளிநீக்கு
  50. கண்டிப்பாக தண்ணீர் சிக்கனம் அவசியமானது. இல்லையென்றால், வருங்காலத்தில் தங்கம் விலை கொடுத்து அதை வாங்கவேண்டியிருக்கும்.

    பதிலளிநீக்கு
  51. கூகுள் ப்ளஸ் ஒரு தடவை பார்த்த நினைவு ஒரு குரங்கு சொட்டு சொட்டாக விழும் தண்ணீரை குடித்து விட்டு அடைத்து விட்டு போகும் அதற்கு யார் சொல்லி கொடுத்தது ? தண்ணீர் குடித்து விட்டு அடைக்க வேண்டும் என்று ? நம் உடம்புக்கு தாராளமாக தண்ணீர் குடிக்கலாம் மற்றவகையில் சிக்கனமாக பயன்படுத்துவது சாலச் சிறந்தது . அருமையான பதிவு நன்றி தனபால் சார்.

    பதிலளிநீக்கு
  52. தண்ணீரின் மகத்துவத்தைப் புரிந்து கொண்டோம். எனவே, சிக்கனமாய் செலவழித்து, கண்மணியைப்போல் (பாது)காப்போம்.

    இந்த அரசு, 'தண்ணி' கடையைத் திறந்துவைத்து... அதிலிருந்து தண்ணீர் ஆறாய்... ஓடுகிறதே! அந்தக் கொடுமையை என்ன சொல்ல?

    பதிலளிநீக்கு
  53. நீங்கள் சொல்வது போல் தண்ணீரை நெய் போல் உபயோகிக்க வேண்டிய நிலைக்கு வந்து விட்டோமே! உண்மை தான். நல்லதொரு விழிப்புணர்வுப் பதிவு.

    பதிலளிநீக்கு
  54. நீரின்றி அமையாது உலகு என்பதனைத் தாங்கள் பகிர்ந்த விதம் மிகவும் அருமை. இப்பதிவு அனைவர் மனதிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

    பதிலளிநீக்கு
  55. தண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம்.மொழியில் மட்டுமல்ல செயலிலும் காட்ட வேண்டும்.இன்றே துவங்குவோம் தண்ணீரை சேமிக்க.எதிர்கால சந்ததியினருக்கு இயற்கை வளங்களினை விட்டுச்செல்வோம்
    கைலாசசுந்தரம்

    பதிலளிநீக்கு
  56. பருவம் தப்பிய மழை
    உருவம் இன்றிய உண்மை
    தண்ணீரின் அருமை புரிந்திட
    கண்ணீரின் வலிமை கூறுமே
    மழையும் தண்ணீர் சிக்கனமும்

    பதிலளிநீக்கு
  57. சரியான விழிப்புணர்வு பகிர்வு...3ஆம் உலகப்போர் வந்தார் அது தண்ணீருக்காகதான் என்பதை தெளிவா சொல்லிருக்கீங்க..

    பதிலளிநீக்கு
  58. தண்ணீர் தட்டுப்பாடால் உள்ளூர் சண்டை வேண்டுமானால் வரலாம். உலகப் போர் வர வாய்ப்பே இல்லை. இதெல்லாம் விஷம பிரசாரம்.

    பசியால் வராத போர் தண்ணீரால் வராது.

    பதிலளிநீக்கு
  59. கடமை=தண்ணீர் சேமிப்பை உணர்த்தியது.
    கண்ணியம்= உங்கள் எழுத்து.
    கட்டுப்பாடு=படித்தவ்ர்கள் செய்ய வேண்டியது நீரில். அருமை .

    பதிலளிநீக்கு
  60. அன்பின் திரு தனபாலன்,

    உண்மைதான். சிக்கனமும், கஞ்சத்தனமும் வேறு வேறுதான்.. நல்ல இடுகை. வாழ்த்துகள்.

    அன்புடன்
    பவள சங்கரி

    பதிலளிநீக்கு
  61. சிக்கனம் அதிலும் மிகத்தேவையான நீர்ச்சிக்கனம் பற்றி எழுதியதோடு, பெரியாரின் சிக்கனம் பற்றிச் சரியாக எழுதி, சினிமாப் பாட்டுகளையும் பொருத்தமாச் சேர்த்தெழுதி... எப்புடீ...? அசத்துறீங்க அய்யா.. அருமை (உங்கள் வாசகர் எண்ணிக்கை பார்த்தால் என்காதில் புகை, உங்கள் எழுத்துவண்ணம் பார்த்தால் என் கையில் புண்! என்ன செய்ய? நல்லாயிருங்க...

    பதிலளிநீக்கு
  62. தண்ணீர் சிக்கனம்.....

    தேவை இக்கணம்....

    சிறப்பாய் சொன்னீர்கள் தனபாலன். ஒவ்வொருவரும் தண்ணீர் சேமித்தால் நல்லது.

    பதிலளிநீக்கு
  63. சுவையான கட்டுரை..பெரியார் பற்றிய கருத்துகள் இன்றைய சமூகத்துக்கு தேவை, அவரைப் பற்றி தெளிவாய் சொன்னீர்கள் ..நன்றி..

    பதிலளிநீக்கு
  64. தண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம் எனும் கருத்தை அருமையாக விளக்கி பதிவிட்டமைக்கு மிக்க நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  65. பெரியார் பற்றி அறியப்படாத செய்திகளையும், அவசியமான தகவல்களையும் துள்ளலான நடையில் தந்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  66. தண்ணீர் சிக்கனம்! தேவை இக்கணம்! இதை அருமையாக பெரியாரின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளோடும் சிறப்பான பாடல்வரிகளோடும் பகிர்ந்தமை அருமை! நெய்யா இருந்தா ஊத்துவியா? அருமையா கேட்டிருக்கிறார் பெரியார்! அவரின் சில கருத்துக்களோடு மாறுபட்டாலும் இந்த கருத்தோடு ஒத்துப்போகிறேன்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  67. அருமையான பாடல் வரிகள். தண்ணீர் சிக்கனம் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு உடனடியாக ஏற்பட வேண்டும்

    பதிலளிநீக்கு
  68. நல்லா சொன்னீர்கள். இந்தக் கட்டுரையை படித்த பின் தண்ணீர் என்றால் உங்கள் நினைவும் கூடவே வரும். இப்பவே ஒரு லிட்டர் தண்ணீர் 12/- ரூபாய். இனி நெய் விற்கும் விலைக்கு வந்துவிடுமோ? கவனமாக செலவழிக்காவிட்டால், நமது அடுத்தடுத்த தலைமுறை தண்ணீர் இல்லாமல் தவிக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொண்டால், நிதானமாக செலவழிப்போமா?

    பதிலளிநீக்கு
  69. மிக அவசியமான சிறப்பான பதிவு.

    பள்ளிகளிலேயே பிள்ளைகளுக்குப் பயிற்றுவிக்கவேண்டிய தலையாய பிரச்சனைகளுள் ஒன்று.

    பதிலளிநீக்கு
  70. தண்ணீர் - இப்பொழுதே எங்களிடம் இருந்து களவாடத் தொடங்கி விட்டார்கள். போத்தல் தண்ணீர் வியாபாரத்தை / ஏற்றுமதியை நிறுத்துவது தண்ணீரை சேமிப்பதன் முக்கிய படிகளில் ஒன்று.

    பதிலளிநீக்கு
  71. பெரியார் நவின்ற பெருவார்த்தை உண்டால்
    விரிவாகும் உள்ளம் விரைந்து !

    வழமைபோல் அர்த்தமுள்ள பதிவு தனபாலன் சார்
    இனிய வாழ்த்து வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  72. பலபேரும் சிக்கனக்காரர்களை கஞ்சன் என்றே கிண்டல் செய்து அருமையானதொரு பழக்கத்‌தை கைநழுவ விடுகின்றனர்.

    தண்ணீர் பற்றிய எச்சரிக்கை காலத்துக்கேற்ற அத்தியாவசியம்.

    பல நல்ல திரைப் பாடல்களின் வரிகளை மனசேற்றி கூடுதல் நலம் பயக்கிறீர்கள் அண்ணா! எழுதியவர்களின் பெயரையும் முடிந்தால் குறிப்பிடலாமே.

    பதிலளிநீக்கு
  73. தண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம் மட்டுமல்ல எக் கணமும் என்பதை வலியுறுத்தும் பதிவு டைட்டில் சூப்பர்

    பதிலளிநீக்கு
  74. எதிர் காலத்திற்கான சவால்களை
    சமாளிக்கும் வழிகளை தேடும் ஒரு தரமான நல்ல பதிவு..
    வாழ்த்துக்கள் அண்ணா

    பதிலளிநீக்கு
  75. சொந்தக்காசில் மாலை வாங்கிப்போட்டுக்கொள்ளும் ஆசாமிகளுக்கு மத்தியில் மாலைக்கு ஆகும் செலவை காசாக கேட்டுவாங்கிய மகான் அல்லவா பெரியார்?

    சிக்கனம் என்பது பணத்தில் மட்டுமன்று. நாம் உபயோகிக்கும் ஒவ்வொன்றிலும் இருக்கவேண்டும். காகிதம், தண்ணீர், உணவு, எரிபொருள், மின்சாரம் என்று எதிலும் சிக்கனமாயிருக்க எங்களுக்குக் கற்றுத்தந்தவர் எங்கள் மாமனார். இன்றைய தலைமுறையினர் அவசியம் அறிந்துகொள்ளவேண்டிய பதிவு. மிக்க நன்றியும் பாராட்டும் தனபாலன்.

    பதிலளிநீக்கு
  76. அருமையான பாடல்கள், பெரியாரின் தாராளம்,(கல்விசாலைக்கு நிதி) சிக்கனம் பற்றி எல்லாம் அருமையாக சொன்னீர்கள்."தண்ணீர் சிக்கனம் வேண்டும் இக்கணம்"
    என்ற தலைப்பில் நான் எழுதிய பதிவில் பெரியார் அவர்கள் சொன்ன இந்த தண்ணீர சிக்கன அறிவுரையை பகிர்ந்து கொண்டு இருக்கிறேன். எல்லோரும் கடைபிடிக்க வேண்டிய அறிவுரை அல்லவா!
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  77. அவர் தான் பெரியார் எனும் பாடல் தான் நினைவுக்கு வருகிறது.அருமையான பயனுள்ள பதிவு

    பதிலளிநீக்கு
  78. வணக்கம்
    அண்ணா.

    வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  79. எம்புட்டு நாளா உங்க ப்ளாக தேடறேன் ... இன்னைக்கு தா சிக்கிருக்கு ... அசத்தலா இருக்கு ... சும்மா கலக்குறிங்க சகோ ...
    எழுத்து பணி ...இனிதே தொடர வாழ்த்துக்கள் ...!!!

    பதிலளிநீக்கு
  80. கஞ்சத்தனம் என்பது வேறு... சிக்கனம் என்பது வேறு
    உண்மையான வார்த்தை

    பதிலளிநீக்கு
  81. சொல்லப்பட்ட கருத்துக்கள் அனைத்துமே அருமை தனபாலன்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.